(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வாசலில் ஒலித்த குரல் என்னை ஸ்தம்பிக்க வைத்தது. ரவியினுடைய குரல்போலல்லவா தோன்றுகிறது! இப்போது அவன் இங்கு வர வேண்டிய காரணம்? மீண்டும் பலமாக ஒலித்தது குரல்; தொடர்ந்து கதவு தட்டப் படும் ஓசை. வெறுப்புடன் எழுந்து சென்று நான் கதவைத் திறக்கையில், என் வியப்பை உண்மை யாக்க ரவிதான் அங்கு நின்று கொண்டிருந்தான்.
‘வாப்பா!…’
வேண்டா வெறுப்பாக அவனை வரவேற்று உள்ளே கூடத்துப் பக்கம் அழைத்து வந்தேன். காமரா அறையில் தூங்கிக்கொண்டிருந்த ரத்தினா கூடத்தில் ஒலித்த சந்தடி கேட்டு எழுந்துவிட்டாள் போலும்! கண்களைக் கசக்கிய படியே எழுந்து வந்தாள் அவள். துயில் நீங்கிய அவள் முக தாமரை ரவியைக் கண்டதும் மலர்ந்தது.
‘வாருங்கள்… ஏது… இத்தனை காலையிலேயே…’
‘ஆமாம்…ரத்தினா! அவசரமாக உன்னைக் கண்டு உடனே அழைத் துப் போகவே ஓடி வந்தேன் இந்த விடியற்கால வேளைலேயே. பாமினி சாகக் கிடக்கிறாள். மரணப் படுக்கையில் இருக்கும் அவள், தன் அந்திம காலத்துக்குள் உன்னைக் காண மிகவும் ஆவலாக இருக்கிறாள். உடனே புறப்பட்டால்தான் உயிருள்ளபோதே அவளைக் காணலாம்…’
படபடப்புடன் ரவி மொழிந்த சொற்கள் கேட்டு ரத்தினாவின் விழிகள் கலங்கின.
‘அப்படியா!…இதோ புறப்பட்டு வருகிறேன்…’
ரத்தினாவின் வாசகங்கள் என் உள்ளத்தைப் பரவசமடையச் செய்தன.
‘பாமினி போய்விட்டால்!…’
என் மனம் ஒரு கணம் அர்த்த மற்ற விதத்தில் ஆனந்தித்தது. இனியாவது என் ரத்தினாவுக்கு வாழ்வு கிடைக்குமா?
அவசரம் அவசரமாக டம்ளரில் காபியை நிரப்பிக்கொண்டு வந்து ரவியிடம் கொடுத்தேன். அவன் அதை வாங்கி ஒரே மூச்சில் குடித்தான். பாவம்! நல்ல களைப்பு அவனுக்கு.
‘ரத்தி்னா!… நீயும் கொஞ்சம் காபி…’ என்றேன்.
‘எனக்கு வேண்டாம் அம்மா!…என் மனம் சரியாக இல்லை. பாமினியை எப்படியாவது உயிருடன் பார்த்தால் போதும் என்றிருக்கிறது…’
கவலை மிகுதியால் களை யிழந்து, ஒளி குன்றிய முகம் வாட, குரல் கம்ம அவள் கூறிய போது என் தாயுள்ளம் தவித்தது. வற்புறுத்தி அவளை ஒரு வாய் காபி சாப்பிட வைப்பதற்குள் நான் பட்ட பாடு…
வாசல்வரைச் சென்று ரத்தினாவை ரவியுடன் வழியனுப்ப விட்டு உள்ளே வந்த என் உள்ளம் ஏனோ நிலைகொள்ளாமல் அலைந்தது. சதா ‘கலகல’வென்றிருப்பாள் அவள். இப்போது கணப் பொழுது அவள் வீட்டில் இல்லாத போது வீடுதான் எப்படி சூனியமாக இருக்கிறது?
தன் உரிய இடத்துக்கு ரத்தினா புறப்பட்டுவிட்டாள். இன நான் ஒண்டிக் கட்டை. என் ஒருத்திக்காகவா இவ்வளவு பெரிய வீடும் வாசலும் மாடும் மனையும், மட்டற்ற வேலையாட்களும்?
ஏன் இந்த மயக்கம்?…மன கருகியிருந்த என் கண்மணியின் வாழ்வு மலர வேண்டும்; கணவனுடன் கூடி வாழும் சிறப்பு மிக்க இல்லறம் என் செல்வத்துக்கும் கிட்ட வேண்டும் என்றுதானே இதுகாறும் தவம் இருந்தேன்? அப்படியிருக்க, இப்படி நான் தனிமையை நினைத்துக் கலங்கு வதுதான் எத்தனை அறியாமை?
என் எண்ணப் புறா கவலை வலையிலிருந்து விடுபட்டு, கடந்து சென்ற கால வெளியில் ‘ஜூவ்’ வென்று சிறகடித்துப் பறந்தது.
ஒரு நாள்…
வழக்கம்போலி கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய ரத்தினாவின் போக்கில் என் மனம் ஏதோ ஒருவித புதுமையைக் கண்டது. குரலில் ஒருவித நடுக்கம்; நடையில் ஒருவித துள்ளல்; வதனத்தில், மொட்டு அவிழ்ந்தாற்போன்ற மலர்ச்சி. புத்தகங்களைக் கூடத்து ஊஞ்சலில்வீசி எறிந்துவிட்டு, சமையல் அறையில் இருந்த என்னிடம் வந்தாள்.
‘அம்மா!.. ஒரு வெள்ளி டம்ளரில் காபி கொடேன்.. அவசரமாக வேண்டும்…’
பரபரப்புடன் அவள் கேட்கையிலே, நான் ஒன்றும் புரியாமல் விழித்தபடியே பதட்டத்துடன் ‘ஸ்டவ்’வைப் பற்ற வைத்தேன்.
‘அம்மா!…சீக்கிரம் கொடு அம்மா..வாசல் அறையில் எங்கள் கல்லூரி ‘லெக்சரர்’ உட்கார்ந்திருக்கிறார்…’
அவள் பறந்தாள். காபியைக் கொடுத்துவிட்டு நானும் அவளைப் பின்தொடர்ந்தேன்; வந்திருப்பவரைப் பார்க்கும் ஆவலுடன். ‘இவர்தானம்மா, புதிதாக எங்கள் கல்லூரிக்கு வந்திருக்கும் ‘லெக்சரர்’ மிஸ்டர் ரவிசந்தர்… இவங்க என் தாயார்…’ என்று உற்சாகத்துடன் எங்களைப் பரஸ்பரம் அறிமுகம் செய்வித்தாள் ரத்தினா.
ரவிசந்தர் வசீகரம் பொருந்திய வாலிபனாக, சிரித்த முகமும், விசாலமான நெற்றியும், தீர்க்கமான நாசியும்கொண்டு சுந்தர வடிவுடன் திகழ்ந்தான். நாளடைவில் அவன் குணமும், அவன் தோற்றத்தைத் தோற்கடிக்கும் விதத்தில் மிகவும் மென்மையாக இருந்ததை உணர்ந்தேன்.
வாரம் ஒரு முறை ரவிசந்தர் எங்கள் இல்லத்துக்கு வரலானான். ரத்தினாவின் உள்ளம் எனக்கு எளிதில் புரிந்துவிட்டது. சில பெண்களைப்போல பெற்றோர்களுக்குத் தெரியாமல் தன் காதலை ரகசியமாக வைத்துக் கொள்ளாமல் பட்டவர்த்தனமாக, தன் மனம் கவர்ந்த காதலனை வீட்டுக்கே அழைத்து வந்த அவள் கபடற்ற உள்ளப் போக்கைக்கண்டு நான் வியந்தேன்; மகிழ்ந்தேன்.
முடிவில், நான் எதிர்பார்த்து விரும்பியபடி ரத்தினா-ரவியின் சந்திப்பு காதலாகப் பரிணமித்து கல்யாணத்தில் வந்து முற்றுப் பெற்றது. இதில் தான் எனக்கு எவ்வளவு மனமகிழ்வு!
பெற்றோருக்கு ஒரே செல்வ மகனும், ஆணழகனுமாகிய ரவி, என் ரத்தினாவுக்கேற்ற, கண் நிறைந்த கணவன்தான் என்கிற இறுமாப்பிலே திளைத்திருந்தது என் நெஞ்சம். அதில் எழும்பிய மகளின் பிரிவைப்பற்றிய துக்கம். அந்த எக்களிப்பில் இடம் தெரியாமல் மறைந்து போயிற்று.
அவளுடைய பிற்கால வாழ்வின் சுபிட்சத்தைப்பற்றிய ஆசைக்கனவுகளுடன் அவளைக் கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால்…
என் ஆசைமரம் வேரிற்று விரைவில் விழுந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லையே!…ரத்தினாவின் வாழ்க்கைப் பூஞ்சோலை ஒரு எரிமலை மீது அமைந்திருக்கும் என்று நான் கணமும்கூட, கற்பனையில்கூட அனுமானித்ததில்லையே.
திடுதிப்பென்று ஒருநாள் மாலை தனியாக வந்து சேர்ந்தாள் ரத்தினா. அருமை மகளின் அந்த திடும் பிரவேசம் என்னை பிரமிக்க வைத்தது. என் அதிர்ச்சியை உள்ளடக்கிக்கொண்டு அன்புடன் அவளை வரவேற்றேன்.
‘ரவி வரவில்லையா ரத்தினா?…’
எவ்வளவோ பாடுபட்டு அடக்க! வைத்தும், என் உள்ளத்திலே ஒலித்துக்கொண்டிருந்த இந்தக் கேள்வி என்னையும் மீறி என் உதடுகளைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டது.
‘இல்லையம்மா!… என்னைக்கூட இப்போது போக வேண்டாம் என்று தான் சொன்னார்…’
ரத்தினாவின் பதில் என் குழப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. கணவருடைய விருப்பத்தை மீறி் அவள் இங்கு வர வேண்டியதன் அவசியம்? ஒன்றுமே புரியாமல் குழம்பிய மனத்தினளாய் வியப்புடன் அவளை வெறித்து நோக்கினேன். என் இதழ்கள் நெஞ்சின் துடிப்பைப் பிரதிபலித்தன.
‘ஆமாம் அம்மா! இது உன உனக்கு ஒரே திகைப்பாய்த்தானிருக்கும்.. எனக்கும் அவருக்கும் உள்ள தொந்தம் இன்றுடன் அற்றுவிட் டது. இனி நானும் அவரும் இணைந்து வாழ இயலாது…’
‘நிஜமாகவா?…ஐயோ.ரத்தினா. அப்படி என்ன சம்பவம் அம்மா நடந்தது…’
என்னால் என்னுள் எழுந்த உணர்ச்சிப் பிரவாகத்தைத் தடுத்து நிறுத்த இயலவில்லை; வெறும் பெருமூச்சாக அதனை அடக்க வீணாக முயன்றேன். ‘ஆயிரமிருந்தாலும் பெண்களாகிய நாம் அடங்கித்தான் போக வேண்டும். இவ்வளவு நெஞ்சு உரம் எங்கிருந்து வந்தது உனக்கு?…’
அவள் நிலை எனக்குக் கோபத்தைத்தான் உண்டாக்கியது.
‘சம்பவம் ஒன்றும் பிரமாதமாக நடந்துவிடவில்லையம்மா! நானாகத்தான், என் வாழ்வைத் தியாகம் செய்துவிட்டு வந்து சேர்ந்தேன். அவருடைய வாழ்விலே பங்குகொள்ள எனக்கு முன்பே ஒருத்தி இருக்கிறாள் என்று நேற்றுத்தான் நான் அறிந்துகொண்டேன். என்னையறியாமல் நான் பறித்துக்கொண்டுவிட்ட அவளுடைய உரிமைப் பொருளாகிய அவரை அவளிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக என் கடமையைச் செய்துவிட்ட களிப்புடன் நான் இங்கு வந்திருக்கிறேன்…’
‘என்ன?…ரவிசந்தர் ஏற்கனவே மணமானவனா?.. இதை தான் என்னால் நம்பவே முடியவில்லையே…’ நான் அலறினேன்.
ரத்தினா விவரமாகச் சொன்னாள்:-
பாமினி பெயருக்கேற்ப அழகே உருவானவள்; பொறுமையின் உறைவிடம் ஆனால் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். ரவியைத் தம் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்து அவளை மண முடித்து வைத்த அவள் தந்தைக்கு, சீர் வரிசை விஷயங்களில் அவருடைய அன்னையைத் திருப்தி செய்ய முடியவில்லை. நாளொரு வசை மொழியும், பொழுதொரு ஏச்சுமாக புகுந்த இடத்தில் படுங்கல்களில் உழன்று வந்த பாமினி நாளடைவில் இதயச் சுமையோடு வயிற்றுச் சுமையையும் தாங்க வேண்டியருந்தது.
பூச் சூட்டலின்போது ஏற்பட்ட சீர்வரிசைத் தகராறு காரணமாக ரவியோ அவள் அன்னையோ, பிறந்த சிசுவைக் கூடச் சென்று பார்க்கவில்லை. பாமினி எழுதிய கடிதங்களுக் குக்கூட ரவி பதில் போடவில்லை. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்கிறபடி, செல்வமே வாழ்வின் இன்பம் என்ற குறிக்கோளுடன் உலவிய தன் தாயின் போதனை ரவியின் மனத்தைக் கல்லாக்கியிருந்தது.
இதனிடையே ரவிக்கு வேறு ஊருக்கு மாற்றலாயிற்று. வந்த இடத்தில் அவன் ரத்தினாவைக் கண்டு அவள் அழகிலே மதிமயங்கினான். அவளுடைய செல்வத்தாலே அவன் அன்னை மனத்தைப் பறிகொடுத்தாள். இருவரும் சேர்ந்து பாமினிக்குத் துரோகம் செய்துவிட்டு, திரண்ட செல்வத்தின் ஒரே வாரிசான ரத்தினாவை தங்கள் உடைமையாக்கிக்கொண்டார்கள்.
கடிதம் எழுதிப் பயனில்லை என்று கண்டுகொண்ட பாமினி ரவியின் புது விலாசத்தை எப்படியோ விசாரித்து அறிந்து கொண்டு ஒரு தினம் கையும் குழந்தையுமாக வந்து நின்றாள். கணவன மறுமணம் செய்து கொண்ட விவரம் அவளுக்குத் தெரியாதுபோலும்! புதுப் பூவின் பொலிவுடன் விளங்கிய அந்தச் சிசு ரத்தினாவை மிகவும் கவர்ந்தது.
தாயும், மகனும் பாமினியின் துணிவான செய்கை கண்டு வெல வெலத்துப் போனார்கள். பாமினி? யார் என்பதை அறிந்துகொண்ட ரத்தினாவின் இதயத்தில் வேதனை கவிந்தது. பாமினியிடம் விவரத்தைச் சொல்ல விடை பெற்றுக் கொண்டு பிறந்தகம் வந்துவிட விரும்பினாள்.
ஆனால், தன் ஏழ்மைத்தனத்தினால் தாழ்வுபட்ட நிலையில் பாமினி ரத்தினாவின் துணையின்றி அவர்களுடன் வாழப் பயந்தாள். அவளுடைய பயத்துக்கும் ஆதாரமிருந்தது. குழந்தையைமட்டும் வைத்துக்கொண்டு பாமினியைப் பிறந்தகம் அனுப்பி வைக்கும்படியும், ரத்தினாவே குழந்தையைக் கவனித்துக்கொள்வாள் என்றும் ரவியின் அன்னை மகனுக்கு உபதேசம் செய்யலானாள். ரத்தினாதான் அவர்களுடன் வாதாடி ஒரு பெண்ணுக்குத் துரோகம் நினைக்கும் பாவத்தலிருந்து அவர்களைத் தப்பச் செய்தாள், அத்துடன்மட்டுமல்ல; தன் ஆஸ்தியின் ஒரு பெரும் பகுதியையும் பாமினியின் பெயருக்கு எழுதி வைக்கத் துணிந்தாள் அவள்!
என்றென்றும் பாமினியைக் கைவிடமாட்டேன் என்று ரவியிடம் உறுதிமொழி பெற்றுக் கொண்டு பிறந்தகம் வந்து சேர்ந்தாள்.
ஏதோ நாடகத்தில் நடக்கும் சம்பவங்கள்போல் ரத்தினா என்னிடம் எல்லாவற்றையும் கூறி முடித்தாள் என் நெஞ்சம் தவித்தது. ‘பால் என்று நம்பினேன்… அது வெறும் சுண்ணாம்பு நீராக அல்லவா என் இதயத்தை எரிக்கிறது!’
‘அசட்டுப் பெண்ணே! அன்பான கணவனைத்தான் தியாகம் செய்தாய்…ஆஸ்தியில் பாதியையுமா?…’
என் கதறல்களுக்கும் கண்ணீருக்கும் மகள் மசியவில்லை. அன்றைக்கே உயில் ஒன்று எழுதி பாமினிக்கு அனுப்பி வைத்தாள்- இதற்காகத்தானா அவளுடைய தந்தை பாடுபட்டு செல்வம் தேடி அவள் பெயருக்கு வைத்திருந்தார்?…வாழ்வை இழந்துவிட்டா லும், வாழ்க்கை வசதியைத் தரும் செல்வத்தையும் இழந்து எப்படி வாழ்வது?…எனக்குப் அவள் கதி?..ஆஸ்தியைக் கரைத்த பிறகு அஸ்தியைக் கரைக்கக் கூட நாதியற்ற நிலையில்… தாளாத மனப் பாரம் அழுந் திய நெஞ்சில் சஞ்சலத்தைத் தவிர இனி சந்தோஷத்துக்கு இடமேது?… ஒரே செல்வ மகளின் வாழ்வு இப்படி உபயோகமற்றதாக. வெறும் கனவுகளாக முடிந்துவிடும் என்பதை நான் எண்ணிப் பார்த்ததுமில்லையே?
மீண்டும் கணவருடன் கூடி வாழவோ, அல்லது அவர்மீது வழக்குப் போட்டு ஜீவனாம்சம் பெறவோ ரத்தினா இணங்கி வரவில்லை. விட்ட படிப்பைத் தொடர்ந்து படித்து ஆசிரியைப் பணியில் தன் வாழ்வை வகுத் துக்கொண்டாள். ரவியும் பாமினி யும் அடிக்கடி வந்து அவளைப் பார்த்துச் சென்றார்கள். அப்போ தெல்லாம் என் பெற்ற வயிறு பற்றி எரிகையில் ரத்தினா கூறுவாள்:-
‘ஏன் இப்படி மாய்ந்து போகிறாய் அம்மா!…மகளின் வாழ்வு பறிபோய்விட்டதே என்று மனம் கலங்குவதைவிட்டு, அவளுடைய செயலை ஒரு உயர்ந்த தியாகமாக எண்ணி பெருமைகொள்ளேன்…’
பாமினி இப்போது மரணப் படுக்கையிலிருக்கிறாள்!.. இனியாவது என் மகளுக்கு வாழ்வு கிடைக்குமா?…
‘சீ! இதென்ன நீசத்தனமான நினைவு!…பேதைப் பெண்…அவள் என்ன துரோகம் செய்தாள் ரத்தினாவுக்கு?… எய்தவனிருக்க அம்பை நோகிறேனே…
ரத்தினா சென்ற மறு நாள் எனக்கு பாமினியின் சாவைத் தாங்கிய செய்தி கிடைத்தது. இரண்டாவதாகப் பிரசவித்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், அவள் மரித்துவிட்டதால், தன் இரு குழந்தைகளுக்காக வேனும் சத்தினா அங்கிருக்க வேண்டும் என்று ரவி கேட்டுக்கொள்வ தாயும், மறு நாள் வந்த கடிதத்திலே ரத்தினா எழுதியிருந்தாள்.
என் உள்ளம் பூரிப்படைந்தது. இனியாவது குடியும் குடித்தனமுமாக மூத்தாள் குழந்தைகளைத்
தான் பெறாமல் பெற்ற குழந்தைகளாக வளர்த்துக்கொண்டு இன்பமாகக் கணவனுடன் வாழட்டும்! அதைக் கண்டு என் கண்கள் களிப்படையட்டும்!
இறைவனை வழிபட்டு மன நிம்மதியடைவதில் எஞ்சிய என் வாழ்நாட்களைக் கழித்துவிடலாம்; இனி எவ்விதக் கவலையுமின்றி.
அன்று.. மன நிம்மதியுடன் பகவத் கீதையில் ஆழ்ந்திருந்தேன். வாசலில் வந்து நின்ற ‘டாக்சி’ யின் ஓசையைத் தொடர்ந்து ரத்தினா உள்ளே பிரவேசித்தாள்; தோளில் ஒரு சிசுவும் கையில் படித்த பாலகனுமாக.
திகைப்புடன் அவளை வரவேற் றேன்.
‘எனக்கென்னவோ அங்கு ஒட்ட வில்லை அம்மா! பாமினியின் கூடவே சேர்ந்து வாழ விரும்பாத என் உள்ளம். இப்போதும் ஏனோ இல்லறத்தில் ஒன்ற மறுக்கிறது. இந்த இரு செல்வங்களையும் பாதுகாப்பதாய் பாமினிக்கு வாக்குக் கொடுத்துவிட்டேன். ஆகவே இவைகளுடன் இங்கு புறப்பட்டு வந்துவிட்டேன். தாயின் கைப் பொம்மையாக விளங்கும் அவர் செல்வமே குறியாக இருக்கிறார். தன் தவறை உணராத நிலையில் அவருக்கு வாழ்வு சுகிக்கப் போவதுமில்லை…’
மகளின் மனப்போக்கு எனக்கு விளங்கவில்லை.
என் ஆசைகள் எல்லாம் கனவாகப் போய்விட்ட நிலையில் அந்திமக் காலத்தில் மன அதிர்ச்சியோடு வாழ வேண்டும். என்று விதி என் வாழ்வை வகுத்திருக்கையில், ரத்தினாவைக் குறை கூறி என்ன பயன்?..
– 22 ஏப் 1962, மித்திரன்