காதல் ரேடியோ!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 26, 2013
பார்வையிட்டோர்: 18,187 
 

கடைவாசலில் அந்தப் பெரியவர் வந்து நிற்பது தெரிந்தது. அவர் மேல்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்வதையும் கவனித்தேன்.

ரிப்பேருக்கு வந்த ரேடியோ ஒன்றை ஊன்றிக் கவனிப்பது போல நடிக்க ஆரம்பித்தேன்.

ரேடியோ, ட்ரான்சிஸ்டர், டூஇன்ஒன், டி.வி. போன்ற எலெக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சரி செய்யும் கடை நடத்தி வருகிறேன்.

போனமாதம்தான் இந்தக் கிழவர் என் கடைக்கு வந்தார். வெள்ளை வேட்டி, சட்டையில் ஐந்தரை அடி உயரத்தில் இருந்தார். எழுபது வயது இருக்கலாம். வயதின் காரணமாகவோ, இல்லை, உடலின் தளர்வு காரணத்திலோ, இலேசாகக் கூன் போட்டிருந்தார்.

கையில் கொண்டு வந்திருந்த ட்ரான்சிஸ்டரை என் முன் உள்ள டேபிளில் வைத்தார்.

“தம்பி, இது பாட மாட்டேங்குது. சரி செஞ்சுத் தந்தால் புண்ணியமாய்ப் போகும்.”

நான் ட்ரான்சிஸ்டரை எடுத்துப் பார்த்தேன். இரண்டு தலைமுறைக்கு முந்தைய மாடல்.

“பெரியவரே, இது ரொம்ப பழைய மாடல். ஸ்பேர்பார்ட்ஸ் கிடைப்பது அரிதாச்சே” என்றேன்.

சற்று நேரம் ட்ரான்சிஸ்டரை வெறித்துப் பார்த்தார்.

“கொஞ்ச நாள் ஆனாலும் பரவாயில்லை” என்றார்.

“சரி, அப்புறம் வாங்க. முயற்சி பண்றேன்” என்றேன், நம்பிக்கையில்லாமல்.

ஆனால், அவர் முகம் சற்று மலர்ந்தது.

அதற்குப் பிறகு, இந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட ஆறேழுமுறை அலைந்துவிட்டார்.

அவர் மேல் பரிதாபப்பட்டு, பழைய சாமான் கடைகளில் நானும் கேட்டுப் பார்த்தேன். பிரயோஜனமில்லை!

எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ளவும் மறுக்கிறார்.
உங்களிடமே இருக்கட்டும் தம்பி. பார்த்துப்ப ண்ணிக் கொடுங்க” என்று அந்தப் பழைய ட்ரான்சிஸ்டரை என் தலையில் கட்டிவிட்டார்.

கடன்காரன் போல அவர் வருகை அமைய, எனக்குள் அவ்வப்போது கோபம் முளைக்கும். அவர் வயதையும், முகத்தையும் பார்த்த பிறகு, பாவம் எனத்தோன்றும்.

இதோ இன்றும், என் எதிரே வந்து நிற்கிறார். அவர் பார்வை, என் பின்னே சென்றது. அலமாரியில் இரண்டாவதுதட்டில் இருக்கும் அவரின் ட்ரான்சிஸ்டரில் சற்று நேரம் நிலைத்தது.

“தம்பி…” என்றார் மெதுவாய்.

“உட்காருங்க…” என்றேன்.

சற்று நேரம், திறந்து கிடந்த ரேடியோவை நோண்டினேன். அந்த நேரம் பார்த்து மின்சாரம் நின்றது. இனி ஒரு மணி நேரம் ஆகும் திரும்பி வர.

வேறு வழியில்லை! பெரியவருடன் தான் பேசியாக வேண்டும்.
எதிரே அமர்ந்திருந்த பெரியவரை நோக்கினேன்.

“சொல்லுங்க பெரியவரே…”

“இன்னும் உதிரிச்சாமான் கிடைக்கலே போலிருக்கு” என்றார்.

அவர் குரலில் இருந்த ஏக்கம் என்னைச் சங்கடப் படுத்தியது.

“புரிஞ்சுக்குங்க பெரியவரே! மிகவும் பழைய மாடல் இது. உதிரிப்பாகம் கிடைக்கிறது சிரமம். செலவும் அதிகமாகும். புதுசாய் வாங்கறதுதான் உத்தமம். இப்போதான் அம்பது ரூபாயிலிருந்து ட்ரான்சிஸ்டர் கிடைக்குதே. வாங்கித்தரவா?”

பெரியவர் தலை குனிந்தபடி இருந்தார்.

“இது என் பொண்டாட்டியோட உசிரு,” என்றார் தழுதழுப்பாய்.

நான் திகைத்துப் போய்ப் பார்த்தேன்.

“எனக்கும், தனலெட்சுமிக்கும் கல்யாணமாகி, ஏழெட்டு வருஷமாய் குழந்தையே இல்லை. அதனாலே வெளியே போகவர சங்கடப்படுவா! அப்போதே இந்த ட்ரான்சிஸ்டரை நானூறு ரூபாய் கொடுத்து வாங்கினேன், அவளுக்காக.”
ட்ரான்சிஸ்டர் மார்க்கெட்டுக்கு வந்த சமயம் அது என்று எனக்குப் புரிந்தது.

“வீட்டுலே எப்பவும் இது பாடிக்கிட்டே இருக்கும். நான் வேலைக்குப் போனப் புறம், தனத்துக்குத் துணையே இதுதான். இதோடவே சேர்ந்து பாடுவா, சிரிப்பா! தம்பி, தனம் பாடி நீங்க கேட்டதில்லையே. அப்படியே ‘ஜிக்கி’ குரல்தான்.”

பெரியவர் தமது இளமை துள்ளியபருவத்திலேயே பயணித்துக் கொண்டிருப்பது புரிந்தது.

“அவ பாடும் போது, நானும் சேர்ந்து பாடுவேன். அவ ‘ஜிக்கி’ன்னா, நான் ‘ராஜா’! டூயட் பாடிப்பாடி, மனசு மிதக்க, ஒருவரை ஒருவர் விழிகளால் பருகி… அன்னிக்கெல்லாம் ஒரேரொமான்ஸ்தான் போங்க!”

பெரியவர் வெட்கப்படுவதை வியப்புடன் பார்த்தேன். முதுமையும்அழகுதான்! பெரியவரும், முகம் தெரியாத அவர் மனைவியும் டூயட் பாடுவது போலக் கற்பனை ஓடியது எனக்குள்.

‘குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குடி இருக்க நான் வர வேண்டும்’

எனக்குள் டூயட் பாட்டு ஒலிக்க, சிரித்து விட்டேன்.
கண்மூடி, பரவசமாய்ப் பேசிக் கொண்டிருந்தவர், சட்டென குலுங்கி அழ ஆரம்பித்தார்.

அவர் அருகே சென்று, பெரியவர் தோளை ஆறுதலாய்ப் பிடித்துக் கொண்டேன்.

கொஞ்சம் சமாதானம்ஆனதும் சொன்னார்.

போன வருஷம் என் தனம் என்னை விட்டுப் போயிட்டா, நிரந்தரமாய். அவ போன பிறகு, எனக்கு இந்த ட்ரான்சிஸ்டரே துணை. இது பக்கத்திலே இருக்கறப்ப, பாடறப்ப, பேசறப்போ, தனலெட்சுமியே பேசற மாதிரி, பாடற மாதிரி ஒரு பிரமை.”
அவர் பார்வை அலமாரியில் இருந்த அவரின் ட்ரான்சிஸ்டர் மேலேயே பதிந்திருந்தது.

ஏதோ தோன்ற, நான் அலமாரியிலிருந்த ட்ரான்சிஸ்டரை எடுத்து, அவர் அருகே கொண்டு வந்தேன்.

ஆசையுடன் அதைத் தடவினார்.

“இதைப் பாருங்க தம்பி” என்றார்.

அவர் சுட்டிக் காட்டிய இடத்தில், ட்ரான்சிஸ்டர் மேற்புறம் ‘தனம் – ராமசாமி’ என்று கம்பியால் கிறுக்கியிருந்தது.

“ஹேர் பின்னை வைத்து தனம் தான்எழுதினா. ட்ரான்சிஸ்டர், தனம், நான் என்ற முக்கோண உறவில், தனம் இப்ப இல்லை! இதுவும் இல்லேன்னா, நான் எப்படி ஜீவிப்பேன்!” என்றார், பரிதாபமான குரலில்.

அன்று வீடு திரும்பியதும் என்மனைவியிடம் சொன்னேன்.

“ஒரு பெரியவரோட ரொமான்ஸ் கதை கேளேன்.” கண்கள் விரிய கேட்ட என் மனைவி, ஆதர்சதம்பதிங்க போல” என்றாள்.

“இதுல இந்தட்ரான் சிஸ்டர் சென்டிமென்ட் வேற” என்றேன்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான சென்டிமென்ட். யாருக்குத்தான் இல்லை,” என்றாள் பட்டென.

“அப்ப, உனக்கும் இருக்கா?”

தலையசைத்தாள்.

“சொன்னால் சிரிக்கக் கூடாது,” என்ற படி பீரோவைத் திறந்து என் சட்டை ஒன்றை எடுத்துக் காண்பித்தாள். எங்களுக்குத் திருமணம் ஆனதும் வந்த என் பிறந்தநாளுக்கு, அவள் தேர்வு செய்த சந்தனக் கலர்சட்டை அது.

“நீங்க வீட்டில் இல்லாத போது, வெளியூர் எங்கேயாவது போன போது, இதை எடுத்துப் போட்டுப்பேன். அப்பல்லாம், என் கூடவே நீங்க இருக்கற மாதிரி ஒரு உணர்வும், பரவசமும் ஏற்படும்” என்றாள்.

வியப்புடன் அவளைப் பார்த்தேன்.

பெரியவரின் கதையா, இல்லை, என் மனைவியின் சிபாரிசா தெரியவில்லை. அந்த ட்ரான்சிஸ்டரைப் பாடவைத்தே தீருவது என்று முடிவு செய்தேன்.

டவுனில் முனைப்புடன் அலைந்து, திரிந்து கிடைத்த உதிரிப்பாகங்களைச் சேகரித்து, எனது இத்தனை வருட அனுபவத்தையும் சேர்த்து, ட்ரான்சிஸ்டருக்கு உயிர் கொடுத்த பிரம்மாவானேன். இரண்டு நாள் வேலை, அதிக அலைச்சல், செலவு என்றாலும், ட்ரான்சிஸ்டர் பாட ஆரம்பித்ததும், கைதட்டி ஆரவாரித்தேன் குழந்தைபோல.

பெரியவரின் வருகையை எதிர்பார்த்து, நானும், ட்ரான்சிஸ்டரும் காத்திருந்தோம். அவரைக் காணவில்லை.

மனசு திக்திக்கென்றது. பெரியவரின் தளர்ந்த தேகம் மனத்தில் ஓட, விபரீத கற்பனைகள் தோன்றின. கடவுளே அவர் உயிருடன் இருக்கவேண்டும்!

அவர் பெயர் ராமசாமி என்பதும், சீனிவாச நகரில் வசிப்பதும் தெரியும். முழு விலாசம் என்னிடம் இல்லை. காத்திருக்க பொறுமை இல்லாமல், நானே அவரைத் தேடிக் கிளம்பினேன்.
சீனிவாச நகரில் எந்தத் தெருவில் அவரைத் தேடுவது என்று குழம்பியபோது, ரேடியோ ரிப்பேர் கடை ஒன்று கண்ணில்பட்டது.
விசாரித்தேன்.

“அந்த ரேடியோ பெரியவரா? நம்பகடையிலேதான் முதல்ல ரிப்பேருக்குக் கொடுத்தார். சாமான் கிடைக்கலே. திருப்பிக் கொடுத்துட்டேன். இதே தெருவிலே பிள்ளையார் கோயிலுக்கு அடுத்த வீடு. ஓட்டுவீடாய் இருக்கும்,” என்றார் கடைக்காரர்.

மனத்தில் பரபரப்பு. கால்களில் ஒட்டிக் கொள்ள, வேகமாய் நடந்தேன்.

அரை கிரவுண்ட் நிலத்தில், சொப்பு மாதிரி இருந்தது அந்த வீடு.
வாசல்க தவைத் தொட்டதும் திறந்து கொண்டது. உள்ளே நிசப்தம்.

முன் ஹாலிலேயே, கட்டிலில் பெரியவர் படுத்திருப்பது கண்டேன்.

அருகில் போய் ‘ஐயா’ என்றேன்.

மெல்ல கண் திறந்தார்.

“யாரு? ரெண்டு, மூணு நாளாய்க் காய்ச்சல். கண்ணே திறக்க முடியலே. யாரு நீங்க” என்றார் தீனமான குரலில்.

அருகிலிருந்த பிளக் பாயின்டில், ட்ரான்சிஸ்டர் ப்ளக்கை செருகி, ஸ்விட்சைத் தட்டினேன்.

ட்ரான்சிஸ்டர் பாட ஆரம்பித்தது.

பெரியவர் உடம்பில் மெல்லிய அதிர்வு.

“தனம்…தனலெட்சுமி…”

பரவசமாய் அழைத்தபடி எழ முயன்றார் பெரியவர்.

ஏனோ, என் கண்களில் நீர் பெருகியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *