அவன் தன் கையிலிருந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறைப் படித்தான்.
அன்பு வசந்திற்கு வணக்கம்.
நான் தங்களை நேரில் வந்து அழைக்க அருகதையற்றவள் நினைப்பில் இந்த மடல் அழைப்பு. நம் மகன் அஜய்க்குத்; திருமணம். இதுவரை என்னோடு வளர்ந்த பிள்ளை அப்பா வந்தால்தான் தாலி கட்டுவேன் என்று அடம் பிடிக்கிறான். அவனுக்கு அம்மா அப்பா சேர்ந்து ஆசீர்வாதம் செய்வதில் விருப்பம்போல. அதனால் இந்த முரண்டு. மகன் ஆசையை நிறைவேற்ற அவனுக்காக என்னை மன்னித்து நடந்ததை மறந்து திருமணத்திற்கு வர வேண்டுமென்று அன்போடு அழைக்கிறேன்.
திருமண அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.
நன்றி
இப்படிக்கு
உங்கள்
ரேகா
தொடர்பு எண்: 8798653456
வசந்த் கடிதத்தை மடித்து விட்டு…அழைப்பிதழில் வசந்த் – ரேகா ஆகியோரின் மகனுமாகிய வரியை ஆழந்து படித்து விட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தான்.
‘யானை தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொண்டது.!’ – நினைத்து அப்படியே பழசு மனதில் படமாக விரிய விட்டம் வெறித்தான்.
என்றைக்கும்போல் அன்றைக்கும் வசந்த் அலுவலகம் விட்டு பேருந்தில் ஏறினான். எப்போதும்போல் கூட்டம். எல்லோரையும் போல் இவனும் முண்டியடித்து ஏறினான். முன்னால் அப்படி ஏறிய பெண்ணின் தலையில் காலையில் சூடி மலையில் வாடி இருந்த மல்லிகை சரம் நெரிசலில் உதிர்ந்தது. அவளுக்குப் பின்னால் ஏறியவர்கள் பின்னால் சிதறியது. இவன் பாக்கெட்டிற்குள்ளும் ஒன்றிரண்டு புகுந்திருக்கும் போல.
வீடு வந்து அலுவலக உடைகளைக் களைந்தான். மகன் அஜய்க்கு அப்போது இண்டு வயது. மனைவி, குழந்தையோடு கொஞ்சினான். மகிழ்ந்தான். சாப்பிட்டான், உறங்கினான். காலை அலுவலகம் கிளம்பினான்.
மாலை பூகம்பம்.
அலுவலகம் விட்டு வழக்கம் போல் வீட்டிற்குள் நுழைந்ததான். ரேகா சோபாவில் அமர்ந்திருந்தாள். முகத்தில் மலர்ச்சி இல்லை தூக்கல். கோபத்திற்கான மௌனம்.
”என்ன ?” விபரம் புரியாமல் அருகில் அமர்ந்தான்.
”எவகூட எத்தினி நாளாய்ப் பழக்கம் ?” வார்த்தைகள் சூடாய் வந்தது.
”புரியலை ?!” விழித்தான்.
”உங்க சட்டைப்பையில மல்லிகைப் பூ!”
”ப்பூ ! இவ்வளவுதானா ?” புன்னகைத்து நடப்பைச் சொன்னான்.
”நம்பமாட்டேன்.!”
”ஹே ! நம்பமாட்டேன்னா எப்படி நம்ப வைக்கிறது?”
”எனக்குத் துரோகம் பண்றீங்க?..”
”இல்லை ரேகா. என்னை நம்பு.”
”அந்த நம்பிக்கையிலதான் என்னை நல்லா ஏமாத்தி மோசம் பண்ணி இருக்கீங்க…” குரல் அடைத்தது.
”வீண் கற்பனையெல்லாம் வேணாம் ரேகா. நான் உன்னைத் தவிர யாரையும் நினைக்காத யோக்கியன் !” சொல்லி மனைவியை அணைத்து சமாதானப்படுத்தினான்.
சந்தேகம் என்பது ஒரு ஆலம் வித்து. விழுந்தால் வேர்விட்டு மரமாகி கட்டிடத்தை உடைக்கும்.
இதை உறுதி செய்வது போல் அடுத்த நாள் நிகழ்ச்சி.
அன்றைக்கு அலுவலகத்தில் அதிகப்படியான வேலை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனைவியிடம் விசயத்தையும் சொல்லிவிட்டான். முடித்துத் திரும்பும்போது பேருந்தில் நண்பனுடன் பயணம். அவனிடம் சில்லரை இல்லாததால் சேர்த்து டிக்கெட் எடுக்கும் நிலை. எடுத்தான். இருவரும் ஒரே நிறுத்தில் இறங்கி பிரிந்தார்கள்.
காலை.
அவளுக்கு நேற்றைய சந்தேகம். எழுந்ததும் இவன் பாக்கெட்டை துழாவி இருப்பாள் போல. வசந்த் எழுந்து பாத்ரூமெல்லாம் முடித்துத் திரும்பியவன் முகத்துக்கு எதிரே இரு டிக்கெட்டுகளைக் காட்டி….
”நேத்திக்கு மல்லிப்பூ. இன்னைக்கு ரெண்டு டிக்கெட். இதுக்கு என்ன அர்த்தம் ?” குரலில் கொஞ்சமும் ஈரப்பதமில்லாமல் கேட்டாள்.
”சந்தேகம் வேணாம். நண்பனுக்கு எடுத்தேன்.”
”இல்லே.! எவகூடயோ கூத்தடிச்சுட்டு வந்து அலுவலகத்துல வேலை, நண்பனுக்கு டிக்கெட் எடுத்தேன்னு புளுகல்.” சந்தேகம் வேர் விட்டதற்கடையாளமாய் வார்த்தைகள் வந்து விழுந்தது.
”உனக்கு சந்தேகப்புத்தி அதிகமாய்ப் போச்;சு ரேகா. அவன் நம்பரைப் போட்டுத் தர்றேன். உண்மையா கேட்டுக்கோ.”
”வேணாம். நான் புருசன்மேல சந்தேகப்படுறவள் என்கிற அசிங்கம் வேணாம்;. அவமானம்!”
”அப்போ நான் சொல்றதை நம்பு.”
”அது நேத்தோட போச்சு”
அதிர்ந்தான்.
முகம் தூக்கல். மௌனமாய் சமையல், சாப்பாடு….மாலையும் தொடர….
‘தாம்பத்தியம் கணவன் மனைவிக்குள் இருக்கும் மனக்கசப்பைப் போக்கும் நல்ல மருந்து!’ நினைத்து படுக்கையில் தொட்டான்.
”தொடாதீங்க. அருவருப்பா இருக்கு.” வெறுப்பாய் உமிழ்ந்து நெருப்பாய்க் கொட்டி தொட்ட கையை வெடுக்கென்று உதறித் தள்ளி திரும்பி தூங்கும் மகனை அணைத்துக் கொண்டாள்.
சுரீர் அவமானம் ! வசந்திற்குள் குபீரென்று கோபம் கொப்பளித்தது. அடக்கினான்.
காலையில் அவர்கள் பேசவில்லை. இரண்டு நாட்களில் இவன் தணிந்து பேச்சுக் கொடுத்தாலும் ரேகா உம்.
எப்படி சமாதானப்படுத்த, சந்தேகம் தீர்க்க…. ? – சதா இதே சிந்தனை. வசந்திற்கு மனமும் முகமும் சரி இல்லை.
இரண்டு நாளில் ”என்னடா ?” அலுவலகத்தில் நண்பன் விசாரித்தான்
விபரம் சொன்னான்.
கேட்ட அவன், ”இது தூசு மச்சி! வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிற தாக்கம். பொம்பளைங்க இப்படி வீண் சந்தேகம் அது இதுன்னு ஒன்னுகிடக்க ஒன்னு நினைச்சி நடந்துக்குவாளுங்க. ஓட்டல் பீச், பூங்கா அழைச்சுப் போய் குஷிப்படுத்து. சரியாப்போகும்.” சொன்னான்.
அதுவும் சரிதானென்று சனிக்கிழமை கடற்கரைக்குச் செல்ல….
அங்கே பார்த்த அலுவலக ஊழியையிடம் அலுவல் சம்பந்தமாக மனைவி மக்களை விட்டு…கொஞ்சம் தனியே தனித்துப் பேச வேண்டிய சூழல்.
கெட்டது குடி.!
”இவதானா அந்த சதிகாரி. என் வாழ்க்கையைக் கெடுக்கிற கோடாளி !” அங்கேயே தீ பற்றிக்கொண்டு மளமளவென்று பிடித்து கொழுந்து விட்டு எரிய…. தினம் சண்டை, சச்சரவு,கண்ணீர்.
வீடு நகரமாகிப் போக…..முத்தாய்ப்பாக…..ஒருநாள்…
”உனக்கு என்னதான்டி பிரச்சனை.?” கொதித்தான்.
”நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன்.”
நான்கு நாட்கள் இருந்தால் சண்டை, சச்சரவு, சந்தேகம், கோபம் எல்லாவற்றையும் பெற்றவர்கள் தணித்து அனுப்புவார்கள் நினைப்பில்.. ”சரி. போ.” அனுப்பினான்.
ஒரு வாரத்தில் வந்தது விவாகரத்து நோட்டீஸ்.
பதறி உடன் மாமனார் வீட்டிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.
”மாப்பிள்ளை ! என் பொண்ணு பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருக்காள். அவள் மன அழுத்த நோயைப் போக்க தற்போதைக்கு விவாகரத்துதான் வழி. என்னை மன்னிச்சுக்கோங்க.” முடித்தார்.
வசந்த் நினைவு கலைந்து நிமிர்ந்தான்.
திருமணப்பத்திரிக்கையில் மணமகளோடு மகன் இவனைப் போலஅழகாகவே இருந்தான்.
‘முப்பதாண்டு கால பிரிவில் மனைவி மகன் தொடர்பே இல்லை. எப்படி இப்படி கடிதம். என்ன துணிச்சலில் கடிதம். எப்படி செல்ல, ஆசீர்வதிக்க ?
தொடர்பு எண்ணைத் தொடர்பு கொண்டு வரவில்லை என்று சொன்னால் என்ன ?
கணவன் மனைவி இல்லை என்றானபின் பிள்ளை தனக்குப் பிறந்தவன் இல்லையென்றாகி விடுமா?
தம்பதிகளுக்குள்தான் சண்டை, பிரிவு,முறிவு. பிள்ளைக்கு என்ன பிரச்சனை? அவன் என்ன தவறு செய்தான் தண்டிக்க ? மனசு மளுக்கென்று முறிந்தது. செல்ல வேண்டும் சொன்னது.
சென்றால் வாசலில் யார், எப்படி வரவேற்பார்கள். எப்படி வரவேற்றால் என்ன… சென்று பார்ப்பதில் தவறில்லை. அழைப்பு வராமல் செல்லவில்லை. மரியாதை இருக்கும்.!’ மனதில் தெளிவு பிறந்தது.
திருமண நாள்.
மண்டபத்தில் வரவேற்பு பலமாக இருந்தது. தாயும் பிள்ளையும் வசந்த் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருந்திருப்பார்கள் போல. காலடி எடுத்து வைத்ததுமே இருவரும் ஓடி வந்தார்கள்.
வாங்கப்பா..! அஜய் அப்பன் கையை ஆசையாய்ப் பிடித்து வரவேற்றான். ரேகாவிற்கு நரை விழுந்து….கொஞ்சமாய் சதை விழுந்து அழகான அம்மா. அவளுக்கும் கணவனைப் பார்க்க மலர்ச்சி.
தனி அறை. தனி கவனிப்பு.
மனமொத்த கணவன் மனைவி போல் இருவரும் சேர்ந்து நின்றே திருமணம் முடித்தார்கள்.
எல்லா சாஸ்திர சம்பிராயங்களும் முடிந்து….வசந்த் விடைபெற்று வெளியே வர….
வழியனுப்ப பின்னால் வந்த ரேகா….
”உங்களை தனிமரம் ஆக்கி தண்டிச்சுட்டேன். நீங்க விரும்பினா நாம சேர்ந்து வாழலாம்.” மெல்ல சொன்னாள்.
”முப்பது வருச காலமாய் என் மறுமணம் இல்லா தனி வாழ்க்கைதான் என் யோக்கியத்தை நிரூபிச்சி உன்னை இந்த முடிவுக்குக் கொண்டு வந்து இருக்குன்னு நெனைக்கிறேன். அதாவது உன் சந்தேகத்தை சரியாக்க நான் முப்பது வருசமாய் பாடு பட்டிருக்கேன் என்பதுதான் சரியான உண்மை. உன் உள்ளம் தெளிவானதுக்கு நன்றி. அதுவே எனக்கு சந்தோசம். ஆத்மதிருப்தி போதும். வர்றேன்.” சொல்லி நகர்ந்தான் வசந்த்.
ரேகா சிலையாய் நின்றாள்.