ஒரு ஊர்ல ஒரு இராஜகுமாரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 6,339 
 
 

நான் கதை எழுதணும் பேனா வேணும் ?

பேனா வேண்டாம் இந்தாங்க பென்சில். இந்தாங்க பேப்பர் இதுல கதை எழுதுங்க…

எப்படி ஆரம்பிக்கலாம்?… ம்..ம்.. ஒரு ஊர்ல ஒரு இராஜகுமாரி …

அட்டா பென்சில் உடைஞ்சிடுச்சே,

இப்படி அழுத்தி எழுத வேண்டாம், கொடுங்க சீவி தர்றேன். கொஞ்சம் மெதுவா எழுதுங்க, எழுதி முடிச்சுட்டு எங்கிட்ட காட்டுங்க நான் படிச்சு பாத்துட்டு நல்லா இருக்கான்னு சொல்றேன்.

ம்..ம்.. ஒரு ஊர்ல ஒரு இராஜகுமாரி…..

ஆமா எங்கப்பா எப்படி இருப்பாரு? இந்த அம்மா எங்கே போய் தொலைஞ்சா?

பள்ளிக்கூடத்துக்கு வேற நேரமாச்சு, இந்த அம்மாவை காணோமே.

அந்தா வருது பாரு ஆடி அசைஞ்சிட்டு, வாம்மா வா, இவ்வளவு நேரமா நீ வர்றதுக்கு,

சரி சாப்பிடறதுக்கு என்ன கொண்டு வந்திருக்க? எனக்கு ரொம்ப பசிக்குது.

ஏன் உம்முன்னு இருக்கே, கொஞ்சம் சிரிச்சுட்டுத்தான் சாதம் போடேன். அடடா அம்மா நான் கதை எழுத போறேன். எங்க ஸ்கூல்ல கதை எழுதற போட்டி வச்சிருக்காங்க.

கதையோட தலைப்பு என்னன்னு கேட்கறீயா?

ஒரு ஊர்ல ஒரு இராஜகுமாரி அப்படீன்னு ஆரம்பிக்க சொல்லியிருக்காங்க.

என்னது நானே இராஜகுமாரியா, போம்மா எனக்கு வெக்கமா இருக்கு, உனக்கு ஒரு விசயம் தெரியுமா? என்னை எங்க ஸ்கூல்ல எல்லோரும் இராஜ குமாரி அப்படீன்னுதான் கூப்பிடுவாங்க. நான் நல்லா படிப்பேனுல்ல, அது மட்டுமில்லம்மா நான் மத்தவங்களை விட அழகா இருக்கறதுனால, என்னைய இராஜ குமாரி அப்படீன்னுதான் கூப்பிடுவாங்க.நான் எத்தனையாவது படிக்கறேன்னு நிறைய பேரு கேப்பாங்க. ஆறாவதுன்னு சொன்னா யாரும்

நம்ப மாடேங்கறாங்க. சரி சரி நான் கதை எழுத ஆரம்பிக்கணும், அதனால இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலை. என்னது மிஸ் கேப்பாங்களா?

அம்மா இன்னைக்கு எனக்கு உடம்பு சரியில்லையின்னு பொய் சொல்லிடேன். பொய் சொல்லமாட்டியா? ப்ளீஸ்..மா இன்னைக்கு ஒரு நாள் மட்டும். இன்னைக்குள்ள இந்த கதைய எழுதி முடிச்சுடுறேன். நாளைக்கு கட்டாயம் போயிடுவேன்.

சரி நான் எழுத ஆரம்பிக்க போறேன்..ஒரு ஊர்ல ஒரு இராஜகுமாரி…..

அம்மா உங்கிட்ட ஒண்ணு கேக்க மறந்துட்டேன். ஆமா அப்பா எங்கே? அவரை நான் பாத்த்தே

இல்லை. நீ ஒரு நாள் கூட எங்கிட்டே அவரை காட்டுனதே இல்லை. எனக்கு உன் மேலே ரொம்ப வருத்தம். எங்க ஸ்கூல்ல கூட ஒரு நாள் எங்க மிஸ் கேட்டாங்க, உங்க அப்பாவை

பாத்ததே இல்லையின்னு. ப்ளீஸ் மா அவங்களை ஒரு நாளாவது எங்கிட்ட கூட்டிட்டு வந்து காட்டும்மா. ஐயையோ பாத்தியா கதை எழுத வந்தவ அதை மறைந்துட்டு உங்கிட்ட பேசிட்டு

நின்னுட்டேன்.

ம்…ஒரு ஊர்ல ஒரு இராஜ குமாரி !…

அம்மா எனக்கு ஒரு சந்தேகம்? இராஜகுமாரின்னா அழகா இருப்பாங்களா? அவங்களை ஏன் இராஜகுமாரின்னு கூபிடறாங்க.மறுபடி மறந்துட்டேனே கதை எழுத. !

ம்..ஒரு ஊர்ல ஒரு இராஜகுமாரி…அடடா மறுபடி பென்சில் உடைஞ்சிடுச்சே, யாரு எனக்கு சீவி தருவாங்க. சார் சார் நீங்க கொடுத்த பென்சில் உடைஞ்சிடுச்சு.

பாத்தியாம்மா அதை அழுத்தி எழுதாதன்னு சொன்னேன்னுல்லை, பாரு அடிக்கடி பென்சில் கூர் உடைஞ்சிடுதில்ல..

சாரி சார். இனிமே மெதுவா எழுதறேன், இப்ப எனக்கு கொஞ்சம் சீவி கொடுங்களேன். இல்லாட்டி பிளேடு கொடுங்க நான் சீவிக்கிறேன்.

அதல்லாம் வேண்டாம்மா, கையை கிழிச்சுக்குவீங்க, கொடுங்க நானே சீவித்தர்றேன்.

ரொம்ப தாங்க்ஸ் சார்

”இனிமேல் மெதுவா எழுதுவேன் சார்”

ஒரு ஊர்ல ஒரு இராஜகுமாரி…

ஐயோ எழுதும்போது மூஞ்சியில ஈ மொய்க்குது. ஸ்..ஸு..ஸூ இந்த ஈ தொல்லையால என்னால எழுத முடிய மாட்டேங்குது.

கதை எழுத ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சே, எது வரைக்கும் எழுதி இருக்கறீங்க?

சார் இப்பத்தான் ஆரம்பிக்கிறேன் சார்..ஒரு ஊர்ல ஒரு இராஜகுமாரி…சார் எங்கம்மா ஏன் சார் அழுகறாங்க? நான் ஸ்கூலுக்கு போகலையின்னா அதுக்கோசரம் அழுவாங்களா சார். நான் வேணா இப்பவே ஸ்கூலுக்கு கிளம்பிடறேன் சார்..அம்மாவ அழுகாம இருக்க சொல்லுங்க சார்.

நான் சொல்றேன் உங்க அம்மா கிட்டே, நீங்க சீக்கிரம் கதை எழுதி எனக்கு காட்டுங்க. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன்.

அம்மா நீங்களும் கொஞ்சம் எங்கூட வாங்க அவங்க கதை எழுதட்டும்

ம்..ம்..ஒரு ஊர்ல ஒரு இராஜகுமாரி…

டாகடர்..டாக்டர்..அழுது கொண்டே இருக்கும் அந்த பெண்மனியிடம், ப்ளீஸ் கொஞ்சம் அழுகாம இருங்க. இது எப்படி ஆச்சு?

நல்லாத்தான் இருந்தா டாகடர், காலேஜூக்கு போறேன்னுட்டு அன்னைக்கு கிளம்புனவதான் டாக்டர், அந்த வண்டிய எடுத்துட்டு அவ்வளவு வேகமா கிளம்புனா டாக்டர்

நான் வேகமா போகாதடீன்னு பின்னாடியே கத்திகிட்டு வந்தேன் டாக்டர் என் கண் முன்னாடியே எங்க தெரு திருப்பத்துல எதிர்ல வந்த வண்டி மேலே மோதி, அப்படியே ஆகாசத்துல பறந்து கீழே விழுந்தவதான் டாகடர்.

அதுக்கப்புறம் எல்லா ஹாஸ்பிடல்லையும் காண்பிச்சோம் டாக்டர், அவளுக்கு உடம்புல பெரிய அடி எல்லாம் ஒண்ணுமில்லை, மனசுதான் அந்த அதிர்ச்சியில பாதிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க டாக்டர், அதுனாலதான் உங்களை தேடிகிட்டு வந்திருக்கோம் டாக்டர்,

தைரியமா இருங்க குணப்படுத்திடலாம்..அவளுக்கு இப்ப ஸ்கூல் டேஸ் நினைவுகள் மட்டும் இருந்துகிட்டு இருக்கு, ஆனா அப்ப அவங்கப்பா இல்லையின்னு சொல்றாளே.

டாக்டர் நாங்க அவளை தத்து எடுத்துத்தான் வளர்த்தறோம் டாக்டர். எங்க உறவுல இருக்கற பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இவ பிறந்தவுடனே அந்த ஆள் எங்கேயோ போயிட்டான். அதுக்கப்புறம் அந்த பொண்ணு இவளை கஷ்டப்பட்டு வளர்த்துகிட்டு இருந்தா,

அவளுக்கும் உடம்பு சரியில்லாம போய் டாக்டர் கிட்ட காண்பிச்சப்ப அவளுக்கு கான்சர் இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாரு. அதுக்கப்புறம் குழந்தையில்லாம இருந்த எங்களை சந்திச்சு என் குழந்தையை வளர்த்த முடியுமா? ன்னு கேட்டா டாக்டர்.

நாங்க ரொம்ப சந்தோசமா அந்த குழந்தைய எடுத்து வளர்த்துனோம். காலேஜ் இரண்டாவது வருசம் படிச்சிட்டிருக்கா டாக்டர். இந்த பதினெட்டு வயசுல அதற்கு மேல் பேச முடியாமல் அழுக ஆரம்பித்தாள்.

ப்ளீஸ் அழுகாதீங்க..உங்க பொண்ணுக்கு பழைய ஞாபகங்களை கொண்டு வந்திடலாம் கவலைப்படாதீங்க. நான் கேட்டது கூட அவளை பழையபடி நார்மலுக்கு கொண்டு வர இந்த விவரங்கள் தேவையிருந்தாலும் இருக்கும் அதுக்காகத்தான்.

எப்படியாவது என் பெண்ணை பழையபடி கொடுத்துடுங்க டாக்டர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *