குக்கூவென்றது கோழி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2023
பார்வையிட்டோர்: 5,221 
 
 

வினோதினி… அவள் அருகில் இருப்பது ஐந்து தேவதைகளும் மூன்று பிசாசுகளும் உடன் இருப்பது போன்றது. அவற்றின் எண்ணிக்கை அல்ல விஷயம். அவை வெவ்வேறு விகிதங்களில் வெளிப்படும்போது அதனதன் தன்மையில் இருக்கும் காரியங்களில் இருக்கிறது விசேஷம்.

பெங்களூரில் முற்றமாகவும் வாசலாகவும் விரிந்திருக்கிற மொசைக் கட்டங்களின் மேல், தூரப் பார்வையில் கண்ணாடிச் செவ்வகங்கள் பார்வைக்குக் கிட்டுகிற பெருங்கட்டடம் ஒன்றில், என்னுடன் பணிபுரிகிறாள் வினோதினி; கணினியாளர். ஆந்திராவில் இருக்கும் ஸ்ரீகாகுளம் ஊரைச்சேர்ந்தவள்.

வினோதினி வெங்கடபதிராஜு. இந்த வி.பி.ஆர் அவளது அப்பாவேதான். அப்பாவின் பெயரோடு சேர்த்துத்தான் ஜி.மெயில் ஐ.டி-யும் வைத்திருக்கிறாள். வினோதினியும் சக சகாக்களும் சகிகளும் அப்பாவின் பெயரோடு மெயில் ஐ.டி வைத்திருந்த கார்ப்பரேட் கலாசாரத்தில் கட்டுண்டுதான், நானும் ரஞ்சித்பொன்னுசாமி என மெயில் ஐ.டி வைத்துக்கொண்டேன்.

வானளாவிய வலைத்தள வியனுலகு (www)பின்னலும் இந்தப் பெயரில் கேட்கிற ஒரே ஆள் நீதான்டா என, மெயில் ஐ.டி-யைக் கேட்டதுமே அங்கீகரித்துவிட்டது. பெரும்பாலும் சந்தோஷமாகத்தான் இருந்தது. சனிக்கிழமை இரவுகளிலும் சாதாரண நேரங்களிலும் ரஞ்சித் என்று அழைக்கிற டீம் லீடர் பிரேம் ஆனந்த், வேலையின் கழுத்துக்கட்டு நெருக்கடி நேரங்களில், மெயில் ஐ.டி-யில் இருக்கிற பெயரைச் சொல்லி அழைப்பான். அப்படி அழைக்கும்போது, அந்த விருத்தாசலத்துக்காரன் கோபமாக இருக்கிறான் என அர்த்தம் கொள்ளவேண்டும்.

‘ரஞ்சித்பொன்னுசாமி’ என்று அழைத்தால் சகிக்கலாம்; பரவாயில்லை. அவனோ `ரஞ்சித் பொன்னிசாமி’ என்று அழைத்து என் அப்பாவை ஓர் அரிசியாக்குவான். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, அவனது நாவில் வசம்பு தேய்க்க முடியாது. வேண்டுமென்றே அப்படிக் கூப்பிடுகிறானோ என எனக்குத் தோன்றும்.

தவறுகள், தாத்தாக்களில் இருந்து ஆரம்பிக் கின்றன. வேலுச்சாமியின் மகனானப்பட்ட என் தாத்தா ரங்கசாமி, தன் மகனுக்கு வேறு பெயர் வைத்திருக்கலாம். அதுபோகட்டும்… எனது பெயர் சாமிகளிடம் இருந்து விடுபடவே பல தலைக்கட்டுகள் தாண்டவேண்டி இருந்திருக்கிறது.

ஒரு சனிக்கிழமையில் இன்டர்நெட்டில் பதிவிறக்கி ‘ஆடுகளம்’ திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த வாரம் வருகிற சங்கராந்தி பொங்கல் விடுமுறையில் ஊருக்குப் போகிறபோது, கோயிலூர் சேவற்சண்டை பார்க்கப் போக வேண்டும் என்ற எண்ணம், என்னில் முஸ்தீபு பெற்றுக்கொண்டிருந்த அந்த நேரத்தில், எங்கள் அறைக்கு வினோதினி வந்தாள். ஜீன்ஸும்
டி-ஷர்ட்டும் அணிந்திருந்தாள். ‘நண்பர்களைவிட விசிறிகள் அதிகம்’ என்பது மாதிரியான வாசகங்கள் கச்சித பனியனில் எழுதப்படாமல் இருந்தது ஆறுதல் அளித்தது.

பெங்களூரில், மடிவாலா மாருதி நகர் விரிவாக் கத்துக்கு உட்பட்டுத்தான் அவளது விடுதியும் எங்கள் அறையும் இருந்தது. அறையில் நான், குணா, ரகு மூவரும் இருந்தோம்.

‘‘த்ரீ இடியட்ஸ் மட்டும்தான் ரூமிலா?’’ என்று கேட்டாள் என் காதுக்கு அருகில். அவள் அவ்வப்போது பார்க்க வருவதில் நண்பர்கள் ஏற்கெனவே 99 பாகை செல்சியஸ் சூட்டில் இருந் தார்கள். ஒரு கடுகு கூடுதலாகப் போய்விட்டாலும் கொதித்துவிடலாம்.

கண்ணாலும் உதட்டாலும் கெஞ்சி அவளது குறும்பை மட்டுப்படுத்தினேன்.

‘‘என்ன படம் பார்த்துக்கொண்டிருக்கிறாய்?’’

‘‘ஆடுகளம்.’’

‘‘தட் மீன்ஸ்?”

‘‘ப்ளே கிரௌண்ட்.’’

படத்தில் சேவல்கள் சண்டையிடுவதைப் பார்த்துவிட்டு ‘‘வெரி நைஸ்!’’ என வியந்தாள்.

நான் வாய் பொறுக்க மாட்டாமல் அடுத்த வாரம் ஊருக்குப் போவதையும், இந்த ஆண்டு பக்கத்து ஊருக்குப் போய் சேவற்சண்டை பார்க்க எண்ணியிருப்பதையும் சொன்னேன்.

‘‘நான் ஏன் உன் ஊருக்கு வரக் கூடாது?’’

‘‘வாயேன்… கண்டிப்பாக’’ என்றேன். எதிர்ப் பாலின நண்பர்கள் வீட்டுக்குச் சொல்லி, பெற்றோரிடம் அனுமதி வாங்கும் உலகம் மலர்ந்து விட்டதை நான் எதிர்பார்க்கவில்லை யாதலால், ‘‘வீட்டில்… குறிப்பாக மிஸ்டர் வெங்கடபதி ராஜுவிடம் என்ன பொய் சொல்வாய்?’’ எனக் கேட்டதும் என்னை முறைத்தாள். அடுத்து தனது அலைபேசியில் எண்களை அழுத்தினாள்.

எதிர்முனையில் பதில் வந்ததும் ‘டாடீ!’ என விளித்து ஒரு கிராமத்துக்குப் போகலாம் எனத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னாள். ‘யாருடன்?’ என வினவப்பட்டிருக்கவேண்டும். ‘எவரதீ?’ என `சந்திரமுகி’ ஜோதிகா போன்ற கோபத்தை எதிர்முனையில் எதிர்பார்த்தேன். எனது வளர்ப்பும் வார்ப்பும் அப்படித்தான் கற்பனை செய்யும். ‘ரஞ்சித்’ எனச் சொல்லி சில வார்த்தைகள் பேசிவிட்டு, ‘‘அப்பா உன்னிடம் பேச விரும்புகிறார்’’ என அலைபேசியை என்வசம் கொடுத்தாள்.

வி.பி.ஆர் ஆங்கிலத்தில் பேசினார். எஜுகேட்டட் ஃபேமிலி என நினைத்துக் கொண்டேன். வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்பந்துகளை எதிர்கொண்டு மட்டையாடுவது மாதிரி தட்டுத்தடுமாறிப் பேசி முடித்தேன். அதுவரை தோன்றாத சந்தேகம் உற்பத்தியாகி, ‘‘உங்க அப்பா பழைய கிரிக்கெட் பிளேயரா?’’ என வினோதினியைக் கேட்டேன்.

‘‘என் தந்தை நட்பார்ந்தவர். நல்ல விவசாயி. யூ நோ… தென்னைமரத்தில் ஏறி அவரே தேங்காய் பறித்துவிடுவார். எனக்கு ஸ்விம்மிங் கோச் அவர்தான்’’ என்றாள் ஆங்கிலத்தில்.

நான் கணினியைத் தட்டி ஆகாய நிரலில் –ஆன்லைனில் – எனக்கும் அவளுக்குமாக இரண்டு இருக்கைகளை பேருந்தில் உறுதிப்படுத்தினேன்.

வினோதினியுடன் ஊருக்குப் போய் இறங்கியபோது, அவளுக்குத் தோன்றாத வெட்கம் எனக்குத் தோன்றியது. அவளை அதிக நேரம் ஊர்கோலம் விடாதபடிக்கு பேருந்து நிறுத்தத் துக்கு அருகிலேயே எங்கள் வீடு இருந்தது. ஆவாரம் பூ, வேப்பிலை, பீளைப்பூக்கள் கொண்டு செண்டுசெய்து, வீட்டு மூலைகளில் செருகப்பட்ட ‘காப்பு’கள் பற்றி அவளுக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருந்தது. இப்படி ஒரு செக்யூரிட்டி சிஸ்டம் ஐதீகமாக இருப்பது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“எங்க ஊர்ல இப்படிக் கிடையாது” என்றவள், என் அப்பாவைக் காட்டி அறிமுகப்படுத்தியதும் அவருக்குக் கை குலுக்கினாள். என் அம்மாவை முத்தமிட்டாள். அப்பா வெடவெடப்புற்றார்; அம்மா வெட்கப்பட்டாள்.

அப்போது கள்ளிமேடு சித்தப்பா கையில் சேவலுடன் என்னைப் பார்க்க வந்துவிட்டார். கோயிலூருக்கு சேவற்கட்டுக்குப் போவதற்குத் தயாராகிவிட்ட தோற்றம்.

‘‘நூலான்… எப்படியும் இன்னிக்கு எறிஞ்சிரும்’’ என சேவலின் வெற்றி பற்றி சங்ககால வார்த்தையைப் பயன்படுத்தினார்.

சேவலுக்குத் தானியங்களுடன் வண்டு, நட்டுவாக்கலி, பூரான் போன்ற அரைக்கொல்லி உயிர் களைக் கொன்று, தீனியாகப் போட்டு வளர்த்துவார். சேவல் களின் வெற்றிக்குக் கீழ் நோக்கு, மேல் நோக்கு, சமநோக்கு நாட்கள் ஆகிய நிலா நிலைகளையும், பட்சி சாதியின் வீரியம் ஓங்கும் நாழிகைகளையும் கணக்கில்கொண்டு சேவல் விடுவார். இந்தக் கணக்கு, பட்சி சாஸ்திரம் எல்லாம் குடலுக்குள் குவார்ட்டர் போகும் வரைதான். அதைத் தாண்டிவிட்டால், அதே சேவலை தீக்கோழி மற்றும் ஈமு கோழிகளுடன்கூட மோத விட்டுவிடுவார். அவர் கட்டிங்குகள் கட்டுக்குள் இருந்தால், அநேகமாக வெற்றி உறுதி. கோயிலூர் சேவல் கட்டுக்கு நல்லவேளையாக யாரும் ஈமு மற்றும் தீக்கோழிகளைக் கொண்டுவருவது இல்லை.

‘‘வெறுங்கையைத்தான் வீசிக்கிட்டு வந்திருக்கியா?’’ என்றார் என்னைப் பார்த்து.

எனது லக்கேஜ்களை அவர் கணக்கில் கொள்வதில்லை.

‘‘இந்தப் பொண்ணு வந்ததினால ஒண்ணும் வாங்க முடியல சித்தப்பா’’ என நான் கைகாட்டிய போதுதான் வினோதினியைப் பார்த்தார்.

அவள் அருகில் நின்றிருந்த என் அம்மாவிடம், ‘‘என்ன நங்கையா… மகன் மருமகளைப் புடிச்சாந்துட்டானாட்ட இருக்கு?’’ என்றார்.

வினோதினிக்கு வட்டாரத் தமிழ் சுத்தமாகப் புரியாவிட்டாலும், அது ஓர் உள்நீரோட்டம் உள்ள கேள்வி எனும் அளவுக்குப் புரிந்து விட்டது. சித்தப்பாவின் கண்கள் பசிக் கோழியின் கண்கள்போல மின்னின. வினோதினி ஆங்காரப் படப்போகிறாள் என நினைத்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. அவள் அவரை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

கடைசியில் அடுத்து வரும் போது அவருக்கு ஸ்காட்ச் வாங்கிவருவதாக மொழிந்தாள். இதை அவருக்குப் புரியவைக்க செப்புமொழிகள் மூன்றைப் பயன்படுத்தினாள்.

‘‘மீக்கு கேரன்டிகா ஸ்காட்ச் தீஸ்க்கு வர்றேன்.’’

‘‘காச்செல்லாம் நமக்கு ஆகாதும்மா. விஸ்கி, பிராந்தி, ரம்முதான்.’’

நான் குளித்துவிட்டு வரும்போது சித்தப்பா, சேவலின் காலில் கத்தியைக் கட்டி அவளுக்குச் செயல் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். அடுத்து, தத்திப் பறந்து காட்டுவாரோ எனப் பயமாக இருந்தது. சேவலின் காலில் கத்தியை வைத்து அதைச் சுற்றிலும் கயிறு கட்டுகிறபோது, பம்பரத்துக்குக் கயிறு சுத்துகிற லாகவமும் வேகமும் இருக்கும். வினோதினி, சேவலுக்கு கத்தி கட்டும் பயிற்சியில் ஈடுபட்டபோது அவர், “கேர்ஃபுல்… கேர்ஃபுல்!’’ என்றார். அவள், “ஓ.கே… ஜாக்கி அங்கிள்!” என்றாள். இருவருக்கும் இடையில் இனி பொது மொழியாக ஆங்கிலம் செயல்படுமோ என ஐயுற்றேன். இருவரும் சேவல் கட்டும் இடத்தில் சந்தித்துக்கொள்வதாக ஒப்பந்தம் வேறு செய்துகொண்டார்கள்.

‘‘மீட்டிங் தி கோயலூரு!’’ என்றார் கடைசியாக சித்தப்பா.

நான் வினோதினிக்கு காலை உணவுக்கான அழைப்புவிட்டேன். காரப் பணியாரங்களும் கருப்பட்டிப் பணியாரங்களும் அவளுக்காகக் காத்திருந்தன.

சித்தப்பா சென்ற சிறிது நேரத்தில் காரில் உள்ளூர் நண்பன் செல்வக்குமார் வந்தான். ‘‘சீக்கிரம் ரெடியாகுடா… கட்டுக்குப் போலாம். கார்லயே போயிறலாம். பொண்ணு ஒண்ணு வேற வந்திருக்குதுன்னாங்க…’’ என்றான். சிரிப்பை அடக்க முயன்றான். சிரிப்பு கூட அல்ல அது. உள்ளிருந்து ஊறும் உவகை. அவனது கன்னங்கள் பார்க்க மிக அழகாக இருந்தன அப்போது.

‘‘ஏன்டா… உன் பைக்கைக் கேட்டாக்கூட பெட்ரோல் போடணும்னு கண்டிஷன் போடுவே… இன்னிக்கு என்ன?’’

‘‘சரி… விட்றா விட்றா. நிஜமாவே நான் கிளம்பிட்டேன்டா. நீயும் வர்றேன்னு சொன்னாங்க. அதான் கூட்டிக்கிட்டுப் போலாம்னு வந்தேன். வர்றதுன்னா வா… இல்லைன்னா நான் கிளம்பறேன்’’ என்று சாவியைச் சுற்றிக் காண்பித்தான்.

அவனது காரில் நானும் வினோதினியும் உட்கார்ந்த ஐந்தாவது நிமிடத்தில் வண்டியில் எத்தனை பாட்டுக் குறுந்தகடுகள் இருக்கின்றன என்பதை அவளுக்குப் புலப்படுத்தினான். அடுத்து அவன் பதிவுசெய்தது, எனக்குக் கார் ஓட்டத் தெரியாது என்ற சங்கதியை. பவுடர் போட்ட புதிதில் நழுவும் கேரம் போர்டு ஸ்ட்ரைக்கர் மாதிரி கார் நழுவி ஓடியது. அந்த வேகத்துக்கு எங்கள் ஊரில் இருந்து கோயிலூர் பதினைந்து நிமிடங்கள்தான். அதற்குள் அவளை வென்றெடுப்பதற்கான பல வித்தைகளையும் முயற்சிகளையும் மேற்கொள்வான் என நினைத்தேன்.

“‘ஆடுகளம்’ பாத்துட்டியாடா?’’ என்று கேட்டேன்.

‘‘பாத்துட்டேன். நல்லாத்தான் இருக்குது. ஆனா… கட்டுச் சேவலை எந்த ஊர்லடா பொட்டியில போட்டு வளத்துவாங்கனு தெரியலை. அதைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்.”

கோயிலூரில் காரை நிறுத்தியதும் தண்ணீர் பாட்டில் ஒன்றைக் கடையில் வாங்கி வினோதினிக்கு அளித்தான். அவளுக்கு அருகிலாக இருவரும் சேவல் கட்டும் பந்தல்களை நோக்கி நடந்தோம். நீலச் சிலுவையில் இருந்து வந்திருக்கிற பெண் அதிகாரி என இரண்டு பேரிடம் சொல்லிவைத்தால், சேவல் கட்டை கொஞ்ச நேரம் ஸ்தம்பிக்கவைக்கலாம் என்றுபட்டது.

கூட்டம் எக்குத்தப்பாக எகிறியடித்துக் கொண்டிருந்தது. இந்தக் கும்பலில் ஒற்றைப் பெண்ணை எப்படிக் கூட்டிக்கொண்டுபோய்க் காட்டுவது என ஆலோசித்துக் கொண்டிருக்கையில் காவலுக்கு வந்திருந்த பெண் போலீஸிடம் என்னவோ ஆங்கிலத்தில் பேசினாள். அப்புறம் அவளும் காவல் பெண்டிருமாகச் சுற்றிச்சுற்றி சேவல் கட்டைப் பார்க்கத் தொடங்கினார்கள்.

அடிக்கடி தொடர்பு எல்லைக்கு அப்பால் போனவளை பின்தொடர்வது சாத்தியம் இல்லை என நானும் செல்வக்குமாரும் வேறு இடங்களில் சுற்றிக்கொண்டிருந்தோம். எறிபட்ட சேவல்கள் விலைக்குக் கிடைத்துக்கொண்டிருந்தன.

‘‘டேய் கோச்சை ஒண்ணை விலைக்கு வாங்கிடலாம்டா. மத்தியானம் வீட்டுல சமைச்சுட்டாப்போகுது’’ என்றான் செல்வக் குமார்.

‘‘எங்க வீட்டுலதானே?’’

‘‘சரி… அப்படியே பண்ணிக்க. அதுசரி… நல்ல பொண்ணா தெரியுதே. லவ்வுக்கீது பண்றியா?’’

‘‘இது வரைக்கும் இல்லை.’’

போட்டியில் தோற்ற சேவலான ‘கோச்சை’ ஒன்றை அறுநூறு ரூபாய்க்கு வாங்கினேன். அதை அங்கேயே இறகு பிடுங்கி, தீயில் வாட்டித் தர ஓர் ஆளை ஏவிய செல்வக்குமார், அந்த ஆளுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தான். ஒரு வாதநாராயண மரத்து நிழலின் கீழ், கோச்சைச் சேவலை தீயில் வாட்டுகிற நேரம் வினோதினி வந்துவிட்டாள்.

சிறு குச்சிகளைப் பொறுக்கிப்போட்டு ஒரு கருங்கல்லின் மீது அமர்ந்தவாறு வாட்டுவதற்கு உதவிசெய்தாள். வாட்டுகிற ஆள் தெலுங்கு பேசவும் ரொம்பவும் உற்சாகமாகிவிட்டாள். அந்த ஆள் கொச்சைத் தெலுங்கில், கோச்சை வாட்டுவதில் உள்ள நுட்பங்களையும் கஷ்டங்களையும் சொல்ல பரிதாபமும் வியப்பும் ஒரு சேர அடைந்தாள்.

“ஒரு நாளில் இரண்டு மூன்று சேவல்களுக்கு மேல் வாட்ட முடியாது… அவ்வளவு சூடு’’ எனத் தெரிவித்தவர் கோச்சையின் கால்களை அவள் பிடிக்கக் கொடுத்தார்.

‘‘சூடு சூடு சூசேவா… எந்த கஸ்டமுன்னு…’’ தமிழும் தெலுங்கும் கோழிச்சூட்டில் இரண்டற முயங்கிச் சிலேடையானது. வாட்டியவரிடமே சேவலைத் தந்துவிட்டு அவரது குடும்பம் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள் வினோதினி.

சண்முக சித்தாற்றின் கரையில், ஒரு வாதறக்காச்சி மரத்தடியில் சில ஆயிரம் ஆடவர் மத்தியில், ஒற்றைப் பெண்ணாக தன் மகள் செத்த சேவலைத் தீக்காய்ச்சிக்கொண்டிருக்கும் காட்சியை வெங்கடபதி ராஜு பார்த்தால் என்ன ஆகும் என ஒரு கணம் எனக்குப் பதைத்து வந்தது.

வாட்டிய சேவலை ஒரு நாளிதழில் பொதிந்துகொண்டுபோய் காரில் வைத்தேன். செல்வக்குமாரும் வினோதினியும் என் பின்னால் வந்தார்கள்.

வண்டியை ஈஸ்வரன் கோயில் அருகிலேயே நிறுத்தியிருந்தான் செல்வக்குமார். நான் அந்தக் கோயிலைக் காட்டி வினோதினியிடம் சொன்னேன்.

‘‘இந்தக் கோயிலுக்குள் சோழர் காலக் கல்வெட்டு இருக்கிறது.’’

‘‘ஓ… சிலா சாசனமு!’’ எனத் தாய்மொழியில் வியந்து கோயிற்கோபுரத்தை ஆர்வத்துடன் பார்த்தாள்.

‘‘ஆனங்கூர் கல்வெட்டுகள் என அழைக்கப் படுபவை எல்லாம் இந்தக் கோயிலுக்குள் இருப்பவையே.’’

‘‘இப்ப உள்ளே போய்ப் பாக்க முடியாதா?’’ என ஏக்கத்துடன் கேட்டாள். கோயில் பூட்டிக் கிடந்தது.

‘‘சான்ஸே இல்லை’’ என்றான் செல்வக்குமார்.

அவள் காருக்குப் பக்கத்தில் நின்று அப்பா வி.பி.ஆருக்கு போன் பேச ஆரம்பித்தாள்.

‘‘மன்ச்சி எக்ஸ்பீரியன்ஸ் டாடி!’’ என ஆரம்பித்து ஏழெட்டு நிமிடங்கள் பேசிவிட்டு கார் ஏறினாள். சாலையோரப் பனைமரங்களை வெறித்துக்கொண்டிருந்த நான், அவளோடு பின் ஸீட்டில் உட்கார்ந்தேன்.

செல்வக்குமார் டிரைவிங் ஸீட்டில் இருந்து திரும்பி வினோதினியைப் பார்த்து, ‘‘இன்னிக்கு நைட் பக்கத்து ஊர்ல தஞ்சாவூர் நித்யா கரகாட்டம். பார்க்கிறீங்களா? என்ஜாய் பண்ணுவீங்க…’’ என்றான்.
வினோதினி பதில் சொல்லாமல் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். செல்வக்குமார் கார் ஓட்டுவதில் கவனமே கண்ணானான்.

கொஞ்ச தூரம் போனதும் என்னிடம் வினோதினி மெல்லிய குரலில், “பாட்டு, டான்ஸ்னு ஊர் சுத்திக்கிட்டு அலைஞ்சீனா கொன்னுடுவேன் பாத்துக்க!” என்றாள் ஆங்கிலத்தில்.

நான் கோச்சைச் சேவலில் அதிக காரம் சேர்க்கச் சொல்லி அம்மாவிடம் சொல்வது பற்றி குதூகலமாக யோசித்தேன். ஆந்திராவின் காரம். வண்டி ஆனங்கூர் தாண்டி போய்க்கொண்டிருக் கும்போது வினோதினிக்கு போன் வந்தது. எடுத்துப் பேசிவிட்டு வைத்தாள். அவளது அப்பாவிடம் பேசினாள் எனத் தெரிந்தது. என்ன என்பதுபோல அவளைப் பார்த்தேன்.

“நெக்ஸ்ட் சண்டே என்னை பொண்ணு பார்க்க வர்றாங்களாம். அப்பா ஊருக்குக் கூப்பிட்டார்” என்றாள்.

கொடுங்கனவில் இருந்து விழித்தவன்போல அவளைப் பார்த்தேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போதுதான் களத்தில் இறக்கப்பட்ட சேவல் பார்ப்பது போன்ற ஒரு பார்வை. எனக்கு உதடு வறண்டிருந்தது. அடுத்து அவளே பேசட்டும் எனக் காத்திருந்தேன். அடுத்து அவள் எது பேசினாலும் அது ஒரு கல்வெட்டாக இருக்கும் எனத் தோன்றியது.

அவள் எதுவும் பேசாமல் பக்கவாட்டில் பார்க்க ஆரம்பித்தாள். என் வீட்டுக்கு அருகே காரை நிறுத்தினான் செல்வக்குமார். வினோதினிதான் முதலில் இறங்கினாள். நான் எழப் பிடிக்காமல் சோர்ந்து உட்கார்ந்திருந்தேன்.

“கனவு கண்டுக்கிட்டு இருக்கியா? இறங்கு! வீட்டுக்கு வந்துட்டோம்” என்றாள். அவளது பேச்சில் இருந்து எதையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு எழுத்தைப்போல இருந்தது!

– 18.08.2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *