இது சத்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 877 
 
 

“என்ன செளக்யமா?” என்று கேட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்தாள் கலா. கட்டிலில் என் பக்கதில் அவள் வந்து அமர்ந்த விதமும், நெருக்கமாக இடைவெளி யில்லாமல் அமர்ந்ததும் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். காலம் மிகவும் முன்னேறிவிட்டது. இதற்குப் பெயர்தான் முன்னேற்றமா என்று நான் சிந்தனைச் சூழலில் மூழ்கினேன்.

“என்ன ரொம்பப் பலமான யோசனை? எந்தக் கோட்டையைப் பிடிக்க பதிலே. பேச மாட்டேன் என்கிறீர்கள்?” என்றாள் கலா.

நான் அவளையே உற்றுப் பார்த்தேன். அவளுக்கு வயது பதினைந்துதான் இருக்கும். உடல் வளர்ச்சி பத்தொன்பது வயதைக் காட்டிற்று. பளிச்சென்று கவனத்தைக் கவரும் தாழம்பூ நிறம். அவள் கண்கள் எல்லாவற்றையும் தொட்டு, கேட்டு, வாங்கி, அனுபவித்துப் பார்த்து விட வேண்டும் என்கிற ஆர்வத்தையும் அதன் முடிவை அறியாத அறியாமையையும் ஒருங்கே காட்டின.

மனத்தில் எழுந்த உணர்ச்சிக் கிளுகிளுப்பை அடக்கிக் கொண்டு, “வா, இப்போதுதான் வருகிறாயா? இன்னும் யார் உன்கூட வந்தது கலா?” என்றேன்.

“அம்மா கூடத்தான் வந்தேன். உள்ளே போயிருக்கிறாள். நான் வந்தது கூடத் தெரியாமல் என்ன யோசனையோ?”

“ஒன்றும் இல்லை, ஆபீஸ் விஷயம்” என்று ஒரு பொய்யைச் சொன்னேன். ஆபீஸில் கேட்டால் வீட்டுவிஷயம் என்றும், வீட்டில் கேட்டால் ஆபீஸ் விஷயம் என்றும் என்னுடைய திடீர் திடீர் சமாதிக்குக் காரணம் சொல்லிப் பழக்கமாகிவிட்டது.

“பஸ்ஸில் வந்தது ஒரே அலுப்பு. ஐந்து மணி நேரம் பிரயாணம். ஒரே கூட்டம், நெரிசல்.எப்படா வந்து சேரப் போகிறோம் என்றாயிற்று” என்று கலா தன் கைகளைத் தூக்கி உடலை நெளித்து சோம்பல் முறித்தாள். அப்படியே சாய்ந்தவளாக, மல்லாக்கப் படுத்து விட்டாள். அவள் தாவணி இலேசாக நழுவியிருந்தது. நான் திடுக்கிட்டுப் போனேன். ‘இது என்ன பெண்ணா? பெண்மையின் பயந்த சுபாவத்தையே காணோமே! சீ.சீ என்னதான் உறவாகட்டுமே; அதற்காக இப்படியா? நானல்லவா பயந்து பழிக்குப் பயந்து, நாலு பேர் கண்களுக்குப் பயந்து ஒதுங்க வேண்டியிருக்கிறது? நான் மாமன் உறவுதான். அவளும் அக்காள் பெண் உறவுதான்’. உள்ளே என் ஒன்றுவிட்ட அக்காவும் மனைவியும் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

“ரொம்ப நாளாயிற்றே. பஸ் ஸ்டாப்பிலே இருந்து இங்கே பக்கத்திலேதானே வீடு, பார்த்து விட்டுப் போகலாமே என்று வந்தேன். நான் உடனே இப்போது மயிலாப்பூருக்குப் போய் சம்மந்தியம்மாவைப் பார்த்து விட்டு மறுபடியும் நாளைக்கே ஊர் திரும்ப வேண்டும். எனக்குத்தான் இந்த வயதிற்கு இது ஒரு கால் கட்டு இருக்கிறதே. வயது வந்த பெண்ணைத் தனியே விட்டு வர முடிகிறதா? அந்தத் தடியன்களை (தன் பிள்ளைகளை) யெல்லாம் பார்த்துக் கொள்ளச் சொன்னால், வீட்டில் நின்று பேச அவர்களுக்கு அவகாசம் இருந்தால்தானே?” என்று கமலா அக்கா பேசிக் கொண்டே போனாள்.

“கலா, வா காப்பி சாப்பிட்டு விட்டுப் போ!” என்றாள் என் மனைவி.

“மாமி, இங்கேயே கொண்டு வந்து விடுங்களேன்” என்று கொஞ்சுதலாய் வேண்டினாள் கலா.

காப்பி கொண்டு வந்து வைத்துவிட்டு, என்னையும் ஒரு முறைப்புப் பார்த்து விட்டுப் போனாள் என் மனைவி. அவளுக்குக் கலாவை விட ஏழெட்டு வயதுதான் அதிகம் இருக்கும். கலாவைப் போல அழகில்லை.

‘சீ சீ! அழகைப் பற்றிப் பேசிவிட்டு, பிறகு வாய் கொப்பளித்து விட்டுத்தான் அவளைப் பற்றி பேச வேண்டும்.அழகுக்கும்,என் மனைவிக்கும் அவ்வளவு நெருக்கம்’

நானும் என் மனைவியும் போன மாதம் மதுரைக்குச் சென்றிருந்தோம். காலையில் கோயிலுள் நுழைந்த நான் பிற்பகல் இரண்டு மணிக்குத்தான் அரைகுறை மனத்துடன் வெளியே வந்தேன். ஒவ்வொரு சிற்பத்திற்கு முன்பும் குறைந்தது அரைமணியாவது நின்று ரசித்தேன் என்றால், நான் அவ்வளவு சீக்கிரம் வெளியே வந்தது பொறுமையிழந்த என் மனைவிக்காகத்தான்!

“உம், உம் போகலாம், வாருங்கள். பசிக்கிறது. ஒரே மாதிரி பொம்மையை எத்தனை தரம் பார்த்துக் கொண்டு நிற்பீர்கள். கால் வலிக்கிறது!” என்று என் மனைவி துரிதப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“இதோ ஆச்சு, இதோ ஆச்சு!” என்று சிற்பங்களை வியந்த வண்ணம் புறப்பட்டேன்.

அப்படி ரசனையுள்ளமும், அழகை உபாசிக்கும் உள்ளமும் பெற்ற எனக்கு, இப்படி ஒரு மனைவி வாய்த்தாள் என்றால் அது திருமணங்கள் மேலுலகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தத்தானோ என்னவோ?

“கிளம்பு கலா! நாழிகையாகிறது. சோம்பல் படாமல் போனால்தான் வேலை நின்று போகாமல் முடியும்” என்றாள் கமலா அக்காள் உள்ளேயிருந்து வந்தபடியே. “போம்மா! நான் வரவில்லை. நீயே போய் எல்லாவற்றையும் பார்த்துக் கொள். உடம்பெல்லாம் ஒரே வலி. எனக்குக் கொஞ்சம் தூங்கினால்தான் உடம்பு தேறும்” கலா சிணுங்கினாள். அந்தச் சிணுங்கலில்கூட அவள் அழகு மின்னிற்று.

“கலா, இங்கேதான் இருக்கட்டுமே! நாளைக் காலை இங்கிருந்துதான் ஊருக்குப் போயேன். கூடவே பஸ் சார்ஜ் செலவழித்துக் கொண்டு போகனுமா?” என்று நான் என்னை அறியாமல் சொல்லி வைத்தேன்.

உள்ளே ‘நச்’சென்று டம்ளரை வைத்த விதத்திலிருந்து அது என் மனைவிக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.

“சரி போ! அதுவும் நல்லதுதான். அடி லக்ஷ்மி, நான் போய் வருகிறேன்” என்று என் மனைவியிடம் குரல் கொடுத்து விட்டு வெளியே சென்றாள் கமலா அக்கா,


அன்று ஞாயிற்றுக்கிழமை. நான் சாப்பிட்டு விட்டு ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தேன். கலாவும் குளித்துச் சாப்பிட்டு விட்டு அருகில் அமர்ந்தாள். அதிகமான ஆபரணங்கள் இல்லா விட்டாலும், தங்கச் சிலை போல் செதுக்கி விட்டஅளவான தோற்றமும், ரோஜாப் பூ போன்ற மென்மையும், முல்லைச் சிரிப்பும், நதியின் ‘கலகல’வென்னும் ஒலியைப் போல் சிரிப்பொலியும் உள்ளவள் கலா. நான் படிப்பதை விட்டு அவளையே பார்த்தேன். “என்ன மாமா பார்க்கிறீர்கள்?” என்று கலா முறுவலித்தாள். நீண்ட பெருமூச்சொன்று வெளி வந்தது, என்னிடமிருந்து தெளிந்த குளத்தில் பெரிய பாறாங்கல்லைப் போட்டுக் குழப்பி, கலங்கடிப்பது போல் என் மனத்தை என்னவோ செய்தது.

ஏதேதோ நிராசைகள், ஆசைக் கனவுகள், மீன்கள் என அந்தக் குழம்பிய குளத்தின் மேலே நீந்தி வந்தன.

நான் மெதுவாகச் சமாளித்துக் கொண்டு, “கலா! உனக்கு நன்றாகப் பாட வருதாமே! பாடேன், கேட்கலாம்?” என்றேன். அந்தச் சமயத்தில் அந்தக் குழப்பத்திலிருந்து மீள்வதற்கு ஏதோ வழி தேவைப்பட்டது.

கள்ளம் கபடமற்ற அந்தப் பெண் உடனே இணங்கினாள். பாடுவதற்குத் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அமைதியாய்த் தயார்ப்படுத்திக் கொண்டாள்.

‘பாவயாமி ரகுநாமம்’ என்ற பாட்டு மலைப்பகுதியின் கரடுமுரடான ஏற்ற இறக்கங்களிலிருந்து சமவெளியில் பிரவேசிக்கும் நதியைப் போல, நிர்மலமாய் நிரந்தர கதியாய் தொடங்கிற்று அவள் குரல். குரலிசையில் மயங்கினேனோ, பாட்டின் பொருட் செறிவில் மயங்கினேனோ இரண்டும் கலந்து இராமாயணக் காட்சிகளை ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து கண் முன் நிறுத்திய அவளது திறமையில் மயங்கினேனோ என்று சொல்ல முடியாதபடி மெய் மறந்திருந்தேன்.

“ஆஹா! ரொம்பப் பிரமாதமாகப் பாடுகிறாள் கலா” என்றாள் என் மனைவி.

நான் பாராட்டு வழங்கக் கூடத் தெரியாமல் தடுமாறி நின்றேன். அடைந்தால் இப்படிப்பட்ட பெண்ணையல்லவா துணையாக அடைய வேண்டும் என்று என் உள்மனம் புலம்பிற்று. புயலாய் உருவெடுத்த ஏக்கப் பெருமூச்சை அடக்கினேன். அது கண்களில் கண்ணிராய்த் துளிர்ந்து நின்றது.

“என்ன மாமா அழுகிறீர்கள்?’ என்றாள் கலா கேலியாக

“சீ. சீ! அழவில்லையே, இவ்வளவு பிரமாதமாக நம் மருமாள் பாடுகிறாள் என்று ஆனந்தம்! பூரிப்பு!” என்றேன், கண்களைத் துடைத்துக் கொண்டு.

என் குரலின் போலித்தன்மை அந்தப் பேதைக்குப் புரியாவிட்டாலும், என் மனைவிக்குப் புரிந்தது. முகத்தைச் சுளித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.


என் மனைவிக்கு அது மூன்றாவது பிரசவம். வாழ்க்கையின் எல்லாப் பொருமல்களையும் உள்ளத்தின் விம்மல்களையும் மீறி பூர்ண திருப்தியைத் தர வல்லது தாம்பத்திய உறவுதான்! அந்தத் தத்துவம் மட்டும் இல்லாவிடில், எண்ணிலடங்கா ஏக்கங்களையும், ஏமாற்றங்களையும் சகித்துக் கொண்டு மனித குலம் வாழ்ந்து விட முடியுமா? அப்படித்தான் நானும் வாழ்ந்தேன். ஒன்று, இரண்டு, மூன்று என்று மணமாகி நான்கு ஆண்டுகளுக்குள் ஒன்று என்னைப் போல், மற்றொன்று அவளைப் போல, மூன்றாவது ‘நான் தனி என்னைக் கண்டு பிடிக்க முடியாது’ என்பது போல் மூன்று ஒட்டு மாஞ்செடிகள்!

பேறு பெற்ற முதல் மாதத்திற்குள் இவ்வளவு நெருக்கத்தையும் திணிப்பையும் தாங்க முடியாததுபோல ‘பட்’டென்று என் மனைவியின் சரீரம் உடைந்து, முளைத்து, செடியாகி, மரமாகி கப்பும் கிளையுமாய் வாழ்ந்து, திடீரென்று நான் மொட்டை மரமாகி விட்டது போல் என்னுள் ஒரு தவிப்பு மூன்று பெரும் சுமைகளை எனக்குள் திணித்து விட்டு, நான் நிரப்பி இருந்த சூன்யத்தை இனி யாரைக் கொண்டாவது நிரப்பிக் கொள்ளுங்கள் என்று பறந்து விட்டாள்.

“பாவயாமி ரகுநாமம்,” – சூன்யத்தின் அந்தரத்தின் அந்தரத்திற்குள்ளிருந்து மெல்லிய இன்னிசை கேட்டது. அந்த எண்ணத்தை நாம் உதறித் தள்ளத் தள்ள, அது வலுவடைந்து என்னால் முடியும் என்று விஸ்வரூபமெடுத்து என் மனதை நிரப்பி என்னையும் மூழ்கடித்தது.

கலா என் வாழ்க்கையில் பங்கு பெற்றாள்! அவள் அன்று பாடிய போது, “கலா, உன்னையும் உன் இசையையும் ரசிக்கும் நல்ல மாப்பிள்ளையைத் தேடித் தருகிறேன்” என்று மனமுவந்து சொன்னது இப்படியாகும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

இன்று கலா வருகிறாள்! எது எட்டாக்கனி,இனி கிட்டாது என்று மருகினானோ, அதுவே ஆச்சரியப்படத்தக்க விதத்தில் எனக்குக் கிட்டிவிட்டது.எந்த அழகைத் தொட முடியாமல் பூஜிக்க முடியாமல் தவித்தேனோ, எந்த இசையை என்னுள் எனக்கு மாத்திரம் என்று நிரப்பிக் கொள்ளத் துடித்தேனோ, அதையெல்லாம் எடுத்துக் கொண்டு முன்னிலும் பன்மடங்கு எழில் மங்கையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள கலா வருகிறாளாம்.ஆம், இன்று நல்ல நாளாம். இரவு நெருங்க நெருங்க என் உள்ளம் படபடத்தது! இன்னும் சிறிது நேரத்திற்குள் அப்படியே அணைத்து…


சட்டென்று என் தூக்கம் கலைந்தது. நடு நிசி! ஆம் இதுவரை நான் கண்டதெல்லாம் கனவுதான்! இதோ என் மனைவி லக்ஷ்மிதான் என் அருகிலேயே, சீ ,சீ! என்ன கெட்ட கனவு! தூரத்தில் கலாவும், என் குழந்தைகளும் வாயிற்படி அருகே படுத்து இருப்பது தெரிந்தது.

என் மனைவியின் சாந்த முகத்தில், நிறைந்த நெஞ்சிலிருந்த வழிந்த புன்னகை அந்த இருட்டிலும் தேங்கி நிற்பது தெரிந்தது. அவள் புரண்டு படுத்து என் கைகளைப் பற்றிக் கொண்டாள். என் நெஞ்சை என்னவோ செய்தது. என் உணர்ச்சி, வேகம், சுடு சொல், சிடுசிடுப்பு, அலுப்பு, வெகுளி, வெறுப்பு, கோபம், தாபம் இவை அவ்வளவையும் தாங்கிக் கொள்ள ‘நானிருக்கிறேன், நீங்கள் நிச்சிந்தையாக எதை வேண்டுமானாலும் ரசியுங்கள். ஆனால் என்னைப் பிடித்திருக்கும் பிடியை மட்டும் தளர விடாதீர்கள்.அந்த ஆதரவுதான் என் நெஞ்ச நிறைவுக்குக் காரணம்!’ என்று கையைப் பற்றிக் கொண்டதன் மூலம் இந்தப் பேதை உணர்த்துகிறாளோ? இவளை எக்காரணம் கொண்டும் கை விட மாட்டேன். இது சத்தியம்! பொங்கி எழுந்த என் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள, ‘இது சத்தியம்’ என்று வாய் முணுமுணுக்க, அவள் கைகளை இறுகப் பற்றினேன்.

– காதல், ஏப்ரல், 1965, நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *