“செல்லாளுக்கு கல்லா முள்ளு குத்தி காலு ஊன முடில. போய் தூக்கீட்டு வந்து ஊட்ல உட்டுப்போடு ராசு” என செல்லாளில் அம்மா வந்து கூறிய போது பக்கத்துக்காட்டில் பனை ஓலையில் வேய்ந்த குடிசையில் கயிற்றுக்கட்டிலில் கள்ளுண்ட மயக்கத்தில் படுத்திருந்த ராசுவுக்கு உற்சாகம் கள் போதையை தூக்கி சாப்பிட்டது.
சிறுவயது முதல் அத்தை மகள் செல்லாளின் நினைவாகவே வாழ்ந்து வாலிப வயதை எட்டிப்பிடித்தவனை பார்த்தாலே எட்டிக்காய் போல கசந்தது செல்லாளுக்கு. காரணம் அவனது முரட்டுத்தனமும், போதைப்பழக்கமும் தான்.
வாழ்வில் மனிதனுக்கு ஏதாவதொரு வகையில் போதை தேவைப்படுகிறது. மண் போதை, பெண் போதை, மது போதை, உணவு போதை, பதவி போதை என பல போதைகள் வாழ்வின் பாதைகளில் செல்ல உந்து சக்தியாக, வாகனத்துக்கு எரி பொருள் போல தேவைப்படுகிறது. இளம் வயதினருக்கு மாது போதை இல்லையேல் மது போதை. தன் மனதுக்குப்பிடித்த செல்லாள் எனும் மாது கிடைக்காததால் கள் மதுவைக்குடித்து மயக்கத்தில் கிடந்தான் ராசு.
அவளைப்பெற்ற தாயே அவளைத்தூக்கி வரும்படி கூறியது அவனை மகிழ்ச்சிக்கடலில் நீந்தச்செய்தது. விலகிய வேட்டியை இடுப்பில் நிறுத்தி இறுக்கிக் கட்டியவன், துண்டை எடுத்து தலையில் கட்டியபடி கருவேலங்காட்டிற்குள் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த போது முள் குத்தி நடக்க முடியாமல் மரத்தின் கீழே அமர்ந்திருந்த செல்லாள் அருகில் போய் நின்று “க்கும்” என்றான்.
“ஐயாவுக்கு போதை அதிகமா போயி பேச்சு வர மாட்டீங்குதோ…? என்ன விசயம்? வயசுப்பொண்ணுக இருக்கிற எடத்துக்கு குடிகாரனுக்கு என்ன வேலை?” என கோபத்துடன் கேட்ட செல்லாளை அசட்டுச்சிரிப்புடன் “ஒன்னுமில்ல. உன்ற அம்மாக்காரிதான் கல்லாமுள்ளு கால்ல ஏறி உன்னால நடக்க முடிலன்னு வந்து சொன்னா….”
“அதுக்கு…..வந்து சொன்னா நாய் எலும்புத்துண்டுக்கு ஜல் ஒழுக்கறமாதர ஒழுக்கிட்டு வந்திட வேண்டியது தானா…?”
“உன்ன எந்தோள்ல வெச்சு ஊட்டு வரைக்கும் தூக்கியாரச்சொல்லுச்சு…!”
“ஓ…ஓ….அது சொன்னா நீ என்னத்தொட்டுத்தூக்கிருவியா…? எங்கே தொடு பாக்கலாம். தொட்டுடுவியா..? தொடுடா…குறும்புத்தனமாக அதட்டினாள். தொட்டான்.”தொட்டாப் போதுமா…? தூக்குடா…”
தூக்கித்தோளில் போட்டவன் அவளது வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாகச்சென்றான். மது குடிப்பதால் அவனை வெறுத்திருந்தாலும் தனக்கொரு சிரமம் என சொன்ன போது ஓடி வந்து தனக்கு உதவியதால் அவனை செல்லாளுக்கு பிடித்துப்போனது. அவனது திடகாத்திரமான தோளில் கிடப்பதால் தனது உடல் சுகப்படுவதை தற்போது உணர்ந்தவள், “ஒன்னஞ்சித்த நேரம் கீழே எறக்கி உடாம நில்லு. அம்மா வரட்டும். அப்பறமா எறங்கிக்கிறேன்” என்றவள் அவளது அம்மா வந்து வீட்டுக்கதவைத்திறந்ததும் அவனது தோளிலிருந்து டக்கென குதித்து இறங்கியவள் வெட்கத்தில் ஓடிச்சென்று வீட்டிற்குள் புகுந்து கொண்டாள்.
“முள்ளுக்குத்தி நடக்க முடியலேன்னு சொன்னவ இப்ப எப்படி ஓட்டமா ஊட்டுக்குள்ளே போனே…? ” தாய் கேட்க பதிலேதும் கூறாமல் திண்ணையில் அமர்ந்து தண்ணீர் கொண்டு வரும் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ராசுவுக்கு சொம்பில் தண்ணீர் கொடுக்க, வாங்கிக்குடித்தவனுக்கு பொறைப்போக தனது கைகளால் அவனது தலையைத்தட்டி விட்டாள்.
“என்னப்புடிச்சிருக்கா..?”
முதலாக இப்படியொரு வார்த்தையை அவளிடமிருந்து கேட்டவனுக்கு தலை கால் புரியவில்லை. பேச்சே வரவில்லை.
‘ம்’ எனத்தலையை மேலும் கீழுமாக ஆட்டினான்.
“என்னக்கட்டிக்கிறியா…?” எனக்கேட்டதும் அவளை முழுமையாக மேலிருந்து கீழாகப்பார்த்து விட்டு “ம்கூம்” என தலையை இடமும் வலமுமாக ஆட்டியது கண்டு அதிர்ந்து போனவள் சுதாரித்துக்கொண்டு, “எனக்கொரு சத்தியம் பண்ணிக்கொடு” என தனது கையை நீட்டியவளின் கையை ஓங்கியடித்து” என்னன்னு சொல்லு” என்றவன் அவளது முகத்தை ஏறிட்டான்.
அவளும் சுட்டித்தனமாக ஒரு கண்ணை மூடி, நாக்கை வாயின் ஓரத்தில் நீட்டி ” ஒன்னி மேலு கள்ளுக்குடிக்க மாட்டேன்னு சொல்லு” என்றதும் கையை சட்டென இழுத்துக்கொண்டான்.
“ஏண்டா, ஒரு பொண்ணு போதைய விட கள்ளு போத பெருசா..?” உடனே பேச மறுத்தான். சற்று நேரத்துக்கு பின் பேசினான். “நான் நாளைக்கு வந்து சொல்லறேன்” எனக்கூறி எழுந்தவன் நேராக கள் விற்கும் இடத்துக்குச்சென்று இது வரை குடித்த அளவை விட இரண்டு மடங்கு குடித்தான். போதை தலைக்கேற மயங்கி சரிந்தவனை அளவான போதையில் அங்கிருந்தவர்கள் அவனது குடிசை வீட்டிற்குள் கொண்டு வந்து படுக்க வைத்துச்சென்றனர். மகனின் இந்த நிலைகண்டு அவனது தாய் ருக்கு கண்ணீர் சிந்தினாள்.
அதற்குப்பின் செல்லாளைக்கண்டாலே அவளது பார்வை படாதவாறு அவன் மறைந்து கொள்வதையும், அவளது மன விருப்பத்தை வெளிப்படுத்தியும் புரியாமல் இருப்பதையும் கண்டு வருந்தினாள். ‘கல்லா முள் குத்தியிருச்சுன்னு அம்மா கிட்ட பொய்யாக்கூறி ராசுவ தோள்ல தூக்கி செமக்க வெச்சத அம்மா புரிஞ்ச அளவுக்குங்கூட அவம் புரிஞ்சுக்கிலியே..? அப்பறம் எதுக்கு நடக்க முடிலேன்னு அம்மா போய் சொன்னதும் ஓடி வந்தான்?’ குழப்பத்தில் கவலை கொண்டாள் செல்லாள்.
“அவனுன்னைய சுத்தி சுத்தி வந்தப்ப நீ ஒதுங்கி ஒதுங்கி போனே… இப்ப உனக்கு அவம் பேர்ல ஆச வந்ததுக்கு அப்பறம் அவனென்னடான்னா அப்ப நீ பேச மாட்டேங்கறேன்னு குடிச்சத விட இப்ப எச்சாக்குடிக்கறான். நீ குடிக்க வேண்டாம்னு சத்தியம்பண்ணச்சொன்னப்ப முடியாதுன்னு ஏம்போகோணும்? அப்படீன்னா இப்ப உன்ற பேர்ல அவனுக்கு எள்ளவுங்கூட விருப்பமில்லேன்னு புரிஞ்சு போச்சு….” என தாய் கமலா கூறக்கேட்டதும் “அம்மா…….” என கோபத்தில் கத்தியே விட்டாள் செல்லாள்.
“உங்க ரெண்டு பேர்த்தியும் நெனச்சா எனக்கு பைத்தியமே புடிச்சுப்போகும் போலிருக்குது. பேசாம உனக்கொரு கண்ணாலத்தப்பண்ணி வெச்சாத்தான் எனக்கு நிம்மதி.” என கவலை கொண்டாள் செல்லாளின் தாய் கமலா.
உறவாக இருந்தாலும் சிறுவயதிலிருந்து ராசுவின் சேட்டைகள் செல்லாளுக்கு பிடிக்காது. எதை செய்யக்கூடாது எனக்கூறுகிறோமோ அதையே தான் செய்வான். படிப்பிலும் சரியில்லாமல் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு விட்டான். செல்லாள் அவனிடம் சரியாகப்பேசவில்லையென்றால் அன்று அவளது வீட்டின் மீது இரவில் கல்லெடுத்து வீசி தூங்க விடாமல் செய்வான். தன் மீதுள்ள காதலால் தான் இவ்வாறு செய்கிறான், குடிக்கிறான். தன்னால் அவன் வாழ்க்கை வீணாகக்கூடாது என எண்ணியதால் தான் முள் குத்திய நாடகம் போட்டாள். ஆனால் அந்த நாடகத்தால் பலனேதும் இல்லையென்பதை விட முன்பை விட குடிக்கு ராசு அடிமையானது புரியாத புதிராக இருந்தது செல்லாளுக்கு.
“எருமைய மாடா மாத்துனாலும் மாத்துலாமே தவுத்து என்ற மவன் ராசுவ குடிக்கிறத நிறுத்த வெக்க முடியாது. அவனக்கட்டீட்டு உன்ற வாழ்க்கைய தொலைச்சுக்காதே. வேற மாப்பிள்ள வந்தா பாத்து கண்ணாலம் பண்ணீட்டு சொகமா வாழற வழியப்பாரு. சொல்லிப்போட்டேன் ஆமா.” என ராசுவின் தாய் ருக்குவே வந்து சொன்ன போது செல்லாளால் பதிலேதும் கூற இயலவில்லை.
நான்கு வருடங்களுக்குப்பின்பு பொங்கல் பண்டிகையின் போது ஊரிலுள்ள ஒரு கோவிலில் கைக்குழந்தையை இடுப்பில் வைத்தபடி ராசுவைப்பார்த்த போது அவனது உடல் மிகவும் பலவீனப்பட்டிருந்ததைக்கண்டு அழுதாள் செல்லாள்.
அப்போது அவளிடமிருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு கொஞ்சி விளையாடினான். அதைக்கண்டு அவளது அழுகை மேலும் அதிகரித்தது.
“அழுகாதே” என்றவன் அவளது கண்களை தனது வேட்டியின் தலைப்பில் துடைத்து விட்டான்.
“நான் இப்பவும் உன்ற மேல உசுரையே வெச்சிருக்கறேன். ஆனா குடிச்சுக்குடிச்சு உனக்கு இது மாதிரி ஒரு உசுர கொடுக்கிற தகுதியில்லாதவனாயிட்டேன்” என குழந்தையை தொட்டுக்காட்டிக்கூறிய போது தான் அவன் தான் விரும்பியும் விரும்பாதது போல் ஏன் நடந்து கொண்டான் என்பதை முழுமையாகப்புரிந்து கொண்டாள் செல்லாள்.