(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5
ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டன.
ரவி இப்போது தமிழ்த் திரை உலகில் ஒரு பிரபல சினிமா நட்சத்திர நடிகன் ஆகி விட்டான். அவனுடைய திரைப் பெயர் ரவி குமார். எங்கே பார்த்தாலும் ரவி குமாரின் படங்கள் – பேனர்களில், சுவரொட்டிகளில், பத்திரிகைகளில், தினசரிகளில் எந்தத் தியேட்டரைப் பார்த்தாலும் அங்கே ரவி குமார் நடித்த படம் ஓடிக் கொண்டிருக்கும். எந்த முக்கியக் கலை நிகழ்ச்சி ஆனாலும் அதற்கு ரவி குமார்தான் தலைமை வகிப்பான். எல்லாருடைய நாக்கிலும் ‘ரவிகுமார், ரவிகுமார்’ என்று அவனைப் பற்றிய பேச்சுத்தான்.
இளம் கல்லூரி மாணவிகள், ‘ஹவ் ஸ்வீட்!’ ‘ஹவ் ஹேண்ட்ஸம்!’ என்று அவனை நினைத்து ஏங்கி ஏங்கி மயங்கினர்.
இளம் கல்லூரி மாணவர்கள், ‘ஹவ் டேஷிங்!’ ‘ஹவ் மேன்லி!’ என்று வருணித்தனர்.
நடுத்தர வயதினர், குடும்பத் தலைவிகள் ஆகியோர். எவ்வளவு நல்லா நடிக்கிறான்!’ ‘எவ்வளவு அழகா இருக்கான்!’ என்று புகழ்ந்தனர்.
முதியோர்கள், பையன் எவ்வளவு ப்ரில்லியண்ட்டா முன்னுக்கு வந்துட்டான்! ரொம்ப டேலண்ட் உள்ள பையன். அவன் மேலும் மேலும் வெற்றி பெறணும்,’ என்று வாழ்த்தினர்.
சிறு குழந்தைகள், ‘ரவி குமார் இருக்கிற படமானாதான் நான் சினிமாவுக்கு வருவேன்!’ என்று அடம் பிடித்தனர்.
ஆம்! ரவி குமார் குறுகிய காலத்திற்குள் புகழ் ஏணியின் உச்சிக்கே சென்று விட்டான். ஸூப்பர் ஸ்டார் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டால் அதுதான் ரவி குமார்!
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ரலியின் தந்தை ஐந்து லட்சம் ரூபாய் சொத்தில் ஒரு சல்லிக்காசு கூடத் தர முடியாதென்று அவனை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார். இன்று ரவி குமார் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஊதியமாக ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்து விட்டான்.
மெட்ராஸில் அரண்மனை போன்ற பெரிய பங்களா, வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட நான்கு கார்கள், ஏகப்பட்ட சொத்துக்கள் – எல்லாம் வந்து குவிந்தன. ரவி செல்வத்தில் திளைத்தான். ஆனால் மன நிம்மதி ஒன்றுதான் அவனுக்கு இல்லாத சொத்தாகி விட்டது. பத்மினி அவன் வாழ்க்கையிலிருந்து விலகிய நாள் அன்றே. அதை நிரந்தரமாக அவனிடமிருந்து பறித்துக் கொண்டு போய் விட்டாள்.
ரவி பெரிய சினிமா நட்சத்திரமானாலும், நிதானத்தை இழக்கவில்லை. சிகரெட் பிடிக்க மாட்டான். மது அருந்த மாட்டாள். சூதாட மாட்டான். பெரும்பாலான திரைப்பட நடிகர்களிடம் காணப்படும் இந்த வழக்கங்கள் ரவியிடம் இல்லை. சினிமா உலகி இருந்தும், தாமரை இலைத் தண்ணீர் போல் வாழ்ந்து வந்தான். அந்த வேகமான உலகின் விரும்பத் தகாத குணாதிசயங்களைத் தன்னிடம் அணுக விடாமல் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் கூட எல்லோரும் பார்த்து வியக்கும் வகையில் ரவி வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் ரவி தனது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான். அன்று இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை. ஆதலால் சென்னையில் எங்குமே படப்பிடிப்புக் கிடையாது. தினந்தோறும் ஒரு நிமிடம் கூட ஓய்வு ஒழிசல் இல்லாமல் உழைக்கும் ரவி, அன்றாவது கொஞ்ச நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்று விரும்பி, தானாக எழுந்திருக்கும் வரையில் யாரும் தன்னை எழுப்பக் கூடாதென்று முன்பே சொல்லி வைத்திருந்தான்.
அவன் கண் விழித்தபோது பகல் பதினொரு மணி. வீட்டு இன்ட்டர்காமில் ஒரு பட்டனை அழுத்தினான். அது சமையல் கட்டில் மணி அடித்தது. சமையல்காரன் போனை எடுத்தான். அவனிடம் ரவி தனது அறைக்குக் காபி அனுப்பச் சொன்னான். இன்னொரு பட்டனை அழுத்தினான். கீழே ரிசப்ஷன் அறையில் பஸ்ஸர் அடித்தது. ரவியின் செக்ரட்டரி பாலு போனை எடுத்தான்.
“குட் மார்னிங் சார்,”
”குட் மார்னிங் பாலு. இன்னிக்கு வந்திருக்கிற நியூஸ் பேப்பர்ஸ், முக்கியமான லெட்டர்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு மேலே வா.”
“ஓ கே சார்.” என்று பாலு பதில் அளித்தான்.
ரவி தனது அறையினுள் இருந்த அட்டாச்டு பாத்ரூமில் குளித்துவிட்டு மறுபடியும் அறைக்குள்ளே நுழைவதற்குள் ஒரு ட்ராலியில் காப்பி ரெடியாகக் கட்டில் பக்கத்தில் வைக்கப்பட்டு இருந்தது. பாலுவும் கை நிறைய லெட்டர்களோடும் ஃபைல்களோடும் அங்கே தயாராக நின்று கொண்டிருந்தான். காப்பியை அருந்திக் கொண்டே, “என்ன பாலு, இன்னிக்கு முக்கியமான விஷயம் ஏதாவது உண்டா?” என்று ரவி கேட்டான்.
“இன்கம் டாக்ஸ் அப்பீல் ஒண்ணு நாளைக்கே ஃபைல் பண்ணணும் சார். ஆடிட்டர் ஆபிஸ்லேயிருந்து அப்பீல் பேப்பர்களை அனுப்பியிருக்காங்க. இன்னிக்குத்தான் உங்களுக்குக் கொஞ்சம் டைம்
இருக்கு. ஒவ்வொரு பக்கத்திலேயும் நீங்க நிறைய கையெழுத்துப் போடணும். அதை எப்படியாவது இன்னிக்கே போட்டுக் கொடுத்துட்டீங்கன்னா நல்லாயிருக்கும். நாளையிலிருந்து வழக்கம் போல ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டா, உங்களைப் பிடிக்க முடியாது”.
”சரி. அப்புறம்?”
“எஸ்.எம். பிக்சர்ஸ்லேருந்து ப்ரொட்யூசர் மிஸ்டர் நாயுடு ஃபோன் பண்ணியிருந்தார் சார். அவுங்க அடுத்தபடியா ஈஸ்ட்மன் கலரில் ஒரு சினிமாஸ்கோப் படம் எடுக்கப் போறாங்களாம். அதைப் பத்தி உங்க கிட்டே வந்து பேசணுமாம்”.
“அடுத்த வருஷம் டிசம்பர் வரைக்கும் ஒரு நாள் கூடக் காலியா இல்லையே பாலு.”
“ஆமாம் சார். அதை நான் அவர் கிட்டே எடுத்துச் சொன்னேன். அவர் விட மாட்டேங்கறார். வேணும்னா மற்றத் தயாரிப்பாளர்கள் தரதைவிட ஒரு லட்சமோ, ரெண்டு லட்சமோ அதிகமாகத் தறேன், எப்படியாவது எனக்கு இன்னும் ஆறு மாசம் கழிச்சாவது கால்-ஷீட் தரச் சொல்லுன்னு கேக்றாரு, சார். அந்தப் படத்திலே நீங்கதான் நடிச்சுக் குடுக்கணும்னு ஒத்தைக் கால்லே நிக்கிறார்”.
ரவி சிரித்தான். “சரி, நாளைக்கு அவரை என்னை ஏவி.எம்.ஸ்டூடியோவிலே வந்து பார்க்கச் சொல்லு. அப்புறம்?”
“அப்புறம் பிலிம் பேன்ஸ் அஸோஸியேஷன் செக்ரட்டரி போன் பண்ணியிருந்தார் சார். போன வருஷத்துக்கான சிறந்த நடிகரா உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறதா சொன்னாரு.”
“அட! எந்தப் படத்துக்கு?”
“ரோஷக்காரன் படத்துக்கு சார். அதிலே நீங்க டபிள் ரோல் பண்ணினீங்களே, அதுக்குத்தான் அதிக ஒட்டுக்கள் விழுந்ததாம். பரிசளிப்பு விழாவை அடுத்த மாசம் இருபதாம் தேதி மியூசிக் அகாடமியிலே வைச்சுக்கப் போறாங்களாம்.’
“வெரி குட், அப்புறம்?”
“அடுத்த வாரம் பாலா மூவீஸ் ஷூட்டிங்கைக் காஷ்மீர்லே வச்சுக்கறதா முடிவு பண்ணியிருக்காங்க. ப்ரொட்யூசர் ஃபோன் பண்ணாரு. ப்ளேன் டிக்கெட் எத்தனை பேருக்கு ரிசர்வ் பண்ணணும்னு கேட்டாரு.”
”சொல்லிட்டியா?
“ஆமா சார்.நீங்க, உங்க மேக்கப் மேன்; காஸ்ட்யூமர்; அப்புறம் உங்க அஸிஸ்டெண்ட் பையன் காசிக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணச் சொன்னேன் சார்.”
“குட், அப்புறம்?”
“அப்புறம் இன்னிக்குச் சாயங்காலம் ரோட்டரி கிளப் ஃபங்ஷன்லே நீங்க கலந்துக்கறீங்க. அவுங்க ஆண்டு விழாவுக்கு நீங்க தலைமை தாங்கறதா ஒத்துக்கிட்டு இருக்கீங்க. சரியா ஆறு மணிக்கு உங்களை அழைச்சுக்கிட்டுப் போக அவுங்க கிளப் வைஸ் பிரெஸிடெண்ட்டும், செக்ரட்டரியும் வருவாங்க சார்.”
”ஒ, அது எனக்கு மறந்தே போச்சு. ஏன்தான் அந்த ஃபங்ஷனை ஒத்துக்கிட்டேனோ தெரியலை. இன்னிக்கு ஒரு நாளாவது ஃபுல் ரெஸ்ட் எடுத்துக்கலான்னு நினைச்சேன். சரி வரேன்னு சொல்லியாச்சு.போயாகணும். அவ்வளவுதானா? வேறே ஏதாவது இருக்கா?”
பாலு சொல்லலாமா வேண்டாமா என்பது போல் கொஞ்சம் தயங்கினான். “சார்…..”
“என்ன பாலு?”
“ஒண்ணுமில்லே சார். யாரோ ஒரு பெரியவர் காலைலேருந்து இங்கே வந்து உட்கார்ந்துகிட்டு உங்களைப் பார்க்காமே போகமாட்டேங்கறாரு சார். பார்த்தா நல்ல வசதியுள்ளவர் மாதிரிதான் இருக்காரு. பட்டு வேஷ்டியெல்லாம் கட்டியிருக்காரு. நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். நீங்க தூங்கறீங்க, இப்ப டிஸ்டர்ப் பண்ண முடியாதுன்னு சொன்னேன். கார்த்தாலே ஏழு மணிக்கே வந்துட்டாரு சார். உங்களைப் பார்க்காமே நகர மாட்டேன்னு அப்படியே உட்கார்ந்திருக்காரு. ஏதோ டீசன்ட் ஜென்டில்மேன் மாதிரிதான் இருக்காரு. அவரைப் பார்த்துப் பேசறீங்களா, இல்லை பார்க்க முடியாதுன்னு சொல்லட்டுமா?”
“யாரப்பா அவர்? என்ன பேர் சொன்னாரு?”
”யாரோ ராஜகோபாலனாம் சார். தஞ்சாவூர்லேயிருந்து வந்திருக்காராம். பேர் சொன்னா உங்களுக்குத் தெரியும்னு சொன்னார்.”
ரவி திடுக்கிட்டு எழுந்து நின்றான். “பாலு, அவர் வேறே யாரும் இல்லை. அவர் எங்க அப்பா! என்னைப் பெத்த அப்பா, பாலு! அவர்கிட்டே மரியாதையா நடந்துகிட்டியா? அவரை எங்கே உட்கார வெச்சிருக்கே?”
“ஆபீஸ் ரூமிலேதான் உட்கார வச்சேன் சார். சாரி சார், அவர் உங்க அப்பான்னு எனக்குத் தெரியாது.” பாலு கொஞ்சம் பதட்டம் அடைந்து விட்டான்.
”பரவாயில்லை, உனக்கு எப்படித் தெரிஞ்சிருக்க முடியும்? நீ ஓடிப்போய் டிராயிங் ரூமிலே ஏ.ஸி போட்டுவிடு. சீக்கிரம் சமையல்காரன் கிட்டே சாப்பாட்டுக்கு டைனிங் ரூமிலே ஏற்பாடு பண்ணச் சொல்லு, போ, அவர் தங்கறதுக்கு ஒரு பெட் ரூமைத் தயார் பண்ணச் சொல்லு போ,சீக்கிரம் போ! நான் வந்துகிட்டே இருக்கேன்!”
ரவி தனது இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொண்டிருந்த டர்கிஷ் பாத் டவலைக் கழட்டி எறிந்து விட்டு அவசரம் அவசரமாக ஒரு பட்டு லுங்கியும் சட்டையும் அணிந்து கொண்டான். வேகமாக மாடிப்படி இறங்கி கீழே ஓடினான்.
ஆபீஸ் ரூமில் கைத்தடியைக் கால்களுக்கு நடுவே வைத்துக் கொண்டு அதன் மேல் இரு கைகளையும் ஊன்றி, தலை குனிந்தபடி ராஜனோடாவன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.
“அப்பா!”
அவர் மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தார். எழுந்து நின்றார். அவர் கண்களில் நீர் மல்க, உதடுகள் நடுங்க ஏதோ பேச முயன்றார். வார்த்தைகள் வரவில்லை.ரவி ஓடிச் சென்று அவர் கால்களைத் தொட்டு நமஸ்காரம் பண்ணினான். ராஜகோபாலன் அதற்கு மேல் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.ரவியைக் கட்டித் தழுவிக் கொண்டு குழந்தை போல் அழுதே விட்டார். ரவியின் கண்களும் ஈரமாகிவிட்டன.
“அப்பா, வாங்கப்பா, ட்ராயிங் ரூமிலே உட்கார்ந்து பேசலாம்.”தந்தையின் தோள்களை அணைத்தபடி அன்பாக ரவி அவரை அழைத்துக் கொண்டு போய் டிராயிங் ரூமில் சோபா மீது அமரச் செய்து, அவர் பக்கத்தில் உட்கார்ந்தான்.
”ரவி, நீ கொஞ்சம் கூட மாறலே.”
“என்னப்பா அப்படிச் சொல்றீங்க?”
“இல்லே நீ இப்ப பெரிய மனுஷன் ஆயிட்டே. நீ சரியாப் பேசுவியோ இல்லையோ, எப்படி நடந்துக்குவியோன்னு பயந்துதான் இத்தனை நாளா நான் உன்னைப் பார்க்க வரலே. ஆனா, நான் நினைச்சது எல்லாம் தப்புன்னு இப்போ தெரிஞ்சுகிட்டேன்”.
“தப்பு என்னுடையதுதாம்பா. என்ன இருந்தாலும் நான் உங்க பிள்ளை. நானே வந்து உங்களைப் பார்த்திருக்கணும். ஆனா…”
“தெரியுண்டா.நீ ரோஷக்காரன் ஆச்சே! என் வீட்டு வாசப்படியை மிதிக்காதேன்னு அன்னிக்கு நான்தான் சொன்னேன். நீ மிதிக்கல்லே. உன் பிடிவாதத்தை நினைச்சு நான் பெருமைப் படறேண்டா. ஆனா. இத்தனை வருஷமா உன்னைப் பார்க்காம எவ்வளவு வேதனைப் பட்டேன்னு உனக்குத் தெரியுமாடா? நான் உன்கிட்டே நடந்துகிட்ட விதத்தை நினைச்சாத்தான் எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு, சங்கடமா இருக்கு”.
“அப்பா! பழைய விஷயங்களையெல்லாம் மறந்துடுங்க. அம்மா எங்கே? ஏன் உங்களோட வரலை?”
“அதுக்குத்தாண்டா இப்ப வந்திருக்கேன். வீட்டை விட்டு நீ போனதிலேருந்தே, அவளுக்கு ஒண்ணுமே சரியில்லை. உனக்குத் தெரியாதா என்ன, உன்மேலே அவள் உயிரையே வச்சிருக்கா. நீ வீட்டை விட்டுப் போனதும் அவ படுத்த படுக்கையாப் போயிட்டா. அப்பவே உன்னைக் கண்டுபிடிக்க ரொம்ப முயற்சி பண்ணினேன். நீ எங்கே இருக்கேன்னு முதல்லே தெரியலை. அப்புறம் நீ சினிமாவிலே பிரபலமாயிட்டே. உன்னைப் பத்தி நிறையக் கேள்விப் பட்டோம். அதுக்கப்புறம் உங்க அம்மா தினமும் ‘என்னங்க, போய் அவனைக் கூப்பிடுங்க, அவனை அழைச்சுட்டு வாங்க’ன்னு சொல்லிட்டே இருந்தா. நான்தாண்டா வேண்டாம்னு இருந்தேன். இப்ப உனக்குக் கிடைச்சிருக்கிற அந்தஸ்து, புகழ், பணம், இதெல்லாம் உன்னைத் தலைகால் தெரியாம ஆட வைக்கும்னு நினைச்சிட்டேன். சரியா முகம் கொடுத்துக்கூடப் பேசுவியோ இல்லையான்னு சந்தேகப் பட்டேன். உன்னைப் பார்க்க வந்தா, எங்கே அவமானப் படுத்தி அனுப்பிடுவியோன்னு பயந்துட்டே இத்தனை நாளா வரலைடா. நான் ஒரு மடையன்! ஆண்டாள் பெத்த புள்ளை அப்படி எல்லாம் கெட்டுப் போயிட மாட்டான்னு எனக்குப் புரிஞ்சிருக்கணும். உம்! எனக்குப் புத்தியிருந்தா அன்னிக்கு உன்னை அப்படி விரட்டி அடிச்சிருப்பேனா?”
“அப்பா,அப்படி யெல்லாம் பேசாதீங்க. அம்மா இப்போ எப்படி இருக்காங்க?”
“அதாண்டா சொல்ல வந்தேன். இப்ப அவளுக்கு ரொம்ப உடம்புக்கு முடியலை. படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியலை. தினமும், ‘நான். சாகப்போறேன், சாகப்போறேன்,போறதுக்கு முன்னாலே என் ரவியை ஒரு வாட்டி வரச் சொல்லுங்க’ன்னு அழறா. இப்ப அவ இருக்கிற நிலைமையைப் பார்த்தா எனக்கு என்னமோ ரொம்பப் பயம்மா இருக்குடா. அதனாலேதான் தைரியத்தை வரவழைச்சிட்டு உன்னை எப்படியும் பார்த்துடணும்னு வந்தேன். ரவி, உங்க அம்மாவுக்கு ஏதாவது ஆயிட்டுதுன்னா…” அதற்கு மேல் பேச முடியாமல் ராஜகோபாலன் உணர்ச்சி வசப்பட்டுத் தனது அங்க வஸ்திரத்தால் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்.
“அப்பா, அப்பா! அழாதீங்கப்பா! தைரியமா இருங்க! அம்மாவுக்கு ஒண்ணும் ஆயிடாது. நான் இப்பவே உங்களோட தஞ்சாவூருக்கு வர்றேன். அம்மாவை உடனே இங்கே அழைச்சிட்டு வந்து ஒரு நர்சிங் ஹோம்லே அட்மிட் பண்ணி மெட்ராஸிலே இருக்கிற பெரிய பெரிய டாக்டர்களையெல்லாம் வரவழைச்சு அம்மாவைப் பார்க்கச் சொல்றேன். கவலைப் படாதீங்கப்பா. எல்லாம் சரியாப் போயிடும். நீங்க வந்து முதல்லே சாப்பிடுங்க. அதுக்குள்ளே காரை ரெடியா வைக்கச் சொல்றேன். நீங்க சாப்பிட்ட உடனே புறப்படுவோம்.”
தந்தை குழந்தைபோல ஆகிவிட்டார். அவருக்கு மகன் தகப்பனைப் போல் தைரியம் ஊட்டினான்.
”சரிடா. நீ அங்கே வந்தாலே போதும். உன்னைப் பார்த்தாலே அவளுக்கு எல்லாம் சரியாப் போயிடும்னு எனக்குத் தோணுது!”
”பாலு!” ரவி குரல் கொடுத்தான்.
பாலு ஓடி வந்தான். “சார்?”
“உடனே மர்சிடீஸ் பென்ஸ் காரை ரெடியா வைக்கச் சொல்லு. டாங்க்லே பெட்ரோலை ஃபுல்லா ரொப்பிக்கச் சொல்லு. நான் உடனே தஞ்சாவூருக்குப் போயாகணும். இன்னும் இரண்டு நாட்களுக்கு என்னுடைய நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் கேன்ஸல் பண்ணிடு. சம்பந்தப்பட்ட புரொட்யூஸர்ஸ் எல்லாருக்கும் ஃபோன் பண்ணி அவசரமா சொந்த விஷயமா வெளியூர் போயிருக்கேன்னு சொல்லிடு”.
”சரி சார்”.
ரவியின் கறுப்பு நிற மர்சிடிஸ் பென்ஸ் கார் தஞ்சாவூரை நோக்கிப் பறந்தது.
வழி முழுவதும் பெட்ரோல் நிரப்ப வண்டி எங்கெங்கே நின்றாலும், உடனே ஒரு கூட்டம் வண்டியைச் சூழ்ந்து கொள்ளும். ‘ரவி குமார். ஹாய் ரவி குமார்!’ என்ற கோஷம் கிளம்பும்.
வழியில், சிற்றூர்களும், கிராமங்களும் வரும்போது, கடைவீதிகள் வழியாக, ஜன நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களில், கார் சற்று நிதானமாகத்தான் செல்ல முடிந்தது.சில சமயங்களில், காருக்கு முன்னால் மாட்டு வண்டிகள் வழி மறித்து நிற்கும். அப்போது காரும் மேலே செல்ல முடியாமல் சில நிமிடங்கள் நிற்க வேண்டியது இருந்தது. அப்படி நேரும் போதெல்லாம், கார் எங்கெங்கே நின்றாலும், பெரிய காரைக் கண்டவுடன் ஒரு கூட்டம் ஓடி வந்து காரைச் சூழ்ந்து கொள்ளும். ரவியை உடனே அடையாளம் கண்டு கொள்வார்கள். “ரவி குமார்! ரவி குமார்!” அண்ணே வணக்கம்!”- டேய்! நம்ம ரவி குமார் டா!” ‘அண்ணே எங்களைப் பாருங்க அண்ணே!’என்றெல்லாம் வித விதமான கோஷங்கள் கிளம்பும்.
மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கண்டு, ரவி உடனே பதிலுக்கு வணக்கம் கூறுவான். காருக்குள் ஏ.ஸி. ஓடிக் கொண்டிருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் உடனே ஜன்னல் கண்ணாடியை இறக்கி விடுவான். அவன் கை பட்டாலே கோடிப் பொன் கிடைத்து விடும் என்பது போல் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு, ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிக் கொண்டு, கார் மீது மோதிக் கொண்டு, தங்கள் கைகளை ஆர்வத்தோடு உள்ளே நீட்டுவார்கள். கார் அங்கே நிற்கும் வரை, ரவி அவர்களோடு அன்புடன் கை குலுக்குவான்; ரசிகர்கள் கேட்கும் அசட்டுப் பிசட்டான கேள்விகளுக்குச் சிரித்துக் கொண்டே தகுந்த பதில் அளிப்பான்; ஆவலோடு அவர்கள் நீட்டும் அழுக்கு ரூபாய் நோட்டுகளிலும், துண்டுக் காகிதங்களிலும் பொறுமையோடு தன்னால் இயன்ற வரை கையெழுத்து போட்டுத் தருவான். தன்னை ஏதோ நவீன தெய்வமென கருதி ஆராதிக்கும் ரசிகர்களை தன்னால் முடிந்த வரை திருப்திப் படுத்த அவன் முயன்றான். அன்பினால் அவர்கள் செய்த ஆரவாரத்தைத் தொல்லையாகக் கருதாமல், அவர்களுடைய ஊக்கத்தோடு கூடிய ஆசை உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்தான்.
அந்த இடத்தை விட்டுக் கார் நகரும்போது, அதைச் சுற்றிக் கூடியிருந்த மக்கள் வெள்ளம், “ரவி குமார் வாழ்க! ரவி குமார் வாழ்க!” என்று இதய பூர்வமாக வாழ்த்திக் கோஷம் எழுப்புவார்கள். வழி முழுவதும், வண்டி நின்ற ஒவ்வொரு இடத்திலும், இதே மாதிரி நடக்கும்.
இதெல்லாம் ராஜகோபாலனுக்கு விந்தையாக இருந்தது. இதையெல்லாம் ரவி எவ்வளவு சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டான் என்பதைப் பார்க்கும் போது அவருக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது. ‘இவ்வளவு புகழ் அடைந்தும்,எவ்வளவு அடக்கத்தோடு நடந்து கொள்கிறான்! இந்தச் சின்ன வயசிலேயே இவனுக்கு இவ்வளவு விவேகமா? என் பையன் சாதாரணப் பையன் இல்லை,’ என்று மனத்துக்குள் பெருமைப்பட்டுக் கொண்டார்.
தஞ்சாவூர் போய்ச் சேர்ந்ததும் ரவி நேரே தனது தாய் இருக்கும் அறைக்கு ஓடிச் சென்றான். ராஜகோபாலன் சொன்ன மாதிரியே ரவியின் முகத்தைக் கண்ட மறு வினாடியே ஆண்டாளுக்குப் பழைய தெம்பில் பாதி திரும்பிவிட்டது. ரவி உடனே ஆண்டாளை மெட்ராஸுக்கு அழைத்து வந்து ஒரு பெரிய மருத்துவ மனையில் சேர்த்து வைத்தான். அந்த மருத்துவ மனையை நடத்துபவர் டாக்டர் கோபால். ரவியுடைய நெருங்கிய நண்பர். ராஜகோபாலனும் கூடவே இருந்தார்.உடல் நிலை தேறி ஆண்டாள் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தாள்.
“நீங்க ரெண்டு பேரும் இனிமே இங்கேயே என் கூடவேதான் இருக்கணும்,” என்று அன்புக் கட்டளையிட்டான் ரவி.
“அப்படியே ஆகட்டும்பா. இத்தனை வருஷமா உன்னைப் பிரிஞ்சு இருந்தது போதாதா? உன் இஷ்டப்படி இங்கேயே இருக்கோம்.”
இருவரும் அங்கேயே தங்கி விட்டனர். ராஜகோபாலன் மட்டும் மாதத்தில் ஒரு முறை தஞ்சாவூர் சென்று தனது நிலங்களைப் பார்வையிட்டு வருவார். ரவியின் வீட்டில் ஆண்டாள் ராஜ மாதா மாதிரி சகல மரியாதையோடு கொலுவிருந்தாள்.
ஒரு நாள் இரவு, படப்பிடிப்பு முடிந்து ரவி வீடு திரும்புவதற்கு இரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. ட்ராயிங் ரூமில் விளக்குகள் எரிந்து கொண்டு இருப்பதை ரவி கவனித்து ஆச்சரியம் அடைந்தான். உள்ளே சென்று பார்த்தால், ஆண்டாள் ஒரு சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
“அம்மா! நீ இன்னும் தூங்கலையா?”
“இல்லைடா. தூக்கம் வரலை.”
ரவி சென்று ஆண்டாள் பக்கத்தில் உட்கார்ந்தான். “சாப்பிட்டியாம்மா?”
“இல்லைடா. நீ வந்ததும் உன்னோடே சேர்ந்து சாப்பிடலான்னு காத்துட்டிருந்தேன். உன்னோட உட்கார்ந்து சாப்பிட்டு எத்தனை நாள் ஆகிறது!” என்று ஆண்டாள் வருத்தப்பட்டுக் கொண்டாள்.
“அடடே! மணி பன்னிரண்டு ஆச்சே! ஏம்மா, இவ்வளவு நேரம் சாப்பிடாம இருந்தா உன் உடம்பு என்ன ஆகும்?”
”நன்றாயிருக்கு போடா! என் உடம்பைப் பத்தி நீ கவலைப்படறியா? இத்தனை மணி வரைக்கும் உழைச்சுட்டுச் சாப்பிடாமே இருந்தா உன் உடம்பு என்னத்துக்காகும்?” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டாள் ஆண்டாள்.
”என்னம்மா பண்றது? முடியற படம். எக்ஸ்டென்ஷன் கேட்டா முடியாதுன்னு சொல்ல முடியலை.”
ஆண்டாள் கவலையோடு அவனைப் பார்த்தாள்.”ரவி, இப்படி ஏண்டா உன்னையே நீ போட்டு வாட்டிக்கறே? உன்கிட்டே பணமா இல்லை? எதுக்கு இப்படி ராப்பகலா வேளா வேளைக்குச் சாப்பாடும் இல்லாம தூக்கமும் இல்லாம் கஷ்டப்படணும்? இதுவரைக்கும் நீ சம்பாதிச்சதே இன்னும் ஏழு தலைமுறைக்குப் போது தாதா? இருக்கிற பணத்தை வச்சுட்டு நிம்மதியா இருக்கக் கூடாதா?”
ரவி சோபாவில் அசந்து போன மாதிரி களைப்பாகப் பின்னுக்குச் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். ”பணத்துக்காக இல்லேம்மா. எனக்கு யோசிக்கறதுக்குக் கூட நேரமில்லாம இருந்தால்தான் நல்லது. எதைப் பத்தியும் நான் நினைக்கவோ, வருத்தப்படவோ நேரம் இருக்கக் கூடாதுன்னுதான் இப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேலை பண்றேன். ராத்திரி வீட்டுக்கு வரதுக்குள்ளே, களைச்சுப் போய்த் தூங்கினாப் போதுங்கற அளவுக்கு டயர்டு ஆயிடறேன். இப்படி வேலை பண்ணச் சொல்லி என்னை யாரும் கட்டாயப்படுத்தலே. வேணும்னு நானேதான் இப்படி ஒரு டைட் ஷெட்யூலை வச்சிட்டிருக்கேன்.”
ஆண்டாள் அன்போடு அவன் தலையை வருடினாள். “ரவி, உன் வேதனை எனக்குப் புரியுதுப்பா. நீ இன்னும் பத்மினியை மறக்கலை, இல்லை?” என்று கேட்டாள்.
பதிலுக்கு ரவி எதுவும் பேசவில்லை. கண்களை மூடிக் கொண்டு மெளனமாகவே இருந்தான்.
ஆண்டாள் மீண்டும் பேச ஆரம்பித்தாள். “ரவி, நடந்ததையே நினைச்சு நினைச்சு வருத்தப் படறதிலே பிரயோஜனமேயில்லே. ஆனது ஆயிட்டது, அதையெல்லாம் மறந்துட்டு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கணும்பா.”
ரவி திடீரென்று எழுந்து நின்றான். ட்ராயிங் ரூமை விட்டுப் போகத் திரும்பினான். ஆனால் ஆண்டாள் அவன் கையைப் பிடித்துக் கொண்டு போக விடவில்லை.
“ஏண்டா பதிலே சொல்லாமப் போறே?”
“அம்மா, என் கல்யாணத்தைப் பத்திப் பேச வேண்டான்னு எத்தனையோ வாட்டி சொல்லி ஆச்சு. திரும்பத் திரும்ப நீ அதே கேள்வியைக் கேட்டா நான் என்னம்மா பதில் சொல்றது? அந்தப் பிரசினையை விட்டுடும்மா.”
“விட்டுடுன்னு நீ சொன்னா நான் விட்டுட முடியுமா? நான் உன்னுடைய அம்மாடா. நீ சந்தோஷமா இருக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா? நீ இப்படி வேதனைப்படறதை பார்த்தா எனக்குத் துக்கமா இருக்காதா? கோவிச்சுக்காம நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாக் கேளு. முதல்லே வந்து இங்கே உட்காரு”.
ரவி ஒரு நிமிடம் அப்படியே பிடிவாதமாக நின்றான். பிறகு ஆண்டாளின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும் வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.
”அம்மா, நீ என்னதான் சொன்னாலும், பத்மினியை என்னாலே மறக்க முடியலேம்மா.”
“கண்ணா, செத்துப் போனவளைப்பத்தி நீ எவ்வளவுதான் நினைச்சு நினைச்சு ஏங்கினாலும், அவள் திரும்பி வருவாளாடா?”
ரவிக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ரவி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். என்ன சொல்கிறாள் அம்மா?
“என்னம்மா சொல்றே? பத்மினி செத்துப் போயிட்டாளா?”
“ஆமாம்பா. அவள் ஒரு கார் ஆக்ஸிடென்ட்லே செத்துப் போயிட்டாள்னு அவளுடைய அப்பாவே சொன்னாராம். தஞ்சாவூர்லே எங்க பக்கத்து வீட்டு மாமி – அதான், முரளியோட அம்மா – அவ தான் என்கிட்டே சொன்னாள்.”
“இதை ஏம்மா நீ முன்னாலேயே என்கிட்டே சொல்லலே?”
“டேய், ஏற்கனவே பத்மினி பேரைச் சொன்னாலே நீ ஒரு மாதிரி ஆயிடறே. ஆன மட்டிலும் அவளைப்பத்திப் பேசாம இருக்கிறதே நல்லதுன்னு எனக்குப் பட்டது. பழசையெல்லாம் ஞாபகப்படுத்தி, மேலும் உன் மனசை நோக வைக்க வேண்டாம்னு நினைச்சுத்தான், நான் இத்தனை நாளா இதைப்பத்தி உங்கிட்டே சொல்லலை. அவள் அப்பாவும் சூரக்கோட்டையிலே இருந்த வீடு. நிலம் எல்லாத்தையும் வித்துட்டு ஊரை விட்டே போயிட்டார்னு கேள்விப் பட்டேன். இப்ப அங்கே அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க யாரும் இல்லை.”
“ஓ. இதெல்லாம் எனக்குத் தெரியாது.” ரவி எழுந்து எதிரே இருந்த ஜன்னலுக்கு முன்னால் போய் நின்றான். காட்டனை விலக்கினான்.
வெளியே ஒரே இருட்டு. ஆகாயத்தில் ஒரே இருட்டு. வானத்தில் வெண்ணிலாவும் தென்படவில்லை. தாரகைகளும் தென்படவில்லை. ஒரே இருட்டு.அந்த நேரம், அவன் உள்ளத்தையும் அந்த இருட்டுச் சூழ்ந்து கொண்டிருந்தது. ‘போயிட்டியா, பத்மினி? போயிட்டியா? என்னைக்காவது ஒரு நாள், எங்கேயாவது மறுபடியும் உன்னைச் சந்திக்க மாட்டேனாங்கற ஆசை. எனக்கே தெரியாமே என் மனசுக்குள்ளே இத்தனை நாளா புதைஞ்சு கிடந்தது. இனி உன்னை இந்த ஜென்மத்திலே பார்க்கவே முடியாதா? பத்மினி. பத்மினி பத்மினி…’
ஆண்டாள் அவன் அருகில் போய் நின்றாள். அவன் தோள் மீது கை வைத்ததும், ரவி திடுக்கிட்டு மீண்டும் சுய நினைவுக்குத் திரும்பினான். “ரவி, அவ போய்ச் சேர்ந்துட்டா. அவ கதை எப்படியோ முடிஞ்சு போச்சு, ஆனா, நீ வாழ வேண்டியவன். இன்னும் அவளைப் பத்தியே நினைச்சிட்டு இருக்கிறதிலே அர்த்தம் இல்லை. டேய், உங்க அப்பாவுக்கும், எனக்கும் வயசு ஏறிட்டே போகுது. எங்களுக்கும் பேரன் பேத்திகளைப் பார்க்கணும்னு ஆசை இருக்காதா? நான் செத்துப் போறதுக்குள்ளே ஒரு வாட்டியாவது என் பேரனை மடியிலே எடுத்து வச்சிட்டுக் கொஞ்சணும். அந்த சந்தோஷத்தை எனக்குத் தர மாட்டியா?’ என்று நெஞ்சு உருகக் கேட்டாள் ஆண்டாள்.
ரவியும் யோசித்தான். பத்மினி இறந்து விட்ட பிறகு, இனி நான் எப்படி இருந்தால் என்ன, எப்படி வாழ்ந்தால் என்னவென்று அவனுக்குத் தோன்றியது. எப்படியும் வாழ்ந்தே தீர வேண்டும். இனிமேல் வயதான அம்மாவையாவது திருப்திப்படுத்தலாமே; தன் மீது உயிரையே வைத்திருக்கும் அம்மாவின் ஆசையை நிறைவேற்றி, அவளையாவது மகிழ்விக்கலாமே என்று நினைத்தான். ஒரு முடிவுக்கு வந்தான். திரும்பினான்.
“சரிம்மா. உன் இஷ்டப்படியே நடக்கட்டும். நான் கல்யாணம் பண்ணிக்கறேன்,” என்றான்.
“டேய் கண்ணா! நிஜமாத்தான் சொல்றியாடா?” என்று கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக ஆண்டாள் கேட்டாள்.
தாயின் முகத்தைத் தனது இரு கரங்களின் நடுவே எடுத்துக் கொண்டான் ரவி. ”ஆமாம். உனக்காகத்தாம்மா. உன்னைச் சந்தோஷப்படுத்தறதுக்காகத்தான் நான் இப்ப கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கறேன். ஆனா,மறுபடியும் என்னைப் பெண் பார்க்கச் சொல்லிக் கூப்பிடாதே. உனக்குப் பிடிச்சா சரி. நீயே பார்த்து செலக்ட் பண்ணு. உனக்கு எந்தப் பெண்ணைப் பிடிக்கிறதோ, அவளுக்கே தாலி கட்டறேன்,” என்று சொல்லி விட்டான்.
ரவியின் திருமணம் தடபுடலாக நடந்தது. அவன் தாயார் அவனுக்காகப் பார்த்த பெண்ணின் பெயர் சாந்தா. அவள் சுபாவமும் பெயருக்கு ஏற்றபடியே இருந்தது.
திருமணமாகி ஓர் ஆண்டுக்குள் ரவிக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு ஸ்ரீதர் என்று பெயர் இட்டார்கள்.
ரவி ஓரளவுக்கு சந்தோஷமாகவே இருந்தான். திரைப்படத் துறையிலும் ரவியின் புகழ் நிலையாக இருந்தது.
இப்போது ராஜகோபாலனுக்கு மெட்ராஸில் இருப்புக் கொள்ளவில்லை. அவருக்குத் தஞ்சாவூர் ஞாபகம் வந்துவிட்டது. அங்கேயே போய் இருந்து விடுகிறேன் என்றார். ரவி எவ்வளவோ சொல்லியும் அவர் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. ஆண்டாளும் அவருடன் செல்கிறேன் என்றாள். ரவிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
“என்னம்மா, எல்லாரும் என்னைத் தனியா விட்டுட்டுப் போயிடறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?” என்று கேட்டான்.
“ஏண்டா அப்படிச் சொல்றே? நீ ஒண்ணும் தனியா இல்லையே? சாந்தாவும் உன் குழந்தையும் உன் கூட இல்லை? எனக்கு என்னமோ இங்கேயே இருக்கணும்னுதான் ஆசை. ஆனா உங்க அப்பா பிடிவாதமா அங்கே போய் இருக்கேன்னு சொல்றப்போ. வயசான காலத்திலே அவரை அங்கே தனியா விட்டுட்டு நான் மட்டும் எப்படிடா இங்கே இருக்க முடியும்? அடிக்கடி முடிஞ்சப்ப எல்லாம் நான் மெட்ராஸுக்கு வந்து சில நாட்கள் இருந்துட்டுப் போறேன். வரவே மாட்டேன்னா சொல்றேன்? நீயும் முடிஞ்சப்ப வா. சாந்தாவையும் குழந்தையையும் அங்கே அனுப்பி கொடு,’ என்று ஆண்டாள் அவனுக்கு ஆறுதல் கூறினாள்.
அதன் பிறகு ராஜகோபாலனும் ஆண்டாளும் தஞ்சாவூருக்கு அவர்களுடைய பழைய வீட்டிற்கே சென்று விட்டார்கள்.
– தொடரும்…
– ஒருத்திக்கே சொந்தம், முதற் பதிப்பு: ஜூன் 1980, மாலைமதி,, சென்னை.