கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2023
பார்வையிட்டோர்: 4,266 
 

(1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்த நாலஞ்சு நாளைக்குள் தேனு இப்படி அன்னியோன்னியப் பட்டுப் போய்விடுவோம் என்று அவன். என்னிக்கும் நினைத்துப் பார்த்தவன் இல்லை.

எல்லாம் புதுசாய், க்ஷண நேரத்தில் மனசு அப்படியே ஒட்டிப் போகச் செய்யும் சொகம். அவளுக்கு மட்டுமா?

அவள் புருஷன் மனக சில்லாப்பில் குளிர்ந்து போயிருந்தது. அவளிடம் எல்லாத்தையும் தான் எடுத்துக் கொள்ள உரிமை கொடுக்கச் சுண்டு விரல் மொத்தத்தில் மஞ்சக் கயித்தைக் கட்டிக் கொண்டல்லவா இருக்கிறாள்.

கல்யாணவாசம் இன்னும் கொஞ்சமும் விடவில்லை. சுவைந்து அவள் புருஷன் பிடிக்குள் ஒடுங்கிக் கிடந்தாள். ரெண்டு பேருக்கும் இடையில் காத்து செலாமணியாய் போய் வர இடைவெளி கொஞ்சம் இருக்கத்தான் செய்தது. அவனுக்கு நிகா தெரியாத தூக்கம். அதிலும் அவள் கால் மீது அவன் காலைப் போட்டிருந்தான்.

அப்படிப் போட்டுக் கொண்டு சொகத்தை தூங்குவதில் உள்ள திருப்தியை வெகு சுலபமாய் உணர்ந்து கொண்டிருந்தான்.

செவுத்தை ஒட்டிப் போடப்பட்டு இருந்தது ஜோடி ‘பெஞ்ச்’ – வைரம் பாய்ந்து, முறுகிப் போன அல்வா கலரில் இருக்கும் ஒதியன் பலகை. குளிர்ச்சிக்கு கேட்கவா வேண்டும். அதுக்குள் அடங்கிப்போன இலவம் பஞ்சு மெத்தை. ‘மெதுமெது’ப்பில் படுத்துப் படுத்து அனுபவிப்பதில் காணும் சொகத்தை இதுநாள் வரையிலும் அவன் கனவில் கூட கண்டதில்லை.

அவள் அம்மாவின் சேப்புக் கல் தோட்டின் சுனத்தைக் குறைத்து அவள் அப்பா வாங்கித் தந்தது. பட்டுப்பாய் வாங்காமல் ஜமுக்காளம் கொண்டு வந்ததில் அவன் அம்மா வுக்குக் கொஞ்சம் ‘முணுமுணுப்’பான குறையும் உண்டு.

கூரைக்கு மேல் தெக்காலும் கூரைக்கு வடக்காலும் விடியல் குருவிகள் கீச் சிட்டுப் பறந்து கொண்டிருந்தன. செவுத்தை ஒட்டி இருந்த தஞ்சாவூர் கொய்யாமரத்தில் உட்கார்ந்திருந்த ஒத்தைக் ‘காக்கா’ கத்தியது.

வீட்டுக்குக் கீழண்ட பக்கம் வீட்டுக்குக் கோழி கொட்டாயில் ‘வலை’ அடைப்பில் இருந்த எறநூறு கோழிகள் – சில தண்ணிக்காக ‘கொக்…கொக்’ என்று சுத்தின. எறக்கையை அடித்துக் கொண்டு கிடந்தன.

இவைதான் அவன் கல்யாண மாப்பிள்ளையாக உட்கார வழி வகைச் செய்தன.

அவன் பத்தாம் கிளாஸ் பெயில் ஆனதும் என்னா செய்யிறது என்ற நெனப்பில் ஊரைச் சுற்றி வந்தான். அப்பாகாரருக்கு, மகன் படிச்சுட்டான் அவன ‘வண்டியில கண்ணில’ போட வேண்டாம். ‘கா’ காசு உத்தியோகம் ஆனாலும், ‘கவுரு மெண்டு” உத்தியோகம்தான் வேணும். அவருக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் போய் யோசனை கேட்டார். இருக்கிறத வித்துப்புட்டாவது கொடுத்து வேல வாங்கிப்புடணும்னு ஆளாய் பறந்தார்.

அவனைப் பொறுத்த அளவில், ‘ஒருத்தன் கிட்டேயும் கை கட்டி சேவகம் பண்ண வேண்டாம். சொந்தக்கால்ல நின்னுதான் தொழில் செய்யணும்…’ மனசின் வைராக்கியம். இந்த நெனப்பில் இருந்தவாசி படிப்பில் கூட கவனம் இல்லாமல் இருந்து விட்டான் என்று அவன் அம்மா வசுக்கொண்டிருப்பாள்.

அவன் மாமனின் யோசனையிலும், அவரின் ‘ரெக்கமண்டேச’ னிலும் கடன் வாங்கி கோழிப் பண்ணை வைக்க முடிந்தது. ஈட்டுக்கும் பாட்டுக்கும் பாதகமில்லை. நாலு காசைக் கையில் பார்க்க முடிந்தது.

மாப்புள்ள வீடு பார்க்க வந்த போது அவன் அம்மாவின் மனசில் ஒரு குறுகுறுப்பு இருந்தது.

‘…மாப்புள்ள லெட்சணமாத் தான் இல்ல. பரவா இல்லன்னு கொடுக்கலாம்னு நேனச்சா ‘நெலம் நீச்சுதான் இருக்கா? மாப்புள்ளைக்கு பின்னால் ஒரு பொண்ணும் புள்ளையும் வேற இருக்கு, சம்மந்தி ‘சத்த வண்டி’ ஓட்டி எவ்வளதான் சம்பாத்தியம் செஞ்சாலும், பொண்டாட்டிக்கு பூ வாங்கிக் கொடுக்கன்னு அப்பாரு கையவா பாத்துக்கிட்டு. நிக்க முடியும்?’

‘நீ சும்மா ‘தொண தொணப்பா’ பேசாத. செத்த நாழிதான் பாத்தோமே. மாப்புள்ள ஒரு நாழி சும்மா இருந்துச்சா? கோழியோளுக்கு தண்ணீ வைக்கிறதும் தீனி போடுறதும்… என்னா சுறுசுறுப்பு? கால்ல சக்கரத்த கட்டிக்கிட்டுல்ல நின்னுச்சு… கோழி முட்டய வித்தே நம்ம பொண்ணு ‘தேனு’ எட்டுசித்திரம் பண்ணிப்புடுவா… அவளும் லேசுப் பட்டவளா?”

அவள் அப்பா வாயடைத்தார்.

தேனுவுக்கு விழிப்பு வந்து விட்டது. மங்கலான இருட்டு.

வீட்டில் ‘கரண்ட்’ இருந்தது. இருந்தாலும் ‘அவசரமன்ன என்ன செய்யுங்க?’ என்ற நெனப்பில் அவன் அம்மா சிம்னி கிளாஸ் விளக்கைக் கொளுத்தி பொட்டு போல எரியவிட்டு மாட்டியிருந்தாள்.

புது மூங்கில்களைத் துளைத்திருந்த வண்டுகளின் ரீங்கார சப்தம். அதைத்தாண்டி கோயில் மானியத்தில் நடக்கும் அறுவடை ஆட்கள் ‘ஏய் தவிசு முத்து! ஈசானி மூலையில எறங்குடா… நெரஞ்சான் கன்னி மூலையில எறங்கி இருக்கான்டோய்.. பதிய புடுங்கடோய்…’

சப்தம் அலை அலையாய் பரவி வந்தது.

குப்பென்ற சப்போட்டா வாடை. தேனுவுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. சப்போட்டா என்றால் அவளுக்கு அவ்வளவு உயிர். இங்கு வந்த நாலஞ்சி நாளைக்குள் கொல்லையைச் சுற்றிப் பார்த்த வகையில் அக்கம் பக்கத்தில் கூட சப்போட்டா மரமில்லை. இது எப்படி? யோசிக்கக் கூட அவகாசமில்லை.

பழத்தின்னி வௌவால் ‘ஜிவ் ஜிவ்’வென்று எறக்கையை விரித்து சுருக்கிப் பறந்து போகும் மெல்லிய சப்தத்தை அவளால் கேட்க முடிந்தது.

இனிமே தூக்கம் வராது. எப்படி வரும்? நாலு மணிக்கே முழிச்சு வீட்டு வேலைகளைப் பார்த்து விடுபவளா யிற்றே தேனு.

சுக்குமல்லி போட்ட காப்பி வைத்து அவள் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கொடுத்துத் தானும் குடித்து விடுவாள். இந்நேரம் கடலைக் கொல்லைக்குப் புறப்பட்டுப் போய் இருப்பாள். அந்தப் பழக்கதோஷம் கை முணுமுணுத்து அரிப் பெடுத்தது.

புரண்டு படுத்தால் கூட புருவுனுக்கு இம்சை கொடுத்தது போல ஆயிவிடுமோ? பயம் வேறு. அப்படியே ஆடாமல் அசையாமல் படுத்து கொட்டக் கொட்ட முழிச்சிக் கொண்டிருந்தாள். மோட்டு ‘வளை’ குச்சை, வரிச்சை எண்ணி எண்ணிப் பார்த்தாள்.

மேல் கூரை பொத்தாம் பொது வாய் மூங்கிலில் ‘வில்’ போட்டு கட்டப் பட்டிருந்தது. இது என்ன கட்டு? அவள் சித்தப்பா கட்டின கூரையாக இருந்தால் ‘பம்பரமாய்’ இருக்கும். இதில் ஒண்ணும் ‘சவரட்சணை’ இல்லை. அவள் மனசு சொல்லிக் கொண்டது.

ஏழடி உயரச் செவுர். ஆளோடி. கூடம்.அடுப்பாங்கரை. முன் பக்கத்து சார்ப்பு எல்லாம். செவத்துக்கு மேல் ஏகமாய் திறந்து கெடந்தது. அவர்கள் படுத்திருந்த அறைக்கு மட்டும். புதுக் கதவு.

மாப்புள்ள பாக்க வந்தப்பதான் அவள் அம்மா ‘அசந்தமந்து’ படுத்துக்கக் கூட ஒரு மறப்பு இல்ல. அவள் அப்பாவிடம் முணுமுணுத்தாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அம்மா, அவன் அப்பாவிடம் நச்சரிக்க கல்யாணத்திற்கு ரெண்டு நாள் முந்திதான் ஏற்பாடு செய்தார். மத்தபடி எல்லாம் கொப்பறை வாசப்படி.. அந்தக் கதவிலும் ‘தாழ்ப் பாள்’ இல்லை. சும்மா சாத்தியிருந்தார்கள்.

மஞ்சக்காளி பூசப்பட்ட செவுர். தொட்டால் ஒட்டிக் கொள்கிறது. நேத்துக்கூட இப்படித்தான்…

‘போதும் விடுங்க’ திமிறிக்கொண்டு எழுந்து வந்தபோது கை காலெல்லாம் சாயம்.

‘என்ன தேனு’ மஞ்ச தண்ணீ வௌயாண்டப்பள இருக்கு… இன்னிக்கு எத்தினாம் நாளு…?

‘பீளி’யில் தண்ணி அடிக்கும் போது மூணாவது வீட்டுக் ‘குஞ்சாலி’ நையாண்டியாகக் கேட்டாள்.

வெக்கம் பிடிங்கித் தின்றது. மனசுக்குள்ளேயே போட்டு அதக்கிக் கொண்டவள். ‘அப்படி ஒண்ணுமில்லக்கா… பொறண்டு படுத்தேன்னா…. சாயம் ஒட்டிக்கிது.’ அப்போது சமாளித்து வைத்தாள்.

இப்பயும் அதுபோல் ஆகவேண்டாம் என்ற கங்கணம் வேறு, செவத்துப் பக்கம் ஒட்டிப் படுக்கவே பயம்.

***

ராத்திரி முச்சூடும் அவள் புருஷன் அவளை நெஞ்சுக்குள்ளேயே வைத்து பொத்திப் பொத்திக் கிசுகிசுத்தான். எவ்வளவோ பேசினான். எவ்வன நேரம் பேசினானோ, எப்படி எப்படியெல்லாம் பேசினானோ. எல்லாமே சாகசமாகப் பட்டது தேனுவுக்கு. பல சேதிகள் புரிதல் இல்லை. ஒட்டுதல் இல்லை.

‘தேனு! நீ என்னை எப்பவும் சந்தோஷமா வைச்சுக்கணும். என் ஆசயெல்லாம் தீத்து வைக்குனும்…’

அவள் எதுவும் சொல்லாமல் அவனையை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த அறையில் முன்பனியின் எச்ச சொச்சத்தில் பாய்ச்சல் ஊதலாய் அந்த அறைக்குள்…

அவனின் மூச்சுக் காற்றின் வெதுவெதுப்பு அவளுக்கு அப்போதைக்கு தேவைப்பட்டது.

‘…எங்க வூட்டுல எல்லாரும் கருப்புதான். எனக்கு வரப்போற வளாச்சும் நல்லா சேப்பா மொழு மொழுப்பா அழகா இருக்கணுன்னு ஆசப்பட்டேன். அம்மாவும் பாத்துப் பாத்து உன்னைக் கொண்டாந்து காட்டினதும் நான் ஆசப்பட்டது போல நீ இருந்த. அதான் பத்து நாளைக்குள்ள கல்யாணம் கட்ட வச்சேன், நீ எனக்கு சேப்பா அழகா ஒரு ஆம்புளப் புள்ள பெத்துக் கொடுத்து ‘கருப்பன்சாமி’ குடும்பங்கிற பேற மாத்தி வைக்கணும்…என்ன…? செய்வியா…?’

அவளால் உதட்டை மட்டும் கொஞ்சம் பிரித்து சிரிப்பைத்தான் காட்ட முடிந்தது.

‘…என் அம்மா என் பேச்சுக்கு அடுத்த பேச்சு பேசாது. எம் மேல் அதுக்கு அவ்வள ஆச… வூட்டுக்கு வேணுங்கிறத நான்தான் வாங்கி யாந்து போடணும். துணிமணிகூட நான் எடுத்தாந்து கொடுக்கிறதுதான். அப்பா, பணத்த அம்மா கிட்ட கொண்டாந்து கொடுக்கிறதோடு சரி. அம்மா என்கிட்ட கொடுத்துடும். நான் என்னா செஞ்சேன் ஏது செஞ்சேன்னு கேப்பாங் கேள்வியே கெடையாது…’

தேனுவுக்கு அதற்கு மேல் எதையும் மனசில் வாங்கிக் கொள்ளும் படியான நெலமை இல்லை. அலுப்பாய் இருந்தது.

அவளை உணுப்பாய் கண்டு கொண்டான். ‘என்ன..?’ சீண்டியபடி நெருக்கத்தைக் கூட்டினான். அவன் சில்மிஷத்தில் அவள் நெகிழ்ந்து போனாலும். புள்ளப் பெத்துக் கொள்வதில் உள்ள அவசரத்தை அவள் மனசு தோண்டித் தோண்டிப் பார்த்தது.

சொன்னா ஏத்துக்குவாரோ? ஏத்துக்க மாட்டாரோ…? இதில ‘பிகு’ பண்ணி… மத்தவங்களுக்கு தெரிஞ்சா… இளப்பமா போயி என்னமோ ஏதோன்னு ஆளுக்கு ஆள் கண்ணு காது மூக்கு வச்சு பேச எடம் கொடுக்க வேண்டாம் என்று அவனோடு உடன்பட்டான். அவளை மீறி அவள் உடம்புதான் என்னமாய்…

அவளோடு ஒன்பதாம் கிளாஸில் படித்த கோமதி ரெண்டு வருஷத்துக்கு முன்னால கல்யாணம் கட்டிக் கொண்டு போன ஏழாம் மாசமே வயித்தைத் தள்ளிக்கொண்டு வந்து நின்றாள். அவள் முகத்தில் இருந்த வெட்கத்தை கூச்சத்தை உடைத்த தேனு. ‘அதுக்குள்ள என்னாடி அவசரம். பொறுத்துக்க முடியலியாடி. அப்படி என்னாடி…’

கண்ணடித்து கன்னத்தை திமுண்டி, ‘புருஷன் கிட்ட பேசி ரெண்டு வருஷம் தள்ளிப் போட்டுட்டு ஜாலியா இருந்து ஆண்டு அனுபவிச் சுட்டு பெத்துக்கிட்டா என்னடி…?’

‘நான் எப்படிடீ சொல்றது. அவரு என்ன விட்டாதானே…?’

‘நீதான் என்னைப் பாக்கப் போறீயே. எனக்கு கல்யாணம் ஆகட்டும். மூணு வருஷம் கழிச்சு தான் பெத்துக்குவேன். அதுக்குள்ள எங்கங்கப் போவனுமோ போயி பாத்து ஜாலியா இருந்துட்டுதான்…’

பழைய நினைவுகள் மனதில்… பேந்தப் பேந்த முழித்தவள் அவன் பிடிக்குள் அவளை அறியாமலேயே நெகிழ்ந்து கிடந்தாள்.

‘…என்ன தேனு…? ஒண்ணுமே சொல்லல….’

என்னத்தச் சொல்லுவாள். அப்படிச் சொன்னாலும் அவள் சொல்ல நினைப்பதை அவன் ஏத்துக்கொள்ளும் மூடிலா இருக்கான்?

‘தூக்கம் வந்துட்டா…?’

மூச்சுக் காத்து அவளைப் பதப்படுத்தியது.

‘ஆமாம்’ என்பது போல தலையாட்டினாள்.

‘என்னத்த செய்யச் சொல்ற…? காலையில் இருந்து ‘லோ வோ’ன்னு நின்னுப்புட்டு, சாயந்தரம் திருவாரூர். கொண்டுபோய் முட்டைய போட்டுட்டு வந்தேன். இங்க வந்து சுத்துப்பட்டு வேலையப் பாத்துட்டு வரவும், அதுக்குள்ள அப்பாவும் வந்து சாப்புட்டு வீடு அடங்கிறதுக்கு மணி பத்துக்கு மேல ஆயிடுது. உங்க வீட்டில் நீ எப்படி?’

‘… ஏழு மணிக்கெல்லாம் சாப் பிட்டுட்டு படுத்துப்புடுவோம். ஒன்பது மணிக்கெல்லாம். காக்காக் குருவி
சத்தம்தான். ஒரு ‘நருள’ பாக்க முடியாது. ஊரே கப்சிப்ன்னு அடங்கிப் போயிடும்… எனக்கு இப்ப ரெண்டாம் ‘ஜாமமா’ இருக்கும்.’

உதட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டவன்… ‘இப்பப் பழகிக்க. எல்லாம் பழக்கமாயிடும்…’ சொல்லிக் கொண்டே முரட்டுத்தனமாக அவளை….

அவளுக்கும் ‘இம்புட்டும்’ இச்சை இல்லை. இம்சையாய்த்தான் உணர்ந்தாள். தூக்கம் தூக்கமாக வந்தது. உடம்புள் இனம்புரியா வலி. முணு தாளாய் இப்படித்தான் மூர்க்கமாய்…

‘ம்… உடுங்க…’ என்று சொல்லி தள்ளிவிடவா முடியும். அப்படிச் சொல்லி விட்டால் ஆம்பள மனது எத்தன அர்த்தம் எடுத்துப்புடும் தெரியுமா? உள்வாங்கிக் கொண்டாள்.

இனம்புரியாத வலிக்கு இதமாய் ஒத்தடம் கொடுத்து… பக்குவமாய் பிடித்துவிட்டு இறுக்கத்தைத் தளர்த்தி அமுக்கிவிட்டால் சுகமாய் இருக்கும் போல இருந்தது.

‘எட்டியே இந்தா பாருங்கடி. புருஷன் ஆசப்பட்டத ஆக்கிப் போட்டும், போட்டு காட்டுறத போட்டுக்காட்டி பாத்துப்புடனும்டீ. இல்லாட்டி அங்க இருந்து வருமா இங்க இருந்து வருமான்னு நாக்கத் தட்டிக்கிட்டு நிப்பானுங்க. சரிதான்னு உட்டீங்க. உங்க கைப்பதம் அவனுங்களுக்கு மட்டுப்படாத போயிடும். அதான் போனதும் புருஷனை வளைச்சு உங்க கையில போடுங்கடி…’

சாத்தனூர் கெழவி ஒரு புருஷன் பொஞ்சாதி பிரச்சினை பேசும்போது. தன் பேத்திகளிடம் கண்டித்த அந்த நெனப்பு தேனுவுக்கு மனதிலேயே குந்தியிருந்தது.

புருஷன் மனசு நோகாமல் நெளிந்து ஒருக்கணித்தான். அவள் கை வளையல்… கொலுசு கூடக் கிணு கிணுத்தது.

‘தேனு! வளையலும் கொலுசும் சத்தம் போடுதே…’ அவள் காதுக் குள் கிசுகிசுத்தான். லைட்டைக் கூட போடாமல் பயந்து இருளிலேயே மெல்லிய பாய் நாரை தேடிப்பிடித்து, வளையலை ஒண்ணு சேத்து கட்டி விட அவன் பட்டப்பாட்டை அந்த மனநிலையிலும் அவளால் ரசிக்க முடிந்தது.

கூடத்தில் எட்டாம் கிளாஸ் படிக்கும் அவன் தம்பி. ஆறாம் கிளாஸ் படிக்கும் தங்கச்சி மலரு. அம்மாவோடு படுத்திருக்கும் அவர்கள் காதில் விழுந்தால்…அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

மூணு நாளாய் இந்த நெனப்பு இல்லை என்பது வேறு சுவாரசியமான கதை.

***

புருஷன் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தாள் தேனு. பிரக்ஞை இல்லா தூக்கம். ‘ரெண்டு நாளைக்குள்ள ‘அது’ மொசத்தில எவ்வள தெளிவு. சந்தோஷம்… எப்படி வந்துச்சோ…’

ஆசையின் எச்ச சொச்சம் முகத்தில் இருப்பது தெரிகிறது. ‘ம்… என்னா அவசரம்? என்னா பாடு? அதான் இப்ப இந்தத் தூக்கம்…’இப்ப ‘அப்படி’ இருந்தால் தேவலாமோ? உடம்பில் புதிய அதிர்வுகள். மனசில் ஏதோ ஏதோ ‘கிச்சு கிச்சு’ மூட்டியது. புருஷன் நெஞ்சின் மீது தலைவைத்து அவன் மீது பரவி இதயத் துடிப்பை உணர்ந்து, செல்லமாக கன்னத்தைக் கிள்ளி அவனை அப்படியே உலுக்கி எடுக்க ஆசை தான். அப்படிச் செஞ்சா தப்பா நெனப்பாரோ?

‘பொட்டச்சிக்கு திங்கிறதுலயும் (உடல் ரீதியான சுகம்) உங்குறதுலயும் ரொம்பதான் குசி கூடாது. போடி தின்னது போதும்’. தேனுவின் தங்கச்சி இன்னும் வேணும் என்று அடம்பிடிக்கும்போது அவள் அம்மா இப்படித் திட்டி நிமுண்டி அனுப்பும் நினைவுகள்.

எழுத்து வெளியே போய் கிணத்தடியை சுத்தி உள்ள செம்பரத்தை, கொய்யா மரங்களிடையே விடியலில் தாவித்தாவி ஓடும் அணில்கள், நார்த்தங்குருவிகள் அலைகளில் சங்கேதங்களின் பாஷைய கேட்டு ரசிக்க ஆசைதான் தேனுவுக்கு.

முந்தா நாள் இப்படித்தான் அவள் புருஷன். ‘வா! வெளியில போய் உட்கார்த்துட்டு வருவோம்ன்னு’ சொன்னான். லைட்டைக் கூடப் போடாமல் ஓசைப்படாமல் கதவைத் திறந்து வெளியே வந்தார்கள். கூடத்திற்கு வரும்போது ‘சாமி’ மாடத்துப் பக்கம் அவள் நாத்தி மலரு அவள் அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டு கிடந்தாள். அவன் தம்பி புரண்டு வந்து கூடத்து நடுவில் கையையும் காலையும் பரப்பிக் கொண்டு கிடந்தான்.

‘தேனு! பாத்து வா’ முன்னால கொல்லைப்புறக்கதவு போனவன் தொண்டி நாதாங்கியைத் திறந்தான்.

‘தம்பி!’

அவன் அம்மாதான், ‘சாமத்துல பாப்பாவ கொல்லப்பக்கம் அழைச் சுட்டுப் போவாத…. ‘பூவாசம் மாறுல….’ காத்து கருப்பு எங்க எங்கன்னு நிக்கும். தெருப்பக்கம் போங்க…’

அவனால் அம்மாவின் பேச்சை தட்டமுடியவில்லை தெருக்கதவைத் திறந்து கொண்டு வந்தார்கள்.

‘எப்பா, எட்டிப் போயிடாதீங்க. எதர்க்காலே போங்க…’

அவன் அப்பா இறுமியபடி சொல்லிவிட்டார்.

அவள் நாத்தினா மலரு காலையில் தெரு கூட்டும்போது புழுதிமண்ணில் பரளியிருந்த ஈரத்தை மறைக்க காலால் மண்ணைத் திரட்டித்தள்ளும் போது தேனுவுக்கு வெக்கம் கொத்தித்தான் தின்றது.

அவள் வீட்டில் இப்படி எந்த பயமும் வெக்கமும் இல்லை. சாமத்தில் போனால் அவள் தங்கச்சியை அழைத்துக் கொண்டு போய் வந்து விடுவாள்.

அவள் தங்கச்சி நெனப்பு வந்தது. ‘இன்னிக்கு விசாழக்கெழம இன்னிக்கு எட்டு நாளும் இந்நேரமெல்லாம் சுக்கு காப்பி குடிச்சுட்டு தங்கச்சி யோட கடலைக் கொல்லைக்கு போனதாய் நெனப்பு.

‘அக்கா! இன்னிக்கு எட்டு நாளும் இந்தநேரமெல்லாம் ஓங்க ஊர்ல போய் என்ன செஞ்சிட்டு இருப்பேன்னு நெனச்சுப்பாரு…’

என்மேல புருஷன் கையையும் காலையும் மேலே தூக்கிப்போட்டுக்கிட்டு தூங்கிகிட்டு இருப்பாரு. அப்ப உன்னயும் நெனச்சுப் பாப்பேன்னு சொல்லியா இருக்க முடியும்?

‘நாலஞ்சு நாளைக்குள் வீட்டப் பத்தின நெனப்பு. நாக்கு ‘ஒணக்கயா சனக்க’ ஏதாவது செஞ்சு தின்னா தேவலாம்… இந்த ஆசைய யாருகிட்டச் சொல்ல முடியும்? பக்கத்தில அம்மாவா இருக்கு. முணுக்குன்னதும் என்னது, ஏதுடின்னு கேக்க…’

நிசமாவே சுக்குமல்லி காப்பி குடிக்க நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தாள். வேற எதக் குடித்தாலும் அவள் வீட்டில் குடிச்ச காப்பி போல இல்ல. நேத்து ராத்திரி கூட சுக்குமல்லி காப்பிபோடவாங்க? என்று புருஷனிடம் கேட்டுப் பார்த்தாள்.

‘ச்சே! அது என்னடி ஆச. நெறைய காப்பித்தூள் போட்டு ‘கொழ கொழ’ன்னு பாலு ஊற்றி ஜீனி போட்டு கொடு. அதான் எனக்குப் புடிக்கும். அப்பாவுக்கு ஜீனி போட்டாதான் எறங்கும். சுக்கு மல்லி காப்பிய யாருகுடிப்பா…’

அவள் புருஷன் தட்டிக் கழித்துப் பேசினதும் அவள் அடங்கிப் போனாள்.

பொழுது ‘பள பள’ன்னு விடிந்து இருந்தது. ‘சலப் சலப்’ தெருவில் சாணி தெளிக்கும் சத்தம் கேட்டது. தேனுவை அப்போது தான் அறையை விட்டு அனுப்பி வைத்தான்.

அவன் அடுப்படிக்கு வந்தாள் –

அடுப்புச் சாம்பலை அள்ளி இருந்தது. ராத்திரி ஒழித்துப் போட்டிருந்த பாத்திரங்களை கிணத்தடியில் அள்ளிக் கொண்டு போய் போட்டிருந்தாள் அவள் அத்தை

“பாப்பா! எழுந்துருச்சி வெளியே வரும்போது உசர கண்ணாடியில நின்னு பாத்துட்டு வரணும்னு சொன்னேனே…’

‘பாத்துட்டுதான் அத்தே வர்றேன்..’ வேகமாகச் சொன்னவளுக்கு வெக்கம் வந்துவிட்டது.

இத்தினி நாளாக இந்த வீட்டில் கையகலக் கண்ணாடிதான் இருந்தது. அவன் அம்மா படுத்தின பாட்டில் தான் எவ்வளவோ அவசர செலவு இருக்கும் போதும் இந்த ஆள் உயரக் கண்ணாடியை அறைக்குள் கொண்டு வந்து மாட்டினான்.

மொதோ மொதோ பேத்தி தான் பெறக்குனும். அதுவும் மரு மொவ போலவே பேத்தி வேணும். ஏப்பா! அவன் அம்மாவுக்கு எவ்வள ஆச பாரேன்.

தேனுவைப் பெண் பார்க்கப் போகும் போது பார்த்ததுமே அவன் அம்மாவுக்கு இவ தான் எனக்கு மருமகன்னு முடிவு செய்து கொண்டாள். இன்னும் சொல்லப் போனால் தேனுவின் அழகில் அவள் சொக்கித்தான் போயிருந்தாள். அந்த லாகிரியில்தான் பேத்தியே வேண்டும் என்ற நெனப்பு போலும்.

தேனு உண்டான அன்னிக்கி யார் மொகத்தில மொதல்ல முழிக்குதோ அந்த அச்சுலத்தான் கொழந்த பொறக்கும் என்ற நம்பிக்கை அவன் அம்மாவிடம் ஆழமாக பதிந்து போயிருந்தது. ‘அத்த மனகல கவுடு சூது இல்ல. ஆனா அத்தய பாக்குறதுக்குத்தான் கொடுமையானவங்களா தெரியுது. தொட்டதுக் கெல்லாம் ‘கொடு கொடு’ன்னு கொட்டாம கொள்ளாம ‘சிடு சிடு’ன்னு எரிந்து உழுவாம பேசும் அத்தையைப் புரிந்து கொண்டதும் தேனுவின் மனசு நிறைந்துதான் போயிருந்தது.

சோறு ஆக்கும்போது மட்டும் பக்கத்திலேயே நின்று கொண்டு அப்படிச் செய் இப்படிச் என்று சொல்லுவது தேனுவுக்குப் பிடிக்கவில்லை தான்.

கிணத்தடிக்கு வந்த தேனு பாத்திரங்களை ஒண்ணு சேத்து விளக்க உட்கார்ந்தாள்.

“பாப்பா! நான் வௌக்கிறேன். நீ போய் அவனை எழுப்பியுட்டு குளிச்சுமுழுவுங்க. குழிக்கரையில் இருக்கிற ஒன் பெரிய மாமனா விருந்துக்கு அழைச்சுட்டுப் போவ வாராரு… வெரசா கெளம்புங்க…”

தேனுவின் மனசு றெக்கைக் கட்டிக் கொண்டது.

ஊர்ப்பயணம் என்றால் சும்மாவா? அதுவும் மாட்டு வண்டியில்…. கல்யாணம் கட்டிக் கொண்ட பின் இப்போதுதான் தேனு புருஷனோடு போகப் போகிறாள்.

வெளியே தெருவ’ போவும் போது புருஷன் எப்படி இருப்பானோ?

‘என்ன வேணும் தேனு. என வேணும் தேனு சொல்லு. நீ எதக் கேட்டாலும் வாங்கித் தாரேன்’

அவள் சுண்டு விரலைப் பிடித்துக் கொண்டு அவளைப் பின்னிப் பின்னி நடந்து கொஞ்சலாய்ப் பேசி, சிரித்து அழைத்துக்கொண்டு போவானோ? ‘இந்தா பாருடீ. ‘விடு விடு’ன்னு என் பின்னால வா. எல்லாக் கண்ணும் ஒன்னையே கொத்தி திங்கிறது போல பாத்துக்கிட்டு இருக்கு…’ பர பரவென்று இழுத்துக் கொண்டுபோவானோ? அவள் மனசு மேலும் கீழுமாய் ஓடியது.

வெளிர் சந்தன கலர் மெலிசான பாலியஸ்டர் பொடவை. ஊதாளில் சின்னச் சின்னப் பூவாய் போட்டிருக்கும் இதற்கு ஏத்தாற் போல நீல ஜம்பர் போட்டுக் கொண்டிருக்கும் தேனுவுக்கு இன்னும் அழகை கூட்டத் தான் செய்தது.

தேனுவுக்கு எடுத்த பொடவை யிலேயே அவளுக்கு ரொம்ப பிடித்த பொடவை இதுவாகத்ததான் இருக்கும்.

கல்யாணத்தில் திருஷ்டி கழிக்கும் சடங்கில் இந்தப் பொடவையைத் தான் கட்டியிருந்தாள்.

மறுநாள் வீடியோ எடுத்ததைப் போட்டுப்பார்த்தபோது தேனுவே வியந்தாள். பொடவை அவளுக்கு என்றே சாயம் நெனைக்கப்பட்டதா இருக்குமோ?

‘தேனுவுக்கு இந்தப் பொடவ தான் அமைச்சலா இருக்கு’

அவள் அத்தை ‘ஓகோ’வென்று சொன்னாள்.

‘தேனு! அங்க போய் கட்டிக்க மாத்து பொடவ எடுத்துக்க… இப்ப எந்தப் பொடவ கட்டிக்கிட்டு வரப் போறே…?’

‘இந்தப் பொடவயத்தாங்க…’ அவள் லயித்துக்கட்டிக் கொள்ளப் போகும் பொடவையைக் காட்டினாள்.

‘இத கட்ட வேணாம். ‘கெம்பு’ கலர்ல இருக்கே அந்தப் பொடவய கட்டிக்க… இந்தா இந்த என் வேட்டி சட்டையையும் எடுத்து வச்சுக்க…’

தேனுவின் ஆசையில் மண் விழுந்தது. மொகத்தில் ‘பளார்’ என்று அறைந்திருந்தால் கூட சந்தோஷமாக இருப்பாள்.

புருஷன் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசவில்லை. பேசத்தான் என்ன இருக்கிறது.

‘…ஏட்டியே! இந்தா பாருங்கடி! புருஷன் ஆசப்பட்டத ஆக்கிப் போட்டும் போட்டு காட்டுறத போட்டுக்காட்டி பாத்துப்புடுணும்டி..’

மறுபடியும்.

சாத்தனூர் கெழவியின் பேச்சு… மனசில் ஒட்டியும் ஒட்டாமலும்…

ஈரமாக இருந்த கூந்தலைக் கோதி காயவைத்துக் கொண்டிருந்தாள் தேனு.

‘பாப்பா! இப்படி வா… நான் தலைய பின்னிவிடுறேன் ஒன் பெரிய மாமனா வெந்நீர கால்ல ஊத்திகிட்டது போல வந்து நின்னுகிட்டு பறப்பாரு…”

சொல்லி வாய் மூடவில்லை.

வாச்சு வாச்சாய் கொம்பு. ‘சல்… சல்…’ சலுங்கை. தும்மைப்பூ நிறத்தில் ‘மேர்கத்தி’ மாடுகள் பூட்டிய வண்டி வந்து திமிறலுடன் நின்றது.

அலங்காமல் குலுங்காமல் செல்ல ஏத்தாற்போது ‘வில்வண்டி’,

சினிமாவில் வரும் ரதம் போலத் தான் இருந்தது.

‘அப்பா மோட்டார் ‘பைக்ல’ வாராங்க. சல்தியா கௌம்பி இருக்கச் சொன்னாங்க வண்டிக்காரன் வந்து சொன்னான்.’

பொடவையைச் சுத்திக் கொண்டிருந்த தேனுவின் மனசு வண்டிக்குத் தாவியது. இதுபோல வண்டியில் போக எவ்வளவு நாளாக ஆசையிருந்தது தெரியுமா? அவள் சிறு சாய் இருக்கும்போது அவள் மாமா கல்யாணத்தில் பொண்ணு மாப்புள்ள அழைக்க வந்தது இதுபோல வண்டி.

தம் மாமனோடு தேனுவும் முண்டி யடித்துக்கொண்டு ஏறிவிட்டாள். சம்மந்தி வீட்டுப்பெண் ஒருத்திக்கு இடம் இல்லாமல் போக இவளை கட்டாயப்படுத்தி இறக்கிவிட்டார்கள், அவள் மாமனால் தடுக்க முடியவில்லை.

அழுகையும் ஆத்திரமுமாக வந்தது. தேனுவின் அம்மா வந்து சண்டை போட்டதும் அவர். அம்மா கோவிச்சுக் கொண்டு தேனுவை ‘பர பர’வென்று இழுத்து போனதும் பெரிய கதை.

அந்த வண்டியே வந்தது போல் உணர்ந்தாள். தன் புருஷன் பக்கத்தில் கொண்டு போகும் உட்கார்ந்து போது அவன் செய்யும் சில்மிஷங்கனை கற்பனை செய்து. கொண்டாள். அய்யோ… அவளுக்கே வெக்கம்.

உச்சி முடிய எடுத்துப் பின்னி மீதக் கூந்தலை பரவலாய் விட்டாள் அவள் அத்தை.

‘அண்ணீ! நீங்க ஆசப்பட்டு கேட்ட அடுக்குமல்லி இந்தாங்க… கிட்டுப்புள்ள வூட்டுல இருந்துச்சு. வாங்கிக்கிட்டு வந்து தொடுத்தேன்…’ தேனுவின் நாத்தினா மலர் ஓடிவந்து கொடுத்தாள்.

நெருக்கமாய் முத்துமுத்தாய் தொடுத்திருந்த அடுக்குமல்லி கொள்ளை வாசனை அடித்தது. உச்சிக் சடையில் சைடு ஊசியைக் குத்தி தொங்க விட்டதும் அந்த மல்லிக்கே அழகு ஏறியது.

“தம்பி! குழிக்கரை குணுப்புல உள்ள பூக்கடையில வண்டிய நிறுத்தி கானகாம்பரம் வாங்கிக் கொடு… ஆமா மறந்துடாதே…”

“அம்மா! மலர கௌப்பிவுடு… தேனுவோட அது போவட்டும். நான் குறுக்க சைக்கில்லப் போய் தேவர்கண்ட நல்லூர்ல பொண்ணு ரங்கம் புள்ளய பாத்து சேதி சொல்லிட்டு பெரியப்பா வூட்டுக்கு போயிடுவேன்….

“என்னடா தம்பி இது விருந்துக்கு போறீங்க… திக்காலுக்கு ஒருத்தரவா போய் நிப்பீங்க… தேனு வோட சேந்து போடா…”

“இதுல என்னம்மா இருக்கு? போய் வண்டிக்கு முன்னால் பெரியப்பா வீட்லு நிப்பேன், சேந்து தானே வீட்டுக்குப் போவேன்…”

அவன் அம்மாவே மகனிடம் அதட்டிப் பேசி அறியாதவள் – தேனு மட்டும் என்ன தன் புருஷனிடம் அதட்டிப் பேசவாப் போகிறாள்?

வெள்ளை மேக்கத்தி மாடு பூட்டிய வில் வண்டி குழிக்கரை தார் ரோட்டில் பெரிய தோப்புக்கு நடுவில் ‘சல்… சல்…’ என்று…

‘வாழ்க்கை எங்கறது புருஷனுக்கு மட்டும்தானா? நமக்குன்னு ஆசை இருக்கே. அவருக்கு அது தெரியிலயே… நாமதான் அவரு மனசுல பூந்து சொல்லியாவுனுமோ?’

இந்த நலாலஞ்சு நாளா புருஷனிடம் அன்னியோன்னியப்பட்டுப் போயிருந்த தேனுவின் மனசு அதையெல்லாம் அசைப் போட்டுக் கொண்டே வந்தது.

புதுப்பெண்ணான தேனுவைச் சுமந்து கொண்ட அந்த மேக்கத்திய மாடுகளுக்கு என்னவோ சந்தோஷம் தான்.

– ஆகஸ்ட் 1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *