இரக்கமற்ற விதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 10,087 
 
 

மணியாடர் பட்டுவாடா செய்பவர் அதிக ஒட்டடையும் குறைந்த ஓலையும் நிறைந்த குடிசை வீட்டுக்குள் இருந்த ஐம்பத்தேழு வயது பேச்சியைப் பெயர் சொல்லி அழைத்தார்.

‘த யாருப்பா நீ அதிகாரமா பேரச் சொல்லிகூப்புடற” என்றபடி, கமா போன்ற வளைந்த முதுகுடன் பேச்சி வெளியே காட்சி தந்தாள்.

“புது டெல்லியிலிருந்து மூக்கன்ங்கிறவர் ஆறாயிரத்து ஐந்துறூறு மணியாடர் அனுப்பி இருக்காரு. கைரேகை வச்சட்டு வாங்கிக்கோ”.

பேச்சிக்கு உடம்பெல்லாம் ஒரு விநாடி சிலுத்து அடங்கியது. தனது வலது கையை எடுத்து புகயிலைச் சாறு ஒழுகுகின்ற, நாலைந்து பற்களே உள்ள பொக்கை வாயில் கடித்துக்கொண்டாள். மணியாடர்க்காரனை சில நொடிகள் உற்றுப்பார்த்தாள். கண்ணீர் கண்களில் ஊர்வலம் வரத்தொடங்கியது. அந்தக் கண்ணீரில் சூடு அதிகம் இல்லை. குளிர்ச்சியாக இருந்தது. அப்போதுதான் பேச்சி தன் வாழ்நாளில் முதலாவதாக ஆனந்தமாக அழுதாள். குடிசைக்குள் விர்ரெனப்புகுந்து, தனது கூன் உடம்பை சாணி மெழுகிய தரையில் புரட்டியபடியே “ஊருக்காத்த அய்யனார்ரே, பாண்டி முனீஸ்வரா, மாரியாத்தா, எங்குடிய வெளங்க வெச்சுட்டடி. என்னக் கரசேத்திட்டீக. எம்புள்ளக்கி நல்ல வழிகட்டிப்புட்டீங்க” என்று விபூதியை அள்ளி நெற்றியிலும் கழுத்திலும் பூசிக் கொண்டு வெளியே வந்தாள். மணியாடர் காரர் பேச்சியின் விரல் ரேகையை மைதடவி அட்டையில் பதித்தார். பேச்சிக்கு விரல் நடுங்கியபடி இருந்தன. பதிமூன்று ரூபாய் நோட்டைக் கொடுத்து, சரிபார்க்கச் சொன்னார். பேச்சி ரூபாய் நோட்டுகளை முகத்தில் பயபக்தியடன் ஒத்தி எடுத்து மனதுக்குள் “மூக்கனின் உழைப்பு இது! மூக்கனின் வியர்வை இது! என் இரத்தத்தின் சம்பாத்தியம்! என்று நினைத்துக் கொண்டாள்.

“கீழ செய்தி எழுதியிருக்கு வாசிக்கிறேன்” என்று வாசிக்த் தொடங்கினார். பேச்சியும் பதிலுக்கு “ஆங்…ஆங்…வாசிப்பா…” என்று யாசித்தாள்.

“மூக்கன் எழுதுவது. நலம் நலமறிய ஆவல். இரவு பகல் பாராது லாரி ஓட்டுகிறேன். நன்றாகச் சம்பாதிக்கிறேன். அனுப்பி உள்ள 6500 ரூபாயில் வாத்தியாரிடம் வாங்கிய கடன் 1500ஐ திருப்பிக் கொடுக்கவும். சேட்டிடம் உள்ள தாலிக் கொடியை 1000 ரூபாய் கொடுத்து மீட்டுட்டு வா. 500 ரூபாய்க்கு கீற்று மூங்கில் வாங்கி குடிசையை சரி பண்ணு. மீதி 3500க்கு சேல துணி மணி வாங்கிக்க. கவுச்ச வாங்கி சாப்பிடு. வண்டி மாத்துனா ஊருபக்கம் வருவேன். ஒரு வருசம் போனவுடன் ஓட்டு வீடா கட்டிப்புடலாம். இப்படிக்கு மூக்கன். அந்த மணியாடர்க் காரர் செய்தி அட்டையைக் கிழித்து கிழவியிடம் ஒப்படைத்து நகர்ந்தார்.

வாத்திhர் வீட்டிற்குச் சென்று நன்றி சொல்லி ரூபாய் 1500ஐக் கொடுத்தாள். மூக்கன் அனுப்பிய செய்தி அட்டையை வாத்தியாரிடம் கொடுத்தாள். வாத்தியாரும் செய்தி அட்டையை ஆர்வத்துடன் படித்துப் பார்த்து, வாய்நிறயச் சிரித்துக் கொண்டே “நல்ல காலம் பொறந்துருச்சு! கவலைய விட்டுத் தள்ளுங்கோ. புள்ளையாண்டான் திரும்பி வந்ததும் காலா காலத்துல ஒரு கால்க்கட்டுப் போட்டு வுட்டுருங்கோ.

பேச்சி தன்னை விட ஐந்தாறு வயது குறைந்தவர் என்றும் பாராமல் அவரை கையெடுத்துக் கும்பிட்டபடி “ அய்யா ஒங்க வாய் முகூர்த்தம் பலிக்குணும்யா! எந்தம்பி, வூட்டுக்குத் திரும்பிப் போயி இப்ப என்னடா சொல்ற நாயீன்னு நாக்கப் புடுங்கற மாதிரி கேட்டுப்புடணும். கேட்டானே ஒரு கேள்வி, “சொந்த பந்தமெல்லாம் அப்புறந்தான். பொண்ணு யார் கொடுப்பான்னு” குண்டுபய கேட்டானே? என்று பொருமித்தள்ளினாள். மேலும் வாத்தியாரிடம் சொன்னாள்,

“இப்ப எம் புள்ள டெய்வரா இருக்கான். மாசம் ஆயிரம் கணக்குல சம்பாதிக்குதுன்னு சொல்லி, இந்த பணத்தையும் கடுதாசியையும் அவ முகத்துல வீசி அடிச்சிட்டு எம் மருமவள வீட்டுக்கு கூட்டியாரணும்” என்று பதைபதைத்தாள். வாத்தியார் சந்தோஷமாகத் தலையாடிட்டிக் கொண்டு போய்; விட்டுப்போன கல்யாணப்பேச்சைத் தொடர்ந்து முடித்தார்கள். வரும் தையில் திருமணம் என்று முடிவானது. பேச்சி அளவில்லாத மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். இந்த நல்ல செய்தியை, மூக்கனிடத்து சொல்ல ஆர்வப்பட்டாள். ஆனால் நிறைவேறவில்லை. மறுநாள் ஞாயிற்றுக் கிழமை சேட்டடிடம் சென்று தாலிக்கொடியை மீட்டுவந்தாள். குறைந்த விலையில் தனக்குப் புடவை ஒன்றையும், சற்று அதிக விலையில் தன் வருங்கால மருமகளுக்குப் புடவை ஒன்றையும் எடுத்துக்கொண்டு வந்தாள். நல்லவர்கள், பெரியவர்கள், படிக்கத் தெரிந்தவர்கள் என்று பெருமையடித்துக் கொண்டாள்.

மூக்கனோடு முன்பு பழகிய அந்த துஷ்ட தடிப்பயலுகளுக்கு மட்டும், கடிதத்தைக் காட்டவில்ல. தெருவில் அவர்களைக் கண்டவுடன், மனதிற்குள்ளாக, இதுகளுக்கு சாவு வரமாட்டேங்குதே? மூக்கனை, இதுகளுக்கிட்டடேயிருந்து அய்யனாரு தான் பிரிச்சுவிட்டுப்புட்டாரு. மூக்கனை, துஷ்டர்களுக்கிட்ட இருந்து காப்பாற்ற வேண்டும், என்று புலம்பிக் கொண்டாள். வெயில் ஏறிடுச்சு. கூலிக்கு நாத்து நடப் போகமுடியாது. மருமகளுக்காக எடுத்த புடவை, இனிப்புப் பொட்டலம், மல்லிகைப் பூப்பந்து இவற்றையெல்லாம் கொடுத்து, தம்பியோடும் தம்பியின் மனைவியோடும் கல்யாணத்தை எப்படி நடத்துவதென, உரிமையோடு விவாதம் செய்தாள். தன் மகன் மூக்கனுக்குப் பிடித்த உணவு, பிடிக்காத உணவு, கோவம் எப்போ வரும், குணம் எப்போ வரும் என்றெல்லாம் மருமகளிடம் விரிவாக விளக்கிப் பேசி, மோர் மட்டும் குடித்துவிட்டு, வீட்ட நோக்கி விரைந்தாள். “கீத்து மேய்ப்பவன் ஆள் இல்லேன்னா போய்விடுவான். அப்புறம் அவனகையில் பிடிக்கிறது கஷ்டம், என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள். பேச்சிக்கு திடீரென மயக்கமாக வந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. மெலிந்த உடல் லேசாக ஒரு சுழட்டு சுழட்டி எடுத்து, கீழே விழுந்தாள். அவ்வாறு விழுந்ததும், பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவந்து, பேச்சியைத் தூக்கினார்கள். சோடாவை வாங்கித் தெளித்தார்கள், பலனில்லை. பேச்சியின் தூய ஆத்மா வானுலகத்தை நோக்கிப் பயணம் மேற்கொண்டு ஓரிரு நிமிடங்கள் ஆனது.

பேச்சியை குடிசையினுள் படுக்கவைத்தார்கள். பேச்சியின் தம்பி மாமன் முறை பங்களாளிகள் ஒன்று கூடினர். பெண்கள் கூட்டம் மாறி மாறி அழுத வண்ணம் இருந்தனர். லாரி ஓட்டி வடக்குதிசை போன மூக்கனை எங்கிருந்தாலும் கொஞ்ச நேரத்தில் கொண்டுவந்து விடவேண்டுமென முடிவெடுத்து வாத்தியாரின் உதவியை நாடினார்கள். வாத்தியாரும் மூக்கன், லாரி ஓட்டும் டவுனுக்குத் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் விரைந்தார். துக்கம் விசாரிக்க வந்த கிழவர்களும், கிழவிகளும், குழு குழுவாக பிரிந்து நின்று பேச்சியின் பெருமையை பேச ஆரம்பித்தார்கள்.

“கெய்விக்கு நல்ல சாவு. கீழே கெடக்கல, மேலே கெடக்கல. நீ பார்த்தேன் , நான் பார்த்தேன் என்ற சொல்லுக்கு இடமில்லாமல், பட்டுன்னு போயிடுச்சு”.

“என்ன ஒரு கொற ஒத்த புள்ளக்கி கண்ணாலம் பண்ணி பேர புள்ளய பார்க்க கொடுத்து வக்கில.”

“புள்ள மேல அம்புட்டு பாசம் வச்ச மவராசி, புள்ள திருந்தி ஒழுங்கா வரப்போ போயிடுச்சு”.

“வேல வெட்டி அல்லாத மவங்காரனுக்கு வாரத்துக்கு மூணு தடவயாச்சும் மீனு கோழி காச்சி ஊத்துவா”

“மவங்காரன் குடிக்கிறத கண்டாலும் பெரிசா ஒண்ணும் கண்டுக்கமாட்டா”.

“வெளக்கு வெச்சுட்டா போதும், மவங்காரன் எங்க குடிச்சிட்டு உளுந்து கெடக்கறானோ, தொளாவிட்டு வந்து ஆள புடிச்சி குடிசையிலே கொண்டாந்து போடுவா”.

“ஒம்புள்ளக்கி நீதான் செல்லம் கொடுக்கறன்னு யாராச்சும் சொல்லிட்டா போதும், லப்புன்னு சொன்னவங்ககிட்ட சண்டைக்கி போயிடுவா”.

“அல்ப ஆயுசுல போய்ச் சேர்ந்த எம்புருசன் வுட்டுப்போன ஒரே சொத்து, மூக்கன்தான். எனக்கு மட்டும் ஆசயில்லையா? மூக்கன ஊரப்போல, நாட்டப்போல ஆக்கணும்னு, பேர் ஆச இல்லையா என்னா? கிரகம் சரியில்லை. பொங்கு சனி, மங்கு சனி, ராகு கேது ஒன்னா வந்து எம்புள்ளய தாக்குது. இன்னும் ஆறு மாசம் போவனு முன்னு குறிகாரர் சொன்னான்னு, அடிக்கடி கெய்வி சொல்லித் தீர்ப்பாளே.”

“மூக்கன் தண்ணியப் போட்டு வந்து சில நேரத்துல கெய்விய நாராசமாகத்திட்டுவான். எப்போதாவது அடிக்கவும் செய்வான். கெய்வி, குடிசய விட்டு வராதே. ஊரு சனம் போய் என்னான்னு கேட்டாக்கூட, இல்ல சும்மா தண்ணி போட்டு மூக்கன் கத்தறான்னு வந்தவங்கள விரட்டி அடிப்பாளே!”

“புள்ள நல்லா இருக்கணும், புள்ள இருக்கணும்ன்னு, கெய்வி போகாத கோவில் இல்ல. குளம் இல்ல. பார்க்காத ஜோசியம் இல்ல.”

“மூக்கன் வூடு தங்காம, அவன் கூப்டான், இவன் கூப்டான்னு ஊரு சுத்தரப்போ கெய்வி புள்ளவரும்னு ராத்திரி முழுக்க வெளக்க கொளுத்தி வச்சிருப்பாளே”.

“ஒரு நாள் தீபாவளியன்னிக்கு திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு வெளக்குப் போடப் போறேன்னு சொல்லி, கெய்வி கடன வாங்கிக் கொடுத்த பணத்துல அடுத்த நிமிசமே தண்ணிபோட்டு வந்து ஊர ரெண்டு பண்ணிவிட்டான். வயத்தெரிச்சலோடு கெய்வி வீதிக்கு வந்து நின்னு அவன் பண்ற எல்லாத் தப்பயும் சொல்லி சாபம் இட்டா பாரு எப்படித் தெரியுமா?”

“ஆமா எப்பிடி திடீர்னு மூக்கன் திருந்துனான்? எப்பிடி ஒழுங்கா லாரி ஓட்டி பொழக்க ஆரம்பிச்சான் பெரிய அதிசயமா இருக்கே?”

“ஓ அந்த கதய கேக்குறயா? கெய்விட்ட ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்து ஒம்புள்ளக்கி ஒரு கண்ணாலம் காட்சி செஞ்சா சரியாப் போவும். வர்றவ எல்லாத்தையும் சரி பண்ணிடுவா! அதான் சரின்னு தன் தம்பி கோமனிடம், சென்று பெண் கேட்டாள். அவனுக்கு வந்துச்சு பாரு கோவம். வேல வெட்டி இல்லாத பயலுக்கு, எப்படித் தரமுடியும்? என்று நியாயத்த சொல்லி வெரட்டிப் புட்டான். கெய்வி அழுதுகிட்டே, ரெண்டு நாளா சரியா சாப்புடாம இருந்திச்சு. மனசு ஒடிஞ்சி போயி தூக்கு மாட்டிக்கப் போனப்ப எதேச்சயா மவங்காரன் மூக்கன் உள்ளே வந்து காப்பாத்துன்னாம். மூக்கனுக்கு கோவம் தீருல. அருவாள எடுத்துட்டு மாமாங்காரன வெட்டிப்புட்டு வர்றேன்னு, கௌம்புனாம் பாருங்க அவன ஊரு சனமும் வாத்தியாரும் தடுத்து நிறுத்தினாங்க.

இதுதான் சமயம்னு வந்த சனமெல்லாம் மூக்கன ஒரு பிடி பிடிச்சது. பொண்ண பெத்தவன் கேட்டதுல என்ன தப்பு? ஒனக்கு ஒரு தங்கச்சி இருந்தா வேல வெட்டி இல்லாத தடுமாடுக்கு கட்டிக் கொடுப்பியா? ரோசம் வருதில்ல. சரி போனதெல்லாம் போவட்டும்.

இனிமேயாச்சும் வேல வெட்டிக்குப் போ. ஊருக்காரங்களோட வுட்டுப்போன சம்மந்தத்த பேசி முடிக்கிறோம்னு சொல்லி ஏற்கனவே டிராக்டர் ஓட்ட அரைகுறையாத் தெரியும், லாரி ஓட்ட லைசென்சு வேணுமின்னான். வாத்தியாரே பணத்த கடன் கொடுக்க முன் வந்தாரு. அவரே ஒரு லாரி சொந்தக்காருகிட்டே மூக்கனகொண்டு போய் சேத்து நல்லது செஞ்சு வுட்டுருக்காரு. பாவம்! வெண்ணெய் திரண்டுவரும் போது, சட்டி ஒடஞ்ச கதயா, கெய்வி போயிருச்சு” என்று பெரு மூச்சு விட்டார்.

வாத்தியார் மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னால் ஒரு அட்டப்பெட்டி நிறைய ஐஸ்கட்டியை வைத்துக் கொண்டு வந்தார். உறவினர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, “மூக்கன புடுச்சாச்சா? எப்ப வருவான்? என்றனர். வாத்தியார் விவரமாகச் சொல்ல ஆரம்பித்தார். மூக்கன் முந்தா நேத்துதான் லாரி செட்டுக்குப் போன் பண்ணினானாம். குல்பாக்கம் பக்கம் தொவர மூட்டை ஏத்திட்டு இன்னிக்கு நைட்டு மதுர வந்து சேந்துருவானாம். அதுக்குப் பொறவு எந்த போன் தகவலும் அவங்கிட்டேயிருந்து கிடைக்கலயாம். லாரி சங்கத்து ஆபீஸ் மூலமா எல்லா செக் போஸ்ட்லயும் சொல்லி ஆள கண்டுபிடிச்சுடலாம்னு லாரி ஓனர் சொன்னாரு.” என்று நிறுத்தினார். அனைவரின் முகமும் சுருங்கிப் போனது. ஒருவர், “அய்யோ கொடுமதான் அந்தப் புள்ள பஞ்சமா பாதகமா பண்ணுச்சா? பெத்தவ செத்த விசயம் கூட தெரியாம போச்சே? என்றார் வர்த்தியார் தந்த ஐஸ்கட்டியை எதிர் வீட்டில் ஓசி வாங்கப்பட்ட மரப் பெஞ்சில் பரப்பினார்கள். அதன் மேல் பேச்சியை படுக்க வைத்தார்கள். அர மணிக்கு ஒரு தரம் வாத்தியார் லாரி அதிபரைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டாhர். பலனில்லை. அப்பொழுது பேச்சியப் பற்றி அதிகம் பேச்சில்லை. மூக்கனைப் பற்றியே முணுமுணுத்தார்கள்.

“வடக்கே லாரி ஓட்டிடடுப் போனவனாம். ஏங்கே இருக்கானும்னு தகவலில்லை. தெய்வம் ரொம்பவெ சோதிக்குது.” என்ற அனுதாபம் தெரிவித்த வண்ணம் இருந்தார்கள்.

இரவு மெல்ல மெல்ல நகர்ந்து. அதிக வெளிச்சத்த கொண்டு வந்தது. மூக்கன் கிடைத்தபாடில்லை… கால… மதியம்… மாலை… இரவு என வரத் தொடங்கியது.

மூக்கனின் தாய் மாமனிடம் பெரியவர்கள் கூட்டம் முறையிடத் தொடங்கியது. “கெய்வி ஞாயித்துக் கெழம காலைல உசுர வுட்டுருக்கு. இன்னிக்கு செவ்வாய் பகல் பொழுதாச்சு 3வது நாள் கணக்கு வருது. இப்பவே உடம்பு ரொம்ப ஊதிப்போச்சு. லேசா வாடை வீசவும் ஆரம்பிச்சிருச்சு. சாந்ய்தரத்துக்கு மேல வச்சிருக்க வேணாம். மாமன் மச்சான் பங்காளிக எல்லாம் கலந்து பேசி முடிவெடுத்து ஆகவேண்டிய காரியத்தப் பாருங்கப்பா என்றார் ஒருவர்.”

பேச்சியின் குடிசை வீட்டைச் சுற்றி கழுகு ஒன்று மூன்று முறை வட்டமடித்து வேறு சென்று விட்டது. ஊரார் “இனியும் தாமதிக்க வேண்டாம்” என்றனர். மூக்கன் மாலப் பொழுதுக்குள் வருவானான்னு பார்ப்போம்! பிறகு கடவுள் வுட்ட வழி” என்றும் சொன்னார்கள்.

மாலை நேரம் வந்தது. பேச்சிக்கு இறுதிச்சடங்குத் தொடங்கும் முன்பு தொலைபேசியில் லாரி அதிபரோடு தொடர்பு கொண்டார் வாத்தியார், பலனில்லை. பேச்சிக்கு எல்லா விதமான இறுதிச் சடங்கும் செய்யப்பட்டது. மூக்கன் அங்கு இல்லாத பெருங்குறையைத் தவிர பேச்சியின் தம்பி சோமன் சிதைக்கு கொள்ளி வைக்கத் தயார் படுத்தப்படட்டார். இறுதி ஊர்வலம் தொடங்கியது மூக்கனைக் காணவில்லை.

வாத்தியார் வீடு இரவு பத்து மணி. தொலைபேசி மணி அழைத்தது. வாத்தியார் எடுத்தார். எதிர் முனையில் சாட்சாத் பேச்சியின் மகன் மூக்கனேதான்.

வாத்தியார் “அட அய்யா எந்த தேசத்துலய்யா இருக்க? நீ அனுப்புன பணம் பத்ரமா வந்துச்சு. அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. மறுநா ஞாயித்துக் கெழம காலயில நெஞ்சு வலியிலே இறந்து போச்சு. ஒன்னையத் தேடி தேடிப் பாத்துப்புட்டு இப்பதான் இன்னிக்கு இன்னிக்குத்தான் மயானக்கரைக்குக் கொண்டு எரி வைக்ச்சுட்டு வர்றோம். எங்க எல்லாத்தயும் மன்னிச்சுடுறா. சூழ்நிலை அப்படி ஆகிப்போச்சு. நீ உடனே உருக்கு கிளம்பி வா” என்றார். மூக்கன் தொலைபேசியில் விம்மி சில நொடிகள் அழுதான் பின்.

“ஞாயித்துக் கெழம அன்னிக்கு குல்பாக்காவைத் தாண்டி வர்றப்போ டயர் வேற பஞ்சரா போச்சு. சரி பண்ணி எடுத்து நைட்டுதான் கிளம்புனோம். அடுத்த நாள் வனந்தா காட்டுல வண்டி பிரேக் டவுன் ஆச்சு. சரி பண்ணி காலயில தான் ஓட்டிவர்றேன.; ரெண்டு முணு நாளா சகுனமே சரியில்லிங்கய்யா. இப்பதான் திருச்சிய தாண்டியிருக்கிறோம். வேற டிரைவருட்ட வண்டிய ஒப்படைச்சுட்டு மூணு மணி நேரத்துல் ஊரு வந்து சேருவேன் என்றான்.

“பொறுமையா பத்திரமா துணையோடு ஊருக்கு வா” என்று சொன்னார் வாத்தியார்.

வாத்தியாரரும் உறவினர்களும் சூழ நள்ளிரவில் அழுதபடி வந்த மூக்கனை மயானக்கரைக்கு அழைத்துச் சென்றனர். மூக்கன் தேம்பி தேம்பி சொல்லி சொல்லி அழுதான். தான் செய்த கொடுமகளையெல்லாம் நினைவு கூர்ந்து மண்ணில் புரண்டு புரண்டு அழுது தாயின் சிதையைத் தொழுதான். ஒருவர் மூக்கனுக்கு மொட்டையடித்தார். மாதக்கணக்காக வளாந்;;திருந்த தாடி மீசையை மழித்தார். விடியத் தொடங்கியது. காக்கி சட்டயை கக்கத்தில் வைத்துக் கொண்டு மொட்டைத்தலையாய் காக்கி பேண்டுடன் இருந்த மூக்கனை உற்றுப் பார்ததுவிட்டு மூக்கன் மனுசனாயிட்டான்! அம்மா தெய்வமாயிட்டா! பாவம் என்றார் ஒரு வயதான பெண். அவனுக்கு நல்ல நேரம் வரும்பொது அம்மாவுக்கு கொடுத்து வைக்கல” என்றனர் தலைவர் மற்றும் நிர்வாகிகள்.

“பேச்சி மட்டும் இப்ப உயிரோட இருந்தால், “எந்தங்கப்புள்ள மூக்கன் லரி ஓட்டிக்களைச்சுப் போய் குனிஞ்ச தலை நிமிராம வருது பார் என்பாளே” என்று நினைவு கூர்ந்தாள் இன்னொரு பெண் மீண்டும் மாமனின் சம்மதத்தோடு வாத்தியார் தலைமையில் மூக்கனுக்கு திருமணம் நடந்தேறியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *