முட்டாள், பிழைக்க தெரியாதவன், குரல் கொஞ்சம் சத்தமாகத்தான் கேட்டது அனந்த நாராயணனுக்கு.
என்ன என்ன சொன்னாய்?
நானா நான் ஒன்றும் சொல்லவில்லை, அழுத்தலாய் சொன்னாள் ஜீவிதா. ஆனாலும் அவளது பளிங்கு முகம் ஏதோ அவள் உன்னை பற்றி சொல்லியிருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது.
இல்லை நீ என்னமோ சொல்லியிருக்கிறாய், உண்மையை சொல்.நான் உன்னை ஒன்றும் சொல்லப் போவதில்லை.
ஜீவிதா இப்பொழுது வாய் விட்டு சிரித்தாள்.அப்படியே மெய் மறந்து போனான் அனந்து.
அழகு அழகு, அவள் முகம் காட்டும் அழகு, அந்த முல்லைப் பற்களின் சிரிப்பு, சிரிப்பின் சத்தம் கூட கிண் கிணியாய் அவர் காதை வருடிக்கொண்டு.
சிலிர்த்துக்கொண்டான். சிரிக்காதே, உன் முகத்தை அப்படியே என் கைகளில் ஏந்தி
ஏந்தி..மோகனமாய் சிரித்தாள் ஜீவிதா
சிரிக்காதே, சிரித்து சிரித்து என்னை சித்ரவதை செய்தது போதும், என்னை ஏன் முட்டாள் என்கிறாய்.
பின் என்ன சொல்வது, நீயே வறுமையில் இருக்கிறாய், வெறும் அழகு பதுமையாய் என்னை வைத்து உனக்கு என்ன பிரயோசனம்.
அதற்காக உன்னை விற்று விடவேண்டும் என்கிறாயா?
ஆம் இதிலென்ன தவறு?
தயவு செய்து இது மாதிரி சொல்லாதே, என்னால் தாங்க முடியவில்லை.
அப்புறம் உன்னை முட்டாள் என்று சொல்லாமல் என்ன சொல்வது?
உன்னை எப்படி என்னால் இன்னொருவன் கையில் ஒப்படைப்பது?
உன் தகப்பன் இப்படி சொல்லி சொல்லியே உன்னையும் பஞ்ச பரதேசி ஆக்கி விட்டு போயிருக்கிறான். உங்கள் பரம்பரையின் தலையெழுத்தே பஞ்சத்தில் வாழ்வதுதான்.
ஐயோ கொடூரமாய் பேசாதே, என்னால் தாங்க முடியவில்லை.
நன்கு யோசித்து பார், உன் மனைவி உனக்கு முக்கியமா? இல்லை நான் முக்கியமா?
எனக்கு எனக்கு என் மனைவியும் முக்கியம், நீயும் முக்கியம்.
உன் மனைவி உனக்கு முக்கியம் என்று முதலில் சொல்லியிருக்கிறாய்,
இதிலிருந்தே தெரிகிறது உன் மனைவியின் மீது உனக்கிருக்கும் பாசம்.
ஆம் நானும் என் குழந்தைகளும் அவளைத்தான் நம்பியிருக்கிறோம்.
அப்புறம் ஏன் என்னை அடுத்தவன் கையில் ஒப்படைக்க தயங்குகிறாய்? நாளை ஐந்து லட்சம் ரூபாய் பணம் கட்டினால்தான் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா !
அப்படி செய்தால்தான் பிழைப்பாள் என்றும் சொல்லியிருப்பதாக என் முன்னால் சொன்னாய்.
ஆம் இப்பொழுதும் சொல்கிறேன், எனது எல்லா கஷ்டங்களையும் உன் முன்னால் கொட்டி விட்டால் எனக்கு மனம் நிம்மதியாகிறது, அதனால்தான் இந்த முப்பது வருடங்களாக என்னால் என் தொழிலை நிம்மதியாக செய்ய முடிகிறது.
மறுபடி கனவுலகத்தில் இருப்பவனை போல் தான் பேசுகிறாய். யதார்த்தத்தை பேசு. நீண்ட நாட்களாய் என்னை கேட்டுக்கொண்டிருப்பவனிடம் என்னை விற்று விடு
என்னால் முடியவில்லையே,
முட்டாள், முட்டாள், முட்டாள், இதை தவிர என்னால் உன்னிடம் சொல்ல ஒன்றுமில்லை.
சட்டென கனவிலிருந்து கண் விழித்தான் அனந்த நாராயணன்
இந்த ஓவியம் எங்க அப்பா வரைஞ்சு இருபது வருசமா பாதுகாத்து வச்சிருந்தாரு, என்னால முப்பது வருசம்தான் பாதுகாக்க முடிஞ்சுது, இதை வித்துத்தான் என் மனைவிக்கு வைத்தியம் பண்ணனும்ங்கற சூழ்நிலையில என்னால என்ன பண்ண முடியும். சொல்ல சொல்ல கண்களில் கண்ணீர்.
அழுகாதீங்க, நானும் ஒரு உண்மைய சொல்றேன், இந்த ஓவியத்தை எங்கப்பா உங்க அப்பாகிட்ட கேட்கறப்போ, உங்கப்பா கடைசி வரைக்கும் கொடுக்கவே முடியாதுன்னு சொல்லிட்டாரு.
எங்கப்பா பெரிய கோடீஸ்வரனா இருந்து என்ன பிரயோசனம், எத்தனையோ சாதிக்க முடிஞ்ச அவருக்கு இந்த ஓவியத்தை உங்கப்பா கிட்ட இருந்து வாங்க முடியலை.
நான் எங்கப்பா கிட்டே வைராக்கியமா சொன்னேன், கண்டிப்பா அதை நான் வாங்கியே தீருவேன்னு. அதே மாதிரி வாங்கியும் விட்டேன். இந்தாங்க, இந்த படத்துக்கான விலை அஞ்சு லட்சம்.
பணத்தை வாங்கியவன் ரொம்ப நன்றி, இப்பவே இதை ஆஸ்பத்திரியில கட்டிட்டு வந்துடறேன்.
எதுக்கு ஆஸ்பத்திரியில பணம் கட்டணும்.
இந்த பணத்தை கட்டுனாத்தான் என் மனைவிக்கு ஆபரேஷன் பண்ணுவோமுன்னு சொல்லிட்டாங்க.
எந்த ஆஸ்பத்திரி?
ராம்மோகன் ஆஸ்பிடல்.
நீங்க பணம் கட்ட தேவையில்லை, நான் சொல்லிடறேன்.
ஐயோ வேணாம், இலவசமா எதையும் நான் விரும்பாதவன்.
எனக்கும் தெரியும், அது எங்க ஆஸ்பிடல்தான், அது மட்டுமில்லை, இன்னைக்கு இந்த ஓவியத்தோட விலை நான் கொடுத்ததை விட அதிகமாத்தான் இருக்கும். அதனால ஹாஸ்பிடல் செலவை நானே ஏத்துக்கறேன்.
ஹலோ
வணக்கம் ராம்மோகன் ஹாஸ்பிடல்..
வணக்கம், நான் ஹாஸ்பிடல் எம்.டி.பேசறேன், டாக்டர் ரமணிய பேச சொல்றீங்களா?
சார்..எஸ்.சார். அந்த பெண் வேகமாய் டாக்டர் ரமணியின் லைனுக்கு தொடர்பு கொள்கிறாள்.
எஸ்.டாக்டர் ரமணி
தேங்க்ஸ் டாக்டர், நான் ஆனந்தன், அந்த ஓவியத்தை அவர்கிட்ட இருந்து வாங்கிட்டேன். ஹாஸ்பிடல் பில்லை நான் செட்டில் பண்ணறேன்னு சொல்லிட்டேன்.
ஓ.கே அப்ப பிரச்சினை முடிஞ்சுது,
ப்ளீஸ் டாக்டர், அந்த பொண்ணை நாலு நாள் தங்க வச்சு அனுப்பிடுங்க. ரொம்ப தேங்ஸ் டாக்டர், அவங்களுக்கு சர்ஜரி பண்ணியே ஆகணும், அதுக்கு பெரிய தொகை வேணும்னு எனக்காக ஒரு பொய் சொன்னதுக்கு.
நோ..நோ.. எனக்கு உங்கப்பா அந்த ஓவியத்தை வாங்க நினைச்சதும் தெரியும், அந்த ஓவியனோட அப்பா அதை விக்க மறுத்ததும் எனக்கு தெரியும். அதுக்காக சின்னதா ஒரு ஹெல்ப் பண்ணேன் அவ்வளவுதான்.
இதுவரை என் அப்பா உறுதியாய் இருந்ததை நான் கெடுத்து விட்டேனே. என் மனைவியின் உடல்நிலை காரணம் காட்டி சுய நலத்துக்காக அந்த ஓவியத்தை விற்று விட்டேன்.
முட்டாள்..முட்டாள்..
யார் யார்? நீயா?
ஆம் நானேதான் உன் கனவில் வந்திருக்கிறேன்.
எதற்கு வந்தாய்? அன்று என் கனவில் வந்து உன்னை விற்று கொள்ள வற்புறுத்தினாய்.
உனக்கு என் மீது விருப்பம் குறைந்து விட்டதால் அந்த பணக்காரனுக்கு விலை போய் விட்டாய்.
ஆம்..அதிலென்ன சந்தேகம், இன்னும் முட்டாள்தனமாகவே இருக்கிறாய் எனும்போது நானாவது உனக்காக தகுந்த ஏற்பாடுகளை உனக்கு செய்து கொடுக்க வேண்டாமா?
எனக்காக ஏற்பாடுகள் செய்து கொடுக்கிறாயா? புரியவில்லை.
ஆம் புரியாது, ஏன் உன் தந்தைக்கே புரியாத போது உனக்கு மட்டும் எப்படி புரியும்.
என்ன புதிர் போடுகிறாய்?
ஆம் உன் தந்தை என்னை வரைந்த பின் அடுத்து புதியதாக எதையாவது பேர் சொல்லும் அளவுக்கு படைத்தானா?
ம்..ம்..படைத்திருக்கிறார், ஆனால் உன் அளவுக்கு விலை போக கூடிய அளவுக்கு இல்லை.
அப்படியானால் அவனுக்கு அதை படைக்க கூடிய திறமை மங்கி விட்டதா?
இல்லை, இல்லை, யார் சொன்னது?
நானேதான் சொல்கிறேன், உனக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன். உன் பத்து வயது முதல் வரைகிறாய், முப்பது வருடங்களாய், ஆனாலும் பேர் சொன்ன அளவுக்கு வரைய முடியவில்லை, காரணம் புரிகிறதா?
புரியவில்லை, புரியவில்லை.
முட்டாளே படைப்பவன் எப்பொழுதும் திருப்தி கொள்வதில்லை. உனக்கும், சரி உன் தந்தைக்கும் சரி என்னை படைத்து ஆராதித்து பாராட்டி கொண்டிருந்தாலே போதும் என்னும் மன நிலைக்கு வந்து விட்டீர்கள். அதனால் என்னை விட இன்னும் சிறப்பான ஒரு ஓவியத்தை உன்னால் படைக்க முடியவில்லை. ஆனால் உன்னால் முடியும், நான் இங்கிருந்து போனால்தான்.
நாளை உன் மகனோ மகளோ உன்னை விட சிறப்பானதை படைப்பார்கள். ஒரு படைப்பு வெளியேறும் போதுதான் அதை விட இன்னொன்றை சிறப்பாக படைக்க படைப்பாளிக்கு தோன்றிக்கொண்டே இருக்கும்.
இந்த உலகில் பிறக்கும் எந்தவொரு படைப்பும் தன்னை ஒட்டிய அடுத்த படைப்பை பார்த்து விட்டு செல்லத்தான் ஆசைப்படும், அப்படிப்பட்ட ஆசை நான் படக்கூடாதா? என்னை விட மிக சிறப்பாய் இன்னொரு படைப்பை படைக்க முயற்சி செய்.
அதற்கு முன் குடும்பத்தின் வறுமையை போக்க, அவர்களின் வறுமையை கொஞ்சம் தளர்த்தி கொடுத்தால் உன் மனநிலை இன்னும் சிறப்பாக செயல்படும் என்பதால் இந்த நாடகத்தை நானும் படைத்தேன். புரிகிறதா?
சட்டென கண் விழித்த அந்த ஓவியன், ஓவியம் வைத்திருந்த இடத்தை பார்த்தான். அது அங்கு இல்லை. ஆனால் இருப்பது போல் இருந்தது.