குடத்துக்குள் புயல்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 7,852 
 
 

பாலகுமாரானின் ” இதற்குத்தான் ஆசைப்பட்டாயா ? ” படைப்பைப் ரகசியமாகப் மறைத்தபடியே அடுப்பில் பாலை வைத்துவிட்டு, பால் காயும்வரையில் கதையைப் படிக்கலாமே…என்ற எண்ணத்தில் படிக்க ஆரம்பிக்க , மனது கதையோடு ஒன்றிப் போய் படித்துக் கொண்டிருந்தவளை தனது பின்னாலிருந்து திடீரென ஒரு கை இடது கையில் இருந்த புத்தகத்தை வெடுக்கெனப் பிடுங்கி வீசி எறிய தூக்கிவாரிப் போட்டுத் திரும்பியவள் அத்தை நின்றிருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டு விழித்தாள் தீபா.

பால் பொங்கி வழியறது கூடத் தெரியாமல் அப்படி என்னடி…நேரங்கெட்ட நேரத்தில் புஸ்தகம் வேண்டிக் கெடக்கு, புத்தகப் பைத்தியமா நீ …? முதுகில் விழுந்த அடியில் சுய நினைவுக்கு வந்தாள் தீபா. உனக்கு எத்தனை சொன்னாலும்,திட்டினாலும் சொரணையே இருக்காதா…? எருமை மாட்டு ஜென்மமே….காலையில் வீட்டு வேலையைப் பார்ப்பியா ….வந்துட்டா….பெரிய படிப்பாளி கணக்கா…நானே… இதுவரை ஒரு புஸ்தகம் இப்படி படிச்சதில்லை. இதே அவரு கண்ணுல இது பட்டிருந்தா நீ அம்புட்டுத் தான்….நானாவது வீசி எறிஞ்சேன்…அவரு சுக்கல் சுக்கலாக் கிழிச்சு எறிவாரு…
உன் …கண்ணு முன்னாடி பால் பொங்கினாலே…நீ யாருக்கு வந்த விருந்தோன்னு .பாராக்கு பார்க்கிறவ…..இந்த லட்சணத்தில புத்தகம் கேட்குதோ…புத்தகம்…! பிஞ்சிடும்….என்று கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் பிலு பிலு வென உலுக்கிக் கொண்டிருந்தாள் அத்தை..

பால் பொங்கி காஸ் அடுப்பை அபிஷேகம் பண்ணி மேடை வழியாக தர தரவென வழிந்துகோலம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தவளுக்கு திடுக்கென்றது. நல்ல பால் போச்சே….! நான் ஒரு தண்டம்…இந்தப் பாலை ஒழுங்கா காய்ச்சி இறக்கியிருக்கக் கூடாதா? அந்த நேரம் பார்த்தா இந்தக் கதையின் உச்சம் வந்து தலையை ணங்…குனு ஒரு கொட்டு கொட்டி விட்டுப் போனது..அதைப் படிக்கும்போது பால் “கோவிந்தா…கோவிந்தா” ன்னு என்னை ஏமாத்திட்டு பொங்கி வழிய ஆரம்பிச்சு……இதோ..இப்போ இடுப்பை முறிக்குது. கதையோட உச்சம் தீபாவின் உச்சந்தலையில் விடிந்தது !

அத்தை….நான் …வந்து…தெரியாமல்….!

உங்கப்பன் வீட்டுச் சொத்து பாரு…தெரிஞ்சு கொஞ்சம்…தெரியாமல் கொஞ்சம்னு…பால் விக்கற விலையில் இப்படி நீ தெனம் கொட்டிக் கவுத்தா என் மகன் தலைல துண்டைப் போட்டுட்டு போக வேண்டியது தான்….அதோட… குடும்பம் விளங்கினாப்பல தான்…! மாமியாரின் நீட்டி முழக்கிய குரல் நையாண்டியாக இவளது பொறந்த வீட்டை இடித்து துவம்சம் செய்ய…!

ஆச்சு….இன்னைக்கு இந்த ஆரம்பம்..இது ஒண்ணே போதும்….ராத்திரி வரைக்கும்.. வெறும் உரலில் மாட்டிய அவல் தான் அவள். தீபாவுக்கு நல்லாத் தெரியும் காலையில் மாமியார் வாயில் விழுந்தால் அவ்வளவு தான், நாள் பூராவும் தீபா-வளி (வலி) தான். அன்று பட்டாசுகள் தொடர்ந்து வெடிக்கும் .

அன்றைய பொழுதில் தீபாவும் தூங்க முடியாது. மாமியாரும் தூங்க மாட்டார். இன்னைக்கு எத்தனை தடவை ஆரத்தி எடுக்கப் போறாங்களோ? எத்தனை தேங்காய் உடைப்பாங்களோ?

“தரை உன்கிட்ட எனக்கு வலிக்குது மெதுவாத் துடைன்னு சொல்லிச்சா…? நல்லா அழுத்தித் துடைப்பியா.. என்னமோ…தரையைத் தடவி விட்டுக்கிட்டு…….” என்று ஆங்காரமாக கத்த ஆரம்பிக்க.. தரையை எப்படித் துடைப்பதுன்னு தீபாவுக்கு மாமியார் பெரியபுராணம் சமையல் அறையில் அரங்கேற்றமானது ….!

அத்தையின் புலம்பல் முதுகுக்குப் பின்னால் வழக்கம் போல் கேட்டவண்ணம் இருந்தது. அந்தத் தொனியில் “எனக்குக் கிடைச்ச அடிமை ரொம்ப ரொம்ப நல்லவ….எப்படித் திட்டினாலும் தாங்குவா…” என்று வயலின் வாசித்துக் கொண்டிருந்தது.தீபாவுக்கு மட்டும் எதையும் தாங்கும் இதயத்தை தெய்வம் தெரிந்து கொண்டு தான் தந்ததோ ?

எட்டு மாதக் கைக்குழந்தை தூளியிலிருந்து ”இங்க வா….நானும் எழுந்துட்டேன் ” என்று நெளிந்து நெளிந்து செய்கை காட்ட..இவள் ஓடுவதற்குள்…தூளி வழியாக குழாய் திறந்து விட்டது போல தரையை ஈரமாக்க…பிடிசுருணைத் துணியோடு ஒடுபவளை….குழந்தையின் அழுகை வரவேற்றது. காலை நேரம் சமையல் அறையும், ஹாலும்., பூஜையறையும், குளியலறையும்…ஆக ஒவ்வொரு பக்கம் ஓடி ஓடி….குடும்பக் கொடியை நாட்டிக் கொண்டிருப்பாள் தீபா….வழக்கம் போல. இந்தக் காலை நாடகம் எல்லாம் ஓரளவுக்கு முடிந்து கடையைக் கட்ட பதினோரு மணியாகி விடும். அதன் பின்பு தான் கொஞ்சம் மூச்சு விட நேரம் இருக்கும்.மறுபடியும் நாலு மணிக்கு ஆரம்பித்தால் இரவு பத்து மணியைத் தாண்டி ஓடும் திரை போட.

கணவனுக்கோ ஷிஃப்டு டூட்டி. இரவெல்லாம் வேலை பார்த்துவிட்டு வந்து பகலில் கொறட்டை விடுவார்….அப்போது குழந்தை கூட அழக் கூடாது…கொஞ்சம் சத்தம் கேட்டாலும் தூக்கம் கெட்டுப் போச்சுன்னு குய்யோ முறையோன்னு கத்தியே ஊரைக் கூட்டுவார். அதனாலேயே..குழந்தை வாயை எப்படி மூடுவது ? குழந்தையைத் தூக்கிக் கொண்டு தெருவுக்கு ஓடுவாள் தீபா !

இந்த ஓட்டத்தில் ஓடி ஓடி..தான் யார் என்பதையே கொஞ்சம் மறந்து போய் தானாக இயங்கிக் கொண்டிருந்த தீபாவுக்கு போன மாதம் குடும்பத்தோடு சென்ற ஒரு கல்யாணத்தில் திடீர் என்று தன் பழைய சினேகிதி சாந்தியைப் பார்த்து அடையாளம் கண்டதும் தலை கால் புரியவில்லை…எத்தனை வருஷம் கழித்து பார்க்கிறாள்…சாந்தி தான் இவளைப் பார்த்ததும் உடனே கண்டு பிடித்து..ஏய்…தீபா….எப்படி இருக்கே? உன்னை நான் இத்தனை வருஷம் கழிச்சு இங்கே சந்திப்பேன்னு நினைச்சே பார்க்கலைடீ…என்றவள்..நீ பெரிய எழுத்தாளராக இருப்பாய் என்று தான் நம்பினேன்…. அப்படித்தானே…..இப்போ நீ..? என்ன பண்றே?என்று ஆவலாகக் கேட்டு கைகளைப் பற்றியவளுக்கு….

டிகிரி முடிச்ச கையோடு என்னை பாரமா நினைச்சு. என்னை இந்தக் குடும்பத்துக்குள்ள இறக்கி விட்டுட்டு அவங்க நிம்மதியா இருக்காங்கப்பா..(.நான் ஒண்ணும் பண்ணலை… சும்மாத் தான் இருக்கேன்னு சொல்ல மனசு வராமல்) .நீ என்ன பண்றே.. சாந்தி..? என்று எதிர் கேள்வி கேட்க

நான் கரூர் வைஸ்யா பேங்கில் இருக்கேன் தீபா…அப்பா தவறிப் போயிட்டார்…அம்மாவும், நானுமா இருக்கோம். நான் கல்யாணமே பண்ணிக்கலை….இந்த மாதம் தான் இந்த ஊருக்கு மாற்றல் ஆகி வந்திருக்கேன்….உன்னை அடிக்கடி நினைச்சுப்பேன்…தீபாவுக்கு நம்மை நினைவு இருக்குமோ..இருக்காதோன்னு..ரொம்
ப நாள் ஆச்சு உன் குரலைக் கேட்டு.. .உனக்குள் இருக்கும் திறமை, அதாண்டி கதை நல்லா எழுதுவியே…எழுதறியா…இல்லை அதையும் மறந்துட்டியா…? அதை மட்டும் தொலைச்சுடாதே……உனக்காகவே ..கடவுள் கொடுத்த பரிசு அது….நீ காலேஜில் கதைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசும் மெடலும் வாங்கும்போதெல்லாம் நாம் அதைத் தானே பேசிக்குவோம்…இப்போவும் நான் ஏதாவது புக்ஸில் கதை படிக்கும்போது உன் பெயரான்னு… பார்ப்பேன் தெரியுமா…நேக்கு உன் மேல அவ்வளவு நம்பிக்கை. உன் குழந்தைக்கு இது எத்தனை மாசம்..?என்ன பேரு…க்யூட்டா இருக்கான்…சொல்லிக் கொண்டே குழந்தையை வாங்கிக் கொஞ்சியபடியே..தங்களது பழைய காலேஜ் நாட்களுக்குள் சென்று வர..தீபாவுக்கு…பத்து வயது குறைந்தாற்போல் இருந்தது.இந்த கதை எழுதும் ஆசை வித்தை, தீபாவுக்கு கல்லூரியில் இருந்தே விதைத்தவள் சாந்தி…அன்றிலிருந்து தான் தீபாவுக்கு கதை எழுத வேண்டும் என்று ஒரு ஆசை…வந்து ஒட்டிக் கொண்டது. புத்தகத்தில் வரும் அளவுக்கு எழுதும் திறமையிருக்கா என்பது தீபாவுக்கு தெரியாது. கல்லூரிப் போட்டி வேறு, கதைப் பதிவு நிஜ உலகம் வேறு ! தீபாவுக்கு தன் கதை எழுத்தின் மீது நம்பிக்கை கிடையாது. இல்ல சாந்தி…அதெல்லாம் ஒண்ணும் எழுதறதில்லை…இப்போல்லாம் வீடு, குழந்தைன்னு என் வண்டி வேற பாதையில் ஓடுது…பரவாயில்லை தீபா….நேக்குப் புரிஞ்சுடுத்து…நீ எதற்கும் கவலைப் படாதே….உன்னை நீ வளர்த்துக்கோ…வீட்டில் உன் கடமையைச் செய்…..எல்லாம் சரியாகும்…எனக்குத் தெரிந்த தீபா..நன்னா எழுதுவாள்…ஸோ….நீ கண்டிப்பா எழுத ஆரம்பி…விடாதே….வீடு…வீட்டு வேலை …குழந்தை…..எல்லாம் இருக்கத்தான் செய்யும்..அதையும் மீறித்தான் நீ எழுதணும். சாந்தி சொல்லச் சொல்ல தீபா நம்பிக்கையோடு புன்னகைத்தாள்.

தூரத்திலிருந்து மாமனார் மாமியார் கணவர் மூவரின் கண்களால் “தோழியை வெட்டிவிட்டு வந்து சேரு” என்ற பார்வைக் குறிப்பை படித்தபடி…..தீபா அவசரமாக….அப்ப நான் கிளம்பறேன் சாந்தி. பிறகு பேசலாம்…என்று நகரவே…..

ஏய்…உன் அட்ரெஸ் கொடுத்துட்டுப் போடீ…..நான் முடிந்தால் வருகிறேன்…என்று சாந்தி கேட்டதும்…

வேண்டாம் சாந்தி…..அவசரப் படாதே…நீ நினைப்பது போல நான் இல்லை..எல்லாம் பிறகு பார்த்துக்கலாம், புரிஞ்சுக்கோ ன்னு ஒரு வார்த்தையில் தன் குடும்ப நிலைமையை சொல்லி விட்ட திருப்தியில். மௌனமானவளைப் புரிந்து கொண்டவள் போல்..சாந்தி, ஒரு சின்னச் சீட்டில் தனது தொலைபேசி எண்ணை எழுதி கையில் திணித்தபடி ..இது எனது நம்பர்..தேவைப் படும்போது பேசு..என்று ரகசியமாகத் சொல்லி வழியனுப்பினாள்.

அவளிடம் இருந்து விடை பெற்றாலும் அவளோடு சாந்தியின் நினைவுகள் கூடவே நடந்தது. கொடுத்து வைத்தவள் சாந்தி…நல்லவேளை கல்யாணமே பண்ணிக்கலை…என்று மனம் அவளைப் பாராட்டியது.

வீட்டு வேலைகள் முடிந்ததும், குழந்தை தூங்கப் பண்ணியதும், கணவர் டூட்டிக்கு போனதும், வந்து உறங்கியதும் என்று அந்த நாளின் அப்பப்போ கிடைக்கும் மொத்த இடைவேளையில் தனது அறையில் ஒரு ஓரமாக உட்கார்ந்து விறு விறு வென்று எழுதிக் கொண்டிருப்பாள்..இடைப்பட்ட நேரத்தில் அத்தையின் குரலுக்கு என்னங்கத்தை…இதோ வந்துட்டேன்…என்று கதையை பத்திரமாக மறைத்து வைத்து விட்டு சென்று வருவாள். .அப்படி எழுதிய கதை…”பேச்சுத் துணை” மங்கையர் மலர் மாத இதழில் வந்து மனதில் ஒரு நம்பிக்கையை கைகுலுக்கி விட்டு சென்றது. அடுத்தது “தூண்டில் மீன்” வெளி வந்ததும்….வீட்டில் உஷாரானார்கள்…..என்னது…. குடும்பப் பொண்ணுக்கு கதையும் கத்திரிக்காயும் வேண்டிக் கெடக்கு? நம்ம குடும்பத்தில் இல்லாத வழக்கம்..நீ கதை எழுதலன்னு யாரு அழுதாங்களாம்…எங்களுக்குப் பிடிக்காததை செய்யாதே….அதிகப் பிரசங்கி….என்ன…. பேரும் புகழும் கேக்குதோ….வெளக்குமாத்துக்கு …..? இது அத்தையின் ஆற்றாமை போர்க்கொடி. தயாராகத் தூக்கியபடியே. நிற்பவள் இன்று…இதோ….இந்த மகாராணியோட…கதை….ஊர் ஊரா சிரிக்கப் போயிருக்குன்னு தனது கணவரிடம் காண்பிக்க…அவரும் அதை வாங்கி எரிச்சலோடு பார்த்து….

“மங்கையர் மலர்” வெளியீட்டில் கதையின் ஆரம்பத்தை சத்தமாகக் படித்துக் கொண்டு போனவர் நிமிர்ந்து பார்த்து “தேவை….இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம்…..என்று இளக்காரமாக…அதில் சொல்லப் பட்டிருக்கும் விஷயமோ, நம் குடும்பத்தில் இருந்து ஒருத்தி எழுதி அது வெளி வந்திருக்கிறது என்ற பெருமையோ, சந்தோஷமோ எதுவுமின்றி…..அந்தப் புத்தகத்தை சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிந்த போது …அவரது மனதின் வக்கிரம் புரிந்தது…இந்த வீட்டுக்குள்ளே ..குமுதம்,கிமுதம்,விகடன்,கிகடன்,மங்கையர் மலர்..அது…இதுன்னு…..எந்த தருதலைப் புத்தகமும் நுழையக் கூடாது…இத்தனை வருஷம் இல்லாத பழக்கம் உன்னால இப்ப மாறக் கூடாது…சொல்லிட்டேன்….குரலே ஒரு சிங்கத்தின் கர்ஜனையை நினைவு படுத்தியது. அதன் பின்பும்… அபலை தீபாவுக்கு எழுதும் தைரியம் தான் வருமா…என்ன..?

கதை எழுதற நினைப்பெல்லாம் மூட்டை கட்டி பரணில் போடு….குடும்பப் பொண்ணு செய்யுற காரியம் இல்ல இதெல்லாம்…சொல்லிக் கொண்டிருந்த மாமாவிற்கு அவரது தொலைபேசி அழைக்க…..ஆமாம்..இந்த மாசம் அந்த லேடியோட… கதைக்கு முதல் பரிசைக் கொடுத்து அனுப்புங்க….மத்ததை பிறகு பார்க்கலாம். நம்ம லயன்ஸ் கிளப் ல் மட்டும் தான் இப்படி…இவனுக்கு வேண்டியவ, அவனுக்கு வேண்டியவன்னு முதல் ரவுண்டு உள்ளுக்குளேயே தான் அடிக்கும்…சரி சரி…பார்த்து செய்யுங்க…மீட்டிங்குல சொல்லிடறேன். என்றவர்…ரிசீவரை வைத்து விட்டு தீபா அங்கு நிற்பதைப் பார்த்து ஒரு முறை விட்டார்….உனக்கென்ன இங்கே வேலை….உள்ளே போ…என்று பார்வை ஓட ஓட விரட்டியது.

அறைக்குள் அடைந்தவள்….ஜன்னல் வழியாக வெளியே பார்க்க..அங்கே எதிர் வீட்டுப் பெண் தீப்தி அவளோட நண்பன் ஒருவனோடு மோட்டார் பைக்கில் லாவகமாக ஏறி அமர்ந்தபடி அப்பா அம்மாவுக்கு பை… பை…என்று கையாட்ட.. மோட்டர் பைக் புலிபோல் பாய்ந்ததைக் கண்டு…. வெளியூரில் வேலை செய்யும் பெண்…மாதத்துக்கு ஒரு முறை வந்து தலையைக் காட்டிவிட்டுச் செல்வாள். நவ நாகரீகம் அவளது ஒவ்வொரு அசைவிலும் நாட்டியமாடும். சுதந்திரம் அவள் பேச்சில் நடையில், உடையில்….அவளைப் பெற்றவர்களுக்கு அவளது அழகும்,படிப்பும், வேலையும்…அவளை விட அதிக மதிப்பையும், கர்வத்தையும் தந்திருப்பது அவர்களது பார்வையிலேயே புரியும் இவளுக்கு.

இந்தப் பொண்ணெல்லாம் இந்த மாதிரி குடும்பத்தில் வாக்கப் பட்டால் என்னாவாள்…என்று கூட யோசித்துக் கொண்டிருப்பாள்…பல நேரங்களில்…தீபா. அவள் என்ன….என்னை மாதிரி முட்டாளா என்ன ..? இங்கியே கெடக்க……நாலே… மாசத்தில் பெட்டியைத் தூக்கீட்டு கிளம்பிடாதோ …அதான் சொல்றாங்களே….இப்போல்லாம் குடும்ப நல நீதிமன்றத்தில் கூட்டம் அலை மோதுதாமே…! அதனால் தான் யாரும் கல்யாணம்னா எட்டடி தள்ளிப் போறாங்களா? நாமதான் ஏமாந்துட்டமா..? பொண்ணு வாழப் போற இடம் எப்படின்னு இந்த அப்பா அம்மா நல்லா விசாரித்திருக்க வேண்டாமோ….? ஜாதகம்,வீடு, சொத்து, வேலை, ஒரே பிள்ளை..பிக்கல் பிடுங்கல் இல்லைன்னு மட்டும் பாக்கறாங்களே தவிர…தான் மகள் வாழப் போகும் இடம் எது…,கூட வாழறவங்க எப்படிப் பட்டவங்கன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா…? ஒரு கல்யாணத்தை நடத்தப் பத்துச் செருப்பைத் தேயுன்னு சொல்லுவாங்க…நம்ப வீட்டுல தன் கல்யாணத்தை நடத்த ஒத்தச் செருப்பக் கூடத் தேய்க்கல….சொன்னதையும்…கேட்டதையும் அப்படியே நம்பி….ஆயிரங்காலத்துப் பயிரை மேலோட்டமா நோட்டம் விட்டு முடிவு செய்தால் பிறகு மொத்தமா குடும்ப வாழ்க்கையைக் கோட்டை விடவேண்டியதுதான்.

ச்சே…இனிமேட்டு இவங்களுக்குத் தெரியாம எழுதணும்….ஒரு முடிவோடு….காத்திருந்து எழுதி..கோவிலுக்குப் போகும் சாக்கில் போஸ்டில் சேர்த்து…பயந்து பயந்து பதிலுக்குக் காத்திருந்து….இதெல்லாம் ஒரு பொழைப்பு….?
என்ற சலிப்பில் நாளும் பொழுதும் கழித்துக் கொண்டிருக்கும். தீபா..ஒருநாள் .சாந்திக்கு ரகசியமாக போன் செய்து அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னாள்..நீ அன்று சொன்னதில் இருந்து…நான் பத்திரிகைக்கு கதைகள் எழுதறேன் சாந்தி.. மாமன், அத்தை, கணவர் கண்ணில் படாமல், கல்மேல், முள்மேல் நடந்து ! நான் எழுதி .இதோ ரெண்டு கதை அச்சில் வந்து விட்டது.

அட…தீபா…நீ ஜெயிச்சுட்டே…ரொம்ப சந்தோஷம்டீ……என்று சாந்தி குதூகலமாக…

பொறு…பொறு….இன்னும் கேளு…அது இவங்களுக்குக் கொஞ்சமும் பிடிக்கலை…..புத்தகத்தையே நார் நாராய்க் கிழித்துப் போட்டுட்டாரு…என் மாமனாரு….இவங்களைப் புரிஞ்சுக்கவே என்னால முடியல…. நல்லா வந்து மாட்டிக்கிட்டேன்… சாந்தி நீ கொடுத்து வைத்தவள்டீ.. கல்யாணச் சிறையில் மாட்டிக்கலை….தாலி விலங்கைப் போட்டுத் தவிக்கலை. பெண்பிறவி சிக்கித் தவிக்கவா இந்தத் தாலி ? சந்தோஷமாத் தான் கல்யாணம் பண்ணீட்டு வரோம்…ஆனாலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமாத் தான் மனுஷங்க இருக்காங்க…..எல்லாருக்கும் அந்த மகிழ்ச்சியான வாழ்கை அமையறதில்லை. ஒருத்தர் நல்லா இருந்தா இன்னொருத்தறால பிரச்சனை வருது….நீ என்ன சொல்றே….நான் சொல்றது சரி தானே..?

ஹஹஹஹஹா….தீபா….இக்கரைக்கு அக்கரைப் பச்சைடீ..! பல நேரங்களில் நானும் காலா காலத்தில் கல்யாணம் பண்ணிக்காமல் தப்பு பண்ணிட்டேனோன்னு கவலைப் படுவேன்…அதெல்லாம் உனக்குத் தெரியாது …சரி அதை விடு…இனிமேல நீ பேரை மாத்தி எழுத ஆரம்பி. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் எழுதறத மாத்திரம் கை விடாதே…சொல்லிட்டேன். அது தான் உனக்கு வடிகால்.

“துளசி”ன்னு பேரை மாத்தி வெச்சுக்கறேன்…. என்ன பெயர் வைத்து எழுதினாலும் கதை வந்தால் புத்தகம் இந்த வீட்டு விலாசத்துக்குத் தானே வருது !!! குடத்துக்குள்ளே ஏற்படுற புயலும்…பூகம்பமும் இங்கேர்ந்து தானே ஆரம்பம்..ஆகும்..!

வேணும்னா என் வீட்டு முகவரி தரேன்…அதைக் கொடு..உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது…சரியா என்று சொல்லி மகிழ்ந்தாள். இனிமேல் எழுதினாலும் வீட்டுக்குத் தெரியாதே….என்ற ஒரு நிம்மதியோடு ரிசீவரை வைத்தாள். தீபா . தான் பேசுவதை யாரும் கேட்கவில்லையே என்று சுற்று முற்றும் பார்த்து அப்பாடா என்று பெருமூச்சு விட்டாள். கணவன், மாமா , அத்தை , குழந்தை பிரேம், எல்லாரும் மதியம் சாப்பிட்டு விட்டு வெய்யிலின் அசதியில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.இன்னும் அவர்கள் எழுந்திருக்க ஒரு மணி நேரமாவது ஆகும். மனதுக்குள் தைரியம் பிறந்தது.

“பாதை மாறிப் போகும்போது..”. தலைப்பைக் கொடுத்து தன் வேலையில் மும்முரமாக எழுத ஆரம்பித்தாள் தீபா….
அவள் மனம் போன போக்கில் அவள் கையைப் பிடித்துக் கொண்டு கதை விரிந்து வேகமாய் போய்க் கொண்டிருந்தது சிநேகமாக.கதை எழுதும் போது நெஞ்சு ஏனோ படபடத்தது …!

இந்தக் கதை உதை வாங்கித் தருமோ, பரிசு வாங்கித் தருமோ, திரும்பி கண்ணீரோடு வருமோ யார் கண்டது ? துணிந்து எழுதினாள் ! மாமியார் அடித்தால் தாங்கிக் கொள்ளலாம் ! பட்டாசு வெடிக்கும்; காதை மூடிக் கொள்ளலாம் ! எப்படியும் சாந்தி வீட்டு விலாசமும்…..பெயர் மாற்றமும் தான்….இருக்கும்..இவங்களுக்கு ஒண்ணும் தெரியாது. அப்படியேத் தெரிந்தால் தெரியும்போது பார்த்துக்கலாம். அசட்டு தைரியம் மனசுக்குள் பச்சைக் கொடி காண்பிக்க…பயத்தை மூட்டை கட்டி பரணில் ஏற்றிவிட்டு நிம்மதியாக எழுதலானாள்.

தீபா….குழந்தை எந்திரிச்சிட்டான் பாரு…..வந்து தூக்கீட்டுப் போ…என்று கணவனின் குரல் கேட்க….இதோ வந்துட்டேங்க என்று எழுதிய கதைக்குத் தொடரும் போட்டுவிட்டு பக்கங்களை ஒரு துண்டைப் போட்டு மூடி சுற்றி பீரோவில் வைத்து சாத்திவிட்டு ஓடிச் சென்று கவிழ்ந்தபடி படுத்துக் காலை உதறி நீச்சல் அடித்துக் கொண்டிருந்த குழந்தையை அவசரகதியில் தூக்கி மடியில் கிடத்தி பால் கொடுக்க அணைத்துக் கொண்டாள்..பசியாறியவன் அப்படியே மறுபடியும் தூங்கிப் போனான்.

மெல்லப் படுக்கையில் கிடத்தியவளை மாமியார் அழைப்பது கேட்க…இதோ வந்துட்டேன் அத்தை….என்று ஓடினாள்.
இன்று இனி இந்தக் கதையின் மீதி எப்போது எழுதுவது என்ற யோசனையில்…..சமையலறை நுழைந்தவளை சமையலறை வேலைகள்..”கப்”பென்று பிடித்துக் கொண்டது. கண்ணும் கையும் வேலை செய்தாலும், மனமும் எண்ணமும் கதையை எங்கேர்ந்து தொடரணும்னு சுற்றி சுற்றி பின்னிக் கொண்டிருந்தது.

அப்படி, இப்படி என்று இரண்டு நாட்களில் கதையை முடித்து எழுதி அனுப்பி விட்டு சாந்தியிடமும் சொல்லி விட்டுப் பெருமூச்சு விட்டவள் ஒரு கதை எழுதுவது ஒரு பிரசவம் மாதிரியே உணர்ந்தாள் தீபா. அன்று மாமாவும் , அத்தையும் வெளியில் சென்றிருந்த நேரம் பார்த்து..கணவரிடம் மெல்லப் பேச்சை ஆரம்பித்தாள்.

“என்னங்க….இந்த வீட்டில் ஒரு புத்தகம் படிக்கக் கூட உரிமை இல்லை…எழுத உரிமை இல்லை…நீங்க எல்லாம் பார்த்துக்கிட்டுத் தானே இருக்கீங்க…கொஞ்சம் உங்க அப்பாட்டச் சொல்லக் கூடாதா? நான் அப்படி என்ன செய்யக் கூடாத தப்ப செய்யுறேன்…?..எனக்கு சின்ன வயசிலேர்ந்து எழுதவும் படிக்கவும் பிடிக்கும்….அதை இப்போ செய்யாதேன்னு சொல்லி கைவிலங்கு போட்டா எப்பிடி…உங்களுக்காவது நான் எழுதறது பிடிக்குதா…இல்லையா? அதையாவது சொல்லுங்க தெரிஞ்சுகறேன்….எனக்கு இப்படி அடிமை மாதிரி இந்த வீட்டில் இருக்கப் பிடிக்கலைங்க….என்னைப் .புரிஞ்சுக்காதவங்க நடுவில போராட முடியாதுங்க ” மூச்சு விடாமல் பேசிவிட்டு மூச்சு விட்டவள்…ஆவலோடு கணவன் முகத்தைப் பார்க்கவும்..

இங்க பாரு தீபா…..உனக்குத் தான் தெரியுமில்ல….என் அண்ணன் ஒருத்தியக் காதலிச்சு அவளைத் தான் கல்யாணம் செய்துக்குவேன்னு ஒத்தக் காலுல நின்னான்….அவ்ளோதான்..அப்பா…அவனை வீட்டை விட்டே துரத்தி விட்டாரு…
இன்ன வரைக்கும் அவன் இந்த வீடு வாசப் படி கூட மிதிக்கலை. அப்பா…சொல்றதைத் தான் அம்மாவும் சொல்லுவாங்க. அப்பா சொல்றதைத் தான் குடும்பம் கேட்கும்…கேட்கணும்…இதுவரை அப்படித் தான் இருக்கு..இனிமேட்டும் அப்படித் தான் நடக்கும்..வீணா வீட்டுல பிரச்சனை பண்ணாதே…அவங்க பாவம்டி…என்னைப் பெத்தவங்க….அவங்களோட ஒத்தைக்கு ஒத்தை நிக்காதே..நீ ஏதும் ப்ளான் எல்லாம் போடாதே….ஒன்னும் நடக்காது..சொல்லிட்டேன்….என்று எச்சரிக்கும் தொனியில் ..சொல்லி….நீ எழுதறதெல்லாம் இங்க யாருக்குமே பிடிக்கலை…எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு பேசாம இரேன்…இப்ப நீ என்ன எழுதி கொடியா…நாட்டப் போறே…?

தீபாவுக்கு கணவன் மேல் தான் வைத்திருந்த நம்பிக்கை அத்தனையும் புஸ்ஸுன்னு போய் இதயமே பஞ்சர் ஆனாற்போல் இருந்தது.இந்த வீட்டில் சமாதானத்துக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று உணர்ந்து கொண்டவள்…
சரிங்க….நான் எழுதலை…ஆனா அப்பப்போ என் காலேஜ் தோழி வீட்டுக்கு போயிட்டு வருவேன்….அன்னிக்கு உங்க
ஃபிரெண்ட் கல்யாணத்துல பார்த்தீங்களே…சாந்தி…அவதான்….அவளும் பாவம் தனியா ..கல்யாணம் செய்துக்காம….
இருக்கா..அவளும் அவங்க அம்மாவும் மட்டும் தான். அப்பா கூட இல்லை…பாவம்…என்றவளை..

அதென்னமோ….அப்பா..அம்மாட்ட கேட்டுட்டு போ….ஆமா..உனக்கு வீட்டுல பிள்ளையப் பார்க்கற வேலை…வீட்டு வேலை ஒண்ணும் இருக்காதா? அங்க போட்டுமா..கதை எழுதவான்னு…கிடந்து அல்லாடுற……..?

நான் மட்டும் என்ன வீட்டு வேலை செய்யற மெஷினா? எனக்குன்னு…ஒரு சுதந்திரமும் கிடையாதா? அலுத்துக் கொண்டாள் அவள்.

பார்த்தியா..இப்ப நீ.எதிர்த்துப் பேசுற…இந்தப் பொம்பளைங்களே இப்படித் தான்…இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடிப்பீங்க….எரிச்சலோட .சொன்ன கணவர் அறைக்குள் போய் ” டபால்னு ” படுத்துக் கொண்டார். கட்டிலின் அதிர்வில் குழந்தை தூக்கம் விழித்து பயத்தில் வீல் ..வீலென்று அழ ஆரம்பிக்க….குழந்தையைத் தூக்கி கொண்டு சமாதானம் செய்ய வாசலுக்கு ஓடினாள் தீபா. இதயம் கனத்தது….அவளுக்கு.

இந்தப் பேச்சு வார்த்தை நடந்து…ஒரு வாரம் அமைதியாக போனது வீடு… தீபா…எப்போதும் போல் காலில் சக்கரமும்….கையில் பேனாவுமாக ஒளிந்து ஒளிந்து ஓடிக் கொண்டிருந்தாள். தூங்க அடம்பிடித்த குழந்தையைத் தூளியில் போட்டு ஆட்டியபடியே…..

“அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்…
சுமை தாங்காமலே கரை தேடும்..
சென்று சேரும் வரை….இவள் பாவம்..பாவம்…
தடுமாறும்…. இங்கு நியாயங்கள்….
இதனால்… தான் பல காயங்கள்…!
கண்ணீரில்… தள்ளாடும்…. பெண் தீபங்கள்…அலைமீது…”

தீபா இனிமையாகப் பாடிக் கொண்டிருக்க…..வாசலில் போஸ்ட்மேன் …..”தீபா வுக்கு மணியார்டர்.”..என்று அழைக்க…சந்தோஷத்தோடு ஓடிச் சென்று அவசர அவசரமாக கையெழுத்துப் போடும்போது….

எங்கிருந்தோ ஆஜர் ஆன மாமனார்…என்னாது….? வீட்டுல சொல்றது கிடையாதா…? எத்தனை நாளா நடக்குது இந்தக் கூத்து..? என்று..தபால் காரன் முன்னாடியே அவமானப் படுத்திப் பேச…

“ஒண்ணுமில்லை…ஒரு கதையின் சன்மானம்…இருநூத்தி ஐம்பது ரூபாய்..”

எங்க மானத்தைக் கப்பலேத்தறதுன்னே முடிவு பண்ணிருக்க…பேசிக்கொண்டே உள்ளே சென்றவர்….
அங்கிருந்த சாய்வு நாற்காலில் அமர்ந்தபடி….”டேய் ஈஸ்வர்…..இவ பேருக்கு மணியார்டர் வந்திருக்கு…
என்னான்னு கேட்டால்…சன்மானமாம்…சொல்றா கேளு ! …உன் பொண்டாட்டி…. சம்பாதித்து விட்டாள் ..இருநூத்தி அம்பது ரூபா…! இனி நீ வேலைக்குப் போக வேண்டாம் !

இதைக் கேட்டதும்…தீபாவின் கைகளில் இருந்த இருநூத்தி ஐம்பது ரூபாய் இருநூறு கிலோவாகக் கனத்தது.

நான் தான் ஏற்கனவே சொல்லிருக்கேனே…கதை கத்தரிக்காயெல்லாம் இங்க எழுதக் கூடாதுன்னு…நல்ல மாட்டுக்கு ஒரு சூடு…உனக்குத் தெரியுமா, இது எழுதறது….?

இல்லப்பா….தெரியாது…நானும் எழுத வேண்டாம்னு தான் சொல்லிருக்கேன்….ஏண்டி…யாரு சொன்னாத் தான் நீ கேட்ப…என்று ஆத்திரத்தோடு முறைக்க…

என்ன இங்க சத்தம்…கேட்டுக் கொண்டே வந்த அத்தை….”நல்லா மாட்டிகிட்டியா…என்ற பார்வையோட…எனக்கு அப்பவே ஒரு சந்தேகம்….ஆடற காலும்…பேசுற வாயும்…எழுதற கையும்…எங்க நிக்கப் போவுதுன்னு…” இப்போ என்னாத்த எழுதிருக்கு..இது…எதுல….என்று இழுக்க..

தீபாவுக்கு…சுள்ளுன்னு கோபம், ஆத்திரம், ஆற்றாமை, வெடிக்க….இல்ல…நீங்கல்லாம் என்னை என்ன நினைச்சுட்டிருக்கீங்க….? நீங்க எப்படி வேணா இருக்கலாம்…ஆனால் நான் மட்டும் நீங்க போடற கோட்டுக்குள்ளேயே நடக்கணும், மூச்சு விடணும்…இதுக்குப் பேர் தான் கல்யாணமா, குடும்பமா…? என்னால இனிமேட்டு உங்க வீட்டுல அடிமை மாதிரி, டோர்மேட் மாதிரில்லாம் இருக்க முடியாது…ஆமா…நான் எழுதறேன்…எழுதுவேன்…..நீங்க என்ன செய்வீங்க…? உங்களால என்ன செய்ய முடியும்…? நானும் அத்தை மாதிரி அடங்கி..அடங்கி…உங்களுக்கு ஜால்ரா போட முடியாது…எனக்கு ஒரு ஆரோக்கியமான இடைவெளி வேணும்….ஒரு சுயமதிப்பு வேணும்…ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க…நீங்களும் லயன்ஸ் கிளப் ல இருக்கீங்க…என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே…அத்தையின் அதிகாரக் குரல்…..உச்சமானது

“என்னடி…விட்டா ரொம்ப எகிறி ஓவராப் பேசிட்டே போறே….அடிமையாம்..அதுவாம்…இதுவாம்… ஜால்றாவாம்….நாங்க ரெண்டு பேரும் இருக்கும்போதே….எங்களைப் பார்த்தே ..இவ்ளோ வாய் நீளுதே…நாங்களும் இல்லையினா…என் மகனை நீ பிச்சுத் தின்னுருவே….அவன் தலையில மிளகா அரைச்சி…வாயாடி….பார்த்தியாடா.. இவளை…பெரியவங்கன்னு ஒரு மருவாதி இல்ல……நல்லாத்தான் பொண்ண வளர்த்துருக்காங்க….என்ன…? உங்க வீட்டுல இப்படித் தான் சொல்லிக் கொடுத்து வளர்த்தாளா உங்கம்மாகாரி…

“எழுத மாட்டேன் இனிமேல் என்று எங்களுக்குச் சத்தியம் செய்து கொடு ! அல்லது ஓடிப் போ உன் அப்பன் வீட்டுக்கு! என்று மாமா உச்சக் குரலில் அலறினார்.

தீபாவுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. கணவனைப் பார்க்கிறாள்…

அவன் ஒன்றுமே சொல்லாமல்…” நீங்க சொல்றது சரிதான்.பா..இங்கிருந்து இவளை விரட்டி விடுங்க ..” என்ற தோரணையில் மௌனமாய் உட்கார்ந்திருக்க….அவன் முகம் இவளைத் தவிர்கிறது…

குடும்பக் குடத்துக்குள் எப்பவும் தாகம் தீர்க்க நீர் நிறைந்து குளுமை வீச வேண்டுமே தவிர புயலும்…பூகம்பமும் வந்தால் குடம் தாங்குமா? இந்த வெற்றுக் குடம் சத்தம் போட்டு உருண்டு…இருக்கும் நிம்மதியும் போய்…வேண்டாம் தீபா…விட்டுடு…இந்த மாதிரி சின்னச் சின்ன ஆசாபாசங்களை குடும்பத்துக்காக விட்டுக் கொடுக்கத் தான் வேண்டும். வீண் பிடிவாதம்…கண்ணை மறைக்கும்…வாழ்கையை சிதைக்கும்…விட்டுக் கொடுத்தலும், புரிதலும், யாரிடமிருந்தும் ஆரம்பிக்கலாம்,,,,உன் அம்மா செயாத தியாகமா..? என்று மனசாட்சி அவள் மனதை அமைதி படுத்த…..குடத்துக்குள் கிளம்பிய புயலை அப்படியே அமுக்கி மூடினாள் தீபா. பின்னே…

வீட்டுக்குள் ஒரு குருச்சேத்திரம் ! அவள் ஒருத்தி, எதிரி திரிமூர்த்தி ! தாங்குமா?

இப்போ…அம்மா வீட்டுக்குப் போனா மட்டும் என்ன ஆகப் போறது…அப்பாட்ட சொன்னா..அவங்க மட்டும் என்ன சொல்லப் போறாங்க….பெரிசா..எல்லாம் தெரிஞ்சது தானே…”பெரியவங்க சொல்றபடி கேளு….எங்க மானத்த வாங்காதே…பொறந்த வீட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரலைன்னாலும்…பரவாயில்லை……நம்ம குடும்பத்துக்கு ஒரு .கெட்ட பேர் வாங்கித் தராத….நீ இப்போ எழுதிக் கிழிச்சு என்ன ஆவப் போகுது…” ன்னு அப்படியே தோசையைத் திருப்பிப் போட்டுட்டு …”எல்லார்கிட்டயும் போதாக் குறைக்கு மன்னிப்பு கேட்டுட்டு போவாங்க….” இது தேவையா…?

அப்படி மானங்கெட்டு எழுதி என்ன பண்ணப் போறேன்…கதையும் வேண்டாம்…ஒரு மண்ணாங் கட்டியும் வேண்டாம்….சாட்சிக் காரன் காலில் விழுவதை விட..சண்டைக் காரன் காலில் விழலாம்..

அடக்கமாட்டாமல்..இல்ல…இனிமேல நான் எழுத மாட்டேன்…எழுதவே மாட்டேன்..என் மகன் மேல ..சத்தியமா… நான் எழுதவே மாட்டேன்….போதுமா….இப்பத் திருப்தி தானே…….பொங்கி வந்த அழுகை வெடிக்கக்… கதறிக் கொண்டே போய் அறைக்குள் நுழைகிறாள்…..அங்கே…மேஜை மீது…பாலகுமாரனின் புத்தகம் கேட்பாரற்று கிடந்தது…முறிந்த மனத்தோடு அதை எடுத்துப் கவருக்குள் போட்டு பரணில் தூக்கிப் போட்டவள்….

“யாராவது என் கதையை எழுதட்டும்..”….சொல்லிக் கொண்டே கண்ணாடியைப் பார்த்தவள்….
“இதுக்குத் தான் ஆசைப்பட்டாயா…..நல்லா வேணும்….என்று கேவிய படியே பார்க்க…. கண்ணாடியும் அவளோடு சேர்ந்து ஆறுதலாக அழுது கொண்டிருந்தது.

– 23 ஜூலை, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *