காற்றில் எழுதுபவர்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 3,427 
 

வண்டியை விட்டு இறங்கும்போது அந்தத் தெருவில் நாங்கள் எதிர்பார்த்தபடி யாருமே இல்லை. அறநிலையத் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்தக் கோவிலை ஒட்டிய பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருப்பதாகக் கேள்விப்பட்டுத்தான் இங்கு வந்து இறங்கினோம். ஆனால், எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அங்கிருந்த ஒரு வீட்டின் வாசலில் நின்றிருந்தவரிடம் விசாரித்தோம். அவர் சலிப்புடன், “இப்ப அந்தக் கோவிலில் அன்னதானம் போட்டுக்கிட்டு இருக்காங்க. அதைச் சாப்பிட்டுட்டு நேரா, இந்தப் பக்கம் வந்து உக்காந்துக்கிட்டும் படுத்துக்கிட்டும் கிடப்பாங்க. கொஞ்சநேரம் கழிச்சு இங்க வந்து பாருங்க” என்றார். நாங்கள் அனைவரும் மீண்டும் வண்டியில் ஏறிக்கொண்டு, அரைமணிநேரம் வண்டியிலேயே காத்திருந்தோம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராகக் கோவில் தெரு வழியாக இந்தத் தெருவுக்கு வந்து சேர்ந்தனர். நாங்கள் அமைதியாக, வண்டியிலிலேயே இருந்தோம். அவர்கள் அனைவரும் வழக்கமாகத் தங்கும் இடங்களில் வந்து அமர்ந்ததும், நாங்கள் மெதுவாக வண்டியைவிட்டு இறங்கினோம்.

எங்கள் குழுவில் ஆறு பெண்களும் நான்கு ஆண்களும் இருந்தோம். எங்கள் திட்டப்படி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உடலளவில் சக மனிதர்களாக மாற்றுவதுதான். இந்தத் திட்டத்திற்காக எங்களின் கலைக்கல்லூரியும் சமூகநலக் கல்லூரியும் இணைந்து, நிதி ஒதுக்கீடு செய்து, முன்தயாரிப்புப் பணிகளோடு இங்கு வந்து சேர்ந்தோம்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை முதற்கட்டமாக எப்படி எல்லாம் பராமரிக்க வேண்டும் என்பது பற்றி எங்கள் ஆசிரியர்கள் கடந்தவாரமே எங்களுக்கு விளக்கமாகச் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். மனநலம் பிறழ்ந்தவர்களுக்கு முதலில் உணவு கொடுப்பது, அவர்களின் தலைமுடிகளைச் சீராக்குவது, அவர்களைப் குளிக்க வைப்பது, புதிய உடைகளை வழங்குவது, தாங்களாகவே உடையை உடுத்திக்கொள்ள இயலாதவர்களுக்கு உதவிசெய்வது, அவர்களோடு இயன்றவரை இனிமையாகப் பேசுவது, அவர்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைக் கேட்டுப் பெறுவது, அவர்கள் விரும்புவதை வாங்கித்தர முயற்சி செய்வது, அவர்களை அந்த இடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றுவது, மனநலத்தை முன்னிட்டுச் சிகிழ்ச்சை அளிப்பது, அவர்களால் செய்யக் கூடிய எளிய பணிக்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவது என எங்கள் திட்டம் தொடர் திட்டமாக, மிக விரிவாக இருந்தது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை முதலில் அணுகுவது மாணவர்களாகிய நாங்களே என்றும் தேவைப்பட்டால் மட்டுமே பேராசிரியர்கள் உதவுவார்கள் என்றும் எங்களுக்குக் கூறியிருந்தனர். ஆண்களும் பெண்களும் இணைந்து, எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் இந்தப் பணியில் ஈடுபடுவது என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடை மாற்றும் பணியை மட்டும் பெண்களுக்குப் பெண்களும் ஆண்களுக்கு ஆண்களும் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

எங்களின் பேராசிரியர்கள் வாகனத்திலேயே அமர்ந்து கொண்டார்கள். நாங்கள் 10 பேர் மட்டும் இனிப்புப் பொட்டலங்களோடு அவர்களை நோக்கிச் சென்றோம். எங்களோடு இருந்த ஆறு மாணவிகளும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நெருங்கச் சற்றுத் தயங்கினார். அதனால், ஆண்கள் முதலில் செல்வது என்றும் மாணவிகள் எங்களைப் பின்தொடர்ந்து வரட்டும் என்று முடிவு செய்தோம். ‘அதிலும் ஆண்களில் யார் முதல் ஆளாகச் செல்வது?’ என்பதில் எங்களுக்குள் தயக்கம் இருந்தது.

அந்தத் தயக்கத்தை உடைத்து, “நானே முதல்ல போறேன்’ என்றேன். எனது துணிவை வியந்த பார்கவி, என்னைப் பார்த்து, ‘குட்’ என்று கூறிப் பாராட்டினாள். அவள் சொல்லிலிருந்து சிறகடித்து வந்த மலர்ச்சி, தன் சிறகுகளால் என் முகம் முழுவதும் போர்த்தியபடி அமர்ந்துகொண்டது. எல்லோருக்கும் பார்கவியைப் பிடிக்கும். பார்கவிக்கு என்னைப் பிடிக்கும்.

நான் முன்னால் நடந்தேன். பார்கவி என் பின்னால் நடந்துவருவதை அவளின் முகப்பவுடர் வாசத்தை நுகர்ந்து, கண்டுகொண்டேன். நான் ஒருமுறை திரும்பி என் தோழமைகளைப் பார்த்தேன். பார்கவியைத் தொடர்ந்து எட்டுப்பேரும் வரிசையாக நடந்து வந்தனர். நேர்த்திக் கடனுக்காகக் கையில் தீச்சட்டியை ஏந்தி வருபவர்களைப் போல, அந்த இனிப்புப் பொட்டலத்தை ஏந்திக்கொண்டு எட்டுப் பேரும் வந்தனர்.

நான் முதலில் ஒரு முதியவரை அணுகினேன். நான் அவரிடம், “ஐயா! இது ஸ்வீட்ஸ். வாங்கிக்கோங்க” என்றேன்.

அவர் கைகளை மறுப்பதுபோல ஆட்டி ஆட்டி, “இப்பத்தாஞ் சாப்பிட்டேன். இப்பத்தாஞ் சாப்பிட்டேன்” என்றார்.

“பரவாயில்லைங்கையா. வாங்கிக்கோங்க. அப்புறமாச் சாப்பிடுங்க” என்றேன்.

அவர் மீண்டும் தன் கைகளை மறுப்பதுபோல ஆட்டி ஆட்டி, “பசிக்கும்போது வாங்கிக்குறேன். இப்பத்தாஞ் சாப்பிட்டேன். இப்பத்தாஞ் சாப்பிட்டேன்” என்றார்.

‘எறும்புகள் கூடச் சேமித்து உண்கின்றன. ஆனால், இவர் துறவிகளைப் போலப் பசிக்கும்போது உணவைத் தேடுவார் போல’ என்று நினைத்துக்கொண்டு, அடுத்த நபரின் அருகில் சென்றேன். அவர் நடுத்தர வயதில் இருந்தார். அவர் தலையை நிமிர்த்தியபடி, எதையோ வானத்தில் தேடிக்கொண்டிருந்தார்.

நான் அருகில் வருவதைக் கூட அவரால் உணரமுடியவில்லை. நான் அவரை மிகவும் நெருங்கி, “அண்ணா! இது ஸ்வீட்ஸ். வாங்கிக்கோங்க” என்றேன்.

அவர் திடுக்கிட்டுத் தலையைத் தாழ்த்தி, “எதுக்கு? எதுக்கு?” என்றார்.

“இது ஸ்வீட்ஸ். உங்களுக்குத்தான். வாங்கிக்கோங்க” என்றேன்.

அவர் மெல்லிய புன்னகையுடன் வாங்கி, மடியில் வைத்துக்கொண்டு, மீண்டும் தலையை உயர்த்தி, வானத்தில் மீண்டும் தேடத் தொடங்கினார். நான் திரும்பி என் தோழமைகளைப் பார்த்தேன். எல்லோர் முகத்திலும் ஒரு நிம்மதி படரத் தொடங்கியது. பார்கவி என்னருகில் வந்தாள்.

நானும் அவளும் சேர்ந்து நடந்து, அடுத்தடுத்து அமர்ந்திருந்தவர்களிடம் இனிப்புப் பொட்டலங்களைக் கொடுத்தோம். யாரும் மறுக்கவில்லை. வாங்கிக்கொண்டார்கள். இரண்டு பெண்கள் உள்பட மொத்தம் பதினாறு பேரிடம் வழங்கினோம்.

அந்தப் பதினாறுபேர்களுள் ஒருவர் மட்டும் இனிப்புப் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு, தன் வலக்கையின் ஆட்காட்டிவிரலால் காற்றில் சில எழுத்துகளை எழுதுவது போலவும் வரைவது போலவும் அசைத்தார். அவருக்கு முப்பது வயதிருக்கும். அவர் என்ன சொல்ல வருகிறார், எதை எங்களுக்கு உணர்த்த வருகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நான் பார்கவியைப் பார்த்தேன். அவளுக்கு ஏதோ புரிந்ததுபோல, தலையை ஆட்டினாள்.

‘என்ன?’ என்பதுபோல, நான் தலையை அசைத்து, அவளிடம் கேட்டேன். வேறென்னத்தச் சொல்லிருக்கப்போறாரு? ‘நன்றி’ன்றதத்தான் அப்படி எழுதிக்காட்டுறாரு என்றாள். பார்கவியின் புரிதல் திறனை நான் எப்போதுமே வியப்பவன். அவள் கூறினால் அது சரியாகத்தான் இருக்கும். நான் அவளை அழைத்துக்கொண்டு, மீண்டும் அந்த முதியவரின் அருகில் சென்றேன்.

“ஐயா! எல்லோரும் வாங்கிக்கிட்டாங்க. நீங்களும் வாங்கிக்கோங்களேன்” என்று கெஞ்சும் தொனியில் கூறினேன்.

அவர் மெல்லச் சிரித்துக்கொண்டே, கைகளை மறுப்பதுபோல ஆட்டி ஆட்டி, “இப்பத்தாஞ் சாப்பிட்டேன். இப்பத்தாஞ் சாப்பிட்டேன்” என்றார்.

நாங்கள் எல்லோரையும் பார்த்தோம். பலர் இனிப்பைச் சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள். சிலர் அதைப் பத்திரப்படுத்தியிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் உடமை என்பது சிறிய உரச்சாக்கு மூட்டையில் அள்ளி வைத்துவிடும் அளவுக்குத்தான் இருந்தன.

நாங்கள் அடுத்த கட்டமாக வண்டியிலிருந்து நன்றாகக் குளிரைத் தாங்கும் போர்வைகளை எடுத்துக்கொண்டுவந்தோம். வழக்கம்போல நானும் பார்கவியும் முன்சென்று அவர்களுக்கு வழங்க, மற்ற தோழமைகள் எங்களுக்குப் பின்புறமாக நின்றபடி உதவினர்.

இனிப்பினை வாங்க மறுத்த அந்தப் பெரியவர் போர்வையை வாங்கிக்கொண்டு, தன் மடியில் வைத்துக்கொண்டார். வானத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்த அந்த நடுத்தர வயதுக்காரர், போர்வையை வாங்கியதும் இவ்வளவுநேரம் தான் வானத்தில் தேடியதைப் போர்வையில் தேடத் தொடங்கினார். பெண்களிடம் கொடுத்தபோது, அதை அவர்கள் வாங்கி, தங்களின் உடைமைகள் இருந்த கிழிந்த பைக்குள் வைத்துக்கொண்டனர். இறுதியாகக் காற்றில் எழுதி நன்றிக்கூறியவரிடம் போர்வையைக் கொடுத்தேன். அவர் அதை வாங்கிக் கொண்டு, அப்போதுபோலவே இப்போதும் தன் வலக்கையின் ஆட்காட்டிவிரலால் காற்றில் சில எழுத்துகளை எழுதுவது போலவும் வரைவது போலவும் அசைத்தார். நான் பார்கவியைப் பார்த்தேன்.

அவள் புன்னகைத்துக்கொண்டே, “அவரு, ‘மிக்க நன்றி’ன்ணு சொல்றார்” என்றாள். நான் அவளைப் பார்த்தும் அவளின் அறிவுக்கூர்மையைப் பாராட்டியும் புன்னகைத்தேன்.

எல்லோரும் வந்து வண்டியில் ஏறிக்கொண்டோம். எங்கள் பேராசிரியர்களுள் ஒருவர், “இனிமேல்தான் சிக்கலான காரியத்தைச் செய்யப்போகிறீர்கள்” என்று கூறிவிட்டு, “ஒவ்வொருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருவரைத் தேர்ந்தெடுங்க. அவங்களோட நல்லப் பேசுங்க. அவங்க உங்க்கிட்ட நட்பாகப் பேசத் தொடங்கிட்டா உடனே எங்களுக்கு சைகை வழியாகத் தெரியப்படுத்துங்கள். நாங்கள் வந்து, அவங்ககிட்ட பேசி, பிறகு அவுங்களோடத் தலைமுடிகளை வெட்டுறது, அவுங்களைக் குளிக்க வைக்குறது, அவுங்களுக்குப் புது டிரெஸ் கொடுக்குறதுன்ணு நம்ம வேலைகளைத் தொடரலாம்” என்றார்.

மீண்டும் எல்லோரும் இறங்கினோம். ஆளுக்கு இருவரைத் தேர்ந்தெடுத்தனர். இறுதியாக நானும் பார்கவியும். ஆளுக்கு இருவரைத் தேர்ந்தெடுக்க நினைத்தபோது நான் பார்கவியிடம், “நீ அந்தக் காத்துல எழுதுறவரையும் ஒரு பெண்ணையும் உன்னோட குழுவுல சேர்த்துக்கோ. நான் ஒரு பெண்ணையும் வானத்துல தேடுறவரையும் என்னோட குழுவுல சேர்த்துக்குறேன்” என்றேன். அவள் ‘சரி’ என்பதுபோலத் தலையை ஆட்டினாள்.

ஒவ்வொருவரும் தாங்கள் தேர்ந்தெடுத்தவர்களிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினோம். நான் தேர்ந்தெடுத்திருந்த அந்தப் பெண் தன் வாழ்க்கையை மிகச் சுருக்கமாகக் கூறினார். “பிறந்தேனா, எனக்குப் பைத்தியன்ணாங்களா, இங்க வந்து ஒக்காந்துட்டேன்.” இதைவிடச் சுருக்கமாக உலகில் யாராலும் தன் வாழ்க்கை வரலாற்றை கூறவே முடியாது. தொடர்ந்து நான் கேட்ட வினாக்களுக்கு அவரால் எந்தப் பதிலையும் கூறவே முடியவில்லை. அவரின் வாய் புன்னகைத்தபடியே இருந்தது. நான் வானத்தில் தேடுபவரிடம் சென்றேன்.

“அண்ணா!” என்று நான் அவரைக் கூப்பிட்டதும் அவர் என் முகத்தைப் பார்த்தார். என் முகத்தில் எதையோ தேடினார்.

“அண்ணா! உங்க பேரு என்ன?” என்று கேட்டேன்.

அவர் வானத்தைப் பார்த்து, “அங்கே!” என்று மெதுவாகத் தலையை அசைத்துக்கொண்டே கூறினார்.

நான் வானத்தைப் பார்க்காமலேயே, “உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டேன்.

அவர் வானத்தைப் பார்த்தபடியே, “அது வேணும்?” என்றார்.

அடுத்து அவரிடம் என்ன கேட்பது, எப்படிக் கேட்பது என்று புரியாமல் பார்கவியைப் பார்த்தேன். பார்க்வி அந்தப் பெண்ணிடம் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.

நான் வானத்தைப் பார்த்தேன். இவரையும் பார்த்தேன். “என்னதான் வேணும்?” என்று சற்று எரிச்சலுடன் கேட்டேன்.

அவர் சட்டென என் முகத்தைப் பார்த்தார். உற்றுப் பார்த்தார். “போ!” என்றார். நான் அவரைவிட்டு விலகி, பார்கவியிடம் சென்றேன். பார்கவி தன் வலதுகையை உயர்த்தி, வண்டிக்குள் இருந்த பேராசிரியர்களுக்கு சைகை காட்டினாள். ஒரு பேராசிரியரும் ஒரு பேராசிரியையும் வண்டியை விட்டு இறங்கி வந்தனர். பார்கவி அந்தப் பெண்ணை அவர்களை நோக்கி அழைத்துச் சென்றாள். நான் அவளின் பின்னாலேயே சென்றேன்.

அந்தப் பெண், தன் முடிகளைச் சீர்செய்யவும் குளிக்கவும் புதிய ஆடைகளை அணிந்துகொள்ளவும் சம்மதித்தார். அவரைப்போலவே இன்னும் சில ஆண்களையும் சம்மதிக்க வைத்து என் தோழமைகள் அழைத்து வந்தனர். வண்டியில் இருந்து அனைத்துப் பேராசிரியர்களும் பேராசிரியைகளும் அவர்களுக்கு வேண்டியன செய்ய உதவினர்.

பார்கவியும் நானும் காற்றில் எழுதுபவரிடம் சென்றோம். பார்கவி, அவரிடம் பேச்சுக் கொடுத்தாள். அவர் தன் பதிலைக் காற்றில் எழுதினார். அதைப் பார்கவி தன் அறிவுத் திறமையால் படித்தறிந்தாள். மீண்டும் அவள் பேச பேச, அவர் தன் பதில்களைக் காற்றில் எழுதியபடியே இருந்தார். சில நிமிடங்களில் அவர்களின் அறுபட்டு, அந்தரத்தில் நின்றது.

“என்ன?” என்று நான் பார்கவியைக் கேட்டேன்.

“அவருக்கு ஏதுவும் வேண்டாமாம்” என்றாள் வருத்தத்துடன்.

“ஏன்?” என்று கேட்டேன். அவள் அமைதியாக இருந்தாள்.

நான் அவரைப் பார்த்து, உரத்த குரலில் “ஏன்?” என்று கேட்டேன். அவர் காற்றில் எழுதினார்.

மீண்டும் உரத்த குரலில், “எனக்குப் புரியலை” என்றேன்.

உடனே, அவர் அடித்தொண்டையைச் செருமிக்கொண்டு, “உனக்கு எழுதுறதப் படிக்கத் தெரியாதா?” என்று கேட்டார்.

நானும் பார்கவியும் திகைத்துவிட்டோம். அவர் மெல்ல எழுந்தார். எங்களை ஒருமுறை பார்த்துவிட்டு, என்னைக் குறிப்பாகப் பார்த்தபடியே, “எழுதுறதைப் படிக்கத் தெரியாத எந்தப் படிப்பை நீ படிக்குற? போ! நல்ல படிச்சுட்டு வா” என்றார்.

நான் தலையைக் குனிந்து வண்டியை நோக்கி நடந்தேன். வண்டிக்கு வெளியே, என் தோழமைகளுள் சிலர் ஐந்து ஆண்களுக்கு முடிவெட்டிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த வீட்டிலிருந்து தண்ணீரைக் குடம்குடாக வாங்கி, நான்கு ஆண்களைக் குளிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

நான் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டேன். என்னருகில் பார்கவி வந்தாள். என்னைப் பார்த்து, “ஏய்!” என்று கூறிவிட்டு, எதையோ காற்றில் எழுதினாள்.

“என்னை வெறுப்பேத்தாத. போ!” என்றேன்.

அவள் சிரித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் காற்றில் எதையோ எழுதினாள்.

நான் எரிச்சலோடு, “எனக்குப் புரியலை. வாயத்தெறந்து சொல்லித் தொலை” என்றேன்.

அவள் மீண்டும் சிரித்துக்கொண்டே, தெரியலையின்னா ஒன்ணும் கவலைப் படக் கூடாது. பொருள் புரியலையின்னா ஒன்ணும் நஷ்டமில்லை. நமக்கு எது தேவையோ, ‘அதான் அது’ன்ணு நாமே நமக்கு ஏத்த பதிலா அதை நினைச்சுக்கணும். புரியுதா?” என்று கேட்டுவிட்டு, மீண்டும் காற்றில் எழுதினாள்.

“என்ன?” என்று கேட்டேன்.

“உன்னோட பேரு” என்றாள்.

“சரி” என்றேன்.

அந்தப் பெயருக்குச் சற்று தள்ளி மீண்டும் எழுதினாள்.

“இது என்ன?” என்று கேட்டேன்.

“என்னோட பேரு” என்றாள்.

“சரி” என்றேன்.

இரண்டு பெயர்களுக்கும் நடுவில் கூட்டல் குறியினைக் காற்றில் வரைந்தாள்.

“புரியுது” என்றேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “காற்றில் எழுதுபவர்கள்

  1. ஐயா! உங்களுடைய கதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். நேர்த்தியான வார்த்தைகளைக் கொண்டு அருமையாகப் படைக்கிறீர்கள். இதில் வரக்கூடிய ஒவ்வொரு பாத்திரமும் தனித்துவமானவை . காதலை மிக அழகாகக் கூறியுள்ளீர்கள். காற்றில் எழுதும் கதாப்பாத்திரம் என் மனதிற்குள் நிற்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *