“சரி என் கல்யாணத்துக்காவது வருவியா மாட்டியா? கேட்ட கனகாவின் கண்களை உற்று நோக்கிய ஆனந்த மூர்த்தி சொல்ல முடியாது, அந்த நேரத்தில் என் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தது. அது சரி உன் இஷ்டம் நான் கிளம்புகிறேன் எழுந்தாள் கனகா. உன் கணவனை கேட்டதாக சொல், கொஞ்சம் கோபக்காரன் அனுசரித்து போ சொல்லிவிட்டு அவனும் எழுவது போல் பாவனை செய்தான். கிளம்பு என்கிறான், இதை புரிந்து கொண்ட கனகா ரெஸ்டாரெண்டை விட்டு வெளியே வந்து காரை உசுப்பினாள். மிக மெதுவாய் அந்த காம்பவுண்டை விட்டு வேளியே வந்த கார் அந்த கருஞ்சாலையில் வேகமெடுக்க ஆரம்பித்த்து. நினைவுகள் மட்டும் பின்னே அதை விட வேகமாய்…செல்ல ஆரம்பித்தது.
கல்லூரியை விட்டு வெளியே வந்த பொழுது என்ன செய்வது என்று புரியவில்லை. அம்மாவிற்கு அதற்கு மேல் உழைக்க வலுவில்லை. அப்பா இவர்களை விட்டு விட்டு என்றோ காணாமல் போய் விட்டார். இவளது சான்றிதழ்கள் இவளுக்கு கொஞ்சம் கூட பயன் படவில்லை.அம்மாவுக்கு ஓய்வு தரவேண்டும் என்ற வேட்கை இருந்தும் வாடகையிலிருந்து அந்த மாத செலவுகள் வரைக்கும் அம்மாவின் நாலு வீடு கூட்டி பெருக்கி துடைப்பதில் கிடைக்கும் வருமானத்தில்தான் இருந்தது.
இவளும் சளைக்காமல் கம்பெனிகளாக ஏறி இறங்கினாள். அப்படி ஒரு நாள் அறிமுகமானவன் தான் இந்த ஆனந்த மூர்த்தி. அந்த கம்பெனியில் இருவரும் ஒரே நேரத்தில் தேர்வாகி கம்பெனியில் யாரை எடுப்பது என யோசிக்குபோது தயங்காமல் கனகாவுக்கு கொடுங்கள் என்று சொன்னான் இந்த ஆனந்த மூர்த்தி. கம்பெனி நிர்வாகம் ஆச்சர்யப்பட்டு அந்த பெண் இந்த வேலையை உனக்கு கொடுக்க சொல்லி வற்புறுத்தினாள். நீ என்னடாவென்றால் அந்த பெண்ணுக்கு வேலையை கொடுக்க சொல்கிறாய். நீங்கள் இருவரும் வேறு வேறு ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள், உங்களுக்கு முன்னரே பழக்கம் இருக்கிறதா? ஒரு புன்னகையை தவிர இருவரும் வேறு பதில் சொல்லவில்லை. ஆனால் இருவருமே அங்கு பணிக்கு சேரவில்லை.
கம்பெனி இவர்கள் இருவரையும் அழைத்து உட்கார வைத்து எங்களுடைய தயாரிப்பு பொருட்களை நீங்கள் இருவரும் சேர்ந்து ஏன் விற்பனை செய்ய கூடாது? கேட்டவுடன் உதட்டை பிதுக்கினாள் கனகா. சாரி சார் அந்த அளவுக்கு என்னிடம் வசதி இல்லை. ஆனந்த மூர்த்தி எவ்வளவு தொகை கட்டவேண்டும் சார்? கேள்வியை கேட்டவன் அவர்கள் சொன்ன தொகையை கேட்டபின் ஒரு பத்து நாள் தவணை கேட்டான்.சொன்னபடி பத்து நாளில் பணத்தை கொண்டு வந்து கட்டியவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் கனகாவின் வீட்டு கதவை தட்டினான்.
கனகா இந்த நிகழ்ச்சியையே மறந்து வரிசையாய் இந்த பத்து நாட்களில் கம்பெனி கம்பெனியாக ஏறிக்கொண்டுதான் இருந்தாள். அன்று கூட ஏதோ கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு வர சொல்லி இருப்பதால் கிளம்புவதற்கு ஆயத்தமானவளை கதவு தட்டும் சத்தம் அவளை கதவை திறக்க வைத்த்து.
மலைத்து போய் உட்கார்ந்திருந்தாள் கனகா இது சாத்தியமா? ஏறக்குறைய அவனையும், அந்த கம்பெனி விவகாரத்தையும் மறந்து விட்டிருந்தவள் திடீரென இவன் எதிரில் வந்து நாம் பாங்குதாரராக இந்த வியாபாரத்தை ஆரம்பிக்கலாம் என்று சொல்லி முன்னால் நிற்பதை இவளால் நமபவே முடியவில்லை.
ஆயிற்று அதன் பின் பத்து வருடங்கள், இவளின் தாயார் மரணம், இவனின் நட்பு அவளை தனிமையில் இருந்து மீட்க உதவியது. இருவரும் இரவு பகலாக உழைத்தனர். ஊர் ஊராய் அலைந்தான் ஆனந்த மூர்த்தி. இவள் அலுவலக உதவிகளிலிருந்து வரவு செலவுகள் அனைத்தையும் கவனித்தாள்.
தொடங்கி இரு வருடங்கள் லாபம் காட்டாமல் இருந்த கம்பெனி அதன் பின்னர் மள் மள வென முன்னேற ஆரம்பித்தது. அவர்களை சொந்த அலுவலகமும், சொந்த வீடும் அந்த நகரத்தில் வாங்க வைத்தது. ஆன்ந்த மூர்த்தியின் உறவினான சங்கரன் இவனுக்கு உதவியாக வந்தவன் ஒரு நாள் ஆனந்த மூர்த்தியிடம் கனகாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தான்.
ஆனந்த மூர்த்தி மிகுந்த சந்தோசப்பட்டான். கனகாவிடம் கேட்க அவள் யோசித்து சொல்வதாக சொன்னவள் ஒரு வாரத்தில் “சரி” என்று சொல்லி விட்டாள். கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. கல்யாணம் நடக்க இன்னும் ஒரு வாரம்தான் என்னும் நிலையில் சங்கரன் ஆனந்த மூர்த்தியிடம் வந்து மெல்ல இனிமேல் நானும், கனகாவும் தனியாக தொழில் தொடங்குவதாகவும், அதனால் இந்த கம்பெனியின் சொத்துக்களை சம பாகமாக பங்கு பிரித்து கொள்ளலாம் என்று தெரிவித்தான்.
ஒரு நிமிடம் திகைத்தவன் உடனே அதற்கு சம்மதித்தான். விவரம் அறிந்து வந்த கனகா யாரை கேட்டு இதற்கு ஒத்துக்கொண்டாய்? என்று சண்டையிட்டாள்..புன்னகையுடன் தானேதான் இந்த ஏற்பாட்டை செய்வதாக தெரிவித்தான்.அனைத்தும் பிரிக்கப்பட்டு கனகாவின் பெயருக்கு சொத்துக்களும் பிரிக்கப்பட்டு விட்டது. ஆன்ந்த மூர்த்தி கொஞ்சமும் கவலைப்படாமல் இதையெல்லாம் ஒரு “ஞானியை” போல் செய்து கொடுத்தான் கனகாவின் மனம் மட்டும் அவளை குற்றம் சாட்டியது. தான் சம்பளத்துக்கு வேலை செய்பவள், கம்பெனிக்கு உண்மையாக உழைப்பது போலத்தானே உழைத்தேன். இவன் இந்த உழைப்பிற்கு என்னை ஒரு பங்குதாரராக்கி இந்த சொத்துக்கள் யாவற்றிற்கும் சொந்தக்காரி ஆக்கியிருக்கானே?
கல்யாணம் விமரிசையாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏராளமான பேர் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். அவர்களுக்கு முதன் முதலில் வாழ்வு கொடுத்த கம்பெனியின் நிர்வாகி கூட கேட்டார் எங்கே ஆன்ந்த மூர்த்தி? என்று கேட்க, இவள் பதில் சொல்ல மென்று விழுங்கினாள். சங்கரன் கூட மெல்ல அவள் காதருகே என்னால்தானே உன் நட்பு பிரிந்து விட்டது என்று சொன்னதற்கு இவள் மெல்ல அதெல்லாம் ஒன்றுமில்லை என்று இழுத்தாலும் மனது மட்டும் அவளிடம் சொன்னது.
“வாழ்க்கையில் ஏதோ ஒன்றுதான் எப்பொழுதும் கிடைக்கிறது” ஏழ்மையாய் இருக்கும்போது அம்மா இருந்தாள் பணம் வந்த பின் அம்மா சென்று விட்டாள் தனிமையாய் இருக்கும்போது தோழமை கிடைத்தது, வாழ்க்கை கிடைக்கும்போது தோழமை என்னை விட்டு சென்று விட்ட்து. இனி எது கிடைத்தால் எது என்னை விட்டு செல்லுமோ?