ஆத்ம இம்சை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2024
பார்வையிட்டோர்: 590 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பௌடர், பூச்சு எதுவும் இல்லாமல் கவலையும் கோபமும் விரக்தியும் படர்ந்திருந்த அந்த முகத்தின் இருதய உண்மையின் பிரபை இன்னும் எனக்கு மறக்க முடியாமல் இருக்கிறது. நேற்று மாலையில் நாலாவது அமர்வுக்காக என்னிடம் வந்திருந்தாள். உணர்வுகளைப் பெரிதாகக் கிளறாத முதல் அமர்விலேயே என் காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவள் கதறிய கதறல் வானம் வரை போகுமாறு தன் குரலை அனுப்பி உதவி கோரியது போல இருந்தது. அவளின் அர்த்தமற்றுப் போன வெறுமை கொண்ட வாழ்வுக்கு நான்..? 

காலையில் வீட்டைக் கூட்டி முன் பக்கத் தூசுகளையும் தட்டி முடித்த போது எதேச்சையாக என் பார்வை முற்றத்து மல்லிகையை வெறித்தது. தேசத்தில் பல வருடங்களாக நீண்டிருக்கும் வரட்சி மல்லிகையையும் பாதித்திருக்க வேண்டும். மல்லிகாவையும் பாதித் திருக்க வேண்டும். அல்லது “ஓயில்” கலந்த நீரை நாம் ஊற்றுவதை அது விரும்ப வில்லையோ? ஒரு பூவும் பூக்காமல் “செத்தேன் சிவனே” என்று நின்று கொண்டிருந்த கொடியில் ஒரு வண்ணத்துப்பூச்சி வெள்ளை நிறத்தில் சிறகடிப்பது தெரிந்தது. அந்தச் சிறகடிப்பு மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்க முடியாது என்று என் மனம் வாதாடியது. 

“வண்ணத்துப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, பறக்குது பார், பறக்குது பார், அழகான செட்டை, அழகான செட்டை, அடிக்குது பார், அடிக்குது பார்” 

என்ற பாடல் இந்தப் பூச்சியுடன் இயைவதாக இல்லை. பூவே இல்லாத கொடியில் தேன் குடிக்கும் மகிழ்வை அது எப்படிப் பெற முடியும்? அப்படியானால் ஏன் ஒரே இடத்தில் இருந்து சிறகடிக்கிறது? பூச்சியின் இயல்பு ஆறு காலுடன் பறப்பது! இது பறக்கவும் இல்லையே இவ்வளவு நேரமாய்! அது கூப்பிடாமலே நான் அண்மையில் சென்று பார்த்தபோது என் புருவங்கள் நெரிய ஆச்சரியத்துடன் என் வியப்பை ஸ்திரப்படுத்தினேன். ஒரு சிறிய சிலந்தி வலையில் இந்தச் சிறிய பூச்சி அகப்பட்டிருந்தது. அதன் வயிற்றறையின் கீழ்ப்பகுதி சிலந்தியின் வாயில்! இது வண்ணத்துப் பூச்சி இல்லை. “மொத்” என்று என் விஞ்ஞான மனம் விரித்துரைத்தது. அந்துப் பூச்சி. 

சின்னப்பூச்சி – முதிர்ச்சி அடையாத பூச்சி சின்னச் சிலந்தி கட்டிய வலையில் அகப்பட்டுப்போய்ப் பறக்க முடியாமல் சிறகடிக்கிறது. வலை விரிப்பது, வேடனின் இயல்பு மட்டும் அல்ல. சிலந்தியின் இயல்புந் தான்! அந்துப் பூச்சி அல்லவா கவனமாக இருந்திருக்க வேண்டும். இப்போது நான் என்ன செய்வது? பூச்சியை விடும் எண்ணம் சிலந்திக்கு வராது. பூச்சியின் வயிற்றின் ஒரு பகுதி ஏற்கனவே பாதிக்கப்பட்டு விட்டது. என்றாலும் பூச்சி இன்னும் சாகவில்லை என்பதால் அதனைக் காப்பாற்றுவது மனிதப் பண்புள்ளவர்களின் பொறுப்பு! 

“பூச்சியை நான் ஒன்றும் வலிந்து இழுத்து வரவில்லை. அது தானாக விரும்பித்தான் என் வலையில் வந்து விழுந்து எனக்கு அருகில் அமர்ந்திருந்தது. என்னைத் தொட்டுக் கொண்டு படுத்துவிட்ட பூச்சியை நான் சும்மா இருந்து அழகு பார்க்க நான் என்ன கல்லா?” என்று சிலந்தி கேட்கும் என்று எனக்குத் தெரியும். 

வீணையின் தந்திகள் மீது கடப்பாரையை வைத்து உருட்டி யாகிவிட்டது. வீணை பழையபடி இனிய ஒலி எழுப்புமா? முகாரியாவது பாடினால் போதும். 

பூமியின் வானுக்கு அழகு ஒரு நிலவு. சனி “வசவச” வென்று அறுபதுக்கு மேற்பட்ட சந்திரன்களை வைத்திருக்கும். பன்றி பல குட்டி பயந்தென்ன? யானை போல ஒரு குட்டியை மல்லிகா ஒழுங்காக ஈன்றிருந்தாள்.சீர் கெட்ட “பச்சை மண்” ஒன்று வீட்டுக்கு வருவதை மல்லிகாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதைத் தாங்க முடிய வில்லை.”அப்படி வந்திருக்கக் கூடாது” என்று தான் இப்போதும் நினைக் கிறாள். ஆனால் பேரக் குழந்தையை வீட்டில் ஏற்காமல் என்ன செய்வது? குப்பைத் தொட்டிக்குள் கொண்டு போய்ப் போடும்படி மகளிடம் சொல்ல முடியவில்லை. 

தாய்ப் பூச்சிதான் என்னைப் பார்க்க வந்தது. அம்மம்மா ஆகிவிட்ட மல்லிகாவுக்கு நாற்பது வயது தான் இருக்கும். சற்றும் துவளாத தொப்பை போடாத மெல்லிய அழகான உடல் வாகு. மல்லிகா இருபது வயதில் திருமணம் செய்து ஒரே ஒரு குழந்தை. அந்தக் குழந்தைக்கு இப்போது ஒரு குழந்தை. 

முதல் அமர்வில் அவளை அன்புடன் வரவேற்று, என்னை அறிமுகம் செய்து “அறிகைச் சிகிச்சை” என்றால் என்ன என்பது பற்றி விளக்கியிருந்தேன். நான் அவளது பிரச்சினையை உற்றுக் கேட்டு வழிகாட்டுவேன் என்பதையும் எங்கள் உரையாடல்களினூடாக அவள் ஒரு தெளிவான அகப்பார்வை பெறுவாள் என்பதையும் உணர்த்தி யிருந்தேன். ஒரு வேளை அவள் சில வீட்டு வேலைகள் செய்து வர வேண்டியிருக்கும் என்று கூறியபோது சம்மதித்தாள். 

இரண்டாவது அமர்வில் நான் அவள் முன்னிலையில் முன் சாய்ந்து அமர்ந்திருந்தேன். முகத்தில் சிநேக உணர்வை வரவழைத்துக் கொண்டேன். மனம் திறந்து உட்கார்ந்து அவள் கூறிய விடயங்களுக்கு ஒத்துணர்வுப் பதில் வழங்கினேன். 

‘என்ரை மனுசனைக் காணாமல் போனோர் பட்டியலிலை எழுதிப்போட்டு நான் இவளுக்காகத் தானே உயிரோடை இருந்தன்” 

“பெற்ற தாயை ஏமாத்தின அவளின்ரை தலை பத்தி எரிஞ்சு சாம்பலாகப் போகும்.” “ரியூசனுக்குப் போறன் ரியூசனுக்குப் போறன் எண்டு சொல்லி இவள் போகக்கூடாத இடங்களுக்குப் போய் வந்திருக் கிறாள்”. 

அரைமணி நேரமாகத் தொடர்ந்து கோபத்துடன் திட்டித் தீர்த்தவள் நீண்ட பெரு மூச்சுடன் வானத்தை வெறித்துப் பார்த்துக் கண்களை மூடினாள். கண்கள் “பொல பொல” வென நீரைக் கொட்டின. அந்தக் கண்ணீருக்கு வாய்க்கால் கட்டி எங்கள் முற்றத்து மல்லிகைக்கு விட்டிருந்தால் அது பூத்து விடும். நீர் பாய்ந்து முடியட்டும் என்று நான் காத்திருந்தேன். பிறகு “உங்கள் மருமகன் யார் என்று தெரியுமா?” என்று கேட்டேன். “அதை நினைச்சாத்தானே எனக்கு உடம்பெல்லாம் எரியுது” 

“சீர்வரிசை கேளாத மாப்பிள்ளை – சிறந்த மாப்பிள்ளை எண்டு சொல்ல முடியேல்லையே! பத்தொன்பது வயது -ஏ-எல் எடுத்து இரண்டு எஸ்-என்ரை பிள்ளைக்கும் பிள்ளையின்ரை பிள்ளைக்கும் இவன் எப்படிச் சாப்பாடு போடப் போறான்?” 

“வேலை இல்லாமல் இருந்ததிலை கூட இவனுக்கு ஒரு வருஷந்தானே சேர்விஸ்? இவனுக்கு ஆர் வேலை குடுப்பினம்?” அவள் குரலில் இமாலய எரிச்சல் வெளிப்பட்டது. ‘என்ரை தங்கச்சி கனடாவிலை இருந்து இவ்வளவு நாளும் ஐஞ்சு பத்தெண்டு அனுப்பிக் கொண்டிருந்தவள். மனிசனும் காணாமல் போக நான் பொம்பிளைப் பிளளையோடை கஷ்டப்படுறன் எண்ட பரிதாபத்திலை!” 

“இப்ப ஊரெல்லாம் இவளின்ர கதை நாறுது. இனித் தங்கச்சியைக் காசு அனுப்பச் சொல்லி நான் எந்த முகத்தோட கேக் கிறது?” குரல் மீண்டும் உடைந்து போனது. 

மூன்றாவது அமர்வில் அவளுக்குப் பிரச்சினை தரும் எண்ணங்களைக் குறித்திருந்தேன். “நீ பிள்ளை வளர்த்த விறுத்தத் துக்குக் காசு தேவையோ? எண்டு எல்லாரும் என்னைக் கேக்கினம். என்னாலை தாங்க ஏலாது”. “நான் ஒருத்தருக்கும் ஒரு தீமையும் செய்யேல்லை. கடவுள் ஏன் என்னை இப்படித் தண்டிக்கிறார்? நான் இப்ப கோயிலுக்குப் போறேல்லை” 

எண்ணங்களே உணர்வுகளைக் கொண்டு வருகின்றன என்பதைக்கூறி எண்ணங்களை அவதானிப்பதற்கு மல்லிகாவை வழிப் படுத்தினேன். 

முன்னால் அவளில் காணப்பட்ட சந்தோஷ இலைகளுக்குக் கணவன் காணாமல் போன போது ஒரு இலையுதிர் காலம் வந்தது. கண்ணகியாய் மாறி நீதியை நிலைநாட்ட முடியாவிட்டாலும் குளிரைத் தாங்கிக் கொண்டாள். இப்போது வந்திருக்கும் “வின்ரரில்” இலை களையே காணவில்லை என்பது மட்டுமல்ல “நியூமோனியா” வந்து இவளே இறந்து விடுவாள் போலிருக்கிறது. 

தாய்ப்பூச்சி கனவு கண்ட கலர்ப்படம் மட்டுமா கலைந்தது? எதிர்காலம் கறுப்பு வெள்ளைப்படமாகக் கூட இல்லை. வெறுமனே கறுப்பாக இருக்கப் போகிறது என்று பூச்சி பயப்படுகிறது. 

விரக்தி மிகுந்த தெளிவையும் துயரம் மிகுந்த நிம்மதியையும் பூச்சியிடம் ஏற்படுத்த வேண்டியது சீர்மிய உடைக்குள் புகுந்திருக்கும் எனது பொறுப்புத்தான். 

வீட்டில் இருக்கும் இரண்டு தண்டச் சோறுகளுக்கும் சேர்த்து வருமானப் பாதை அமைப்பது பற்றி யோசிக்க வேண்டும். 

குழந்தை ஒன்று தரும் மகிழ்வை அநுபவிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். காசு வரும் போகும். கல்வி வரும் போகாது என்பதால் பிள்ளையைப் பார்த்துக்கொண்டு மகளை மீண்டும் படிக்க அனுப்புவது பற்றிக் கலந்துரையாட வேண்டும். 

கோபம் நியாயந்தான், ஆனால் கோபமே வாழ்க்கையாகிவிடக் கூடாது என்பது பற்றிப் பேச வேண்டும். 

“உயிர் போகாத வரைக்கும் அநுபவங்கள் எல்லாம் சிறந்த பாடங்களே” என்று ஒரு நற்சிந்தனை கூற வேண்டும். “இதை என்னால் தாங்க முடியும்” என்று எண்ண மாற்றம் செய்ய வேண்டும். 

“இறந்தகாலம் பற்றிக் கதைத்துப் பயனில்லைத் தான் என்றாலும் பூக்கள் இல்லாமல் வெறுமையாக நிற்கும் மரங்களின் பக்கம் தனிமையில் போக வேண்டாம் என்று தாய்ப் பூச்சிதானே கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்?” என்பதைப் பட்டும் படாமலும் சொல்லிவிட வேண்டும். 

யார் இந்த மல்லிகா? யாருக்கு உதவ நான் இவ்வளவு திட்டம் போடுகின்றேன்? சீர்மியர் கதிரையில் இருப்பது நான்! சீர்மிய நாடியின் கதிரையில் இருப்பதும் நான்தான்! விதி என்னை இந்த ஒற்றை அறைக்குள் தூக்கி எறிந்திருக்கிறது. 

எனது உதடுகள் அவமானத்திலும் ஆத்திரத்திலும் துடித்து விகாரமாய்க் கோணிக் கொள்கின்றன. 

வயல்களில் வெடிப்புக்கள் வேரோடுகின்றன. 

– புத்தாண்டுச் சிறப்புமலர் உதயன் 15-01-2015

– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *