ஓடிப்போனவள் திரும்பிய போது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2023
பார்வையிட்டோர்: 7,139 
 

(1985 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜனசந்தடி இல்லாத ரயில் நிலையங்களின் பிளாட்பாரத் தில், அந்தக் குளிர்ச்சியான சிமெண்ட் சாய்வு பெஞ்சுகளில் உட்கார்ந்து அனுபவித்திருக்கிறீர்களா? மனிதர்கள் அமர்ந்து அமர்ந்து, சாய்ந்து, தேய்த்து, வழவழப்பும் குளிர்ச்சியும் கூட்டி வைத்திருக்கிற சிமெண்ட் பெஞ்சுகளில், அகலமான உட்காரும் இடங்களும், மிக நீளமான சாய்வு இடமும் உள்ள சிமெண்ட் பெஞ்சுகனில், நீங்கள் குழந்தையாய் இருந்தபோது அம்மா மடியில் படுத்த சுகத்தை, நீங்கள் ஆளான பின், உங்களின் இனிய பாரியாள் மடியில் படுத்து நீங்கள் அனுபவித்திருக்கக் கூடிய சுகத்தை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றுக்கு ஒப்பானவை இந்தச் சிமெண்ட் பெஞ்சுகள்.

அந்தச் சிமெண்ட் பெஞ்சுகள் – காங்கிரீட் மடிகள் – எனக்கு மிகவும் பிடித்தமானவை. அவற்றோடு, இருபது வருஷத்துச் சினேகம் எனக்குண்டு.

பிளாட்பாரத்தில் தென்கோடிக் கடைசி பெஞ்சில் நான் இருந்தேன். இது எனக்குப் பிடித்த இடம். சொந்த வீட்டின் தனி அறையைப் போல ஒரு சொந்தத்தை இங்கு நான் அனுபவிப்பேன். பெஞ்சை ஒட்டிப் பின்னால் குடை பிடிக்கும் ஒரு குட்டை வேப்பமரம். இது பறவைகளின் இரவு வீடு. எனவே பெஞ்சுகள், பறவைகளின் எச்சத்தால் வெள்ளையடிக்கப்பட்டிருக்கும். அவசியமா கவும் அனாவசியமாகவும், எவை எவற்றையெல்லாமோ சுமந்து கொண்டு மனிதர்கள் ரயிலுக்கு நிற்பதைப் பார்ப்பது ஒரு சிறந்த பொழுது போக்கு. ஸ்டேஷன் முடிவடையும் இடத்தில் ஒரு தென்னந் தோப்பு. தோப்புக்குள் காலக் கறையான் அரித்துக் கொண்டிருக்கும், காரை பெயர்ந்த, செங்கல் வரிசை தெரிகிற ஒரு பழங்காலக் கோயில் கோபுரம்.

இங்குதான் எனக்கு மூன்று பேர் சினேகிதம் ஆனார்கள். ராஜா, ராணி என்று நான் பெயர் சூட்டிய இரண்டு காக்கைகள், மற்றும் பரசுராமன். நான் வருவதைத் தூரத்திலிருந்தே பார்த்துவிடும் ராஜாவும் ராணியும், சிமெண்ட் பெஞ்சுகளில் இருந்து இடம் மாறி மண்ணில் அமர்ந்து கொள்ளும். நான் இருக்கையில் அமர்ந்து கொள்வேன். எனக்காகத்தாம் இருக்கையை விட்டுக் கொடுக்கும் தோழர்கள்.

‘சூடா இட்லி சாப்பிடறீங்களா சார்’ என்று கேட்டுக் கொண்டு அறிமுகமானார் பரசுராமன். அவர் முன்னால் ஓர் உணவுத் தள்ளு வண்டி. அதில் பாத்திரங்கள், வாழை இலைத் துண்டங்கள். அது ஒரு காலை நேரம். வயிறு பகபகவெனப் பசிக்கிற தொடக்கம். ‘கொடுங்களேன்’ என்றேன்.

துண்டம் போட்ட ஒரு வாழை இலையில், இரண்டு இட்லிகளையும், ஒரு வடையையும் வைத்த அவர், ‘சட்டினியா… சாம்பாரா- எது போடட்டும்.’ என்றார். எனக்கு இக்கேள்வி பிடித்தி ருந்தது. இரண்டையும் சேர்த்துக் குழப்பிக் கொடுப்பதே இவர்கள் பழக்கம். எனக்குப் பிடிப்பதில்லை. ஒவ்வொன்றுக்கும், தனி ருசிகள் இருக்கின்றன. இரண்டும் சேர்வதால் இரண்டும் கெடும். தனித் தனியாக இவற்றை உண்பதே எனக்குப் பிடிக்கும்.

‘முதல்லே சட்னி போடறேன்… சாப்டுங்கோ, அப்புறமா சாம்பார்’ என்றார்.

ஒரு மருந்துக் கம்பெனியின் பிரதிதிதி— நான். எங்கள் நிறுவனம் சம்பந்தப்படும் மருந்துகளை மாநிலம், அண்டை மாநிலங்களுக்கு எடுத்துப்போய் டாக்டர்களைச் சந்தித்து அவற்றை அறிமுகப் படுத்தும் வேலை எனக்கு. வாழ்வில் பெரும் பகுதி ரயில்களில் செலவிட்டுக் கொண்டிருந்தேன். ஆகவே பரசுராமனை மாசத்துக்கு இரண்டு முறையாவது சந்திக்கும் வாய்ப்பு எனக்கேற்பட்டது.

சில பேரைப் பார்த்தால் பதுங்கத் தோன்றும். சில பேருடன் பேச நமக்கே ஆசை வரும். இதில் பரசுராமன் ரெண்டாம் ஜாதி. சில பேருக்கு வாழ்க்கை கொல்லன் உலைக்களம். நொந்து போய், *சீ இது என்ன வாழ்க்கை, என்று அங்கலாய்ப்பிலேயே வாழ்க்கை யைக் கழிப்பார்கள். எத்தனை தான் கஷ்டம் மனசுக்குள் இருந்தாலும் கஷ்டங்களைப் பிறர் தோளில் இறக்கி அவர்களின் பச்சாதாபத்தை யாசிக்காமல், உல்லாசமாக இருப்பவர்கள் சிலர். இதிலும் பரசுராமன் ரெண்டாம் ஜாதி.

பரசுராமனை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவனிடம் ரெண்டு வார்த்தையாவது பேசாமல் போய்விட முடியாது. சராசரிக்கும் கொஞ்சம் குள்ளம். முழு வழுக்கை. மைதானத்தில் புல் முளைத்தது போல ஆங்காங்கே நரை முடிகள், லாட்ஜ் சிங்கிள் ரூம்களில் வைக்கப்படும் மண் கூஜா மாதிரியான தொந்தி. வெற்றிலை போட்டு உதடுகள் சதா சிரிப்பைச் சிந்திக் கொண்டிருக்கும் அது நம்மைப் பார்த்துச் சிரிக்கிற மாதிரி இருக்கும். அந்தச் சிரிப்பில் சிக்கிக் கொள்ளாதவர் யார்தான் இருக்க முடியும்?

என்னைப் பார்க்கும் போதெல்லாம், “சௌக்யமா? வீட்ல எல்லாரும் சௌக்யமா? சுமதி, கௌரி எல்லாம் எப்படி?” என்றெல்லாம் மறக்காமல் ஒரு பாட்டம் விசாரித்து விட்டு மறு ஜோலி. ‘அப்புறம் ஊருல மழை உண்டா?” என்பார். பரசுராமனுக்கு நிலபுலன் எல்லாம் ஒன்றும் இல்லை. ஒரு காலத்தில் இருந்தது. பிறகு நகர்ந்து விட்டது. அவரோ மழையைப் பற்றிக் கவலைப்படுவதை விடாமல் இருந்தார்.

ஒருநாள் என்னை வீட்டுக்கு அழைத்துப் போனார். ஒரு பழங்கால ஓடாத மணிக்கூண்டுக்கு எதிர்ச் சந்தில், ஓட்டல் எருமைகள் ஏழெட்டு கட்டியிருந்த வீட்டுக்குப் பின் போர்ஷனுக்கு அழைத்துப் போனார். அவர் மனைவியை அழைத்து எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த அம்மாள் ஒரு காலத்தில் அழகாக இருந்திருப்பார். இப்போது காலாவதியாகி நசுங்கிய ஈயப்பாத்திரம் மாதிரி இருந்தாள். ஏதோ ஒரு கொடிய வியாதி உடம்புக்குள் இருந்து கொண்டு அவளை உருக்குலைக்கிறது என்று எனக்குத் தோன்றியது. அவளுக்குப் பளிச் பளிச்சென்று இரண்டு பெண்கள் இருந்தார்கள். அழுக்கு ஓட்டு வீட்டுக்குள் வாசம் செய்யக் கூடாத களையும் வனப்பும் கொண்ட பெண்கள். பெரிசு, தாவணி அணிந்திருந்தது. முகம் முழுக்க புத்தி சாலித்தனம் வடிந்தது. இரண்டாமவள் தாவணி போட வேண்டியவளே. எனினும் சட்டை போட்டிருந்தாள். என்னைக் கண்டதும் ஏதோ நான் அவளைப் பெண் பார்க்க வந்து விட்டது போல் வெட்கப்பட்டாள். அதிகம் சினிமா பார்க்கக் கூடியவள் என்று எனக்குப்பட்டது. சமையல் கட்டையும், கூடத்தை யும் பிரிக்கும் இடம் கோணித்துணியால் தடுக்கப்பட்டிருந்தது. உட்கார ஒரு நாற்காலி இல்லை. மாமி விரித்த (நடுவில் வட்டமாய்க் கிழிந்திருந்த) பாயில் உட்கார்ந்து கொண்டேன்.

“ரெண்டு பெண்ணுங்களா?” என்றேன்.

“இருக்கிறது ரெண்டு.”

“அப்படீன்னா?”

“ஆக மொத்தத்துல மூணு. ஓடினது ஒன்று… இருக்கிறது ரெண்டு.”

“ஓடினதா?”

“ப்ச்…”

திரும்பி வரும்போது பரசுராமன் சொல்லிக் கொண்டு வந்தார். வத்சலாதான் மூத்த பெண்ணாம். ரொம்ப அழகாம். அதைவிட புத்திசாலித்தனமாம். எஸ்.எஸ்.எல்.சி.யில் நிறைய மார்க்குகள் வாங்கி னாள். எனினும் மேலே படிக்க வைக்க முடியவில்லை அவரால். டைப் கற்றுக்கொண்டாள். சுருக்கெழுத்து முடித்துக் கொண்டிருந்த நாளில், யாரோ ஒரு பையனுடன் ஓடிப் போய் விட்டாள்.

“காதல்” என்றேன்.

“உம்…” நொந்து கொண்டார் அவர். மாமிக்கு வந்தது உடல் நோயல்ல. மனநோய்தான். சொன்னார்.

“அவ சீக்கிரத்துல செத்துப் போயிடுவா சார்… சாகிறதுக்குள்ளே மூத்த பெண்ணை ஒரு வாட்டி பார்த்துடணும்னு ஆசைப்படறா. நான்தான் வீம்பா இருந்துட்டேன். இப்பத்தான் போன மாசம் வெக்கத்தைவிட்டு நானே தபால் எழுதினேன். பதில் இல்லை. நேரில் போய்ச் கூப்பிடறதுக்கு வெக்கமா இருக்கு. அந்தப் பய முகத்தைக் கூட நான் பார்த்தது இல்லை. இத்தனை வருஷம் குழந்தை எப்படி இருக்காள்’னே தெரியாம, கண்டுக்காம இருந்துட்டு இப்ப போய் நிக்கறதுக்கு என்னமோ சங்கடமா இருக்கு. பெத்தவ இன்னும் கொஞ்ச காலம் வாழறதுக்காவது அவள் வந்தா தேவலை. அவனும் வேணும்’னா வரட்டும். நமக்கு ஆட்சேபனை இல்லை…”

“இப்போ எந்த ஊருல இருக்கா?’

சொன்னார். என் பயண வட்டத்துக்குள் இருக்கிற ஊர்தான். வத்சலாவை அழைத்து வரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.

நான் இப்போது அந்த ஊருக்குத்தான் போய்க் கொண்டி ருந்தேன். மாவட்டத்தின் தலைநகரமான அது, குட்டிக் குட்டி யானைகள் படுத்திருக்கிற மாதிரியான சின்னச் சின்னக் குன்றுகள் நிறைந்திருந்தது. வழக்கமாக தங்கும் லாட்ஜ் அறைக்குள் குளித்து வத்சலாவின் விலாசத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

நகரத்தின் புதிய பகுதியில் அமைந்திருந்தது அவள் வீடு. வீட்டு முகப்பும், முன் இருந்த, சிரத்தை எடுத்துக் கொள்ளப்பட்டு வளர்த்த சிறு தோட்டமும் வத்சலாவின் வசதியை முன்னறிவித்தன. வேலைக்காரி போன்ற ஒருத்தி கதவைத் திறந்தாள். உட்காருங்கள் என்று வரவேற்பு அறையைக் காட்டிவிட்டு உள்ளே சென்றாள். வரவேற்பறையில் ஏற்கெனவே இரண்டு பேர் இருந்தார்கள். டெரிகாட்டன் வேஷ்டியும், இறுக்கமாகத் தைக்கப்பட்ட வெள்ளைப் பட்டுச் சட்டையும், பெரிய உருவமும், எல்லாவற்றுக்கும் மேலே, மூக்கை எரிச்சல் அடைய வைக்கிற, உலகத்திலேயே மட்டமான செண்ட்டும் போட்ட அந்த இடது பக்க மனிதனைப் பார்த்ததும், அவன் மேல் எனக்குக் கௌரவமான எண்ணம் ஏற்படவில்லை. உடன் இருந்த இளைஞன், மோட்டார் மெக்கானிக் மாதிரி இருந்தான். என்னை அவர்கள் வெகு அலட்சியமாக, ஒரு காலி பெருங்காய டப்பாவைப் பார்ப்பது மாதிரி நோக்கினார்கள். ஒரு பெண்ணின் படம், பெரிது பண்ணப்பட்ட அளவில் மாட்டப்பட்டி ருந்தது. வித்தியாசமான கோணம். பொதுவாகப் பெண்கள் இருக்கச் சம்மதிக்காத கோணத்தில் இருக்கும் படம்.

அடுத்த சில நிமிஷங்களிலேயே வத்சலாவே வந்தாள். வெளியே புறப்படும் கோலத்தில் இருந்தாள். பரசுராமன் சொன்னது பொய் யில்லை. அழகிதான். பச்சைச்சுடிதாரில் அழுத்தமான, பகட்டான ஒப்பனையில் இருந்தாள். என்னைக் கண்டதும் வணங்கினாள்.நான் பரசுராமன் நண்பன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். அப்பா பெயரைக் கேட்டதும் அவள் முகம் இறுகிப் போய் விட்டதை நான் கண்டேன். காத்திருந்த அந்த ரெண்டு பேரை நோக்கி, “நீங்கள் அங்க போய் இருங்க.. ஒரு அரை மணியில் நான் அங்க வந்துட்றேன்…” என்றாள்.

“பார்ட்டியை ஓட்டலுக்கே அழைச்சு வந்துடவா” என்றான் அந்தப் பட்டுச் சட்டை போட்டவன்.

பக்கென்று அவள் முகம் சிவந்து போய்விட்டது. ‘உம்’ என்றாள் உத்தரவு மாதிரி. அவர்கள் எழுந்து என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுப் போனார்கள். அர்த்தம், பேமானி.

வேலைக்காரி கொண்டு வந்து கொடுத்த நல்ல காப்பியைக் குடித்துக்கொண்டே பேசினோம். கிட்டத்தட்ட மூணு மணி நேரத்துக்கு மேல் அவள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“அம்மா எப்படி இருக்காங்க?”

“உங்களை பாத்துட்டா, அவங்களுக்கு நிம்மதி.”

அவள் கண்களில் இருந்து உருண்டது சோகம். “ரெண்டு வருஷத்துக்கு முன்னால என்னை அவங்க வந்து பாத்திருந்தா எவ்வளவோ நல்லா இருந்திக்கும்; என் லைஃப் இப்ப வேற மாதிரி” என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள்.

“வீடு பெண்களுக்கு நரகமா இருக்கக் கூடாது சார். அப்பா வும் அம்மாவும் ரொம்ப நல்லவங்க. அதுதான் கஷ்டமாயிடுச்சு. ராத்திரி சாதம் போடறப்போ கரண்டி தவலையில் படாமே இருக்க அம்மா பட்டபாடு! யாருக்கும் போதுமான சோறு இல்லாமே, அதனாலயே ஒருத்தர் ஒருத்தர் பிறாண்டி காயப்படுத்திக் கிட்டு, உறவை, பாசத்தை சீரழிச்சுக்கிட்டு இருக்கிறப்போ எனக்கு அந்த வீடே ஒட்டாமே போயிடுச்சி. என் வீடு அது இல்லை. எனக்கு அங்க பந்தம் இல்லேன்னு தோணிப் போச்சு, ஓட வழி பார்த்தேன். அப்போதான் கேசவன் பழக்கம், ஏற்பட்டுச்சி. நான் அதை காதல்னு தப்பா புரிஞ்சிக்கிட்டேன். மூழ்கிற வன் கையில் அகப்படறது கயிறா, பாம்பான்னு கண்டானா? ஏதோ ஒரு ஆதாரம் கிடைச்சா சரின்னு நானும் கிளம்பிட்டேன். எங்க காதல் ரெண்டு வருஷத்துக்குக் கூட தாக்குப் பிடிக்கல்லே. அந்தப் பொறுக்கிப் பய ஓடிட்டான். அப்போ நான் பாம்பேயில் இருந்தேன். தினம் அழுது கதறிக் கடிதம் எழுதிக் கிட்டே இருந்தேன். ஊகும், அப்பாவுக்கு என்மேல் இருந்த கோபம். தீரவில்லை. வேற வழி இல்லை…இதுக்கு வந்துட்டேன்.

“நான் இதை நியாயப்படுத்தல சார்… வீடு கசந்து போறப்ப, வீட்டை விட்டு ஓடலாம்னு தோணுது… புருஷனும் கைவிட்டுட்டான்னா அப்புறம் எங்க ஓடறது… எதுதான் எங்களுக்கு உகந்த இடம்? எதுதான் எங்க ஸ்தானம்?”

வத்சலா இப்போது சுதந்திரமா இருந்தாள். வீடும் வாழ்க்கையும் அவளுடையது. அந்தக் கணவனுக்கு, பாதுகாப்புத் தருகிற ஆண் மகனுக்கு அதன் காரணமாகவே அவன் இழைக்கிற கொடுமைகளுக்கு ஆளாக வேண்டிய கட்டாயம் அவளுக்கு இப்போது இல்லையே. அவளே தொழிலாளி, அவளே எஜமானி. இஷ்டப்பட்டால் தொழில் செய்கிறாள்; இல்லை ஓய்வு எடுக்கிறாள். நிம்மதியை ஏதோ ஒருவகையில் சம்பாதித்துக் கொண்டாள்.

***

இதுதான் விதி போலும். வத்சலா அம்மாவைப் பார்க்க அந்த மாத இறுதியில் வந்திருந்தாள். நான் வத்சலாவைப் பார்த்துப் பேசிய விஷயத்தைப் பரசுராமனிடம் சொன்னேன்.

“வத்சலா வராளா?” என்றவர் என் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அவர் உடம்பு குலுங்குவதை நான் உணர முடிந்தது. அழுதார். சதை ஆடத்தானே செய்யும்.

தன் தாய் வீட்டுக்கு நேராகப் போகத் தைரியமில்லை வத்சலா வுக்கு. என் வீட்டுக்கு வந்தாள். அவளை அழைத்துக் கொண்டு பரசுராமன் வீட்டுக்கு நான்தான் போக நேர்ந்தது.

அம்மா மட்டும்தான் இருந்தாள். இரண்டு தங்கைகளும் வந்து அவளைக் கட்டிக் கொண்டு ‘அக்கா, அக்கா’ என்றார்கள்.

“பரசுராமன் எங்கே?” என்றேன் நான்.

அந்த அம்மா மார்பில் அடித்துக்கொண்டு அழுதாள். வாசலில் நாங்கள் நின்றிருந்தோம். பெண்களில் சின்னவள் சொன்னாள்.

“அப்பா போயிட்டாங்க மாமா…”

– 1985

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *