அவள் பெயர் பாத்திமா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2023
பார்வையிட்டோர்: 3,398 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவளுக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் பாத்திமா. ஆனால் அந்தப்பகுதியில் இருக்கும் மக்கள் அவளுக்கு வைத்த பெயர் பஜாரிம்மா. அந்தளவுக்கு சண்டைக்காரி.

சண்டைக்காரி என்றவுடன் ஏதோ இரட்டை நாடி சரீரம், கர்ணம் மல்லேஸ்வரி என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். அவள் சரீரம் ஒற்றை நாடிக்கும் குறைவு. ஆனால் குரல் இருக்கிறதே அது எட்டு ஊருக்குக் கேட்கும் மைக்செட் இல்லாமலே. அவள் புருஷன் இப்ராகிம் அவளுக்கு ஒன்றும் சளைத்தவனில்லை. அவனும் சண்டைக்காரன் தான். எதற்கெடுத்தாலும் கத்தியைத் தூக்குபவன். அவன் இறைச்சிக் கடை வைத்திருக்கிறான். அவன் ஆட்டு இறைச்சியை வெட்டும்போது பார்த்த சிலர் அவனிடம் வம்புக்கே போக மாட்டார்கள். வேர்வை நனைந்த கறுப்பு முண்டா பனியனுடன், கரணையாக இருக்கும் புஜங்களுடன், அவன் வெட்டும்போது பார்க்க பயங்கரமாக இருக்கும். இப்ராகீம் ஏர்வாடிக்காரன். பாத்திமா ஆம்பூர். ஒரு நிக்காவில் தான் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். இரவு விருந்துக்கு ஆடு வெட்டும் பணி இப்ராகிமுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

கொழம்பு கொதிக்குது.. எறச்சிய வாங்கிட்டு வா ‘

பதினாறு வயது பாத்திமா ஓடினாள். ஆனால் அங்கே அவள் கண்ட காட்சி!

நன்கு வளர்ந்த ஆட்டை உரிப்பதற்கு முன், தலையை வெட்டியெடுக்கும் பணியில் இருந்தான் இப்ராகீம். படுக்க வைக்கப்பட்டிருந்த ஆட்டின் தலையை வெட்டுவதற்கு வாகாக வெட்டுமரத்தின் ஓரத்தில் கிடத்தியிருந்தான். வெட்டினால் தலை துண்டாக வெளியில் விழவேண்டும். சொட்டும் ரத்தத்தைப் பிடிக்க ஒரு டேசியா கீழே வைக்கப் பட்டிருந்தது. வேலையில் கவனமாக இருந்தான் இப்ராகீம். கத்தியை ஓங்கிப்பிடித்துக் கொண்டு, பார்வையை ஆட்டின் தலையின் மேல் வைத்தபோது, நிழலாடியது. பாத்திமாவைப் பார்த்த கணம், அவன் அப்படியே உறைந்து போனான். உயரத்தூக்கிய கத்தியுடன், திமிறும் புஜங்களுடன், அவன் நிற்பது, ஊர் எல்லையில் நிற்கும் அய்யனாரைப் போலவே அவளுக்குத் தோன்றியது. தப்பு தப்பு. அது இந்து சாமியல்லவா. அவளுக்குத் தெரிந்த வரை, குரானின் ஏதாவது இருக்கிறதா என்று நினைவோட்டிப் பார்த்தாள். ஒன்றுமில்லை. திரும்பத் திரும்ப அய்யனார்தான்.

‘கொழம்பு கொதிக்குதாம்.. எறைச்சி வேணும்’

நிலைக்கு வந்தான் இப்ராகிம். ஒரே போடு. தலை எகிறி, பிரியாணி கிளறிக் கொண்டிருந்தவன் புட்டத்தில் விழுந்தது. தன்னையறியாமல் பாத்திமா சிரித்து விட்டாள். அல்லா இருகைகளையும் தூக்கி ஆசிர்வதித்தார்.

கல்யாணமான நாட்களில் பாத்திமா சண்டைக்காரி இல்லை. அதிர்ந்து பேசத் தெரியாத, கிராமத்து பெண்ணாகவே இருந்தாள். இப்ராகிமும் அப்படித்தான் இருந்தான். பல தொழில்கள் செய்து பார்த்து, நஷ்டமடைந்து கொண்டிருந்தான். எல்லோரிடமும் சிரித்துப் பேசுவான். சுமுகமாக இருப்பான். அதனாலேயே அவனிடம் கடன் சொல்லி, பொருள் வாங்கிவிட்டு போய்விடுவார்கள். அப்புறம் அவன் கடைப் பக்கமே வரமாட்டார்கள். நஷ்டம் வராமல் என்ன செய்யும்.

ஊரிலிருந்து அவ்வப்போது பணம் வரும். வேறு தொழிலுக்கு மாறுவான் இப்ராகிம். இப்படியே வாழ்க்கை ஓடி, இரண்டு பிள்ளை பெற்றாகிவிட்டது. பிள்ளைகளை அதட்டி வளர்த்தே பாத்திமாவின் குரல் உயர்ந்து விட்டது.

முதல் பையன் ஆரீஸ் ஒண்ணாங்கிளாஸ் படிக்கும்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. அவன் பென்சிலை, பக்கத்து சீட் பையன் எடுத்திருக்கிறான். திருப்பித் தரவில்லை. புது பென்சில். வீடு தேடி போய் நின்றாள் பாத்திமா. நல்ல கல்லு வீடு. வாசலில் கார் எல்லாம் இருந்தது. அழைப்பு மணியை அழுத்தினாள்.

‘யாரு? என்னா வேணும் ‘

பாத்திமாவால் அவள் குரலையே நம்ப முடியவில்லை.

‘என்னா வேணுமா.. காரு பங்களான்னு இருக்கறீங்க.. படிக்கிற உங்க பிள்ளைக்கு ஒரு பென்சில் வாங்கித் தரமுடியாதோ.. பாவப்பட்ட எங்க பையன் பென்சில் தான் கேக்குதோ’ அம்மாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, அந்தப் பையன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘ஏண்டா பரதேசி.. ஏண்டா அவன் பென்சிலை எடுத்தே? அதைக் கொண்டாந்து விட்டெறி

பாத்திமா உக்கிரமானாள்.

எடுக்கும்போது பதவிசா எடுப்பீக.. குடுக்கும்போது பிச்சை போடறாப்பல விட்டெறிவீங்களோ.. ஒரு பென்சிலுக்கு வக்கில்லைன்னாலும் வாய் மட்டும் நீளுது

சப்த நாடியும் அடங்கிப்போனாள் பங்களாக்காரி. பையன் பென்சிலை மெதுவாக கொண்டு வந்து நீட்டினான். அதற்குள் சீவி சீவி, பாதியாக்கிவிட்டிருந்தான்.

சிவறதுன்னா உங்க ஆத்தா தலையை சீவறதுதானே.. சீவி சீவி என் பையன் பென்சிலை பாதியாக்கிட்டியே ‘

உள்ளே போய் ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள் அந்த அம்மாள். இதற்கும் அம்மா கத்தப் போகிறாள் என்று எதிர்பார்த்தான் ஆரிஸ். பத்து ரூபாயை வெடுக்கென பிடுங்கிக் கொண்டாள் பாத்திமா. ரவிக்கையில் வைத்திருந்த சின்னப் பர்சில் செருகிக் கொண்டாள். பங்களாக்காரியின் முகத்தில் புன்னகை அரும்பத் தொடங்கியது. ஆரிஸுக்கும் கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. இன்னும் ஒரு வாரத்துக்கு ஒம்பையன், எம்பையன் பென்சிலை எடுக்கலாம்னு சொல்லு, என்னா ‘ பங்களா முகம் இறுகிப் போனது.

விஷயம் விஷம்போல் ஊரில் பரவியது. சொல்லாத கதைகளெல்லாம் பாத்திமாவைப் பற்றி உலவ ஆரம்பித்தன. அப்போதுதான் பாத்திமாவுக்கே புரிந்தது தன் குரலில் இருக்கும் உஷ்ணமும் உறுதியும். புதிதாக இறைச்சிக் கடை ஆரம்பித்தான் இப்ராகிம். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, கடையில் உட்கார ஆரம்பித்தாள் பாத்திமா. அவளைப் பார்க்கும் எவரும் கடன் சொல்வதில்லை. சொன்னால் வீட்டுக்கு வந்து என்னவெல்லாம் பேசுவாளோ. வியாபாரம் லாபத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் அவள் இல்லாத நேரமாகப் பார்த்து, கடன் சொல்லுபவர்கள் ஓரிருவர் இருக்கத்தான் செய்தார்கள். இப்ராகிமால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பாத்திமா ஏதேதோ முயற்சி செய்து பார்த்தாள். எந்நேரமும் கடையிலே இருப்பது என்று முடிவு செய்தாள். ஆனால் அது வேறு பிரச்சினைகளை கொண்டு வந்து நிறுத்தியது. பள்ளி விட்டு வந்த பிள்ளைகள், படிக்காமல் தெருவில் இறங்கி விளையாடுவதால், படிப்பின் மீதான் அவர்களது கவனம் பாழ்பட்டது. மழை நாட்களில் வீட்டுக்குள்ளேயே நண்பர்களை வரவழைத்து விளையாட ஆரம்பித்தார்கள். பொருட்கள் காணாமல் போக ஆரம்பித்தன. கூடவே அடிக்கடி உடல் நிலையும் அவளது குழந்தைகளுக்கு மோசமாக ஆரம்பித்தது.

தான் இருக்கும்போது மட்டும் கடையைத் திறப்பது என்று ஒரு திட்டத்தை செயல்படுத்தினாள் பாத்திமா. ஆனால் அவர்களது வாடிக்கைக்காரர்கள் வேறு கடை நோக்கி போக ஆரம்பித்தார்கள். இன்னமும் இப்ராகிமின் கடைக் கறியின் தரமும் எடையும் புரிந்து கொண்டவர்கள் காத்திருந்து வாங்கிப் போனார்கள். ஆனால் அது குடும்பத்துக்கு போதுமான வருமானத்தைத் தரவில்லை. செல்லியக்காதான் அந்த யோசனையைச் சொன்னாள்.

வாயில்லாப் பூச்சியா இருக்கானே உன் புருசன்? உன்னை மாதிரி வெடுக்குனு நாலு வார்த்தை பேசுனா, கடன் கேக்கறவன் கேப்பானா? வாங்கினவன் திருப்பித் தராம இருப்பானா?”

பாத்திமாவுக்கு பொறி தட்டியது. தன் குரல் ஏன் உயர்ந்தது. தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துத் தானே? அதேபோல கடனுக்கு வியாபாரம் என்பது வணிகனுக்கு எதிரான அநீதிதானே? அதை தன் புருசன் உணர்ந்து கொண்டால்!

அன்றிரவு தணிந்த குரலில் இப்ராகிமுடன் பேசிக் கொண்டிருந்தாள் பாத்திமா. புருஷனிடம் அவள் குரல் உயருவதேயில்லை.

‘என்னங்க.. கடையில கடன் கேட்டா குரலை உசத்துங்க.. சிரிச்சிக்கிட்டே நின்னீங்கன்னா கடைய மூட வேண்டியதுதான். நிக்காவுல மொதம்மொத பாத்தப்போ கத்திய தூக்கிட்டு எவ்வளவு வெறப்பா நின்னீங்க.. அத மாதிரி நிக்கணுங்க ‘புரிந்து கொண்டது போல் தலையை ஆட்டினான் இப்ராகிம். உண்மையிலேயே புரிந்து கொண்டானா? இல்லை ஆடுகளுடன் பழகிய தோஷமா?

இப்போதெல்லாம் யாரும் இப்ராகிம் கடையில் கடன் சொல்வதில்லை. அவர்களுக்குத் தெரியாது அவன் ஆட்டைத் தவிர வேறு யாரையும் வெட்டியதில்லை என்று.

– பெப்ரவரி 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *