என்னைக் கைவிடு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 9,152 
 
 

“நல்லா யோசிச்சுப் பாத்தியா, சியாமளா?” தந்தையின் குரலில் கவலை மிகுந்திருந்தது. மூன்று வருடங்களோ, இல்லை ஐந்து வருடங்களோ சேர்ந்து வாழ்வதற்கா கல்யாணம்? ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்களே!

பெற்ற ஒரே பெண்ணுக்குத் தன் முயற்சியால் ஒரு கணவனைத் தேடித் தர முடியவில்லையே என்ற அவருடைய நீண்டகால வேதனை இன்னும் மிகுந்தது. “சதீஷ் காண்ட்ராக்டிலே வந்தவன்! அது முடிஞ்சதும் வந்த ஊருக்கே திரும்பிப் போயிடணுமேம்மா!”

கட்டட வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு விபத்தால் முதுகில் பலத்த அடிபட, சில ஆயிரம் நஷ்ட ஈடு பெற்று, வீட்டிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டிய நிலை தனக்கு ஏன் வந்தது என்று மீண்டும் மீண்டும் குமைவதைத் தவிர, உருப்படியாக என்ன செய்ய முடிந்தது தன்னால்? எட்டு வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்ட சியாமளா தொழிற்சாலையில் வேலை செய்வதால்தான் குடும்பமே ஓடுகிறது. இந்த நிலையில் பேச தனக்கு என்ன அருகதை?

“சதீஷ் தானேதான், `நாம்ப ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?’ன்னு கேட்டாருப்பா,” அவருடைய அனுமதியை வேண்டி நின்ற மகளைப் பார்த்து மெல்லச் சிரித்தார் சுப்பையா.

“ஒனக்குச் சரின்னு பட்டா, சரிதான்!”

சதீஷ் அவர்கள் வீட்டுக்கு வந்தபோதே இப்படி ஓர் எண்ணம் அவனுக்குள் இருக்கும் என்று அவர் பயந்திருந்தது நிஜமாகப் போயிற்றே!

பங்களா தேஷிகளுக்கே உரிய கவர்ச்சியான கண்களும், நீண்ட மூக்கும் எவரையும் கவர்ந்துவிடும். அத்துடன், அவனுடைய கடுமையான உழைப்பும், சேமிக்கும் திறனும்! இதைவிட அருமையான துணை சியாமளாவுக்குக் கிடைக்க முடியாது என்பதென்னவோ உண்மை என்று ஒரு சிறுகசப்புடன் ஒத்துக்கொண்டார் சுப்பையா.

ஆனால், இருவருக்குமிடைய ஒரு பெரிய வித்தியாசம் இருந்ததே! இருபத்தெட்டு வயது இளைஞன் சதீஷ். சியாமளாவோ இருபத்தெட்டு வயதாகியும், பல வரன்கள் பெண்பார்க்க வந்துவிட்டு, `பெண் கறுப்பு!’ என்று தட்டிக்கழிக்கப் பார்த்து, பின் சற்று இறங்கிவந்து, `எவ்வளவு பவுன் நகை போடுவீங்க?’ என்று பெரியமனது பண்ணி பேரம் பேசிவிட்டு, `வியாபாரம்’ படியாததால் ஒதுங்கிப் போனதன் பலனாக, உள்ளுக்குள்ளேயே மறுகிக்கொண்டிருக்கும் முதிர்கன்னி.

பிறர் அவளை நிராகரித்துவிட்டுப் போகும் ஒவ்வொரு முறையும், தன் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு, `வயசான காலத்திலே ஒங்களுக்குத் துணையாதான் இருந்துட்டுப் போறேனேப்பா!’ என்று சமாதானப்படுத்துவாள் சியாமளா. `இவ்வளவு பேசிட்டு, கட்டிக்கிட்டதும், குடிப்பான். அடிப்பான். நான் சம்பாதிக்கிறதையும் பிடுங்கிப்பான். அதான் அன்னாடம் பாக்கறேனே அந்தக் கண்ராவியை! மூஞ்சியெல்லாம் ரத்தக்காயமா வர்றாளுங்க ஒவ்வொருத்தியும்! நான் சுதந்தரமா இருந்துட்டுப்போறேனே!’

வெளியில் வீறாப்பாகப் பேசினாலும், பழைய தோழிகளை அவர்கள் பிள்ளைகுட்டிகளுடன் பார்க்கும்போது, அவள் மனம் பொருமத்தான் செய்தது.

இப்போது அவளையும் ஒருவன் மணக்க விரும்பி, வேண்டுகிறான்! பெருமையாக உணர்ந்தாள் சியாமளா.

“அப்பா! கல்யாணத்துக்கு அப்புறம் அவரும் நம்பகூட இங்கதான் வந்து தங்கப்போறாரு. ஒங்களைவிட்டு எங்கேயும் வரமாட்டேன்னு கண்டிசனா சொல்லிட்டேன்ல!”

தன் நன்றியை ஒரு புன்முறுவல்மூலம் வெளிப்படுத்தினார் சுப்பையா.

“சாயந்திரம் ஸ்டூடியோவுக்குப் போய், நான் ஒரு போட்டோ எடுத்துக்கணும். அவரோட அம்மாவுக்கு அனுப்ப!”

சுப்பையாவின் முகத்தில் படர்ந்த கலவரத்தைப் பார்த்து சியாமளா சிரித்தாள். “நம்ம தமிழாளுங்கமாதிரி நினைச்சுட்டீங்களா இவரையும்? அழகு, கலர், அந்தஸ்து — இப்படி எதிலேயாவது குறை கண்டுபிடிச்சு, மத்தவங்களைக் கேவலமா பேசறதாலேயே அவங்க என்னமோ ஒரு படி ஒசந்து இருக்கிறதா நினைக்கிற சின்ன புத்தி சதீஷூக்குக் கிடையாது!”

சுப்பையாவின் சந்தேகம் முழுவதாக மாறவில்லை என்பதை அவருடைய கவலை தோய்ந்த முகமே காட்டிக்கொடுக்க, சியாமளா மேலும் சொன்னாள்: “நான் ஏன் இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கேன்னு எல்லாத்தையும் அவர்கிட்டே சொல்லிட்டேன். அவர் சொல்றாரு, `ஒன்னோட நிஜ அழகு புரியாம ஒதுக்கிட்டுப் போனவங்க அடிமுட்டாளுங்க!’ அப்படின்னு சொல்றாருப்பா சதீஷ்!”

வார்த்தைக்கு வார்த்தை அவன் பெயரை உச்சரிப்பதிலேயே ஆனந்தம் காணும் மகளின் உற்சாகத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்க விரும்பவில்லை சுப்பையா. `அவன் நிரந்தரமாக இந்த மலேசிய மண்ணில் கால் பதித்து இருக்கமுடியுமோ?’ என்று ஆரம்பத்தில் எழுந்த உறுத்தல்கூட, `இந்த ஒலகத்திலே எதுதான் நிரந்தரம்!’ என்ற வேதாந்தத்தில் மறைந்தது.

மாலையும் கழுத்துமாக சதீஷின் பக்கத்தில் அமர்ந்திருந்த சியாமளா மகிழ்ச்சியின் எல்லையிலிருந்தாள்.

`இவனுங்களை எல்லாம் நம்பவே கூடாது. கையிலே பிள்ளையைக் குடுத்துட்டு ஓடிடுவான்!’ என்று தோழிகள் எச்சரிக்கை செய்ததைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது எத்தனை நல்லதாகப் போயிற்று!

அவன் மனத்துள் இருக்கும் அன்பு பிறர் கண்ணுக்குத் தெரியவில்லை. ஏழை, அயல்நாட்டுக்காரன், அதிலும் அழகன் என்பதில் விளைந்த அலட்சியம், பொறாமை!

தன்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியவர்களைப் பொய்யர்களாகிவிட்டு, இப்போது தாலி கட்டி, மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கிறான்!

மாதங்கள் நிமிடங்களாகிப் பறக்க, தன்னைவிட பாக்கியசாலி எவருமில்லை என்று எண்ணி எண்ணி சியாமளா இறுமாந்துபோனாள். மேலே போனால், கீழே விழவும் கூடும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

`வேலைக்கு வந்த மலேசிய நாட்டில், இந்நாட்டுப் பெண்களைத் திருமணம் புரிந்துகொள்ளக் கூடாது என்ற விதியை மீறிய அந்நிய நாட்டுத் தொழிலாளிகள் நாடுகடத்தப்படுவார்கள்!’ புதிய சட்டமொன்று அமுலுக்கு வர, சதீஷின் குறும்புப்பேச்சும், பெரிய கண்களின் மின்னல்வெட்டும் போன இடம் தெரியவில்லை.

சியாமளாவுக்கோ, `இனி என்ன?’ என்ற கேள்வி மட்டும் விஸ்வரூபம் எடுத்து, பயங்கரமாகத் தெரிந்தது. இப்படி அகாலமாக முடிவதற்கா அவ்வளவு இன்பம் நிறைந்த மணவாழ்வு கிட்டியது?

அடுத்த பத்து நாட்கள் நகர முடியாது நகர்ந்தன. வீட்டில் அசாதாரண மௌனம் நிலவியது.

அடுத்த அறிக்கை, `உள்நாட்டுப் பெண்களை மணந்தவர்கள் அவ்வப்போது குறுகிய வருகை மேற்கொண்டு, தம் மனைவி மக்களை பார்த்துப் போகலாம்!’ என்று சிறிது கருணையுடன் வெளிவந்தது.

“சதீஷ்! நீங்க திரும்பிப்போக விடமாட்டேன்!“ கணவனைக் கட்டிக்கொண்டு கதறினாள் சியாமளா. தன்னை மணந்த செயல் ஒரு குற்றமா? அதற்குத் தண்டனைபோல் மீண்டும் பிறந்த நாட்டில் ஏழ்மையிலேயே உழல, திருப்பி அனுப்பி வைக்கப்படுவார் என்ற நினைவே அவளை வாட்டியது.

தன் உடலைச் சுற்றியிருந்த அவளுடைய கரங்களை மெல்ல விலக்கினான் சதீஷ். “நான் திரும்பிப் போனா, அங்கே என்ன இருக்கு? எவ்வளவு படிச்சிருந்தாதான் என்ன! பசி, பட்டினிதான்! அங்கே நல்ல வேலை கிடைச்சிருந்தா, இங்கே எதுக்கு வந்து தொலைச்சிருக்கப் போறேன்!”

சியாமளா அவன் முகத்தையே பார்த்தாள். என்ன சொல்ல வருகிறான்?

“நல்லவேளை, நம்ப கல்யாணம் கோயில்ல நடந்திச்சு. இன்னும் பதிவு செய்யலே!”

அவள் திடுக்கிட்டாள். கல்யாணமே நடக்கவில்லை என்று சாதிக்கப்போகிறானா? அதற்காகத்தான் அவள் எவ்வளவோ வற்புறுத்தியும், அவளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லையோ?

சியாமளாவின் முகம் போன போக்கைக் கவனிக்கும் மனநிலையில் இருக்கவில்லை அவன். அது தன்னுடைய வாழ்க்கைப்பிரச்னை மட்டுமே என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தான்.

“நாங்க ஏழைதான்! அதுக்காக, `வந்த இடத்திலே சன்னியாசிமாதிரி இருங்க!’ அப்படின்னா முடியுமா? ஒன்னைப் பிடிச்சுத்தான் கல்யாணம் செய்துக்கிட்டேன், சியாமளா. ஆனா, என் சுயநலத்துக்காக மத்தவங்க கஷ்டப்படணுமா?”

“என்ன சொல்றீங்க?” ஈனஸ்வரத்தில் கேட்டாள் சியாமளா.

“நான் சம்பாதிச்சு அனுப்பற பணத்தாலேதான் எங்கப்பா, அம்மா, தங்கச்சிங்க எல்லாரும் நல்லா சாப்பிடறாங்க. தம்பிங்களும் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியுது. நான் திரும்பிப்போறதா இல்லே!”

சியாமளாவுக்குச் சற்று தெம்பு பிறந்தது. வந்த வேகத்திலேயே அது தொலைந்தது, அடுத்து அவன் கூறியதைக் கேட்டு.

“நாம்ப ஒண்ணா இருந்தா, ஏதாவது தகறாறு வரும். அதனால வேற வேலை தேடிக்கிட்டேன். வேற ஊரிலே!”

அவன் தன்னை விட்டுப் போகப்போகிறான்!

அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது, அவளுடைய வாய் பிளந்தது. மூச்சு கனவேகமாக, இரைப்பதுபோல் வெளிவந்தது.

முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். “நான் என்ன செய்யறது! எனக்கு வேற வழி தெரியலே!” மன்னிப்புவேண்டும் தொனி.

சதீஷ் சற்றும் எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்தாள் சியாமளா.

அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

“என்னையும் ஒரு பொண்ணா மதிச்சு ஏத்துக்கிட்டீங்களே, அதுவே போதும். நன்றின்னு வாய்வார்த்தையா சொன்னா நல்லாயிருக்காது. அப்பா மொதல்லேயே சந்தேகப்பட்டாரு, இந்த ஒறவு நிலைக்க முடியுமான்னு. ஆனா, கல்யாணம், கணவன், குடும்பம் எல்லாம் வேணும்கிற வெறிதான் அப்போ இருந்திச்சு எனக்கு. இப்போ..!” மேலே பேசத் தெரியாது விக்கினாள்.

குற்ற உணர்வும், வேதனையும் உலுக்க, “சியாமா!” என்று அவளை நெருங்கினான் சதீஷ்.

சரேலென விலகிக்கொண்டாள். “சொல்ல இன்னும் என்ன இருக்கு! என் வேதனையை அதிகப்படுத்தாதீங்க. ப்ளீஸ்! இப்பவே இந்த விட்டைவிட்டுப் போயிடுங்க! இனிமே வராதீங்க!” பெரிதாக அழ ஆரம்பித்தாள் சியாமளா.

அவள் கெஞ்சுவாள், இல்லை ஆத்திரப்படுவாள் என்றெல்லாம் எதிர்பார்த்து, எல்லாவற்றிற்கும் விடை தேடி வைத்திருந்தவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தலை குனிந்த நிலையில், தனது சொற்ப உடைமைகளைத் திரட்ட ஆரம்பித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *