ஊமை தாயும் குழந்தையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2016
பார்வையிட்டோர்: 6,934 
 
 

குழந்தை காலை உதைப்பது அவளது வயிற்றின் மேல் பட்டு அவளை சிலிர்க்க வைத்தது, இன்னும் கொஞ்ச நேரம் தான் கண்ணே, தனக்குள் சொல்லிக்கொண்டே தன் குழந்தையை இறுக்கி அணைத்தாள். சட்டென்று அதிகமாக இறுக்கி விட்டோமோ மனதில் நினைத்தவுடன் தன் இறுக்கத்தை தளர்த்தினாள். ஒரு வேளை பசிக்குமோ, மெல்ல தன் கையை எடுக்க முயற்சித்தாள். கை எடுக்க முடியாமல் ஏதோ இடித்தது, கொஞ்சம் அழுத்தினால் குழந்தைக்கு பாதிப்பு வருமோ என்று பயந்தாள். இருந்தாலும் மெல்ல தன் கையை எடுக்கும் முயற்சியை, கை விடாமல் செய்து கொண்டிருந்தாள்..

அப்பாடி..கொஞ்சம் கை பின்புறம் வந்தது, அட இதென்ன பின்னால் முதுகில் ஏதோ தடுத்து கொண்டிருக்கும் போல் இருக்கிறதே. பல்லை கடித்து இடது கையை இழுத்தாள். அப்பாடி வந்து விட்டது, மெல்ல இட்து கையாலே தன் கைசட்டையை அவிழ்க்க முயற்சி செய்தாள். ஊக்கு வைத்திருந்ததால் அதை கழட்ட மிகுந்த சிரமப்பட வேண்டி இருந்தது,

அழுகை வருவது போல் இருந்தது. கூடாது அழுக கூடாது, இந்த நேரத்தில் மனதை விட்டு விடக்கூடாது, அதுவும் குழந்தை பசியில் இருக்கும்போது, இப்படி மனதை அதைரியப்படுத்த கூடாது. முயற்சி செய்து இரண்டு ஊக்குகளை கழற்றி விட்டாள், அதற்கு மேல் பொறுமை குறைந்து விட்ட்தால் கை சட்டையை பிடித்து இடது கையால் இழுத்தாள்

சட்டை கிழிந்து வந்தது. தன் மார்பின் காம்பை குழந்தையின் வாயில் வைத்தவள் அது உறிஞ்ச தொடங்கியதும் கண்ணில் நீர் வழிய தன் இடது கையை அப்படியே குழந்தையின் மீது போட்டுக்கொண்டாள்.

அப்பா.. எத்தனை வருடங்கள் கழித்து என் வயிற்றில் பிறந்திருக்கிறாய். இதற்காக எத்தனை குத்தல் பேச்சுக்களை சொந்தங்களில் கேட்டிருக்கிறேன். தன் கணவன் கூட வருடங்கள் ஆக ஆக தன் மீதான நாட்டத்தை குறைத்துக்கொண்டானோ என்று அவளுக்கு சந்தேகம்.. தான் ஒரு குழந்தையை சுமக்கிறோம் என்றவுடன் தான் அவனது கவனிப்பு எப்படி கூடுதலாகி விட்டது.

திடீரென நினைவு வந்தவளாக அப்பா நம்மை பார்க்க வந்து விடுவார் கவலை படாதே சொல்லிவிட்டு தன் குழந்தையை அப்படியே குனிந்து முத்தம் வைத்தாள். ஒரே புறம் படுத்திருப்பதால் உடம்பு முழுவதும் மரத்து போனால் போலிருந்தது, தன்னுடைய உடலை மெல்ல உலுக்கினாள். அது இரத்த ஓட்டம் இல்லாத்தால் அசைய மறுத்தது,அழுகை மீண்டும்

எட்டி பார்த்த்து, தன் மனதை அதட்டினாள், விடக்கூடாது, தன் உடலை மெல்ல ஆட்டினாள்,

இப்பொழுது குழந்தை சிணுங்கியது, கருக்கென குழந்தையை பார்த்தவள் கோபிச்சுக்கிடாதடா கண்ணா, அம்மாவுக்கு உடம்பு ஒரே மாதிரி படுத்த்துனால அசையக்கூட முடியல, தனக்குத்தானே, மனதுக்குள் குழந்தையிடம் பேசிக்கொண்டு மீண்டும் தன்னுடைய உடலை உலுக்கிக்கொண்டாள். கொஞ்சம் உடம்பில் சூடு பரவ ஆரம்பித்த்து. சூடு பரவியவுடன் உடலில்

இரத்த ஒட்டத்தினால் வரும் சுள்ளென்ற வலி அவளை இம்சை படுத்தியது. உடலை சுருக்கினால் வலி குறையுமா என்று தன் உடலை சுருக்கினாள். குழந்தை சிணுங்கியது. கொஞ்சம் சமாளிசுக்க,பாப்பா.. அம்மா ரெடியாயிக்கறேன். சொல்லிக்கொண்டே இருந்தாள்.

வெளியே கச முச என்று பேச்சு சத்தம் கேட்டது, யாரையாவது கூப்பிடலாமென்றால் எப்படி கூப்பிடுவது, வாய் திறந்தால் காற்று குழந்தையின் முகத்தில் பட்டு நம் முகத்திலேயே வருகிறது. பாப்பா வேறு முகத்தை சுருக்குகிறாள்

தன் கணவனை நினைத்தாள், இந்நேரம் வந்து கொண்டிருப்பான், நாம் இரண்டு பேரையும் பார்க்க முடியாமல் தவிப்பான், தனக்குத்தானே குறுஞ்சிரிப்பை உதிர்த்துக்கொண்டாள்.காலையில கோபிச்சுகிட்டு போனாரில்லை, இப்ப அனுபவிக்கட்டும். சொல்லிக்கொண்டே குழந்தையின் முகத்தை பார்த்தாள் இப்பொழுது வெளியே சத்தம் அதிகமாக கேட்கிறது.

டம்..டம்..என்று எதையோ இடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது, நாய் ஓடும்போது இரைக்கும் சத்தம் கூட மெல்லியதாக கேட்கிறது. வயிற்றில் காற்று புகுந்து கொண்டது போல உஸ்..உஸ்..என்று உறுமுகிறது.

குழந்தை இப்பொழுது அம்மாவின் மார்பிலிருந்து தன் வாயை எடுத்தவள் மெல்ல சிணுங்கினாள்.இவளால் அசைய முடியவில்லை.பசியினால் ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தாள்.

அவளின் நினவுகளில் இப்பொழுது தன் கணவன் இவளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இவள் அம்மாவின் வீட்டுக்கு வந்து பேசியது இவளுக்கு நினைவுக்கு வந்தது. குமாரு நீ எங்க உறவுக்கார பையனா இருந்தாலும், இவ ஊமையா பிறந்துட்டாளேடா,

நாளைக்கு உன் குடும்பம் என் பையனோட வாழ்க்கையை கெடுத்துட்டான்னு பேசுமேடா, சொன்ன பெண்ணின் அம்மாவிடம், ஊமையா இருந்தா என்ன? சொந்தக்காரன் நானே அவளை கல்யாணம் பண்ணி பாத்துக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.

சொன்னது போலவே, இவனை பெரிய இடத்தில் பெண் பார்த்து கல்யாணம் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த இவனின் பெற்றோர் ஒப்புக்கொள்ள மறுத்து விட்டனர். இவனின் பிடிவாதமே கடைசியில் ஜெயித்தது.

அம்மாவின் மார்பிலிருந்து எந்த பாலும் வராமல் வெறும் வாயை வைத்து கொண்டிருந்த குழந்தை தன் வாயை எடுத்தவுடன் பசி தாங்க முடியாமல் ஞே..ஞே..என்று வீறிட்டு அழ ஆரம்பித்து விட்டது.

வெளியே சட்டென நிசப்தமானது போலிருந்தது, மீண்டும் குழந்தையின் ஞே..ஞே..உச்சஸ்தாய அழுகை கேட்க தொடங்கியது.

ஓடி வாங்க…ஓடி வாங்க இங்க ஒரு குழந்தையோட அழுகை கேக்குது, சீக்கிரம் இந்த சிமிண்ட், கல், மண் எல்லாதையும் எடுங்க குயிக்.. குயிக்..எல்லாரையும் இங்க வரச்சொல்லுங்க, ஒருவர் கத்திக்கொண்டே இருந்தார். பத்து பதினைந்து பேர் விறு விறுவென மண்ணையும் கல்லையும் அகற்ற தொடங்கினர்.

பார்த்து பார்த்து, குழந்தை இருக்கு, பத்திரம் அவர் மீண்டும் கூவிக்கொண்டே இருந்தார்.

அரை மணி நேரத்தில் குழந்தையையும், அதனை அணைத்துக்கொண்டு கிடந்த பெண்ணையும் அந்த இடிந்து போன கட்டத்தின் இடிபாடுகளிலிருந்து வெளியே எடுத்தனர்.

குழந்தைக்கு உயிர் இருக்கு, அம்மா பேச்சு மூச்சு இல்லாம இருக்காங்க, சீக்கிரம் சீக்கிரம்,சொல்லிக்கொண்டே இருவரையும் ஸ்டெரச்சரில் எடுத்துக்கொண்டு ஓடினர் முகாமிட்டிருந்த மருத்துவ குழுவிடம்.

அன்றைய செய்தி அனைத்து மக்களின் இதயத்தை கனக்க செய்தது என்பதில் சந்தேகமில்லை. இரண்டு நாட்களுக்கு முன் இடிந்து விழுந்த அந்த கட்டிட இடிபாடுகளில் தன் குழந்தையை இரண்டு நாட்களாக அணைத்து பிடித்து கொண்டே இறந்து போயிருந்தாள் ஒரு தாய். அதுவும் இவர்களை காப்பாறிய சற்று நேரத்துக்கு முன்னர்தான் உயிர் போயிருக்கிறது. ஒரு வேளை, தன் குழந்தையை காப்பாற்றி விடுவார்கள் என்று தெரிந்த பின்னால் அந்த ஊமைத்தாய் தன்னுடைய உயிரை விட்டிருக்கலாம்.அவள் கணவன் அழுது புலம்பும் காட்சி நெஞ்சை உருக்குவதாய் இருந்தது.. நல்ல வேளை குழந்தை பிழைத்துக்கொண்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *