பெயர்நீக்கச் சான்றிதழ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 7,295 
 

(1)

சம்பத் டீ குடிப்பதற்காகத் தன் வீட்டின் அருகிலிருந்த டீக்கடைக்குக் கிளம்பினான். அவன் தனது மரக்காலைப் பொருத்திக்கொண்டான். தொடைகளில் இணைக்கும் பெல்ட்டை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு நடந்தான். அவனுக்கு நடப்பதற்குச் சிறிது அயர்ச்சியாக இருந்தது. காலையில் எழுந்ததும் முதல் தடவையாக நடக்கும்போது இப்படித்தான் இருக்கும். பிறகு நடந்து ஒவ்வொரு இடமாகப் போய் வந்ததும் அயர்ச்சி நீங்கிவிடும். சம்பத்துக்கு நடந்த விபத்தில் அவனது வலது கால் எலும்பு முறிந்துவிட்டது. முழங்காலுக்குக் கீழே இருந்த எலும்பில் சீழ் வைத்துப் புறையோடிவிட்டதால் எலும்போடு பாதம்வரை நீக்கும் படியாகிவிட்டது. அன்றிலிருந்து அவன் மரக்கால் வைத்துத் தான் நடந்துகொண்டிருந்தான்.

சம்பத் டீக்கடைக்குச் சென்றபோது இன்னும் விடிந்திருக்கவில்லை. அவன் தினமும் அதிகாலை நேரத்தில் டீக்கடைக்கு வந்துவிடுவான். அதிகாலை நேரத்தில்தான் ரேஷன் கடைக்காரர்கள், அன்றைய தினத்தில் எந்தெந்த கடையில், என்னென்ன பொருட்கள் விநியோகிக்கிறார்கள் என்று ரகசியத்தை வெளியிடுவதுபோல் சொல்வார்கள். 12ஆம் நம்பர் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் ஊற்றுகிறார்கள் என்று இரவே அவனுக்குத் தகவல் தெரிந்துவிட்டது. நேற்றும் மண்ணெண்ணெய் ஊற்றுகிறார்கள் என்று ரேஷன் கடைக்குப் போய் இடம்போட்டு வைத்திருந்தான். அன்று ஜீனி போட்டார்கள். அதற்கு முன்தினம் கோதுமை போட்டார்கள். மண்ணெண்ணெய்ப் பேரல் வந்து மூன்று நாட்கள் ஸ்டோர் குடவுனில் இருந்தது. எதற்காக இப்படி அலையவிடுகிறார்கள் என்று தெரியவில்லை. மண்ணெண்ணெய் ஊற்றுவது ரகசியமாகவே இருந்தது. அந்த ரகசியம் நேற்றிரவு வெளியாகிவிட்டது.

அதிகாலையின் வானம் சிறிது சிறிதாக வெளிச்சம் பெறத்தொடங்கியது. செவ்வானம் டீக்கடையின் பின்பக்கமாகத் தனியாகத் தெரிந்தது. மேகங்கள் வெண்மையும் நீலமுமாகப் படர்ந்திருந்தன. காகங்கள் கரைந்தபடி பறந்துகொண்டிருந்தன. தெருவில் நடமாட்டமில்லை. பெண்களின் சத்தம் குழாயடியில் கேட்டது. குடங்கள் மோதுவதும் நீர் நிரம்பி வழியும் பானைகளின் அலம்பலுமாக நந்தவனத் தெரு இருந்தது. டீக்கடையில் அப்போது வாசல் தெளித்துக் கோலமிட்டிருந்தனர். கோலத்தைக் கடந்துசென்றான் சம்பத்.

சம்பத் டீ குடித¢துவிட்டு ரேஷன் கடைக்குப் போவதற்குள் நிறையப் போ¢ இடம்போட்டிருப்பார்கள் என வேகவேகமாக டீயைக் குடித்தான். தனக்கு இன்று நிறைய வேலையிருப்பதாக அவன் நினைத்துக்கொண்டான். மண்ணெண்ணெய் வாங்கியதும் ஜக்கமநாயக்கன்பட்டியில் இருக்கும் வடைக் கடைக்கு அதை விற்றுவிட்டு வர வேண்டுமென¢று அவன் மனைவி பூங்கொடி சொல்லியிருந்தாள். வடைக்கடைக்காரன் இரண்டு தினங்களுக்கு முன்பாகவே பணத்தைத் தந்துவிட்டுச் சென்றிருந் தான். சம்பத் அவன் தந்தப் பணத்தை வைத்துத்தான் அரிசி வாங்கியிருந்தான். அரிசி போட்ட தினத்தில் அவன் வெகுசீக்கிரத்தில் வந்து இடம்போட்டு வைத்துவிட் டான். இரண்டு தடவை எதற்காக நடக்க வேண்டுமென்று வீட்டுக்குப் போகாமல் ரேஷன் கடையின் வாசலிலேயே உட்கார்ந்துகொண் டான்.

சம்பத் ரேஷனில் வாங்கிய அரிசியைப் பூங்கொடியிடம் தந்துவிடுவான். அவள் இட்டி லிக்குப் போடவும் தோசைக்குப் போடவுமாகக் கொஞ்சம் அரிசியை எடுத்துவைத்துவிட்டு மீதியைத் தர்மத்துப்பட்டியிலிருந்து வரும் மாதாரிப்பெண்களுக்குப் படி பத்து ரூபாய் என்று விற்றுவிடுவாள். வெள்ளை அரிசியாக இருந்தால் தான் மாதாரி வீட்டுப்பெண்கள் வாங்குகிறார்கள். சிவப்பு அரிசியாக இருந்தாலோ கருப்பு அடித்திருந் தாலோ அவர்கள் வாங்கமாட்டார் கள். அப்படியான அரிசியைச் சேர்த்துவைத்து மூடைக்கணக்கில் கேரளாவுக்கு ஜீப்பில் அனுப்பிவிடு வார்கள். பூங்கொடியின் அப்பா வேலுச்சாமி மூலமாகப் புரோக்கர் ஒருவர் அவர்களது வீட்டுக்கு வருவார். அவர் மூலமாகத்தான் கேராளவிற்கு அரிசியைக் கொண்டு போவார்கள். சம்பத் அவர்களுடன் சென்றுவருவதற்கு எவ்வளவோ பிரயாசைப்பட்டிருக்கிறான். ஆனால் பூங்கொடியின் அப்பா அவனைப் போகக் கூடாதென்று சொல்லிவிடு வார். அவருக்கு மூடைக்கு இவ் வளவு ரூபாய் கமிஷன் என்று தனியாகத் தருவார்கள். சம்பத் அவர்களுடன் சென்று இடத்தைத் தெரிந்துவைத்துக்கொண்டால் அவனாகவே சென்று வரத் தொடங்கிவிடுவான். பிறகு தனக்குக் கிடைக்க வேண்டிய கமிஷன் கிடைக்காமலேயே போய்விடுமே என்று அவனைத் தடுத்துவைத்தி ருந்தார்.

விடிவதற்கு முன்பாகவே ரேஷன் கடை வாசலில் ஏராளமான கற்கள் வரிசையாக இருந்தன. வயதான ஒருவர் பீடி புகைத்தபடி கல்லை யெடுத்துக் கூப்பன் தரும் இடத்தில் வரிசையில் வைத்தார். அவர் வைத் திருந்த கல்லுக்கு அடுத்தபடியாகச் சம்பத் ஒரு கல்லை எடுத்துவைத் தான். வயதானவர் சிரித்தபடியே “இன்னைக்குக் கூட்டமா இருக்கும். போன மாசமும் பாதி பேருக்கு மண்ணெண்ணெய் ஊத்தலை” என¢றா£¢. சம்பத் ஒன்றும் பேசாமல் கல்லை வைத்துவிட்டு வீட்டுக்கு வந்தான். இப்போதே வரிசையில் இவ்வளவு கல்லிருக்கிறது. இன்னும் நேரமாக நேரமாக எவ்வளவு பேர் வரப்போகிறா£¢களோ என்று அவசரமாகப் பல் விளக்கினான். ரேஷன் கடைக்குப் போக வேண் டும் தாமதமாகிவிட்டது என்று பூங்கொடியிடம் சொன்னான். அவள் அமைதியாக ஸ்டவ்வைப் பற்றவைத்துப் பாத்திரத்தைத் தூக்கி மேலே வைத்தாள். சம்பத் பல்லை மட்டும¢ விளக்கி விட்டு, வேறு சட் டையைப் போட்டுக்கொண்டான். மண்ணெண்ணெய் வாங்குவதற் கென வைத்திருந்த கேனை எடுத்து சைக்கிள் பின் கேரியரில் வைத்துக் கொண்டான். சைக்கிளை உருட் டியபடி வீட்டை விட்டு வெளியேறி னான். அவன் ஒரு காலை இழுத்து இழுத்து நடப்பதைப் பூங்கொடி பார்த்தபடி சமையலறையில் உட்கார்ந்திருந்தாள்.

சம்பத்திடம் அவனுடைய பெய ரிலிருந்த ரேஷன் கா£¢டும் அவனு டைய அப்பாவின் பெயரிலிருந்த கார்டுமாக இரண்டு கார்டுகள் இருந்தன. மூன்று, நான்கு மாதங் களுக்கு முன்பாக அவன் தன் அப¢பாவின் பெயரிலிருந்த ரேஷன் கார்டை அவர் இல்லாத நேரத்தில் போய் எடுத்துக்கொண்டு வந்துவிட் டான். அவனது அம்மா எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை. சண்டைபோட்டு வாங்கிக்கொண்டு வந்தான். காத்தமுத்து நேராகவே வந்துவிட்டார். டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு ஆளைவிட்டுக் கூப்பிட்டனுப்பினார். சம்பத் வர வில்லை. ரோட்டில் நின்று சத்தம் போட்டுவிட்டுப் போய்விட்டார். பிறகு சம்பத்தின் அக்கா தங்கம் வந்து அவனைச் சமாதானப் படுத்திப் பார்த்தாள். அவன் கேட்பதாக இல்லை. யாரும் வீட்டுக்குள் வரக் கூடாது என்று சொல்லிக் காத்தமுத்துவின் பெயரி லிருந்த ரேஷன் கார்டை ஒளித்து வைத்துக்கொண்டான்.

அவனடைய அம்மா இரண்டு முறை அவனில்லாதபோது வீட்டுக்கு வந்து பூங்கொடியிடம் சொல்லி அழுதுவிட்டுச்சென்றாள். பூங்கொடி அவளுக்குச் சாப்பாடு போட்டு அனுப்பினாள். அவள¢ போகும் போது ரேஷன் கார்டைக் கேட்டாள். பூங்கொடி தனக்குத் தெரி யாது என்றும் மாமா வந்த பிறகு கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாள். சம்பத்தின் அம்மா அழுதபடி “நாங்க அதை வச்சுத்தான் கஞ்சி குடிச்சுட்டிருந் தோம். அதையும் அவன் புடுங்கி கிட்டானே” என்று சொன்னாள். பூங்கொடி ஒன்றும் பேசவில்லை. அவளுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. ஏன் தன் கணவன் இப் படி அவர்களிடம் போய் ரேஷன் கார்டைப் பிடுங்கிக் கொண்டு வந் தான் என்று அவனிடம் கோபித்துச் சண்டைபோட்டிருக்கிறாள். பூங்கொடி யாருக்கும் ஆதரவாகப் பேசுவதில்லை. ஏதாவது சண்டை வந்தால் யாருக்கும் ஆதரவாகப் பேசாதே என்று அவளது அம்மா தங்கம் சொல்லியிருக்கிறாள்.

சம்பத் ரேஷன் கடைக்குச் சென்றபோது காத்தமுத்து வரிசை யில் நின்றிருப்பதைப் பார்த்தான். காத்தமுத்துவிற்கு எப்படியாவது ரேஷன் கார்டு கிடைத்துவிடும். அவரும் அன்று 12ஆம் நம்பர் கடைக்கு வந்திருந்தார். சம்பத் கீழே கிடந்த செங்கல்லின் மேல் ஏறிக் கூட்டத்தைப் பார்த்தான். அவ னுக்கு முன்பாக நின்றிருந்தவர்கள் ரேஷன் கார்டுகளை கையில் இரண் டாகப் பிரித்து வைத்தபடி விசிறிக் கொண்டிருந்தனர். ஆண்கள் நின்றி ருந்த பக்கம் வெயில் இல்லை. எதிர்வரிசையில் இருந்த பெண்கள் பக்கம்தான் வெயில் விழுந்திருந்தது. கூட்டமாக நின்றிருந்த பெண்கள் தங்களது முந்தானையில் விசிறிக்கொண்டு, காலை வெயிலில் நிற்க முடியாமல் நின்றிருந்தனர். ஆண்களின் வரிசையில் ஸ்கூல் யூனிஃ பார்ம்மோடு நின்றிருந்த பையன் ஒருவன் மண்ணெண்ணெய் கேனைத் தட்டிப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தான். கூட்டத்திலிருந்தவர்கள் பில் போடுபவரை அசிங்கமாகத் திட்டினார்கள். கூட்டத்தில் யார் என்ன பேசுகிறார்கள் என்று யாருக்கும் கேட்கவில்லை.

ஸ்கூல் பையனுக்குப் பின்னால் நின்றிருந்த வயதானவர் பீடியைப் புகைத்தபடி காறிக்காறித் துப்பிக்கொண்டிருந்தார். 12ஆம் நம்பர் ரேஷன் கடை இன்னமும் திறக்கவில்லை. பில் போடுபவர்தான் முதலில் வந்து கடையைத் திறப்பார். மண்ணெண்ணெய் ஊற்றும் தினத்தில், ஏதேனும¢ சண்டை வந்துவிடும¢ என்பதற்காகவே கூடுதலாக இரண்டு ஆட்கள் வந்துவிடுவார்கள். கூட்டமாக இருந்தால் ஒரு ஆளுக்கு ஒரு கார்டுதான் பதிவார்கள். பிறகு இன்னொரு முறை வரிசையில் நிற்க வேண்டும். சம்பத்திடம் இரண்டு கார்டுகள் இருந்தன. அவன் எப்படியாவது ஒரேதடவையில் கூப்பனை வாங்கிக்கொண்டு வந்துவிட வேண்டுமென்று நினைத்திருந்தான். பில் போடுபவர் சைக்கிளில் வந்து கடையின் முன்பாக நின்றார். கூட்டம் விலகி அவருக்கு வழிவிட்டு நகர்ந்து நின்றது. அவருக்குப் பின்பாக மண்ணெண்ணெய் ஊற்றுபவர் வந்தார். வரிசையில் நின்றிருந்தவர்கள் சத்தம் போட்டபடி ஒருவரையொருவர் முட்டிக்கொண்டு நெருக்கியபடி நின்றனர். தரையில் உட்கார்ந்திருந்தவர்கள் பலரும் தங்கள் மேல் கூட்டம் விழுந்துவிடாதபடி எழுந்து ஒதுங்கி நின்றுகொண்டனர்.

சம்பத்துக்கு எரிச்சலாக இருந்தது. அவனுக்கு முன்னால் நின்றிருந்தவர்கள் யாரும் நகரவேயில்லை. காத்தமுத்து அவனுக்கு முன்பாகவே கேனை வைத்துக்கொண்டு வரிசையில் நின்றிருந்தார். அவரிடம் இரண்டு கார்டுகள் இருந்தன. சம்பத்தின் சகோதரி தங்கத்தின் கார்டை அவர்தான் வாங்கிவைத்திருந்தார். அவருக்கு முன்பே, சம்பத் கேட்டதற்கு, அவள் ஒரு வருடம் அப்பாவும் ஒரு வருடம் நீயும் மாறிமாறி வாங்கிக்கொள்ளுங்கள் எனச் சொல்லியிருந்தாள். சம்பத் அவர் நின்றிருந்த இடத்திற்கும் தனக்கும் இடையே எத்தனை ஆட்கள் நின்றிருக்கிறார்களென்று எண்ணிப் பார்த்தான். நாற்பதுக்கும் அதிக மானவர்கள் நின்றிருந்தனர். அவனுக்குக் காத்தமுத்துவின் மேல் கோபம் வந்தது. இந்த மனுஷன் எந்த நேரத்தில் எழுந்து இடம் போட்டுப் போயிருந்தானோ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டான். பூட்டியிருந்த கடையைத் திறந்து மேஜையை எடுத்துவைத்தார்கள். கடையைத் திறந்ததும் நிழலில் ஒதுங்கிநின்றவர்கள் வரிசையில் வந்து நின்றுகொண்டார்கள். பில் போடுபவர் யாருக்கு வந்த விதியோ என்று மெதுவாக பில் புக்கை எடுத்து மேஜையில் ‘டொப்’பென்று போட்டார். தனது பாக்கெட்டிலிருந்த பேனாவை எடுத்துக் காதில் சொருகிக்கொண்டார்.

பெண்கள் வரிசையில் நின்றிருந்தவர்கள், “சீக்கிரமாகப் பில்லைப் போடுங்கண்ணே” எனச் சத்தம¢ போட்டார்கள். பில் போடுபவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. தலையைக் குனிந்தபடி செவிடன் போல் உட்கார்ந்திருந்தார். முதல் பில்லைப் போட்டதும் அவர் சலிப்புடன் ரூபாயை வாங்கிப் பெட்டியில் போட்டபடி, “காலங்காத்தலே நூறு ரூபாயைத் தந்தா எப்படி?” என்று ரூபாய் தந்தவரைத் திட்டினார். முதல் பில் வாங்கியவர் பரிதாபமாக, அடுத்த நபருக்கு வழி விட்டு ஒதுங்கி நின்றுகொண்டார். வரிசை கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்கியது. பெண்கள் பக்கமாக நின்றிருந்தவர்களில் சிலா¢ வரிசையை விட்டு விலகி நின்று சண்டையிடத் தொடங்கினார்கள். கூட்டத்தை விட்டு விலகியவர்கள் திரும்பவும் வரிசையில் சேர்ந்துகொள்ள முண்டிக்கொண்டு நின்றனர். ஒருவரையொருவர் தள்ளி விட்டு வரிசையைக் குலைத்தபடி கீழே விழுந்தனர். பில் போடுபவர் பெட்டியை மூடிவிட்டு எழுந்து நின்றுகொண்டார். பிறகு தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்த புகையிலைப் பொட்டலத்தை எடுத்து உள்ளங்கையில் தட்டிக்கொண்டார். கீழ் உதட்டின் அடியில் ஒதுக்கிக்கொண்டவர் கைகளைத் தட்டி விட்டபடி நாற்காலியில் அமா¢ந்துகொண்டார். கூட்டத்திலிருந்த பெண்ணின் ஜடையைப் பின்னாலிருந்தவள் இழுத்துவிட்டு அவளை நெருக்கிக்கொண்டு முன்னேறிச் சென்றாள். அப்பெண் திரும்பி நின்று “எந்தத் தேவடியா முண்டேடீ என் ஜடையை இழுத்தது” என்று திட்டினாள். கூட்டம் ஒழுங்கற்றும் நேரற்றும் முண்டிக்கொண்டிருந்தது. வரிசையாக நின்றால்தான் பில் போடுவேன் என்று பில் போடுபவர் சொன்னதை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. கடைக்குள் நின்றிருந்தவரை அழைத்துக்கொண்டு அவர் வரிசைக்கு வந்தார். ஒவ்வொரு பொம்பளையையும் கையைப் பிடித்து இழுத்து, “வரிசைக்குப் போ, வரிசையில நில்லு” என்று திட்டினார். பெண்கள் யாரும் வரிசைக்கு வரவில்லை. பில் போடுபவர் கோபமாக இரண்டு பெண்களையும் சேலையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டார். கீழே விழுந்த பெண்கள் எழுந்து வந்து அவரோடு சண்டையிட்டார்கள். பில் போடுபவர், “போய்த்தொலைங்க. எனக்கென்ன” என்று பில் போட ஆரம்பித்தார்.

காத்தமுத்து பில்லை வாங்கிக் கொண்டு தனது முழுக்கைச் சட்டையில் மடித்துவைத்துகொண்டார். அவரிடம் அன்று இரண்டு கார்டுகள் இருந்தன. முதலில் பதிந்த கார்டை எடுத்துவைத்துக்கொண்டு மற்றொரு கார்டை பில் போடுபவரிடம் நீட்டினார். பில் போடுபவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அண்ணே நீங்களா” என்று இரண்டாவது கார்டைப் பதிந்துகொண்டே காத்த முத்துவிடம், “உங்க தெருவுகாரங்கே சாக்குமூடையைத் திருடிட்டுப் போயிருக்காங்க. பேரலை நகட்டி இடம் மாற்றி வைச்சுட்டுப் போயிருக்காங்கே. நீங்க கண்டிச்சு வைக்கக் கூடாதா” என்று சொன்னார். காத்தமுத்து அவரிடம் “பரமு வீட்டுப் பையனும் வரனா” என்று கேட்டார். பில் போடுபவர் “ஆமாம்” என்று சொன்னார். “சரி என்னான்னு விசாரிச்சு சொல்லுறேன்” என்று மண்ணெண்ணெய் ஊற்றும் இடத்திற்குச் சென்றார்.

காத்தமுத்துவுக்குப் பிறகு வரிசையில் நின்றிருந்தவரிடம் இரண்டு கார்டுகள் இருந்தன. இரண்டாவது கார்டைத¢ தந்தபோது ரேஷன் கடைக்காரர் “ஒருத்தருக்கு ஒரு கா£¢டுதான். போய்த் திரும்பவும் வரிசையில் நின்று இன்னொரு கார்டைப் பதியிங்க” என¢றார். வரிசையில் நின்றிந்தவர் சத்தமாகக் காத்தமுத்துவைக் கை நீட்டி, “அந்த ஆளுக்கு மட்டும¢ இரண்டு கார்டு பதிஞ்சீங்க” என்றார். பில் போடுபவர், “யாருக்குப் பதிஞ்சோம். அதெல்லாம் யாருக்கும் பதியலை” என்று புகையிலை சாறு வடியக் கத்தினார். தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து உதட்டைத் துடைத்தபடியே, “தள்ளிப்போய்யா அடுத்த ஆள் வரணும்” என்று சொல்லியும் அவர் நகரவில்லை. வரிசையில் நின்றிருந்தவர்களில் இரண்டு மூன்று பேர்கள் சத்தம் போட்டதும் அவர் ஒதுங்கி வரிசைக்கு வந்தார். வரிசையில் நிற்கும்போது, காத்த முத்துவையும் பில் போடுபவரையும் அசிங்கமாகத் திட்டிக்கொண்டே நின்றார்.

காத்தமுத்து செல்போனில் யாருடனோ பேசினார். சிறிதுநேரம் கழித்துப் புதூர்க்காரன் சைக்கிளில் வந்தான். காத்தமுத்துவிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை வாங்கிக்கொண்டு ரூபாயைத் தந்தான். புதூர்க்காரனைச் சம்பத் பார்த்தபடி இருந்தான். புதூர்க்காரன் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது சம்பத் தனக்கு முன்னாலும் பின்னாலும் நின்றிருந்தவர்களிடம் “ஒன்னுக்கு அவசரமா வருதுண்ணே இருந்துட்டு வந்திர்றேன். இடத்தைப் பார்த்துக்குங்க” என்று சொல்லிவிட்டு வந்தான். புதூர்க்காரன் பின்னால் ஓடிப்போய்க் கைதட்டி அழைத்தான். அவன் நின்றதும் “என்ன மாப்பிள்ளே, என்னையே நீ மறந்துட்டயா”Êஎன்று அவன் தோள் மேல் கைபோட்டபடி பேசினான். அவனும் “சம்பத்தா” என்று சைக்கிளை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி நின்றான். பிறகு அவர்கள் இருவரும் பீடியைப் பற்றவைத்துக்கொண்டார்கள். புதூர்க்காரன், “அடுத்தமுறை உன்னிடம் மண்ணெண்ணெய் வாங்கிக்கிறேன் சம்பத்து. மாமாக்கிட்டே இரண்டு வாரத்துக்கு முன்கூட்டியே சொல்லிட்டேன்” என்று சொல்லிவிட்டு சைக்கிளை ஓட்டிக் கொண்டுச் சென்றான். சம்பத் திரும்பவும் வரிசைக்கு வந்து நின்று கொண்டான்.

(2)

சம்பத்திடம் டீக்கடைக்காரர், அவனைத் தேடி முருகேசன் வந்து விட்டுச் சென்றதாகச் சொன்னார். முருகேசன் அண்ணன் தன்னை எதற்காகத் தேடுகிறார் என்று புரியாதவனாகக் கடைக்குள் போய் உட்கார்ந்துகொண்டான். அவன் கேட்காமலேயே கடைக்காரர் டீ போட்டுத் தந்தார். அவனுக்குத் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பாக அமர்ந்து டீ குடித்தால் தான், டீ குடித்தது போலிருக்கும். அதற்கேற்றதுபோல் அங்கிருந்த ஸ்டூலை எடுத்துப்போட்டு உட்கார்ந்துகொண்டான். கடையில் சூடாகக் கீரை வடை சுட்டுத் தட்டில் போட்டார்கள். சம்பத் ஒரு வடையை எடுத்து வைத்துக்கொண்டான். அவனிடம் ஐந்து ரூபாய் இருந்தது. மண்ணெண்ணெய்யை ஜக்கமநாயக்கன்பட்டி வடைக் கடைக்காரனுக்குத் தந்துவிட்டு வந்தபோது கடைக்காரன் அவனுக்குப் பத்துரூபாய் தந்திருந்தார். அதை அவன் பூங்கொடியிடம் சொல்லவில்லை. பத்துரூபாயில் நேற்றுக் காலையில் ஒரு டீயும் வடையும் வாங்கிச் சாப்பிட்டான். கீரைவடை சம்பத்துக்குப் பிடிக்கும். வடையை அவன் வீட்டுக்கு வாங்கிக்கொண்டு போய் ரசம் சோற்றிற்கு வைத்துச் சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறான். இரண்டு வடை வாங்கிக்கொண்டு செல்வதற்குக்கூடத் தன்னிடம் காசு மிஞ்சுவதில்லை என்று வருந்தியவனாக டீயைக் குடித்தான்.

அவனுக்குப் பூங்கொடியின் மேல் ஆத்திரமாக வந்தது. அவள் தங்கத்தின் பேச்சைக் கேட்டுத் தன் செலவிற்குப் பணம் எதுவும் தராமல் இருக்கிறாளே என்று இரண்டு தடவை சண்டைபோட்டிருக்கிறான். அவள் மசியவில்லை. பூங்கொடி ரேஷன் கடைக்குப் போகும்போது கூப்பன் வாங்கத் தேவையான பணத்தை மட்டும் தந்துவிடுவாள். மண்ணெண்ணெய்யும் அரிசியும் விற்ற லாபத்தைத் தனியாகச் சேர்த்துவைத்துக்கொண்டிருந்தாள். பூங்கொடிக்கு எப்படியாவது ஒத்திக்கு வீடு பார்த்துக் குடியேற வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது.

முருகேசன் சைக்கிளில் வந்து டீக்கடையின் முன்பாக நின்றார். அவர் சம்பத்தைப் பார்த்ததும¢ கையை ஆட்டிக் கடையை விட்டு வெளியே வரும்படி சைகை காட்டினார். Êசம்பத் கையில் டீ தம்ளரை வைத்தபடி வந்தான். முருகேசன் அவனிடம் ரகசியம்போல் “ரேஷன் கார்டிலே பேரு சேர்க்கணும். தாசில்தார் ஆபீஸிலே என்னை அலையவிடுறாங்க. உனக்குத் தெரிஞ்சவங்கள வைச்சு ஏற்பாடு பண்ணித்தர்றயா” என¢று கேட்டார். சம்பத் “சரி” என்றான். மீதி டீயைக் குடித்துவிட்டு அவரது சைக்கிளின் பின்னால் ஏறிக்கொண்டான். முருகேசன், தாசில்தார் ஆபிஸ் பக்கமாக சைக்கிளை ஓட்டிக்கொண்டு சென்றார்.

சம்பத்திற்குத் தாலுகா ஆபிஸில் நிறைய நபர்கள் பழக்கமானவர்களாக இருந்தார்கள். புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பம் பெறுவதும் புதிய கார்டு தருவதும் வட்டவழங்கல் அலுவலகத்தில் தான். சம்பத் தனக்குத் தெரிந்தவர்கள் பலருக்கும் புதிய ரேஷன் கார்டுகள் வாங்கித்தருவதும் வீடு மாற்றிச் செல்பவர்களுக்கு விலாச மாற்றமும் கடை நம்பரும் மாற்றித் தருவதுமான வேலைகளைச் செய்து தந்திருக்கிறான். அவனுக்கு, காஞ்சிதான் எல்லா வேலைகளையும் செய்துதந்தார். காஞ்சியிடம் தனக்கு இன்னொரு கார்டு வேண்டும¢ என்றும் அதற்குப் பணம் தந்துவிடுவதாகவும் சொல்லிவைத்திருந்தான். அவரும் சரி ஏதாவது சந்தர்ப்பத்தில் பார்க்கலாமென்று சொன்னார். சம்பத் தனக்குப் பழக்கமாக இருப்பவர்களை மட்டும்தான் தாலுகா ஆபீஸுக்கு அழைத்துச்செல்வான். யாராவது லஞ்சம் கொடுத்துவிட்டு எங்காவது பெட்டிஷன் போட்டு விடுவார்கள் என்று தெரியாதவர்கள் யாரையும் அழைத்துச் செல்ல மாட்டான்.

தாலுகா ஆபீஸ் கட்டடத்தில் வட்டவழங்கல் அலுவலகம் மூன்றாவது மாடியில் இருந்தது. முதல் மாடியில் பட்டா வழங்கும் ஆபீஸ் இருந்தது. கிராம நிர்வாக அதிகாரியும் தலையாரியும் பேரேடுகளையும் புத்தகங்களையும் வைத்துக்கொண்டு வாசலில் நின்றிருந்தனர். சம்பத், வி.ஏ.ஓவைப் பார்த்து வணக்கம் சொன்னான். அவரும் பதிலுக்குத் தலையை மட்டும் ஆட்டிவிட்டுத் திரும்பிக்கொண்டார். அவர்கள் வட்ட வழங்கல் கட்டடத்திற்குச் சென்றார்கள். சம்பத்தால் காலை எடுத்து வைத்து முருகேசனைப் போல் வேகமாக நடக்க முடியவில்லை. மெதுவாகத்தான் நடக்க முடிந்தது. காலை மடக்கிப் படியில் ஏறும்போது தொடையில் கட்டியிருந்த பெல்ட் அழுத்தியது. புது பெல்ட் வேறு. அழுத்திப் புண்ணாகி விடும் என்று மெதுவாகப் படியேறினான்.

முருகேசனும் சம்பத்தும் வட்ட வழங்கல் அலுவலகத்திற்குள் போனபோது, காஞ்சி இன்னமும் வந்திருக்கவில்லை. அங்கிருந்த பெண்ணிடம் அவரை விசாரித்தார்கள். காஞ்சி இன்று விடுமுறை என்றும் வீட்டுக்குப் போனால் பார்க்கலாம் என்றும் சொன்னாள். அவா¢கள் இருவரும் வீட்டுக்குச் செல்லலாமென மாடிப்படியில் இறங்கினார்கள். அவர்களுக்கு எதிரே வட்டவழங்கல் அதிகாரி, ‘சங்கரன் ஸார்’ படியேறிக்கொண்டிருந்தார். Êஅவரைப் பார்த்ததும¢ அவர்கள் இருவரும் நின்றனர். அவர்களைத் தாண்டி வேகமாகச் சங்கரன் படியேறினார். சம்பத் அவருக்குப் பின்னால் நடந்துசென்றான். கூடவே முருகேசனும் நடந்துசென்றார்.

முருகேசன் இரண்டு தடவை சங்கரன் ஸாருடன் பேசியிருக்கிறார். இரண்டு தடவையும் ரேஷன் கார்டில் புதிய பெயர்களைப் பதிய முடியாது என்று அவர் சொல்லி அனுப்பிவிட்டார். முருகேசன் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் அவர் முடியாது என்று சொல்லிவிட்டார். ரூபாய் தருவதாகச் சொல்லிய பிறகுதான் அவர் இரண்டு தினங்களுக்குப் பிறகு வரச்சொன்னார். இரண்டு தினங்களுக்குப் பிறகு அவரைப் பார்த்தபோது அவர் குழந்தையின் பிறப்புச் சான்றிதழைப் பார்த்துவிட்டு, “ஏன் பிள்ளை பெறந்து நாலுவருஷம் கழிச்சுப் பதியிறீங்க. இத்தனை நாள்வரை என்ன செஞ்சுட்டு இருந்தீங்க” என்று கோபமாகக் கேட்டார். முருகேசன் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார். பிறகு அவர் காஞ்சியை அழைத்துத் தன்னிடமிருந்த ஜெராக்ஸ் காகிதங்களைத் தந்தார். காஞ்சி அந்தக் காகிதங்களைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கியபடி முருகேசனின் மனைவியின் பெயரைச் சோர்க்க முடியாது என்று சொன்னார். அவர் மனைவியின் பெயரைச் சோ¢க்க வேண்டுமென்றால் ‘பெயர்நீக்கச் சான்றிதழ்’ வாங்கிவர வேண்டும் என்று சொன்னார்.

முருகேசனின் மனைவி பிறந்தது உத்தமபாளையத்திற்குப் பக்கத்திலிருக்கும் கிராமம். உ.பாளையத்திலுள்ள தாலுகா ஆபீஸுக்குப் போய்ப் பெயர்நீக்கச் சான்றிதழ் வாங்கிவர வேண்டும். முருகேசன், தான் அங்குச் செல்ல முடியாது, வேண்டுமென்றால் நூறு இருநூறு பணம் சேர்த்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னதும் சங்கரன் ஸார், கோபமானவராக ரேஷன் கார்டை முருகேசனின் கையில் தந்துவிட்டு, “நாங்கள் என்ன லஞ்சம் வாங்கிட்டு வேலை செய்யுறவங்கன்னு நினைக்கிறீங்களா. பெயர்நீக்கச் சான்றிதழ் வாங்கிட்டு வாங்க. ஒரே நாளிலே உங்க ரேஷன் கார்டிலே பேரைப் பதிஞ்சு வாங்கிட்டுப் போயிட்டேயிருங்க” என்று சத்தமாகப் பேசினார். முருகேசனால் ஒன்றும் பேச முடியவில்லை. ரூபாய் தருகிறேன் என்று சொன்னதால்தான், இரண்டு நாட்கள் கழித்து வரச் சொன்னார். இப்போது லஞ்சம் வாங்கமாட்டேன் என¢று சொல்லுகிறாரே என்று முருகேசன் திரும்பி வந்துவிட்டார். அதற்குப் பிறகுதான் அவருக்கு சம்பத்தின் ஞாபகம் வந்தது. சம்பத்துக்கும் தாலுகா ஆபீஸுக்கும் இருந்த பழக்கம் முருகேசனுக்குத் தெரியும்.

இருவரும் சங்கரன் ஸார் அவரது சீட்டில் அமா¢ந்துகொள்ளும் வரை அறையின் வாசலில் காத்திருந்தனர். அவர் அமர்ந்ததும் சம்பத் முதலில் அறைக்குள் நுழைந்தான். வணக்கம் சொல்லி அவர் முன்னிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டான். சங்கரன் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு “என்ன சம்பத்து ஆளையே இந்தப் பக்கமாகப் பார்க்க முடியலை. எங்க வெளியூருக்குப் போயிட்டாப்பலையா” என்று விசாரித்தார். சம்பத்துக்குச் சந்தோஷமாக இருந்தது. சிரித்த படியே “நாந்தான் இந்தப் பக்கமாக வந்துட்டுப் போயிட்டு இருக்கேன். நீங்கதான் என்னையப் பார்க்கமாட்டேங்கிறேங்க. என்னைய மாதிரி ஆளுகள்ளெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியுமா ஸார்” என்று சிரித்தபடியே பேசினான். சங்கரன் ஸார் சிரித்தபடியே “ஆமாப்பா உங்களுக்கெல்லாம் காரியம் ஆகனுமின்னா தானே என் ஞாபகம் வரும். சரி யார் பேரைச் சேர்க்கணும், யார் பேரை எடுக்கணும்.” என்று கேட்டார். சம்பத் தனது பனியனுக்குள் மறைத்து வைத்திருந்த காகிதங்களை எடுத்துத் தந்தான். சங்கரன் பார்த்துவிட்டு “இதா, இவன் யாருப்பா பெரிய இவனா. வசதியானவனா. காசு தர்றேன், காசு தர்றேன்னு சொல்லிட்டேயிருக்கான்” என்றார். சம்பத் முருகேசனை விட்டுக் கொடுக்காமல் “ஏதோ அவசரத்தில் பேசிட்டாரு ஸார். அதைப் போய் நீங்க பெரிசாப் பேசுறீங்க” என்று சமாதானமாகப் பேசினான். சங்கரன் ஸார், “ஆள் வந்திருக்கா” என்று கேட்டார். அவனும் “ஆமாம்” என்றான். சம்பத் வெளியே நின்றிருந்த முருகேசனை ஜாடையில் அழைத்தான்.

முருகேசன் அறைக்குள் வந்ததும் சங்கரன் அவனைத் தெரியாதது போல இருந்தார். சம்பத்துக்கு இதெல்லாம் தெரியும். அவனும் இதைப் போலப் பலரைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறான். சம்பத் சங்கரன் ஸாரைப் பார்க்காமல் முருகேசனைப் பார்த்தபடி “ஏங¢க தேவையில்லாமல் பேசி ஸாரைத் தொந்தரவு செய்றீங்க. ஸார் நம்பளுக்குச் செய்யாமல் வேற யாருக்குச் செய்யப்போறாரு.” என்று டி.எஸ¢.ஓவைத் தூக்கிவைத்துப் பேசினான். Êசங்கரன் ஸார் வேறு பக்கமாகப் பார்த்துக்கொண்டே உதட்டளவில் சிரித்தபடி எழுந்துகொண்டார். சம்பத் அவரது முகத்தைப் பார்த்துவிட்டான். இனி அவரிடம் சிரித்துப் பேசியே வேலையை முடித்துக்கொள்ளலாம் என்று சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான். சங்கரன் ஸார் மூன்றாவது டேபிளிலிருந்த சில கோப்புகளை எடுத்துக்கொண்டு வந்தார். “இன்னைக்கு இந்தப் பைல்ஸ் கலெக்டா¢ ஆபீஸுக்குப் போய்ச் சேரணும். நேத்தே அனுப்ப வேண்டியது. இன்னும் அனுப்ப முடியலை. இந்தக் காஞ்சி வேற லீவு போட்டுட்டுப் போயிட்டாரு.” என்று சொன்னதும் சம்பத் முருகேசனைப் பார்த்து, “ஸாருக்கு டீ வாங்கிட்டு வரலாம் வாங்க” என்று எழுந்தான். சங்கரன் “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். விசயத்தைச் சொல்லுங்க” என்றார். சம்பத் முதலிலிருந்து சொல்ல ஆரம்பித்தான்.

சங்கரன் கவனமாகக் கேட்டுக்கொண்டேயிருந்தவர், “பெயர்நீக்கச் சான்றிதழ் வாங்கிட்டு வந்தீங்களா” என்று கேட்டார். முருகேசன், தன்னுடன் சம்பத் இருக்கும் தைரியத்தில் “ஸார் நான் உத்தமபாளையம் தாலுகா ஆபீஸுக்குப் போய்க் கேட்டேன். அவங்க தரமாட் டேன்னு சொல்லிட்டாங்க ஸார்” என்று பொய் சொன்னார். டி.எஸ்.ஓ சங்கரன் செல்போனை எடுத்துப் பாளையத்திலிருந்த டி.எஸ்.ஓவிற்கு ஃபோன்போட்டுப் பேசினார். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் வேறுவேறு அலுவலக விஷயங்களைப் பேசிக்கொண்டேயிருந்தார்கள். சிறிது நேரங்கழித்துத் தான் பெயர்நீக்கச் சான்றிதழ் குறித்த விசயத்திற்கு வந்தார்கள். பிறகு போனை வைத்துவிட்டுச் சங்கரனிடம் “சரி நான் அதைப் பார்த¢துக்கிறேன்” என்றார். சங்கரன் வேறு வேலைகளைப் பார்ப்பதும் கையெழுத்துப் போடுவதுமாகத் தனது பணியில் மும்முரமாக இருந்தார். சிறிது நேரங்கழித்து அவரே, “டீ குடிக்கப் போகலாமா” என்று கேட்டார். இருவரும் அவருடன் சென்றார்கள்.

சங்கரன் ஸார் கட்டடத்தின் எதிரேயிருந்த டீக்கடையின் பெஞ்சில் அமர்ந்துகொண்டார். சம்பத்தைப் பார்த்து “ஒன்னரையாகும் பரவாயில்லையா?” என்று கேட்டார். சம்பத் அவர் அருகில் சென்று “ஸார் எனக்கு ஏதாவது பார்த்துச் செய்யுங்க. ஆளுகளைக் கூட்டிட்டு வர்றேன்” என்று மெதுவாகச் சொன்னான். அவரும் சரி பார்த்துக்கிறேன் என்று ஜாடையில் சொன்னார். முருகேசன் வடையை எடுத்துக்கொண்டு வந்து தந்தார். சம்பத் அவரை அழைத்துத் தன்னிடம் அமரவைத்துக்கொண்டான். வடையைப் பிய்த¢துத் தின்றபடியே “இரண்டாயிரம் ரூபாய் ஆகுமே பரவாயில்லையா” என்று கேட்டான். அவனும் “கொஞ்சம் குறைச்சு வச்சு முடிப்பா” என்று சொன்னான். முருகேசன் ரேஷன் கார்டில் தன் மனைவியின் பெயரையும் குழந்தையின் பெயரையும் பத்துத் தினங்களுக்குள் சோ¢க்க வேண்டிய அவசரத்தில் இருந்தார். அவன் மனைவிக்குத் தையல் மிஷின் லோன் வாங்கித் தருவதாக வார்டு கவுன்சிலர் சொல்லியிருந்தார். லோன் வாங்க வேண்டுமென்றால் ரேஷன் கார்டில் பெயர் இருக்க வேண்டும். சங்கரன் ஸார் ஒரு வாரத்திற்குள் வேலையை முடித்து தந்துவிடுவதாகச் சொன்னார். முன்பணமாக ஆயிரம் ரூபாயை முருகேசன் சம்பத்திடம் தந்தார்.

சங்கரன் பணத்தைக் கை நீட்டி வாங்கவில்லை. டீ கடைக்காரரிடம¢ ஜாடையில் சொன்னதும் அவர் வாங்கி வைத்துக்கொண்டார். அவர்கள் இருவரும் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். முருகேசன் சந்தோசமாக, “ரேஷன் கார்டிலே பெயர் பதிஞ்சு கொடுத்துரு சம்பத்து. உனக்குப் பார்ட்டி வைச்சுத் தண்ணியாலேயே குளிப்பாட்டுறேன்” என்று சைக்கிள் ஓட்டியபடி சத்தமாகச் சொன்னான். சம்பத் அவனது தோள்பட்டையில் கைவைத்தபடி, “ரேஷன் கார்டிலே அரிசி வாங்குவீங்களா” எனக் கேட்டான். முருகேசன் இல்லை வாங்கமாட்டோம் என்று மூச்சு வாங்கியபடி பதில் சொன்னான். “எனக்குக் கொடுத்துருங்க. நான் மாசம் மாசம் அரிசி வாங்கிக்கிறேன். இரண்டு மூன்று படி அரிசி வேணுமின்னாலும் தர்ரேன். இல்லை ரூபாய் வேணுமின்னாலும் தர்ரேன்” என்றான். முருகேசனும் “சரி தர்ரேன்” என்றார்.

(3)

பூங்கொடி சத்தம் கேட்டுக் கண் விழித்துப்பார்த்தாள். நந்தவனக் காளியம்மன் கோவில் வடக்குத் தெருப்பக்கமாகச் சண்டை நடந்தது. சத்தம் கேட்டுத் தகரப் பட்டறையில் உட்கார்ந்திருந்த சம்பத் முச்சந்திப் பக்கமாக வந்தான். சாராயக்கடை பரமு வீட்டு ஆட்களில் யாரோ கத்தியை வைத்துக்கொண்டு தெருவில் ஓடுவதைப் பார்த்தான். ஜனங்கள் அவனை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தனர். வாய்த் தகராறாக, அரைமணி நேரத்திற்கும் மேலாக நடந்துகொண்டிருந்த Êசண்டை நின்றபாடில்லை. குப்பிநாயக்கன்பட்டியிலிருந்து வந்தவன் பெரிய வெட¢டரிவாளைக் கையில் வைத்திருந்தான். அவனால் நிற்க முடியவில்லை. ஓடிவந்து நடுரோட்டில் குப்புறவாக்கில் விழுந்தான். பிறகு அவன் எழுந்திருக்கவேயில்லை. சம்பத்துக்கு அவர்கள் எதற்காகச் சண்டை போடுகிறார்கள் என்று தெரியும்.

கு.நா.பட்டியிலிருந்து வந்தவன் ரேஷன் கடையிலிருந்து சாக்குப் பையைத் திருடி விற்பவன். அவனுக்கும் பரமுவின் பையனுக்கும் பழக்கமிருந்தது. சாக்கு விற்பதில் தான் ஏதாவது தகராறு வந்திருக்குமெனச் சம்பத் நினைத்துக்கொண்டான். அந்தத் தெருவிலிருந்த பெண்கள் பலரும் வேடிக்கை பார்க்கவென வாசலில் நின்றிருந்தனர். பூங்கொடி தலை சீவிக்கொண்டு வாசலில் வந்து நின்றாள். தெருவிளக்குகள் ஒவ்வொன்றாக எரியத் தொடங்கின.

சாராயக்கடை பரமு வீட்டின் வாசலிலிருந்து எட்டிப்பார்த்த பெண்கள் இரண்டு பேர் சேலையைத் தூக்கிக்கட்டிக்கொண்டு தெருவிற்கு வந்தனர். அவர்கள் கையில் பெருக்குமாறு இருந்தது. வந்தவர்கள் தெருவில் படுத்திருந்தவனை ஓங்கி எத்தி விட்டுத் தலையிலும் காலிலுமாக பெருக்குமாறை வைத்து அடித்தார்கள். பிறகு வீட்டுக்குள் போய்க் கதவை அடைத்துக்கொண்டார்கள்.

ஆறு மணி முனிஸிபாலிட்டி சங்கு ஒலியும் அதைத் தொடர்ந்து மேலத்தெருப் பள்ளிவாசலில் ஓதும் சத்தமும் நந்தவனத் தெரு முழுக்கக் கேட்டது. கடைகளில் விளக்குகள் போட்டதும் தெருவின் உருவமே மாறிவிட்டன. Êசண்டை முடிந்து அரைமணி நேரத்திற்குப் பிறகு இரண்டு கான்ஸ்டபிள்களும் ஒரு பெண் போலீஸும் நந்தவனத் தெருப்பக்கம் வந்தார்கள். அப்போது தெருவில் யாரும் இல்லை. அவர்கள் மூவரும் நேராகப் பரமு வீட்டுக்குத்தான் போனார்கள். வீட்டில் பரமு இல்லை. அவர் மனைவிதான் இருந்தாள். அவளிடம் போலீஸார் சண்டை நடந்ததைப் பற்றி விசாரித்தார்கள். அவள் தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னாள். போலீஸ்காரர்கள் “உங்க வீட்டிலிருந்துதான் சண்டை ஆரம்பமாச்சுன்னு டவுன் ஸ்டேஷனுக்கு போன் வந்துச்சு” என்றார்கள். “யார் போன் போட்டது” என்று அவள் கேட்டாள். “இந்தத் தெருவிலிருந்து யாரோ போன் போட்டிருக்காங்க. இனி மேல் சண்டை வந்துச்சுன்னா தூக்கி உள்ளாற போட்டுருவோம். ஆமாம், ஐயா சொல்லிட்டு வரச் சொன்னாரு” என்று சத்தம் போட்டுவிட்டுப் போனார்கள். அவள் தெருவிலிருந்து யார் போன் போட்டிருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தாள். அவளுக்கு யார்மீதும் சந்தேகம் இல்லை. சரி ஆள் தெரிய வரட்டும் வைத்துக் கொள்ளலாமென்று விட்டுவிட்டாள்.

நடுரோட்டில் போதையில் படுத்துக்கிடந்தவனை போலீஸார் எத்தி எழுப்பினார்கள். அவன் எழுந்து உட்கார்ந்துகொண்டான். போலீஸ்காரர்களைப் பார்த்ததும் அரிவாளை எடுத்து முதுகுப்பக்கமாக ஒளித்துவைத்துக்கொண்டான். “என்னடா இங்க சண்டை. தண்ணியைப் போட்டு சலம்பல் பண்ணிட்டிருக்கயா” என்று அவனைச் சத்தம் போட்டார்கள். அவன் ஒன்றும் பேசாமல் எழுந்து நின்றான். “அடீயே தூக்கி உள்ளாற போடணுமா. திரும்பிப் பார்க்காமல் ஓடுரீ” என்று விரட்டினார்கள். அவன் பரமு வீட்டையே பார்த்தபடி நடந்து சென்றான். அவன் போன பிறகு போலீஸ்காரர்கள் தெருவிலிருந்த டீக்கடைக்குச் சென்றார்கள். டீயும் வடையும் வாங்கிக்கொண்டு ரோட்டிலேயே நின்றபடி குடித்தார்கள். போலீஸ்காரம்மா “தொக்கு சுய்யம் இருக்காண்ணே” என்று டீக்கடைக் காரரைப் பார்த்துக் கேட்டாள். “காலையிலேயே முடிஞ்சுருச்சேம்மா” என்று கடைக்காரர் சொன்னார். போலீஸ்காரர்கள் அவரிடம், “என்னய்யா சண்டை. தினமும் சண்டை நடக்குதா. பரமு வீட்டிலே சாராயம் குடிக்க ஆளுங்க வராங்களா” என்று கேட்டார்கள். டீக் கடைக்காரர் தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னார். பிறகு அவர்கள் ஒன்றும் பேசவில்லை. போலீஸ¢காரா¢கள் டீ தம்ளர்களைத் தந்துவிட்டு எவ்வளவு காசு என்று கேட்டார்கள். டீக்கடைக்காரர் சொன்னார். அவர்கள் காசைத் தந்துவிட்டு ஸ்டேஷனுக்குச் சென்றார்கள்.

சம்பத், அவர்கள் சென்ற பிறகு டீக்கடைக்கு வந்தான். அவனுக்குப் போலீஸ்காரா¢களைப் பார்த்ததும் பயம் வந்துவிடும். அரிசியைக் கடத்தி கேரளாவிற்குக் கொண்டுபோவதாக யாரோ இவன் மீதும், காத்தமுத்து மீதும் பெட்டிஷன் போட்டிருந்தார்கள். போலீஸ்காரர்கள் இரண்டு போ¢ விசாரித்து விட்டுப் போனார்கள். அதிலிருந்து அவனுக்குப் போலீஸ்காரா¢களைப் பார்த்தால் பயம¢ வந¢துவிடும். இப்போதும் தன்னையும் அப்பாவையும் போலீஸ்காரர்கள் ரகசியமாக ஆள்வைத்து உளவு பார்க்கிறார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தான். சம்பத் தினசரி செய்தித் தாளில் அரிசி கடத்தல் நியூஸ்ஸை வரி விடாமல் படிப்பான். எந்த ஊரில் யார் பிடிபட்டார்கள், அவர்களைப் போலீஸ்காரா¢கள் என்ன செய்தார்கள்? என்று கவனமாக வாசிப்பான். தனது ஊரில் யாராவது பிடிபட்டிருக்கிறார்களா, பக்கத்து ஊரில் பிடிபட்டிருக்கிறார்களா? என்று எல்லாத் தினசரிகளையும் வரிவிடாமல் படித்து முடிப்பான். ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து தனது வீட்டின் முன்பாகக் கொடிக் கம்பத்தை வைத்துவிட்டால் தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று அவன் நினைத்திருந்தான்.

ரேஷன் கடையில் மண்ணெண்ணெய்யும் அரிசியும் வாங்கி விற்கிற சில்லறை வியாபாரிகள் சிலர் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் சேர்ந்திருந்தனர். தர்ணா, போராட்டம், உண்ணாவிரதம், பஸ்மறியல் என்று கூட்டத்திற்குப் போய் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் கட்சியில் சேர்ந்து மூன்று நான்கு மாதங்கள் ஆன போதும் அவர்களுக்கு இன்னமும் அடையாள அட்டை தரவில்லை. கடந்த வாரம்கூட ‘ரேஷன் கடை ஊழல்’ என்று போஸ்டர் அடித்துக் கொடி பிடித்து ஊர்வலம் போனார்கள். தோழர்கள் யாருக்கும் டீ கூட வாங்கித்தராமல் காய்ந்த உதடுகளோடு வீட்டுக்குத் திரும்பினார்கள். வந்தவர்கள், “இப்போது காங்கிரஸ் கட்சிகூடப் பரவாயில்லை. வயிற்றுக்கு ஏதாவது தந்துவிட்டு நடக்கச் சொல்கிறார்கள். இவங்க டீ கூட வாங்கித் தரமாட்டேங்கிறாங்க” என்று திட்டினார்கள். அவனும் அவர்களைப் போல் தனது வார்டிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலரிடம் சேர வேண்டுமென்று சொன்னான். கவுன்சிலரும் மாவட்டப் பிரதிநிதிகளிடம் சொல்லி கட்சியில் சேர்த்துக்கொள்வதாகச் சொன்னார். தன்னிடம் ஆயிரம் ரூபாய் தந்தால் இரண்டு மூன்று மாதத்திலேயே உறுப்பினர் அடையாள அட்டை வாங்கித்தருவதாகச் சொன்னார். கட்சியில் சேர்ந்தவுடன் யாருக்கும் அடையாள அட்டை தருவதில்லை. சம்பத்துக்கு மட்டும்தான், தான் அட்டை வாங்கித் தருவதாகச் சொன்னார். சம்பத்துக்கு ஆயிரம் ரூபாய் தந்து கட்சியில் சேர வேண்டுமா என்று தயக்கமாக இருந்தது. பிரச்சினை வந்தால் தானே நேராகச் சந்தித்துக்கொள்ளலாம் கட்சிக்காரர்களுக்கு எதுக்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கட்சியில் சேர்கின்ற எண்ணத்தை அன்றிலிருந்து விட்டு விட்டான். ஆனால் அவனுக்கு உள்ளூர ஒரு ஆசையிருந்தது.

சம்பத்துக்குப் பயமெல்லாம¢ தன் அப்பாமீதுதான். அவர்தான் தன்னை யாரிடமாவது காட்டிக்கொடுத்து விடுவார் என்று பயந்திருந்தான். அவர் ஆளும் கட்சியில் இருபது வருஷங்களாக உறுப்பினராக இருந்தார். இரண்டு தடவை ஜெயிலுக்குப் போய் வந்திருக்கிறார். மூன்று தடவை அடையாள அட்டை வாங்கிவிட்டார். நேரடியாகத் தலைவரின் கையால் உறுப்பினர் அட்டை வாங்குவது போன்ற படத்தை வீட்டின் முன்னால் மாட்டிவைத்திருக்கிறார். அவரோடு கட்சியில் உறுப்பினரானவர்கள் இரண்டு போ¢ முனிசிபாலிட்டி கவுன்சிலர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலா¢ காண்ட்ராக்டர்களாக இருக்கிறார்கள். மாவட்டக் கூட்டத்திற்குப் போகும்போது அவருக்கு ஒரு நாள் சம்பளமாக ஐந்நூறு ரூபாய் தந்துவிடுவார்கள். பிரியாணியும் சில நேரங்களில் பிராந்தி பாட்டிலும் கிடைக்கும். அவர்தான் அக்கட்சியில் தன்னைச் சேரவிடாமல் நகரச் செயலாளரிடம் சொல்லிவிட்டார் என்று சம்பத் நினைத்தான். அவருக்கு ஊரிலிருந்த ரேஷன் கடைக்காரர்கள் பழக்க மாயிருந்தார்கள். அவர்கள் மூலமாக அரிசி வாங்காதவர்களின் கார்டை வாங்கி அரிசி வாங்கினார். ரேஷன் கடைக்காரர்களிடம் பணம் தந்து அரிசி வாங்கினார். கார்டு தருபவர்களுக்கு ஒரு படி அரிசி இல்லையென்றால் கோதுமை போடுகின்ற தினத்தில் 5 கிலோ கோதுமை வாங்கித்தருவதாகப் பேசி, கார்டை வாங்கிவைத்திருந்தார். அவருக்கு மாதந்தோறும் எப்படியாவது இரண்டு கார்டு கிடைத்துவிடும். இருபது கிலோ அரிசியை அவர் மூடை மூடையாகக் கட்டி வீட்டில் மறைவான இடங்களில் வைத்திருந்தார். இதுவரை விற்றது போக இருநூறு கிலோ அரிசியாவது ஸ்டாக் இருக்கும். வெளியே யாரிடமும¢ சொல்லாமல் இருக்கிறார். எப்போதாவது ரைஸ்மில்காரர்கள் யாராவது வந்து பாலிஷ் போட்டு விற்பதற்கு அரிசி வாங்க வருவார்கள். அப்போது விலையேற்றி வைத்துவிட்டு விற்றுவிடலாமென்று வெள்ளை அரிசியாக வைத்துக் காத்திருந்தார். பெரிய பலசரக்குக் கடைக்காரர்கள் குறைவான விலைக்குத்தான் கேட்கிறார்கள். இட்லி அரிசிக்கும் குருணைக்கும் ஊடே கலந்துவிட்டு அடிக்கப் பருவட்டான வெள்ளை அரிசியாகப் பார்க்கிறார்கள். வெள்ளை அரிசியை அவர்களுக்கு விற்றுவிட்டால் கருப்படித்ததையும் சுண்டுவிழுந்த அரிசியையும் விற்க முடியாமல் போய்விடுமென்று தயங்கியபடி இருந்தார் காத்தமுத்து.

சம்பத்துக்கு இதெல்லாம் தெரிந்துதான் இருந்தது. அவன் அப்பாவைப் பார்க்க வருகிறவர்கள் இவனையும் பார்த்துப் பேசிவிட்டுத் தான் போகிறார்கள். காத்தமுத்துவிடம் விலைபடியாமல் வருபவர்கள் பூங்கொடியிடமும் இவனிடம் பேசி வாங்குகிறார்கள். வைத்துப் பார்ப்பதற்கு விற்றுப்பார்க்கலாமென்று நோங்கி படிந்த விலைக்கு விற்று விடுகிறார்கள். அவர்களுக்கு எப்படியாவது ஒத்திக்கு ஒரு வீடு வாங்கி குடிபோக வேண்டுமென்ற ஆசையிருந்தது. வாடகை வீட்டில் இருப்பதற்கு அவர்களுக்கு விருப்பமேயில்லை. கையில் கிடைக்கிற காசை வாடகைக்குக் கொடுத்துவிடுவது அவர்கள் இருவருக்குமே வயிற்றெரிச்சலாக இருந்தது. சம்பத் இன்னமும் இரண்டு மூன்று ரேஷன் கார்டுகளை எப்படியாவது வாங்கி வைத்துக்கொள்ள நினைத்தான். தங்கத்தின் ரேஷன் கார்டை இவனுக்கு முன்பாகவே காத்தமுத்து வாங்கி வைத்துக்கொண்டார். அந்தக் கார்டை வாங்கியதால்தான் அவனுக்கு அவர்மீது கோபம் வந்து சண்டையுண்டானது. காத்துமுத்துவின் கார்டைப் பிடுங்கிக்கொண்டான்.

சம்பத்தின் அக்கா தங்கத்திற்கு மிலிட்டரி கேண்டீனில் பொருட்கள் வாங்கி விற்பதற்கு நேரம் சரியாக இருந்தது. அவளுக்கும் அவள் கணவனுக்கும் ரேஷன் பொருட்களோ கார்டோ பொருட்டே இல்லை. மிலிட்டரி ஜ்ஜ்ஜ் ரம்மும் சிவாஸ் விஸ்கியும் பிராந்தியும் டோப்பி கானா ஒயிட் ரம்மும்தான் அவர் விற்றுவந்தார். இரவு 12 மணிக்குப் போய்க் கேட்டால்கூட எடுத்துத் தந்துவிடுவார். சம்பத் தன் சகோதரியைப் பார்த்துத் தனியாகப் பேசி அவளது ரேஷன் கார்டை வாங்கிக்கொண்டு வரலாமென்று நினைத்தான். அவளது வீடு நந்தவனத் தெருவில் முதல் சந்தில் இருந்தது.

சம்பத் அவளது வீட்டுக்குப் போனபோது வீடு பூட்டியிருந்தது. உள்ளே விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. தொலைக்காட்சி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கதவைத் தட்டினான். யாரும் வரவில்லை. பிறகு வாசலிலேயே உட்கார்ந்துகொண்டான். எதிரேயிருந்த வீட்டிலிருந்தவர்கள¢ அவனைப் பார்த்து விட்டுப் போனார்கள். அவன் தனது செல்போனை எடுத்து எண்களை சரிபார்க்கத் தொடங்கினான். சிறிது நேரங்கழித்துத் தங்கத்தின் எண்ணை அழுத்தினான். ரிங் போய்க்கொண்டேயிருந்தது. யாரும் எடுத்துப் பேசவில்லை. திரும்பவும் அழைத்தான். ரிங் போய்க்கொண்டேதான் இருந்தது.

அவனுடைய சகோதரியின் கணவனும் போலீஸ் கான்ஸ்டபிளும் வண்டியில் வந்து இறங்கினார்கள். சம்பத் அவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்றுகொண்டான். சகோதரியின் கணவன் வீட்டுக்குள் சென்று ஒரு ரம் பாட்டிலைக் காகிதத்தில் சுற்றி எடுத்துவந்து போலீஸ்காரரிடம் தந்தார். அவர் அதை வாங்கித் தனது வாகனத்திலிருந்த பையில் வைத்துக்கொண்டார். பிறகு வண்டியைத் திருப்பியபடி, “கவலைப்படாதீங்க. சீக்கிரமா கண்டுபிடிச்சுடலாம்” என்று சொல்லிவிட்டுப¢ போனார். சம்பத் அவரிடம், “என்ன மாமா என்ன விசயம்” என்று கேட்டான். அவர் வாசலில் உட்கார்ந்துகொண்டே, “பட்டப்பகலிலே யாரோ வீட்டுக்குள்ளாறப் புகுந்து பீரோ திறந்து நகையையும் ரூபாயையும் எடுத் துட்டுப்போயிருக்கான் சம்பத்து. செல்போனைக்கூட விட்டுவைக்காமல் எடுத்துட்டுப் போயிருக்கான்” என்றார். வாசலில் இருந்தபடியே “தங்கம் தங்கம்” என்று இரண்டு தடவை கூப்பிட்டதும் சம்பத்தின் சகோதரி கதவைத் திறந்தாள். தன் கணவனையும் சகோதரனையும் பார்த்ததும் கதவை முழுவதுமாகத் திறந்துவிட்டாள். அவர்கள் இரு வரும் வீட்டுக்குள் செல்லாமலேயே வாசலில் உட்கார்ந்துகொண்டார்கள்.

காத்தமுத்து வாடகை சைக்கிளில் தங்கத்தின் வீட்டுக்கு வந்தார். கேரியரில் அரிசி மூடையும் மஞ்சள் பையும் வைத்துக் கட்டியிருந்தார். அவருக்கு யார் தகவல் தந்தது எனத் தெரியவில்லை. அப்பாவைப் பார்த்ததும் சம்பத்துக்குக் கோபமாக வந்தது. ஏற்கனவே ரேஷன் கார்டு வாங்க முடியாத வருத்தத்தில் இருந்தவன் அவரைப் பார்த்ததும் கோபமானவனாக எழுந்து வீட்டுக்குள் சென்றான். “இந்த ஆளுக்கு எங்கிருந்து தான் கிராக்கிகள் வருமோ. தினமும் அரிசி வாங்குறாரு. தினமும் அரிசி விக்கிறாரு” என்று தங்கத்திடம் சொன்னான். தங்கம் அவனை உட்காரச் சொன்னாள். அவள் அழுதபடி இருந்தாள். அவள் பக்கத்தில் அவள் பிள்ளைகள் மிரண்டு போய் அமர்ந்திருந்தனர். அவள் தனது நகைகளையெல்லாம் பறிகொடுத்த வேதனையையும் மீறி, “சேனலை மாத்துடீ. வடிவேல் ஜோக்கைப் போடு. நாடகத்தையெல்லாம் இரண்டு மூன்று நாளு பார்க்காமல் இருந்தால் மனசு மாறும்” என்று அவளாகப் பேசினாள். காத்தமுத்து எட்டிப¢பா£¢த்துவிட்டுத் திரும்பவும் வாசலுக்குப் போய் உட்கார்ந்துகொண்டார். தங்கம் அப்பாவைப் பார்த்ததும் ஆங் காரம் வந்தவளாக “எந்த முண்டை வந்து என் நகையெல்லாம் பார்த்துக் கண் வைச்சாளோ, இப்படிப் பட்டப் பகலிலே காணாமப் போச்சே. அவன் விளங்குவானா நாசமாப் போவான். கைகால் விளங்காமத்தான் போவான்” என்று அழுதபடி புலம்பினாள். பிள்ளைகள் பயந்தவர்களாக அவள் முகத்தையே பார்த¢துக்கொண்டிருந்தனர். சம்பத் அவளிடம் “யாருன்னு பார்த்தையா” என்று கேட்டான். அவள் கண்களைத் துடைத்தபடி “நாங்க ரெண்டு பேரும் உள் ரூம்ல தூங்கிட்டு இருந்தோம். வெளியே எப்பையும் போலத்தான் கதவைச் சாத்திட்டு வந்து படுத்தேன். இத்தனை நாள் இப்படியா நடந்துச்சு. மத்தியானச் சாப்பாட்டைச் சாப்பிடுறப்போகூட, கதவைத் திறந்து வச்சுதான் சாப்பிடுவோம். யார் வந்திருக்கா இந்தத் தெருவிலே. பதினைஞ்சு வருஷமா இங்க இருக்கோம். தூங்கி எந்திரிச்சு பார்த்தா பீரோ திறந்திருக்கு. செல்போனைக் காணோம். இரண்டு பாட்டிலை வேறே தூக்கிட்டுப் போயிருக்கான¢” என்றவள் திறந்திருந்த பீரோவைப் பார்த்து நெஞ்சில் அடித்துக்கொண்டாள்.

“போலீஸில் சொன்னீங்களா மாமா” சம்பத் வெளியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தபடி கேட்டான். தங்கம், “அவருக்குத் தெரிஞ் சவரை வச்சு ஸ்டேஷனில் சொல்லியிருக்காரு. பாதி பணமும் காவாசி நகையும் தாண்டா சம்பத்து வரும்” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதபடி சொன்னாள் தங்கம். சம்பத்தின் மாமா அவனிடம் “கம்ப்ளைண்டு எல்லாம் எழுதித் தரலை. போலீஸ்காரங்களே தனியா கண்டுபிடிச்சுத் தர்றாங்களாம். ஆளுக்கு இவ்வளவுன்னு பேசிட்டு வந்திருக்கேன்” என்றார். தங்கத்திற்கு இதைக் கேட்டதும் சந்தோசமாக இருந்தது. தங்களது காணாமல் போன பொருட்கள் எல்லாம் உடனே கிடைத்துவிட்டது போல நினைத்துக்கொண்டாள். நாற்காலியை விட்டு எழுந்து வாசலுக்கு வந்து நின்றுகொண்டாள். “சீக்கிரமாக அவங்களைப் பார்த்துத் தரச்சொல்லுங்க. ஆயிரம், இரண்டாயிரம் கூடப்போனாலும் பரவாயில்லை” என்றாள். சம்பத்தின் மாமா ஒன்றும் பேசவில்லை. காத்தமுத்து சைக்கிளை உருட்டியபடியே நடந்துபோனார். போகும்போது இரண்டு முறை திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றார். தங்கமும் சம்பத்தும் வீட்டுக்குள் சென்றனர்.

சம்பத் தன் சகோதரியிடம் எப்படி ரேஷன் கார்டைக் கேட்பது என்று தயங்கியவனாகத் தரையில் உட்கார்ந்தான். அவள் அவனுக்குச் சாப்பாடு வைப்பதாகச் சொன்னாள். சம்பத் வேண்டாமென்று சொன்னான். பிள்ளைகள் அவனைப் பார்த்து புரோட்டா வேண்டுமென்று கேட்டார்கள். அவன் வாங்கி வருவதாக எழுந்து சென்றான்.

மெயின் ரோட்டிலிருந்த கடையில் புரோட்டா வாங்கிச் சென்றபோது தெருமுக்கில் காத்த முத்து நின்றிருப்பதைப் பார்த்தான். அவர் எதற்காக நிற்கிறார் என்று புரியாதவனாக புரோட்டா கடைக்குச் சென்றான். பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தபோது, வேலுச்சாமி சாப்பிட்டு முடித்து வாசலில் அமர்ந்திருந்தார். அவர் சிகரெட்டைப் பற்றவைத்தபடி அவனுக்கு வழிவிட்டார். அவன் வீட்டுக்குள் போனதும் பிள்ளைகள் தரையில் அமர்ந்துகொண்டார்கள். தங்கம் புரோட்டா விற்குத் தந்த கறிக்குழம்பைச் சோற்றுக்கு ஊற்றிச் சாப்பிடத் தொடங்கினாள். சம்பத் பிள்ளைகள் சாப்பிடத் தொடங்கியதும் எழுந்து வீட்டுக்குச் செல்வதாகப் புறப்பட்டான். அவள் சாப்பிட்டபடியே “அவர்கூட ஸ்டேஷனுக்குக் கூட மாடப் போய் ஒத்தாசை செய்யுடா” என்றாள். அவனும் “சரி” என்றான். செருப்பைப் போட்டுக்கொண்டு வாசலுக்கு வந்தபோது “அவருக்கிட்டே ரேஷன் கார்டை வாங்கிக் கொடுக்கா. ரெம்ப நாளா அவரே வாங்கிட்டு இருக்கிறாரு” என்றான். அவள் சோற்றை வாயில் வைத்து ‘‘ம்ம் ம்ம்” என்றாள். சொன்ன வேகத்தில் இரண்டு மூன்று சோற்றுப் பருக்கைகள் தெறித்து விழுந்தன. சம்பத் அவனது வீட்டுக்குப்போன பிறகு கதவைப் பூட்டுவதற்கென வாசலுக்கு வந்தாள் தங்கம்.

தங்கம் எலுமிச்சம் பழத்தை இரண்டாக அறுத்துப் பழத்தின் உள்பக்கமாகக் குங்குமத்தைத் தடவி வாசலில் வைத்தாள். அவள் எதிர் வீட்டுக்காரப் பெண்ணை ஒருமுறை முறைத்துவிட்டு ‘டப்’பென்று கதவைத் தாழிட்டுக்கொண்டாள். சிறிது நேரங்கழித்து எதிர்வீட்டுப் பெண்ணும் தங்கம் செய்தது போல எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி குங்குமம் தடவி தனது வாசலில் வைத்துக்கொண்டாள். அவளும் தங்கத்தைப் போலவே கதவை ‘டப்’பென்று அடைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டாள். தங்கம் கதவின் ஓட்டையின் வழியாக நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். இரட்டைக் கதவின் ஓட்டை வழியாகப் பார்த்தால் வெளியே நடப்பது எல்லாம் தெரியும். எதிர்வீட்டுப் பெண்ணுக் கும் அவளுக்கும் ராசியே இல்லை. எப்போதும் சண்டைபோட்டுக்கொண்டிருப்பார்கள். தங்கம் செய்வதைப் போல அவளும் உடனடியாகச் செய்துவிடுவாள். தங்கத்திற்கு அவள்மேல்தான் சந்தேகமாக இருந்தது. அவள்தான் வீட்டிலிருந்த நகைகளை ஆள்விட்டு எடுத்திருப்பாளோ என்று நினைத்தாள். தெருவில் அவளுடன் பேசுபவர்களை நோட்டமிட்டபடிதான் இருந்தாள். திருடுபோனதும் தெருவிலிருந்த பெண்கள் எல்லோரும் விசாரித்து விட்டுப் போனார்கள். ஆனால் எதிர்வீட்டுப் பெண் பரமேஸ்வரி மட்டும் விசாரிக்க வரவில்லை. அவளுடனும் தங்கத்துடனும் பொதுவாகப் பேசிப் பழகும் கஜாவிடம் அவள் திருடுபோனதைப் பற்றி எளக்காரமாகப் பேசியிருக்கிறாள். ‘திருடுபோனால் போகட்டும். அவளுக்கென்ன பாட்டில் பாட்டிலா விற்றுச் சம்பாதிக்கிறா. வட்டிக்கு விடுறா. நல்லா அவளுக்கு வேணும்’ என்று திட்டித் தீர்த்திருக்கிறாள். கஜா அவள் சொன்னதை உடனே தங்கத்தின் காதில் போட்டுவிட்டாள். தங்கம் பொறுமையாக இருந்தாள். சந்தர்ப்பம் கிடைக்கும். அவளை ஏதாவது செய்துவிடலாம் என்றுதான் காத்திருந்தாள். ஆனால் பரமேஸ்வரிக்கு, தங்கத்தைப் பிடிக்காத பெண்கள் வந்து சில யோசனைகள் சொல்லிவிட்டுப் போனார்கள். தங்கம் ஏதாவது செய்வினை செய்தால் அதை எடுப்பதற்கும் பதிலுக்கு அவளுக்குச் செய்வினை செய்வதைப் பற்றியும் பேசிவிட்டுப் போனார்கள்.

தங்கம் எத்தனை நாள் ஜாடை மாடையாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்க முடியும் என்று கோபமாக இருந்தாள். வேலுச்சாமியிடம் சொன்னபோது அவரும் ஆம்பளைகள் பேசினால் பெரிய சண்டையாகப் போய்விடும் என்று அவளை அமட்டிவைத்தார். இந்த நேரத்தில்தான் தங்கத்தின் வீட்டில் திருடுபோனது. அவள் பரமேஸ்வரியைச் சந்தேகப்பட்டு அவளுக்கு ஏதாவது செய்வினை செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தாள். ரோட்டில் நின்று சத்தம் போட்டபோது கூட, “ஒரு வாரத்திற்குள்ள என்னோட பொருளெல்லாம் எங்கிட்ட வந்துரணும். இல்லைன்னா கைகால் விளங்காமல் ஏதாவது செய்துவைத்துவிடுவேன்” என்று பயமுறுத்தினாள். தெருவிலிருந்த பெண்கள் பலரும் திருடுனது யாருன்னு காங்கிறது. எடுத்தவங்களுக்குத்தான் எல்லாம் என்று பேசினார்கள். ஒரு வாரம் முடிந்துவிட்டது. எந்தப் பொருளும் வரவில்லை.

(4)

முருகேசனுக்குக் கால்வலி வந்துவிட்டது. முழங்காலும் குதிங்காலும் தான் நடக்க நடக்க வலியெடுக்க ஆரம்பித்தது. சம்பத் திருட்டு விசயமாக போலீஸ் டேஷனுக்குத் தினமும் வேலுச்சாமியுடன் சென்றுவிடுவதால் அவனைத் தாலுகா ஆபீஸுக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை. இரண்டு தினங்களாக அங்கே அவராகவே சென்றுவந்தார். டி.எஸ்.ஓ. கலெக்டர் ஆபீஸுக்குப் போக வேண்டும். கேஸ் அடுப்புக்குக் கணக்கெடுக்கிறார்கள் கலர் டி.விக்குக் கணக்கெடுக்கிறார்கள் என்று முருகேசனை அலையவிட்டுக்கொண்டேயிருந்தார். முருகேசன், சம்பத் வந்தால் ஒரு மாதிரியாகப் பேசுகிறார்கள். தன்னிடம் வேறு ஒரு மாதிரியாகப் பேசுகிறார்கள் என்று கோபமானான். வேறு வழியில்லாமல்தான் பொறுமையாக அலைந்துகொண்டிருந்தான். காஞ்சியைப் பார்த்துக் காலில் விழாத குறையாகக் கெஞ்சிய பிறகு தான் டி.எஸ்.ஓவிடம் சொல்லி நோட்டரிபப்ளிக் வக்கீலிடம் ‘நோஅப்ஜக்சன்’ வாங்கிட்டு வாங்க என்று சொன்னார். முருகேசனுக்கு இருந்த கால்வலியில் இதைக் கேட்டதும் ஆத்திரம்தான் வந்தது.

ஏன் இப்படித் தன்னை அலையவிடுகிறார்கள் என்று சம்பத்தைப் பார்க்க அவனது வீட்டுக்குப் போனான்.

சம்பத் போலீஸ் ஸ்டேஷனுக்கும் வீட்டுக்கும் அலைந்துகொண்டிருந்தான். அவனுக்கு முருகேசனைப் பார்த்தபிறகு தான் ரேஷன் கார்டு விசயமே ஞாபகத்திற்கு வந்தது. போலீஸ் ஸ்டேஷனிலிருந்து சாப்பிடுவதற்காக வந்தவன் அமைதியாக உட்கார்ந்திருந்தான். தனது கட்டைக்காலை எடுத்துவைத்து விட்டுத் தொடைகளைத் தடவியபடி இருந்தவன் அவரைப் பார்த்ததும் அப்படியே எழுந்துகொண்டான். பூங்கொடிக்கு இந்த ரேஷன் கார்டு விசயமெல்லாம் தெரியாது. முருகேசன் வீட்டுக்குள் நுழைந்தும் நுழையாமலும் வாசலில் நின்றபடியே “பணம் கொடுத்து நான்கு நாட்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது போய் வக்கீலிடம் கையெழுத்து வாங்கிட்டு வா, பத்திரம் வாங்கிட்டு வான்னா என்னா அர்த்தம்” என்று சத்தம் போட்டான். சம்பத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சம்பத் அவரிடம், “எங்க அக்கா வீட்டுல திருட்டுப்போயிருச்சு முருகேசா. அது விசயமாத்தான் இந்த நாலு நாளாக ஸ்டேஷனுக்கு அலைஞ்சிட்டு இருக்கோம்” என்று அவரைச் சமாதானப்படுத்தினான். அவனது சமாதானத்தை விரும்பாதவர் போல மேற்கொண்டு வேகமாகப் பேசினார். நந்தவனத் தெருவில் இருந்தவர்கள் எல்லோரும் கூடிவிட்டனர். சம்பத்துக்கு அவமானமாகப் போய்விட்டது. சரி என்று சாப்பிடாமல்கூட அப்படியே தாலுகா ஆபீஸுக்கு அவரை அழைத்துக்கொண்டுபோனான்.

வட்டவழங்கல் அலுவலகத்துக்குப் போனபோது சங்கரன் ஸார் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். அவர் வெளியேறும்வரை காத்திருந்தவன் காஞ்சியைப் பார்த்து, “ஏன் இப்படி லேட் பண்றீங்க” என்று கேட்டான். காஞ்சி ஒன்றும் பேசாமல் சைகையில் துட்டு என்று கேட்டான். அவனும் காஞ்சியின் பக்கத்தில் போய்ப் பணம் தந்ததைச் சொன்னான். பிறகு காஞ்சி டி.எஸ்.ஓ ஸாரிடம் போய்ப் பேசினான். பெயர்நீக்கச் சான்றிதழ் இல்லாததால் கலெக்டர் ஆபீஸில் ஏதாவது விசாரணைக்கு வருவார்கள். அதனால்தான் வக்கீலிடம் ‘நோஅப்ஜக்சன்’ லெட்டர் எழுதி வாங்கிட்டுவரச் சொன்னோம் என்றார். சம்பத் மேற்கொண்டு எதுவும் பேசாமல் முருகேசனிடம், “இன்னைக்கு சாயங்காலமாக ஒரு வக்கீலைப் பார்த்து எழுதி வாங்கிடலாம்” என்று சொன்னதும் அவர் அமைதியானார். சம்பத்தும் முருகேசனும் வீட்டுக்கு வந்தார்கள்.

சம்பத்துக்குப் பசி அதிகமாக இருந்தது. பூங்கொடி அவனுக்குச் சாப்பாடு வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றுவிட்டாள். சாப்பிட்டு முடித்தவன் தற்செயலாக வேறு ஏதோ நம்பருக்கு போன் போடும் அவசரத்தில் தங்கத்துக்கு போன் போட்டான். ரிங் போனது. உடனேயே எடுத்துவிட்டார்கள். சம்பத்துக்கு ரிங் போனபோதுதான் செல் காணாமல் போனது ஞாபகத்திற்கு வந்தது. எடுத்தவர்கள¢ பேசினார்கள். சம்பத் மரியாதையுடன் ஸார், “இது எங்க அக்காவோட போன் நம்பர். உங்களுக்கு எப்படிக் கிடைச்சது. யாராவது உங்ககிட்டே வித்தாங்களா” என்று கேட்டான். பேசியவர் ஆச்சரியமாக, “அப்படியா இது நான் ரோட்டிலே கண்டெடுத்தேன்” என்றார். சம்பத் திரும்பவும் “எங்க ஸார் எடுத்தீங்க” என்று கேட்டான். அவர், “பஸ் ஸ்டாண்டு குப்பைத் தொட்டியிலே எடுத்தேன்” என்றார். சம்பத், “செல்போனைக் கொடுங்க ஸார். உங்களுக்கு 500 ரூபாய் பணந்தர்றேன்” என்றார். அவரும் “சரி” என்று அவரது விலாசத்தைத் தந்தார். சம்பத் அவர் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டான்.

சம்பத் தங்கத்தின் வீட்டுக்குச் சென்று தான் போனில் பேசியதைச் சொன்னான். அவர்கள் இருவரும் நம்பாதவர்களாக அதெல்லாம் சும்மா என்று அவன் பேச்சை ஒதுக்கினார்கள். அவன் தான் பேசியது உண்மைதான் என்று திரும்பவும் செல்போனில் பேசினான். ரிங் போனது. முதல் ரிங்கிலேயே எடுத்துப் பேசியவர் “என்ன விசயம்” என்று கேட்டார். தங்கம் செல்போனை வாங்கி அசிங்க அசிங்கமாகத் திட்டினாள். வேலுச்சாமியும் போனை வாங்கி மிரட்டினார். அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டேயிருந்தவன் பேச்சை நிறுத்தியதும் “ஏ மயித்தைக் கூட உங்களாலே பிடுங்க முடியாது. போய்யா” என்று போனை கட் செய்துவிட்டான். தங்கம் அந்த விலாசத்திற்கு ஆட்களை அழைத்துச் சென்று போய்ப் பார்த்துவர வேண்டுமென்று வேலுச்சாமியை அவசரப்படுத்தினாள். அவரும் யார் யாரை அழைத்துச் செல்லலா மென்று யோசித்தவராக நாற்காலியில் அமர்ந்தார். விலாசத்தைப் பார்த்ததும் அவருக்குக் கோபம் தான் வந்தது. நகையைத் திருடிவிட்டுப் போனவன் இவ்வளவு தைரியமாக போனில் பேசுகிறானே என்று ஆங்காரமாக இருந்தார். போலீஸ்காரர்களுக்குச் சொன்னால் ஏதாவது செய்து காரியத்தைக் கெடுத்துவிடுவார்கள் என்று யோசித்தார். அவருக்குப் பரமுவின் ஞாபகம் வந்தது. சாராயம் விற்கும் பரமுவும் அவரது ஆட்களும் வந்தால் தனக்கு உதவியாக இருக்கும் என்று சம்பத்திடம் கேட்டான். சம்பத்துக்கும் சரி யென்றுதான் மனதில் தோன்றியது. நேராக நாம் போவதைவிட அப்பாவை விட்டுப் பேசச் சொன்னால் நன்றாக இருக்கும். பரமுவும் அப்பாவும் நல்ல பழக்கம். ஒரே கட்சியும்கூட என்று வேலுச்சாமிக்கு யோசனை சம்பத் சொன்னார். அவரும் சரியென்று போன் போட்டு வர வழைத்தார். காத்தமுத்து வந்ததும் சம்பத் எழுந்து வெளியேவந்து விட்டான்.

வாசலில் வந்து உட்கார்ந்தவன் தனது செல்போனை மறந்து வைத்துவிட்டோமே என்று எழுந்துகொண்டான். பிறகு என்ன நினைத்தானோ சரி வீட்டுக்குள்ளேயே இருக்கட்டும் பிறகு போய் எடுத்துக்கொள்ளலாமென்று நினைத்தான். வாசல்படியில் உட்கார்ந்து வீதியை வேடிக்கை பார்த்தான். எதிரேயிருந்த பெட்டிக்கடையில் கருத்த ஆள் ஒருவன் சிகரெட் புகைத்தபடி தங்கத்தின் வீட்டையே பார்த்துக்கொண்டிருந்ததைத் தற்செயலாகப் பார்த்தவன் அவனைக் கூர்ந்து கவனித்தான். அந்த ஆளும் சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு நடந்துபோனான். அவன் நேராகப் பரமு வீட்டுக்குத்தான் போனான். சிறிது நேரத்தில் திரும்பியவன் வெள்ளை பிளாஸ்டிக் கேனைத் தூக்கிக்கொண்டு நடந்துவந்தான். பெட்டிக்கடையில் நின்று சிகரெட்டை வாங்கிக்கொண்டான்.

காத்தமுத்துவும் வேலுச்சாமியும் பரமுவின் வீட்டுக்குப் போனார்கள். பரமு வீட்டில்தான் இருக்கிறார். வியாபாரத்திற்கு வந்திருந்த ஆட்களின் கூட்டத்தைப் பார்த்தால் வீட்டுக்குள் போனவர்கள் வருவதற்கு எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும் என்று சம்பத் நினைத்தான். எழுந்து வீட்டுக்குள் சென்றவன் செல்போன் வைத்த இடத்திற்குப் போய்ப் பார்த்தான். செல்போன் இல்லை. சுற்றியும் தேடினான். எங்கும் இல்லை. பதறிப்போய் தங்கத்திடம் கேட்டான். அவளும் தேடிப்பார்த்தாள். என்னடா இது வைச்ச இடத்திலே காணமுன்னா என்னா சொல்லுறது என்று கட்டிலுக்கு அடியில் பீரோவிற்கு அடியில் என்று குத்தவைத்து உட்கார்ந்து தேடினான். எங்கேயும் இல்லை. பிறகு தங்கம் தான் புதியதாக வாங்கிய செல்போனிலிருந்து சம்பத்தின் செல்போனுக்கு அழைத்துப் பார்த்தாள். சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவள் உதட்டைப் பிதுக்கியபடி அவனிடம் போனைத் தந்தாள். அவனும் தனது எண்ணுக்கு அழைத்துப் பார்த்தான். சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. தலையில் கைவைத்தபடி அப்படியே உட்கார்ந்துகொண்டான். “அதிலிருக்கும் நம்பரை நான் எதிலையும் எழுதிகூட வைக்கலயே. ஆத்திர அவசரத்திற்கு யாரையாவது கூப்பிடணுமின்னா கூட எனக்கு நம்பர் தெரியாதே” என்று புலம்ப ஆரம்பித்தான். பிறகு அவன், “அக்கா நீ போய் அந்த ஆளுகிட்டே என் போன் இருக்கான்னு பாரேன்” என்று சொன்னான். அவளும் சரி என்று பரமு வீட்டுக்குப் போனாள்.

பரமு வீட்டிலிருந்து மூவரும் திரும்பியபோது மதியப்பொழுதைக் கடந்திருந்தது. தங்கம், சம்பத்தின் செல்போனைக் கையில் வைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தாள். செல்போனை சம்பத் பார்த்ததும் பிடுங்காத குறையாக அவளிடமிருந்து வாங்கிக்கொண்டான். பிறகு அவளைப் பார்த்து, “அந்தக் களவானி கூதியான்தானே எடுத்து வைச்சிருந்தான்” என்று சத்தமாகப் பேசினான். வேலுச்சாமி அவனைப் பார்த்து, “ஏய் மாப்பிள்ளே சும்மா தேவையில்லாமப் பேசாதே. நீ வீட்டுக்குப் போயிட்டேன்னு அவரு தான் எடுத்துவைச்சாராம். வீட் டுக்குப் போகும்போது பூங்கொடி கிட்டே கொடுத்துட்டுப் போகலா முன்னுதான் நினைச்சுட்டு இருந்திருக்கிறாரு. அதுக்குள்ளே நீ உங்க அக்காளை அனுப்பிச்சுட்டே” என்று அவனை அவர் சத்தம் போட்டார்.

சம்பத், “அதுக்கு எதுக்குய்யா நீ செட்டை சுவிட்ச் ஆஃப் செஞ்சே” என்று கத்தினான். அவர் பதில் பேசாமல் செருப்பைப் போட்டுக்கொண்டு வாசல்படியைத் தாண்டினார். சம்பத் கோபமானவனாக அவரது சட்டையின் கழுத்துப் பட்டையைப் பிடித்து இழுத்தான். அவரது சட்டை கிழிகின்ற சத்தம் கேட்டது. அவர் பதறிப்போய்த் தன்னைத் தன் மருமகப்பிள்ளையின் முன் இப்படியாகச் செய்துவிட்டானே என்று, “நொண்டிக் கழுதை” என்று திட்டியபடி சம்பத்தின் முகத்தில் ஓங்கிக் குத்தினார். சில்லுமூக்கு உடைந்து ரத்தம் வந்தது. பொலபொலவென்று ஒழுகிய ரத்தம் சட்டை முழுக்க வடிந்தது. அவன் உள்ளங் கையில் மூக்கைப் பொத்தியபடி அப்படியே உட்கார்ந்துகொண்டான். “கிழட்டுத் தேவடியா மகனே” என்று முனகினான். திரும்பவும் காத்தமுத்து ஓங்கி அவனது வயிற்றுப்பக்கமாக எத்தினார். வலிபொறுக்க முடியாமல், சம்பத் ‘அய்யோ அம்மா’ என்று கத்தினான். தங்கம் அவர்களுக்கு இடையே புகுந்து விலக்கிவிட்டாள். வேலுச்சாமி தலையில் கைவைத்தபடி உட்கார்ந்துவிட்டார். ரத்தம் தலைக்கு ஏறியபடி இருந்ததை அவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. ரத்தக்கொதிப்பு அவருக்குச் சில நாட்களாகவே அதிகமாகியிருந்தது. மாத்திரைகளை விடாமல் சாப்பிட வேண்டுமென்று டாக்டர் சொல்லியிருந்தார். வேலுச்சாமி இன்று மாத்திரை சாப்பிட மறந்துவிட்டார். அவருக்கு ரத்தக்கொதிப்பு அதிகமானால் மூக்கிலிருந்து ரத்தம் சொட்டுச் சொட்டாக ஒழுகும். தலைச்சுற்றல் தொடங்குவது போலிருந்ததும் அவர் தனது மாத்திரைகளை எடுத்துத் தரும்படி தங்கத்தைப் பார்த்துக் கத்தினார். அவளுக்குப் புரிந்துவிட்டது. மாத்திரைகளை எடுத்துத் தந்துவிட்டு டம்ளர் நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து தந்தாள். வேலுச்சாமி மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டு நீரைக் குடித்தார்.

காத்தமுத்துவிற்கு வியர்த்திருந்தது. அவர் தனது சட்டை எந்தப் பக்கம் கிழிந்திருக்கிறது என்று திரும்பித்திரும்பிப் பார்த்தபடி வீட்டைவிட்டு வெளியேறித் தெருவில் நடந்துசென்றார். தன் முன் நின்றிருந்த தங்கத்தைத் தள்ளிவிட்டு எழுந்தவன், வேகமாக அவருக்குப் பின்னால் சென்றான். கட்டைக்காலை எடுத்துவைத்து இழுத்தபடி நடந்தான். காத்தமுத்து திரும்பிப் பார்ப்பதற்குள் இடுப்பில் ஒளித்துவைத்திருந்த பேனாக் கத்தியால் அவரது இடுப்பில் குத்தினான். அவர் இதை எதிர்பார்த்திருந்தவர் போல அவனது கத்திக் குத்திலிருந்து தப்பித்துக்கொண்டார். இருவரும் நடுரோட்டில் சண்டை போட்டார்கள். கட்டிக்கொண்டு மண்ணில் விழுந்து புரண்டனர். தெருவிலிருந்தவர்கள் பலரும் வேடிக்கை பார்த்தனர். யாரும் விலக்கிவிட வரவில்லை. சண்டை நடந்த சத்தத்தைக் கேட்டுத் தங்கத்தின் எதிர்வீட்டு பரமேஸ்வரியும் அவள் பக்கத்திலிருந்த பெண்களும் வாசலில் நின்று வேடிக்கை பார்த்தனர். தங்கம் வாசலுக்கு வந்து பார்த்தபோது இருவரது வேட்டியும் அவிழ்ந்துகிடந்தது. ஆவேசமாக ஒருவரை ஒருவர் நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்வதில் குறியாக இருந்தனர். தங்கம் அவர்களின் அருகில் சென்றபோது சம்பத்தின் உதட்டிலிருந்தும் ரத்தம் வந்துகொண்டிருந்தது. சட்டை கிழிந்திருந்தது. காத்துமுத்துவின் ஆவேசம் இன்னமும் குறைந்திருக்கவில்லை. சம்பத்தால் அவரது தாக்குதலைத் தடுக்கத்தான் முடிந்ததே தவிரத் திருப்பி அடிக்கவே முடியவில்லை. அவன் அடிப்பதற்கான சந்தர்ப்பத்தைக் கணித்துக் கையை ஓங்குவதற்குள் காத்துமுத்து முந்தி விடுகிறார். அடிவாங்கிய சம்பத் படுத்துக்கிடந்தான்.

பூங்கொடி சேலையைச் சொருகிக்கொண்டு தெருவிற்கு ஓடிவந்தபோது, சம்பத் எழுந்து உட்கார்ந்துகொண்டான். தங்கம் ரோட்டில் கிடந்த வேட்டியை எடுத்துக்கொண்டிருந்தாள். காத்த முத்து அவளிடமிருந்த வேட்டியை வாங்கிக் கட்டியபடி நடந்தார். ரோட்டில் பேனாக் கத்தி தனியாகக் கிடந்தது. சிறுவர்கள் இரண்டு பேர் ஓடிவந்து அந்தக் கத்தியை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். பூங்கொடி தன் கணவனைத் தூக்கிவிட்டு வேட்டியைத் தந்தாள். அவன் வேட்டியைக் கட்டியபடி தூரத்தில் நடந்துகொண்டிருந்த காத்தமுத்தைப் பார்த்து அசிங்கமாகத் திட்டினான். அவர் திரும்பிப் பார்த்துத் தன் காலுக்குக் கீழே கிடந்த கல்லை எடுத்து வீசினார். அந்தக் கல் சம்பத்தின் அருகில் விழுந்தது. சம்பத்தும் பூங்கொடியும் ஒதுங்கிக்கொண்டார்கள். பூங்கொடி, “கிழட்டுப்பயலே வந்தேனா அடிச்சுக் கொன்னுபோடுவேன்” என்று கீழே கிடந்த கல்லை எடுத்துத் திரும்ப வீசினாள். அவளைப் பார்த்துக் காத்துமுத்து கட்டியிருந்த வேட்டியை நடு ரோடு என்று பார்க்காமல் அவிழ்த்துக் காட்டினார். அவள் முகத்தைப் பொத்தியவளாகச் சம்பத்தின் கைகளைப் பிடித்து வீட்டுக்குப் போனாள். அவன் தனது கட்டைக் காலை இழுத்துக்கொண்டு நடந்தான்.

(5)

வேலுச்சாமிக்கு அன்றிரவு நெஞ்சுவலி வந்தது. ரத்தக்கொதிப்பு இருக்கு, குடிக்கக் கூடாது என்று டாக்டர் பலமுறை கூறியிருந்தார். அவர் சொல்லை மீறி அரை பாட்டில் விஸ்கியைக் குடித்தார். பாதி இரவில், அவருக்கு நெஞ்சு வலி அதிகமானது. சிறுநீர் கழித்துவிட்டு, தண்ணீர் குடித்து வந்தால் சரியாகப்போகும் என்று எழுந்தவர் கீழே விழுந்துவிட்டார். அந்தச் சத்தத்தைக் கேட்டுத் தங்கமும் பிள்ளைகளும் எழுந்து கொண்டார்கள். வேலுச்சாமியால் எழுந்து உட்கார முடியவில்லை. அவரையறியாமல் மூத்திரம் பிரிந்து சென்றது. தங்கம் பயந்தது போல் நடந்துவிட்டது. எதிரேயிருந்த பெட்டிக்கடைக்காரன் சற்று முன்தான் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றிருந்தான். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் செல்போனை எடுத்துச் சம்பத்தின் எண்ணை அழைத்தாள். அவனது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. திரும்பத் திரும்ப அழைத்துப் பார்த்தாள். பிறகு வாசல் கதவைத் திறந்துவைத்துவிட்டு விளக்கைப் போட்டாள். பிள்ளைகள் இருவரும் வேலுச்சாமியின் அருகில் உட்கார்ந்திருந்தனர். அவரிடம் எந்த அசைவும் இல்லை. நெஞ்சு உயர்ந்து அடங்கியது. இரண்டு தடவைக்கு மூச்சை நீண்டு விட்டவர் பிறகு வாயைத் திறந்துகொண்டார்.

தங்கம் ஆட்டோவை அழைத்து வந்தபோது பிள்ளைகள் இருவரும் அழுதுகொண்டிருந்தனர். டிரைவரும் தங்கமுமாக அவரைத் தூக்கி ஆட்டோவுக்குள் படுக்கவைத்தனர். அவரது தலைமாட்டில் தங்கம் உட்கார்ந்துகொண்டாள். பிள்ளைகள் ஆட்டோவில் நின்றுகொண்டனர். வேலுச்சாமியை மருத்துவமனைக்குக் கொண்டு போனபோது அவரது உடல் முழுவதும் வியர்த்திருந்தது. டாக்டர் வேலுச்சாமியின் முகத்தைப் பார்த்ததும் கண்டுபிடித்துவிட்டார். “குடிச்சிருக்காரு கொஞ்சம் சிரமம்தான். பார்ப்போம்” என்றார். தங்கம் அழுதபடி நின்றிருந்தாள். ஆட்டோக்காரன் செய்வதறியாது நின்றிருந்தான். அவனைப் பார்த்து “மூனாவது தெருவிலிருக்கிற சம்பத்திடம் சொல்லிட்டுப் போறயா தம்பி. உனக்குப் புண்ணியமாப் போகும்” என்றாள். அவனும் சரி என்று ஆட்டோவை எடுத்துக்கொண்டு போனான்.

ஆட்டோ போன பாதையைப் பிள்ளைகள் இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு இன்னமும் உறக்கம் கலைந்திருக்கவில்லை. தங்கம் விசும்பிக்கொண்டிருந்தாள். மருத்துவமனையின் வராண்டாவில் மாட்டியிருந்த பிள்ளையார் படத்தைப் பார்த்துவிட்டு ஆங்காரம் வந்தவளாக, “நாங்க யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம். ஏன் எங்கள இப்படிச் சோதிக்கிற” என்று கத்தினாள். அவளது சத்தத்தைக் கேட்டு வந்த நர்ஸ் அவளின் அழுகையைப் பார்த்து அப்படியே நின்றாள். பிறகு அவளது கையைப் பிடித்து உலுக்கியபடி “நாற்பதாயிரம் ரூபாய் செலவாகும். பரவாயில்லையா, இல்லை கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போறீங்களான்னு டாக்டர் கேட்கச் சொன்னாரு. சீக்கிரம் சொல்லுங்க. அஞ்சு, பத்து நிமிஷத்துல ஊசி போட்டாத்தான் காப்பாத்த முடியும்” என்றாள். தங்கம் எதுவும் யோசிக்கவில்லை “சரி” என்றாள்.

டாக்டரின் அறையில் எவ்விதமான சத்தமும் வரவில்லை. நர்ஸ் மட்டும் ஒரு தடவை வெளியே வந்து வேறொரு அறையிலிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு போனாள். தங்கத்திற்குப் பயம் கூடியபடி இருந்தது. தன் கணவன் இறந்து போனால் தான் அநாதையாகிவிடுவோம் என்றும் தெருவில் மற்ற பெண்கள் போல எந்த விஷேசத்திற்கும் தாராளமாகப் போக முடியாது என்றும் அஞ்சியும் கூசியும் தான் முண்டச்சியாக வீட்டில் முடங்கியிருக்க வேண்டுமென்று நினைத்தபோது அவளுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. சிறிது நேரங்கழித்து அவர்கள் வந்த ஆட்டோவில் சம்பத்தும் பூங்கொடியும் வந்திறங்கினார்கள். பூங்கொடி தலைமுடியைக் கொண்டையிட்டிருந்தாள். தங்கத்தின் அருகிலிருந்த நாற்காலியில் பூங்கொடி அமர்ந்தவளாகப் பிள்ளைகளை அழைத்து வைத்துக்கொண்டாள். பிள்ளைகள் இருவரும் சம்பத்தைக் கண்டதும் அழத் தொடங்கினார்கள். பூங்கொடி அவர்களைச் சமாதானப்படுத்தினாள். அவர்களைத் தொடர்ந்து தங்கமும் அழத் தொடங்கினாள். “யாருக்கு என்ன பாவம் செஞ்சோம். இப்படிவந்து தலையில எழுதியிருக்கே. எந்தப் பாவி முண்ட கண்ணுபட்டுச்சோ. நாங்கதான் கஷ்டப்படுறோம். பிள்ளைகளையாவது படிக்கவச்சுக் கண்ணு குளிர அழகு பார்க்கலாமுன்னா முடியாமப் போகும் போல இருக்கே. என் புருஷன் போயிட்டான்னா என்னையும் என் பிள்ளைகளையும் யாரு பாப்பாங்க” என்று அழுதாள். அவள் அழுவதைப் பார்த்த சம்பத், கையை வாயில் பொத்தியபடி அழ ஆரம்பித்தான். அவனது வயிறு குலுங்கிக் குலுங்கி நின்றதைப் பூங்கொடி கவனித்தபடி இருந்தாள். அவளுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. பிள்ளைகளை உறங்கவைக்கலாமென மருத்துவமனையில் ஏதாவது நீளமான பெஞ்சு இருக்கிறதா என்று தேடினாள். அந்த மருத்துவமனையில் நீளமான பெஞ்சே இல்லை. மூன்று கால் நாற்காலிதான் இருந்தது. வேறொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கால்களை நீட்டியபடி பிள்ளைகளை மடியில் போட்டுக்கொண்டாள். பிள்ளைகள் இருவரும் உறங்கத் தொடங்கினார்கள். பிள்ளைகளைப் பார்த்ததும் தங்கத்தின் அழுகை மேலும் கூடியது. அவள் ‘ஹோ’ வென்று அழ ஆரம்பித்தாள். “டேய் சம்பத்து, என் பிள்ளைகளை நீதான்டா காப்பாத்தணும். இரண்டுமே பொம்பளைப் பிள்ளையா போச்சேடா” என்று அவனை இழுத்துக் கட்டிக்கொண்டு அழுதாள்.

வேலுச்சாமிக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்து மனைவியின் பிள்ளைதான் பூங்கொடி. அவள் அம்மா இறந்து பத்துப் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு வேலுச்சாமி தங்கத்தை மணமுடித்துக்கொண்டார். அவர்களது நிச்சயதார்த்தத்தின்போது பூங்கொடி சடங்காகி வீட்டிலிருந்தாள். சம்பத்துக்குக் காத்தமுத்து பெண் கேட்டார். தன் மகளைக் கால் இல்லாதவனுக்குத் தர முடியாது என்று வேலுச்சாமி சொல்லிவிட்டார். உடனே காத்த முத்துவும் தங்கத்தை அவருக்குப் பெண் தரமுடியாது என்று சொல்லிவிட்டார். நாப்பது வயசுக்காரனுக்கு இருபது வயசுப் பிள்ளையைத் தர்றோம். கால் இல்லைன்னா இப்போ என்னா என்று கட்சிக்காரர்களை வைத்து, பூங்கொடியைச் சம்பத்துக்கு மணமுடித்து வைத்துவிட்டார். பூங்கொடி அன்றிலிருந்து வேலுச்சாமியுடன் பேசுவதில்லை. ‘தங்கம்மா தங்கம்மா’ என்று பூங்கொடி தங்கத்தைப் பெயர் சொல்லித்தான் அழைப்பாள். தங்கம் அழுவதை அவளால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. கண்களைத் துடைத்துவிட்டு வாயைப் பொத்தியபடி அழுதாள்.

டாக்டரின் அறையிலிருந்து வந்த நர்ஸ் அவர்களிடம் “பணத்தைக் கட்டுங்கள்” என்று சொன்னாள். சம்பத் அவளிடம் “என்னாச்சு” என்று கேட்டதற்கு டாக்டர் வந்து சொல்வாரென்று மேல்மாடிக்குச் சென்று இரண்டு குளுக்கோஸ் பாட்டில்களுடன் வந்தாள். அவர்களைக் கடக்கும்போது, திரும்பவும் “பணத்தைச் சீக்கிரமாகக் கொண்டு வாருங்கள்” என்று சொன்னாள். சம்பத்தைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு நடந்தாள் தங்கம். அவர்கள் நடந்தேதான் வீட்டுக்கு வந்தார்கள்.

வீட்டின் உள்ளறையில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. அவள் சம்பத்தை வாசலிலேயே உட்கார வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றாள். பணத்தை எடுப்பதற்காகத்தான் அவள் வீட்டுக்குள் செல்கிறாள் என்று யூகித்துக்கொண்ட சம்பத், இந்த மனுஷன் செத்துப் போனால் எல்லாமே தன் தலையில் தானே விழும். பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டும். தங்கத்தை நல்லபடியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மிலிட்டரியிலிருந்து பென்ஷனை அவளது பெயருக்கு மாற்ற வேண்டும். ரேஷன் கார்டில் பெயர்நீக்கம் செய்ய வேண்டும். வேலுச்சாமியின் பெயரிலிருந்து தங்கத்தின் பெயருக்கு மாற்ற வேண்டும். பிறகு முனிசிபாலிட்டியில் போய் இறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்று அவனுக்குப் பல யோசனைகள் மனத்தில் நகர்ந்துகொண்டிருந்தன. யோசிக்க யோசிக்க அவனுக்கு மூக்கு வலியெடுக்க ஆரம்பித்தது. சுண்டு விரலை மூக்கினுள் நுழைத்து ரத்தம் வருகிறதாவென்று பார்த்தான். வரவில்லை. பிறகு கன்னத்தையும் உதட்டையும் தொட்டுப் பார்த்துக்கொண்டான்.

தங்கம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டினாள். சாவியை அவனிடம் தந்துவிட்டு நடந்தாள். தனக்குப் பின்னால் வரும் சம்பத்திடம் சொன்னாள். அவள் கண்களைத் துடைத்தபடி சம்பத்திடம் “அப்பாவுக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துறட்டா” என்று கேட்டாள். அவன் கோபமானவனாக, “அப்புறம் எதுக்கு என்னை ஆட்டோக்காரன் கிட்டே சொல்லி ஆளுக்கு முதல்லே வரச்சொன்னே. மாமாவோட தாய் பிள்ளைகளையும் உங்கப்பன் ஆத்தாளையும் கூப்பிட்டு வரச்சொல்ல வேண்டியதுதானே. ஏதாவது வேலைக்கின்னா நான் வரணும். உட்காந்து பழமை பேசணுமின்னா அந்தாளு வரணும். பரமு வீட்டுக்குப் போனீங்களே என்னன்னு சொன்னீயா. ஏண்டா சண்டை போட்டேன்னு ஒரு வார்த்தை கேட்டயா. இல்லை அந்த ஆளையாவது ஏன்யா இப்படி நடந்துக்குறேன்னு கேட்டயா” என்று திட்டினான். தங்கம் மீண்டும் அழத் தொடங்கினாள். அவன் “சரி சரி அழாதே அழாதே” என்று அவளைச் சமாதானப்படுத்தினான். அவள் முந்தானையால் கண்களைத் துடைத்தபடி பணத்தை வைத்திருந்த மஞ்சள் பையை மார்போடு இறுக்கமாக அணைத்தபடி நடந்தாள்.

தங்கம் அவனிடம், “நீ ஏண்டா அந்தாளுகிட்டே சும்மா சண்டை போட்டுக்கிட்டே இருக்கே. புதூர்க்காரன்கிட்டே போய் ஏன் மண்ணெண்ணெய்க்குப் பேரம் பேசிட்டு வந்தே. அவருதான் அவனுக்கு வாடிக்கையா தந்துட்டு இருக்காரில்லை. நீ ஏன் குறுக்கப்போய் விழுறே. நான்தான் கொஞ்ச நாள் பொறு. என்னோட ரேஷன் கார்டை உனக்குத் தர்றேன்னு சொன்னேனில்ல” என்று திட்டினாள். சம்பத் ஒன்றும் பேசவில்லை. “ஊரிலே இருக்கிறவங்க எல்லோரும் அவருகிட்டேயேவா மண்ணெண்ணெய் வாங்கணும்” என்று திரும்பக் கேட்டதற்குத் தங்கம் ஒன்றும் பதில் பேசவில்லை. அவர்கள் வேகமாக நடந்தார்கள். நாய்கள் குலைக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. இரவு நேரத்தில் நடமாட்டமில்லாத தெருக்களைக் கடக்கும்போது இருவருக்குமே பயமாக இருந்தது. தங்கம் பயந்துகொண்டேதான் நடந்தாள். அவளுக்கு மருத்துவமனைக்குள் நுழைந்ததும் சிறுநீர் வந்துவிட்டது. எங்கே போய் இருக்க வேண்டும் என்று தெரியாமல் சேலையைத் தூக்கிவைத்துக்கொண்டு நின்றவள் நர்ஸிடம் கேட்டாள். அவள் வேலுச்சாமியை அனுமதித்திருந்த தீவிரச் சிகிச்சைப் பிரிவுக்குப் பக்கத்திலிருந்த அறையைக் காட்டி அந்த அறையில் பாத்ரூம் வசதி உள்ளது என்று சொல்லிவிட்டு ரூபாயைக் கொண்டு வந்துட்டீங்களா என்றும் கேட்டாள். தங்கம் சிறுநீர்கூடக் கழிக்காமல் கொண்டு வந்த பணத்தை அவளிடம் தந்தாள்.

சம்பத் தீவிரச் சிகிச்சைப் பிரிவு படுக்கையின் பக்கம் சென்றபோது பூங்கொடி அறையின் வாசலில் உட்கார்ந்திருந்தாள். அவளுக்குத் தூக்கம் கண்களை உறுத்திக்கொண்டிருந்தது. பிள்ளைகள் இருவரும் அவளது மடியில் எதிரே எதிரே தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தனர். தங்கம் கழிப்பறையிலிருந்து வந்ததும் முதலில் வேலுச்சாமியைத்தான் பார்த்தாள்.

சம்பத் மருத்துவமனையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். பஸ் ஸ்டாண்டில் இருக்கும் டீக் கடையில் போய் டீ குடித்துவிட்டு வரலாமென்று மருத்துவமனையை விட்டு வெளியேறினான். சாலையின் நடுவே நடந்து சென்றான். யாரும் எதிரேயும் பின்பாகவும் வராதது அவனுக்கு நடப்பதற்கு உற்சாகமாக இருந்தது. காலையில் தனக்கு நிறைய வேலை இருப்பதாக நினைத்துக்கொண்டான். முருகேசன் அண்ணனுக்குத் தாலுகா ஆபீஸுக்குப் போய் அவரது வேலையை முடித்துத் தர வேண்டும். மருத்துவ மனையில் என்னென்ன வேலையிருக்கிறதோ என்று டீக்கடையின் முன்பாக நின்றான். டீயைக் குடித்துவிட்டு வீட்டுக்கு நடந்தான்.

(6)

சம்பத் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது இரண்டு எலிகள் குறுக்காக ஓடிக்கொண்டிருந்தன. அறையில் நேற்றிரவு படுத்திருந்த பாயும் தலையணையும் அப்படியேதான் கிடந்தன. அவசரத்தில் சுருட்டிவைக்காமல் சென்றிருந்தது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. குனிந்து அவற்றை எடுத்துவைத்தான். ஓடிய எலிகள் திரும்பவும் அவனைக் கடந்துபோயின. சம்பத்துக்காகத்தான் காத்திருந்தது போல அவர்களின் வீட்டுக்கு எதிரே குடியிருந்த பெண் அவனைப் பார்த்ததும் வந்தாள். காத்த முத்துவைப் போலீஸ் காரர்கள் நேற்றிரவு பிடித்துக் கொண்டு போய்விட்டதாக அவள் சொன்னாள். வீட்டில் வைத்திருந்த அரிசி மூட்டைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டதாக அவள் சொன்னாள். சம்பத்துக்குப் பயமாக இருந்தது. அப்பாவிற்கு ஊரில் யாரோ வேண்டாதவர்கள் தான் பெட்டிஷன் போட்டு இப்படிச் செய்துவிட்டார்கள் என்று நினைத்தான். வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் மறைத்துவைத்திருந்த அரிசி மூட்டைகளை எல்லாம் வேறு இடத்திற்கு மாற்றிவைக்க வேண்டுமென யோசனை செய்தான். தன்னிடம் வேறு பெயரிலிருந்த ரேஷன் கார்டுகளைச் சாமி படங்களுக்குப் பின்பாக ஒளித்துவைத்தான். அப்பெண்ணிடம் இரண்டு மூட்டை அரிசியை மட்டும் உங்களது வீட்டில் வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டான். அவள், “உங்கம்மா ஏற்கனவே ஒரு மூட்டை அரிசியைக் கொடுத்துவைச்சிருக்காங்க. நீ வேணா டீக்கடைக்காரரு கிட்டே போய்க் கேளு” என்று சொன்னாள். அவனும் “சரி” என்று டீக்கடைக்குப்போனான்.

அவன் டீக்கடைக்காரரிடம் கேட்டுவிட்டுத் திரும்பும்போது அவள் வீட்டு வாசலில்தான் நின்றிருந்தாள். சம்பத் கக்கூஸ் போக வேண்டுமென்ற அவசரத்தில் அவளைக் கடந்து வீட்டுக்குள் போனான். அவள் அவனை இடை மறித்து “டீக்கடைக்காரர் என்ன சொன்னார்” என்று கேட்டாள். சம்பத் எரிச்சலுடன் “ஒரு மூட்டையை மட்டும் வைச்சுக்கச் சொல்லியிருக்காரு” என்று சொன்னான். அவளும் “வேணுமின்னா ஜீனியை வேணா தாயேன். எங்கப் பந்தக்கடையிலே போய் வைச்சிருக்கேன்” என்றாள். சம்பத் வேண்டாமென்றான். அரிசி குறைந்தால்கூடப் பரவாயில்லை. ஜீனி குறைந்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தவன் பேசாமல் நின்றான். அவள் வாசலில் நின்றுகொண்டிருந்தது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஏன் இப்படிக் காலையில் வந்து நிற்கிறாள் என்று தெருவை வேடிக்கை பார்த்தான். அவள் அவனது அருகில் வந்து நின்றுகொண்டு, “எங்க வீட்டு ரேஷன் கார்டிலிருந்து என் பேரையும் என் புருஷன் பேரையும் மட்டும் தனியாக எடுத்து வேற புது கார்டு வாங்கணும் சம்பத்து. நீதான் தாலுகா ஆபீஸுக்குப்போய் செய்து தரணும். முருகேசனுக்குப் பாரேன். நீ போய்ச் சொன்னதும் இரண்டு மூணு நாளில் அவங்க சம்சாரம் பேரையும் பிள்ளை பேரையும் சேர்த்து எழுதித் தந்துட்டாங்க” என்றாள். சம்பத், “எதுக்கு இரண்டு ரேஷன் கார்டு. உங்க மாமியாரும் உங்ககூட ஒன்னாத்தானே இருக்காங்க” என்று கேட்டான். அவள், “கலர் டீ.வி தர்றாங்களாம். இரண்டு கார்டு இருந்தா இரண்டு டீ.வி வாங்கலாமில்லே” என்று சொன்னதும் சம்பத் சிரித்துக்கொண்டான். பிறகு அவன் “சரி செஞ்சு தர்றேன்” என்று சொன்னான். சம்பத்திடமிருந்து இந்த வார்த்தையைக் கேட்ட பிறகுதான் அவள் வாசலை விட்டு இறங்கினாள். சம்பத் அவசரமாக கக்கூஸில் போய் அமர்ந்துகொண்டான்.

சம்பத் குளித்துவிட்டு வேறு உடை மாற்றி வரும்போது பத்து மணியாகியிருந்தது. தெருவில் யாருமில்லை. டீக்கடையில்தான் இரண்டு மூன்று பேர் அமர்ந்திருந்தனர். அவனுக்குப் பசியாக இருந்தது. குளித்துவிட்டு வந்ததால் தூக்கமும் அசத்தியது. என்ன செய்வது என்று தெரியாதவனாக டீக்கடையில் போய் அமர்ந்தான். கீரை வடையும் டீயும் சாப்பிட்டான். அங்கிருந்தவர்கள் அவனிடம் காத்தமுத்துவைப் பற்றி விசாரித்தார்கள். தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் தான் இப்போதுதான் தன் மாமாவை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வருவதாகவும் அவருக்கு ராத்திரி நேரத்தில் நெஞ்சுவலி வந்துவிட்டதாகவும் சொன்னான். டீயைக் குடித்தபடி தொலைக் காட்சியைப் பார்த்தான். அதில் வடிவேல் காமெடியைப் பார்த்ததும், சம்பத் அருகில் போய் உட்கார்ந்துகொண்டான். டீ குடித்துவிட்டு “கணக்கில் எழுதிக்கங்க” என்று சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு நடந்தான்.

அவன் நடந்து சென்றுகொண்டிருந்த பாதைக்கு எதிர்ப் பக்கமிருந்து பூங்கொடி வந்துகொண்டிருந்தாள். அவளோடு தங்கத்தின் மூத்த பிள்ளையும் நடந்து வந்துகொண்டிருந்தது. இரண்டாவது பிள்ளையை அவள் தூக்கித் தோள்மேல் போட்டிருந்தாள். பூங்கொடி மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தாள். அவளது கண்கள் சற்றுமுன் அழுது கலங்கியிருந்ததைச் சம்பத்தால் தூரத்திலிருந்தே பா£க்க முடிந்தது. அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட போது பிள்ளைகள்தான் முதலில் மாமா என்று ஓடிவந்தன. பூங்கொடி உதட்டைப் பிதுக்கியபடி பிள்ளைகளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுக் கையை அசைத்தாள். சம்பத்துக்குத் திக்கென்றிருந்தது. “உண்மையா” என்று கேட்டான். அவள் “ஆமாம்” என்று அவனிடமிருந்து வீட்டுச் சாவியை வாங்கிக்கொண்டாள். “வீட்டிலிருக்கும் ரூபாயை எடுத்துட்டு ஆஸ்பத்திரிக்கு வர்றேன். அதுவரைக்கு நீங்க எங்கேயும் போகாமல் இருங்க” என்று சொன்னாள். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பாவையும் போலீஸ்காரர்கள் கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். தன்னையும் போலீஸ்காரர்கள் அழைத்துக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்று யோசித்தபடி நின்றான். அவனைக் கடந்து ஊளையிட்டபடி நாயொன்று ஓடியது. அதைத் தொடர்ந்து சிறுவர்கள் கல்லை எடுத்து விரட்டியபடி ஓடினார்கள். மூன்று நாட்கள் தான் எங்காவது போய் இருந்துவிட்டு வரலாமென்று நினைத்து பஸ் ஸ்டாண்டுக்குச் சென்றான். வெளியூருக்குக் கிளம்பும் பஸ்ஸில் ஏறி அமர்ந்துகொண்டான். இறந்துபோன தன் அக்காவின் கணவனுக்குச் செய்ய வேண்டியதைக் கூடச் செய்யாமல் இப்படிச் செல்கிறோமே என்று வருந்தியபடி டிக்கெட் எடுத்துக்கொண்டான். தன் அப்பா யாரையேனும் வைத்து ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்திருப்பார் என்ற நம்பிக்கை அவனிடம் இருந்தது. அதே சமயம் அவர் தன்னையும் காட்டிக்கொடுத்திருப்பார் என்றும் நம்பினான். ஜன்னல் பக்கமாகத் தலையை வைத்துக்கொண்டு கண்களைத் துடைத்துக்கொண்டான். அவனுக்குத் தங்கத்தின் பிள்ளைகளும் தங்கத்தின் முகமும் கூடவே பூங்கொடியின் முகமும் மனத்தில் வந்து நின்றன.

(7)

பூங்கொடி 12ஆம் நம்பர் ரேஷன் கடையில் வரிசையில் நின்றிருந்தாள். அரிசி வாங்குவதற்கு அன்று கூட்டமாக இருந்தது. அவள் வரிசையில் தனக்கு முன்பாக நின்றிருந்தவர்களைத் தள்ளிக்கொண்டிருந்தாள். அவளிடம் மூன்று ரேஷன் கார்டுகள் இருந்தன. வாங்கிய அரிசியைக் கொண்டுபோவதற்கெனத் தள்ளுவண்டியைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தாள். ஆண்களின் வரிசையில் கூட்டம் குறைச்சலாக இருந்தது. யாரையாவது வைத்துக் கூப்பனுக்குப் பதியலாமென்று பார்த்தாள். அவளுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. பெண்களின் வரிசையில் கூட்டம் குறைவதாக இல்லை. புதன்கிழமை நாளதுவுமாக எதற்கு இவ்வளவு பேர் நின்றிருக்கிறனர் என்று அவள் வரிசையிலிருந்து விலகிவிடாமலிருக்கத் தனக்கு முன்னால் நின்றிருந்தவளின் தோள்பட்டையைப் பிடித்தபடி நின்றிருந்தாள். அவளுக்குப் பின்னால் இருந்த பெண் அவளது பிருஷ்டத்தில் முழங் காலால் எத்திவிட்டுக்கொண்டே, அவளது தோளைப் பிடித்துத் தள்ளிவிட்டாள். பூங்கொடி தனக்கு முன்னால் இருந்தவளோடு கீழே விழப்போனாள். பூங்கொடியை அப்பெண் பிடித்துக்கொண்டாள்.

பெண்களின் வரிசை நேரமாக நேரமாக நீண்டுகொண்டே போனது. பூங்கொடிக்கு எரிச்சலாகவும் கோபமாகவும் இருந்தன. எப்படித்தான் சம்பத் கட்டைக்காலை வைத்துக்கொண்டு வரிசையில் நின்று அரிசி வாங்கினானோ என்று நினைத்தாள். அழுதும்விட்டாள். கூட்டத்தை வரிசைப்படுத்துவதற்காக வந்த ரேஷன் கடைக்காரன் கையைப் பிடித்து இழுப்பதுபோல இழுத்து விடுவதும் அசமந்தமாக நின்ற பெண்களை மாரைத¢தட்டி விடுவதும் மாரைப்பிடித்துக்கொள்வதுமாக வரிசையிலிருந்த பெண்களின் ஊடே கடந்துசென்றான்.

சம்பத்தை தாசில்தார் விசாரணைக்கென அழைத்துச்சென்று நான்கு நாட்களுக்கு மேலாகிவிட்டது. யாரை வைத்து என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. தன் அப்பா இருந்தால் ஒருவேளை ஏதாவது செய்திருக்கலாமென்று நினைத்தவள் கண்களைத் துடைத்துக்கொண்டாள். பிறகு கூட்டத்தோடு கூட்டமாக நெருக்கிக்கொண்டு போனாள். அவளுக்கு எப்படியாவது இன்று கூப்பன் வாங்கிவிட வேண்டுமென்ற வெறி வாய்விட்டுக் கத்தவைத்தது.

பூங்கொடி ஆங்காரம் கொண்டவளாகத் தனக்கு முன்பாக நின்றிருந்தவளைப் பிடித்தபடி வரிசையை விட்டு விலகினாள். பிறகு இரண்டு மூன்று பேரையும் பிடித்துக்கொண்டு கூட்டத்தின் மேல் சாய்ந்தாள். வரிசை குலைந்து முன்னால் நின்றிருந்தவர்கள் பின்னாலும் பின்னால் நின்றவர்கள் முன்னாலுமாக மாறினார்கள். பூங்கொடி பத்துப் பதினைந்து பெண்களுக்கு முன்பாக நின்றிருந்தாள். அவளுக்குச் சந்தோசமாக இருந்தது. இனி இதேபோல் தான் வரிசையைக் குலைத்து நிற்க வேண்டுமென்று நினைத்தாள்.

பூங்கொடி கூப்பன் வாங்கியபோது பகல் ஒரு மணியாகிவிட்டது. அவளிடமிருந்த சாக்குப்பைகளை எடுத்து அரிசி போடும் இடத்திற்குச் சென்றாள். அங்கேயும் கூட்டமாகத்தானிருந்தது. கூட்டத்தில் பில் காணாமல் போய்விடுமென்ற பயத்தில் சட்டைக்குள் திணித்துக்கொண்டாள்.

தங்கம் ரேஷன் கடைக்குப் பூங்கொடியைத் தேடி வந்தாள். பூங்கொடியை அந்தக் கூட்டத்தில் வந்ததும் கண்டுபிடித்துவிட்டாள். நேராக அரிசி போடும் இடத்திற்குத்தான் போனாள். இருபது கிலோவாக மூன்று மூட்டை அரிசியை வாங்கித் தள்ளுவண்டியில் போட்டுக் கொண்டாள் பூங்கொடி. தங்கமும் அவளும் நேராகப் புரோக்கர் வீட்டுக்குத்தான் தள்ளிக் கொண்டு போனார்கள். பூங்கொடி தள்ளு வண்டியை அவரது வீட்டின் முன்பாக நிறுத்திவிட்டு வீட்டுக்குள் போனாள்.

தங்கத்திற்கு அந்தப் புரோக்கர் பழக்கமானவர்தான். வேலுச்சாமியிடம் பாட்டில் வாங்கி விற்றவர்தான். தங்கம் தன் கணவன் முகத்திற்காகவாவது ஒரு ரூபாய¢ இரண்டு ரூபாய¢ கூட்டி வாங்கிக்கொள்வார் என்று நினைத்தாள். பூங்கொடி வாசலுக்கு வந்து நின்று மூட்டையைப் புரட்டிப்போட்டாள். “சீக்கிரமா புரட்டிப்போடும்மா யாராவது வந்துறப்போறாங்க” என்று ஒவ்வொரு மூட்டையாக வீட்டுக்குள் கொண்டுபோய் போட்டாள். தங்கம் “எவ்வளவு ரூபாய் தர்றான்” என்று கேட்டாள். அதற்குப் பூங் கொடி, “அதே விலை தான். எல்லாப் பயலுகளும் பயந்து போயிருக்கானுங்க. வர்ற ரூபாயை ஏன் வேண்டாங்கணும். நம்ம என்ன பாலம் கட்டியா கமிஷன் அடிக்கிறோம்” என்று தள்ளு வண்டியைத் தள்ளிக்கொண்டு வீட்டுக்குப்போனாள். அவள் வேகத்திற்குத் தங்கத்தால் நடக்க முடியவில்லை. மதிய வெயில் அவளது பொட்டில்லாத நெற்றியில் அழுத்தமாக விழுந்தது. வெயிலின் உஷ்ணத்தைப் பொருட்படுத்தாமல் அவர்கள் இருவரும் நடந்துகொண்டிருந்தார்கள். தங்கம் தனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த பூங்கொடியைத் தொடர்ந்தாள். பூங்கொடி வெறிகொண்டவள் போல் யாரையோ தேடிப் போவதைப் போல நடந்தாள். அவர்கள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் நடந்துகொண்டிருந்தார்கள். றீடுக்குள் கொண்டுபோய் போட்டாள். தங்கம் “எவ்வளவு ரூபாய் தர்றான்” என்று கேட்டாள். அதற்குப் பூங் கொடி, “அதே விலை தான். எல்லாப் பயலுகளும் பயந்து போயிருக்கானுங்க. வர்ற ரூபாயை ஏன் வேண்டாங்கணும். நம்ம என்ன பாலம் கட்டியா கமிஷன் அடிக்கிறோம்” என்று தள்ளு வண்டியைத் தள்ளிக்கொண்டு வீட்டுக்குப்போனாள். அவள் வேகத்திற்குத் தங்கத்தால் நடக்க முடியவில்லை. மதிய வெயில் அவளது பொட்டில்லாத நெற்றியில் அழுத்தமாக விழுந்தது. வெயிலின் உஷ்ணத்தைப் பொருட்படுத்தாமல் அவர்கள் இருவரும் நடந்துகொண்டிருந்தார்கள். தங்கம் தனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த பூங்கொடியைத் தொடர்ந்தாள். பூங்கொடி வெறிகொண்டவள் போல் யாரையோ தேடிப் போவதைப் போல நடந்தாள். அவர்கள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் நடந்து கொண்டிருந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *