கனிமொழியும் என் ஒரு சொட்டு கண்ணீரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 9,502 
 

கனிமொழி என்னை மிகக்கடுமையாக கலாய்த்துக்கொண்டிருந்தாள். அன்று வழமைபோல பதிலுக்கு அவள் மூக்கை பற்றி கிண்டல் செய்து அவளை கலாய்க்கும் நிலையில் நானோ இருக்கவில்லை. கொஞ்சம் கறுப்பாக இருக்கும் என்னை எப்பொழுதெல்லாம் அவள் கிண்டல் செய்கிறாளோ அப்பொழுதெல்லாம் எனக்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு கொஞ்சம் நீண்டு, கோணி இருக்கும் அவள் மூக்கை பற்றி கிண்டல் செய்வதே! அவள் எனது நிறத்தை கிண்டல் செய்ய முழுத் தகுதியும் பெற்றிருக்கிறாள்.

வெளிச்சம் அடிக்கடி சறுக்கிவிழும் பளிச்சிடும் சிவப்பு கலந்த வெள்ளை கன்னங்கள் அவளுடையது. இருந்தும் அந்த மூக்கு அவள் அழகை அவ்வளவு பாதித்ததில்லை. அவள் அழகற்றவள் என்பதை அந்த மூக்கு நிரூபிக்க எத்தனிப்பதும் இல்லை.

‘என்ன உம்மெண்டு இருக்கே?’ கனிமொழி எப்பொழுதும் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருக்கும் பேர்வழி என்னைப்போல. ‘இல்லையே நல்லாத்தானே இருக்கன்!’ வழமை போலவே எனது பேச்சு எடுபடுவதாய் இல்லை.

‘டேய், பொய் சொல்லாதடா ராஸ்கோல்!’. அவள் சரிதான். அன்று பேசும் நிலையில் நான் இல்லை.

வார்த்தைகள் அடிக்கடி என்றும் இல்லாததுபோல் அரைத்தூரம்வந்து தொண்டைக்குழியில் செத்துக்கொண்டிருந்தது. நான் இயல்பாக இல்லை என்பதை
கனிமொழியும், படபடவென அடித்துக்கொண்டிருக்கும் நாடி நரம்புகளும் உறுதி
செய்துகொண்டிருந்தன.

‘கனி, சந்தோசமா இருக்கீயா?’

‘எனக்கென்ன குற.. அதான் கேட்டதெல்லாம் நீ வாங்கித்தாறாயில்ல.. அப்புறம் என்ன..?!’

எனது கரங்களை இறுகப்பற்றிக்கொண்டாள் கனிமொழி. வழமைபோல என்னை அறியாமலேயே எனது கரங்கள் அவள் தலையை தடவிக்கொடுத்துக்கொண்டு இருந்தது. கனிமொழி ஒரு தேவதை. அவள் கிடைத்த நாளிலிருந்து நான் தனிமையையோ, கவலையையோ முழுமையாக அனுபவித்ததில்லை. அடிக்கடி போடும் சண்டைகள், மாறி மாறி அள்ளிவீசும் கிண்டல்கள், பறித்து உண்ணும் அவள் சொகலேடுகள், கோவத்தில் என்னை திட்டும் முனங்கல்கள், பேய் கதைசொல்லி அழவைக்கும் இரவுகள் சகல சந்தோசங்களையும் கொடுப்பவள் அவள்.

‘ஓய், என்னடா ஆச்சு ஒனக்கு?’

‘… அது.. ஒண்ணுமில்ல… சின்னதா ஒரு தலைவலி…’

நான் பொய்க்கு மேல் பொய்களை அடுக்கிக்கொண்டு செல்கிறேன் என்பதை கனிமொழி அறியாமல் இல்லை. அவள் ஒரு வில்லாதி வில்லி. என் அசைவுகளை சட்டென ஊகித்துக்கொள்பவள் அவள். முந்தைய பிறப்பில் இவள் ஜோசியக்காரனாக பிறந்திருக்கவேண்டும். பட்டென நான் நினைப்பதை சொல்லக்கூடியவள். அவ்வளவு நெருக்கமாய்ப்போன உறவு எங்களுடையது. கையில் ஏதோ ஒரு பொருளை வைத்து உருட்டிக்கொண்டிருந்தாள். நானோ வழமைபோல அவள் அருகில் இருந்து ரசித்துக்கொண்டிருந்தேன்.

‘ஆமா கனி, நான் வாங்கிக்குடுத்த அந்த நீலகலர் சட்ட உனக்கு பிடிச்சிருக்கா?’
‘எத்தின தடவ சொல்லுறது.. பிடிச்சிருக்கின்னு!’

செல்லமாக எரிந்து விழுந்தாள் கனி. என்னிடம் பேசுவதற்கு எதுவுமே இல்லை
என்பதை இதைவிட என்னால் எப்படி துல்லியமாக காண்பிக்க முடியும்? நான்
வழமைபோலவே கண்டுகொள்ளவில்லை. பெண்கள் கோவத்தில் இருந்தால் அல்லது கொவம்போல் நடித்தால், ஆண்கள் அதை கண்டுகொள்ளவே கூடாது! கண்டுகொண்டால் அல்லது அதை நாம் அதை கருத்தில்கொண்டால் விளைவு அதிகமாகும். இதனால் கனிமொழியின் அழகிய கோவங்களை நான் எப்பொழுதுமே கண்டுகொள்வதில்லை.

‘சரி, அது இருக்கட்டும். நான் கேட்ட கேள்விக்கு முதல் பதில சொல்லு!’

‘கனி, இங்கபாரு நான் சொன்னேன்தானே ஒண்ணும் இல்ல எண்டு’.

‘அப்ப என்கூட சிரிச்சு பேசு..’

சிணுங்க ஆரம்பித்தாள் கனிமொழி. நானும் என்ன பிளான் பண்ணியா இப்படி
இருக்கேன். என்னால் வழமையான கனிமொழியின் ஆசை அரவிந்தாக இன்று இருக்க முடியவில்லை. இந்த மனப்போராட்டத்திற்கு நீதானே காரணம் என்பதை என்னால் அவளிடம் இன்று அல்ல என்றுமே சொல்லமுடியாது. சொன்னால் அவளிற்கு அது புரியும் என்றும் என்னால் சொல்ல முடியாது.

‘மீனாட்சி எங்க?’

எனது அம்மாவை இப்படித்தான் மிக மரியாதையாக விசாரிப்பாள் கனிமொழி.
விசாரிப்பு மட்டுமல்ல அம்மாவை அவள் அழைப்பதும் ‘மீனாட்சி’ என்றுதான்.
என்னைவிட இந்த வாயாடி கனிமொழி மீது அவ்வளவு பாசம் என் அம்மாவிற்கு.
கனிமொழியும் அப்படித்தான், அம்மா என்றால் அவ்வளவு இஷ்டம்.

‘மீனாட்சி மார்கெட் போய்டாங்க.’

‘எப்ப வருவாங்க?’

‘என்னட்ட சொல்லிட்டு போகல!’

‘கையில என்ன?’

‘போனு!’

‘அது தெரியுது, என்ன கேமு?’

‘கண்டி க்ரஷ்..!’

‘எனக்கு கொஞ்சம் கொடேன் விளையாட..ப்ளீஸ்!’

‘இந்தா… புடி!’

அவள் கையில் எனது தொலைபேசியை திணித்துவிட்டு வீட்டிற்குள் எழுந்து
நடந்தேன். அவளிற்கு இந்த தொலைபேசியில் விளையாடும் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம். அதுவும், எனது தொலைபேசியை வாங்கி மணிக்கணக்கில் கேம்
விளையாடுவதென்றால் அவளிற்கு அவ்வளவு ஆனந்தம்.

‘அரவிந்து இங்க வாயேன் ப்ளீஸ்!’

வீட்டிற்குள் சென்று ஒரு க்ளாஸ் தண்ணீரை முழுவதுமாக குடித்து
முடிப்பதற்குள் என்னை இடைமறித்தது கனிமொழியின் அழைப்பு. வெளியில் சென்று அவள் அமர்ந்திருக்கும் பெஞ்சில் அவளோரமாய் அமர்ந்து ‘இங்கதான்
இருக்கேன்!, என்ன?’ என்றேன். எனது தொலைபேசியை எனது கரங்களுக்குள்
திணித்து, வாடிய முகத்தோடு என்னை நிமிர்ந்து பார்த்து மீண்டும் கேட்டாள்.

‘என்ன ஆச்சு உனக்கு இன்னைக்கு? காலையில இருந்து என்கூட சரியா பேசல, உண்ட கரிக்கட்ட மூஞ்சி வாடிபோய் கிடக்கு.. என்கூட கோவமா? மீனாட்சி உன்னைய திட்டிச்சா??…’

அதிரடியான கேள்விகள். திரு திருவென முளிக்க மட்டுமே என்னால் முடிந்தது.
பேச வார்த்தைகள் இல்லை. நாவு வறண்டுபோய் கிடக்கிறது.. என் உதடுகளில்
ஈரமில்லை. எனது மனக்குளப்பத்தை அல்லது எனது மனதை சஞ்சலப்படுத்தும் அந்த சம்பவத்தை கனியிடம் என்னால் இறுதிவரை சொல்லமுடியவில்லை.

இன்றைக்கு சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்தான் உன்னை ஒன்பது மாத குழந்தையாக எங்கள் கரங்களில் தந்துவிட்டு உனது அம்மாவும் அப்பாவும் புதுமாத்தலனில் ஒரு செல்வீச்சில் துடிக்க துடிக்க இறந்துபோனார்கள்..
என்பதை என்னால் எப்படி இந்த ஆறுவயசு குட்டி கனிமொழியிடம் சொல்லமுடியும்??

வார்த்தைகள் அற்று அவளை இறுக அணைத்தபோது எதிர்பாராமல் என் கண்ணிலிருந்து வழிந்த ஒரு சொட்டு கண்ணீர் அவள் கரத்தில் விழுந்து அமர்ந்துகொண்டது. அதை பார்த்த கனி, ஏளனமாய் என்னை மறுபடியும் கலாய்க்க ஆரம்பித்தாள்…

‘ஏய் மீனாட்சி, இங்க ஓடிவாயேன்.. நம்ம கறுப்பன் அரவிந்து அழுவுறான்…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *