கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 27, 2023
பார்வையிட்டோர்: 4,259 
 

சுமதி பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். இரவு மணி எட்டுக்கு மேல் இராது. கைகள் வேலையில் ஈடுபட்டிருந்தாலும், வாய், ஓயாமல் ஏதோ பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தது.

குழந்தை ரவி இன்னும் தூங்கவில்லை. இப்படித்தான் தூங்காமல் ஒவ்வொரு நாள் அடம் பண்ணுவான்.

“கண்ணா, போய் படுத்துக்கோம்மா, போ.. சமத்தாப் படுத்துண்டு தூங்கு. நான் வரேன். அப்பா பாரு… சமத்தா, யாரோட…யு…ம் பேசாம தன் வேலையிலே கவனமா இருக்கா. நீயும் அது மாதிரி இருக்கணும்.”

அவள் குரலில் இருந்த நிஷ்டூரம் குழந்தைக்கு எப்படிப் புரியும்? அது அவனுக்காகச் சொல்லப்படவில்லையே!

ஈஸிசேரில் சய்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்த சேகரனை அந்தச் சொல் குத்திக் கொண்டிருந்தது. படிக்கவாவது? படிப்பில் எப்படி மனம் ஓடும்? அப்படி ஒரு பாவனை, அவ்வளவுதான்.

ஈஸிசேரின் இடது புறமாக, படிப்பதற்கு ஏற்ற உயரத்தில் ஒரு ஹரிக்கேன் விளக்கு கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தது. அதற்கு என்ன கேடோ! திடீரென்று ‘பக் பக்’ என்று குதிக்க ஆரம்பித்துவிட்டது.

அதற்கு இருந்தாற் போலிருந்து இப்படித்தான் கோளாறு வந்துவிடும். எண்ணெய் குறைவோ, அல்லது அதிகமோ தெரியவில்லை; அதிகமாகத் தான் இருக்கும். அதை யார் இப்போது மறுபடி சீசாவில் ஊற்றுவது? சிந்தனை வசப்பட்ட சேகரன், மார்பின் மீது புத்தகத்தைக் கவிழ்த்து வைத்துக்கொண்டு குழந்தையைக் கவனித்தான்.

ரவி விளக்க வேடிக்கைப் பார்த்துக் கொண்டு எட்ட நின்றவண்ணம் இருந்தான். பயம். விளக்கை உற்றுப் பார்க்கும் அவன் முகத்தில் கண்ட குறும்பு, சேகரனைக் கிறக்கத்தில் ஆழ்த்தியது.

“கண்ணா, விளக்கைத் தொட்டுடாதே, சுட்டுவிடும்.” உள்ளே இருந்த குழந்தையை எச்சரித்துக் கொண்டிருந்தாள் சுமதி. கபகபகபவென விட்டு விட்டுப் பெரிதாக எரிந்த விளக்கின் ஜ்வாலை ‘ப்ஸ்க்’ என்று சத்தமிட்டுக் கொண்டு அணைந்தது. ஒரே புகை, கிரஸின் வாடை சுற்றிலும் பரவ, இருள் மண்டியது.

அந்தப் பகுதி மட்டுமா இருள் சூழ்ந்தது. இருவரின் உள்ளத்திலுமல்லவா இருள் மண்டிக் கிடக்கிறது! ஆயிற்று. இன்றுடன் எட்டு நாட்கள் ஆகின்றன. இந்த நேரத்தில் வீடு இப்படியா இருக்கும்? இருப்பது மூன்றே பேர் தான் என்றாலும், புத்தகங்களைப் பிரித்து வைத்துககொண்டு குழந்தைக்குக் காட்டும் சாக்கில் சேகர் போடும் கூச்சல், ரவியின் கும்மாளம் – அதில் சுமதியும் கலந்து கொண்டு ஒரே குதூகலமல்லவா கொப்பளிக்கும்!

“போதுமே, இப்படியா அமர்க்களம் செய்யணும்! நீங்க இதையெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டு – நீங்க இல்லாத சமயம் என்னைப் பிடுங்கி எடுக்கிறான். ஒரு நாளைக்கு அந்தச் சிவப்புப் புத்தகத்தை எடுத்து வெச்சிண்டு ‘டென் லிட்டில் ப்ரௌன் பாய்ஸ்’ சொல்லிக் குடூன்னு அழறான். என்னை எங்கப்பா படிக்கவா வெச்சிருக்கா?” அவளொன்று சொல்ல இவனொன்று சொல்ல வீடு ஒரே கலகலப்பாகப் பத்துப் பேர் இருப்பது போல் திகழும்.

உள்ளே யிருந்து வரும் சிமினி விளக்கின் மங்கலான ஒளியில் ரவியின் செயலைக் கவனித்தபடி எண்ணங்களில் ஆழ்ந்து விட்டான் சேகரன். போக்கிரிப் பயல்! அணைந்த விளக்கைத் தொட்டுவிட்டு, சுட்டதைக் கூடப் பொருட்படுத்தாமல் அம்மாவிடம் போய் நின்று கொண்டான் ரவி. அழுத்தக்காரன்! அழவேணுமே! மூச்…..!

சாதாரண நாளாயிருந்தால் அப்பாவிடம் வந்து விடுவான். மார்பில் ஏறித் துவைத்து விளையாடுவான். வீட்டில் நிலவும் விபரீத அமைதி அவனுக்குப் புரிந்திருக்குமோ!

புரியமல் என்ன? இரண்டு நாட்களுக்கு முன்பு சேகரன் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் போது மேஜையருகில் போய் எதையோ எடுத்திருக்கறான். “போடா அப்பாலே, கொன்னுடுவேன் என்று அவன் மிரட்டி விட்டான். அதட்டலுக்குப் பயந்து வேறு பக்கமாகப் போய்விட்டான். அவனோ விஷமக்காரன், அத்துடன் துருதுருக்கும் பருவம். தண்ணீரில் போய் துளைய ஆரம்பித்துவிட்டான். எங்கிருந்தோ வந்த சுமதி முதுகில் ஒன்று வைக்க, கப்சிப். அதை அப்படியே விட்டு விட்டு மண்ணுக்குப் போய் விட்டான். இந்த லட்சணத்தில் வீடு இருக்க எழுத எப்படி ஓடும்? மூடி வைத்துவிட்டு கொல்லைப் பக்கமாகப் போய்விட்டான். அன்று லீவு நாள். குளிக்கவும் மனம் வராத சோம்பல். அவரைப் பந்தலின் கீழே நின்று காய்களை கவனிப்பது போன்ற பாவனை.

மெதுவாக நகர்ந்தபடி, அண்ணாந்து பார்த்தபடியே காய்களைக் கிள்ளிக் கொண்டிருந்தான். எதையும் கவனிக்காத ரவி ஒரு ஒரத்தில் மண்ணில் விளையாடிக் கொண்டு தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தான்.

“கொன்னுடுவாளாமே அப்பா! ஊஹூம்… கொல்ல மாட்டா; அடிப்பா, இல்லேன்னா திட்டுவா. சமத்தா இருக்கறப்ப சாக்லேட்டும் தருவா. அம்மாதான் அடிச்சாளே! இருக்கட்டும் இருக்கட்டும்! தாத்தாவுக்கக் காயிதம் எழுதிப் போட்டுடறேன்.” நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி, குரலுக்கு அழுத்தம் கொடுத்து நீட்டி முழக்கி, பாவனையோடு பேசிய அவன் பேச்சு! அப்பப்பா, அது மூன்று வயதுக் குழந்தையின் பேச்சாகத் தெரியவில்லை. அவனுடைய சொற்கள் சேகரனைச் சுட்டன. அவன் அப்படி யெல்லாம் சிலரைப் போல் துர் வார்த்தைகளை உபயோகப்படுத்துபவனும் அல்ல. பிரமித்து நின்றான்.

துளசி மாடத்தருகே கோலம் போட்டுக் கொண்டிருக்கும் அவளும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள். இவ்வளவு மௌனத்திற்கு இடையிலும் இருவர் கண்களும் சந்தித்தன. ஒரு கணம் கூட இல்லை. ரவி இதையெல்லாம் கவனிக்காமலேயே வெள்ளித் தம்ளரில் மண்ணை அள்ளித் தூற்றுவது போல் கொட்டிக் கொண்டிருந்தான். புழுதி பறந்தது.

“என் கண்ணாட்டியைப் போய், அடிச்சேனே என்ன சமத்தாப் பேசறது!” புழுதி படித்த உடம்பென்று கூட கவனிக்காமல் வாரி யணைத்து முத்தமிட்டபடி உள்ளே அழைத்து வந்தாள். அதுதான் தாய்மையோ! “ நீங்கள் என்னை என்னதான் படுத்தினாலும், இதோ என் கண்மணியை விட்டுவிட மாட்டேன்!” என்பது போல் இருந்தன, அப்போது நடையில் காணப்பட்ட பெருமையும், கம்பீரமான மிடுக்கும். மறுபடியும் சேகரனின் சிந்தனை கலைந்தது.

“இருட்டாப் போச்சேன்னு வந்துட்டயா? இந்தா – ஒவ்வொரு பாத்திரமா அலம்பித் தரேன். அந்தப் பக்கமா எடுத்து வை…. ஊஹூம்… மாட்டே? ஏன்? பிடிவாதத்தைப் பாரு – அதுக்கெல்லாம் சுந்தர்தான்! உனக்கும் உடம்பு வணங்காது பெரியவனுக்கும் வணங்காது.” அவள் பேச்சுக்கு அனசரணையாகப் பாத்திரங்கள் ஒன்றோடொன்று மோதும் லேசான ஓசைகள். ஒவ்வொன்றாக அலம்பி அலம்பி அவளே கைக்கெட்டிய தூரத்தில் வைக்கிறாள் போலும்! சேகரன் ஊகித்தான்.

“இருப்பா; இன்னொருத்தியானா இந்த வீட்டிலே படுத்தற பாடு தெரியும்! பெத்த குழந்தைகளை கண்காணாம விட்டுவிட்டு, இருக்கா இல்லையோ – நேந்து நெறவிண்டு போறேனோல்லியோ? என்கிட்ட காட்ட மாட்டாளோ வீம்பும் பிடிவாதமும்? எல்லாம் எங்கிட்டத்தான் நடக்கும். பொறுத்துண்டு போறவளைக் கண்டா ஓட ஓட விரட்டறவாளுகு எளிசு.” என அவள் வாய் மழை போல் ஓயாமல் பொழிந்து கொண்டிருந்தது.

பாத்திரங்களைக் கழுவியாயிற்று. தொட்டி முற்றத்தைக் கூட்டி அலம்புகிறாள். பெயர்ந்த சிமெண்ட் தரையில் தேய்ந்த கட்டை விளக்குமாற்றின் நாராசமான உரசல் ஒலி அவன் காதைப் பிடுங்குகிறது.

அவனுக்குத்தான் ஏன் இந்த வரட்டுப் பிடிவாதம்? பிடிவாதமா! அப்படிப் பெயர் வைத்துவிட்டால் மட்டும் போதுமா? அவனுக்குத் தெரியும்; அது பிடிவாதம் அல்ல. இப்படி இருந்தாலாவது சற்றே வழிக்கு வருவாளா என்பதற்காக அப்படி இருக்கிறான். அவனும் சரியாகப் பழகி எட்டு நாட்கள ஆகின்றன. மங்கு மங்கென்று வேலைகளுக்குக் குறைவில்லை. காலை முதல் இரவு படுக்கப் போகும் வரை வீடு என்றால் வேலைகள் இல்லாமலா இருக்கும். அதுவும இந்த ரவியின் விஷமத்தையும் வைத்துக் கொண்டு சமாளிப்பது பெரிதுதான். இதில் அவனுக்கும் பெருமைதான். அப்படியானால் ஏன் இந்த மௌன நாடகம்? குழந்தையிடம் கூடவல்லவா கொஞ்சுவதை விட்டுவிட்டான்?

குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால்தான் இன்பம் என்பது, அவன் அறியாத ஒன்றல்ல. நூறு தரம் அவன் அதை அவளுக்குச் சொல்லியிருக்கிறான். இருந்தாலும் இன்று வரை, இந்தப் பல ஆண்டு தாம்பத்திய வாழ்க்கையில் அவள் விட்டுக் கொடுத்ததாக அவனுக்கு நினைவு வரவே இல்லை. தவறு யார் பேரில் இருந்தாலும் கடைசியில் இளகிக் கொடுப்பது அவனாகத்தான் இருக்கும். “என்ன இருந்தாலும் என்னை விடச் சின்னவள்தானே! என்னை விட அனுபவமும் குறைவுதானே!” என்றெல்லாம் எண்ணி சமாதானப்படுத்திக் கொள்ளுவதுதான், இது போன்ற சமயங்களில் அவனது முடிவாக இருக்கும். இது பெரும்போக்கு இல்லையா?

பாத்திரங்களை எடுத்து ஷெல்பில் அடுக்குகிறாள் போல் தெரிந்தது. “போயேண்டா அந்தப் பக்கம், காலைக் காலைச் சுத்தி கழுத்தறுக்கிறியே! நான் முடியாமல் ஒவ்வொண்ணா செய்யறேன். எங்கேயாவது தடுக்கி விழுந்து, அது ஒன்றுதான் பாக்கி. பாடு பட்டாத்தாண்டா இந்த வீட்டிலே இருக்கலாம்.” அவள் பேச்சு ஓயவே இல்லை.

கும்மட்டியில் வளையல்கள் மோதி இடிக்கும் கார்வையற்ள ‘ணங் ணங்’ கென்ற ஓசை அவள் கும்மட்டியைத் துணியால் துடைத்து வைப்பதை அறிவித்தது. செய்யும் வேலைகள் எதிலும் அப்பழுக்கற்ற திறமை. அதெல்லாம் அவனுக்குப் பிடித்துத்தான் இருந்தது! இரும்பு சாமான்களை அலம்பிய உடனே துடைக்க வேண்டும் என்று எப்போ சொன்னதைத் தொடர்ந்து செய்யவில்லையா? பின் ஏன் சில விஷயங்கள் மட்டும் தெரிய மாட்டேன் என்கிறது? சமயம் தெரியாமல் எதிர்த்துப் பேசி வாழ்க்க இன்பத்தை நரகமாக்கிக் கொண்டு விடுகிறாளே! நினைக்க நினைக்க எரிச்சல்தான் மிஞ்சியது.

இந்த ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு நிர்வகிக்கவே இப்படியானால், எல்லோரும் இங்கே இருந்தால் அவ்வளவுதான்! அப்படியும் முடிவு செய்ய முடியவில்லை. அவர்கள் இவனை விடப் பெரியவர்கள். கூட மாட ஒத்தாசையாகவும் இருக்கலாம் அல்லவா? அதெப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும். மேற்கொண்டு அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. “யாராவது தொடர்ந்து ஊரிலிருந்து அரிசியை அனுப்பி வைத்தால் இங்கே இருக்கலாம்.” சட்டென்று அந்த எண்ணத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தான்.

இந்த அரிசிக் கெடுபிடி வந்து மேலும் சில சிக்கல்களை ஏற்படுத்தி விட்டது. அரிசி தாராளமாகக் கிடைக்காததால்தானே நச்சு நச்சென்று கோதுமை தோசை… அதை செய்து முடித்து மேலும் எவ்வளவு சிரமம், பாவம், இதனால் வேறு அவதி. சாதம் சமைத்துச் சாப்பிடுவதானால் இரவு இவ்வளவு வேலை இருக்காது. சாயந்திரமே காபி அடுப்பில் சிறிது அரிசி களைந்து வைத்துவிட்டால் தீர்ந்தது. வேலை லகுவாகிவிடும். பாவம்! அவளும்தான் என்ன செய்வாள்? கூடமாட ஒத்தாசை செய்யலாமென்றால் ஆண் பிள்ளையான அவனால் வீட்டு உள் வேலைக்கு எவ்விதம் உதவ முடியும்? தண்ணீர் வேண்டுமானால் சேந்தி நிரப்பலாம். ஏழு மாசத்து சிசுவையும் சுமந்து கொண்டு… பாவம்… முடியவில்லை. அதனால்தான் எதிர்த்துப் பேசுகிறாளோ?

அந்த ஊரின்மேலேயே வெறுப்பு வந்தது. “நம்ம பக்கமாக ஒரு நல்ல ஊரா ‘டிரான்ஸ்பர்’ கிடைச்சா எவ்வளவு சௌகரியமா யிருக்கலாம்! அவ எண்ணங்கள் வளர்ந்தன.

காய்கறிகளைக் கூடையில் போட்டு மாட்டுகிறாள். எண்ணை ஜாடியை நகர்த்தி வைக்கிறாள்– எல்லாவற்றையும் பார்க்காமலேயே

நுண்ணிய சத்தங்களின் வேறுபாடுகளிலிருந்து ஊகித்துக்கொண்டு அசையாமல் படுத்திருந்தான். பார்த்துப் பார்த்து மூடாவிட்டால் எலி பதம் பார்த்துவிடும். போன மாதம் அவள் எங்கேயோ போயிருந்தாள். அன்றுதான் வாங்கி வந்த ஜாடி. எலி தள்ளி ஒண்ணரை ரூபாய் ஜாடி, இரண்டு ரூபாய் எண்ணெய் வீணாகிவிட்டது.

அந்த ஜாடியை வாங்கி வந்த அன்று ரவி கேட்டது நினைவில் வந்தது. “யாருப்பா இதுக்கு வேட்டி கட்டினா?” ஜாடியின் வெண்ணிறமான வெளிப் பாகம் அவனுக்கு வேட்டியை நினைவூட்டியிருக்கிறது. முத்தமாரிப் பொழிந்து அவனைக் கொஞ்சியதும் மறக்கவில்லை. அந்த வீடா இப்படி, இன்று மௌனத்தில் ஆழ்ந்து கிடக்கிறது.

குழந்தை ரவி என்ன செய்வதென்று விளங்காமல் சுற்றிச் சுற்றி வந்து கீழேயே படுத்து உறங்கி விட்டான். சூழ்நிலையில் இயல்பான தன்மை இல்லாததால் அப்பாவிடம் வரவில்லை. சற்று சகஜமாக இருந்தால் ஈஸிசேரை அவன் விடுவானா?

அவனை எடுத்து, பாய் விரித்து அதில் படுக்க வைக்க மனம் பதறியது. ஆனால் அன்று அப்படிச் செய்ய அவன் ‘ஆண் மனம்’ இடம் தரவில்லை. ஆகவே சும்மாவே பார்த்தும், பாராததுபோல் படுத்துக் கிடந்தான். தலையில் இடிக்காத குறையாக ‘அரிக்கேன் விளக்கு’ கம்பியிலிருந்து கழற்றப் படுகிறது. தொடர்ந்து எண்ணை சீசா சுத்தமாகிறது. “எல்லாம் நாமதான் செய்யணும்! தினம் செய்யறவா கூட வேணுமுன்னே இருக்கா? இருக்கட்டுமே! எதுவும் நின்று போயிடாது. இப்ப மறந்தா நாளைக்கி சாப்பிடறப்ப அணைஞ்சி வைக்கும்.” கள கள வென்ற ஒலி சீசாவில் எண்ணை வடிப்பதைத் தெரிவித்தது.

மறுபடியும் விளக்கை ஏன் ஏற்றுகிறாள்? ஒரு வேளை சரியாக எரிகிறமத என்று பார்க்கவோ? ஒளி வெள்ளம் பரவுகிறது. பெட் ரூம் விளக்க கடிகாரம் தெரியும் இடத்தில் தொங்க விட்டாயிற்று. அன்றைய தேதித் தாளைக் கிழித்து அதன் ஒரு புறம் மறைவாகச் செருகியும் ஆயிற்று. இவ்வளபு நாசூக்காக எல்லாவற்றையும் கவனிப்பவள் அதிலும் ஏன் பிரத்யேகமாக ஈடுபடக்கூடாது.

சென்றவாரத்துச் சப்பவத்துக்கு அவன் நினைவு தாவிற்று.

அநேகமாக தினசரி ஒன்பதுக்குள் படுத்து விடுவதால் விடியற்காலை ஐந்து மணிக்கு முன்பாகவே விழிப்பு வந்துவிடும். ஒவ்வொரு நாள் அவனேதான் எழுந்து வெந்நீர் அடுப்பைப் பற்ற வைப்பான். அதை நிச்சயமாக நம்பவும் முடியாது. தவிர அவள் வீட்டில் இருக்கும் சமயங்களில் அவன் முன்னால் எழுந்திருக்க விரும்பவும் மாட்டாள். தன்னை அன்போடு சற்று இன்பமான வார்த்தைகளால் கொஞ்சியவாறு துயில் எழுப்பட்டுமே என்ற இயற்கையான ஆண் குணமாகவும் கொள்ளலாம். வீட்டு வேலை மிகுதியில் அவள் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்று எண்ணினான். எழுந்தவுடனே முதல் வேலையாக ஏதேதோ ஒரு சில சொற்களை தித்திக்கப் பேசிவிட்டால், அந்தச் செயல் நாள் பூராவும் அல்லவா வீட்டில் மகிழ்ச்சியை நிலவச் செய்யும். சிறு சிறு பூசல்கள் வந்தாலும் அவை பெருங்காற்றின் முன் பஞ்சாக அல்லவா ஆகிவிடும். அவனும் அதை ஜாடை மாடையாய்ப் பல தடவை கூறியாயிற்று. ஒரு ஆண் அப்படிச் சொல்லி அதை அடைவதை விட…. இனம் புரியாத ஒரு கோபம் வந்தது. ச்சீ! என்ன பெண் இவள்?

காசு பணம் வெலவில்லாத சிறு பணிவிடை. அதை உணர்ந்து செயல்படுத்த முடியாத இவள் என்ன வெய்து விடப் போகிறாள்? எங்கெங்கோ படித்து உணர்ந்த அனுபவ வாயிலாக அவன் எவ்வளவு காரியங்களை இதமாகச் செய்கிறான்.! அந்த உணர்ச்சி ஏன் அவளுக்கு இல்லை? இப்படி அவள் பிரத்யேகமாக ஈடுபாடு காட்டாததுதான் அவனுக்கு மிகவும் கசப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது.

வாழ்க்கை என்பது வெறும் வயிறு மட்டும் இல்லையே! இப்படியெல்லா விடிந்தும் விடியாமலும் தன் மனதை உணர்ச்சி வசமாக்கிக்கொண்டு ஒரு வெறுப்புடன் கண் விழித்தான் சேகரன். அதை அவன் மிகவும் பெரிதாக நினைத்து வருந்தியதனால் காபியைக் கூட ரசித்துச் சாப்பிடவில்லை. பத்து மணிக்குச் சாப்பிட்டுவிட்டே, டிபனுடன் அலுவலகம் செல்லும் அவன், அன்று சாப்பிடவும் பிடிக்காதவனாக சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பத் தயாராகி விட்டான்.

தயாராகப் போடப் பட்டிருந்த வெள்ளித் தட்டு கண்ணில் பட்டதும்தான் ‘சாப்பாடு’ என்று ஒன்றிருப்பதே அவன் கவனத்துக்கு வந்தது போல், வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து கொண்டான். சரியாகக் கூடப் பிசையாமல் நாலு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு சாப்பிட்டதாகப் பெயர் பண்ணினான்.

“சரீ…! ஆரம்பிச்சாச்சா? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த நாடகமோ? இன்னிக்கு அப்படி என்ன நடக்காதது நடந்து விட்டதோ, தெரியலையே! ரவி, அப்பவைக் கேளு!” வாய் பேசினாலும் கூட, அவன் கை கழுவிக் கொண்டு வருவதற்குள் தயாராக வாசனைப் பாக்குப் பொட்டலத்தைப் பிரித்து வைத்து வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி நின்றாள்.

“நல்ல காலம்தான்! இது ஒண்ணாவது டாமல் நடக்கிற வரை என் புண்ணியம்தான்.” தினமும் வாயாலேயே வாங்கும் வெற்றிலை மடிப்பு அன்று கையுடன் நின்று விட்டது. பார்வையும் வேறெங்கோ இருந்தது.

வெற்றிலையின் விறுவிறுப்பான சுவை அவனது உணர்ச்சிகளைச் சற்றே மாற்ற ஆரம்பித்தது. ஆயினும் ‘பிகு’ வை விட்டுக் கொடுக்காத தன்மையை வலுவிலேயே உண்டாக்கிக் கொண்டு சற்று எட்டவே நின்று கொண்டான். வழக்கமான அந்தப் பார்வையையும், கன்னக் கிள்ளலையும் இன்று அவன் தரவில்லை. அவளுக்குச் சற்று ஏமாற்றம்தான் கோபம்தான் என்பதை உறுதிப் படுத்தி விட்டான். பண்டிகை நாள் , நோன்பு, மடி என்று பிரத்யேகமாக ஏதாவது இருந்தாலொழிய சாதரணமாகத் தவறாது. இதனாலாவது உணர்ந்து கொள்வாளா என்பது அவன் அவா.

மௌனமாக அவன் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்ற அவள் பெருமூச்சு விட்டபடி கண்ணாடியைப் பார்த்துக் கொண்டாள். போதை தரும் வரட்டுக் கவர்ச்சி இல்லாவிட்டாலும் திருஷ்டிப் படும் தாமரையின் அமைதியான அழகுக்குக் குறைவில்லை. இன்று அந்தக் கன்னம் சிவக்காததுதான் குறையாக இருந்தது.

‘திடீரென்று எதனால் கோபம்? ராத்திரியெல்லாம் சாதாரணமாகத்தானே இருந்தார்! நானும் எதுவும் எதிர்த்துப் பேசிவிடவில்லையே! சமைய ஒரு வேளை…, அப்படியும் நினைப்பதற்கு இல்லையே,- காலையில் காபி சாப்பிடும்போது கூட மௌனம்தானே!… என்ன கண்ராவியோ! பாவம்!’ எதுவும் நினைவு வராமலே குழம்பி தவித்துக் கொண்டிருந்தாள்.

அவன் ஒரு முன்கோபி. எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும். இரண்டு நாள், ஒரு வாரம் என பேசாமலே வதைப்பான். குழந்தைகளுடன் கூட ஒட்டிப் பேசாமல் வைராக்கயமாக இருப்பான். குறை கூடச் சொல்ல மாட்டான். அப்படி விசித்திரமான ‘டைப்’ அவன்.

கோபமான நாட்களில் இந்த வெளிச் செய்கைகளைப் பார்த்துப் பார்த்துப் பழகிப் போயிருந்தது அவளுக்கு. இருந்தாலும் அந்தக் ‘கோபம்’ வந்து அதை அனுபவிக்கும் போது அவன் படும் பாடு கோபம் குறைந்து சாதாரண நிலை வந்ததும் அவளிடமேதான் அநத் உணர்ச்சிகளையும் சொல்லுவான். திட்டினாலும் கட்டினாலும் ‘அவனே’தானே எல்லாம் அவளுக்கு.

ஒரு நாள் இது போன்ற சமயத்தில் அவனுக்குப் பிடிக்குமே என வாழைப் பூ சமைத்திருந்தாள். அது காவிரிப் படுகைப் பூவைப் போல இராது என்பது அவளுக்குத் தெரியாது. ஒரே எட்டிக் கசப்பு. வாய் பேசாமல் அனுபவித்துச் சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டான். பிறகு அவள் சாப்பிடும்போது தான் அதன் கசப்பு தெரிந்தது அவளுக்கு. சமைத்த அவளுக்கே அதைச் சாப்பிடப் பிடிக்கவில்லை. மௌனமாகக் கண்ணீர் பெருக்கினாள். மாலை அவன் வரும் வரையில் அவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. வந்ததும் காபித் தம்ளருடன் அவன் எதிரில் நின்று “என்னை இப்படியெல்லாம் கொல்லாமல் கொல்ல வேண்டுமா?” என கண்ணில் நீர் மல்கக் கேட்டாள். பூசல் மறந்து அப்படியே இழுத்துக் கொண்டான். அவள் கண்களில் என்னதான் கண்டானோ? சமாதானமாகிவிட்டது.

ஏற்றிய அரிக்கேன் விளக்கை ஒரு புறமாக வைத்துவிட்டு, படுக்கைகளை உதறிப் போட்டுக் கொண்டாள். குழந்தையை எடுத்துப் படுக்க வைத்துவிட்டு, “என் கண்ணே! ஏண்டா தினம் தினம் திட்டு வாங்கறே? நீ என்ன பண்ணுவே; உனக்குச் சரியா லூட்டி அடிக்கக் குழந்தைகள் இல்லை. பிறந்திருக்கறதுலே குறைச்சல் இல்லை. பிரிஞ்சி இருந்து திண்டாடணும்னு விதி!” நெடிய பெருமூச்சு விட்டாள். அவளை பார்க்காதது போல் பார்த்தான். அரிக்கேன் விளக்கின் ஒளியில் அவள் கண்ணோரத்தில் கண்ணீர் மின்னியது தெரிந்தது.

ஆயிற்ளு. குழந்தைகளை அவள் பார்த்து ஏறக்குறைய ஒரு வருஷமாகிறது. நடுவில் ஒரு தடவை ஏதோ கலியாணத்தைச் சாக்கிட்டு ஊர்ப் பக்கம் அவன் மட்டும் போய் வந்தான். இந்தப் பிரிவு அவளைப் பொறுத்தவரை இப்போதுதான் புதிது. “ஒவ்வொருத்தர் டில்லி, பம்பாய்னு, எப்படித்தான் வருஷக் கணக்கில் குழந்தைகளை பிரிந்து இருப்பார்களோ?” என்று அடிக்கடி சொல்லி ஆதங்கப் படுவாள்.

மற்ற படுக்கைகளையும் விரித்தாள். விளக்க அணைக்க நினைத்துச் சற்றே தணித்து, ஊதப் போனவள், மறுபடியும் பெரிதாக்கினாள். தலையணைப் புறமாகச் சின்ன ஸ்டூலைப் போட்டு அதன் பேரில் வைத்தாள்.

பள்ளிப் படிப்பு அதிகம் இல்லையென்றாலும், பழக்கம் காரணமாக, கதைகள் படிப்பதில் ஓர் ஆர்வம். அவள் வயசுக்காரர் களுக்கே இயல்பாக அதில் ஒரு சுவை. அவளுக்காவே தொடர்ந்து நாலைந்து பத்திரிகைகளை வரவழைத்து வந்தான் அவன். பாதி நாள் அவை சுற்றுப் புறங்களுக்கு இரவல் போய் விடும். ஒரு தொடர் கதை முடிந்ததும் அவைகளை ஒன்று சேர்த்து ‘பைண்டு’ செய்து, முடிந்தபோது படிப்பாள் அவள். அதையும் ஒரே மூச்சில் படிக்க நேரம் கிடைக்காது அவளுக்கு. தினம் படுக்கப் போகும்போது கொஞ்சம் படிப்பாள். இப்போது அதைத்தான் தேடுகிறாள் அவள். வாய் புலம்பியது.

“இதிலெல்லாம் அதிசயம் ஒன்றுமேயில்லை… வயிறும் பிள்ளையுமாக நளினியைத் தவிக்க விடவில்லையா கிரி? அவனுக்கன்ன நிம்மதியாத்தான் இருக்கான்! ‘கதை’ன்னா அதுவும ‘நடக்கிறதை’ வச்சுத்தானே எழுதறா!”

மேஜை மேல் தேடியாயிற்று. ஷெல்ஃபில் பார்க்கிறாள். கிடைக்கவில்லை போலும். விளக்கைக் கையில் எடுத்துக் கொண்டு வேறு இடங்களில் பார்க்கிறாள். கீழே படுத்திருந்த ரவியின் காலில் கால் இடறுகிறது. குனிந்து கண்ணில் ஒத்திக் கொள்கிறாள். பகல் பூரா புத்தகத்தை எடுக்கவே முடிகிறதில்லை. இப்ப தேடினா…. எங்கே போச்சோ… விளக்கு மேஜை முனையில் இடித்து… மறுபடியும் ‘குப்….குப்….குப்…’ பெரிதாக எரிந்து புகைந்து “ப்ஸ்க்”….. அணைந்தே விட்டது.

“எனக்கு எல்லாமே எதிரி. நான் படிச்சிக் கிழிச்ச மாதிரிதான்!” ஆத்திரத்துடன் விளக்கை மூலையிலிருந்த கம்பியில் மாட்டுகிறாள். அது ஆடி, சுவரில் இடிக்கிறது. வேகமாக வந்து படுத்துக்கொண்டு விட்டாள்.

விடி விளக்கு மட்டும் முத்துப் போல் ஒளிர்ந்துகொண்டி ருக்கிறது. நீலக் கோட்டுக்கு இடையில் வெண்முத்து…. முற்றத்தின் நிலவின் ஒளி விழுகிறது. மங்கிய ஒளியில், படுத்துக்கொண்டே அவள் அழசை சுவைத்துக் கொண்டே அசையாமல் சாய்ந்து அனுபவிக்கிறான். விரகத்தின் பெருமூச்சு. விட்டு விட்டு முனகும் ஒலி. இவ்வளவு பிடிவாதமா? அவன் இப்போது இளகி வந்து கொண்டிருக்கிறான். ஒரு சிறு அசைவு…. சமிக்ஞை…. போதுமானது. கோபம் ஓடிவிடும். இவ்வளவு தாபத்திலும் கூட அவளது உறுதி அவனுக்கு வியப்பூட்டியது. ஏதோ ஒரு திட்டம் உருவாகியது.

தன் மார்பின் மேல் கவிழ்ந்து கிடந்த புத்தகத்தை ‘தொப்’ என்று கீழே போட்டான். அது நிச்சயம் ஒரு மாறுதலை ஏற்படுத்தும் என்பதை எதிர்பார்த்தான். ‘கேரம்’ ஆட்டத்தில் ஏதோ ஒரு மூலையில் இக்கட்டாக நிற்கும் காயை எதிர் மூலையில் அடித்து, அதிர்ச்சியுறச் செய்து, வீழ்த்துவது போல இருந்தது அவன் செய்கை.

“இப்ப ஆருக்கு வேணும்?” வாய்தான் முனகியதே தவிர ஆவல் குறையவில்லை. விடிவிளக்கைப் பெரிதாக்கி அதன் ஒளியில் சில நிமிஷங்கள் படித்தாள். பல பக்கங்கள் வேகமாகப் புரண்டதிலிருந்து அவள் படிப்பின் விரைவை அவனால் உணர முடிந்தது. அன்று அவ்வளவுதான் போலும், புத்தகத்தை மூடி வைத்துவிட்டாள்.

“அடடா! வெற்றிலை போட்டுக் கொள்ள மறந்து போனேனே!” மெதுவாகத் தனக்குள் சொல்லியபடி உள்ளே போனாள். எவர்சில்வர் அடுக்கில் உள்ள வெற்றிலைத் தட்டைக் கவிழ்த்தாள். நல்லதாகப் பொறுக்கி, அடுக்கி வைத்துவிட்டு சுமாராக உள்ளவைகளை எடுத்து வைத்து சுண்ணாம்பு தடவினாள். அதில்தான் எவ்வளவு ‘பணிக்கை’! கணவன் நினைவுதான் வருவதில்லை. சேகரனின் எண்ணம் வேலை செய்தது. ‘என்றைக்கோ ஒரு நாள், இரவில் வேண்டாம் என்றால் அதுவே சட்டம்! தினம் தினம் வேணுமா என்று கேட்டால், என்ன குறைந்து போகிறது? மானம் கெட்டுப் போய் வெற்றிலை கொடு என்று நான்தானா கேட்க வேண்டும்? போட்டுக் கொள்ள வேண்டும் என்று ‘சபலம்’ உள்ள எத்தனை நாட்கள் போடாமலே இருந்திருக்கிறேன்!’ சேகரனின் மனம் சும்மாவே இருக்கவில்லை.

ஈசிசேரில் இருந்து படுக்கையில் படுத்து, புழுங்கிக் கொண்டிருந்தான்.

‘…ஊ…ம்…ம்…வெற்றிலை எளசா நன்றாயிருக்கு!’ முக்கினருகே வாசனைப் பாக்கின் நறுமணம்…. வாயருகில் கையின் உராய்வு. “வேண்டியதில்லை!” குரல் முனகிற்று. ஆனால் உதடுகள் பிரிந்தன. வெற்றிலைச் சுருள்களை ஒவ்வொன்றாகப் பெற்றுக் கொண்டான்.

“இந்தப் பிடுங்கலுக்குத்தான் வேண்டாம் என்றே சும்மா இருப்பது!”

அவள் தன் தவற்றை உணர்ந்தாள். ஏதோ கவனத்தில் ‘மெல்’வதற்கு இடம் தராமலேயே …. தப்பு அவளுடையதுதான்! அவள் பேசவில்லை. அவள் வாய் நிறையவும் வெற்றிலை.

உரிய இடத்தில் அடுக்கை வைத்துவிட்டு வரவும் சோம்பல். அங்கேயே சுவரோரமாகத் தள்ளி வைத்து மூடினாள். விளக்கத் தணித்துவிட்டுப் படுத்தாள்.

சேகரனின் உடம்பு என்னவோ செய்தது. கால்களை நெட்டி முறித்தான். புரண்டு படுத்தான். எதையோ எதிர்பார்த்து வினாடிகளைக் கழித்தான்.

ஊஹூம்… எதுவும் நடக்கவில்லை. கடிகாரத்தின் டிக் டிக் ஓசைதான் கேட்டது.

“அம்மா….அம்மா….! அப்பா சாக்கிலேட் தருவளோன்னோ?” தூக்கத்தில் ரவி பிதற்றினான். பிதற்றலா அது? அதில்தான் எவ்வளவு தெளிவு! தினமும் மாலையில் வீடு வந்ததும் அவனுக்கு சாக்லேட் தருவது தவறாத ஒரு செயல். ஒரு வாரமாக அது நின்றிருந்தது. இப்போதுதான் வீடு வீடாகவே இல்லையே!

போர்த்திக் கொண்டிருந்த துப்பட்டியை விலக்கிக் கொண்டு ‘குபீர்’ என்று எழுந்திருந்தான். ‘ உன்னைப் போய் புத்தி இல்லாமல் திட்டினேனேடா!….” தரையில் புரண்டுவிட்ட அவனைச் சரியாகப் படுக்க வைத்தான். வாய்க்குள் சரியாக மெல்லப்படாத வெற்றிலையுடனேயே அவள் கண் அயர்ந்திருந்தாள்.

அவ்வளவு அசதி, பாவம்!…. இன்னொருத்தியா இருந்தால் எவ்வளவோ பாடு படுத்தத்தான் செய்வாள். எதிர்த்துப் பேசினாலும் கூட ஒரு வேலையை விடுவதில்லையே!

எழுந்திருத்வன் படுக்கவில்லை. ஏதோ நினைத்தவனாக விளக்கைப் பெரிதாக்கிவிட்டு நடந்தான். பீரோ திறக்கப்படும் ஓசை. எதையோ எடுத்துவிட்டு மறுபடியும் மூடினான். கையில் காகிதம் சல சலக்கும் மிக மெல்லிய ஒலி.

“கண்ணு…. சுமி….!” அவள் காதருகில் அவன் குரல். அவ திடுக்கிட்டு விழித்தாள். நிலைமை விளங்க, சில கணமாயிற்று. கரைந்த சாக்கலேட்டுகளின் இனிய சுவை. மெல்லப் படாத வெற்றிலையுடன் கலந்து வாய்மாறின. பழைய நாட்களின் இன்பமான அனுபவத்தின் கிறக்கம் தொடர்ந்தது.

“ஒரு வாரமாக நான் பட்ட பாடு!”

“நான் மட்டும்….?”

அன்றும் தோல்வியினால் ஏற்பட்ட வெற்றிக்கு அவனே பாத்திரமானான். மெல்லிய பூங்காற்று தவழ்ந்து வந்து குளிர்ந்த அந்த இரவிலும் கூட அவர்களுள் ஏற்பட்ட புழுக்கத்தைக் குறைத்து விட்ட நிம்மதியுடன் நகர்ந்து சென்றது.

– தினமணி கதிர் – 11–03–1966

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *