கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2022
பார்வையிட்டோர்: 4,141 
 
 

கனிமொழி இடிந்து போயிருந்தாள். அவளுக்கு மனசே சரி இல்லை.

ஒரு வீட்டிற்கு இரு வீடு தான் செல்லமாக வளர்ந்து, நிறைவேறுமென்று ஆசையாய் வளர்த்த காதல் இவ்வளவு பெரிய வில்லங்கத்தில் வந்துவிடுமென்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

எல்லாம் இவள் நேரம். எங்கேயோ பெண்ணாய்ப் பிறந்து பெற்றெடுக்காதவரிடம் அனுமதி கேட்க வேண்டிய கட்டாயம்.!

இவள் தகவல் சொன்ன அடுத்த அரை மணி நேரத்திலேயே…பெற்ற தகப்பன் முருகானந்தம் இவள் இருக்கும் வீட்டிற்கு கோபாவேசத்தோடு வந்து விட்டான்.

இவள் அறைக்குள் கலவரமாக புகுந்தாள்.

வீட்டிற்குள் வந்த அவன் தன்னை ஒருவாறு சமாதானப்படுத்திக் கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்த நாகராஜனைப் பார்த்து….

“அண்ணா…!!!…” அடிக்குரலில் அழைத்தான்

“என்ன…? ” இவன் தம்பியைப் பார்த்தான்.

“நீ கனிமொழி காதலுக்கு தடையாய் இருக்கியாமே..?!”

“ஆமாம்.!”

“ஏன்…?”

“பையன் சரி இல்லே. மறுப்பு சொன்னேன்..!”

“கனிமொழி கைபேசியில் காட்டினாள். அவனுக்கென்ன…? ஆள் அழகா கனிமொழிக்கு ஏத்தவனாய் இருக்கான். அதோடு மட்டுமில்லாம கை நிறைய சம்பாதிக்கிறான். என்ன குறை..?”

“சம்பாதிக்கிறதை அவனுக்குச் சரியா செலவழிக்கத் தெரியல முருகு..?”

“புரியல..?!”

“வீண் அரட்டை, நாளைக்கு ஒரு உடை உடுத்திக்கிட்டு நண்பர்களோடு சேர்ந்து உதாரித்தனமாய் இருக்கான்.”

“இது பருவ வயசு ஆம்பளைப் புள்ளைங்க அப்படி இப்படி சகஜம். இது பெரிய தப்பில்லையே..?! ‘’

“…”

“ம்ம். அப்புறம்…?”

“பொம்பளைங்க சமாச்சாரம் இருக்கு..!”

கேட்டவனுக்கு இதுதான் சிறிது அதிர்ச்சியாய் இருந்தது. துணுக்குற்றான்.

நாகராஜன் அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாய்….

“ஆமாம்.. அவனைக் கண்ட கண்ட பெண்களோட வேற வேற இடங்களில் பார்த்தேன்”

தந்தைக்கும் மகளுக்கும் சேர்த்து மனதில் இடி விழுந்தது.

“பையன் நடவடிக்கை சரி இல்லே. கண்ணு தெரிஞ்சு மகளை கிணத்துல பிடிச்சி தள்றது சரியா..?..” என்றான்.

‘ சரியான கேள்வி. என்ன சொல்ல…?’ – முருகானந்தம்…மெல்ல அமர்ந்தான்.

கனிமொழி அழுதது, அரற்றியது எல்லாம் மனசுக்குள் நெஞ்சைப் பிழிய… சிறிது நேர யோசனைக்குப் பின்….

“இதை எல்லாம் உன் கண்ணால பார்த்தியா…? “மெல்ல கேட்டான்.

“கனிமொழி தன் காதலை என்னிடம் சொன்ன அடுத்த நொடியிலிருந்து நான் அவனை வேவு பார்த்த வினை அது. பார்த்தேன்!”

“வயசுப்பையன் அப்படி இப்படி இருக்கிறது சகஜம். தாலி கட்டினா சரியா போகும்!”

நாகராஜன் தம்பியை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“கனிமொழி கண்ணைக் கசக்குறது மனசுக்குக் கஷ்டமா இருக்கு. விடுண்ணே எல்லாம் சரியாப் போயிடும்.” முருகானந்தம் தலை குனிந்து கொண்டு சொன்னான்.

“பாசம் நியாயத்தை மறைக்குது முருகு.!”

“ஆமாம்ண்ணே. பெத்த மனசு தாங்கலை. . ஆணைப் பெத்த உனக்கு அவள் கஷ்டம் தெரியல…”என்றான்.

‘தனக்குப் பெண்ணில்லை என்று தம்பி பெண்ணை வாங்கி வளர்த்தது தவறோ..?’ அண்ணனுக்குள் சட்டென்று பட்டது.

“இதோ பார் முருகு.! எங்களுக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள் . கணவன் மனைவி அரசாங்க வேலையில் இருக்கோம். கை நிறைய சம்பாத்தியம். பிரச்சனை இல்லே. நிம்மதியாய் இருக்கலாம். ஆனா நீ ……வேலை வெட்டி இல்லாம இருக்கே. பெத்ததும் மூணும் பெண். ஒன்னை வாங்கி வளர்த்து உன் சுமையைக் குறைக்கலாம்ன்னுதான் கனிமொழியைத் தத்தெடுத்து பெத்தப் பொண்ணுக்கு மேலாக வளர்க்கிறேன். . வளர்த்த எனக்கு பொறுப்பிற்கு. நான் நல்லவனாய்ப் பார்த்துதான் திருமணம் முடிப்பேன். “நாகராஜன் கறாராக சொன்னான்.

“பிடிவாதம் வேணாம்ண்ணா. கனிமொழி காதலிக்கிறவனையே கலியாணம் முடிச்சால்தான் கண் கலங்காமல் இருப்பாள்.”

“என்னால அப்படி முடியாது.!”

“அப்படின்னா அவளை என்னோடு அனுப்பு. பெத்தக் கடமை அவள் மனசு கோணாமல் முடிக்கிறேன்.”

“முடியாது. அவளை மூணு வயசுலேர்ந்து என் பெண்ணாய் வளர்க்கிறேன்.”

“நமக்குள் பகை வேணாம். அவள் விருப்பம். எங்கிருந்து எப்படி முடிக்கணுமோ அப்படியே முடிக்கட்டும். முடிவை அவள்கிட்ட விடுவோம் “முருகானந்தம் முடித்தான்.

பொறுப்பு தன்மீது விழ கனிமொழி தலையில் இடி.

என்ன செய்ய…??…என்று யோசிக்கும்போதே…

“கனிமொழி!” முருகானந்தம் அழைத்தான்.

இவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.

“எங்க பேச்சு எல்லாத்தையும் நீ கேட்டிருப்பே. முடிவு சொல்…?” என்றான்.

“பெத்தப்பா!. பெரியப்பா.! பெத்து, வளர்த்த ரெண்டு பேருக்கும் என் மேல அன்பு, பாசம் அக்கறை இருக்கு என்கிறதை உங்க பேச்சிலேயே தெரிஞ்சிகிட்டேன். பெரியப்பா சொன்னதில் உண்மை இருக்கும். அதனால எனக்கு காதல் வேணாம். ரெண்டு பெரும் ஒரு நல்ல வரனாய் பார்த்து முடிங்க எனக்கு சம்மதம்!” என்றாள்.

நாகராஜன், முருகானந்தம் முகங்களில் திருப்தி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *