காலம் காத்திருக்குமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2021
பார்வையிட்டோர்: 2,472 
 

“அண்ணா வந்து விட்டாரம்மா!” ஆனந்தன் வந்து விட்டான் என்பதைச் சொல்லும் போது அருணாவின் முகத்தில் தான் எவ்வளவு ஆனந்தம்! வீடு கூட்டிக் கொண்டிருந்தவள் தும்புக்கட்டையை விறாந்தையின் ஒரு மூலையில் வைத்துவிட்டு “வாங்கண்ணா” என்றாள். பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த ஆனந்தனின் தம்பியும் ஓடிவந்தான். தமையன் வந்துவிட்ட சந்தோசத்தில் “எட்டு மாதமாக வீட்டுக்கு வராத பிள்ளை வந்து விட்டானே” என்கிற மகிழ்ச்சி கட்டிலில் படுத்திருந்த வருந்தகாரத் தாயான கனகம்மாவையும் எழுப்பி உட்கார வைத்தது.

ஆனந்தனின் கையிலிருந்த “சூட்கேஸ்” அருணாவின் கைக்கு மாறியது. “அருணா! தம்பிக்குக் கோப்பி போட்டுக்கொண்டு வா” என்று கனகம்மா மகளைக் குசினிக்கு அனுப்பிவிட்டு, ஆனந்தன் இருக்கும் கதிரைக்கு முன்னால் , சாய்வு நாற்காலியை இழுத்துப்போட்டுவிட்டு இருந்தாள்.

“என்ன தமிபி கொழும்பிலை ஆனா வாயிலை வயிறு நிறையச் சாப்பிடுறயில்லையே? சரியாக மெலிஞ்சு போனாய்?” தன் மகன் மெலிந்து விட்டதாக நினைத்த தாயுள்ளம் கேட்டது.

“எல்லாம் வடிவாகச் சாப்பிடிறது தான்: நான் இப்ப ஓரிடத்துக்கு போகவேணும்” என்று சொல்லிக்கொண்டே ஆனந்தன் அறையினுள் புகுந்து கண்ணாடியைப் பார்த்துத் தன் அலங்கார வேலைகளை ஆரமபித்தான்.

“பொறு தம்பி , இப்பதானை வந்தனி, அதுக்குள்ளை எங்கை போக வேணுமெண்டு அவசரப்படுறாய் ? இராத்திரியும் நித்திரை முழிச்சு வந்திருப்பாய்;: அலுப்பாயிருக்கும், குளிச்சுச் சாப்பிட்டிட்டு, கொஞ்சநேரம் படுத்திட்டு பிறகு வேணுமெண்டால் எங்கையெண்டாலும் போ” பெற்றவளுக்குத் தெரிகிறது பிள்ளையின் அலுப்பு: பிள்ளையோ…

“இதுதான் இஞ்சை வரவிரும்பிறயில்லை வந்தால் ஒரு இடமும் வெளிக்கிட விடமாட்டியள். கொழும்பிலையெண்டால் என்ர விருப்பப்படி எங்ககை வேணுமெண்டாலும் உலாத்தித் திரிவன்” தாய் சொல்லைத் தட்டிய வண்ணம் முகத்தில் பவுடரை அப்பினான், ஆனந்தன்.

“இல்லைத் தம்பி நாலைஞ்சு நாளைக்கு நிப்பாய் தானே! போற இடங்களுக்குப் பிறகு போகலாம். இப்ப களைப்பாயிருக்கும் எண்டபடியால்தான் ஓரிடமும் போக வேண்டாமெண்டு சொன்னனான்” அமைதியாக ஒலித்தது அன்னையின் குரல்.

அருணா கொண்டு வந்த கோப்பியை ஒரு மடக்கில் குடித்துவிட்டு, “எனக்கொரு அலுப்புமில்லை: நான் போட்டு வாறன்” என்று சொல்லியவன், தாயின் பதிலையோ தங்கiயின் பதிலையோ எதிர்பாராமல் கிளம்பி விட்டான்.

“என்ர பிள்ளைக்கு உருளைக்கிழங்குப் பிரட்டல் என்டால் நல்ல விருப்பம். கொழும்பிலை ஆர் செய்து குடக்கப்போகினம்? இஞ்சினை வந்த இடத்திலை திண்டால் தானை உண்டு” இப்படி எண்ணிய கனகம்மா தன் வருத்தத்தையும் மறந்து சமையலை தொடங்கினாள்.

“நேரம் இரண்டு மணியிருக்குமே”? கனகம்மா அருணாவைக் கேட்டாள். “உங்காலை ஆசையம்மாவின்ர ரேடியோவிலை வர்த்தக ஒலிபரப்புத் துடங்கியிட்டுது: மூண்டு மணிக்கு மேலையாப் போச்சு” வடைக்கு உளுந்தரைக்கொண்டு சொன்னாள் அருணா.

“அண்ணாவுக்கு வடை சுட்டுக் குடுக்க வேணும்” அந்த ஆசைதான் அருணாவின் கைகளை ஆட்டுக் கல்லோடு அசைத்துக்கொண்டிருந்தது.

“காலத்தாலை போன பொடியனை இன்னும் காணயில்லை. இந்த வெய்யில் எல்லாம் அவன்ர தலையிலைதான். ஒரு சொல்வழியெண்டது எப்பனும் கேளான்” என வெறுத்த பெற்ற மனம் மறுகணமே- “பாவம்! அது பொடியனுக்கும் பழைய சினேகிதங்களை மறக்க முடியாது. அதுதான் வந்த உடனே ஓடிப்போட்டான். சாப்பிட்டுக் கீப்பிட்டு ஆறுதலாகப் போயிருக்கலாம். ஆர் மறிச்சது” என்று இரக்கப்படவும் செய்தது.

“வடையும் சூடாறிப் போச்சு, அண்ணா வந்த பாட்டைக் காணயில்லை. நீயெண்டாலும் உங்கினை போய்ச் சந்திப்பக்கத்தில பாத்துக்கொண்டு வாவன்” தம்பியைத் தயவோடு கேட்டாள் அருணா.

“ஏன் என்னைத் தேடுவான்? நான் வருவன் தானே…”

வேர்த்து வடியும் முகத்தைக் கைலேஞ்சியால் துடைத்து விட:டு, சைக்கிளை வேலியோடு சாத்தி வைத்தான் ஆனந்தன்.

“ஏன் மோனை காத்தாலை துடக்கம் இவ்வளவு நேரம் எங்கை போயிட்டு வாறாய்? சரி, இனி உன்னோடை என்னத்தைக் கதைக்கிறது. தங்கச்சி சாப்பாட்டை போட்டு குடு” வேதனையை மறைத்துக் கொண்டாள் கனகம்மா.

ஆனந்தன் உடுப்புகளைக் கழற்றிக் கொண்டு “எனக்குச் சாப்பாடு வேண்டாம். மத்தியானம் அங்கையொரு பெடியனோடை கடையிலை சாப்பிட்டனான். இப்ப குளிச்சிட்டு வரக்கிடையிலை தேத்தண்ணி போட்டுத் தரவேணும்” என்று சொல்லி விட்டு கிணற்றடிக்குப் போனான்.

“எப்படியண்ணா வடை?” – தான் சுட்ட வடைக்கு அண்ணா கொடுக்கும் மதிப்பை அறியத் துடித்த அருணா கேட்ட கேள்விதான் இது.

“இதென்ன வடை? கொழும்பிலையெண்டால் எவ்வளவு ருசியாக இருக்கும்” – வெறுப்புடன் சொன்னான்.

அருணாவின் முகம் மாறியதைக் கண்ட கனகம்மா “பாவம்! நீ வந்திட்டாய் எண்டிட்டு அவள் பகல் நித்திரையும் கொள்ளமால் உளுந்தை அரைச்சு வடையைச் சுட்டுத்தர, இதே சொல்லுகிற கதை. அவள் எவ்வளவு வேதனைப்படுவள்” என்றாள்.

“அதுதான் அம்மா, இனி நீங்கள் ஒவ்வொண்டு கேக்க, நான் ஒவ்வொண்டு சொல்ல சண்டைதான் வரும். நான் பாலனோடை படத்துக்குப் போட்டு, பத்துமணிக போலை தான் வருவன். நீங்கள் சாப்பிட்டிட்டுப் படுங்கோ” சொல்லிவிட்டு, வேலியோடு சாத்தி வைத்த சைக்கிளை எடுத்துக் கொண்டு மறுபடியும் புறப்பட்டான்.

“முன்னிருட்டு ரோச் லைட்டை எடுத்துக்கொண்டு போ” கனகம்மா சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை ஆனந்தன்.

இரவு பத்தரை மணிக்கு மழையில் மகன் நனைந்து கொண்டே வந்ததைப் பார்த்து வருந்தினாள் கனகம்மா.

ஏதும் கதைத்தால் ஆனந்தன் ஆத்திரம் கொள்வான் என்ற எண்ணம் கனகம்மாவின் வாயைக் கட்டி வைத்தாலும் “இந்த மழையிலை ஏனப்பு நனைஞ்சனி? படத்தை நாளைக்குப் பார்த்தாலென்ன?” என்றொரு கேள்வியைக் கேட்டுவிட்டாள்.

“எனக்குச் சாப்பாடும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் நீங்கள் சும்மா கரைச்…” ஆனந்தன் சொன்ன்தைச் சொல்லி முடிக்காமலே படுத்து விட்டான்.

முன்னிரவு முடிந்து பின்னிரவின் நடுப்பகுதி. நேரம் இரவு மூன்று மணி. ஆனந்தன் முகம் கழுவிக் காறித் துப்பிய கத்தம் கேட்டு, தாயும் மகளும் விழித்துக்கொண்டனர்.
“என்னண்ணா இப்ப முகம் கழுவிறியள்?” தெரியாததால் கேட்;டாள் அருணா.

“நான் இப்ப காலைமை ‘யாழ்தேவி’ யிலை போகப் போறன். ஆரும் பொடியள் வந்து கேட்டால் போட்டான் எண்டு சொல்லுங்கோ” – இப்படி அவன் சொன்னதைக் கேட்ட பின்பும் வேதைப்படாமலிக்குமா அவர்கள் உள்ளம்?

ஒரு கிழமைக்கெண்டாலு; நிண்டு முழுகிக் குளிச்சு வடிவாச் சாப்பிட்டு – நாளையிண்டைக்குக் கடைசி வெள்ளி- சந்நிதிக்கும் போய்க் கும்பிட்டிட்டு ஆறுதலாக திங்கக்கிழமை போவன்” இது கனகம்மா சொன்னது.

“நான் போக வெளிக்கிட்டிட்டன். இனி நிக்கேலாது. நிண்டால் நெடுக உங்களட்டைப் பேச்சு வேண்டிக்கொண்டிருக்க வேண்டி வரும்’ இது ஆனந்தன் சொன்னது. “தாய் தேப்பன் . பிள்ளையள் நல்ல வரவேணுமெண்டு தானே பேசிறது. நாங்கள் பேசாதபடி நீங்களெல்லோ நல்லா நடக்க வேணும். சரி போற உன்னை குழப்பக் கூடாது. ஏதோ போய் எங்கென்றாலும் சுக பலமாய் இருந்தால் காணும் எங்களுக்கு உழைச்சுக் கிழைச்சு தராட்டியும் நீ நல்லாயிருக்க வேணும். எங்கடை மனம் துடிக்கும். ஏதோ கிழமைக்கொரு போசுக்காடு சுகமாயிருக்கிறன் எண்டு கிறுக்கிப் போடு. வளர்ந்த பிள்ளையகளுக்குக் கிழடு கட்டையளான நாங்கள் என்ன சொல்லுறது. ஏதோ நாலுபேர் நல்லவன் எண்டு சொல்லத்தக்க மாதிரி வாழ்ந்தால் காணும்.”

“ம்..இப்ப போய் பஸ்ஸைப் பிடிச்சால்தான் யாழ்தேவியிலை போகலாம். போயிட்டு வாங்கோ” என்ன இருந்தர்லும் பித்து மனத்துக்கு உரியவளல்லவா தாய்! அதனால்தான் கவலைகளை மறந்து , மறைத்துத் தன் மகனைச் சந்தோசத்துடன் அனுப்பி வைத்தாள்.

“செரியோ” விளங்காத மொழியில் சொல்லிவிட்டு கொழும்புக்குக் கிளம்பிவிட்டான் ஆனந்தன்.
காலம் வரும்போது பித்து மனம் சொன்னவையெல்லாம் கல்லு மனதிற்கு நன்றாக விளங்கவரும். அந்தக் காலம் வரும் வரை தாயின் உள்ளமும் , உடலும் காத்திருக்கமோ என்னவோ?

– தினகரன் 1967 – நிர்வாணம் (சிறுகதை) – பதிப்பு: ஒக்டோபர் 1991 – புனித செபத்தியார் அச்சகம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *