கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 11,579 
 
 

‘அதென்ன யாரை பார்த்தாலும் குழந்தைன்னு கூப்பிடற பழக்கம் ?’ கற்பகம் கத்திக் கொண்டு இருந்தாள் .’ காதுல மிஷின் மாட்டுங்கோ.ரொம்ப சௌரியமா நான் பேசும் பொதுக் கழட்டி வெச்சா எதுவும் கேட்க வேண்டாம்னு நினைப்பா ? அப்படீல்லாம் ஈசி யா தப்பிக்க முடியாது.?’

விஷயம் இது தான் .நானும் அவளும் கோவிலில் எங்க ஊர் மாமா ஒருவரை பார்த்தோம்.என் அம்மாவிற்கு தூரத்து உறவு.அவளுக்கு அவரை பரிச்சயம் இல்லை.குசல விசாரிப்பு முடிந்து கற்பகத்தை அறிமுகபடுத்தியபின் நான் அவரிடம் ‘ குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்கா ?’ என்று கேட்டேன்.

அவரும் பகவன் க்ருபைல எல்லோரும் நன்னா இருக்கா என்று பதில் சொன்னார்.

ரொம்ப நேரமாக பக்கத்தில் பேசாமல் நின்றிருந்த கற்பகம் எங்கள் பேச்சில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை பார்த்து ‘ குழந்தைகள் என்ன படிக்கறா ?’ என்று கேட்டவுடன் ..மாமா’ கொல் ‘ என்று சிரித்தார்.படிப்பெல்லாம் முடிஞ்சு வேலைக்கு போய் இன்னும் 4 வருஷத்துல ரிடையர் ஆக போறான் என் குழந்தை என்றவுடன் கற்பகத்திற்கு முகம் சிவந்து விட்டது.

வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்து எனக்கு பாட்டு. ‘உங்க வயசுல அவருக்கு பசங்க இருக்கு அவாளை குழந்தைன்னு என்னக் குசலம் வேண்டி கிடக்கு. என்னை மத்தவா முன்னாடி மக்கா காமிக்கணு ம் உங்களுக்கு.’

‘ஏண்டி நாங்க பாட்டுக்கு பேசிண்டு இருந்தோம். உனக்கு அதுல மூக்கை நுழைக்க என்ன அவசியம்??

அவருக்கு அவா இன்னும் குழந்தை தானே. என் அம்மாவுக்கு நானும் இன்னும் குழந்தை தான்.’ என்று சிரித்தபடியே சொன்னேன்.

‘ ரிடையர் ஆனா நாள்லேர்ந்து குசும்பும் கொழுப்பும் கூடி த்தான் போச்சு . அந்த மிஷினை க் காதுல எப்போவும் போடுங்கோன்னா கேக்கறது கிடையாது.ஜோசியர் மாமா அந்த தரகர் அட்றஸ் குடுத்து ஒரு வாரம் ஆறுது.ஒண்ணு நேர்ல போயி பார்க்கணும் . இல்ல போன்லயாவது நம்ம கொழந்தைக்கு வரன் விஷயமா பேசணும்.இதெல்லாம் கிடையாது. ஊர்ல இருக்கற கிழவனை எல்லாம் குழந்தைன்னு குசலம் விசாரிசுண்டு சுத்துங்கோ…நம்மாத்து நல்ல காரியம் எல்லாம் தானா நடக்கும்.’ என்றபடி உள்ளே போய் விட்டாள் .

எங்கேயோ சுத்தி இங்கே தான் வந்து நிற்கும் எப்போதும்.

காதில் இருந்து மிஷினை கழட்டினேன். அபீஸ் போகும் வரை எல்லாம் நல்ல தான் இருந்தது.இப்போ ரெண்டு வருஷமா தான் காதில் ப்ரோப்ளேம் . மிஷின் இல்லை என்றால் கேப்பது சிரமம். அனால் வெளியே போகும் போ து.கற்பகம் கூட இல்லையென்றால் அதை மாட்ட விரும்புவது இல்லை.எதோ ஒரு குறை போல எல்லோரும் என்னை பார்ப்பது போன்ற உணர்வு. நான் அதை கழட்டினாலே அவளுக்கு கோபம் வரும்.

எனக்கு கொஞ்சம் சமத்து பத்தாது என்பது அவளுடைய அபிப்ராயம்.இன்னிக்கி கொஞ்சம் அதிகமாவே எனக்கு ரோஷம் வந்துது..மட மடவென ஜோசியர் கொடுத்த அட்ரஸ் எடுத்து கொண்டு..’கப்பூ . நான் இப்போவே அந்த தரகர் பார்த்துட்டு..பொண்ணு பார்க்க ஏற்பாடு பண்ணிட்டுத் தான் வருவேன் . ஒரு வாய் காபி மட்டும் குடு ‘

‘காதுல மிஷின் மாட்டிண்டு போங்கோ.’ என்று கரிசனமாக சொல்லி அனுப்பினாள் .

வாசலில் ஆட்டோ ஏறியவுடன் கப்பூக்கு டாட்டா காமிச்சுட்டு காதுலேர்ந்து மிசினை கழட்டி பக்கத்தில் வைத்தேன் . இது ஒரு இம்சை .

தரகர் வீடு மைலாபூர் கற்பகாம்பாள் கோவில் பக்கத்தில் ஒரு ஒண்டு குடித்தனம். அவரிடம் ஜோசியர் பெயரை சொன்னவுடன். ‘ அமாம் அவர் கிட்ட வர ஜாதக பரிமாற்றம் ஆள் எல்லாம் என் கிட்ட தான் அனுப்புவா ர். எனக்கு ரொம்ப கை ராசி.’ அவர் உதடு அசைவதை வைத்து ஓரளவு ஊகித்தேன்…கை தானாக காதுக்குச் சென்றது..

மிஷின் இல்லை. ஆட்டோவில் கழட்டி வைத்தது. அப்படியே இறங்கி வந்தாச்சு.

‘சார். நான் சொல்றதை கவனமா கேட்டுகோங்கோ. என் குழந்தை ருக்கு. பாங்க்ல வேலை.மாசம் 75000 சம்பளம்.ஜாதகம் கிடையாது.எங்களுக்கு நம்பிக்கையும் கிடையாது. அது மாதிரியே ஜாதகம் வேண்டாம்னு சொன்னா வரன் எதாவது இருந்தா மட்டும் சொல்லுங்கோ.உடனே பொண் பார்க்க ஏற்பாடு பண்ணலாம்.எனக்கு பொண்ணு பார்கறேன்னு வீடு வீடா போய் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடற கூட்டம் எல்லாம் பிடிக்காது.எதாவது கோவில்ல வெச்சு இன்போர்மலா மீட் பண்ணிட்டு பிடிச்சா மேற்கொண்டு பேசலாம்’.
என் குறை தெரிய கூடாதுன்னு மட மட வென்று ஒப்பித்தேன்.

‘தரகருக்கு வாய் எல்லாம் பல். சார் உங்கள மாதிரியே ஒரு இடம் வந்திருக்கு.இதே கண்டிஷன் தான் அவாளுக்கும் ரொம்ப பொருந்தும் உங்க ரெண்டு பேருக்கும்.இப்போவே போன் பண்ணி கேக்கறேன். ‘

என் நல்ல நேரம் அவர் என் முகத்தை பார்த்து பேசினார்..கொஞ்சம் அந்த பக்கம் இந்த பக்கம் திரும்பினாலும் எனக்கு பாதி புரியாமல் போய் இருக்கும் .

அதற்குள் எனக்கு இன்னொரு கவலை.போன் போட்டு என் கிட்ட பேச கொடுத்து விட்டால்.’ உஷாராக.சார் நீங்களே பேசி பிக்ஸ் பண்ணிடுங்கோ. நாளைக்கு சண்டே காலம்பர 10 மணிக்கு கற்பகாம்பாள் கோவிலில் மீட் பண்ணலாம்.’ என்றேன்.

அவருக்கு ஒரே குஷி .எல்லாத்துக்கும் சரி சரி என்று தலை ஆட்டினார். கமிஷன் மேல் கண் . இது மாதிரி இலகுவாக அவருக்கு எதுவும் முடிந்திருக்காது என்று நினைக்கிறன்..

வீட்டுக்கு வந்தால். தர்மபத்தினி தலை விரித்து ஆடினாள் .’உங்களை தனியா விட்டதே தப்பு. யாரு என்னனு ஒண்ணும் விசாரிக்காம நாளைக்கே மீட் பண்ண என்ன அவசரம்.மிஷின வேற தொலைச்சாச்சு . சரி அவா போன் நம்பராவது வாங்கிண்டு வரணும்னு தோணித்தா ? அதுவும் இல்லை . தரகர் நம்பராவது தெரியுமா? அட்ரெஸ் பேப்பர் காணும்.நீங்கெல்லாம் எப்படி தான் ஒரு அபீஸ்ல வேலை செஞ்சு அந்த கம்பனிகாரன் இழுத்து மூடாம இருந்தானோ…’

அவ்வளவு தான் எனக்கு பயங்கர கோபம்.வந்து விட்டது ‘என்ன நீ விட்டா ரொம்ப பேசிண்டே போற.. ருக்கு எனக்கும் குழந்தைதான்.எனக்கில்லாத அக்கறை உனக்கு மட்டும் எங்கே வந்தது. நாளைக்கு கார்த்தாலே நாம் போறோம் ,பார்க்கறோம் .எல்லாம் ரெடியா இருங்கோ.’ என்று சத்தம் போட்டு விட்டு வெளியே சென்று விட்டேன்.

காலை 10 மணி..’ கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி போய் அந்த தரகர் பார்த்து டிடேலஸ் வாங்கவாது செய்யலாம்.ஒண்ணுமே தெரியாம போய் நிக்கறது கொஞ்சம் கூட சரி இல்லை’ கற்பகம் புலம்பினாள்.ருக்கு டிரஸ் பண்ணி கிளம்ப ரொம்ப நேரம் ஆகி விட்டதால் அதுவும் புஸ்வாணமாகி போனது

வியர்க்க விறுவிறுக்கக் கோவிலுக்கு சென்றோம் . தரகர் வாசலில்
நின்றுக்கொண்டிருந்தார். ‘அவங்க அப்போவே வந்துட்டாங்க.அம்பாள்சன்னதில இருக்காங்க.நாம போகலாம்.’ அவங்க குழந்தை பேர் என்ன?? என்று கேட்டேன். ‘சஷி’ என்றபடி வேகமாக சென்றார்.

சுவாமி தரிசனம் முடித்து மண்டபத்தில் வந்து எல்லோரும் உட்கார்ந்தோம்.’ சாரி ரொம்ப அவசரமாக முடிவு எடுத்ததால்.முன்னக்கூட்டி பேச முடியலை. நான் சாம்பசிவம்.இது என் மனைவி கற்பகம்.’

‘ நான் வெங்கட்ராமன் .இது என் மனைவி ஹேமா.இது என் ஒரே மகன் சசிகுமார்.’
கற்பகம் என்னை திரும்பி பார்த்து முறைத்தாள் .

பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் ருக்கு முன்னே வந்து அவருக்கு கை கொடுத்தபடி , ‘ சார் நான் சம்பசிவனுடைய ஒரே சன் ருக்மாங்கதன்.’ என்றான்

‘அதென்ன யாரை பார்த்தாலும் குழந்தைன்னு கூப்பிடற பழக்கம் ?’ காதுல மிஷின் மாட்டுங்கோன்னு நான் சொன்னா கேக்கறது கிடையாது’ கற்பகத்தின் அர்ச்சனை எனக்கு அப்போவே காதில் கேட்க தொடங்கியது.

– டிசம்பர் 2013

Print Friendly, PDF & Email

1 thought on “குழந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *