கற்றுக் கொள்வதற்கு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 9,634 
 
 

மூன்றுவார விடுமுறை கிடைத்தது. வியட்நாம் போவதற்கு விரும்பினேன். அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த பின்பு புறப்படும் முதல் பயணம்.

வியட்நாம் – வல்லரசான அமெரிக்காவை நடுங்க வைத்து நிமிர்ந்த தேசம்.

ஆனால் நண்பன் ‘வான் மான் நூஜ்ஜின்’ அப்படியல்ல; எப்போதுமே எங்களைச் சிரிக்க வைப்பான். ஒவ்வொரு ஈஸ்டர் விடுமுறையின் போதும் அவனது அம்மாவிற்குச் சுகமில்லாமல் வந்துவிடும். “அம்மாவுக்குச் சுகமில்லை!” அவனும் லீவைப் போட்டுவிட்டு அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டு தனது தாய்நாடான வியட்நாமிற்குப் போய்விடுவான். இந்தமுறை நானும் அவனுடன் கூடச் சென்றேன். போனவிடத்தில் அவனைப் பற்றிய ஓர் அதிர்ச்சியான செய்தி என்னை மலைக்க வைத்தது.

“அம்மாவின் கடைசிக்காலம். கட்டாயம் பக்கத்தில் இருக்க வேண்டும்” இப்படித்தான் நூஜ்ஜின் சொல்லுவான். நூஜ்ஜின் என்பது அவனது குடும்பப் பெயர். அதற்காக ‘வான்’ என்றோ ‘மான்’ என்றோ கூப்பிடலாமா? நூஜ்ஜின் சற்றே குட்டையான உருவமுடையவன். சப்பை மூக்குக் கொண்டவன். எப்போதுமே சின்னத்தாடி ஒன்று வைத்திருப்பான். சமயங்களில் அதற்கு மையும் தீட்டிக் கொள்ளுவான். அவன் கார் உற்பத்தித் தொழிற்சாலையில் பதினாறு வருடங்களுக்கும் மேலாக வேலை செய்கின்றான். நான் கடந்த நாலு வருடங்களாக வேலை செய்து வருகின்றேன். அம்மாவிற்கு எண்பத்தியேழு வயதாகின்றது எனவும் தொடர்ந்து படுத்த படுக்கையாக இருக்கின்றா என்றும் நூஜ்ஜின் கவலையுடன் சொல்லுவான். இதை நான் விளங்கிக் கொள்ள மிகவும் கஷ்டப்பட்டுப் போனேன். அவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகளை விளங்கிக் கொள்வது மிகவும் கடினம். ‘பிறதர்’ என்பதை ‘பிறடர்’ என்பான். ‘அமெரிக்கா’ என்பதை ‘மேரிக்கா’ என்பான்.

நீண்ட நாட்களாக வேலை செய்பவர்களுக்குக் கொடுக்கப்படும் ‘லோங் சேர்விஸ் லீவை’ பகுதி பகுதியாக எடுப்பான் நூஜ்ஜின். வருடத்திற்கு குறைந்தது இரண்டு தடவையாவது தாய்நாடு போய்விடுவான். இதுவரை காலமும் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த லீவை, அவனுடன் கரைப்பது என்று முடிவு எடுத்தேன்.

நூஜ்ஜினிற்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள். மனைவி எங்கோ ‘றெஸ்ற்ரோறன்ற்’றில் வேலை செய்வதாகச் சொல்லுவான். அவனிற்கு ‘ஹோச்சிமின் சிற்ரியில்’ பெரியதொரு வீடு வளவு இருக்கின்றது. அவுஸ்திரேலியாவின் மதிப்பீட்டில் எட்டு இலட்சம் தேறும் என்பான். அதை வாடகைக்கு விட்டிருப்பதாகச் சொன்னான்.

அவுஸ்திரேலியாவில் எந்த ஊரில் வசிப்பவர்களுக்கும், குறைந்தது இரண்டு அல்லது மூன்று இலவச ‘லோக்கல் பேப்பர்கள்’ வாரமொருமுறை கிடைக்கும். அதைப் பிரித்துப் படிப்பவர்களுக்கு ‘ஆஸ்மா வரும்’ என்ற செய்தியைத் தவிர ஏனைய செய்திகள் எல்லாம் அதில் இருக்கும். குறைந்தது அந்தப் பேப்பரைப் படித்து முடிப்பதற்குள் பத்துப் பதினைந்து முறையாதல் தும்மல் வராவிடில், அவர் அந்தப் பேப்பரை முழுமையாகப் படிக்கவில்லை என்பது அர்த்தமாகும். இத்தகைய குணாதிசயங்கள் கொண்ட பேப்பரினால், அவித்த ‘ஒக்ரா’ எனப்படும் கிழங்கை (எங்கள் ஊரில் சீனி வத்தாழங்கிழங்கு) காற்சட்டைப் பொக்கற்றுக்குள் வைத்து அடிக்கடி வேலை செய்யுமிடத்தில் சாப்பிடுவான் நூஜ்ஜின். அடிக்கடி அதைச் சாப்பிடுவதால் ஒருவித நாற்றத்தில் கீழ்வாணமும் விடுவான். ‘எங்கள் இடத்தில் இதைப் புவர் பீப்பிள்தான் சாப்பிடுவினம்’ என்று எனது சீன நண்பன் சொல்லுவான். அவன் ‘புவர் பீப்பிள்’ என்று சொல்லும் நளினத்தில் இருந்தே அவனது நாட்டு ஏழைமக்கள் எப்படி இருப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தொழிற்சாலை றேடியோவில் எப்பொழுதும் ஆங்கிலப் பாடல்கள் பாடியபடி இருக்கும். குஜாலாக இருக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் நூஜ்ஜின் ‘வேற்றிக்கலாக’ ஆசனத்தை உயர்த்தித் தாழ்த்தி ஆடுவதைப் பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கும். நாங்கள் ‘ரொயிலற்’ போவற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவுவோம். நூஜ்ஜின் அப்படியல்ல. கையில் கிளவ்ஸ் போட்டிருக்கும்போது கையை ஏன் கழுவ வேண்டும் என்பது அவன் வாதம்.

இரவு நேரத்தில் தொழிற்சாலையைத் துப்பரவு செய்ய ஒப்பந்த அடிப்படையில் வருபவர்களில் ஒரு நாற்பது நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் இருந்தாள். அவளை காட்டி ‘மை கேர்ள் ஃபிரண்ட்’ என்பான். ‘நீ போன கிழமை இன்னொருத்தியைக் காட்டி மை கேர்ள் ஃபிரண்ட் என்றாயே’ என்று கேட்டால், ‘ஐ லைக் எனி கேர்ள்ஸ்’ என்பான். விசித்திரப்பிறவி அவன். ‘வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பதை நடைமுறைப் படுத்த வந்தவனாகவே அவனை நான் நினைத்தேன்.

சிங்கப்பூரினூடாகச் சென்ற விமானம் ‘ஹோச்சிமின் சிற்றி’ எயாப்போட்டில் தரையிறங்கியதும் எங்களுக்காக ஒருவன் காருடன் காத்திருந்தான். அவனும் நூஜ்ஜினும் தமது மொழியில் ஏதோ பேசிக் கொண்டார்கள். கார் நூஜ்ஜினின் தாயாரின் வீட்டை நோக்கிப் போனது. பென்னாம் பெரிய வீடு. முகப்பில் அவனது தந்தையாரின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. வீட்டிற்கு வந்ததும் முதலில் அம்மாவைப் பார்க்க ஓடோடிப் போனான் நூஜ்ஜின். அவனின் பின்னாலே மனைவியும் பிள்ளைகளும் கூட விரைந்தார்கள். அவனது வருகையின் சத்தம் அறிந்து தாய் படுக்கையிலிருந்து எழுந்து கொண்டாள். ஒடிந்து விழுமாப் போன்ற தேகம். முதுகு கூனி கழுத்து நிரந்தரமாகக் கவிழ்ந்து கிடந்தது. “என்னடா மோனை எப்பிடி இருக்கிறாய்?” எண்டதுமாப்போல் தனது பாஷையில் ஏதோ சொல்லிக் கொண்டாள். அவன் அம்மாவிற்காகக் கொண்டுவந்த பொருட்களை அவளது படுக்கை ‘பெட் சீற்’றில் பரப்பினான். எண்பத்தி ஏழு வயதுடைய கிழவி ஐம்பத்தி மூன்று வயதுடைய தனது மகனை வாஞ்சையுடன் கட்டித் தழுவிய அந்தக்காட்சி என் மனதை நெகிழ வைத்தது. அவனது துணையுடன் கட்டிலிலிருந்து கீழிறங்கினாள் அவள். மருமகளையும் பேரப்பிள்ளைகளையும் கட்டித் தழுவிவிட்டு அவர்களுடன் நடை பழகினாள். ‘உதுதான் இவ்வளவு காலமும் நடக்குது போல’ என என் மனம் நினைத்தது. உது உப்பிடியே இன்னமும் தொடரப் போகின்றது. நூஜ்ஜினும் ஒவ்வொரு வருஷமும் வரத்தான் போகின்றான்.

நான் அவர்களது அறை வாசலில் நின்று விடுப்புப் பார்த்துக் கொண்டு நின்றேன். “கிழவி இவ்வளவுகாலமும் ‘கூவர்’ மாதிரி கொஞ்சம் கொஞ்சமா இழுத்து வைச்சிருந்த சங்கதிகளையெல்லாம் வெளியிலை கொட்டப் போகுது” என்று நூஜ்ஜினின் அண்ணனின் மனைவி எனக்கு சொல்லிவிட்டுப் போனாள்.

“என்னவாம் அம்மா சொல்லுறா?” நூஜ்ஜினைப் பார்த்துக் கேட்டேன்.

“பக்கத்து வீட்டு மனிசி கண்டதையும் சாப்பிட்டுப் போட்டு ஹொஸ்பிட்டலிலை போய்ப் படுத்துக் கிடக்கின்றாளாம். அவள் இக்கணம் சாகப் போகிறாளாம் எண்டு அம்மா கவலைப்படுகின்றா” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் நூஜ்ஜின்.

“அம்மா! இவன் கரன். என்னோடை வேலை செய்கின்றார். இன்னும் ‘மரி’ பண்ணேல்லை. வண் கேர்ள் வெயிட்டிங் சிறீலங்கா” என்று வாசலில் நின்ற என்னை தனது தாயாரிடம் அறிமுகம் செய்தான். தலை நரைத்துப் போன என்னை அவனது தாய் உற்று உற்றுப் பார்த்தாள். ‘வண் கேர்ள்’ என்று அவன் சொன்னது பவானியைத்தான். பவானி எனது வீட்டிற்கு நாலு வீடு தள்ளி ஊரில் இருந்தாள். சிறுவயதுப் பராயத்தில் அவளுடன் விளையாடுவேன். வளர்ந்த போதும் சிலபோது கதைத்ததுண்டு. அவள் அதைத் தப்பாக எடை போட்டுவிட்டாள். அம்மாவிற்கும் பவானியை நன்றாகப் பிடித்திருந்தது. அம்மாவிற்கும் எனக்குமிடையே நடக்கின்ற ரெலிபோன் சம்பாஷனையைப் பாருங்கள்.

“என்னமாதிரி பவானியை கலியாணம் செய்யுறியா”

“என்னம்மா நீ! எலி தான் போகக் காணேல்லையாம், எப்பிடி விளக்குமாத்தையும் தூக்கிக் கொண்டு போறது?”

பவானி கட்டினால் என்னைத்தான் கட்டுவேன் என்று கொஞ்சக்காலம் காத்திருந்தாள். இரண்டு மூன்று வருஷங்கள்.

“சரி பவானியும் கலியாணம் செய்து கொண்டு போயிட்டாள். வேறை யாரையும் ஊரிலை பார்க்கட்டா?”

பவானி திருமணம் செய்து நான்கு மாதத்தில் அவளது கணவன் குமார் இறந்துபோய் விட்டான். துணைப்படையில் இருந்தபோது ஒருநாள் அகாலமாய் இறந்து போனான்.

“பவானியும் விதவையாகிவிட்டாள். நீ உங்கை ஆரையேனும் பார்த்துப் பிடிச்சா கலியாணம் செய்து கொள்.”

இப்பொழுது கூட இங்கு வரும்போது நான் அம்மாவிற்கு ரெலிபோன் எடுத்துச் சொல்லவில்லை. சொன்னால் “நீ வியட்நாம் பெட்டையை ‘மரி’ பண்ணப் போறாய் போல கிடக்கு” என்றுதான் சொல்லுவா.

நூஜ்ஜினின் அண்ணன் மோட்டார் சைக்கிளை உருட்டிக் கொண்டு வீட்டிற்குள் வந்தான். வந்ததும் வராததுமாக எனக்குக் கை குலுக்கிவிட்டு ‘ரமில் ரைகர்’ என்று சொல்லிச் சிரித்தான். மோட்டார் சைக்கிளிலிருந்த ‘பியர்’ போத்தல்கள் அடங்கிய பெட்டியை இறக்கி வைத்துவிட்டு நூஜ்ஜினுடன் குசுகுசுத்தான். எனக்கு ஒரு போத்தலை நீட்டியவாறே “ஐ லைக் ரமில்ஸ்’ என்றான். பின் அவர்கள் தங்களது குடும்பக்கதைகளிற்குத் தாவினார்கள்.

முதல் மூன்று நாட்களும் ‘ஹோச்சிமின் சிற்றி’யையும் அதைச் சூழவுள்ள இடங்களையும் பார்த்தோம். யுத்தத்தின் தாக்கம் இன்னமும் அங்கே தெரிகின்றது. தெருவெங்கும் மோட்டார் சைக்கிள்கள் நிரம்பி வழிந்தன. கார்ச் சாரதி மிகவும் சரளமாக ஆங்கிலம் கதைத்தான். தன்னை ‘ஹா’ என்று அறிமுகம் செய்தான். அம்மன் கோவிலுக்குப் போனேன். நிறைய வியட்நாம் மக்கள் வந்து கும்பிட்டுவிட்டுப் போனார்கள். பெரும்பாலான மக்கள் நட்புடன் பழகினார்கள். போருக்கு முன்பதாக நிறைய இந்தியர்கள் இருந்தார்களாம். வடக்கு வியட்நாம் பார்க்கப் போகும்போது தானும் மனைவியும் நின்றுகொண்டு பிள்ளைகளை எங்களுடன் அனுப்பி வைத்தான் நூஜ்ஜின். தனக்கு கொஞ்சம் வேலை இருப்பதாகச் சொன்னான். பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர்கள். நான் சாரதிக்குப் பக்கத்தில் அமர்ந்தேன். நூஜ்ஜினின் பிள்ளைகளான ருவானும் லிண்டாவும் அவர்களது ஒவ்வொரு நண்பர்களையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள்.

அமெரிக்கர்களை ஓடஓட விரட்டிய காடுகளையும், போரின் முதுகெலும்பாக விளங்கிய விவசாயிகளின் கிராமங்களையும் பார்த்துக் கொண்டே பிரயாணம் தொடர்ந்தது. எங்களுடைய வன்னி நிலப்பரப்புக்கூட இப்பிடித்தானே இருக்கும்!

“இந்தக்கிராமங்களிலும் மலைகளிலுமுள்ள மக்கள் தாழ்வாகப் பறந்த எதிரிகளின் விமானங்களைச் சுட்டு வீழ்த்தினார்கள்; எங்கள் தலைவர்கள் எவரையும் அமெரிக்காக்காரன்களால் பிடிக்க முடியவில்லை” பெருமையாகச் சொன்னான் ஹா. எங்களின் தலைவர்களை எங்கடை ஆக்களும் சிங்களத் தலைமைகளுமே கொன்றொழித்துவிட்டார்கள் என்பதை நான் பெருமையாகச் சொல்ல முடியாது.

“சிறீலங்காவிற்கு சீனாவும் இந்தியாவும் உதவி செய்கின்றனவாமே? பத்திரிகையில் பார்த்தேன்” என்றான் தொடர்ந்து. எங்களின் பிரச்சினையை யாரிடம் சொல்லி முறையிடுவது? “சோழியன் குடுமி சும்மா ஆடாது எண்டதுமாப்போல இந்தியா சம்பூரிலையும் சீனா புத்தளத்திலையும் அனல் மின் நிலையம் போடுகினம். இதுகளின்ர அடிப்படையெல்லாம் இன அழிப்புக்குத்தான்.”

“எந்த நேரமும் சண்டை நடந்து கொண்டிருக்கிற ஒரு நாட்டின் பொருளாதாரம் ஒரு போதும் உயரப் போவதில்லை” என்றான் ஹா.

மலைகளும் பள்ளத்தாக்குகளும் மாலைச்சூரியனின் ஒளிபட்டுத் தகதகத்துக் கொண்டிருந்தன.

“நாளைக்கு இந்த நேரம் நாங்கள் ஹோச்சிமின் சிற்றியில் இருக்க வேண்டும்” கார்க்கண்ணாடியினூடாக பின்புறமிருந்த நூஜ்ஜினின் பிள்ளைகளைப் பார்த்துவிட்டு ஹா சொன்னான்.

“ஏன் என்ன அவசரம்? இன்னும் கொஞ்சம் இருந்து பாத்துவிட்டுப் போகலாமே?”

“இல்லை. சற்றடே போர்ட் மீற்றிங் இருக்கல்லவா?”

எனக்கு ஹா சொன்னது ஒன்றுமே புரியவில்லை. அவனை வியப்புடன் பார்த்தேன்.

“உங்களுக்கு நூஜ்ஜின் ஒன்றுமே சொல்லவில்லையா?”

“சொல்லியிருப்பான். ஆனா விளங்கக்கூடிய விதத்தில சொல்லியிருக்க மாட்டான்” நான் அவனது காதிற்குக் கிட்டக் குனிந்து மெதுவாகச் சொன்னேன்.

காரை ஒரு இளைப்பாறும் இடத்தில் நிற்பாட்டினான் ஹா. ருவானும் லிண்டாவும் நண்பர்களும் இறங்கிக் காலாற நடந்தார்கள். ஹா ஒரு சிகரட்டைப் புகைத்துக் கொண்டே இன்னொன்றை எனக்கு நீட்டினான். ஒருமுறை செருமுவிட்டு, நூஜ்ஜினின் சரித்திரத்தை சொல்லத் தொடங்கினன்.

நூஜ்ஜினின் இளமைக்காலம் மிகவும் கொடுமையானது. வறுமை. போர். நான்காவது வகுப்பு வரையுமே படித்திருப்பான். அவனது தந்தை வடக்கு வியட்நாமில் ஒரு விவசாயி, ஒரு போராளி. அவர்களுக்கு எட்டுப்பிள்ளைகள். அமெரிக்கப்படைகள் அவர்களின் கிராமத்தை எரித்தார்கள், மக்களைக் கொன்றார்கள். அவர்களின் பாதிக்குடும்பம் போரிற்கு பலியானது. 1968 ஆம் ஆண்டு போரின் உச்சக்கட்டம். போரின் கோர முகங்கள் வியட்நாம் என்ற பசுமை நிறைந்த நாட்டை சின்னாபின்னமாக்கின. நூஜ்ஜின் கூலி வேலைகள் பல செய்தான். ஆரம்பத்தில் சீமெந்து குழைத்தான், கல்லுகள் தூக்கினான், முட்டாள் வேலைகள் பல செய்தான். பிறகு ஒரு பெட்டிக்கடை. பெட்டிக்கடை பெரிதாக வீடுகட்டும் சாமான்கள் விற்கும் கடையாகியது. படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறினான். ஆனாலும் அவனால் படிக்க முடியாமல் போய்விட்டது.

அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக வியட்கொங் போராளிகள் போராட்டம் நடத்தினர். போராளிகளின் கெரில்லா உத்திகள் அமெரிக்கப்படைகளை ஆட்டுவித்தன. மக்கள் போராளிகளாக மாறினார்கள்; ஒற்றுமையாக படைகளைக் கட்டி எழுப்பினார்கள்; யுத்தத்தை நடத்தினார்கள். கலப்பை ஒரு கையிலும் துப்பாக்கி மறுகையிலுமாகப் போராடினார்கள். வடக்கு தெற்காக போர். போரிலை மிக உச்ச இழப்பை இந்த உலகத்திலை நாங்கள்தான் சந்தித்திருக்கின்றோம் என்றான் ஹா.

அப்பொழுதெல்லாம் வியட்நாம் அரசு ஆக்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. களவாக வெளிக்கிட்டு தப்பி ஓடியவர்களும், கடலிற்குள் அயல்நாட்டு மீனவர்களால் பலி வாங்கப்பட்டார்கள். ஆண்களைக் கடலிற்குள் தள்ளிவிட்டு பெண்களை தங்களின் இச்சைக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். நூஜ்ஜினின் தந்தை போரினில் மடிந்தபோது நூஜ்ஜின் மலேசியாவிற்கு கப்பலில் தப்பி ஓடினான். அதன் பின்பு அங்கிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்தான். அமெரிக்கா தென் வியட்நாமைவிட்டு வெளியேறியபோதுதான் ஏராளமான புத்திஜீவிகளும் பணக்காரர்களும் அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறினார்கள்.

வெள்ளிக்கிழமை மதியமளவில் வீட்டிற்குப் போய்விட்டோம். வீட்டின் பின்புறமிருந்த மரத்திற்குக் கீழே கதிரைகளைப் போட்டுவிட்டு சாப்பிடத் தொடங்கினோம். சூடான சாப்பாட்டுடன் பேச்சும் சூடு பிடிக்கத் தொடங்கியது.

“போரின் நிஜத்தை சந்திக்காமல் வாய் கிழியக் கதைக்கிறதில் அர்த்தம் இல்லை. நான் போருக்குப் பயந்து தப்பி ஓடி வந்தவன். நீண்டகாலம் நீடித்த போரில் எத்தனை ஆயிரம்பேர் செத்துப் போனார்கள். எத்தனை மில்லியன் தொன் குண்டுகளைக் கொண்டு வந்து வான் வழியாகக் கொட்டியிருப்பான்கள். கை இழந்தவர்கள், கால் இழந்தவர்கள், கண் இழந்தவர்கள், காணாமல் போனவர்கள், விதவையானவர்கள் சொல்லத் தேவையில்லை. என்னுடைய அம்மாகூட இளம் வயதிலேயே விதவையாகிப் போய்விட்டாள். வெளியில் இருந்து பார்க்கிறவர்கள் போர் முடிந்துவிட்டது என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் போர் உண்மையில் அதுக்குப் பிறகுதான் ஆரம்பமாகிறது. எங்கள் நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும். பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும்” நூஜ்ஜின் சொல்லிக் கொண்டே போக ஹா மொழிபெயர்த்துக் கொண்டிருந்தான். நான் வியந்து போனேன். நூஜ்ஜினா இப்படிக் கதைக்கின்றான்?

“ஜப்பானியர்கள் கடற்கரையில் மரக்கலங்களை நிறுத்தி விவசாயம் செய்கின்றார்கள். சிங்கப்பூர் பொருளாதாரத்தில் எவ்வளவோ முன்னேறி விட்டது. எமது நாடு? அடுத்தவர்கள் வந்து எமது நாட்டில் வர்த்தகம் செய்வதைவிட நாமே அதைச் செய்வது நல்லது. கம்யூனிஸ்ட் கொள்கைகள்கூட இப்ப இங்கே எவ்வளவோ தளர்த்தப்பட்டுவிட்டன. ஆனாலும் எமது நாடு?”

“இன்னொரு நாட்டின் பிரஜையாக இருந்து கொண்டு தன் சொந்தநாட்டையே நினைப்பதும் அதை முன்னேற்றுவதும் பிழையான சிந்தனையல்லவா?” நான் இடையில் குறுக்கிட்டேன்.

“நான் இரண்டு நாட்டினதும் பிரஜைதான். எங்கள் நாட்டைச் சுரண்டி சூறையாடும்போது இந்தக் கேள்வியை யாரும் கேட்கவில்லையே? நான் உழைக்கின்றேன். என்னுடைய உழைப்புக்குக் கிடைக்கிற ஊதியத்தில் ஒரு பகுதியை என் சொந்த நாட்டை முன்னேற்றுவதற்காகப் பாவிக்க நினைப்பதில் என்ன தவறு இருக்கின்றது?”

மாலையில் நூஜ்ஜின் எனக்கு ஒரு ஆடைத்தொழிற்சாலையைச் சுற்றிக்காட்டினான். கூடவே அவனது அண்ணனும் ஹாவும் வந்தார்கள். தையல் இயந்திரங்களின் சத்தங்கள் கேட்டன. கிட்டத்தட்ட இருநூறுபேர் மட்டில் வேலை செய்யும் அந்த ஆடைத்தொழிற்சாலையில் பெரும்பாலும் பெண்களே வேலை செய்தார்கள். அந்தப் பெண்களில் எண்பது சத விகிதமானவர்கள் விதவைகள் என்றான்.

மனம் ஏதோ சுமையில் கனப்பது போல இருந்தது. “எங்கள் நாட்டுப் பிரச்சனையும் கிட்டத்தட்ட வியட்நாமிற்கு ஒப்பானதுதான்” வீடு திரும்பும்போது சொன்னேன். “எனக்குத் தெரியும்” என்றான் நூஜ்ஜினின் அண்ணன். கார் ஓடிக் கொண்டிருந்தது. நானும் நூஜ்ஜினின் அண்ணனும் பின்புறம் இருந்தோம்.

“என்ன ஒரே சிந்தனையில் இருக்கின்றீர்கள்?” என்றான் ஹா.

“பெரிதாக ஒன்றும் இல்லை. நாலாம் வகுப்புப் படித்த நூஜ்ஜினும் நாலு வருடங்கள் பல்கலைக்கழகத்தில் படித்த நானும் ஒன்றாக ஒரே இடத்தில் வேலை செய்கின்றோம். அதை நினைச்சுப் பார்த்தேன்” இதை நான் வேண்டுமென்று சொல்லவில்லை. நரம்பில்லாத நாக்கு வரம்பு மீறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நூஜ்ஜினின் முகம் கறுத்துப் போனதை கண்ணாடிக்குள்ளால் அவதானித்தேன்.

“ஒன்றுமில்லை. நூஜ்ஜினை நான் பெருமையாகத்தான் சொல்லுகிறேன். இங்கிலிஸ் நன்றாகத் தெரியாத நூஜ்ஜின் அந்த வேலையைச் செய்வதையிட்டு நான் பெருமைப்படுகின்றேன்” சமாளிக்கப் பார்த்தேன்.

“அந்த வேலை உண்மையில் எனக்குரியது. காரைத் துடைப்பதற்கும் பெயின்ற் அடிப்பதற்கும் நாலு வருஷங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டுமா?” தனக்கு வந்த ஆங்கிலத்தில் கோபமாக கத்தினான் நூஜ்ஜின். அவனிற்கு அப்படிக் கோபம் வந்ததை இன்றுதான் பார்க்கின்றேன்.

“நீங்கள் உங்கள் நாட்டில் என்ன வேலை பார்த்தீர்கள்?” ஹா என்னிடம் கேட்டான்.

“ஆரம்பத்தில் ஒரு பட்டதாரி ஆசிரியராக இருந்தேன். பின்பு கல்வி அமைச்சில் பாடத்திட்டங்கள் தயாரிக்கும் குழுவில் இருந்தேன்”

“அப்படியென்றால் நூஜ்ஜின் சொல்வதுதான் சரி. நீங்கள் ஏன் இந்த வேலைக்கு வந்தீர்கள்?”

“வயிறுதான். வேறொன்றும் இல்லை” என் வயிற்றைச் சுட்டிக் காட்டினேன். “முப்பது முப்பத்தைஞ்சு வருஷங்கள் நடந்த உங்கட நாட்டுப் பிரச்சினை எழுபத்தி மூண்டோடை முடிஞ்சுது. உங்கட ஆக்கள் எல்லாம் எப்பவோ புலம்பெயர்ந்திட்டினம். எங்கட பிரச்சினை இன்னமும் தீர்ந்தபாடில்லை. நான் நேற்று வந்தவன். எனக்கு இந்த வேலைதான் கிடைக்கும்”

“அப்படியென்று இல்லை. நீங்கள் இந்த வேலையைச் செய்து கொண்டே இன்னமும் படிக்கலாம். படிப்பதற்கு எல்லை இல்லை. படித்து பெரிய பதவிக்கு வரலாம். நாலாம் வகுப்புப் படித்த என்னால் இவ்வளவு செய்யக்கூடியதாக இருக்கு என்றால் உங்களால் எவ்வளவோ செய்யலாம்” நூஜ்ஜின் படபடவென்று பொரிந்து தள்ளினான். ‘நாலாம்வகுப்பு’ என்று சொன்னது அவனிற்கு சுட்டுவிட்டது.

“அமைதி. அமைதியாக இருங்கோ” என்று நூஜ்ஜினின் அண்ணன் சொன்னான். அதன்பின்பு ஒருவரும் கதைக்கவில்லை.

காரின் வேகத்தைவிட எனது சிந்தனைகள் முன்னேறிக்கொண்டிருந்தன. பவானி ஒருமுறை மனதில் வந்து போனாள். அவளும் ஒருவேளை தையல் இயந்திரத்துடன் இப்பொழுது போராடிக் கொண்டு இருக்கலாம். ‘அடுத்தமுறை அம்மாவோடை கதைக்கேக்கை பவானியைப் பற்றியும் ஒருக்கா விசாரிக்க வேணும்.’

கார் வீட்டை அடைந்ததும் நூஜ்ஜின் இறங்கித் தன்பாட்டில் போனான். அவனது கோபம் இன்னமும் தணியவில்லை. நாளை நான் அவுஸ்திரேலியாவிற்கு திரும்ப வேண்டும். அதற்கிடையில் இந்தச் சம்பவம் நடந்துவிட்டதே என கவலையாக இருந்தது.

எனக்கு ஒதிக்கித் தந்த அறையின் கட்டிலில் இருந்து ‘பாக்’கை அடிக்கிக் கொண்டிருந்தேன். கதவு தட்டப்பட்டது. ஒரு கையினில் ‘ரீ’ கப் ஒன்றை நீட்டிக் கொண்டு நூஜ்ஜின் வந்தான். “மன்னிக்க வேண்டும். அப்படி நான் நடந்து கொண்டதற்கு மன்னிக்க வேண்டும்” சொல்லிக் கொண்டே வந்து கட்டிலில் என்னருகே இருந்தான். உண்மையில் நான் அல்லவா அவனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்?

“நன்றாகப் படியுங்கள். கற்றுக் கொள்வதற்கு நிறையவே இருக்கின்றன. எங்களுக்கு என்று இன்னொருவர் வந்து உதவி செய்யப் போவதில்லை” சொல்லிவிட்டு கட்டிலில் இருந்து எழுந்து செல்லும் பொழுது தெளிவான ஆங்கிலத்தில் கூறினான்,

“கரன், ஐந்து நிமிடத்தில் போட் மீற்றிங் இருக்குது. நீ பார்த்த ஆடைத் தொழிற்சாலை எனது சொத்து. அதனைவிட இன்னொரு ஆடைத் தொழிற்சாலையும் உண்டு.”

– ஞானம், தை 2008 (http://www.gnanam.info/)

– புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி (2007, 3வது பரிசு), ஞானம் சஞ்சிகை, இலங்கை.

– சென்றிடுவீர் எட்டுத்திக்கும் (பரிசுபெற்ற பன்னிரண்டு சிறுகதைகள்), முதற் பதிப்பு:ஏப்ரல் 2014, அக்கினிக்குஞ்சு வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *