கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 9,697 
 
 

லக்கி களைப்புடன் வீட்டை அடைந்த போது அம்மா ஹாலில் உட்கார்ந்து டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளைக் கடக்கும் போது சைகையால் அவனைப் போய் சாப்பிடுமாறு கூறினாள். அம்மா பேசும் விதத்திலிருந்து அவள் அவனுடைய அக்காவுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். காயத்ரி பம்பாயில் இருக்கிறாள். இரண்டு நாளைக்கு ஒருதடவை அம்மாவுடன் பேசா விட்டால் காயத்ரிக்கு தலை வெடித்து விடும். அப்படியாவது முக்கியமான விஷயம் பாழாய்ப் போகிறதா என்றால் அதுவும் இல்லை. ஊர் வம்பு , சொந்தக்காரர்களைப் பற்றி புகார் என்று மணிக் கணக்கில் அம்மாவிடம் அவளுக்கு அழ வேண்டும். பாரத் சர்க்காரின் டெலிபோன் இலாகாவுக்கு போன ஜன்மத்தில் காயத்ரி கடன் பட்டிருந்ததாலோ என்னவோ, அத்திம்பேரின் பாதி சம்பளம் டெலிபோன் பில்லிலேயே போய்விடும். ஆனால் அதுவும் சரியல்ல. அத்திம்பேரின் கம்பனிதான் இந்தச் செலவை ஏற்றுக் கொள்கிறது. அவரது அலுவலகத்தில் மணி சார் மிக முக்கியமான அதிகாரி.

லக்கி சமையலறையை நோக்கிச் சென்றான். எல்லாம் ஆறி இருந்தது.காயத்ரியின் போன் இல்லாமல் இருந்திருந்தால், அம்மா சுட வைத்துக் கொடுத்திருப்பாள்.லக்கிக்கு எரிச்சல் மண்டிக் கொண்டு வந்தது. அடுப்பைப் பற்ற வைத்து ரச, சாம்பார் பாத்திரங்களை வைத்தான்.

மனதில் காலை நிகழ்வுகள் படம் போல் ஓடின…

இன்று எத்தகைய ஆபத்திலிருந்து அவன் தப்பித்தான் ! நினைக்கும் போதே உடல் நடுங்கிற்று. அவனுக்கு டி.ஸி. ஆபிசில் வேலை இருந்தது என்று காலையில் சென்றான். . அத்திம்பேரின் கம்பெனி இப்போது பெங்களூரில் சில மதுபானக் கடைகளை ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதற்கான லைசென்சுகளை எக்சைஸ் ஆபிசிலிருந்து பெற வேண்டும். இதற்காக ஒரு வாரமாய் அத்திம்பேர் இங்குதான் தங்கி எல்லாக் காரியத்தையும் கவனிக்க வேண்டியதாயிற்று. அவனையும் தன் கூடவே அழைத்துக் கொண்டு போனார். ஐந்து இடங்களில் கடைகள் ஆரம்பிக்கிறார்கள். வாடகைக்கு கட்டிடங்கள் பிடிப்பது, வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பது, கடை அலங்காரத்திற்கு காண்ட்ராக்டர்களை தேர்வு செய்வது என்று அப்படி ஒருஅலைச்சல்.போதாதென்று

ஒவ்வொரு நாளும் எக்சைஸ் அலுவலகத்துக்குப் போய் வேறு பார்க்க வேண்டியஆட்களைப் பார்க்க வேண்டியிருந்தது. லைசன்ஸ் விண்ணப்பங்களைக்

கொடுத்து, டிரஷரியில் லைசன்ஸ் பீசைக் கட்டி ஒரு வழியாக அத்திம்பேர் நேற்று பம்பாய் கிளம்பிப் போனார்.

போவதற்கு முன், மாலையில் அவனை தன்னுடைய ரூமுக்கு வரச் சொன்னார். லக்கி அங்கே சென்ற போது, அத்திம்பேர் படுக்கையில் பணக் கட்டுக்களை

வைத்து எண்ணிக் கொண்டிருந்தார்.அவனைப் பார்த்ததும் உட்காரச் சொன்னார். அங்கிருந்த தோல் பை ஒன்றில் கட்டுக்களை எண்ணிப் போட்டு விட்டு

அவனிடம் சொன்னார்.

“லக்கி, இதை நீ நாளைக்கு ஷெட்டின்னு எக்சைஸ் ஆபிசில ஆபிசார இருக்கார்.அவர் கிட்டே குடுத்துடணும். ரொம்ப ஜாக்ரதையா இதை நீ பண்ணனும். நானே இருந்து முடிக்கணும்னுதான் இருந்தேன். அதுக்குள்ளே நேத்திலேர்ந்து உடனே பம்பாய்க்கு கிளம்பி வான்னு பிரஷர் குடுத்திண்ட்ருக்கா .

அதனாலே உன்கிட்டே பொறுப்பை குடுக்கறேன்.” என்றார். ஊருக்குப் போவதற்கு முன்பும் பம்பாய்போனதுக்குப் பிறகும் ஐந்தாறு தடவை அவனிடம் பேசி ஜாக்ரதைப் படுத்தினார்….

இன்று காலை பெங்களூரின் போக்குவரத்துக் கடலில் நீந்தி லக்கி லால்பாக் ரோடை அடைந்த போது ஒருமணியாகி விட்டது. ஒரு வழியாக பக்கத்து சந்து ஒன்றில் காரை நிறுத்தி விட்டுஅவன் ஷெட்டியைத் தேடிக் கொண்டு சென்றான்.

அலுவலகக்கட்டிடத்தின்கீழேயிருந்தரிசப்ஷனில்ஒழுங்காக ஷவரம்செய்துகொள்ளாத மூஞ்சியுடன் ஒருவன் உட்கார்ந்து கன்னட பிரபாவை விரித்து

வைத்துப் படித்துக் கொண்டிருந்தான்.

“ஸார், எக்சைஸ் ஆபிசில ஷெட்டி சாரை பார்க்க வேண்டும். அவர் ஆபிஸ் எங்கே இருக்கிறது?” என்று லக்கி கேட்டான்.

அவன் பேப்பரில் இருந்து கண்ணை எடுக்காமலே “இரண்டாவது மாடி” என்றான்.

பொது மக்கள் வசதிக்காக வைக்கப் பட்டிருந்த லிப்ட் வேலை செய்யாமல் நின்றிருந்தது. லக்கி மாடிப் படிகள் மூலம் மேலே நடந்து சென்றான்.

இரண்டாவது மாடியில் பல அறைகள் திறந்தும் மூடியும் இருந்தன. வழக்கமாக ஒவ்வொரு அறை வாசலிலும் காவலாள் இருப்பதுண்டு. ஆனால் லஞ்ச் நேரமென்று ஒருவனைக் கூடக் காணோம்.

லக்கி ஒவ்வொரு அறையின் வாசல் மேலும் இருந்த பெயர்ப் பலகையைப் பார்த்துக் கொண்டே சென்றான்.

நான்காவது அறை வாசலில் ஜி.கே. ஷெட்டி என்ற பெயர்ப் பலகை காணப்பட்டது. லக்கி ஒரு நிமிஷம் தயங்கி விட்டு இரு விரல்களால் கதவை மெலிதாகத் தட்டினான்.

“எஸ்,கமின்” என்று உள்ளிருந்து குரல் வரவேற்றது.

லக்கி உள்ளே நுழைந்தான் . ஏர்கண்டிஷனரின் குளிர்ந்த காற்று அவன் முகத்தில் அறைந்தது. பெரிய மேஜையின் பின்னே உயரமான ஒல்லியான மனிதர் உட்கார்ந்திருந்தார். சிவந்த நிறம். வழுக்கைத் தலை. கண்ணாடி அணிந்திருந்தார். அவர் மேஜையின் மீது பிரிக்கப் படாத டிபன் பாக்ஸ் இருந்தது.

அவனைப் பார்த்ததும் புன்னகை புரிந்தார்.

“ஸார். லிக்கர் ஷாப் லைசன்ஸ் விஷயமா வந்திருக்கேன்” என்றான் லக்கி.

அவர் அவனை உற்றுப் பார்த்தார். பிறகு உட்காரச் சொன்னார்.

அத்திம்பேரின் பெயர் அவரிடம் சுமுகத்தை ஏற்படுத்தும் என்று நினைத்த லக்கி அவரிடம் “ஸார், நான் பம்பாயில் இருக்கிற …”

அப்போது இண்டர்காம் ஒலித்தது. அவனைப் பேசாது இருக்கச் சொல்லிவிட்டு அவர் “ஹலோ!” என்றார்.அதற்கு அடுத்த ஐந்து நிமிஷம் முழுதும் அவர் எதிராளியிடம் பேசியது எல்லாம், “சரி ஸார்” “ஓகே ஸார்”. “கரெக்ட் ஸார்”, “இல்லே ஸார்”, “உடனே ஸார்”…இவ்வளவுதான். அவர் பேசி முடித்து

போனைக் கீழே வைத்து விட்டு அவனைப் பார்த்து “பாஸ் கூப்பிடுகிறார். நான் போய் விட்டு வருகிறேன். நீங்கள் வெளியே காத்திருங்கள்” என்று எழுந்து வெளியே சென்றார். லக்கியும் அவரைப் பின் தொடர்ந்து சென்று வராந்தாவில் இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். அவர் திரும்பி வந்ததும் எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்தான் .

திடீரென்று அப்போது “லக்கி!” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு விழித்துப் பார்த்தான். ஜம்புநாதன். காலேஜில் அவன் கூடப் படித்தவன்.

“லக்கி, நீ எங்கடா இங்கே?” என்றான் ஜம்பு ஆச்சரியத்துடன். “ஏதாவது லிக்கர் கம்பனிலே வேலை பார்க்கிறாயா? எந்த கம்பெனி?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லே, என்னோட அத்திம்பேர் கம்பெனி வேலையா வந்தேன். நான் இன்னும் வேலை கிடைக்காத பட்டதாரிதான்,” என்றான் லக்கி. ” நீ இங்க …?”

“போன மாசம்தான் எனக்கு வேலை கிடைச்சது” என்றான் ஜம்பு.

“நான் மிஸ்டர் ஷெட்டிங்கறவரை பாக்க வந்திருக்கேன்” என்றான் லக்கி.

“எந்த ஷெட்டியை பார்க்கணும்?” என்று கேட்டான் ஜம்பு.

தூக்கி வாரிப் போட்டது லக்கிக்கு.

“என்னடா சொல்றே ஜம்பு ?

“எஸ்.என். ஷெட்டியா இல்லே, ஜி.கே.ஷெட்டியா?” என்று கேட்டான் ஜம்பு.

. .

லக்கி தான் வந்த விஷயத்தைச் சொன்னான்.

“அப்போ நீ பாக்க வேண்டியது எஸ்.என். ஷெட்டிதான்” என்றான் ஜம்பு.

“ஐயையோ!” என்றான் லக்கி.

“ஏன்? என்ன ஆச்சு?”

லக்கி தான் ஜி.கே. ஷெட்டி ரூமுக்குப் போனதைச் சொன்னான்.

ஜம்பு நம்ப முடியாததைப் பார்ப்பது போல் லக்கியை தலையோடு கால் வரை பார்த்தான். அவன் பார்வை லக்கியின் கையிலிருந்த தோல் பையின் மீது பாய்ந்து மீண்டது.

பிறகு “உனக்கு மச்சம்தான் போ ” என்று அவன் முதுகில் குத்தினான். “எவ்வளவு பெரிய ஆபத்திலேர்ந்து நீ தப்பிச்சேன்னு உனக்கு தெரியாது” என்றான் ஜம்பு. “நீ பார்த்த ஆசாமி விஜிலன்ஸ் ஆபிசர். அவர் கிட்ட போய் பையை திறந்திருந்தாயோ, அவ்வளவுதான். நேரே போலீஸ் ஸ்டேஷன் ,கோர்ட்தான்…”

என்று சிரித்தான் ஜம்பு.

லக்கிக்கு உடல் நடுங்கிற்று.

“நீ இன்னிக்கி யார் முகத்திலே முழிச்சாயோ, தேங்க் காட்” என்றான் ஜம்பு.”முதல்ல இந்த இடத்த விட்டு கிளம்பு. அந்த ஆள் திரும்ப வரதுக்குள்ள” என்று அவனைத்தள்ளிக்கொண்டு போனான். அவன் பார்க்க வேண்டிய சரியான ஷெட்டியின் அலுவலகத்தில் கொண்டு போய்ச் சேர்த்தான்.

அங்கு வேலை எல்லாவற்றையும் பார்த்து முடித்துக் கொண்டு கிளம்பும் போது இரண்டரை மணி ஆகி விட்டது. மனதில் விரவியிருந்த அச்சமும்

நடுக்கமும் மேலே வந்து வந்து போயின. எப்பேர்ப் பட்ட ஆபத்திலிருந்து தப்பித்தோம்? தவறுநடந்திருந்தால்…? நினைத்துப் பார்க்கவே பயமாயிருந்தது..

அத்திம்பேருக்கும் அவரது கம்பனிக்கும் தீராத அவமானம் ஏற்பட்டிருக்கும். அதிலிருந்து விடுபட எவ்வளவு செலவாகுமோஅவனுக்கு நாளை ஒரு இண்டர்வியு

இருக்கிறது. அத்திம்பேர்தான் ஏற்பாடு செய்திருக்கிறார். அவரதுநண்பர்தான் அதில் டைரக்டர் ஆக இருக்கிறார்.அத்திம்பேரின் சிபாரிசில் நிச்சயம்

அந்த இடத்தில் வேலை கிடைத்து விடும். இந்த சமயத்தில், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அவ்வளவுதான்.

யோசித்தபடியே அவன் காரை ஒட்டிக் கொண்டு வரும்போது பாலஸ் ரோடு திருப்பத்தில் அனுஷா நிற்பதைப் பார்த்தான். காரை அவளருகே நிறுத்தி “ஹாய் அனு!” என்றான். அவனைப் பார்த்ததும் அனுஷா காரை நோக்கி வந்தாள். அவன் முன் பக்கக் கதவைத்

திறந்ததும் அவள் ஏறி அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“எங்கே இந்தப் பக்கம் இந்த நேரங்கெட்ட நேரத்தில்? அதுவும் எங்க காலேஜ் பக்கம்? பேர்ட் வாட்சிங்கா?” என்று அனுஷா சிரித்தாள். அவள் மவுண்ட் கார்மலில் படிக்கிறாள்.

“நீ காலேஜுக்கு கட் அடிச்சிட்டு என்னை கேக்கிறியா?” என்றான் லக்கி. “எங்கே வீட்டுக்கு தானா?” என்று அவளைப் பார்த்தான்.

அவள் ஆமாம் என்பது போல் தலையை அசைத்தாள். அவன் வீட்டுக்குப் போகிற வழியில்தான் அனுஷாவின் வீடும் இருக்கிறது. சிறு வயதிலிருந்தே இரு குடும்பங்களுக்கும் பழக்கம். லக்கியின் குடும்பத்தைப் போல் அவ்வளவு வசதியுள்ளவர்கள் அல்ல அனுஷாவின் பெற்றோர். அவர்கள் எட்டாவது கிராஸில் ஒரு ஸ்டோரில் குடி இருக்கிறார்கள்.

“என்ன ஆச்சு வேலை விஷயம்? ” என்று கேட்டாள் அனுஷா. “ஏதாவது பைனலைஸ் ஆச்சா?”

“நீ ஏதோ பொண்ணுக்கு கல்யாணம் திகைஞ்சுதான்னு கேக்கற மாதிரின்னா என்கிட்டே கேக்கறே” என்றான் லக்கி.

“ரெண்டும் ஒண்ணுதான் ” என்று சிரித்தாள் அனுஷா.

“அப்பா உனக்கு எப்ப கல்யாணம்?” என்று கேட்டான்.

“உனக்கு வேலை கிடைக்கிற அன்னிக்கு தான்.” என்று அனுஷா அவனைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினாள்

லக்கி தனக்கு இருக்கும் மறுநாள் இண்டர்வியு பற்றி அவளிடம் சொன்னான். “நான் இப்ப உன்னை காபி டேக்கு போலாமான்னு

கேக்காததுக்கு காரணம் கூட நான் சீக்கிரம் வீட்டுக்கு போய் இண்டர்வியுக்கு கொஞ்சம் நல்லா தயார் பண்ணனுமேன்னுதான்” என்று சொன்னான்.

“நோ இஷ்யு. நீ நாளைக்கு நல்லா இண்டர்வியு பண்ணதுக்கு அப்புறம் நாம ஒபராய்லேயே பார்ட்டி வச்சுக்கலாம்.” என்று மறுபடியும் சிரித்தாள்அனுஷா. ஒவ்வொரு முறை இப்படி அவள் அழகாக சிரிக்கும் போதும் அவனுக்கு ரத்தம் எகிறுகிறது இதை அவளிடம் சொன்னால் மறுபடியும் சிரிப்பாள்…

லக்கி அவளை அவள் வீட்டு வாசலில் இறக்கி விட்டுச் சென்றான். வழியில் அனுஷாவைப் பற்றிய நினைவுகள் மனதில் கிளர்ந்தன. அவனுக்கு அவளைப் பிடிப்பது போல் அவளுக்கும் அவனைப் பிடிக்கும். இது பால்ய சிநேகிதத்தால் நேர்ந்த விளைவு. ஆனால் அனுஷாவுக்கு அவளது எதிர்காலம் பற்றி தெளிவான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. அதில் முதலாவதும் முக்கியமானதுமான விஷயம் நடுத்தர நிலைமையிலிருந்து இன்னும் இன்னும் மேலே போய் இருக்க வேண்டும். தனக்கு வேலை கிடைப்பதும் அங்கிருந்து அவன் விரைவாக உயருவதும் அனுஷாவை இம்ப்ரஸ் பண்ண உதவக் கூடும். ஆனால் நிச்சயமில்லை. பார்க்கலாம்…

அடுப்பில் இருந்த பாத்திரங்கள் எழுப்பிய ஓசைகள் அவன் கவனத்தைக் கலைத்தன…

லக்கி சாப்பிட்டு முடித்து விட்டு ஹாலுக்கு வந்தான். அம்மா இன்னும் டெலிபோனில் காதை வைத்திருந்தாள். அவன் அயர்ச்சியுடன் மாடிக்குச் சென்றான். சற்றுக் களைப்பாக இருந்தாலும் அவன் சுக்லாவின் அக்கவுண்டன்சி புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். கொஞ்சம் ரிவைஸ் பண்ணினால் நல்லது. . லக்கி மற்ற எல்லா விஷயங்களிலும் கெட்டிக்காரன்தான். ஆனால் படிப்பு மட்டும் சுமாராக வந்தது. ஒரு வழியாகப் பட்டதாரியாகி விட்டான். ஆனால் படித்து முடித்து ஒன்றரை வருஷமாகப் போகிறது, இன்னும் வேலை கிடைக்கவில்லை…நல்ல வேளையாக இப்போது சிபாரிசும் இருப்பதால் இந்தத் தடவை வாய்ப்பைத் தவற விடக் கூடாது..

அப்போது கீழேயிருந்து அம்மாவின் குரல் கேட்டது. “லக்கி, இங்கே வாடா ”

அவன் பேசாமல் உட்கார்ந்திருந்தான். மறுபடியும் அம்மா கூப்பிட்டாள். அவன் கீழே போனான்.

“என்னடா அப்போலேர்ந்து கூப்பிட்டுண்டே இருக்கேன் . சத்தத்தையே காணோம் “என்று அம்மா விசித்திரமாக அவனைப் பார்த்தாள்.

“படிக்கலாம்னு பார்த்தேன். நாளைக்கு இன்டர்வியு இருக்கே ” என்றான்.

“அதுக்குத்தான் உன்னை கூப்பிட்டேன். நீ காயு கிட்டே இன்டர்வியு பத்தி சொல்லலையா? ” என்று அம்மா கேட்டாள்.

“ஏம்மா ? அத்திம்பேர் சொல்லியிருக்க மாட்டாரா? அதான் நான் ஒண்ணும் சொல்லலை.”

“ஏண்டா அவருக்கு இருக்கற அலைச்சல்ல இதுக்கு நேரம் இருக்கோ இல்லையோ? நீ காயுவுக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை

சொல்லியிருக்கலாம்.”

அவன் பேசாமல் நின்றான்.

“அப்புறம் காயத்ரி சொன்னா , அவளோட சிநேகிதி பம்பாயிலேர்ந்து இன்னிக்கு ராத்திரி வராளாம். நீ ஏர்போர்ட்டுக்கு போய்

அவளை கூட்டிண்டு வரணும்.”

“ஓகோ?”

அவன் குரலில் ஒலித்த எரிச்சலை அம்மா கண்டுகொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. இது அவன் எரிச்சலை அதிகமாக்கிற்று.

“அவள் நாளைக்கு சாயங்காலம் திரும்பிப் போயிடறா. போகும் போது அவள் கிட்ட கொஞ்சம் அப்பளம் வடாம் கொடுத்து விடச் சொன்னாள் காயத்ரி. பாவம் , கொழந்தை ரொம்ப நாளா கேட்டுண்டு இருக்கா.”

லக்கி அம்மாவை உற்றுப் பார்த்தான். அவள் அவன் பார்வையைச் சந்திக்க மறுத்தவள் போல் ஹாலில் இருந்த ஊஞ்சலில் போய்ப் படுத்துக் கொண்டாள்.

அவனுக்குத் திடீரென்று காயத்ரி, அவனுடைய அம்மா, பேர் தெரியாத காயத்ரியின் தோழி என்று எல்லோர் மீதும் கோபம் ஏற்பட்டது .காயத்ரி அவனது அக்காவா அல்லது அவனுடைய எஜமானியா? காயத்ரி இங்கு வரும் போது அவளுக்கு டிரைவர் ஆக இருப்பது போதாதென்று, இப்போது அவளுடைய சினேகிதிக்கும் ஊழியம் செய்ய வேண்டுமா? மல்லேஸ்வரத்திலிருந்து முப்பது கிலோமீட்டருக்கும் மேலே தள்ளி இருக்கிறது ஏர்போர்ட் . அயல்நாடு செல்லுவதற்கு ஏர்போர்ட் போகும் கனவான்களை ,ஏற்றிச் செல்லும் டிரைவர்கள் காரை வீட்டிலிருந்து கிளப்பும் போதே ஏதோ அமெரிக்காவில் கார் ஓட்டுகிற நினைப்பில் பறந்து கொண்டு போவார்கள். அவர்களிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு சாயங்கால ட்ராபிக்கில் ஏர்போர்ட் போகவே இரண்டு மணி பிடிக்கும். அப்புறம் வருகின்ற விமானம் சரியான நேரத்துக்கு வருவது தனக்கு மரியாதைக் குறைவு என்று அதன் போக்கில் வந்து இறங்கும். பயணிகள் வெளியே வர டயம் பிடிக்கும். மறுபடியும் ட்ராபிக் கடலில் நீந்தி வீடு வரும் போது இரவு ரொம்ப லேட் ஆகி விடும். அவன் படிப்பில் இன்று மண்தான்.

லக்கி நிராசையுடன் மாடிக்குப் போனான். அம்மா காயத்ரியுடன் பேசும் போது அவனுடைய கஷ்டத்தைச் சொல்லி இருக்கலாம். ஆனால் மாட்டாள். பெண் என்றால் அவளுக்கு அப்படி உயிர். அம்மாவுக்கு சொந்த ஊர் அம்பாசமுத்திரம். இந்த திருநெல்வேலி பொம்மனாட்டிகளுக்கே பொண்கள் மேலதான் அப்படி ஒரு ஆசை பாசம் எல்லாம் என்று அவனுடைய அப்பா அம்மாவைச் .சீண்டுவார். அவர் தஞ்சாவூர்க்காரர் . ஆனால் அவர் சொன்னது முற்றிலும் உண்மைதான். காயத்ரிக்கு முன்னால் அவன் ஒரு படி மட்டுதான்.

இனிமேல் படிப்பது கஷ்டம் என்று லக்கி படுக்கையில் சாய்ந்தான். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டு ஏர்போர்ட் போகத் தயார் பண்ணிக் கொள்ள வேண்டும். காயத்ரியின் சினேகிதியை இங்கே கூட்டிக் கொண்டு வரும் போது பத்து, பத்தரை ஆகி விடும். அதற்கு அப்புறம் கொஞ்சம் படிக்க வேண்டும்..

.

**********

கிருஷ்ணமணி வீட்டுக்குள் வரும் போது பதினோரு மணியாகி விட்டது. இன்று கிளப்பில் பார்ட்டி இருந்தது. அவருடைய தில்லி ஆபிசிலிருந்து பாலா திடீரென்று வந்து விட்டான். அவருடைய ஆபிஸ் லயசான் வேலையை அவன்தான் பார்த்துக் கொள்கிறான். ஜிம்கானாவில் பார்ட்டி முடிந்து அவனை தாதரில் விட்டு விட்டு வீட்டுக்கு வர லேட்டாகி விட்டது.காயத்ரி காத்துக் கொண்டிருப்பாள்.

அவர் உள்ளே வரும் போது காயத்ரி போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவரைப் பார்த்ததும் போனைக் கிழே வைத்தாள்

“ஏது இவ்வளவு சீக்கிரம் பாலா உங்களை விட்டுட்டார்?” என்று சிரித்தாள்.

“நாளைக்கு கார்த்தால ஆறு மணிக்கு அவனுக்கு பிளேன். அதனாலே நான் தப்பிச்சேன்.”என்றபடி சோபாவில் சாய்ந்தார். “யாரோட போன்ல பேசிண்டிருந்தே?”

“லக்கியோடதான். இன்னிக்கி சரஸா பெங்களூர் போயிருக்கா.அவளை ஏர்போர்ட்ல பிக் அப் பண்ணிண்டு. இப்பதான் ஆத்துக்கு வந்ததா போன் பண்ணினான்.”

“பாத்தியா , நான் மறந்தே போயிட்டேன். அஜித் ராவுக்கு போன் பண்ணனும்னு இருந்தேன். நம்ம லக்கி வேல விஷயமா . நாளைக்கு ஒரு இண்டர்வியு ஏற்பாடு பண்ணியிருக்கேன்” என்றபடி மொபைல் போனை சட்டைப் பையில் இருந்து எடுத்தார்.

“கொஞ்சம் இருங்கோ” என்று காயத்ரி அவரிடமிருந்து போனை வாங்கிக் கொண்டாள்.

“எதுக்கு இப்போ திடீர்னு லக்கிக்கு வேலை வாங்கி குடுக்கறதுக்கு மும்முரமா இருக்கேள் ?”

அவர் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

“இன்னிக்கு மத்யானம் அம்மாவோட பேசும் போதுதான் தெரிஞ்சது. என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா என்னவாம்? இப்ப அவனுக்கு என்ன அவசரம் வேலைக்கு போக? நாம பெங்களுர்ல ஒரு வீடு வாங்கி அம்மாவும் அவனும் தங்கணும்னு சௌகரியம் பண்ணி கொடுத்திருக்கோம். அதனாலே மாசாந்தர வாடகைன்னு ஒரு பிடுங்கல் கிடையாது. போக வர கஷ்டப்பட வேண்டாம்னு தானே இங்கேர்ந்து உங்க பழைய காரை குடுத்தனுப்பிச்சோம்? அப்பாவோட பென்ஷனும், ஊர்லேர்ந்து வர்ற அரிசியும் பருப்பும் மாசச் செலவுக்கு ஆச்சு. இதெல்லாம் பார்த்துதானே நானே அவன் வேலை விஷயமா இதுவரைக்கும் பேச்சே எடுக்கலை. ”

“நீ சொல்றதெல்லாம் ரொம்ப சரி, காயத்ரி. ஆனா அவன் வேலைக்குப் போறேன் அத்திம்பேர்னு ஒவ்வொரு தடவையும் என்னை பாக்கறச்சே, போன்ல பேசறச்சே கேட்டுண்டு இருக்கானேன்னுதான்….”

காயத்ரி அவரை இடை மறித்தாள். “நீங்களே யோசிச்சு பாருங்கோ. இந்த வேலைக்கு போனா ஐயாயிரம் இல்லே பத்தாயிரம் சம்பளமா கிடைக்குமா? உங்களுக்கு உங்க ஆபிஸ் வேலைகளே பெங்களூர்ல எவ்வளவோ .இருக்கு.பணம் குடுக்கல் வாங்கல்ன்னு நம்பிக்கையா லக்கி பாத்துக்கற மாதிரி இருக்குமா? ஒண்ணும் இல்லே இன்னிக்கு சரஸா பெங்களூர் போனா, நான் எதுக்காக நம்ம காரை கொடுத்தேன்? உங்க பாஸ் தார்தேவ்ல இருக்கிறதினாலே அவர் குழந்தைக்கு யுனிவர்சல் ஸ்கூல்ல கே ஜி அட்மிஷனுக்குமண்ணாடிண்டு இருக்கான்னு நீங்க போனவாரம் சொல்லலையா? சரசாவோட தம்பிதான் அந்த ஸ்கூல்ல வைஸ் பிரின்சிபால்னு நாலு நாளைக்கு முன்னால்தான் தெரிஞ்சது. அதான் லக்கிய விட்டு ஆத்துக்கு அவளை

ஏர்போர்ட்டிலிருந்து கூட்டிண்டு போகச் சொன்னேன்.நாளைக்கு சரசா வந்தப்புறம் அட்மிஷன் வாங்கியாகனும் இப்படி எல்லாம் இருக்கறச்சே , அவன் வேலைக்கு மூணாம் மனுஷன் கிட்டே போனான்னா அப்புறம் உங்களோட வேலை எல்லாம் யார் பார்த்துக்கறது? ”

“இதெல்லாம் நான் யோசிக்கவே இல்லை காயத்ரி” என்றார் மணி குற்ற உணர்ச்சியுடன்.

“இதெல்லாம் போகட்டும். நீங்களே பெங்களூர்ல பாக்டரி ஆரம்பிக்கணும்னு சொல்லிண்டு இருக்கேள். நாளைக்கே நீங்க ஆரம்பிக்கிரச்சே லக்கி நம்மோட இருந்தா எவ்வளவு சௌகர்யம்?”என்றாள்.

மணி தலையை ஆட்டினார். . இந்த பாக்டரி விஷயம் எட்டு வருஷமாக கிடப்பில் இருக்கிறது. இருந்தாலும் மனைவி சொல்வது போல் நாளையே ஆரம்பிக்க நேர்ந்தால்…?

“சரி ரொம்ப லேட் ஆயிடுத்து. படுத்துக்க போலாம் வாங்கோ” என்று பெட்ரூமை நோக்கி காயத்ரி நடந்தாள், அவருடைய மொபைல் போனை டீபாய் மீது வைத்து விட்டு. அவரும் அவளைப் பின் தொடர்ந்தார்.

**********

கட்டிலின் மேலே இருந்த சுக்லாவின் புத்தகத்தை எடுத்துக் கொண்டான் லக்கி. மணி பதினொன்றைக்கு மேலே ஆகி விட்டது. அட்லீஸ்ட் ஒரு மணி நேரமாவது படித்தால்தான் நாளை அத்திம்பேர் பேரைக் காப்பாற்ற முடியும். கண்ணைச் சுழற்றிக் கொண்டு வரும் தூக்கத்தை முகத்தில் தண்ணீர்

அடித்துக் கலைத்தான் .பிறகு,மானேஜ்மென்ட் அக்கௌண்டிங் பற்றிய குறிப்புக்களைப் படிக்க ஆரம்பித்தான்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *