கடைசிக் கைங்கரியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 17, 2022
பார்வையிட்டோர்: 2,542 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அழடா, தணிகாசலம், அழு . மரம் போல மௌனம் சாதிக்காதே! உன் சொந்த மனைவி, உன் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுப்பதற்கு உன் தாலிக்கயிற்றுக்குத் தலையை நீட்டிய உத்தமி, இதோ பிணமாய்க் கிடக்கிறாள்.

நீயானால் மௌனமாக , தூரத்து வெளியைப் பார்த்துக்கொண்டிருக்கிறாயே . உன் நெஞ்சம் என்ன இரும்பாகிவிட்டதா! அல்லது நீதான் என்ன சிலையாகி விட்டாயா?

மனிதப் புழுவே, நீ அழு; அழத்தான் வேண்டும்.

கண்ணீரே, நீ பொங்கிவா; மரத்துப்போன அவன் கண் வழியாகப் பொல பொலவென்று ஊற்று.

அவன் அழத்தான் வேண்டும். தணிகாசலம் அடித்த மரக்கட்டை போன்று கிழக் குப் பக்கத்துத் தூணோடு சாய்ந்தவாறு இருக்கிறான். அவனுடைய இடது கை மடிந்து நாடிக்குத் தாங்கல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. கண்கள் எல்லாம் கோவைப் பழம் போல் சிவந்து, மயிர் கலைந்து கருகிப் போய்க் காட்சி அளிக்கிறான்.

யார்தான், மனைவியைப் பறிகொடுத்து விட்டுப் பெருமையோடு உட்கார்ந்திருக்க முடியும்?

அதோ கட்டிலிலே எலும்பும் தோலுமாக இருக்கும் கமலாவை – இல்லை, பிணத்தைக் கிடத்தியிருக்கிறார்கள்.

வெள்ளை வெளேரென்று சீலை போர்த்தி இருக் கிறது. கண்களிலே சந்தனம்! நெற்றியிலே உலர்ந்த திருநீறு; அதன்மேல் குங்குமம்; இன்னும் பெரிய இடத்துப் பிணத்துக்கு வேண்டிய மரியாதைகளெல் லாம் குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.

கால்கள் இரண்டையும் கூட யாரோ பாதகர்கள் சணல் கயிற்றால் வரிந்து கட்டியிருக்கிறார்கள்.

எத்த நேரத்திலும் அணைவதற்குத் தயாராய்க் குத்துவிளக்கு ஒன்று படபடவென்று அடித்து வாழ்வின் அநித்தியத்தைக் காட்டியபடி அவள் தலைமாட்டில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு “கோலாகலங்களும்” அவளுக்குத் தெரியாது.

அவள் பிணம்!

“அண்ணை, அறைச்சாவி எங்கே?”

தணிகாசலம் தன் பரட்டைத் தலையை நிமிர்த்தி எதிர்மாடத்துத் தூணைப் பார்த்தான்.

திறப்பு அங்கே பத்திரமாக இருந்தது.

‘டீ , கமலா! அந்தத் திறப்பை நீ அங்கே வைத்த போது உனக்குத் தெரியுமா, அதை மறுபடியும் நீ எடுக்கப் போவதில்லை’யென்று?

எந்த நோயாளிதான் தான் இறக்கப் போவதாக எண்ணுவான். எல்லோருமே ‘பிழைத்துவிடுவோம்” என்றுதான் நம்புகிறார்கள் !

சாம்பசிவம் வந்தார். “என்ன தணிகாசலம் அப்படியே இடிந்து போயிருக்கிறாய். இருந்தாப்போல நடந்த காரியமே; எத்தினை நாள் அவளும் பாயோடு பாயாய்…”

“என்ன செய்கிறது; ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன போது கொஞ்சம் தென்பாய்த்தான் இருந்தாள்…ம்…இந்த கசமே இப்படித்தான்.”

யார் சொன்னது கசமென்று? அவள் இறந்த காரணம் எவருக்குத்தான் தெரியப்போகிறது?

கமலாவைப் பார்த்தான்; பக்கத்திலே வாயை அகலமாகத் திறந்தபடி கிடக்கும் பிரம்மாண்டமான முதிரைப் பெட்டியைப் பார்த்தான்.

அது அவளை “வாவா” என்று அழைத்துக்கொண்டிருந்தது.

அவளுடைய வெடித்த உதடுகள். ஒரு காலத்தில் கோவைப் பழம் போல் சிவந்திருந்த உதடுகள் தான் அவை.

எங்கிருந்தோ ஒரு இலையான் வந்து அந்தக் கீழ் உதட்டிலே உட்கார்ந்தது. அதைத் தொடர்ந்து பக்கத்திலே வந்து ஒட்டிக்கொண்டு உட்கார்ந்தது மற்றொரு இலையான்.

வழக்கம்போல அவளுடைய மெலிந்த விரல்கள் மெதுவாக அசைந்து அவற்றை விரட்டவில்லை. அல்லது “இஞ்சை ஒருக்கால் வந்து கொஞ்சம் விசிறுங்கோவன்; என்னை ஏன் இப்ப கவனிக்கிறியள்!” என்று கண் கலங்கவுமில்லை.

அவள் தன் பாட்டுக்குச் செத்துப் போய்க் கிடந்தாள்.

வருத்தம் என்று அவளுக்கு வந்ததும் தான் அவள் எவ்வளவு மாறிவிட்டாள். எப்பொழுதும் சிடுசிடென்று கிட்டவே போக முடியாது. எந்த நேரம் அவன்மேல் எரிந்து விழுவாள் என்று சொல்லவும் முடியாது. “என்னைச் கொல்லுங்கோ, நான் செத்துப்போறன்” என்று கத்துவாள்.

அவள் பாதிப் பிராணன் இப்படிச் சத்தம் போட்டே போய்விட்டது.

ஏன் இப்படி அவளுடைய தேகம் எல்லாம் மெலிந்து, பலமே இல்லாத நிலையில் அவளுக்கு இவ்வளவு முன்கோபமும், சந்தேகமும்? விடியற்காலை எழுந்ததும் அவளுக்கு பல்விளக்கி விடுவதிலிருந்து இரவு அவளுக்கு நித்திரை மாத்திரைக் கொடுத்துக் கால்பிடித்து விடும் வரை எல்லாவற்றையும் அவன் தான் செய்தான். கந்தோரில் வேலை பார்க்கும் நேரத்தில் மட்டுமே அவனுக்கு அவளின் பணிவிடை செய்வதிலிருந்து ஓய்வு.

ஆனால், அவளுக்கு என்னவோ அவனைக் கண்டாலே பிடிக்கவில்லை.

ஏன்? ஏன்?

அன்று தணிகாசலத்திற்கு கந்தோரில் ஓயாத வேலை. அன்று மாத்திரமென்ன? தொடர்ந்து ஒரு மாதகாலமாகவே, கம்பெனிக்கு வந்திருந்த புதிய மானேஜர் பழைய மானேஜரைத் திட்டியபடியே பழைய பைல்களை எல்லாம் புரட்டி ஆபிஸை ஒழுங்கு படுத்துவதாகப் பேர் பண்ணிக் கொண்டிருந்தார்.

அவருடைய மியூரியல் அம்மையார் ‘டார்லிங், இட்ஸ் டூ லெட் டுடே’ என்று அழைக்கு மட்டும் ஆபீசை விட்டு அவர் அகலவே மாட்டார். அவருக்கு எங்கே தெரியப் போகிறது தணிகாசலத்தையும், அவன் கட்டிக் கொண்டிருக்கும் அருமை மனைவியையும், அவள் கட்டிக் கொண்டிருக்கும் அபூர்வ வியாதியையும்?

தணிகாசலம் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த போது அவனுடைய மனைவி – அப்போது மனைவியாக இல்லை – பேயாக நின்றாள்.

“ஏன் இவ்வளவு நேரம்?”

இப்படித்தான் அவள் கேட்டாள். வெறும் வார்த்தைதான். ஆனால், அதை அவள் உச்சரித்த தொனி மூன்று உலகத்தையும் நடுங்கவைக்கப் போதுமான தாயிருந்தது.

தணிகாசலத்துக்கு நெஞ்சில் யாரோ இரும்புலக் கையால் அடித்தது போலிருந்தது.

“நீங்கள் ஒண்டும் சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியும் உங்கடை சங்கதி, ஊர் முழுக்கச் சிரிக்குது. நான் என்ன சாகப்போறவள் தானே…நீங்கள் அந்த மேரியோடை..”

“கமலா”

“என் வெருட்டிறியள்…கேட்பன், அப்படித் தான் கேட்பன்”

அவள் பிசாசுபோலக் கத்தினாள்.

தணிகாசலத்திற்குக் கோபம் வந்தால் என்ன செய்திருப்பானோ தெரியாது. ஆனால், அவன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். மெதுவாக அவள் தோளைத் தொட்டு “கமலா, கத்தாதே, கமலா! கத்திக் கத்தித்தானே உன்ரை உடம்பு இப்பிடியாய் போட்டுது. டொக்டர் எத்தினை தரம் சொன்னவர். படு கமலா..என்ரை கமலா எல்லே.” என்று என்னென்னவோ சொல்லித் தேற்றினான்.

ஆனால், அவள் சந்தேகம் என்னவோ தீரவேயில்லை.

தணிகாசலம் ஏதோ துரோகம் செய்து விட்டதாகவும் அதை மறைக்கத்தான் அவன் மாய்மாலம் செய்கிறான் என்றும் அவள் திடமாக நம்பினாள்.

அவள் நினைத்ததில் என்ன தவறு? ஆண்களின் மனதை வெகு சூட்சுமமாக அளந்து வைத்திருக்கிறாள்.

அடி கமலா, நீ நினைத்ததில் எள்ளளவும் பிழையில்லை. முற்றிலும் சரி. நான் தான் துரோகி, பெரிய துரோகி!

“டம் டம் டம்” என்று பறை முழங்கியது. தணிகாசலத்தின் மனத்தில் யாரோ சம்மட்டியால் அறைவது போன்று இருந்தது. அவனுக்கு, அந்தப் பறை மேளக்காரர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும் போலிருந்தது.

இன்னமும் கூட தன் வீடு “செத்த வீடு” என்று ஒப்புக்கொள்ள அவனுக்குத் துணிவு பிறக்கவில்லை.

கமலா உண்மையிலேயே இறந்து விட்டாளா? இனிமேல் விழிக்கவே மாட்டாளா?

திடீரென்று ஏதாவது அற்புதம் நிகழ்ந்து அவள் எழுந்து விட்டால்?

“என்ன மாமி, எத்தனை நாளைக்கெண்டு அந்த மனுசனும் அலையிறது; தொழிலைப் பார்க்கிறது எங்கே, வீட்டைப் பார்க்கிறது எங்கே…அந்த மனுசன் பட்ட பாட்டுக்கு ஒரு வழியாய் செத்ததுதான் நல்லதாய் போச்சு…”

“எண்டாலும் குடுத்து வைக்க வேணும். தாலியோட சாகிறது எல்லாருக்கும் ஆகிற காரியமே?”

“ஒரு மாதம் இரண்டு மாதமே? ஒரு வருஷம் – என்னென்ன கஷ்டத்தை அனுபவித்தாளோ?”

“உனக்குத் தெரியாதே?” என்றபடியே தணிந்த குரலில் “சாதகம் கொஞ்சமும் பொருத்தம் இல்லையாம்.”

“காதல் கலியாணத்தாலே வந்த வினை…”

தணிகாசலத்திற்கு ஆத்திரம் பொங்கியது. அந்த ஊத்தை வாயை அப்படியே பிடித்துக் கிழித்துக் கண்ட துண்டமாக்க வேண்டும் போல் இருந்தது.

“என்னைப் பெத்த ராசாத்தி, நீ என்னை விட்டுப் போட்டியோனே” என்று தனிக் குரல் ஒன்று பிலாக்கணம் வைப்பது கேட்டது. தணிகாசலத்தின் நெஞ்சம் திக்கென்றது.

அழுவது எதிர் வீட்டு இராசம் தான்.

இப்பொழுது மாத்திரம் கமலா உயிரோடு இருந்திருந்தால்…

***

அன்று அவனுக்கு லீவு. தணிகாசலம் வீட்டிலேயே நின்றான். கமலாவுக்கு அப்போது வருத்தம் சிறிது சுகமாகி வந்தது. காலையில் கொடுக்க வேண்டிய மருந்தைக் கொடுத்து உள் கூடத்தில் படுக்க வைத்து விட்டுத் தணிகாசலம் வெளி மண்டபத்தில் உலாவிக் கொண்டிருந்தான்.

திடீரென்று அவன் உள் உணர்ச்சி அவனுக்கு எதையோ அறிவித்தது. திடுக்கிட்டுத் திரும்பியவன் அப்படியே திகைத்து விட்டான்.

ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறே, தலைவிரி கோலத்துடன், மகா பயங்கரமாகக் காட்சியளித்தபடி நின்றாள் கமலா.

“என்ன அங்கே பார்த்து இளிக்கிறியன்?” என்றாள் கோபாவேசத்தோடு. திடுக்கிட்டுத் திரும்பியவன் அப்பொழுதுதான் பார்த்தான்.

எதிர்வீட்டுத் திண்ணையில், முழுகிய தலைமயிரைச் சிக்கெடுத்தபடி தன் பாட்டுக்கு, சுயநினைவின்றி நின்று கொண்டிருந்தாள் இராசம்.

தணிகாசலம் என்ன சத்தியம் செய்தும் கமலா நம்ப மறுத்தே விட்டாள்.

கமலா படுத்த படுக்கையாகிச் சரியாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. திடீரென்று ஒரு நாள் வேலைக்கார மனுஷியை விரட்டி விட்டாள். அவளை “மனுஷி” என்று சொல்வதுகூட உயர்வு நவிற்சி.

அவள் கிழவி.

‘கமலா! இந்தச் சந்தேகப் பிசாசு உன் களங்கமில்லாத இதயத்தில் எப்படிக் குடி புகுந்தது? என்னைப் பார்க்க அவ்வளவு இழிந்தவனாகவா தெரிகிறது? அவ்வளவு கேவலமானவனாகவா நான் தோற்றுகிறேன்?

நீ, பிழைவிடவில்லை, கமலா. நீ நினைத்தது முற்றிலும் சரிதான். நான் பாபி! மன்னிப்புக்குத் தகுதியில்லாத பாபி! நான் இன்றைக்கு உணருகிறேன். நீ என்றைக்கோ உணர்ந்து விட்டாய்.

நீ கெட்டிக்காரி, பெரிய கெட்டிக்காரி.’

செத்த வீடு களை கட்டி விட்டது. புளியமரத்தின் கீழே ஒரு துண்டை விரித்துவிட்டு ‘வெட்டு, இறக்கு’ விளையாடிக் கொண்டிருந்தார்கள் புருஷர்கள்.

அந்த விளையாட்டுத் தெரிந்தவர்கள், அல்லது விளையாட இடம் கிடையாதவர்கள் சுற்றிவர நின்று அவ்வப்போது இலவச ஆலோசனைகள் கூறிக் கொண்டிருந்தார்கள்.

“இதென்ன சுருட்டப்பா , இது? குடித்தால் குடிக்க வேணும் வானா கானாவின்ரை…என்ன கைச்சல்” என்று அபிப்பிராயம் கூறியபடியே, வீட்டுக்கும் இரண்டு சுருட்டு மடியில் வைத்தபடி, புகை பிடித்தார்கள் வயதில் சிறிது முதிர்ந்தவர்கள். வேறு சிலர் நாவிதனிடம் தங்கள் மோவாயை நீட்டி சவரம் செய்து கொண்டிருந்தார்கள்.

இன்னும் சிலர் கோடிப்பக்கத்துக்குப் போய்விட்டு வாயைச் சப்புக் கொட்டிக்கொண்டே, கால்கள் ஒன்றையொன்று உள் வாங்க வந்து கொண்டிருந்தார்கள்.

பெண்கள் பகுதியில், வெற்றிலைத் தட்டமும், பழங் கதைகளும் அவர்களுடைய வாயை, இடைவிடாமல் ஆடவைத்துக் கொண்டிருந்தன.

ஊரே பிரமிக்கும்படியாக அலங்காரமான தண்டிகை வாசல் புறத்தில் உருவாகிக் கொண்டிருந்தது. மாணிக்கம் – பிரேதமாய்க் கிடப்பவளின் தந்தை – யாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார். ஊரைப் பிரமிக்க வைப்பதற்கு இதைத் தவறவிட்டால் அவருக்கு வேறு ஏது சந்தர்ப்பம்?.

ஒப்பாரி கானம் வர வர உச்ச நிலையை அடைந்தது. கோஷ்டி கானங்களும், தனி ஆவர்த்தனங்களும் மாறி மாறி ஒலித்தன.

பெண்களில் சிலர், ஊர்ச் சில்லறைத் தகராறு களை எல்லாம் தங்கள் கவிகளில் வைத்துப் பாடிக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் இறந்துபோன எந்த மூதாதையரையாவது நினைத்து கண்ணீரை வரவழைக்கக் குறுக்கு வழிகளைக் கையாண்டனர். சுட்டுப் போட்டாலும் கண்ணீர் வராத சிலர், அதைப் பற்றிக் கவலையே படவில்லை. ஒப்பாரி மாத்திரம் சொல் பிசகாமல் அடுக்கடுக்காய் வந்தால் போது மென்பது அவர்கள் கட்சி.

தணிகாசலத்தைக் கவனிப்பார் இல்லை . அவனுடைய மனைவியின் அருமையை உள்ளபடி உணரக் கூடியவன் அவன் ஒருத்தன் தான்.

அதிலும், அனாதரவான நிலையில் அவள் இறந்த கொடுமையை அவனையன்றி வேறு யார்தான் அறியக் கூடும்?

***

ஆஸ்பத்திரியில் கமலாவைச் சேர்த்த போதே எப்படிக் காலம் தள்ளப் போகிறோமோ என்று பதைத்தான் தணிகாசலம். ஆனால், ஆஸ்பத்திரியில் அவன் நினைத்ததற்கு எதிர்மாறாக நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கின. அவன் மேல் அவள் எரிந்து விழவில்லை; மௌனமாகி விட்டாள். தன்னுள் நிறைந்த ஒரு மோனத்தில் அவள் ஆழ்ந்து விட்டாள் போலும்.

நர்ஸ்மார் படுக்கைக்குக் கிட்ட வரும்போது தணிகாசலம் காத தூரத்தில் நிற்பான். எங்கே, சமய சந்தர்ப்பம் தெரியாமல் கமலா ஏதாவது உளறி விடுவாளோ என்று அவன் பயந்து செத்தான். ஆனால், கமலா வழக்கம் போல் சந்தேகப்படவே இல்லை. ஏனோ, கொடூரமான மௌனத்தைக் கடைப் பிடித்தாள்.

கமலா…அடி கமலா…உன்னுடைய அந்த அரிய குணத்தை எதற்காக மாற்றினாய். என்னுடைய நடத்தையில் திடீரென்று உனக்கு பரிபூரண நம் பிக்கை ஏற்பட்டு விட்டதா?

என்னைக்கூட நம்பினாயா?

***

திக்கென்றது. அநாவசியமாக அவள் சிரித்தாள். அவசியமில்லாததற்கெல்லாம் பேசினாள்.

அட, முடா, தணிகாசலம்! அப்போதாவது உணர்ந்தாயா?

டொக்டர் வந்து கமலாவைப் பரிசோதித்தார். அன்று இராத்திரி பன்னிரண்டு மணி மட்டும் கவனத்துடன் இருக்கவேண்டும் என்று சொன்னார்.

இன்று இரவு பன்னிரண்டு மணிக்கு, ஜெர்மனியிலிருந்து பெறப்பட்ட அந்த அரிய மருந்தை கமலாவுக்கு ‘இஞ்செக்ட்’ பண்ணுவார்கள். அதை ஏற்றினால் அநேகமாக அவள் பிழைத்து விடுவாளாம்.

தணிகாசலத்திற்கு நம்பிக்கை மறுபடியும் துளிர்த்தது. இரவு; தணிகாசலம் மனம் குழம்பித் தவித்தான்.

நர்ஸைக் காணவில்லை. தணிகாசலம் அவளைத்தேடி உள்ளே போனான்.

அவள் நின்று கொண்டிருந்தாள். சிரித்தபடியே சொன்னாள்; “மறந்து விட்டேன் என்று பயந்து விட்டீர்களா? இந்த மருந்தைப் பையிலை வையுங்கள். சிறிஞ்சையும், பஞ்சையும் எடுத்துக்கொண்டு வந்து விடுகிறேன்.”

அவள், ஏதோ சொன்னாளே தவிர, அவள் கையில் இருந்த ஊசிபோன்று அந்தச் சிரிப்பு அவனைக் கொன்றது.

“சிஸி, நீங்கள் என்ன சொல்கிறீர்கள், அவள் தப்புவாளா?”

அவன் நிர்க்கதியாக நின்றான்; கண்கள் நீரைக் கோத்து கொப்பளிக்கத் தயாராக நின்றன.

ஒரு குழந்தையைப் போல, யார் தன்னை அணைத்து, ஆறுதல் சொல்வார் என்று ஏங்கி நின்றான்.

‘நைட் டியூட்டிக்கு’ வந்த அந்தப் புதிய நர்ஸைப் பார்த்தபோது ஏனோ தணிகாசலத்துக்கு நெஞ்சம் தேறுதல் என்ற பனித்துளிக்கு அவன் தாகமாய் தவிப்பது வடிவாகத் தெரிந்தது.

“நீங்கள் ஆண்; இதற்கே இப்படிக் கலங்கினால்…உங்களைப் பார்க்க எனக்கும் தான் மனது கலங்குகிறது. இதோ…இங்கே பாருங்கள் -”

அவள் அப்படிக் கூறியபோதே அவளுடைய கரங்கள் அவனைப்பற்றி இருந்தன.

அவன் என்ன பேசினான்; அவள் என்ன கேட்டாள்? மந்திரத்தில் கட்டுண்ட சர்ப்பம் ஆனான்.

கால வெள்ளம் வரையரையின்றி யுக யுகாந்திர மாக ஓடி வடிந்தது.

வெளிச்சம் கண்ணை உறுத்தாதபடி மூடிய அந்த “டோம்” விளக்கு, அதுதான் முதலில் கண்ணில் பட்டது – எங்கோ வெகு வெகு தூரத்தில்.

அவன் உள்ளுணர்வு எதை உணர்த்தியதோ, அவன் திரும்பிப் பாராமல் ஓடினான். ஆனால் மனம் மாத்திரம் வேகமாக அடித்துக் கொண்டது.

அவன் நினைத்தது நடந்துவிட்டது; அவள் அலங்கோலமாகக் கிடந்தாள். அரைவாசி படுக்கையிலும், அரைவாசி கீழேயுமாக அநாதரவாகத் தொங்கிக் கொண்டு கிடந்தாள்.

அவளுடைய மெலிந்த கைகள் கேட்பாரற்று நீண்டு கிடந்தன.

***

ஓமப் புகை கண்ணை மறைத்தது.

சுண்ணம் இடிக்க வைத்திருந்த பிரம்மாண்டமான உலக்கையையும் உரலையும் பார்த்து தணிகாசலத் திற்கு இரத்தமெல்லாம் உரைந்து விட்டது.

சுண்ணம் இடிக்கும் அந்த உரிமை அவனுக்கு இருக்கிறதா?

கமலாவை நேரத்தோடு சுடுகாட்டிற்கு அனுப்பி வைக்க ஆர்வம் கொண்டிருந்த இரண்டொருத்தர் ஐயரை அப்படியும் இப்படியும் ‘அஸிஸ்ட்’ பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

“தணிகாசலம் எங்கே?”

அவன் அசையவில்லை.

“எட தம்பி, தணிகாசலம், இரண்டு வாளியைத் தலையிலை ஊத்திக்கொண்டு வா; ஐயர் காத்துக்கொண்டிருக்கிறார்.”

வெளித் தோற்றத்திலாவது புனிதமாக இருக்க வேண்டுமாக்கும்.

அவன் சிலையாக நின்றான்.

“எழும்பு தம்பி, சவம் நாறப்போகுது.”

தணிகாசலத்திற்கு அவருடைய பல்லை அப்படியே பெயர்த்துவிடலாம் போலிருந்தது.

சவமா? நாறப் போகுதா?

அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.

“சட்டையைக் கழட்டு தணிகாசலம்.”

மெதுவாக அசைந்தான்; மேற் சட்டையை வேண்டா வெறுப்பாகக் கழற்றினான்.

அவன் காலடியில் ஏதோ விழுந்து உடைந்தது.

வேறொன்றுமில்லை. முதல் நாள் இரவு நர்ஸ் கொடுத்தாளே – அந்த மருந்துச் சீசா, பிரபலமான – போகும் உயிரைப் பிடித்து வைக்கும் – ஜெர்மன் மருந்து.

மறுபடியும் அவன் சிலையாகி விட்டான்.

– 1958, அக்கா, முதற் பதிப்பு: டிசம்பர் 1964, பாரி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *