அன்புத்தங்கச்சி..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2021
பார்வையிட்டோர்: 4,515 
 

வெளிநாடு சென்ற அண்ணன் முத்துப்பாண்டி. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கிராமத்துக்கு வந்திருப்பதை அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தாள் தங்கை பானுமதி.

முத்துப்பாண்டி வெளிநாட்டிலிருந்து நிறைய பொருட்களும், நகைகளும் வாங்கி வந்திருப்பான். அந்த `ஓடுகாலி’ வள்ளி வருவதற்குள் நாம் முந்திக்கொள்ள வேண்டும் என்று இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.

முத்துப்பாண்டிக்கு இரண்டு தங்கைகள். மூத்தவள் வள்ளி. இளையவள் பானுமதி. இருபத்தெட்டு வயதாகியும் வள்ளிக்குத் திருமணமாகவில்லை.

பக்கத்துக் கிராமத்துக்குக் கூலி வேலைக்குச் சென்ற வள்ளி, அந்தக் கிராமத்து இளைஞனைக் காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டு போய்விட்டாள்.

பொண்ணுக்குச் சீர், செனத்தி செய்து கட்டிக்கொடுக்க வக்கில்லாத குடும்பம் என்று பங்காளிகள் ஏசினார்கள். அவர்களுக்கு முன்னே தலைகுனிந்து நின்றான் முத்துப்பாண்டி.

பிறகு, தந்தையின் சம்மதத்துடன் இருந்த சொற்ப நிலத்தை விற்று, பணக்கார வரனாகப் பார்த்து பானுமதிக்கு மணமுடித்தான்.

ஒரு கால் ஊனமுற்ற தந்தையையும், தாயையும் கண்ணுக்குக் கண்ணாக இருந்து காப்பாற்றினான். உறவுக்காரர்கள் சிலர் தங்கள் பெண்ணை கொடுக்க முன்வந்தபோது, இப்போதைக்குத் திருமணம் வேண்டாம் என மறுத்து விட்டான் முத்துப்பாண்டி.

சிங்கப்பூரில் நல்ல வேலை இருக்கிறது. விசா ரெடி. பணம் கட்டினால் உடனே போகலாம் என்று ஆள் அனுப்பும் ஏஜெண்டு கூறினார். முத்துப்பாண்டிக்கு வெளிநாடு செல்லும் ஆசை வந்தது.

பானுமதி வசதி வாய்ப்போடு வாழ்கிறாள். நிலம், நீச்சு அதிகம். கரும்பு, வாழை, நெல் என்று சாகுபடி செய்கிறார்கள். தினமும் பத்து பதினைந்து பேர் அவள் விளை
நிலத்தில் வேலை செய்கிறார்கள்.

பானுமதியிடம் கேட்டால் பணம் இல்லையென்றா சொல்லப் போகிறாள் என்று எண்ணிய முத்துப்பாண்டி, தங்கையை பார்க்கப்போனான்..

இந்த அன்றாடம் காய்ச்சி அண்ணனிடம் பணம் கொடுத்தால் எப்பத்திரும்ப வரும்? வெளிநாட்டில் வேலை அமையவில்லை என்றாலோ, அல்லது வேலை பிடிக்காமல் பாதியில் திரும்பி வந்து விட்டாலோ கொடுத்த பணம் எப்படி திரும்ப வரும் என்று என்று எண்ணிய பானுமதி தட்டிக் கழித்தாள்.

அவ்வளவு பணம் கிடைக்காது அண்ணா… பணம் எல்லாம் மாமா கையில்தான் இருக்கு, அவர் தரமாட்டார் எனக் கூறினாள்.

முத்துப்பாண்டி ஏமாற்றத்துடன் திரும்பினான். அவனுக்கிருந்த ஒரே ஒரு நம்பிக்கையும் போய் விட்டது. இனி வெளிநாடு செல்ல முடியாது என நம்பினான்.

ஆனால்… முத்துப்பாண்டியின் ஆசை நிறை வேறியது. அவன் கொஞ்சமும் எதிர் பாராத இடத்தில் இருந்து பணம் கிடைத்து வெளிநாடு போனான்.

மூன்று ஆண்டுகளுக்கொருமுறை கிராமத்துக்கு வந்தான். பெரிய வீடு கட்டினான். ஏளனமாகப் பேசிய பங்காளிகளும், கிராமமக்களும் முத்துப் பாண்டியின் வளர்ச்சி கண்டு ஆச்சரியமடைந் தனர்.

இப்போது, வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு, கிராமத்துக்கே வந்துவிட்டான் முத்துப்பாண்டி.

அரக்கப் பறக்க வீட்டுக்குள் நுழைந்த பானுமதி அண்ணனைப் பார்த்ததும் கண் கலங்கினாள். சகோதர பாசம் (!) கண்ணீரால் கண்களை மறைத்தன. நல்லா இருக்கியாண்ணா… என்றபோதே வார்த்தைகள் தடுமாறின.

முத்துப்பாண்டி, பானுமதியின் பிள்ளைகளைத் தூக்கிக் கொஞ்சினான். வாங்கிவந்த வெளிநாட்டுப் பொருட்களை கொடுத்தான்.

தனக்கு ஏதாவது வாங்கி வந்திருப்பான் என எண்ணினாள் பானுமதி. அப்போது, ஒரு பெட்டியைத் திறந்தான் முத்துப்பாண்டி. அந்தப் பெட்டியில் இருபத்தைந்து சவரன் மதிப்புள்ள தங்கஆரம் இருந்தது.

அந்த ஆரம் யாருக்கு… எனக்கா, அல்லது அண்ணனின் வருங்கால மனைவிக்கா… என்று எண்ணிய பானு. அந்த ஆரம் யாருக்கு அண்ணா..? என்று வாய்விட்டே கேட்டு விட்டாள்.

இது… வள்ளிக்காக வாங்கினேம்மா என்றான்.

பானுமதியின் முகத்தில் கோபம் கொப்பளித்தன.

அந்த ஓடுகாலிக்கா வாங்கினீங்க… நம்ம குடும்பக் கவுரவத்தைக் காற்றில் பறக்க விட்டவள் ஆயிற்றே… நம்ம ஊர்க்காரங்க நம்ம குடும்பம் பற்றி பலவிதமா பேசுறதுக்கு காரணம் அவள்தானே… சூடாக வார்த்தைகளை உமிழ்ந்தாள்.

நிறுத்து பானு… கோபத்தில் குரல் உயர்ந்தது முத்துப்பாண்டிக்கு. “இன்னிக்கு உங்க அண்ணன் அந்தஸ்துல உயர்ந்து நிற்க காரணமே என் வள்ளி தான்

என்னண்ணா சொல்றீங்க?

ஆமா பானு… சிங்கப்பூர் செல்ல நான் பணத்துக்காக அல்லாடிக்கொண்டிருந்தபோது, முதல்ல உன்னைத்தான் பார்க்க வந்தேன். உன்னால எனக்கு பணம் தர முடியலை. எப்படியோ இதைக்கேள்விப்பட்டு வள்ளிதான் அவள் கணவன் மூலம் பணத்துக்கு ஏற்பாடு பண்ணினாள். நான் இதுவரை வள்ளிக்கு ஒன்றும் செய்யவில்லை. அதனால் தான் இந்த நகையை வாங்கினேன். என்றான் முத்துப்பாண்டி.

வள்ளி அக்காவின் நல்ல மனசைப் புரிந்து கொண்ட பானுமதி, அதே நேரம் அண்ணனுக்கு உதவும் நிலையில் இருந்தும் தட்டிக் கழித்த தன் செயலுக்காகவும் வெட்கப்பட்டாள்.

இப்போது, தனது வள்ளியக்கா பானுமதியின் மனதில் உயர்ந்து நின்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *