குடித்தனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2023
பார்வையிட்டோர்: 1,717 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘வண்ணாரப்பேட்டை’ என்று சொல்லாலும், ‘வண்ணையம்பதி’ என்று எழுத்தாலும் அழைக்கப்படும் அந்தப் பகுதியில், முன்னும் பின்னும் முடியாத அந்த தெருவுக்குள், ஒரு டெலஸ்கோப்பை வைத்துப் பார்த்தால், வாசல் பெரிதாகத்’ தெரியும். உள்ளே போனால், சாலைகளில் கழண்டுபோய் கிடக்கும். ‘சஸ்போன் பொந்துகள்’ மாதிரி பல பொந்துகள் தெரியும். அவை குடித்தனக்காரர்கள் கொலுவிருக்கும் ‘வீடுகள்’. இப்படி இருபது இருபத்தைந்து பொந்துகள். வாசல் ஒரத்தில் ஒரு ‘கக்கூஸ்’. அதன் கதவு தனியாக எங்கேயோ கிடக்கும். டோகிறவர்கள், அதை எடுத்து வாசலில் பொருத்தி, கையில் கொண்டு போகும் ‘பக்கட்டை’ அணையாகக் கொடுத்து நிறுத்த வேண்டும்.

இத்தகைய பொந்து வீடுகளுக்கு மத்தியில் ஒரு குட்டி காம் பவுண்டும், அதற்குள் அழகான ஒரு சின்ன வீடும் இருக்கின்றன. அந்த வீட்டுக்கு மாடி உண்டு. மாடியில் பால்கனி உண்டு. அந்த பால்கனியில் நின்று பார்த்தால், பொந்து வீடுகளுக்குள் என்ன நடக்கும் என்பது தெரியும். சொல்லப்போனால், அது ‘சிஐஏ’ பாணியில் கட்டப்பட்ட பால்கனி மாதிரி. தெரிந்தது.

மாலை மணி ஆறாகிவிட்டது. மழை மேகம் சூழ்ந்த மையிருட்டில் குரலை வைத்தே அடையாளம் காண முடியும். காம்பவுண்ட் வீட்டுக்குள் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ரேடியோ ஒலித்துக்கொண்டிருந்தது.

அந்த வீட்டின் ஒசி வெளிச்சத்தில், அஞ்சலை உட்பட நாலைந்து பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அஞ்சலைக்கு இருபத்து மூன்று வயதிருக்கும். இதர பெண்களில் இருவர் கிழவிகள். அஞ்சலை, ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டு, பதிலை வரவழைத்துக் கொண்டிருந்தாள்.

“ஆமா… இன்னிக்கு பய வியாபாரத்துல எம்மாக்காக கிட்சுது?”

“இந்த மழைல… எல்லாப் பயமும் அலுவிப்பூட்டு… ரோட்மேல பூட்டிருந்தேன்… போலீஸ் லாரிக்காரன் என்னையும், பயத்தையும் வாரிக்கின்னு பூட்டான். கட்டையில பூறவேன்களுக்கு… ஏதாவது வாயில பூட்டிருந்தா விட்டிருப்பான்… காசில்ல… நாளக்கி பயின் கட்டணும். யார்கிட்ட கேக்குறதுன்னு புரியல… படாபேஜார் பொழப்பு…”

“நான்… கொஞ்சம் தர்றேன்… ஒரு வாரத்துல தந்துடு…”

“நீ மகராசியா இருக்கணும்… எதுக்கும் உன் ஆம்புடையான்கிட்ட சொல்லிட்டு தா…”

அஞ்சலை இன்னொருத்தியிடம் பேசினாள்.

“என்ன… ராமாக்கா. எப்படி இருக்கு உன்னோட பொழப்பு?” மழை காலத்துல பீடிங்க நல்லா விக்கும்… இன்னிக்கு முப்பது வண்டலு சுத்தினேன். இன்னும் இருபது வண்டலு சுத்துனா… அம்பது வண்டல கடையில பூடலாம்… இந்த பாழாப்போற பாவி இன்னும் ஒரு மணி வரைக்கும் லைட் ஆடமாட்டாள்…”

“ஆமா… இன்னும் ஏன் மெயின் போடல… இருட்டிட்டா பூடவேண்டியது தானே…”

“அது மத்த வீட்ல. இந்த வீட்ல… ஆறரை மணிக்கு முன்னால… தலைகீழா நின்னாலும்… மெயின் போடமாட்டாள்…”

“வாங்க எல்லாருமா வீட்டுக்காரம்மாகிட்ட கேட்டுப்’பாப்போம்…”

“அவ தாடகையாச்சே.” ” அவ தாடகையானா… நாம சூர்ப்பனகையாயிட்டா பூச்சு.” அஞ்சலையுடன் எல்லா பெண்களும் சேர்ந்து சிரித்தார்கள் வீட்டுக்கார அம்மாவிடம் ‘லைட்’ போடும்படி கேட்பதற்காக, அடிமேல் அடி வைத்து நடந்தார்கள்.

அந்த வீட்டிற்கு, இரண்டு “கனெக்ஷன்கள்”, குடித்தனக்காரர்கள் பொந்துகளில் எரியும் மின்சார பல்புகளின் ‘குடுமி’ (அதாவது மெயின்) வீட்டுக்காரர் வீட்டில் இருந்தது… ஆறரை மணிக்கு முன்னதாக மெயின் விழாது. இரவில் ஒன்பதரை மணிக்கு, யார் என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி, மெயின் “ஆப்”பாகிடும். இந்த மரபில் ஒரு மாறுதலை ஏற்படுத்துவதற்காக அந்தப் பெண்கள் அஞ்சலையின் தலைமையில் வீட்டுக்கார அம்மாவிடம் தூது போனார்.

வுட்டுக்கார அம்மாவுக்கு, நாற்பது வயதிருக்கும். பால்கனியில் நடக்கமாட்டாமல் நடந்துகொண்டிருந்தாள். கழுத்தில் இருந்த நகைகளைப் பார்த்தால், திருப்பதி வெங்கடேஸ்வரனே பொறாமைப்படுவார்.

அண்ணாந்து பார்த்த அஞ்சலைக் கோஷ்டியை, அவள் அலட்சியமாகப் பார்த்தாள். அவர்களிடம், அவள் பேசுவது கிடையாது. அந்த வீட்டில் சுமாரான பொந்தில் வாழும் மளிகைக் கடை அண்ணாச்சி பொஞ்சாதியுடனும், அதே மாதிரி இன்னொரு பகுதியில் வாழும், ‘நர்ஸம்மா’ என்று அழைக்கப்படும் ஆயாவுடனுந்தான் அவள் பேசுவாள்.

அஞ்சலைதான் தயங்கித் தயங்கிப் பேச்சைத் துவக்கினாள்.

“வுட்டுக்காரம்மா… ஒரே இருட்டா கீது… வுட்டுக்குள்ளே எது எங்கயிருக்குன்னு தெரியல… சமைக்கணும்… லைட் பூடும்மா…”

வுட்டுக்காரம்மா அவளை, அலட்சியமாகப் பார்த்தாளே தவிர, பதிலளிக்கவில்லை. பழ வியாபார ஆயாவும் கேட்டுப் பார்த்தாள்.

“வுட்டுக்காரம்மா… இந்த கியவியால ஒண்னும் முட்யல… அழுவுன பயங்கல… தனியா பிரிக்கணும்… லைட் பூடும்மா…”

“வுட்டுக்காரம்மாள் ‘பூட்டாள்’,. அவர்களுக்கு பதிலளிக்காமல், அலட்சியமாக, தன் அறைக்குள் நுழைந்தாள். ‘மெயின்’ போடப் போயிருப்பதாக நினைத்த அந்தப் பெண்கள், வெளிச்சத்திற்காகக் காத்து நின்றார்கள். பிறகு “வாங்க… அவ ஆட்டுக்குள்ளேயே போயி கேக்கலாம்” என்று அஞ்சலை சொல்லிக்கொண்டே படி ஏறினாள். இதர நால்வரும் பின்தொடர்ந்தனர்.யார் அது?” “நாங்கதாம்மா…” ‘’எதுக்கு வந்திங்க?” “லைட் பூடும்மா… ஒரே இருட்டா கீது.” “இது என்னடி புதுச்சட்டம்… இப்போ மணி அஞ்சரை தான் ஆவுது… ஆறரைக்குத்தான் லைட்டு…”

“லைட்டு இருக்கதே. இருட்ட நீக்குறதுக்குத்தாம்மா… இப்போ கெட்டியாய் இருட்டிட்டு…”

‘அஞ்சலை… வீணா கலாட்டா பண்ணாத… லைட்ட பூட முடியாதுன்னா பூட முடியாதுதான். சும்மா… தொண்ட வலிக்க கத்தாத… படியேறி வந்த அளவுக்கு உங்களுக்குத் தைரியம் வந்துட்டா…’

“உன் வுட்ல மட்டும் லைட்டு எரியணும்… எங்க வீட்ல எரியப் பூடாதா… நீ செய்யுறது நாயமாம்மா…”

“என்னடி பண்ணணுங்கற இப்போ?… லைட் பூட முடியாது… இருக்க இஷ்டமிருந்தா இரு… இல்லன்னா காலி பண்ணிடு…”

பழக்கார ஆயா, இடைமறித்தாள்.

“அவ விபரமில்லாத பொண்ணு. அறியாதவ… தெரிஞ்சும் தெரியாம பேசுவா. கண்டுக்காதம்ம… ஒரே இருட்டா கீதேன்னு சொல்றதுக்கு வந்தம். மத்தபடி… ஒண்ணுமில்ல…”

“என்ன ஆயா… நீயும் அவள் கூட சேர்ந்துக்கிட்டு வந்துட்ட… இந்த வீட்ல நீயும்… அஞ்சு வருஷமா கீறியே… நீயே… நாயத்த சொல்லு… எப்போவாவது ஆறரைக்கு முன்னால லைட் பூட்டிருக்கமா…”

“இருட்டாகீதேன்னு சொன்னோம்.” “நீங்க கொடுக்கிற முப்பது ரூபாய்ல இப்படி லைட் பூட்டா ஆண்டியாய் பூடவேண்டியது தான்… கரெண்ட் பில்ல கட்டுறது யாரு? இனிமே இப்படி படியேறி வந்திங்கன்னா… நான் பொல்லாதவளாயிடுவேன்… அஞ்சல உன் ராங்கில்லாம் இங்க செல்லாது… பேசாம… அடுத்த மாசம் ஒண்ணாம் தேதி காலிபண்ணிடு…”

“ஏம்மா அனாவசியமா பேசுறீங்க… லைட்டு கேட்டோம்… முடியாதுன்னுட்டே… அத்தோட விட்டுடேன்… காலிபண்ணு கீலி பண்ணுன்னு ஏன் அனாவசியமா பேசுற…”

“ஏண்டி… உன் புருஷன் தேக்கு மரம் மாதிரி ஜாம் ஜாமுன்னு இருக்கிற தைரியத்துல பேசுறியா… எங்ககிட்டேயும் ரெளடிங்க இருக்காங்கடி…”

“பொம்மனாட்டிங்க பேச்சில… ஏம்மா ஆம்பிளங்கள இழுக்கிற? லைட்டு பூடுன்னு கேட்டதுக்கு, தேக்கு மரங்கிற, ரெளடிங்கள கூப்பிடுவேங்கற நாயமா…”

“சரி உன்கிட்ட பேசுனா… என் மதிப்புதான் பூடும்… அடுத்த மாசம் நீ காலி பண்னியாகணும்…”

“மூணு மாச அட்வான்ஸ் முள்ளங்கி பத்த மாதிரி சொளையா கொடுத்திருக்கோம்… நீ நினைச்ச நேரத்துல காலி பண்றதுக்கு நாங்க ஆளுங்கல்ல…’

“உன்னை காலி பண்ண வைக்கலன்னா என் பேரு காமாட்சி இல்ல…”

“நான் காலி பண்ணிட்டா, என்பேரு அஞ்சலை இல்ல…”

நான்கு பெண்களும், அஞ்சலையை இழுத்துக்கொண்டு போனார்கள்.

ஆறரை மணிக்கு லைட் போடப்பட்டது. அஞ்சலையின் கணவன் ஒன்பது மணிக்கு வந்தான். நடந்ததை அவனிடம் கூறினாள் அஞ்சலை. அவன் அவளைத்தான் ‘சத்தம்’ போட்டான். பேசிக் கொண்டிருந்ததால், அவன் சாப்பிடுவதற்கு ஒன்பதரை மணியாகிவிட்டது. அவன் தட்டில் கை வைக்கும்போது, ‘வுட்டுக்காரம்மா’ மெயினில் கைவைத்தாள். அஞ்சலையால் தாள முடியவில்லை. வெளியே வந்து கத்தினாள்.

“என்னம்மா பொல்லாத வீடு வச்சிருக்கே… ஒரு வார்த்தை சொல்லிட்டு, ‘ஆப்’ பண்னக் கூடாது?… ஐய… அவரு சாப்பிடுற டயம்தானா உனக்குக் கிடைச்சது?”

அஞ்சலையின் கணவன் வெளியே வந்தான்.

‘ஏம்மே… இப்படி கத்துறே… லைட்ட ஆப் பண்ணுனா பண்ணிட்டுப் போறாங்க… செத்தா பூடுவோம்.”

வீட்டுக்காரம்மாவின் கணவனும், வயிற்றைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார். அவர் மனைவி, பால்கனியில் நின்றுகொண்டு ‘ராஜ்ய பரிபாலனம்’ செய்து கொண்டிருந்தாள்.

வீட்டுக்காரர், வழக்கத்திற்கு மாறாக சமாதானம் சொன்னார்.

“அஞ்சலை நீ போம்மா… அவளுக்கு அறிவில்ல… அறிவு கெட்ட மூதேவி… ஒரு வார்த்தை சொல்லிட்டு ஆப் பண்ணினால் என்ன?. என்னப்பா ராமு, ஹார்பார் வேல எப்படிக்கீது?”

“பரவாயில்லிங்க…”

“சரி… நீ போய் சாப்பிடு… நான் லைட் போடுறேன்…”

விளக்கு எரிந்தது. மறுநாள், அஞ்சலை, குடித்தனக்கார பெண்கள் மத்தியில் கதாநாயகி ஆகிவிட்டாள். நான்கு நாட்கள், கேட்குமுன்னாலேயே ‘லைட்’ எரிந்து விட்டது. வுட்டுக்காரம்மாவும், அஞ்சலையைப் பார்த்து புன்னகை பூத்தாள்.

அஞ்சலைக்கு மனசு கேட்கவில்லை. வீட்டுக்காரய்யாவுக்கு எவ்வளவு பெரிய மனசு! பத்து ஆடுங்க வச்சிருக்காரு! கொஞ்சமாவது கர்வம் இருக்கணுமே! அவ்வளவு பெரிய மனுஷன் முன்னால, அவரு பொஞ்சாதிய அப்படிப் பேசியிருக்கக் கூடாது… நாலு அங்குல கனபரிமாண விபூதியுடன், பால்கனியில் உலா’ வந்துகொண்டிருந்த அவரிடம் அஞ்சலை மெள்ள மெள்ள சென்றாள்.

“ஐயாவுக்கு பெரிய மனசு… நான் அற்பக் கயி த… வுட்டுக்காரம்மாவ… ஏடாகோடமா பேசிட்டேன்… ஐயா தான் மன்னிக்கணும்…”

வுட்டுக்காரர் விபூதித்துள் கீழே விழும்படியாகச் சிரித்தார்.

“இந்த வுலகத்துல… யாரு எதம்மா அள்ளிக்கினு போகப்போறா… ஏதோ இருக்கிற வரைக்கும் ஒருவருக்கொருவர் ‘அட்ஜஸ்’ பண்ணியோணும்… நேற்றிருப்பார் இன்றில்லை… அம்மா உன்னப்பத்தி நேத்துகூட நல்லவிதமாத்தான் சொன்னாங்க… நீ, அவங்கள சத்தம் போட்டேங்கறது. நீ சொல்லித்தான் எனக்குத் தெரியுது…”

“அம்மாவுக்குப் பெரிய மனசுங்க… நான் வர்றேங்க…”

“அப்புறம்… அஞ்சல ஒரு சின்ன விஷயம்… கார்ப்பரேஷன் பாவிங்க வந்து எவ்வளவு வாடகை கொடுக்கிறேன்னு கேப்பாங்க. விடியாத்தம் வர்ராங்க… நீ வந்து, பத்து ரூபாய் கொடுக்கிறதாச் சொல்லு…”

“நீங்க இவ்வளவு பெரிய மன்சா இருக்கையில் நான் மட்டும் சின்ன மன்சா நடக்கிறது நாயமா? நீங்க சொன்னபடியே சொல்றேங்க… இந்த கக்கூலக்கு மட்டும் ஒரு தாழ்ப்பாள் போட்டிருங்க ஐயா…”

கார்ப்பரேஷன்காரர்கள் வந்தார்கள். அஞ்சலை உட்பட அனைவரும், முப்பது ரூபாயை பத்து என்று அடித்துச் சொன்னார்கள். அப்படிச் சொல்லும்போது அஞ்சலைக்கு மட்டும் என்னவோ போலிருந்தது. ஆட்டுக்கார ஐயாவிடம் சொல்லி, கக்கூஸ் கதவுக்கு தாழ்ப்பாளும், பாத்ருமுக்கு லைட்டும், காவாவுக்கு சுவரும் வைத்து விடலாம் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள். கார்ப்பரேஷன்காரர்கள் வந்துபோன அன்றே “லைட்டு: பழையபடியும் ஆறரை மணிக்குத்தான் எரிந்தது. ஒன்பதரை மணிக்கு சொல்லாமல் கொள்ளாமல் ஆப் ஆனது.

மறுநாள் ஆறு மணிக்கே மழைமேக மையிருட்டு, கொடிகட்டிப் பறந்தது. ஆட்டுக்கார ஐயாவும், அம்மாவும் பால்கனியில் உலா வந்தனர். அஞ்சலை போனாள்.

“அவருக்கு நைட் ஷிப்டு… சோறு பொங்கணும்… லைட் போடுங்க…”

ஆட்டுக்காரம்மா ஆந்தை மாதிரி கத்தினாள். “இந்தா பாரு… இந்த ராங்கித்தனமெல்லாம்… என்கிட்டே வச்சுக்காதே… இஷ்டமுன்னா இரு… இல்லன்னா மருவாதியா காலிபண்ணிட்டு பூடு. நீ வச்ச ஆளுல்ல நாங்க… நேருக்கு நேர் பேசுற அளவுக்கு தில்லு வந்துட்டா… தத்தேரி மூதேவி.”

“நான் இன்னா கேட்டேன்… நீ இன்னாம்மா… பேசுற… லைட்டு பூடுன்னா தத்தேரி கித்தேரின்னு கத்துறியே… ஆட்டுக்கார அய்யா நீயே சொல்லு. அவங்க பேசுறது. நாயமா…?”

ஆட்டுக்காரய்யா திருவாய் மலர்ந்தருளினார்.

“உன்ன… நானும் கவனிச்சுக்கினுதான் வர்றேன். நீ நமக்குச் சரிப்படாது… நான் நல்லவனுக்கு நல்லவன். பொல்லாதவனுக்கு பொல்லாதவன்… சோம்பேறிக்குச் சோம்பேறி… அடுத்தமாசம் ஆட்ட காலி பண்ணியாகணும்…”

அஞ்சலைக்கு ஒன்றும் ஒட வில்லை. நேற்றிருப்பார் இன்றில்லை என்று தத்துவம் பேசிய ஆட்டுக் காரய்யா அடாவடித்தனமாகப் பேசுவதன் பொருள் புரியாமல் தன் இருப்பிட பொந்துக்குள் போனாள். கணவன் வரட்டும், இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்று அவள் இள ரத்தம் கொதித்தது.

கணவன் வரவில்லை. ஒரு கார் வந்தது. அதில் ஒரு ஆள் வந்தார்.

‘அஞ்சலங்கறது யாரு?”

“நான்தானுங்க… ஒங்களுக்கு என்ன வேணும்…?”

“உன்னோட புருஷன் ராமலிங்கமா? ஹார்பார்ல வேல பாக்குறாரா?”

“ஆமாங்க…” “அவரு கெரேன்ல இருந்து கீழே விழுந்துட்டாரு. ஸ்டான்லில அட்மிட் பண்ணியிருக்கு… உன் பேரச் சொல் லியே

புலம்பிக்கிட்டிருக்காரு. வா… கார்ல கொண்டு போய் விடுறோம். அஞ்சலை, கீழே விழாமல் இருப்பதற்காக வந்தவரின் கையையே ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள்.

“உன் புருஷன் தேக்கு மரம் மாதிரி கீறான்னு அந்த பாவி சொன்னாளே… சொன்னாளே.” என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு கிளம்பினாள்.

பதினைந்து நாட்கள் ஒடியிருக்கும். அவள் கண் முன்னாலேயே பலர் அவள் வீட்டைப் பார்க்க வந்தார்கள். அடுத்த மாதம் அவள் காலி செய்வாள் என்ற அனுமானத்தில் வந்திருக்கும், எதிர்கால குடித்தனக்காரர்கள் அவர்கள். நான் ஒண்ணும் காலி பண்ணல. மருவாதியா பூடுங்க’ என்று அவர்களை விரட்டியடித்தாள்.

அஞ்சலை, ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

“ஆயா. இன்னிக்கு… நீ கொஞ்சம் முறவாசல் செய்திடு. நான் இன்னொரு நாளிக்கு உனக்கு பண்ணிடுறேன். டயமாயிட்டு. அவரு காத்திக்கினு இருப்பார்”

(ஒவ்வொரு குடித்தனக்காரரும் ஆளுக்கு ஒரு காவாயை பெருக்கிக் கக்கூலைக் கழுவி சுத்தம் செய்யவேண்டும். இதற்கு முறைவாசல் என்று பெயர்).

“இப்போ கோர்ட்ல போயி… பயின் கட்டணும். லேட்டாயிட்டே. மீனாட்சிய கேட்டுப்பாரு. மீனாட்சி இங்க வாடி. நம்ம அஞ்சலைக்கு இன்னிக்கு முறவாசல் பண்ணிடு. உன் ஆம்புடையா எப்படிம்மா கீது…”

“அதை ஏன் கேக்குற ஆயா… கால எடுக்கணுங்றாங்க.”

அஞ்சலையால் அழாமல் இருக்க முடியவில்லை. இதற்குள் மீனாட்சி, முறவாசலுக்காக அஞ்சலையின் துடப்பத்தை எடுத்தாள். திடீரென்று பால்கனியிலிருந்து உச்சஸ்தாயியில் ஆட்டுக்காரம்மா கத்தினாள்.

“ஏய். மீனாட்சி, துடப்பத்த கீழபோடு. அவங்கவங்க… முறவாசல. அவங்கவங்கதான் செய்யணும்…”

“அவளுக்கு ஆஸ்பத்திரிக்கு லேட்டாயிட்டாம்மா…”

“லேட்டா ஆனா என்ன, ஆகாட்டா என்ன. அவளால செய்ய முடியாதான்னு கேளு. அப்புறம். நீ இன்னும் உன் வாடகைய தரல. சாயங்காலத்துல வாடக வந்தாகணும்.”

வீட்டுக்காரம்மா, மீனாட்சியை பிடிக்கவேண்டிய இடத்தில் பிடித்ததால் அந்த வலி தாங்க முடியாமல் அவள் துடப்பத்தைக் கீழே போட்டாள்.

அஞ்சலை ஒரு அசுர வேகத்தில் துடப்பத்தை எடுத்தாள். பதினைந்து நிமிடங்களில் முறைவாசலை முடித்து விட்டு, காவாயில் கையை கழுவினாள். பிறகு குடத்தை எடுத்துக் கொண்டு குழாயடிக்குப் போனாள். மழைத் தண்ணிர் தேக்கத்தில், பானை மிதக்க அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஒரு பெண் நீர் பிடித்துக் கொண்டிருந்தாள். பல பானைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அஞ்சலை நீர் பிடித்துக் கொண்டிருந்தவளிடம் கெஞ்சினாள்.

“ராமக்கா, எனக்கு கொஞ்சம் விடு. ஒன்பது மணிக்குப் பிறகு போனா… ஆஸ்பத்திரிக்குள்ள விடமாட்டாங்க… அதால பசி தாளமுடியாது…”

ராமக்கா பாதி நிரம்பிய தவலையை விடுவித்துக் கொண்டு, அஞ்சலையின் குடத்திற்கு இடமளிக்கப் போன போது, வீட்டுக்காரர் சுவர்க்கடிகாரம், ஒன்பது தடவை அடித்தது. அடித்தவுடன் ஆட்டுக்காரம்மாவின் வேலைக்காரி குடங்களுடன் கீழே இறங்குவாள். எல்லாக் குடங்களும் வெறும் வயிற்றுடன் நிற்க வேண்டும். அரைமணி நேரம் வீட்டுக்காரியின் குடங்கள் நெப்பப்படும்.’ அப்புறந்தான் குடித்தனக் குடங்கள் குழாய்ப் பக்கம் தலைகாட்ட வேண்டும்.

இந்த நியதிப்படி, வீட்டுக்காரம்மாவின் வேலைக்காரி குடங்களுடன் குழாயடிக்கு வந்துபோது, அஞ்சலையின் குடத்தில் தண்ணிர் விழத் துவங்கியது. பால்கனியில் நின்று பரிபாலனம் செய்த வீட்டுக்காரியால் தாளமுடியவில்லை.

“ஏய் அஞ்சல. உன் குடத்த எடு. ஒன்பது மணி ஆனதும் யாரும் குளாப் பக்கம் வரக்கூடாதுன்னு தெரியாது…? ஏய் கமலா… அவள் குடத்த எடுத்து துார வீசுடி. ஏய் எருமை மாடு. தூக்கித் துரப் போடுடி. ஏண்டி தடிமாடு மாதிரி நிக்குற…”

வேலைக்காரப் பெண் தயங்கிக் கொண்டு நின்றாள். வீட்டுக்காரிக்குத் தன் உத்தரவு உதாசீனப்படுத்தப்படுவது கண்டு, வயிறு விம்மியது. கீழே இறங்கி குழாயடிக்குச் சென்றாள். அஞ்சலையின் குடத்தை எடுத்து, அதில் நிரம்பியிருந்த பாதி தண்ணிரைக் கீழே கொட்டிவிட்டு, ணங் என்று வைத்தாள்.

அஞ்சலை தன்னை மறந்தாள். கணவன் கஞ்சி இல்லாமல் காத்திருப்பானே என்ற ஆதங்கம், கொத்தடிமை போல் முறவாசல் செய்த கொடுமை. கணவனுக்குக் கால் போய் விடும் என்ற பீதி – அத்தனையும் அவளை ஆட்கொண்டது. என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் ஆட்டுக்காரம்மாவின் குடத்தை எடுத்து, தூரபோட்டு விட்டு தன் குடத்தை எடுத்து வைக்கப் போனாள். அதைத் தடுக்க வந்த வீட்டுக்காரியைத் தள்ளினாள். அவள் படிக்கட்டில் விழுந்து எழ முடியாமல் தவித்தாள். நெற்றியில் லேசாகக் காயம். அஞ்சலை தான் அவளைத் துக்கி விட்டாள்.

“என்னையா… அடிச்சிட்ட… ஏய் கமலா. அய்யாவுக்குப் போன் பண்ணுடி… சீக்கிரமா போடி தத்தேரி முண்ட…”

ஆட்டுக்காரம்மா மாடிப்பாடி யேறிப் போனாள். தலையைச் சுற்றி ஒரு கட்டுப் போட்டுக் கொண்டாள். வேடிக்கை பார்த்த கூட்டத்தைப் பொருட்படுத்தாமல், அஞ்சலை குடத்தை எடுத்துக் கொண்டு இருப்பிடத்திற்குப் போனாள். பார்லி அரிசியைக் காய்ச்சினாள். காபி போட்டாள். புருஷனுக்கு கால் போய்விடுமே என்ற அச்சமும், அவன் காத்திருப்பானே என்ற வேகமும்தான் அவள் சிந்தனையை ஆட்கொண்டிருந்தன.

பார்லி கஞ்சியை, ஒரு கிண்ணத்தில் வைத்து, முந்தானை சேலையால் மூடிக்கொண்டு காப்பி டம்ளரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அஞ்சலை வாசலுக்கு வந்த போது போலீஸ் வான் வந்தது. –

“அஞ்சலங்கறது யாரு…”

“நான்தானுங்க… என் வீட்டுக்காரருக்கு எதுவும் ஆயிட்டா?”

“அதெல்லாம் ஸ்டேஷன்ல வந்து சொல்றோம். நீ இப்போ வண்டியில… ஏறு…”

“அது ஆஸ்பத்ரில. காத்துக்கினு இருக்கும் சாமி. நான் கஞ்சி குடுத்துட்டு. வந்துடுறேன்.”

“ஏய்… பொல்லாத வாயாடியா இருப்ப போலிருக்க… நீ நிச்சயம் அந்த அம்மாவை கத்திய வைச்சி. குத்திருக்கத்தான் செய்வே. மரியாதயாய் வண்டில ஏறுறியா… இல்லியா?”

போலீஸ்காரர் கை மேலே படாமல் இருப்பதற்காக அஞ்சலை லாரியில் ஏறினாள்.

அஞ்சலை இப்போது லாக்கப்பில் இருக்கிறாள். அவள் கணவன் அவளைக் காணோம்ே என்று ஒடிந்துபோன காலால் உதைத்துக் கொண்டிருக்கிறான். வீட்டை எதிர்கால குடித்தனக்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாடகை இப்போது நாற்பது ரூபாய். வேனுமானால் போங்கள்.

– ஒரு சத்தியத்தின் அழுகை – முதல் பதிப்பு : 1981, மணிவாசகர்பதிப்பகம், சென்னை-600108

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *