ஆண் மகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2022
பார்வையிட்டோர்: 4,117 
 

இரவு மணி பத்து. பத்து முப்பதுக்குக் கடைசி வண்டி. தெற்கே செல்லும் விரைவு வண்டி புறப்படுகிறது. அதற்குப் பிறகு மறுநாள் காலையில்தான் ரயில், தமிழ்ச் செல்வன் எழும்பூர் ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட இடத்தில் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வோர்

ஆட்டோவையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

கைக் கடிகாரத்தைப் பார்ப்பதும், வழிமேல் விழிவைத்து அவள் வருகையை நோக்கி தவித்தது அவன் மனம். எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும்.

துணிவுடன் ஒரு செயலில் இறங்குகிறான். ஒரு வாரமாகவே திட்டமிட்டான். சந்திராவும் – அவனும் மிக யோசித்தே முடிவுக்கு வந்தனர். பகலில் சந்தித்துப் பேச நிறைய நேரம் அவர்களுக்கு இருந்தது. ஆனால், செல்போனில் தான் பேச முடியும். கை நிறையச் சம்பளம் தரும் கம்ப்யூட்டர் கம்பெனியில் இரவுப் பணி. அவளுக்கும் அப்படியே.

இருவரையும் சுமந்து செல்லும் பேருந்து இரவு எட்டு மணிக்கு அவர்களைச் சென்னையிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அலுவலகத்திற்குச் சுமந்து செல்லும். வாரம் ஒரு நாளைத் தவிர மற்ற நாள்கள் சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி தான்! சற்றுக்கூட இமை மூட முடியாது. வேலை. வேலை. ஆனால், அதற்கு ஊதியம் – ஊதியம் கனவில் கூட அவள் நினைக்காதது!

காலையில் ஏழு மணிக்கு கூடிய வரை இருவரும் ஒரே அலுவலக வாகனத்தில் பணி மனையிலிருந்து திரும்புவர்.

தமிழ்ச்செல்வனுக்குக் கட்டுப்பாடில்லை. அவன் தங்கும் பிரம்மசாரிகள் மேன்ஷனில் நான்கு பேர் சேர்ந்துப் பங்கிட்டுக் கொண்ட வாடகை அறையில், மற்ற நண்பர்களுடன் காலை ஒன்பது வரைப் பேச்சு . பிறகு சிற்றுண்டி, சிறு தூக்கம். பிறகு பன்னிரண்டு மணிக்குக் குளியல். அருகே உள்ள மெஸ்ஸில்’ பகல் உணவு சாப்பிட்டு வந்தவுடன் கண்களைத் தழுவும் உறக்கம்.

நான்கு மணியிலிருந்து சக நண்பர்கள் அலுவலகத்திலிருந்து திரும்புவதால் பேச்சு அரட்டை, சிறிது நேரம் வெளியே கடற்கரையை நோக்கி நடக்கும் நேரம் தான் அவளுடன் பேசிக் கொள்ளும் நேரம். இயந்திர வாழ்க்கை என்றாலும் முதல் சந்திப்பிலேயே பிடித்துப் போயிற்று. வாழ்க்கையிலும் பிடிப்பு ஏற்பட்டது.

அலுவலில் சேர்ந்து எட்டு மாதங்களாக – முதல் இரண்டு மாதங்கள் சற்றுப் புன்முறுவல் மூலம் நெருங்கலாம் என்ற அங்கீகாரம். பிறகு ‘செவிப்பேசி ‘ வாங்கிய பிறகு தான் இருவருக்கும் செல் தூதாகி விட்டது.

‘கோயிலுக்குச் செல்வதாகச் சொல்லி, என் தோழி தங்கும் இடம் சென்று உங்களுடன் மனம் விட்டுப் பேச வாய்ப்பு ஏற்படுகிறது’ என்று அவளுடைய நட்பு உரையாடல் தொடங்கியது.

நகைச்சுவை உரையாடல்கள், போலிக் கோபங்கள் என ‘செல் மூலம் நெருக்கம் வளர்ந்தது.

“புது மோகம் என்பது போல், புதிதாக வாங்கிய செல்’லில் இப்படி மணிக்கணக்காகப் பேசுகிறாயே?” என்று தோழி கிண்டல் செய்து உண்மையை அறிய முயன்ற பிறகு தான் சந்திராவும் தன் உயிர்த் தோழியிடம் இதுவரை நடந்தவற்றை ஒன்று விடாமல் விவரித்தாள்.

“நிறையச் சம்பளம் வாங்குவதால் ராணி மாதிரி வருவதும், சாப்பிடுவதும், தூங்குவதும், நேரம் போவது தெரியாமல் செவிப்பேசியை காதருகே வைத்துக் கொண்டு கிசுகிசுவென்று மற்றவருக்குக் கேட்காமல் பேசுவதும் – இவளைக் கண்டிக்க ஆளில்லையா?” என்று சந்திராவின் அண்ணி புலம்பாத நாளில்லை.

அவ்வப்போது “உஸ்…. உஸ்….” என்று கூறி மனைவியின் கூக்குரலுக்குச் சமாதானம் சொல்வார். அவளை அடக்கி விட்டதாக எண்ணம். “அடி, மாதம் ஐயாயிரம் நமக்குத் தருகிறாளடீ. குழந்தை எல்.கே.ஜி – யில் சேர்க்கும் போது பத்தாயிரம் கொடுத்தாள். அவள் லேடீஸ் ஹாஸ்டலுக்குப் போய்விட்டால் இந்தப் பணம் நமக்கு வருமா?” என்று சந்திராவின் சகோதரன் தன் மனைவியைச் சமாதானப்படுத்த முயன்றான்.

“ஞாயிறு அன்று தான் எனக்குக் கடுங்காவல் ” என்று தமிழ்ச் செல்வனிடம் சந்திரா குறைபட்டுக் கொண்டாள்.

“ஒருநாளாவது சற்று நிம்மதியாக நான் தூங்க முடியாது. சொல்ல முடியாது ஏற்படும் தொந்தரவுகளை. மாலை ஐந்து மணிக்கு மேல் அலுவலக வேலையாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு வந்தேன். நாம் சந்திக்கத் தொடங்கி ஆறு மாதங்களில் இரண்டு முறை நாம் சந்தித்திருப்போமா?” என்று சந்திரா, தன் மனவேதனையைத் தமிழ்ச் செல்வனிடம் சொல்லி மன பாரத்தைச் சற்றுக் குறைப்பாள்.

அதற்கு என்ன சொல்வான் உன் தமிழ்ச்செல்வன்? மனம் விட்டுப் பேச மாமல்லபுரம் போகலாம் என்கிறானா?”

சந்திரா சிரித்தாள். “எப்படி அவ்வளவு சரியாகச் சொல்லி விட்டாய்?” சந்திராவிற்கு வியப்புதான்.

“இதற்கு ஜோசியம் தெரிந்திருக்க வேண்டுமா? பொதுவாகவே புதிய காதலன் அவசரப்பட்டுக் கேட்பது அதுதானே?”

சந்திரா சிரித்தாள். ‘உன் காதலன் உன் சிரிப்பில் முதலில் மயங்கினானா? அல்லது உன் விழிகளில் மயங்கினானா? உன்னிடம் இரண்டு பொல்லாத ஆயுதங்கள். சரி, நாம் சந்தித்துப் பேசும் இந்தச் சிறிது நேரத்தில் உன் வளர்பிறைக் காதலைக் கொஞ்சம் விவரித்துச் சொல்லு. நானும் கற்றுக் கொள்கிறேன்” என்றாள் சந்திராவின் தோழி.

செல் அதிர்ந்தது.

“ஓகோ! உன் தோழி அப்படி கேட்கிறாளா? பொல்லாதவளாயிருப்பாள் போலிருக்கிறது” என்று தமிழ்ச்செல்வன் செவிப்பேசியில் பேசிய போது ஒரு வசனம்.

“அப்படியில்லை : அவள் என் நன்மையை மட்டுமே நாடுபவள். எவ்வளவு நாளைக்கு செல்லில் பேசியே காதலை வளர்த்துக் கொள்ளப் போகிறீர்கள்? எப்போது சந்தித்து மனம் விட்டுப் பேசிக்கொள்ளப் போகிறீர்கள்?” என்று மனத்தில் தோன்றியதைக் கேட்கிறாள்.

“நீ என்ன சொன்னாய்?”

“‘உங்களுடன் பேசி ஒருநாள் முழுவதும் கழிக்கப் போவதாகச் சொன்னேன்.”

“நன்றி, மிக்க நன்றி. உன் தோழிக்கு ஏதாவது பரிசு கொடு. எங்கே எப்போது என்பதை நான் நாளைக்கே தீர்மானித்துக் சொல்கிறேன்” என்றான். சந்திராவிற்கு இந்த நல்ல செய்தியை உடனே தன் தோழியிடம் சொல்லாவிட்டால் மண்டை வெடித்துவிடும் என்ற பரபரப்பு.

“அப்படியா? அங்கேயா? என் வாழ்த்துகள். ஜாக்கிரதை. தனிமை , காதல் வேகம், காட்டாற்று வெள்ளம். கட்டுப்பாடாக நடந்துகொள். அவ்வளவு தான் சொல்வேன். ஒரு கோடு கிழித்துக் கொள். தாண்டாமல் இருவரும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று எச்சரிக்கை செய்து வாழ்த்துடன் அனுப்பினாள் தோழி.

தன் தோழியிடம் முதலில் செல்பேசியில் தான் பேசினாள். நடந்தவற்றைச் சுருக்கமாக சொன்னாள். ‘அவர் ஒரு மரியாதைக்குரியவர். பண்பாளர் , ஜென்டில்மேன் என்பதை நிரூபித்தார். ஆபாசமான பேச்சோ , இரட்டை அர்த்தப் பேச்சோ இல்லை. எங்கள் வீட்டில் எனக்கு மணமகனைப் பார்க்கிறார்கள்.

எனக்குத் தந்தை இல்லை. அம்மா தான் வளர்த்து இந்த நிலைக்கு நான் வர காரணம். அம்மா பேச்சை நான் மீற முடியாது. ஆனால், அம்மா என் பேச்சுக்கு மதிப்பளிப்பவள். என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும் என்பதை முழுவதுமாக நம்புபவள். நீ மணமகனைத் தேர்ந்தெடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டாள். இதை அவரிடமும் நான் சொன்னேன். என் சம்மதத்தைச் சிரிப்பின் மூலம் தெரிவித்து விட்டேன். அப்போது தான் அவர் என் கரங்களைத் தொட முயன்றார். பிறகு என்ன தோன்றியதோ என்னவோ கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போய்விடும் என்று சமாதானப்படுத்திக் கொண்டார்.

“சந்திரா, நீ அதிர்ஷ்டசாலி, உன்னவரை நான் பார்க்க வேண்டும். அவன்தான் உண்மையில் ஆண் பிள்ளை. அவரை மிகவும் சீக்கிரமாகப் பார்க்க வேண்டும். எங்காவது ஓர் ஓட்டலில் மாலையில் டிபன் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்” என்றாள் தோழி. அப்படியே சந்தித்தனர்.

சந்திரா! உன் தேர்வுக்குப் பாஸ்மார்க். ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பு எனக்குத் தெரியும். ஆனால், அவர் பார்வையிலிருந்து சிறிது சந்தேகமும் எனக்கு ஏற்படுகிறது. முகத்தைப் பார்த்து மனிதனை ஆராய்வதைப் பற்றிச் சிறிது படித்திருக்கின்றேன். ஆள் அழுத்தம். ஏதோ ஒன்று மறைந்திருக்கிறது. உன் மனதுக்குப் பிடித்துவிட்டது என்றால் சரிதான்.”

விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாய நிலை. அநேகமாக என் அண்ணன் இந்த வரனை முடித்து விடுவார் போலிருக்கிறது” என்று தமிழ்ச் செல்வனிடம் சந்திரா பரபரப்புடன் பேசினாள்.

“ஓ… வேளை வந்துவிட்டது. நானும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் சந்திரா! திடீரென்று ஒருநாள் நாம் புறப்பட்டு விடுவோம். மதுரையில் குடியேறி விடுவோம். இந்த இரவுக்கூத்து வேலை வேண்டாம். மதுரையில் கம்ப்யூட்டர் கற்றுக் கொடுக்கும் பள்ளி ஒன்று தொடங்குவோம். இதோ என் வங்கி பாஸ் புத்தகம். எவ்வளவு இருக்கிறது பார். உன் பெயருக்குக் கூட்டுக் கணக்கு தொடங்கி விடப் போகிறேன்.

“இதுவரையில் என் சேமிப்பு எட்டு லட்சம். ஓ! நீயும் அப்படித்தான் முடிவு செய்திருக்கிறாயா? உன் வங்கி ஸ்டேட்மெண்ட்டைக் காட்டக் கொண்டு வந்திருக்கிறாய். கல்யாணத்திற்காக இதுவரையில் சேமித்தது நாலு லட்சம். இரவு கம்ப்யூட்டர் பணி வாழ்க. நேரே மதுரை சென்று திருப்பரங்குன்றம் கோயிலில் மணம் முடித்துக் கொண்டு பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு திண்டுக்கல்லில் உள்ள உன் தாயாரிடம் ஆசி பெற்று மதுரையில் குடித்தனம் தொடங்குவோம். இரண்டு நாள்களில் நான் மதுரைக்குச் சென்று ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்.”

சந்திராவிற்கு முதலில் பயமாக இருந்தது. ஆனாலும் தமிழ்ச்செல்வனின் திட்டம் பிடித்திருந்தது.

சந்திராவின் தோழியும் அனுமதி கொடுத்துவிட்டாள். முழுமையான வாழ்த்துகளைத் தெரிவித்தாள்.

குறிப்பிட்ட நாளில் தமிழ்ச்செல்வன் எழும்பூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தான்.

அவள் வரவில்லை . பத்து இருபது – பத்து முப்பது. நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆட்டோ, டாக்ஸி ஆரவாரம் அடங்கத் தொடங்கி விட்டது. சந்திராவின் எண்ணுக்குக் கைபேசியில் கவனமாக ஒவ்வோர் எண்ணாக அழுத்தினான். வள்ளலார் திரு அருட்பாவின் சில அடிகள். மெல்லியதாக ஒலிக்கும். முடிவதற்குள்ளேயே அவள் பேசிவிடுவாள். இன்று இருமுறை பாடல் ஒலித்து முடிந்து விட்டது.

பெரும் ஏமாற்றத்துடன் தமிழ்ச்செல்வன் தன் அறைக்குத் திரும்பினான். அவளுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்ற கவலை. வேறுவிதமான சிந்தனைகள். அலுவலகத்திலிருந்து திரும்பும் நேரத்திற்கு போன் செய்தான். போனை எடுக்கவில்லை. இயங்காமல் ‘அணைத்து வைத்திருக்கிறார்கள் என்று ‘செல்’ கூறியது. யாரிடம் சொல்லி அழுவான்?

அழத்தான் தோன்றியது. தன் மனக்கோட்டை தவிடு பொடியானதா? அல்லது சிறிய ஏமாற்றமா? அவள் அதிர்ச்சி தர விரும்புகிறாளா? முகங்கழுவி, காபி சாப்பிடப் புறப்பட்டான்.

‘செல்’ ஒலித்தது. அவள் தான். ஓரிரு வார்த்தைகள் ‘டிரைவ் இன்னில் சந்திப்போம். விவரமாகப் பேசுவோம், என்று ஓரிரு வார்த்தைகள். அவன் மனத்தில் பரபரப்புடன் சிற்றுண்டி விடுதியை அடைந்தான்.

அங்கே சந்திராவும், அவள் தோழியும் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்திருந்தனர். சந்திராவின் முகத்திலிருந்து ஒன்றையும் கணிக்க முடியவில்லை .

“எனக்குப் பசி. இட்லி வரவழைத்துச் சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம்” என்று அவள் தோழி தான் பேச்சைத் தொடங்கினாள். முதல் நாள் இரவு எட்டு மணிக்கே அவள் தோழிக்கு நடக்கப் போவது என்னவென்று தெரியும்.

“என்ன சொன்னாய். சந்திரா? – அவள் தோழிக்கும் அதிர்ச்சி. ‘நம்பினால் நம்பு. நம்பாவிட்டால் போ. நாம் அன்று பேசிவிட்டுத் தமிழ்ச்செல்வனிடமிருந்து விடைபெற்று, என் வீட்டிற்குச் செல்ல பஸ் நிற்குமிடத்தில் நின்றிருந்தேன். என் அருகே கார் ஒன்று வந்து நின்றது. என்னை விடச் சற்று இரண்டு மூன்று வயது மூத்த பெண் ஒருத்தி, மூன்று வயதும் சிறுவனுடன் காரிலிருந்து இறங்கி என் அருகே வந்தாள்.

“நீங்க தானே சந்திரா?” என்று கேட்டாள். “எனக்கு ஓர் உதவி செய்வாயா? மறுக்காமல் நான் சொல்வதைக் கேள். என் நன்மையை விட உன் நன்மைக்காக நான் சொல்கிறேன். உன் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. நம்பிக்கையிருந்தால் என்னுடன் வா” என்று அழைத்தாள்.

“நான் திகைத்தேன். நான் திகைப்பதையும், சற்றுப் பின்வாங்கி வேறு இடத்திற்குச் செல்ல நினைப்பதையும் அவள் பார்த்து, சந்திரா! திடீரென முன்பின் தெரியாதவள் வந்து இப்படிப் பேசுவதை யாரும் நம்ப மாட்டார்கள். சிலர் கூச்சல் போட்டு அருகில் இருப்பவர்களை அழைப்பார்கள். ஆனால் சந்திரா! என்னை நம்பு. தமிழ்ச்செல்வனை நீ காதலிக்கிறாயா?” என்று கேட்டாள்.

“நாங்கள் வேலை செய்யும் நிறுவனப் பெயரைக் குறிப்பிட்டு அங்கு தான் தமிழ்ச்செல்வன் கம்ப்யூட்டர் என்ஜினியராக இருக்கிறாரா?” என்று வினவினாள். பிறகு தன் பர்ஸிலிருந்து தமிழ்ச்செல்வனின் போட்டோவை எடுத்து “இந்தப் போட்டோ என்னிடம் எப்படி வந்தது என்று ஆச்சரியப்படுகிறாயா? தைர்யமாக என்னுடன் வா. என் வீட்டிற்கு அழைத்துச் சென்று திரும்பவும் கொண்டு வந்து நீ சொல்லும் இடத்தில் விட்டு விடுகிறேன்” என்றாள்.

‘அவளுடன் வந்திருந்த சிறுவனை எங்கோ பார்த்தாற் போலிருந்தது. மந்திர சக்தியால் கண்டுண்டவன் போல் அவளுடன் காரில் அமர்ந்தாள். அவள் தான் காரை ஓட்டினாள். அவள் வீடு பெசன்ட் நகரில் ஒரு குறுக்குத் தெருவில் இருந்தது. வரவேற்பறையில் ஒரு போட்டோ மாட்டியிருந்தது. அதில் தமிழ்ச்செல்வனும், என்னை அழைத்து வந்த அந்தப் பெண்ணும் புன்முறுவலுடன் காட்சியளித்தனர்.”

“எனக்கு நொடியில் எல்லாம் விளங்கி விட்டது. உங்கள் பெயரை இதுவரையில் நான் கேட்கவில்லை” என்று தொடங்கினேன். என் பெயர் கல்யாணி. அதனால் தான் கல்யாணம் ஆகியும் இப்படி கல்யாணமாகாதவள் போல் காட்சியளிக்கிறேன்” என்றாள்.

தோழி இடையில் குறுக்கிட்டுக் கேட்டாள் : “சந்திரா ! நல்ல வேளையாக நீ சிக்கலிலிருந்துத் தப்பிவிட்டாய். ஆபத்திலிருந்து உன்னை இறைவன் தான் காப்பாற்றினான். நீ சொல்லாமலேயே நான் புரிந்து கொண்டேன். தமிழ்ச்செல்வன் இரண்டு குடும்பம் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறான். அவனைச் சும்மா விடக்கூடாது. மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுப்போம்.

“நீ நேற்று அவனுடன் மதுரை சென்றிருந்தால், இவ்வளவு நேரம் திருப்பரங்குன்றத்தில் மாலை மாற்றிக் கொண்டு, பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பாய். அவனுக்குச் சிறைத் தண்டனையோடு உனக்குமல்லவா தண்டனை கிடைத்திருக்கும்? நடுங்குகிறாயா சந்திரா?” என்று கேட்டாள்.

“காவல் நிலையத்திற்குச் செல்வதை விட வேறு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன். கல்யாணி , “என் தங்கையாக இருந்தால் நான் உன்னைக் காப்பாற்றி இருக்க மாட்டேனா? அதுபோல் உன் சகோதரிக்கு வாழ்வு கொடு” என்று நெஞ்சு தழுதழுக்கப் பேசினாள்.

அருகே இருந்த அந்தச் சிறுவன் அவள் மகன் தமிழ்ச்செல்வனின் மறுபதிப்புச் சாடை. அதே போன்ற சிரிப்பு, பார்வை. கல்யாணிக்கு உறுதி செய்து கொடுத்தேன். நான் எப்படியும் அவள் நலனுக்கு எதிராக நடக்க மாட்டேன் என்று.

சீக்கிரம் பேசமாட்டாளா? இவள் தன் தோழியையும் ஏன் அழைத்து வந்திருக்கிறாள்? சந்திராவின் மனத்தை மாற்றியிருப்பாளா? இவள் பார்வையே அன்றிலிருந்தே சரியில்லையே. தவிப்போடு நாற்காலி நுனியில் அமர்ந்திருந்தான் தமிழ்ச்செல்வன். சந்திரா பேசப் பேசத் தமிழ்ச்செல்வனுக்கு வியப்பாக இருந்தது.

“நல்ல செய்தி தமிழ்ச்செல்வன் ! நாம் மதுரைக்குச் செல்லாதது நல்லதாகிப் போய்விட்டது. நாம் யாரையும் விரோதித்துக் கொண்டு இரகசியக் கல்யாணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. திண்டுக்கல்லிலிருந்து வந்த என் தாயிடம் என் அண்ணன் பார்த்திருக்கும் வரன் பிடிக்கவில்லை என்று சொன்னேன். உன் விருப்பப்படி நல்ல இடமாகப் பார்த்து திருமணம் செய்து கொள்” என்று அம்மா சொல்லிவிட்டாள்.

“என் காதலனைப் பற்றி சொன்னேன். மற்றவர்களுக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். நீ விரும்பும் வரனையே மணந்து கொள். முறையாகவே எளிமையாக திருமணம் நடக்கட்டும். நான் நேரில் வந்து வாழ்த்துகிறேன் என்று கூறினாள். நமக்கு வேறு என்ன வேண்டும்?” என்றாள்.

தமிழ்ச்செல்வனின் முகம் மலர்ந்தது. “அப்படியென்றால் சென்னையிலேயே பதிவுத் திருமணம் செய்து கொள்வோம்” என்றான்.

சந்திரா உதட்டை மெல்லக் கடித்துக் கொண்டாள். அடப்பாவி என்று உள்ளுக்குள் சபித்தாள். “திருமண நாளை வீணே தள்ளிப் போடாதே” என்று தன் தமிழ்ச்செல்வன் அவசரத்தைத் தெரிவித்தான்.

“உங்களுக்குள்ள பரபரப்பு – ஆவல் எனக்கும் இருக்காதா? பெசன்ட் நகரில் ஒரு பிளாட் விலைக்கு வருகிறது. விலை சல்லிசு. அட்வான்ஸ் கொடுத்து விடுவோம். விலை பேசிவிட்டேன். நம் திருமணம் அந்தப் புதிய அடுக்ககத்திலிருந்து தான்” என்றாள்.

“ஓ…. பருத்தி, புடவையாய்ப் பூத்தது ! அன்றே வங்கி பாஸ் புத்தகத்தில் நாம் இருவர் கூட்டுக் கையெழுத்து இடலாம் என்று திருமணப் பரிசு அச்சாரம் கொடுத்து விட்டேன். இந்தா செக் புத்தகம் அட்வான்ஸ் கொடுத்து விடு” என்றான்.

“நீங்களும் வாருங்கள். இருவருமே சென்று செக்கை வீட்டுக்காரரிடம் கொடுப்போம்” என்றாள்.

“என்ன சந்திரா, சின்னத்திரை தொடரைப் போல இழுத்துக் கொண்டு போகிறாயா? விரைவில் முடித்துவிடு” தோழி ஆவலுடன் பரபரத்தாள்.

‘என்னாச்சு சந்திரா? காயா – பழமா? வெற்றியா – தோல்வியா?’ என்று செல்லிலிருந்து கேட்டாள் தோழி

“உடனே புறப்பட்டு பெசன்ட் நகரில் நான் சொல்லும் முகவரிக்கு வா எல்லாம் தெரியும்” என்றாள் சந்திரா

சந்திராவின் தோழியை வரவேற்ற கல்யாணி, “வாங்க, நீங்கள் வருவீர்கள் என்று சந்திரா சொன்னாள்” என்றாள்.

“சந்திரா எங்கே?’ என்று அவள் தோழி பரபரப்புடன் கேட்டாள்.

அதற்கு, “சந்திரா அருகே உள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்றிருக்கிறாள். எனக்கு ஏதாவது அன்பளிப்பு வாங்க வா” என்றாள் கல்யாணி.

“அன்பளிப்பு இருக்கட்டும். நடந்ததைச் சொல்லு” என்றாள் தோழி.

கல்யாணி பேசினாள்: “தமிழ்ச்செல்வனை நான் மணம் புரிந்து ஒரு குழந்தையும் இருக்கிறான். குழந்தை பிறந்த மறுமாதமே என்னுடன் வீண் தகராறு செய்து பிரிந்தார். எங்கே சென்றார்? என்ன செய்கிறார்? என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு நல்ல சீர்வரிசைகளுடன் தான் கல்யாணம் செய்து கொடுத்தார்கள்.

“எப்போதும் பணம் பணம் என்று தொந்தரவு செய்வார். மனைவி என்பவள் கணவனுக்கு அடிமை என்பது அவர் எண்ணம். எனக்குச் சீதனமாக இந்த வீட்டை என் தந்தை எழுதி வைத்தார். இதைத் தன் பெயருக்கு மாற்றுமாறு மிகவும் வற்புறுத்தினார். என் தந்தை சம்மதிக்கவில்லை.

“நாள்தோறும் போராட்டம் தான். வரதட்சணைக் கொடுமைப் படுத்துகிறார் என்று காவல் துறையிடம் புகாரும் செய்துவிட்டார் என் தந்தை. ஆனால், நான் புகாரில் கையெழுத்துப் போட மறுத்தேன். தன்னைக் கைது செய்து விடுவார்கள் என்று அஞ்சி, அவர் ஒருநாள் எங்கோ சென்று விட்டார்.”

தோழியும் கல்யாணியும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுது வந்த சந்திரா , “கல்யாணி! இந்தப் புது வீடு உன்னை என்றுமே காப்பாற்றும். என் தோழிக்கு முழுச் செய்தியும் தெரியாது. தமிழ்ச்செல்வனை என்னுடன் அழைத்துக் கொண்டு இந்த வீட்டிற்கு வந்தேன்.

புது வீட்டை நெருங்கும் போது தமிழ்ச்செல்வன் சற்றே தடுமாறினான். சந்திரா “இந்த வீடா – இந்த வீடு விற்பனைக்கா” என்று பரபரப்புடன் கேட்டான். “ஆமாம் நாம் வாங்குகிறோம். நாம் என்றால் நீங்கள் வாங்குகிறீர்கள். எனக்குப் பதிலாக கூட்டாகக் கையெழுத்து இடுபவள் இந்த வீட்டின் சொந்தக்காரி கல்யாணி” என்றேன்.

கல்யாணியும் தமிழ்ச்செல்வனின் மகன் சிறுவனும் மெல்ல இறங்கி வந்தனர். தமிழ்ச்செல்வனுக்கு ஏற்பட்ட அச்சம், வியப்பு, தோல்வி, அவமானம்.. அங்கிருந்து ஓடி விடலாம் என்று எண்ணத் தூண்டின.

சந்திராவின் தோழி இப்போது பேசினாள். “மிஸ்டர் தமிழ்ச்செல்வன்! முகத்தைப் பார்த்துக் குணத்தைச் சொல்லும் திறமை உனக்கு இருக்கிறதா என்று சந்திரா அன்று கேட்டாள். உங்கள் விழிகளில் எதையோ மறைக்கும் தன்மை தெரிந்தது. இப்போது இந்தக் கணத்தில் அது மாறிவிட்டது.

“கல்யாணியின் கரம் பிடித்த நீங்கள், அதை மறைத்து சந்திராவை மணக்க முற்படலாமா? ஓர் ஆண் மகனுக்கு அது அழகன்று. ஆணுக்குரிய லட்சணம் ஒரே மனைவியுடன் வாழ்தல். வள்ளுவரை நான் இங்கே இழுக்க விரும்பவில்லை. சந்திரா உங்களிடம் மனத்தைப் பறி கொடுத்தவள். ஆனால், நீங்கள் மற்றொருத்திக்குச் சொந்தம் என்று அறிந்தவுடன் உங்களை வழக்கு மன்றத்திற்கு இழுக்க விரும்பவில்லை. கல்யாணியின் கணவனாக நீங்கள் நீடு வாழ வழி செய்து விட்டாள். இனியாவது ஆண் மகனுக்குரிய இலக்கணங்களுடன் இனிதே வாழுங்கள்.”

அனைவரின் விழிகளிலும் மெல்லிய நீர்த்திரை.

– மாந்தோப்பு மரகதம், சிறுகதை தொகுதி -7, முதற் பாதிப்பு: 2013, யாழினி பதிப்பகம், சென்னை 600108.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *