ஆட்டுக்கால் சூப்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 11,942 
 
 

அதிவீர பாண்டியன் இப்போது மைலாப்பூரின் மேற்குப் பகுதியிலிருந்து கிழக்குப் பகுதிக்கு வீடு மாற்றி விட்டான். மேற்கு மைலாப்பூர் நடுத்தர வர்க்க பிராமணர்கள் வாழும் பகுதி என்பதால் அவனுக்கு சில கலாச்சார சிக்கல்கள் இருந்தன. உதாரணமாக, அவன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தான். 25 குடும்பங்கள் வசித்த குடியிருப்பு அது. அதில் மூன்று குடுப்பத்தை தவிர மற்ற அனைவரும் பிராமணர். அது ஒன்றும் அவனுக்கு பிரச்னை இல்லை. ஆனால் அவர்களுக்கு அது பிரச்சினையாக இருந்தது என்று தெரிந்தது. குறிப்பாக அவனுடைய அசைவ உணவுப் பழக்கம். வாரம் ஒருமுறையோ, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ அவன் மீன் சாப்பிடுவது குறித்து புகார் எழுப்பினார்கள். அவர்களும் அவனைப் போலவே வாடகைக்கு குடியிருப்பவர்கள்தான். அப் பிராமணர்களான மூன்று குடுப்பத்தினரும் கிறிஸ்தவர்கள்; அடிக்கடி கருவாடு உட்பட நானாவிதமான கவுச்சி அய்ட்டங்களும் சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள் என்றாலும், அவர்கள் சொந்த வீட்டுக்காரர்கள் என்பதால் அவர்களை இந்த சைவ உணவுக்காரர்களால் ஒன்றும் கேட்க முடியவில்லை.

ஒருநாள் யாரும் வீட்டில் புகைக்கக் கூடாது என்று ஒரு சுற்றறிக்கை வந்தது. சரி, ஆனால் அதில் கண்டிருந்த மற்றொரு ஷரத்துதான் விபரீதமாக இருந்தது. யாரும் வீட்டில் மது அருந்த கூடாது என்பதே அந்த ஷரத்து.

அதிவீரனோ அவ்வப்போது தன்னுடைய நண்பன் விசாகதத்தனோடு வீட்டில் வைத்து இலங்கை சாராயம் குடிக்கும் வழக்கம் உடையவன். ஆனால் அது ஒன்றும் சிகரெட் மாதிரியோ, மீன் மாதிரியோ நாற்றம் அடிக்காதே. குடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்றும் அந்த சுற்றறிக்கையில் கண்டிருந்தது.

“என்னடி இது, விட்டால் வீட்டில் சத்தம் போட்டுக் கலவி செய்யக் கூடாது; கர மைதுனம் செய்யக்கூடாது என்றெல்லாம் கூட சர்க்குலர் போடுவான்கள் போலிருக்கிறதே?” என்று தன மனைவி பெருந்தேவியிடம் அங்கலாய்த்துக் கொண்டான் அதிவீரன்.

ஆனாலும் அந்தக் கோழையால் என்ன செய்ய முடியும். பொத்திக் கொண்டு சுற்றறிக்கையில் கையெழுத்துப் போட்டுத்தான் கொடுத்தான்.

சில தினங்கள் சென்று இரண்டாவது மாடியில் இருந்த த்விஜேந்திரன் குடும்பம் கீழ் போர்ஷனுக்கு வீடு மாற்றிக் கொண்டு வந்தது.த்விஜேந்திரன் தான் அந்தக் குடியிருப்போர் சங்கத்தின் தலைவர். அதற்கு முன்னாள் அங்கே இருந்த ஒரு கிறிஸ்தவக் குடும்பம் அந்த வீட்டை விற்றுவிட்டு வேறு இடம் போய்விட்டது. அந்த வீட்டை வாங்கியவர் அதை த்விஜேந்திரனுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்தக் கிறிஸ்துவக் குடும்பம் இருந்த வரை அதிவீரன் குடும்பத்திற்கு இந்தப் பிரச்னையும் இருந்ததில்லை. சமயங்களில் பிரார்த்தனை செய்யும் சப்தம் கேட்கும், அவ்வளவுதான்.

த்விஜேந்திரன் குடும்பம் குடி வந்திருந்த பகுதி அதிவீரனின் வீட்டுக்கு நேர் பின்னால் இருந்தது. வந்ததுமே ஆரம்பித்துவிட்டார்கள். த்விஜேந்திரனின் மனைவி, “உங்கள் வீடு நாறுகிறது” என்று பெருந்தேவியிடம் புகார் சொன்னாள். “ஞாயிற்றுக்கிழமை மட்டும்தானே மீன் வாங்குகிறோம்?” என்று அவள் பதில் சொல்ல, “இல்லை, எப்போதும் நாறுகிறது” என்று சொல்லியிருக்கிறாள் த்விஜேந்திரன் பொண்டாட்டி. இப்படி ஒரு பிரச்சனை புகைந்து கொண்டிருந்த போதே அதிவீர பாண்டியன் ஒரு ஏர் கண்டிஷனர் வாங்கிப் பொருத்தினான். முதல் நாளே, “உங்கள் ஏர் கண்டிஷனரால் எங்கள் வீடு முழுதும் உஷ்ணமாகிவிடுகிறது” என்று பெரிதாகச் சண்டைக்கு வந்தாள் த்விஜேந்திரன் பொண்டாட்டி. த்விஜேந்திரன் எதுவும் வாய் திறக்கவில்லை. தன் மனைவியையே அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்படியாகத்தான் அந்த இடத்திலிருந்து வீடு மாற்றிக் கொண்டு மைலாப்பூரின் கிழக்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தான் அதிவீரன். சான் தோமே தேவாலயத்துக்கு எதிரில் உள்ளது இந்தப் புதிய வீடு. உண்மையில் இது மைலாப்பூருக்கும் சான் தோமேவுக்கும் நடுவில் இருக்கிறது.

முஸ்லீம்கள் வசிக்கும் பகுதி என்பதால் இங்கே அவ்வளவு கலாச்சாரப் பிரச்சனைகள் கிடையாது. நேற்று கூட சிட்டி சென்டரில் பொம்மலாட்டம் என்ற படம் பார்த்துவிட்டு பஸார் வீதி வழியே வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டுக் கால்களைச் சுட்டு விற்பனைக்கு அடுக்கி வைத்திருந்தார்கள். வேண்டாம் என்று விட்டுவிட்டான். பெருந்தேவி அரண்டு விடுவாள். ஏதோ அவனுக்காக மீன், கரி என்று சமைத்துக் கொடுப்பவளை இப்படி “ஆட்டுக்கால் பாயா வைத்துக் கொடு” என்று டார்ச்சர் செய்யக்கூடாது. ஆனால் அந்த ஆட்டுக்கால்களைப் பார்த்ததும் அதிவீரனுக்கு ரொம்ப ஹோம்லியாக இருந்தது என்னவோ உண்மை. பிறகு அந்த பஸார் தெருவிலேயே ஆட்டுக்கால் சூப் குடித்துவிட்டு வீட்டுக்கு போனான்.

– ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி என்ற சிறுகதைகள் தொகுப்பில் இடம் பெற்ற கதை (டிசம்பர் 2010)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *