கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 13,143 
 
 

படுக்கையில் நெருப்பள்ளிப் போட்டதுபோலத் திருமலையின் உடல் கொதித்தது. அவனால் படுத்திருக்கவே முடியவில்லை. உடலின் ஒவ்வொரு அணுவும் பற்றி எரிந்தது. உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். உடலை முறுக்க எத்தனித்தான். கைகளும் கால்களும் அவன் விருப்பத்திற்கு இணங்காத மெத்தனத்தோடு அப்படியே கிடந்தன. வலது கை எப்போதும் மார்பின் மீதுதான் கிடக்கும். அம்மாக்கிழவி அவனைப் படுக்கப்போடும் போது, வலது கையை மார்பின் மீது கிடத்திய பிறகுதான் போர்வையைப் போர்த்தியிருந்தாள். இடது கை நீட்டிய வாக்கில் அப்படியே கிடந்தது. கால்கள் வெறும் மரக்கட்டைகளாய் இடுப்புக்குக் கீழே ஒட்டிக்கொண்டுகிடக்கின்றன. அவனால் செய்ய முடிந்ததெல்லாம் கரகரப்பான குரலில் யாரையாவது கத்தி அழைப்பதோ தேவையைச் சொல்வதோதான்.

அம்மாக்கிழவி சித்திகளோடும் அத்தைகளோடும் எதிர்க்கூடத்தில் படுத்திருக்கிறாள். திருமலை இன்று திண்ணையில். எப்போதும் அவனுடைய கட்டில் வீட்டுக்குள்ளே இருக்கும் கூடத்தின் ஒரு முனையில்தான் போடப்பட்டிருக்கும். அவனுக்கு வசதி என்பதைவிட மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாத இடம் அது. கட்டிலுக்கு நேர் எதிரில் வீட்டு நடவை. இடது பக்கம் சமையலறை. சமையலறையை ஒட்டி ஒரு அறை. இருப்பதில் சற்று விஸ்தாரமாக வெளிப்புறச் சுவரின் ஜன்னலுடனும் அமைந்த அறை. வெளிச்சமும் காற்றும் பரவாயில்லையாய் இருக்கும். மற்றபடி கூடத்தில் பகலிலேயே புழுங்கும். இத்தனை நாள்வரையில் அந்த அறைக்கென்று முக்கியத்துவம் எதுவும் இருக்கவில்லை. இன்று அந்த அறையில்தான் கணேசனின் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆக இன்று முதல் அது கணேசனின் படுக்கையறை. பள்ளியறை. திருமலைக்கு அந்தச் சொற்களை மனத்துக்குள் உச்சரிக்கும்போதே உடலெல்லாம் ஆத்திரத்துடன் பற்றியெரிந்தது.

உயிரின் வலியையெல்லாம் திரட்டிக் கூராக்கிக் குரலெழுப்பினான். ‘ம்மா…’ கரகரப்பான அவனது குரல் இருட்டைப் பெரும் பதற்றத்துடன் குலைத்தது. இந்தச் சத்தம் உள்ளறைவரைக்கும் போய்ச் சேர்ந்திருக்குமா என்று ஒரு கணம் சந்தேகம். யாரிடமிருந்தும் பதில் இல்லை. கூடத்திலும் அசைவேதும் தென்படவில்லை. எல்லோரும் கல்யாண அசதியில் தூங்குகிறார்கள். இவர்கள் தூங்கக்கூடும். ஆனால் கணேசன் நிச்சயம் தூங்கியிருக்கமாட்டான். அந்த இருட்டறையின் அம்சங்கள் இன்று அவன் உடலைத் தூங்கவிடுமா என்ன?

மீண்டும் மொத்த ஆத்திரத்தையும் கொதிப்பையும் ஒன்று திரட்டிக்கொண்டு வீறிட்டுக் கத்தினான். ‘யம்மா… யம்மா’. தொண்டை அடைத்துக்கொண்டு திணறியது. மூச்சுவாங்கியது. மேலும் கீழுமாய் வேகங்கூட்டி ஓடும் மூச்சின் வெப்பம் அவனை வேர்க்கச் செய்தது.

கூடத்தில் சத்தம் கேட்டது. சில நொடிகளில் விளக்கெரிந்தது. அம்மாக்கிழவி தடுமாறியபடி கூடத்துப் படிகளில் இறங்கி வந்தாள். ‘திருமலே…’ தூக்கக்கலக்கம் இன்னும் விடுபடாத குரல். திண்ணைப் படிகளில் ஏறிச் சுவர் மூலையில் இருந்த விசையைத் தட்டினாள். குண்டு பல்பின் மஞ்சள் வெளிச்சம் திண்ணையில் இறங்கியது.

வேர்த்துக் கிடந்த திருமலையைக் குனிந்து பார்த்தவள் புடவைத் தலைப்பால் துடைத்தாள். ‘என்ன திருமலே… என்னாச்சு…’ குரலில் மெல்லிய நடுக்கம்.

திருமலையின் கண்கள் தீர்க்கமாய் அவளைப் பார்த்தன. சீரடைந்த மூச்சைக் கவனத்துடன் முடுக்கினான். தொண்டையைச் செருமியபடியே கண்களை மூடிக்கொண்டான்.

‘தண்ணி குடிக்கறயா திருமலே…’ அம்மாக்கிழவி இன்னும் அவசரப்படாமல் இருப்பது திருமலைக்கு மேலும் எரிச்சலைத் தந்தது.

‘யம்மா… ய்யம்மா…’ மீண்டும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கத்தினான். மூச்சு சீர்குலைந்து ஒரு கணம் நின்று இழுத்தது. முகமெங்கும் நொடியில் வேர்த்தது. கண்களை மேலேற்றிக்கொண்டான். கிழவி இப்போது நிச்சயம் பயப்படுவாள். கூடத்திலிருந்து காலடியோசைகள் கேட்டன.

‘என்ன செய்யுதுக்கா….’ சித்தியின் குரல் அவசரமாகக் கேட்டது.

இன்னும் வீட்டுக்கதவு திறக்காமலிருப்பது திருமலையின் ஆத்திரத்தைக் கூடுதலாக்கியது.

‘தெரியல… சும்மா நெஞ்சிழுக்குது… வேர்த்திருக்குது… நல்லாத்தான இருந்தான். என்னதுன்னு புரியலே…’ புடவைத் தலைப்பால் மறுபடியும் துடைத்தவள் ‘கொஞ்ச தண்ணி குடுக்கலாம்னு பாத்தா… கண்ணு முழிக்கமாட்டேங்கறான்…’

வீட்டுக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வாசல் நிலையின் விளக்கெரிந்ததை உணர்ந்ததும் திருமலைக்கு ஆசுவாசமாய் இருந்தது. கண்ணைத் திறக்காமல் மூச்சை மட்டும் முடுக்கத்தைத் தளர்த்தாது இழுத்தான்.

‘என்னம்மா…?’ கணேசன் அருகே வந்திருந்தான். அம்மாக்கிழவி மறுபடியும் புரியாத நிலையைச் சொன்னாள்.

‘அண்ணா…’ நெற்றியில் கைவைத்தபடி கணேசன் அழைத்தான். அவனிடமிருந்த கல்யாண வாசனை திருமலையை மேலும் முறுக்கேற்றியது. மூச்சை உள்ளிழுத்தபடி ‘ம்மார்ற்றற்…’ எனச் செருமினான். நெஞ்சிலிருந்து எதையோ உருவிக்கொண்டு மேலேற்றுவதுபோல் சுவாசக்குழல் அடைத்தது. அதைத் தொடர்ந்த இருமல் திணறடித்தது. கண்களைத் திறக்காமலேயே அரற்றினான்.

‘அண்ணா…, ண்ணா… என்ன செய்யுது? இங்க பாருங்க…’ கணேசன் கட்டிலின் அருகில் உட்கார்ந்திருந்தான். பதற்றத்தில் கைகள் நடுங்கின. ‘கொஞ்சஞ் தண்ணி குடும்மா…’ துண்டைத் தண்ணீரில் நனைத்திருக்க வேண்டும். ஈரத் துண்டால் முகத்தைத் துடைத்தான். திருமலை மூச்சைச் சீராக்கினான். மெதுவாகக் கண்ணைத் திறந்தான்.

‘என்னண்ணா செய்யுது?…’ கணேசனின் பதற்றமான முகத்தைப் பார்த்ததும் திருமலைக்கு வெட்கமாக இருந்தது. பார்வையைத் திருப்பிக்கொண்டே திணறியபடி சொன்னான். ‘ஒண்ணுமில்ல… என்னமோ நெஞ்ச அடச்சமாரி இருந்துச்சு… செரியாப் போச்சு… நீ போ… போயிப் படுத்துக்க…’ வார்த்தைகள் பெரும் சுமையுடன் கசிந்தன. அம்மாக்கிழவி அவனைக் கூர்ந்து பார்த்தபடி இருந்தாள். அவள் பார்வையை அவனால் தாள முடியாமல் திண்ணையின் கூரையை வெறித்தான். கணேசன் இன்னும் நகராமல் அவன் முகத்தையே பார்த்தபடியிருந்தான்.

‘நீ உள்ள போடா… அவனுக்கு ஒண்ணுமில்ல’ அம்மாவின் குரலிலிருந்த வெறுமை திருமலையைத் துளைத்தது.

‘இரும்மா… அண்ணா… யூரின் போறீங்களா?’

திருமலை ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் ஒருதரம் அந்தச் சீற்றம் எட்டிப் பார்த்தது. கல்யாண வாசனையும் புதுக்கருக்குமாய் இருக்கும் கணேசன் அவனை எழுப்பி உட்காரவைத்தான். சித்தி நகர்ந்து கூடத்துக்குப் போனாள். ‘எதுக்குடா… இப்ப தூங்கறதுக்கு முன்னாடிதான போனான்…’ அம்மா சலித்தபடியே கட்டிலுக்குக் கீழேயிருந்து மூத்திரச்சட்டியை எடுத்தாள். போர்வையை விலக்கி வேட்டியை விலக்கிச் சட்டியை ஏந்திக்கொண்டு திருமலையை ஏந்திப் ‘போங்கண்ணா…’ என்றான். திருமலையின் உள்ளெரிச்சல் அடங்கியதுபோலொரு அமைதி. இதுவரைக்குமான ஆத்திரமும் சீற்றமும் அந்த ஒரு கணத்தில் அடங்கியதுபோல் மனம் பதற்றத்தைக் கைவிட்டு அடங்கியது. கல்யாண வாசனையை விரட்டியடித்த ஒரு திருப்தி. மீண்டும் அவனைப் படுக்கையில் கிடத்திக் கால்கைகளை அதனதன் போக்கில் இருத்திப் போர்த்திவிட்டுக் கணேசன் நகர்ந்தான். கிழவி ஒருமுறை மூடிய கண்களுடன் படுத்திருந்த அவனைப் பார்த்தைத் திருமலையும் உணர்ந்தான்.

‘எதுன்னாலும் கூப்புடு அம்மா…’ கணேசன் மீண்டும் கதவைத் தாழிடும் ஓசை கேட்டது.

திண்ணையும் கூடமும் மீண்டும் இருளில் மூழ்கியது. கூடத்தில் அம்மா இன்னும் படுத்துத் தூங்கியிருக்கமாட்டாள். உள்ளூர அவள் எப்போதும் புலம்பும் சொற்கள் இப்போது அவளைத் தூங்கச்செய்யாது. பலமுறை என்னிடம் அவள் கேட்டுவிட நினைத்த கேள்விகள் இப்போதும் அவளது தொண்டைக் குழிக்குள் முட்டிக்கொண்டிருக்கும். ஆனாலும் அவளுக்கு என் முகத்தைப் பார்த்துக் கேட்டுவிட முடியாது. அந்தத் தைரியத்தில்தான் இப்போதும் நான் இப்படியெல்லாம் கிடந்தபடியே அலைக்கழிக்கிறேன். வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. உறைந்த இருளைக் கிழித்துக்கொண்டு என் சிரிப்போசை மின்னலைப் போல ஒளி சிந்த வேண்டும். நான் சிரிக்கும்போது, என் கீழுதடுகள் கோணிக்கொண்டு கீழ் நோக்கி இழுபடும் என்பது எனக்குத் தெரியும். அப்போது என் இயல்பான சிரிப்பிலேயேகூட ஒரு கோணல் தன்மை வந்துசேர்ந்திருக்கும். கோணலாக நான் வலிந்து சிரிக்க வேண்டிய அவசியமேயில்லை.

இந்நேரம் அவன்… திருமலையின் மனம் ஒரு கணம் பின்வாங்கியது. என்ன இது? மீண்டும் அந்தச் சீற்றம் கிளம்பியது. ஆனாலும் இன்னொரு பக்கமிருந்து என்னையே நான் கடிந்துகொண்டேன். நானா இப்படி யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதுவும் கணேசனைப் போய். கணேசன் மாதிரி ஒரு தம்பி எல்லோருக்கும் வாய்த்துவிட முடியாது. எல்லோருக்கும் அண்ணன் தம்பிகள் இருக்கலாம். ஆனாலும் இருபத்தி நான்கு வயதிலிருந்து கைகால் விளங்காத ஒரு அண்ணனைத் தாங்கிச் சுமக்கிறானே. கூடை நாற்காலியில் அல்லது இரும்புக் கட்டிலில் கிடக்கும் ஒரு உயிருள்ள பிண்டம் நான். என்னால் என்ன செய்ய முடியும்? உயிரும் உடலும் இருந்துவிட்டால் மனிதனாகிவிட முடியுமா? சுயமாக என்னால் மூத்திரங்கூடப் போக முடியாது.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிடுவான் கணேசன். திருமலையின் தூக்கம் காலநேரம் அறியாதது. எழுந்தவுடன் நேராகப் படுக்கைக்குத்தான் வருவான். போர்வையை விலக்கி என்னை நிமிர்த்திக் கால்கள் கட்டிலுக்குக் கீழே தொங்கும்படி உட்காரவைத்து வேட்டியை விலக்கிக் கட்டிலுக்குக் கீழிருக்கும் மண்சட்டியை எடுத்து மூத்திரம் பிடிப்பதுதான் முதல்வேலை. சட்டியை எடுத்துப்போய்க் கழுவியெடுத்துக் கக்கூஸின் ஒரு மூலையில் கவிழ்த்துவைத்துவிட்டு வருவான். ‘தூங்கறியா… இல்ல சேர்ல உட்கார வைக்கட்டுமா?’ எனக் கேட்பான். பெரும்பாலும் சேருக்கு வந்துவிடுவான் திருமலை. தொலைக்காட்சிப் பெட்டிக்கு நான்கடி தூரத்தில் கூடத்தின் மின்விசிறிக்குக் கீழேதான் அந்தக் கூடை நாற்காலி. அதில் கொண்டு வந்து உட்காரவைத்து, வேட்டியைச் சரிப்படுத்திவிட்டுத் தொலைக்காட்சியை இயக்கிவிடுவான். அந்த நேரத்தில் ஏதேனும் தெய்வீக ஆராதனைகள்தான். திருமலைக்குப் பிடிக்காது என்றாலும் ஒன்றும் சொல்லாமல் பார்த்துக்கொண்டிருப்பான்.

அவன் குளிப்பதற்கு முன்னால் மறுபடியும் வருவான். அதற்குள் அம்மாக்கிழவி அவனுக்குக் காப்பி புகட்டிவிட்டிருப்பாள். காப்பியை எப்படித் தந்தாலும் திருமலை ஏதாவது ஒரு குறையைச் சொல்லாமல் குடிப்பது கிடையாது. ஒரு நாள் சூடு பத்தலே என்பான். மறுநாள் இத்தனச் சூடாக் குடுத்தா நாக்கும் வெந்து தொலையட்டும்னு பாக்கறயா? என்பான். கொஞ்சம் சக்கரதான் சேத்திப்போடேன்… எனக்கென்ன சக்கர வியாதியா… கைகால்தானே கெடந்துபோச்சு என்பான். அதிசயமாய் ஒரு நாள் ஒன்றும் சொல்லாமல் குடித்து விட்டுக் கிழவியைப் பார்ப்பான். ‘இன்னிக்கு மழதாண்டா வரும்’ எனக் கிழவி சொல்லும்போது ‘அதான்… அதுக்குத்தான் ஒன்னுஞ்சொல்லலே…’ என்று உதட்டுக் கோணலுடன் சிரிப்பான். ‘இதுக்கு நீ எதாச்சும் சொல்லிருந்தாலே தேவலே…’ என்பாள் கிழவி.

அவனை இரண்டு கைகளில் ஏந்திக்கொண்டு பாத்ரூமுக்கு வருவான் கணேசன். கக்கூஸிற்குள் முன்பே டாய்லட் மோடாவைப் போட்டுவைத்திருப்பான். உள்ளே வந்ததும் தோளில் அவனைச் சாய்த்துக் கொண்டு வேட்டியையும் நாடா போட்டுக் கட்டிய பட்டாவேட்டி அண்டர்வேரையும் கழற்றிவிட்டு மோடாவில் அமர்த்திவிட்டுக் காத்திருப்பான். ‘போயாச்சு…’ எனத் தலையைக் கவிழ்த்துக்கொண்டே இவன் சொன்னதும் கழுவியெடுத்துக் குளியலறைக்குக் கொண்டுவந்து அங்கேயுள்ள மர ஸ்டூலில் உட்கார வைத்ததும் கிழவி தண்ணீர் ஊற்ற இவன் தேய்த்துக் குளிப்பாட்டிவிடுவான். கை காலையெல்லாம் நன்றாக நீவிக் குழந்தையைக் குளிப்பாட்டுவதுபோலக் குளிப்பாட்டுவான். பிறகு உடம்பையெல்லாம் துவட்டி அண்டர்வேர், பனியன் அணிவித்து வேட்டியைச் சுற்றி இடுப்பில் இறுக்கிக் கட்டிவிட்டு ஏந்தி எடுத்துவருவான். கூடை நாற்காலியில் இருத்திவிட்டு உள்ளேயிருந்து விபூதி எடுத்துவந்து நெற்றி நிறைய பூசிவிட்டுப் போவான்.

அவன் வேலைசெய்வது ஒரு கூட்டுறவுச் சங்கத்தில். காலையில் ஒன்பதரை மணிக்குப் போனால் ஒன்றரை மணிக்கு மதியச் சாப்பாட்டுக்கு வருவான். அவன் வருவதற்கு முன்பே தொலைக்காட்சியின் பிம்பங்களில் கண்ணை நிறுத்திக் கூடையில் கிடக்கும் திருமலைக்கு அம்மாக்கிழவி சாதத்தைப் பிசைந்து ஊட்டிவிட்டிருப்பாள். பசிக்கும்போதெல்லாம் அம்மாக்கிழவியின் கைவாசனைதான் ருசியாகவும் வாசனையாகவும் கிளர்ந்தெழுமே தவிரப் பதார்த்தங்கள் அவனுக்கு நினைவு வராது. ஞாயிற்றுக்கிழமையானால் மட்டனோ கோழிக்கறியோ எதுவானாலும் பிசைந்து பிசைந்து ஊட்டிவிடுவாள். அன்றைக்கு மட்டுமே திருமலைக்குக் கூடுதலாய் வெற்றிலை போட்டுக்கொள்ள வேண்டும். மதியம் சாப்பிட்ட பின் வேலைக்குக் கிளம்புவதற்கு முன்பு ஒருமுறை திருமலைக்கு எதுவும் தேவையா என்று கேட்டுவிட்டுத்தான் புறப்படுவான். பிறகு அவன் வரும்போது இருட்டிவிடும். சாயங்காலத்தில் வெளிக் கூடத்தில் சீட்டுக் கச்சேரி நடக்கும். அன்பரசு, கறிக் கடைச் சித்தப்பா, ஓய்வுபெற்ற கண்ணாடி வாத்தியார் என்று ஒரு கோஷ்டி சேர்ந்துவிடும். திருமலையின் கூடை நாற்காலி சீட்டாட்ட ஜமாவுக்கு வந்துவிடும். கை குறையும் வேளைகளிலோ அல்லது திருமலைக்கு ஆட வேண்டும் என்று நினைப்பு வரும்போதோ ஆட்டத்தில் அவனும் ஒரு கை சேர்ந்துவிடுவான். துணைக்குச் சுப்புணியை அழைத்துக்கொள்வான்.

சுப்புணி சீட்டுகளை அடுக்கி இவனிடம் காட்டியபடியே இருக்க எந்தச் சீட்டை எடுக்க வேண்டும் எந்தச் சீட்டை இறக்க வேண்டும் எனத் திருமலை மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருப்பான். எவ்வளவு மோசமாக ஆடினாலும் கைநஷ்டம் வந்துவிடாது அவனுக்கு. அன்றைக்கு ஜெயித்த பணத்திலிருந்து சுப்புணிக்கு சினிமாக் காசு கிடைத்துவிடும். அன்பரசு திருமலைக்குப் பால்ய நண்பன். திருமலையோடு சேர்ந்து அம்மாக்கிழவியிடமே வளர்ந்தவன். அவனுக்கு வேலை இல்லாதபோது, திருமலையிடந்தான் உட்கார்ந்துகொள்வான். திருமலை பதினைந்து வயதிலிருந்து அதை படிப்பவன். உடன்பிறப்புக்கு எழுதப்படும் கடிதங்களை வாசிக்காமல் அவனுக்கு முடியாது. இப்போதும் சிறுமுகையில் முரசொலி வாங்கும் ஒரே நபர் அவன்தான். அவனுக்காகப் பாவம், சோடாக்கடை மாரிமுத்து மேட்டுப்பாளையத்திலிருந்து முரசொலி வாங்கிக்கொண்டு வருவார். அன்பரசுதான் முரசொலியைப் படித்துக்காட்டுவான். திருமலைக்குப் புத்தகம் வாசிப்பது எளிது. பக்கங்களைத் திருப்பித் தந்துவிட்டால் மடிமீது ஒரு அட்டையை வைத்துக்கொண்டு படிக்க முடியும். செய்தித்தாள் படிப்பது சிரமம். கழகச் செய்திகளை அன்பரசு நக்கலடித்துக்கொண்டே படிப்பான்.

திருமலையின் ரகசிய வேண்டுகோள்களை நிறை வேற்றுவதும் அன்பரசுதான். இதற்கான திட்டங்களும் செயல்படுத்தல்களும் பெரும்பாலும் சீட்டு ஜமாவின் போதுதான் நடக்கும்.

ஞாயிற்றுக்கிழமை கறிக்குழம்பு கொதித்துக்கொண்டிருக்கும்போதே அன்பரசு வந்துவிடுவான். அண்டர்வேர் பாக்கெட்டில் இருக்கும் குவார்ட்டர் பாட்டில் அசைவதைப் பார்க்கும்போதே திருமலைக்கு உற்சாகம் வந்துவிடும். வெளிக்கூடத்தில் ‘முரசொலி’ படிக்கும் சாக்கில் சரக்கைக் கலந்து பக்குவமாகப் புகட்டி விடுவான் அன்பரசு. அதிகம் போனால் சின்ன எவர்சில்வர் டம்ளரில் இரண்டு தரம். அதுவும் சரிக்குச் சரித் தண்ணீர் கலந்திருப்பான் அன்பரசு. அந்தப் போதையே திருமலைக்குச் சாயங்காலம்வரை தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு யாரைப் பார்த்தாலும் கோணலாய்ச் சிரித்துக்கொண்டே இருக்கச் செய்துவிடும். அவர்கள் குடித்துக்கொண்டிருக்கும்போது, அந்தப் பக்கமாய் வரநேர்ந்தால் கணேசன் கண்டுகொள்ளாமல் போய்விடுவான். அம்மாக்கிழவி கொதிக்கும் குழம்பிலிருந்து கறித்துண்டுகளை ஒரு குண்டாவில் கொண்டுவந்து தருவாள்.

திருமலைக்கு அவ்வப்போது ‘சரித்திர’க்கதைகளை வாசிக்க ஆர்வம் பொங்கிவிடும். ‘சரித்திர’க்கதைப் புத்தகங்களைப் பிற புத்தகங்களை மடியில் வைத்துப் படிப்பதுபோலப் படிக்க முடியாது. அன்பரசுவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு வேகவேகமாய்ப் படிப்பான். அன்பரசு அவன் காலடியில் உட்கார்ந்துகொண்டு இன்னொரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பான். அந்த நாள்களின் இரவுகள் திருமலைக்குக் கடக்கமுடியாத பாலையின் வேதனையுடனும் தவிப்புடனும் நீண்டிருக்கும். அந்த இரவில் அடைபட்ட அறைகளுக்குள் முடங்கிக்கிடக்கும் உடல்கள் யாவுமே அவனருகில் புரள்வதுபோலொரு புழுக்கமும் திணறலுமாய் விடியலின் முதல் சலனங்களுக்காக வருந்திக் காத்திருப்பான். அதற்காக மறுமுறை அன்பரசு கொண்டுவரும் புத்தகங்களை வேண்டாம் என்று அவனால் ஒதுக்க முடிந்ததில்லை. விடிந்த பிறகு அதை வாசிப்பதற்கான தீவிரம் முந்தைய இரவின் மனப் புழுக்கங்களை முற்றிலுமாக ஒதுக்கிப்போட்டுவிடும்.

கணேசனின் திருமணம் குறித்துப் பேசத் தொடங்கியபோதிலிருந்தே திருமலைக்கு இந்த எரிச்சல் உள்ளுக்குள் கனல்விடத் தொடங்கிவிட்டது. அவனைவிடக் கணேசன் நான்கு வயது இளையவன். அவனும் இரண்டு வருடங்களாய் இந்தப் பேச்சைத் தள்ளித் தள்ளிப்போட்டுவிட்டான். அண்ணன் இப்படிக் கிடக்கும்போது தான் திருமணம் செய்துகொள்வது சரியல்ல என்று அவன் திருமலை எதிரிலேயேகூட மனதாரச் சொல்லியிருக்கிறான். அப்போதெல்லாம் உள்ளூரத் திருமலைக்குக் கணேசனின் மீது கரிசனை பொங்கும். அவனை அருகில் அழைத்து உட்கார வைத்து ‘கணேசா, என்னைய காரணங்காட்டி நீ கல்யாணத்தத் தள்ளிப்போடறதுதான் எனக்குப் பெரிய வேதனையா இருக்கு… அம்மாக்கிழவியப் பத்தி யோசிச்சுப்பாரு… எனக்குதான் எதுவும் முடியாது. உனக்காச்சும் ஒரு கல்யாணத்தப் பண்ணிப் பாக்கலாம்ணு அவளுக்கு ஆசையிருக்காதா… ஒத்துக்கடா.’ என்று அவனைப் பக்குவப்படுத்தியதால்தான் இந்தக் கல்யாணத்திற்குக் கணேசன் ஒத்துக்கொண்டான். அப்படியெல்லாம்தான் பேசினோமா என இப்போது நினைத்தால் ஆச்சரியமாயிருக்கிறது. அவன் மறுக்கும்போது தான் குதூகலமல்லவா அடைந்திருக்க வேண்டும். கணேசனின் பக்குவத்தின் பேரிலான நன்றியுணர்வும் அம்மாவின் மீதான கரிசனையுமாய் ஒரு பெருந்துக்கமல்லவா அப்போது மனத்தை அழுத்திக்கொண்டிருந்தது.

n

பதினைந்து வருடங்களாகிவிட்டன. மின்சார இலாகாவில் வேலை கிடைத்த குதூகலத்துடன் மேல் குந்தாவுக்குக் கிளம்பியவனை அம்மாக்கிழவி கண்ணீருடன் வழியனுப்பினாள். வீட்டைவிட்டு ஓரிரவுகூட வெளியில் தங்கியிராத மகன். தலைச்சன் மகன். ஆனாலும் அரசாங்க உத்தியோகம். ஒரு பக்கம் பெருமையும் மறுபுறம் கண்ணீருமாய் விடைகொடுத்தாள்.

உதகை மலைப்பாதைகளின் ரம்மியமும் புதிய வேலை குறித்த உற்சாகமுமாய்ப் பயண தூரம் திருமலைக்குத் தெரியவேயில்லை. உதகையையும் தாண்டி மேல்குந்தாவிற்கு வந்து சேர்ந்தபோது, சில்லென்ற காற்றும் உறைந்து நின்ற பசுமையும் அவனை அள்ளிக்கொண்டண. அந்தியின் பொன்னொளியில் பச்சைப் புல்தரையும் மரஉச்சிகளும் மின்னி நின்றன. மின்குடியிருப்பில் அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டின் ஜன்னல்களைத் திறந்தபோது, சிலீரென்ற காற்று அவசரமாய் அறைக்குள் நிறைந்தது. தொலைவில் தெரிந்த மலைவிளிம்புகளில் வெளிச்சம் சரிய மேகங்கள் மெதுவாய் நகர்ந்திருந்தன. ஒரு கணம் அன்றைய இரவின் தனிமை அவனைப் பயமுறுத்தியது. கற்சுவர் கொண்ட அந்தச் சிறிய அறை, மரக்கட்டில், மலைப்பாம்பு போலச் சுருண்டு கிடந்த ரஜாய், ரத்தச்சிவப்பில் தரையொட்டிக் கிடந்த கம்பளம் எதுவுமே அவனுக்கு இணக்கமாய்த் தெரியவில்லை. அவசரமாய்க் கதவைப் பூட்டிக்கொண்டு கீழே இறங்கினான். இருட்டத் தொடங்கியிருந்தது. குடியிருப்பு வளாகத்தின் மத்தியிலிருந்த சிறுவர் பூங்காவில் குல்லாவும் ஸ்வெட்டரும் அணிந்த சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஸ்வெட்டர், குல்லா, கையுறை போன்ற குளிருடைகள் அவசியம் என வேலை நியமனத்துடன் வந்த கடிதத்தில் இருந்தது நினைவுக்கு வந்தது. சிறுமுகையில் அப்படியான உடைகளுக்கு அவசியம் இல்லை. உதகையில் இறங்கி வாங்கியிருக்க வேண்டும். தெரியாத இடத்துக்கு வெளிச்சத்திலேயே வந்துவிடும் முன் ஜாக்கிரதை உணர்வுடன் நேராக இங்கே வந்திருந்தான். காலையில் அலுவலகத்தில் விசாரித்துவிட்டு வாங்கிக்கொள்ளலாம் எனத் தீர்மானித்தபடியே வளாகத்தின் சுற்றுப் பாதையில் மெல்ல நடந்தான்.

மாலை ஆறு அல்லது ஆறரை மணிதான் ஆகியிருக்க வேண்டும். ஆனாலும் பொழுதின் சுவடேதுமில்லாது கனத்த இருட்டு. பக்கத்தில் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்குமா? தெரியவில்லை. ஒரு ஆள் மட்டும் உட்காரவோ நிற்கவோ தோதான ஒரு மரக் கூண்டில் கூர்க்கா தொப்பியும் கழுத்தைச் சுற்றிய மப்ளருமாய்ப் பீடி குடித்துக்கொண்டிருந்தான். அருகில் நடந்துவந்த திருமலையைக் கூர்ந்து பார்த்தான். இந்த இடத்திற்குப் புதிய முகம். மதியம் உள்ளே வந்தபோது, இருந்தவனுக்குப் பதிலியாக இரவுக் காவலுக்கு வந்திருக்க வேண்டும். ஒரு வணக்கம் வைத்தான் கூர்க்கா. எதற்கும் இருக்கட்டும் என்பது போலிருந்தது. அதிகாரிகள் இப்படித் திடுதிப்பென்று எதிர்ப்படும்போது போட்டுவைக்கும் சலாம் அது.

தான் இங்கே புதிதாக வந்திருப்பதையும் வீட்டு எண்ணையும் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட திருமலை பக்கத்தில் உணவு விடுதிகள் எதுவும் இருக்குமா என்று விசாரித்தான். கூர்க்காவின் முகத்தில் இணக்கம் தெரிந்தது. அருகில் அப்படிப்பட்ட விடுதிகள் எதுவும் கிடையாது என்றவன் மேல்குந்தா பேருந்து நிலையத்துக்கு வெளியில் ஒரு சிறிய விடுதி உண்டென்றும் அது இரவு நேரத்தில் திறந்திருப்பதில்லை என்றும் சொன்னான். சீக்கிரமே வீட்டில் சமையல் ஏற்பாடு செய்துகொள்வதுதான் இது போன்ற மலைப்பிரதேசங்களில் நல்லது என்றும் கூர்க்கா அபிப்ராயம் சொன்னான். பீடி குடிக்கும் பழக்கம் உண்டா என்று ஒருமுறை விசாரித்துக்கொண்டான். திருமலைக்கு அந்தக் குளிர் வேளையில் சிகரெட்டின் கதகதப்பான புகை இருந்தால் தேவலை என்றுதான் தோன்றியது. ஆனாலும் பீடிக்கு இறங்கிப்போகும் மனமில்லை. மாலை வேளைகளில் தலையில் குல்லாவும் உடம்பில் ஸ்வெட்டரும் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என எச்சரித்த கூர்க்கா, நொடிப் பொழுதில் மாறும் தட்பவெப்பத்தினால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும் விவரித்தான். ஆளற்ற அறையில் இறுக்கமான மவுனத்தில் தனிமையை நொந்துகொள்வதைக் காட்டிலும் கரடுமுரடான தமிழில் பேசும் கூர்க்காவுடன் உரையாடிக்கொண்டிருப்பது ஆறுதலாகத்தானிருந்தது அப்போது. இன்னும் பசி தெரியவில்லை. ஒருவேளை குளிர்ப்பிரதேசத்தில் வயிறு மந்தங்கொண்டு பசிக்காமலேயே போய்விடலாம். எப்படியிருந்தாலும் பையில் வாழைப் பழங்களும் பாதி ரொட்டியும் இருக்கின்றன. சமாளித்துக் கொள்ளலாம்.

வெகுநேரத்துக்குப் பிறகு அவன் அறைக்குத் திரும்பியபோது, வளாகம் மொத்தமும் கண்ணாடி அடைத்த ஜன்னல்களின் கதகதப்பிற்குள் புகுந்துகொண்டிருந்தது. அறைக்குத் திரும்பியவன் பழத்தை மட்டும் தின்றுவிட்டுப் படுக்கையில் விழுந்தான். குளிர் உடலை நடுங்கவைத்தது. ரஜாயைத் தூக்கி மேலே போட்டுக்கொண்டதும் மேலும் நடுக்கமாக இருந்தது. கழுத்துவரையில் இழுத்துப்போட்டுக்கொண்டான். பெரும் பாரத்துடன் உடலை அமுக்கிக்கொண்ட ரஜாயில் மெல்ல உடல் வெப்பம் பரவிக் கதகதப்பு கூடியது. காதுகளை அடைத்துக்கொண்டால் தேவலை. சவரப்பெட்டியில் பஞ்சுச்சுருள் இருக்கிறது. ஆனாலும் எழுந்துபோகச் சோம்பலாக இருந்தது. கட்டில் விளிம்பில் போட்டிருந்த ஈரிழைத் துண்டை எடுத்துக் காதையிறுக்கிக் கட்டிக்கொண்டான்.

குளிரின் தீவிரத்தை வாழ்க்கையில் முதன்முதலாக அறிந்த அன்றைய இரவு அவனுக்குப் பெரும் பயங்களை விதைத்தது. விடியும்போது இந்தப் படுக்கை மொத்தமும் ஒரு பெரும் பனிப்பாளமாக மாறி அதற்குள்தான் ஒரு பதுமையாகக் கிடப்பது போலொரு எண்ணம். உதடுகள், கண்ணிமைகள் உள்பட எங்கும் சாம்பலெனப் பனித் திவலைகள் கவிந்து உடல் விறைத்து மாண்டுவிடுவது போலொரு சிறு கனவு. உச்சியில் பனிப் பொட்டலங்களைத் தாங்கிய தேவதாரு மரங்கள் அடர்ந்த பனிவெளியினூடே கருப்புக் கம்பளி ஆடைகளும் கம்பூட்டும் அணிந்து தோளில் பனியள்ளும் மண்வெட்டியுடன் பனியை மிதித்து நடந்துபோகும் ஒருவன் தனக்காகப் புதைகுழி ஒன்றைத் தோண்டுவது போலவும் கனவுகண்டு அஞ்சி எழுந்தான். பாட்டிலில் இருந்த தண்ணீர் பாளமென உறைந்திருந்தது. கழிவறையின் குழாயிலிருந்தும் பனிப் புகைதான் வருமோ என்றஞ்சினான். அந்தப் பயங்களுக்கிடையிலும் மேலே பிடிவாதத்துடன் கிடந்த ரஜாய்தான் பெரும் ஆறுதலாக இருந்தது.

விடியலின் ஒளி கண்ணாடியின் வழியாக உள்ளே நுழைந்தபோது அவன் ஆழ்ந்து தூங்கியிருந்தான்.

அலுவலகத்தில் அவனது பிரிவில் இருந்த மூன்று பொறியாளர்களில் பொன்மூர்த்தி மட்டுமே தனியாளாகத் தங்கியிருந்தான். திருமலையும் தனியாள் எனத் தெரிந்ததும் அவனைத் தன் வீட்டிற்கே வந்துவிடும்படி சொன்னதுடன் அன்று மாலையே அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டான். வீட்டில் சமைக்கத் தேவையில்லை என்றவன் அலுவலகத்துக்குப் போகும் வழியில் சாலைமேட்டில் உள்ள ஒரு மெஸ்ஸையும் அறிமுகப்படுத்தினான். வீட்டின் முன்கூடத்தில் நால்வர் உட்கார்ந்து உண்ணும் மேசைகள் இரண்டுடன் வெகு அடக்கமாக இருந்தது. பார்வதியும் அவள் மகள் செல்வியுந்தான் வேண்டியதைக் கேட்டுப் பரிமாறினார்கள். பிரமாதமான பட்டியல் இல்லாமல் காலையில் இட்லி, தோசை சில நாள்களில் பூரி. மதியம் ஒரு சாம்பார், ரசம், பொறியலுடன் அடக்கமான சாப்பாடு. இரவு சப்பாத்தி. தேவையென்றால் ஆம்லெட், முட்டைப் பொறியல். அவ்வளவுதான். ஏற்கனவே சொல்லி மாதாந்திரக் கணக்கு வைத்துக்கொள்பவர்களுக்கு மட்டுமேயான மெஸ். பார்வதியின் கணவன் செல்வராசு எப்போதும் வெங்காயம், முட்டைகோஸ் என்று எதையாவது சன்னசன்னமாக நறுக்கிக்கொண்டிருப்பான். அவனது உலகமே காய் நறுக்கும் கத்தியின் வேகத்தில் இயங்கிக்கொண்டிருப்பதுபோல இருக்கும். ஒரு வார்த்தையும் பேசாதவனாய்க் காய் நறுக்கியபடியே தலை கவிழ்ந்திருப்பான்.

பொன்மூர்த்தியின் அறைக்குச் சென்ற பிறகுதான் திருமலைக்கு வேறொரு உலகம் அறிமுகமாகியது. அதுவரையிலும் தீர்மானமற்ற கற்பனைகளுடன் பூர்த்தியடையாத சித்திரமாக இருந்த திருமலையின் பெண் உலகம் விநோதங்களும் நிறங்களும் சுவாரஸ்யங்களும் கொண்டதொரு பெரும் வெளியாக விரிந்தது. பொன் மூர்த்திக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள். திருப்பூரில் குடும்பம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை போய் வருவது வழக்கம். பேருந்தில் தான் கண்ட பெண்களின் கதை, ஒரு மழைநாளில் கூட்ட நெரிசலில் நிற்க முடியாது தன் மடிமீது உட்கார்ந்து பயணித்த ஒருத்தியின் கதை, போபாலுக்கு ரயிலில் சென்றபோது சந்தித்த எதிர் இருக்கை நங்கையுடனான நட்பு, போபாலுக்குச் சென்ற பிறகும் அவள் வீடுவரை போன கதை என்று ஒவ்வொரு இரவும் கதைலாகளாயின.

அவனது கூச்சநாச்சமற்ற வசனங்களும் விவரிப்புகளும் திருமலைக்கு ஆரம்பத்தில் கூச்சம் தந்தாலும் வெகு சீக்கிரத்தில் பழகிப்போயின.

திருமலையின் கனவுகளை மூர்த்தியின் விவரிப்புகளும் வர்ணனைகளும் நிறைத்தன. வைகாசி பொறந்தா கல்யாணந்தான் என்று அம்மாக்கிழவி ஏற்பாடுகளில் ஆழ்ந்திருந்தது திருமலையின் ஏக்கங்களைக் கொம்பு சீவியிருந்தன.

டிசம்பரின் கடைசி வாரம். அந்த வாரம் பொன் மூர்த்தி ஊரில்தான் இருந்தான். டிசம்பரின் தொடக்கத்திலிருந்தே குளிரின் வீச்சும் தாக்கமும் வழக்கத்தைவிடத் தீவிரங்கொண்டிருந்தன. சனிக்கிழமை இரவு. மேல்குந்தாவிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரு மலைக் கிராமத்தில் திருவிழா. அலுவலகத்தில் வேலை பார்க்கும் சந்தா அழைத்திருந்தான். மூர்த்தியுடன் போயிருந்தான். மலைச் சரிவுகளுக்கு நடுவே சோலைக் காடுகளையொட்டி அமைந்திருந்தது அந்தக் கிராமம். போதையும் ஆட்டமுமாய்ப் பந்தங்களின் ஒளியில் களைகட்டியிருந்தது. நரம்புகளை முறுக்கேற்றவைக்கும் தோல் கருவிகளின் உறுமல்கள், தாளங்கள். அதற்கேற்பக் குலுங்கியும் வளைந்தும் ஈர்க்கும் சிரிப்புடன் மங்கிய ஒளியில் கரிய தோல் மினுக்க இசைந்தாடிய பெண்களின் உடலசைவுகள் திருமலையைத் திணறடித்தன. அசட்டுத்தனமான தித்திப்புடன் மணலைக் கரைத்தது போன்று நாக்கை நெருடும் துவர்ப்புடன் பரிமாறப்பட்ட பானத்தை அவனால் பருக முடியவில்லை. குளிர்தாங்க இந்தப் பானத்தை அவசியம் குடிக்க வேண்டும் என்று சந்தா சொன்னதை அவன் காதில் வாங்கிக்கொள்ளும் மன நிலையில் இல்லை. கூந்தலை அள்ளிச் செருகிக் கொண்டையில் கொத்தாகச் சிவந்த மலர் சூடிய அவளது கண்கள் ஆட்டத்திற்கு நடுவில் இவனைத் தொட்டுத் தொட்டு மீண்டதை அவன் கண்டுகொண்டான். இருள் சூழ்ந்த காட்டில் பனி சிறு மழைபோல இறங்கி வந்தது. செறிந்த குளிர் உடலின் ஒவ்வொரு நரம்பிலும் இறங்கி ரத்தவோட்டத்தை உறையவைத்தது. மூர்த்தி பெண்களின் நடுவில் ஆடிக்கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த குவளை காலியாகுந்தோறும் சந்தா பானத்தால் நிறைத்துக்கொண்டேயிருந்தான். திருமலையை அவளது கண்களைத் தவிர யாரும் கண்டுகொள்ளவில்லை. மிதப்பின் உச்சியில் அந்தச் சிறு மைதானம் பொங்கி முரசின் தாளகதியில் துடித்துக்கிடந்தது.

ஒரு பெண்ணுடலை அதுவரையிலும் கண்டு கொள்ளாத துடிப்பும் வேட்கையுமாய்த் தவித்திருந்த திருமலையின் உடலில் குளிரின் விஷம் கூடிக்கொண்டேயிருந்தது. அணிந்திருந்த குளிர் உடுப்புகள் எதுவும் அந்த இரவின் தீவிரத்துக்கு முன்னால் செல்லுபடியாகவில்லை. உடலின் ஒவ்வொரு நரம்பும் மின்னலைச் சூல்கொண்டதுபோல் நெளிந்தாடிக்கொண்டிருந்த அவளை நெருங்கி அணைத்துக்கொண்டால்போதுமென இருந்தது. குளிரின் துடிப்பும் காமத்தின் உன்மத்தமும் அவன் உடலை நடுங்கடித்தன. முகமறியா ஒரு பயமோ தயக்கமோ அவனைக் கவ்வியிருந்த அந்த ஒரு கணத்தில் மார்பில் ஒரு மின்னல் வெட்டுப் பளீரென்று ஒரேயொரு கணம் அறைந்து மறைந்தது. திருமலை தன்னிலை இழந்து மண்ணில் சரிந்தான். அவள் ஓடிவந்து அவனைத் தாங்குவதை உணரும் தருணத்தில் எங்கும் இருள் சூழ்ந்தது.

மூன்றாம் நாள் மாலையில்தான் கண்விழித்தான். அருகில் யாருமிருக்கவில்லை. நீலத்திரைகள் நாலாப் பக்கமும் அசைந்திருக்க தனது உடல் தனக்கே சம்பந்த மற்றது போலக் கட்டிலில் கிடந்ததைக் கண்டான். இரண்டு கைகளிலும் செருகப்பட்டிருந்த குழாய் வழியாகத் திரவங்கள் சொட்டி இறங்கின. மார்பிலும் தலையிலுமாய் ஒட்டப்பட்டிருந்த குழாய்கள் அனைத்தும் எங்கோ இணைந்து எங்கோ பின்னியபடி ஓடின. மார்பில் அந்த வலியின் மிகச் சொற்பமான மிச்சம். பச்சை நிறத் துணியால் வாயை மூடிக் கட்டிக்கொண்டிருந்த ஒரு நர்ஸ் அவசரமாய் வந்தாள். அவன் கண்ரப்பைகளை நீக்கி உற்றுப் பார்த்தாள். நாடித் துடிப்பைச் சரிபார்த்தாள். அவனது கட்டில் விளிம்பிலிருந்த அட்டையில் எதையோ அவசரமாய் எழுதினாள். திருமலைக்கு அவளிடம் என்னென்னவோ கேட்க வேண்டும் போலிருந்தது. எதையுமே கேட்க வேண்டாம் போலவும் இருந்தது. கண்களை மூடிக்கொண்டான்.

ஒன்றரை மாதத்திற்குப் பிறகு அவனை வீட்டிற்கு அழைத்து வந்தபோது அவன் உடல் அவன் வசமிருக்கவில்லை. உச்சபட்சமான குளிரோ அல்லது தீவிரமான மாரடைப்போ அல்லது ஏதோவொன்று அவனது உடலியக்க நரம்புகளைச் செயலிழக்கச் செய்திருந்தன. மருத்துவத்தின் அற்புதங்களால் அவனது நரம்பு மண்டலத்தைப் புனரமைத்துத் தர முடியவில்லை.

n

கூடத்தில் கடிகாரம் ஒருமுறை அடித்து நின்றது. மணி ஒன்றாகிவிட்டதா அல்லது ஒன்றரையா? இந்த மணியோசையை யாரும் கேட்டிருப்பார்களா? எத்தனை நாளிரவு இப்படிக் கடிகாரத்தின் முள் அசைவுகளைக் கணித்துக்கிடந்திருக்கிறேன் நான். இப்போது அத்தனை பேரும் அசதியில் தூங்கிக்கிடக்கிறார்கள். இன்னும் இரண்டு பேருக்கு இந்த மணிச் சத்தம் கேட்டிருக்கும். அல்லது கேட்க முடியாத ஒரு தொலைவில் அவர்கள் கிடக்கவுங்கூடும். கூடிக்கிடந்தால் சத்தம் கேட்காமலிருக்குமா? பார்த்து விடலாம் என்று அவன் மனம் முறுக்கேறியது.

ஆவேசத்துடன் தொண்டையிலிருந்து குரல் எழுப்பினான். இம்முறை விலங்கின் உறுமலைப் போல் சீறிக்கொண்டு வெடித்தது. மூச்சு முட்டியது. மார்பில் பெருத்த வலி. கண்களை இறுக மூடிக்கொண்டான். ‘என்ன திருமலே…’ கூடத்தில் அம்மாக்கிழவியின் பதற்றமான குரல். ஒரு நொடிதான். அதன் பின் அவளது கூரிய கண்கள் மட்டும் அவனைத் துளைத்து நின்றன. உள்ளிருந்து கதவின் தாழ்ப்பாள் திறக்கும் ஓசை. திருமலை முகத்தை இயல்பாக வைத்துக்கொள்ள முயன்றான். இருக்கட்டும் என்று மீண்டும் ஒருமுறை இருமினான். ‘கணேசா… நீ போ… நா பாத்துக்கறேன்.’ அம்மாக்கிழவி எழுந்துவந்துவிட்டாள். அதற்குள் கணேசன் திண்ணை விளக்கைப் போட்டுக்கொண்டு அருகில் வந்திருந்தான்.

அவன் கைகள் திருமலையின் நெற்றியைத் தொட்டன. ‘என்ன செய்யுது அண்ணே? இங்க பாருங்க.’ மெதுவாக அவன் மார்பை நீவிக்கொடுத்தான். திருமலை தலையை ஆவேசமாக அசைத்தபடியே நெஞ்சில் கைவைத்துத் துடிப்பவன்போல் அசைந்தான். கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்த கணேசன் ‘நெஞ்சு வலிக்குதா… இருங்க’ என்று அவன் மார்பை நீவிக் கொடுத்தான். அம்மாக்கிழவி மீண்டும் கணேசனிடம் ‘ஒண்ணுமில்ல கணேசா… எதாச்சும் நெஞ்செரிச்சலா இருக்கும். செரியாப் போயிரும். நீ உள்ள போப்பா…’ சொன்னாள்.

‘சாயங்காலமெல்லா நல்லாத்தானே இருந்தான்… சாப்ட்டது எதாச்சும் ஒத்துக்கலயா?’ கணேசன் இன்னும் மார்பை நீவியபடியேதான் இருந்தான்.

அவன் தொடுகையின் வலி திருமலைக்குப் பெரும் அவஸ்தையாயிருந்தது. தினந்தினம் நூறுமுறை தொட்டிருக்கிறான். ஆனால் இன்று அவனது தொடுகையைத் திருமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு விலகல். வாஞ்சையின்மையை உணரமுடிந்தது. இதற்குள் அவளைத் தொட வாய்த்ததோ இல்லை என் கதையைத் துயரம் பொங்கச் சொல்லிக்கொண்டிருந்தானோ? திருமலைக்கு அந்த நேரத்திலும் உள்ளூரச் சிரிப்பு பொங்கியது. ஒருவேளை அப்படியிருந்தால் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த அவளுக்கு எப்படியிருந்திருக்கும். அப்படியொரு அசந்தர்ப்பத்தில் களையிழந்த அந்த அறையைப் பற்றிய கற்பனை திருமலைக்குப் பிடித்திருந்தது.

கணேசனின் கை விலகியது.

‘எதுக்கும் காலைலே டாக்டரை வரச் சொல்லிப் பாத்தர்லாம்… கொஞ்சம் சூடா டீ வெச்சுத் தர்லாமா?’

‘அதெல்லாம் வேண்டாண்டா… செரியாப்போகும். சாதாரண கபந்தான். காலைலே கசாயம் போட்டுக் குடுக்கலாம். இப்பப் போய்த் தூங்கு போ… காலைலே ஊருக்குப் போகணுமில்ல…’ அம்மா அவனை உள்ளே அனுப்புவதிலேயே குறியாயிருந்தாள்.

இப்படி லயம் கலைந்த பின்னும் உடல் கொந்தளித்திருக்குமா என்ன? அந்தக் குளிர் இரவில் ஒளியும் இருளும் கலந்தாடிய வெளியில், முரசின் தாள அதிர்வில் துடித்தாடிய அவளது கருத்த மேனியின் அசைவுகள் இந்த உடலை முறுக்கேற்றித் துடிக்கச் செய்திருக்கின்றன. அந்த இரவை நினைத்து நினைத்து உள்ளே அதிரும் வேட்கையும் அதற்குச் சற்றும் இசையாத உடலுமாய் எத்தனை இரவுகள் இந்தக் கட்டிலில் கிடந்து வெந்திருக்கிறேன். இரவின் அத்துவான வெளியில் ஆடும் அவளது உடலைக் காற்றில் புணர்ந்து வெடிக்கும் என் ஸ்கலிதங்களை யார் சூல்கொள்வார்? உடலற்றக் காமத்தின் ஊமை வலி உனக்குத் தெரிய நியாயமில்லை அம்மா. இந்த நொடியில் நான் செத்திருந்தாலும் பரவாயில்லை என்று நீ சபிப்பது எனக்குத் தெரியும். நானும் பல ராத்திரிகளில் அப்படியேதான் நொந்து கிடந்திருக்கிறேன். இப்படி எனக்கே பாரமாய்ப் போய்விட்ட உடம்பை வைத்துக்கொண்டு உயிர் வாழ்ந்து நான் என்ன சாதிக்கப்போகிறேன்?

கணேசனிடமிருந்து பதில் இல்லை. ஒரு நாளும் முகம் கோணியதில்லை அவன். எத்தனை வேலையிருந்தாலும் அசௌகரியங்களிருந்தாலும் அவனைப் பராமரிப்பதில் சிடுசிடுத்ததேயில்லை. அம்மாக்கிழவிக்குத் தள்ளாமையும் தாளாமையும் சேர்ந்து புலம்பச் செய்யும். ஆனால் கணேசனிடம் சிறு முணுமுணுப்பும் வந்ததில்லை. ஆனால் இன்று அவனுக்குள்ளும் அந்த எரிச்சலின் சிடுசிடுப்பின் சிறு விதை முளைத்திருக்கக்கூடும். இன்றைக்கு இல்லையென்றாலும் உள்ளே இருக்கும் அவளை நெருங்கத் தொடங்கிய பிறகு என் இருப்பும் வாளாமையும் அவனுக்குப் பெரும் நெருக்கடியைத் தரவே செய்யும். இந்த இரவின் என் அசௌகரியங்களை அவன் புரிந்துகொள்ளும் தருணத்தில் அது கழிவிரக்கமாகவோ மூர்க்கமாகவோ எப்படியும் போகலாம்.

இருவரும் பேசாமலிருப்பதை வெகுநேரம் பொறுத்துக்கொள்ள முடியாமல் மெதுவாகக் கண்களைத் திறந்தான். கணேசன் திண்ணையில் உட்கார்ந்து நட்சத்திரங்கள் சிதறிய வானத்தைப் பார்த்திருந்தான். அம்மாக்கிழவி இவன் கண் திறப்பதற்காகக் காத் திருந்தவள்போல அருகில் வந்தாள். கண்கள் அவனை ஊடுருவின. காதருகில் குனிந்து கிசுகிசுத்தாள்.

‘ஏண்டா திருமலே இப்பிடிப் பண்றே… நீ செய்யறது உனக்கே நல்லாருக்கா… பாவம்டா…’

திருமலை அவளை முறைத்தான்.

‘பாவந்தான்ம்மா… எதையாச்சும் அரச்சு ஊத்திரு… பாவந்தீந்துரும்…’

உதடுகள் கோண அவன் சொன்னதும் கிழவி அழத்தொடங்கினாள். இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்று புரியாத கணேசன் அவசரமாய் எழுந்து அருகில் வந்தான்.

‘என்னம்மா… என்னாச்சு? ஏண்ணா… என்ன பண்ணுது? ரொம்ப முடியலையா?’

திருமலை வெறுமனே தலையாட்டினான். கண்களில் அவனையறியாமல் கண்ணீர் வழிந்தது. இருவரும் அழுவதைப் பார்த்ததும் கணேசன் எழுந்து அருகில் வந்தான். முகம் இறுகியிருந்தது. அந்த இறுக்கம் அம்மாக்கிழவிக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவசரமாய்க் கண்களைத் துடைத்துக்கொண்டு திருமலையின் முகத்தையும் புடவைத் தலைப்பால் துடைத்துவிட்டாள்.

‘நான் சொன்னனே… இந்தக் கல்யாணங்காச்சியெல்லாம் வேண்டாம்னு சொன்னேன்… கேட்டியா நீ?’ வறண்ட குரலில் மெதுவாகச் சொன்னான். திருமலையின் மனம் நடுங்கித் துடித்தது. குமுறினான். கணேசனைக் கட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. நெஞ்சு விம்ம உதடுகள் துடிக்க அழத்தொடங்கினான்.

அம்மாக்கிழவி மெல்லத் திரும்பினாள். கண்ணீரைப் புறங்கையால் துடைத்தபடியே கணேசனைத் திரும்பிப் பார்த்தாள். விளக்கொளியின் நிழல் சரிந்த அவன் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. இருளின் ஆழத்துடனும் ஒளியின்மையின் சஞ்சலத்துடனும் கணேசனின் முகம் அசைவற்றிருந்தது. அம்மாக்கிழவியின் அடிவயிற்றிலிருந்து பெரும் பீதி திரண்டெழுந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *