ஒருத்திக்கே சொந்தம்

2
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2023
பார்வையிட்டோர்: 8,616 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9

பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை ரவி தொடங்கியிருந்தான். அந்த ஃபாக்டரி மேனேஜரின் பெயர் வாசு. வயதான அனுபவஸ்தர். ரவியிடம் மிகுந்த விசுவாசமுள்ளவர் அவர். அவர் மீது ரவிக்குப் பரிபூர்ணமான நம்பிக்கை இருந்தது. 

வாசுவிடம் உடனடியாய் ஓர் அழகான மாடர்ன் பங்களாவைப் பார்த்து விலைக்கு வாங்கிவிடும்படி ரவி உத்தரவிட்டான். அதிகக் கூட்டமும் நெரிசலும் இல்லாத இடத்தில், நகரத்திற்கு நடுவே இல்லாமல் கொஞ்சம் தூரத்தில், சென்னையின் சுற்றுப்புறத்தில் அமைதியான பகுதி ஒன்றில் வீட்டைத் தேடும்படி சொன்னான். 

ஒரு வாரத்துக்குள்ளாகவே, ரவியினுடைய தேவைகளுக்கு எல்லா வகையிலும் ஏற்ற அழகான வீடு ஒன்றை வாசு கண்டு பிடித்துவிட்டார். அது பெஸன்ட் நகர் பகுதியில் இருந்தது.ரவி தானே சென்று வீட்டைப் பார்வையிட்டான். மிகவும் அழகாக மாடர்னாக இருந்தது. இது கொஞ்சம் அமைதியான பகுதி ஆதலால், அவன் ஒரு பிரபல சினிமா நடிகனாக இருந்தாலும், மற்றவர்கள். அதிகம் கவனிக்காத வகையில் அவன் அங்கே வந்து போக வசதியாக இருந்தது. பேரம் செய்யாமல், கேட்ட விலையைக் கொடுத்து உடனே அந்த வீட்டை வாங்கி விட்டான். 

வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் வாங்கி, ஓரிரு நாட்களுக்குள்ளாகவே வீட்டை அழகாக அலங்கரிக்கும்படி வாசுவிடம் ரவி உத்தரவிட்டான். சோபா செட்டுக்கள், தரை விரிப்புகள், மேஜைகள், நாற்காலிகள், ரிஃபிரிஜரேட்டர், டி.வி, ரேடியோ, ஸ்டீரியோ செட், பாத்திரங்கள், கட்டில்கள், மெத்தைகள், படுக்கை விரிப்புக்கள், டவல்கள்- இப்படி ஒரு புதிய குடித்தனத்தை வசதியான முறையில் தொடங்க என்னென்ன தேவைப்படுமோ, அத்தனையும் வாசு மடமடவென்று வாங்கிக் குவித்தார். ஒரு புதிய ஃபியட் கார் பத்மினிக்காக வாங்கப்பட்டு அங்கே தயாராக நிறுத்தப்பட்டது. பத்மினிக்குச் சேவை செய்ய மட்டும் ஒரு நடுத்தர வயது வேலைக்காரியையும், வீட்டு வேலைகளைச் செய்ய ஓர் ஆள், ஒரு சமையல்காரன், ஒரு டிரைவர் ஆகியவர்களை வாசுவே தேர்ந்தெடுத்தார். அத்தனை பேரும் மிகமிக நம்பிக்கையானவர்கள். ரவி எப்படிச் சொன்னாலும், அதை அப்படியே நிறைவேற்றக்கூடிய அளவிற்கு விசுவாசமுள்ளவர்கள். 

இதற்கிடையில், பம்பாயிலிருந்து ஒரு பெரிய கண் ஸ்பெஷலிஸ்டை டாக்டர் கோபால் வரவழைத்திருந்தார். அவர் சில சோதனைகளை நடத்திவிட்டு ஆபரேஷன் மூலம் பத்மினியை மீண்டும் பார்வை பெறச் செய்ய முடியும் என்று கூறினார். விரைவிலேயே ஆபரேஷனுக்குத் தேதி குறிக்கப்பட்டது. இத்தனைக்கும் காரணம் டாக்டர் கோபாலும், அவருடைய தாயார் ஜானகி அம்மாளும்தான் என்று பத்மினி இன்னமும் நம்பிக் கொண்டிருந்தாள். 

ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. பம்பாயிலிருந்து வரவழைக்கப்பட்ட கண் நிபுணரே அந்த அறுவை சிகிச்சையைச் செய்து முடித்தார். சில நாட்கள் பத்மினி ஆஸ்பத்திரியிலேயே இருந்தாள்.இருபத்து நாலு மணி நேரத்துக்குப் பிறகு, அவள் கண்கள் மீது கட்டப்பட்டிருந்த கட்டுக்களை பிரிக்கலாமென்று டாக்டர் கூறி விட்டார். அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம். அங்கேயே கட்டுக்களைப் பிரிக்கலாமென்று கூறினார். 

பத்மினி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள். ஆனால் டாக்டர் கோபாலுடைய வீட்டிற்கு அல்ல; ரவி அவளுக்காகப் புதிதாக வாங்கித் தயாராக வைத்திருந்தானே, அந்த இல்லத்திற்குத்தான். இன்னும் கண்கள் மீது கட்டுக்கள் இருப்பத்தால் எங்கே இருக்கிறோம் என்று பத்மினிக்குப் புரியவில்லை.


மறு நாள் பொழுது விடிந்தது. பத்மினியின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. அவள் கண் கட்டுக்களைப் பிரித்ததும், மெதுவாகக் கண்களைத் திறந்தாள். முதலில் எல்லாமே மங்கலாகத் தெரிந்தது. 

கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை தெளிந்தது. அவளுக்கு முன்னால் ஒருவன் நின்றான். 

அவன்தான் ரவி! கட்டுக்களைப் பிரித்து, பத்மினிக்குப் பார்வை திரும்பியதும், அவள் முதன் முதலில் கண்டது ரவியின் முகத்தை, பத்மினிக்கு இது கனவா, நனவா, ஒன்றுமே புரியவில்லை. 

“ரவி, நீங்களா!” 

“ஆமாம், பத்மினி, நானேதான்.’ 

“நீங்க எப்படி இங்கே வந்திங்க? நான்.. நான் எங்கே இருக்கேன்?” 

”உன்னுடைய சொந்த வீட்டிலேதான் இருக்கே.”

“என்னுடைய சொந்த வீடா? எனக்கேது சொந்த வீடு? எனக்கு எதுவுமே புரியலையே!” 

டாக்டர் கோபால் ஜானகி அம்மாளுடன் உள்ளே வந்தார்.

“நான் எல்லாத்தையும் விவரமாய்ச் சொல்றேன்,” என்று விவரித்தார் அவர்.”நான்தான் கோபால். இவர்தான் என் தாயார். இத்தனை நாட்களாய் நீ எங்க வீட்டிலேதான் இருந்தே. அன்றைக்கு நீயும் உங்க அப்பாவும் ஒரு கார் மேலே மோதினீங்களே, அது ரவி ஓட்டிக்கிட்டு வந்த கார்தான். ரவிதான் உன்னையும் உங்க அப்பாவையும் என்னுடைய ஆஸ்பத்திரியிலே கொண்டு வந்து சேர்த்தான். உங்க அப்பாவுடைய சிகிச்சைக்கும் ரவிதான் செலவு ஏத்துக்கிட்டான். உன்னை எங்க வீட்டிலே தங்க வச்சு இந்த ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்து உனக்கு மறுபடியும் பார்வையைத் திரும்பப் பெற்றுத் தந்ததும் ரவிதான். ஆபரேஷன் முடியறதுக்குள்ளே நீ தங்கறதுக்காக இந்தப் புதிய வீட்டை உனக்காக வாங்கித் தயார்ப்படுத்தியதும் ரவியேதான். இத்தனை நாட்களா இதையெல்லாம் உனக்குத் தெரியப்படுத்தவிடாம ரவி எங்களைத் தடுத்துட்டான். இப்போ சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சு. சொல்லிட்டேன்.” 

பத்மினிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவள் உள்ளத்தில் ஒரே கொந்தளிப்பு, குழப்பம். பல விதமான உணர்ச்சிகள் அவள் நெஞ்சில் பொங்கி எழுந்தன. கண்ணீர் ததும்ப, உதடுகள் துடிக்க, அப்படியே மெளனமாக ரவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். 

ரவியும் தன் இதயத்தையே தனது பார்வையில் வெளிப்படுத்தும் வகையில் அவளையே கண் இமைக்காமல் நோக்கினான். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த காதலர்களுக்குப் பேச எவ்வளவோ இருக்கும், இந்த நேரத்தில் அவர்களைத் தனியாக விட்டுவிட்டு நாம் சென்றுவிடுவதுதான் இங்கிதம் என்பதை உணர்ந்த டாக்டரும், அவருடைய தாயாரும் நாசுக்காக, மெளனமாக, சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து போய் விட்டார்கள். 

”ரவி ! இதெல்லாம் கனவா? நிஜமா?” 

“இதுவரைக்கும் நடந்ததையெல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு, பத்மினி. இன்னிக்கு உனக்கு ஒரு புது வாழ்க்கை ஆரம்பிச்சதா நினைச்சுக்கோ.” 

“ரவி, எனக்காக இவ்வளவு பண்ணி இருக்கீங்க! ஏன் இத்தனை நாளா இதை என்கிட்டேயிருந்து மூடி மறைச்சீங்க?” 

”நான்தான் இதெல்லாம் செய்யறேன்னு தெரிஞ்சா, என் உதவியை நீ எங்கே வேண்டாம்னு உதறித் தள்ளிடுவியோன்னு பயமா இருந்தது. எப்படியும் உனக்கு மறுபடியும் கண் பார்வை வந்திடணும்னு விரும்பினேன். அதுக்கு எந்தத் தடங்கலும் ஏற்படக் கூடாதுன்னு னைச்சேன். இப்போ அந்த லட்சியம் நிறைவேறிட்டது. இனிமே என்னைப்பத்தி தைரியமா உன்கிட்டே சொல்லிக்கலாம்னு வந்திருக்கேன்.” 

“ரவி, உங்களுக்கு எப்படி என் நன்றியைத் தெரிவிக்கப் போறேன்? எதுக்காக எனக்காக இவ்வளவு அக்கறை எடுத்துக்கிட்டீங்க?” 

”எதுக்காகவா? அந்தக் கேள்விக்குப் பதில் உனக்கே தெரியாதா பத்மினி? நான் சொல்லித்தான் உனக்குத் தெரியணுமா? உன் மேலே எனக்கு இருக்கிற அன்பு, நான் சாகிறவரைக்கும் அழியாது. எனக்கு எதுக்காக நீ நன்றி சொல்லணும்? உன்னைப் பத்திரமாய்க் காக்க வேண்டியது, சந்தோஷமா வைக்கவேண்டியது என் கடமை. உனக்கு இனி ஒரு குறையும் வராமப் பார்த்துக்க வேண்டியது என் லட்சியம். உங்க அப்பா சாகிறதுக்கு முன்னாலே நான் உனக்காக முழுப் பொறுப்பையும் ஏத்துக்கிறதா அவருக்குச் சத்தியம் பண்ணிக் கொடுத்தேன். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டுமேங்கறதுக்காக மட்டும் இல்லை, எனக்காகவும் உனக்காகவும்தான். விதி நம்ம ரெண்டு பேரையும் இத்தனை காலமாப் பிரிச்சிட்டது. தெய்வாதீனமா மறுபடியும் நாம ஒண்ணு சேர்ந்துட்டோம். இனிமே நம்மை யாராலும் பிரிக்க முடியாது. பிரிக்கவும் விடமாட்டேன். இன்னும் சில நாட்களிலேயே நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். இந்த முறை கடவுளே இறங்கி வந்தாலும் அதைத் தடுக்கமுடியாது.” 

பத்மினியின் முகம் மாறியது. “இல்லை ரவி, வேண்டாம். தயவுசெய்து கல்யாணத்தைப் பத்தியே பேசாதீங்க,” என்றாள் வேதனை மிக்க குரலில். 

“ஏன் பத்மினி? என்னோட சேர்ந்து வாழ உனக்கு விருப்பமில்லையா? என் மேலே உனக்கு இருந்த அன்பு மாறிட்டதா? சரி,பரவாயில்லை, அதனாலென்ன? நானே உனக்கு வேறே ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து உன் கல்யாணத்தை முடிச்சு வைக்கறேன். நீ நல்லபடியா வாழ்ந்தா, எனக்கு அதுவே போதும்”, என்றான் ரவி. 

”அய்யோ, ரவி! என்னைத் தப்பாய் புரிஞ்சுக்காதீங்க. என்னைக்குமே என் இதயத்திலே உங்களைத் தவிர வேறே யாருக்கும் இடம் இருந்தது கிடையாது. அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி, என்னைக்கும் எனக்கு நீங்கதான் தெய்வம்! இனிமே நான் வேறே ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிறது இந்த ஜென்மத்திலே நடக்காத விஷயம்!” 

“அப்புறம் என்ன? எதுக்காக நம்ம கல்யாணம் வேண்டாம்னு சொல்றே?”

“உங்களைக் கல்யாணம் பண்ணிக்க நான் தகுதி அற்றவள், அருகதை இல்லாதவள். எனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிஞ்சிட்டதே!” 

ரவி சிரித்தான், ”திருமணம்! திருமணமா அது? பத்மினி, உங்க அப்பா எல்லாத்தையும் விவரமா என்கிட்டே சொன்னார். அது உண்மையான கல்யாணமே இல்லைங்கறது எனக்குத் தெரியும். சட்ட பூர்வமா உனக்கு விவாகரத்தும் ஆயிட்டது. நீ எதுக்காகத் தயங்கணும்? நான் உன்னைப் பெண் பார்க்க வந்த அன்னிக்கு எப்படி இருந்தியோ, அப்படியேதான் இன்னைக்கும் நீ அதே கைப்படாத பூஜை மலராக இருக்கே. என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கா அருகதை இல்லை? பைத்தியம் மாதிரி வீணான எண்ணங்களை மனசிலே வைத்துக் கொண்டு உன்னையே போட்டுக் குழப்பிக்காதே.பத்மினி. இதுவரைக்கும் நீ துன்பத்தைத் தவிர வாழ்க்கையிலே வேறே என்ன கண்டிருக்கே? இனிமேலாவது நீ மகிழ்ச்சியா, வாழ்க்கையை முழுமையா அனுபவிக்கணும்.’ 

”நானா? எனக்கு இன்னொரு வாழ்க்கை தேவைதானா?” விரக்தியாகச் சொன்னாள் பத்மினி. 

”யார் யாரோ எப்படியெல்லாமோ வாழும்போது, ஒரு பாவமும் அறியாத நீ, வாழ்க்கையிலே எந்த இன்பமும் இல்லாம வெறும் துன்பத்தைத்தான் அனுபவிக்கணும்னு யார் சொன்னது? சந்தோஷமா வாழ உனக்கும் உரிமை உண்டு. பத்மினி, உங்க அப்பா உன்னைக் கட்டாயப்படுத்தி அப்போ உன்னை ஒரு படு குழியிலே தள்ளினார். ஆனா எப்படியோ ஆண்டவன் புண்ணியத்திலே நீ அதிலேயிருந்து விடுபட்டுட்டே. வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னும் சொல்றே, அப்புறம் உன் எதிர் காலம்தான் என்ன? என்ன செய்யப் போறே?” 

“எனக்கே தெரியலை ரவி! எனக்கும் ஒரு எதிர்காலம் உண்டா?” 

“பைத்தியம் மாதிரி உளறாதே பத்மினி! உனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர இதோ நான் காத்திருக்கேன்! அப்புறம் ஏன் இன்னும் இப்படியெல்லாம் பேசறே?” 

“ரவி, நீங்க உண்மையிலேயே என்னை விரும்பித்தான் ஏத்துக்கறீங்களா, இல்லை ஏதோ பரிதாபப்பட்டு, இவளுக்கு வேற யாருமே இல்லையேங்கற அனுதாபத்திலே இப்படிச் சொல்றீங்களா?” ரவி அவளிடம் வந்து அவள் முகத்தைத் தனது இரு கரங்களுக்கு நடுவே ஏந்திக் கொண்டான். “பத்மினி, என் கண்களைப் பார். நல்லா பார். அதிலே உனக்கு என்ன தெரிகிறது? அனுதாபமா, இல்லை காதலா? பரிதாபமா? இல்லை பரிசுத்தமான அன்பா? நல்லா பாரு பத்மினி!” என்றான். 

பத்மினி அவன் கண்களையே நோக்கினாள். ஒரு கணம் அவனைப் பார்த்தபடி அப்படியே நின்றான். பின்பு, “ரவி!” என்று அவன் நெஞ்சத்தின் மீது சாய்ந்தாள். 

ரவி அவளை இறுகத் தழுவிக் கொண்டான். “பைத்தியமே! இப்போதாவது புரிஞ்சுதா? வெறும் அனுதாபத்தினாலே நான் உனக்காக இதையெல்லாம் செய்யறேன்னு எப்படி நினைச்சே? என்னைக்கு உன்னை முதல் முதலாகக் கண்டனோ,அன்னைக்கே நீ என் இதயத்துக்குள்ளே நிரந்தரமான இடத்தைப் பிடிச்சிட்டே பத்மினி. அந்த இடம் என்னைக்குமே உனக்குத்தான் சொந்தம்.” 

“நான் உண்மையிலேயே ரொம்பக் கொடுத்து வைச்சவ. இவ்வளவு நடந்தும், என்னை அதே அன்போட ஏற்றுக் கொண்டு எனக்கு வாழ்வு கொடுக்க நீங்க முன் வருவீங்கள்னு நான் கனவிலே கூட எதிர்பார்க்கலை. நீங்க மட்டும் இல்லைன்னா, இப்போ எனக்குத் தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேறு வழியே இருந்திருக்காது.” 

”சேச்சே! விளையாட்டுக்குக் கூட அப்படிச் சொல்லாதே பத்மினி. நீ ஏன் சாகணும்? உனக்கு அந்தக் கதி வராமப் பார்த்துக்க நான்தான் இருக்கேனே. இப்போ அந்தப் பேச்சையெல்லாம் விடு, வேறே ஏதாவது சந்தோஷமான விஷயமாப் பேசலாம். இதோ பாரு. உனக்காக வாங்கி வந்த புடவைகள், உனக்குப் பிடிச்சிருக்கா?”

பத்மினி எல்லாவற்றையும் பிரித்துப் பார்த்தாள். எத்தனை பெட்டிகள்!சுமார் நூற்றுக்கும் அதிகமான புடவைகள் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

“இதெல்லாம் பிடிக்கல்லேன்னா சொல்லு, வேறே வாங்கிக்கலாம். இங்கே உனக்காகக் கார் இருக்கு, டிரைவர் இருக்கான். எந்தக் கடைக்கு வேணும்னாலும் போ, உனக்கு எது பிடிச்சாலும் வாங்கிக்கோ,” என்றான் ரவி. 

“இன்னும் இதுக்கு மேலே புடவைகளா! இதையெல்லாம் கட்டிக்க நேரம் கிடைச்சாலே போதுமே! ரவி, நீங்க ரொம்பப் பெரிய பணக்காரரா? எப்படி இவ்வளவு பணம் சம்பாதிச்சீங்க?” என்று கேட்டாள் பத்மினி, ஒரு குழந்தையைப் போல. 

“மறந்தே போயிட்டேன். இத்தனை ஆண்டுகள் இடைக்காலத்திலே நடந்ததெல்லாம் உனக்குத் தெரியவே தெரியாது இல்லை? நான் இப்போ ஒரு பெரிய சினிமா ஸ்டார் ஆயிட்டேன் பத்மினி. அப்படித்தான் இவ்வளவு பணம் சம்பாதிக்க முடிஞ்சது,” என்றான் ரவி. 

பத்மினியால் முதலில் நம்ப முடியவில்லை. “என்னைக் கேலி பண்றீங்களா? உண்மையைச் சொல்லுங்க! நிஜமா நீங்க ஒரு சினிமா ஸ்டாரா?” 

“ஆமாம், பத்மினி”

“என்னாலே நம்பவே முடியலையே! எப்போ சினிமா நடிகர் ஆனீங்க? எப்படி?” 

“அதெல்லாம் ரொம்பப் பெரிய கதை பத்மினி. இப்போ சொல்றதுக்கு நேரமில்லை. எனக்கு வேலை இருக்கு. அவசரமாப் போகணும். மறுபடியும் நாளைக்கு உன்னை வந்து பார்க்கிறேன். அப்போ எல்லாத்தையும் விவரமாச் சொல்றேன்,” என்றான் ரவி. 

”நாளைக்கா? அப்படீன்னா. நீங்க இந்த வீட்டிலே தங்கலையா?” என்று பத்மினி கேட்டாள். 

“ஆமாம், பத்மினி, நான் வேறே வீட்டிலே தங்கறேன். அது… வந்து.. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் இப்படி நமக்கு இன்னும் கல்யாணம் நடக்கலை பாரு? நாம ரெண்டு பேரும் ஒரே வீட்டிலே தங்கினா. ஊர் ஒரு மாதிரியாப் பேசும். அதுக்காகத்தான் இந்த ஏற்பாடு. கூடிய சீக்கிரத்திலேயே நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடறேன், அப்புறம் யாரும் எதுவும் சொல்ல முடியாது,” என்று நிலைமையைச் சமாளித்தான் ரவி. 

“ஓ. ஆமாம், அதைப் பத்தியே நான் நினைக்கலை”, என்றாள் பத்மினி. 

“சரி, பத்மினி, நான் வரட்டுமா? ரெஸ்ட் எடுத்துக்கோ. உடம்பை ரொம்ப அலட்டிக்காதே. இங்கே ஆட்கள் இருக்காங்க- டிரைவர், சமையல்காரன், வேலைக்காரி, உன்னைப் பத்திரமாப் பார்த்துக்குவாங்க. உனக்கு எது வேணும்னாலும் அவங்ககிட்டே சொல்லு- நான் வர்றேன்.” பத்மினியின் கன்னத்தில் முத்தமிட்டு ரவி கிளம்பி போய் விட்டான். 

அவள் உதடுகள் அவனை ஈர்த்துச் சுண்டி இழுத்தன. ஆனால், ரவி தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டான். இப்படி ஆரம்பித்தால் எங்கே போய் முடியுமோ என்ற பயம் அவனுக்கு. முதலில் பத்மினியைத் திருமணம் செய்து கொள்ளலாம், அதுவரை பொறுத்திருப்போம் என்று நினைத்தான். 

அவன் முன்னதாகவே பத்மினியின் வேலைக்காரர்கள் எல்லோரையும் அழைத்து, தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆன விஷயத்தைப் பற்றி பத்மினிக்கு எதுவும் தெரியக் கூடாது என்று சொல்லி வைத்திருந்தான். அதனால், சினிமா செய்திகள் பிரசுரிக்கும் பத்திரிகைகளைக் கூட அந்த வீட்டிற்குள் கொண்டு வரக் கூடாதென்று கட்டளையிட்டிருந்தான். விரைவிலேயே அவன் அந்த விஷயத்தை பத்மினிக்குத் தெரிவித்தாக வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். ஆனால். திடீரென்று ஒரே சமயத்தில் பல அதிர்ச்சிகளைத் தந்தால், அவளால் தாங்கிக் கொள்ள முடியாது என்று, சில நாட்கள் கழித்துக் கொஞ்சம் கொஞ்சமாக, நிதானமாக அவளுக்கு இதைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைத்தான். 

இப்போதுதான் தந்தையை இழந்த அதிர்ச்சி; பிறகு கண் பார்வை திரும்பி மீண்டும் ரவியைச் சந்தித்த அதிர்ச்சி; இதற்குள்ளாகவே அவனுக்கு ஏற்கெனவே திருமணமும் ஆகிவிட்டது என்ற செய்தியைத் தெரியப்படுத்தி இன்னொரு பெரிய அதிர்ச்சியை அவளுக்குக் கொடுத்தால், அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி அவளுக்கு வேண்டாமா? 

அதுவுமில்லாமல் ஏற்கெனவே உள்ளம் நொந்து போனவள், இது உடனே தெரிந்தால், அவள் ஏதாவது விபரீத முடிவுக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டால்? எங்கேயாவது மறுபடியும் காணாத இடத்திற்கு ஓடிப் போய்விட்டால்? 

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இனி கிடைக்கவே முடியாது என்று நினைத்திருந்த பத்மினி எப்படியோ மீண்டும் கிடைத்து விட்டாள்- எதிர்பாராத வகையில். மறுபடியும் அவளை இழந்து விட ரவி தயாராக இருக்கவில்லை. மிகவும் ஜாக்கிரதையாக, கத்தி மீது நடப்பது போல ஒவ்வோர் அடியையும் நிதானமாகச் சிந்தித்து எடுத்து வைக்க வேண்டிய மிக இக்கட்டான நிலைமையில் மாட்டிக் கொண்டிருந்தான். 

ஒரு புறம் பத்மினி, மறு புறம் சாந்தா – இருவருமே அவனை ஆத்மார்த்தமாக நேசிப்பவர்கள். இருவருமே நல்லவர்கள். இருவருடைய உள்ளமும் புண்படாத வகையில் அவன் நடந்து கொள்ள வேண்டும். எப்படித்தான் இந்நிலையைச் சமாளிப்பதென்று ரவிக்கு விளங்கவில்லை. 

இதைப் பற்றிச் சாந்தாவிடம் சொல்லிவிடலாம் என்று பல முறை ஆரம்பித்தான். ஆனால், அவளுடைய வெகுளித்தனமான முகத்தைப் பார்க்கும் போதெல்லாம், அதைச் சொல்ல முடியாமல் ரவி தவித்தான். அவள் மனத்தை நோக வைக்க அவனுக்கு மனம் வரவில்லை. 

இதற்கிடையில் மாலையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம், ரவி பெஸன்ட் நகருக்குச் சென்று பத்மினியைப் பார்த்துவிட்டு வருவான். அந்த மாலை நேரங்களில், இருவரும் பிரிந்திருந்த இடைக்காலத்தில் நடந்ததைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டார்கள். பத்மினி தான் பட்ட துன்பங்களையெல்லாம் விவரமாகச் சொன்னாள், அத்தனை காலமாக அவனையே நெஞ்சுக்குள் வைத்து ஆலயம் கட்டி பூஜித்து வந்ததாகச் சொன்னாள். 

ரவி தன்னுடைய கதையையும் சொன்னான். அவளுக்காகத் தனது பெற்றோரிடமிருந்து பிரிந்து வந்தது, அவளைச் சிறை எடுக்க ஓடோடி வந்தது. கிருஷ்ணசாமி அடியாட்களைக் காட்டி அவனை விரட்டி அடித்தது, பிறகு மனம் நொந்து அவன் ஊரை விட்டே சென்றது, பிறகு பெரிய சினிமா நட்சத்திரம் ஆனது – இவற்றையெல்லாம் சொன்னான். 

ஆனால், சாந்தாவைப் பற்றியும் தன்னுடைய குழந்தையைப் பற்றியும் எதுவுமே சொல்லவில்லை. இங்கேயும் அதே இக்கட்டான நிலைதான். அவளை மேலும் துன்புறுத்த அவன் விரும்பவில்லை. இன்னும் சாந்தாவிடமே பத்மினியைப் பற்றி அவன் எதுவும் சொல்லாத போது, இங்கே பத்மினியிடம் எப்படி சாந்தாவைப் பற்றிச் சொல்வது?

– தொடரும்…

– ஒருத்திக்கே சொந்தம், முதற் பதிப்பு: ஜூன் 1980, மாலைமதி,, சென்னை.

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஒருத்திக்கே சொந்தம்

  1. உங்கள் சிறுகதைகள் தளத்திற்கு நான் புதிய வாசகன்…!
    இனி தொடர்ந்து உங்கள் தளத்தில்
    நானும் இணைந்து பயணத்தை தொடர்வேன்…!
    நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *