அவள்..! அவள்..! அவள்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 6,344 
 

அறிவழகன் என்னை நோக்கி நேராக வந்தான்.

இவன் என் நண்பன். பக்கத்து ஊர்.

ஆறு மாதங்களுக்கு முன் இப்படித்தான் வந்தான். முகம் ரொம்ப வாட்டமாக இருந்தது.

” என்னடா. .? ” என்றேன்.

” எ. ..என் ம. .. மனைவி. .. எ. ..மனைவி. ..” சொல்லி அடுத்து சொல்ல முடியாமல் விசும்பினான்.

” என்னாச்சி. ..? ” எனக்குள் என்னையும் மீறி பதற்றம் தொற்றியது.

” ஓ. … ஓடிட்டா. ..” அழுதான்.

எனக்கு அதிர்ச்சி !!

ஓ. .. ஓடிட்டாளா. ..? ! ” நம்ப முடியாமல் மென்று விழுங்கினேன்.

” அ. .. ஆமாம். எதிர் வீட்டு பையனோடு கள்ளத்தொடர்பு இருந்திருக்கும் போலிருக்கு. எனக்குத் தெரியல. காலையில் எழுந்து பார்த்தேன். அவ இல்லை. படுக்கையில் கடிதம். ” – சொல்லி நீட்டினான்.

கை நடுக்கத்துடன் வாங்கினேன்.

பதற்றத்துடன் பிரித்தேன்.

‘ எனக்கும் எதிர்வீட்டு கணபதிக்கும் காதல். தயவு செய்து எங்களைத் தேடாதீர்கள். பிரிக்காதீர்கள். ! ‘

அன்புடன்

பர்வதம்

நல்ல தெளிவான கையெழுத்துடன் சேதி.

மனம் படபடத்தது.

” பாவி. ..! ” என்னையும் அறியாமல் அலறினேன்.

காரணம். .. அறிவழகன்.

பர்வதத்தை காதலித்தே திருமணத்தை முடித்தான். அவர்கள் சந்தோசமாக குடும்ப நடத்தி எட்டு, பத்து வயதுகளில் பிள்ளைகள். இனி வேண்டவே வேண்டாம் என்று அவளுக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து முடிந்த கதை. இந்த நிலையில் இவள் இன்னொருவன் மேல் காதல் வயப்பட்டு. !!…????

அவளைக் கூட்டிக் கொண்டு சென்றவன் திருமணம் ஆகாதவன். இவளை முறைப்படி திருமணம் செய்து கொண்டாலும், வைத்துக் கொண்டாலும் வாரிசு கிடையாது.

பிள்ளைகளே வேணாம். தொல்லை என்று முடிவெடுத்து ஓடிவிட்டார்களா. ..?! காதல் என்பது ஒருமுறைதான் வரும் என்பது மிகவும் முட்டாள்தனமான தவறு. அது எந்த வயதில் எப்படி வேண்டுமானாலும் வரலாம். இது காதலா . ..?! இருக்க வாய்ப்பே இல்லை. காதல் வேசம், வேகத்தில் காமம். ! – இப்படி நிறைய யோசித்தேன்.

” இப்போ என்ன பண்றது. ..? அடுத்து என்ன யோசனை ? ” – அவனையேக் கேட்டேன்.

” அவள் போனதுகூட எனக்கு கவலை இல்லை. பிள்ளைங்களுக்குத் தெரிஞ்சா அதுங்க மனசு பாதிக்கும். அம்மா எங்கேன்னு கேட்கும். இல்லை. … தாயைப் பற்றி ஒரு தவறு, தாழ்வான எண்ணம் வந்து வெறுக்கும். எப்படி சமாளிக்கப் போறேனோ. .? !” அழுதான்.

சென்றான்.

இப்போது எதற்காக வருகிறான். ..? ! எனக்குள் ஓடியது.

அவன் என் அருகில் வந்ததும். ..

” அறிவு ! ஒரு சேதி. ” என்றான்.

” என்ன. .? ” ஏறிட்டேன்.

” ஒரு சின்ன உதவி ”

” சொல்லு. ..? ”

” பக்கத்து ஊர்ல பர்வதம் இருக்கா. ..! ”

” உன் முன்னாள் மனைவியா. ..? ”

” ஆமாம் ! ”

” அழைச்சுப் போனவனுக்கு ஆசை தீர்ந்து போச்சு. கை விட்டுட்டானா. ..? ”

” அ. .. ஆமாம். அப்படித்தான் தெரியுது. ”

” தப்பு செய்தவள் தண்டனை அனுபவிக்கட்டும். ! ”

” அ. .. அது இல்ல. அவளை நீ கூட்டி வரனும். ..”

” எதுக்கு. ..? ” கேள்விக்குறியாய் அவனைப் பார்த்தேன்.

” புள்ளைங்களுக்காக அவள் வேணும். ..”

” புள்ளைங்க மேல சாக்கு வச்சு. .. உனக்குத் தேவையா. .? ”

” சத்தியமா இல்லே. அவள் வந்தாலும் அவள் மேல் என் கை படாது. தொடமாட்டேன். ”

” அப்புறம் எதுக்கு அவள். …”

”…………………………….”

” தொடாதது நீ அவளுக்குக் கொடுக்கும் தண்டனையா. .? ”

” அப்படியும் வெச்சுக்கலாம். அவன் என் மனைவி என்கிறதை மறந்து பல நாட்களாச்சு. ”

” சரி. அவள் வரலைன்னா. ..? ”

” விதி ! ” நொந்து சொன்னான்.

புறப்பட்டேன்.

அவன் சொன்ன ஊரில் ஆளைத் தேடிப் பிடித்தேன்.

” ஒரு ஒரு ஆள் குடிசையில் சில பாத்திரம் பண்டங்களுடன் அவள் இருந்தாள். வறுமை ! குடிசை முழுக்க கோடி கட்டி பறந்தது.

என்னைப் பார்த்ததும் பம்மி தலை குனிந்து. ….

” அறிவழகன் மன்னிக்கிறான் ! ” விசயத்தைச் சொன்னேன்.

” வேணாம்ங்க. புள்ளைங்க மதிக்காது. என்னை மன்னிச்சுடுங்க. ..” கலங்கிய கண்களுடன் கை கூப்பினாள். !!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *