நந்திக்குப் பின் சிவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 7,635 
 

தெய்வ வழிபாடு செய்கிறோம்.விரதங்களை மேற்கொள்கிறோம். தீர்த்த யாத்திரைகள் செல்கிறோம். நல்லதுதான். செய்ய வேண்டிய கடமையே. தெய்வம் இருப்பதை எந்நேரமும் நம் நினைவில் வைத்திருக்க உதவும் சாதனைகளே இவை.

ஆனால் தெய்வத்திற்குப் பிடித்தமான செயலை நாம் மறந்து விடக் கூடாது. அதுவே தர்மத்தை கடைப்பிடிப்பது. அவரவர் தர்மத்தை அவரவர் தவறாமல் கடைப்பிடிப்பது. இதை விட்டு விட்டு எத்தனை பூஜைகள் செய்தாலும் தெய்வம் மகிழ்வதில்லை என்று அத்தனை நூல்களும் எடுத்துரைக்கின்றன.

இந்த அடிப்படை நியதியை விட்டு விட்டுச் செய்யும் அத்தனை ஆராதனைகளும் வெறும் ஆடம்பரமேயாகும்.

நிறைய பேருக்கு தர்மம், வாழ்க்கை இரண்டும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். சிலர் எத்தனையோ அதர்மங்கள் மூலம் சம்பாதித்து உயர் நிலைக்கு வருவார்கள். அது அக்கிரமம் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனால் அதில் கொஞ்சம் கடவுள் சேவைக்காகவோ கோயில் உண்டியலிலோ போட்டு விட்டால் பாவம் போய்விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பாவப் பணத்தை பகவானுக்குச் சமர்ப்பித்தால் மகாபாவம் வருமென்று அவர்களுக்குத் தெரிவதில்லை.

தெய்வ கைங்கர்யத்திற்கு செலவிடும் திரவியம் சரியான வழியில், தானாகவே சம்பாதித்ததாக இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் கட்டளையிடுகிறது. பாவம் செய்யும் மனிதர்கள் தாற்காலிகமாக உலகில் அபிவிருத்தி அடையும் போது தேவஸ்தான அதிகாரிகள் பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்கலாம். ஆனால் தெய்வத்தின் உள்ளம் மட்டும் அவர்களை வரவேற்காது. சிரமப்பட்டு சம்பாதித்த சில்லறைக் காசைக் கொண்டு கஷ்டப்பட்டு கோவிலுக்கு வரும் மிகச் சாமானியன் தெய்வத்தைப் பார்ப்பது ஒரு சில நொடிகளேயானாலும் ஸ்வாமி அவனை எந்த நேரமும் கவனித்துக் கொள்வார்.

கடவுளுக்கும் நமக்கும் திடமான அனுபந்தத்தை ஏற்படுத்துவது தர்மமே. தர்மத்தை விருடப ரூபமாக வேத சாஸ்திரங்கள் வர்ணிக்கின்றன.

“வ்ருஷோஹி பகவான் தர்ம:”- தர்ம பகவானே விருஷபம் (காளை). இந்தக் காளை (நந்தி) வெண்ணிறமானது. அதாவது தர்மத்தின் குணம் சுத்த வெண்மை. தர்மமாகிய ரிஷபத்திற்கு நான்கு கால்கள்.

அவை: 1.சத்தியம்,2.அகிம்சை, 3.அஸ்தேயம், 4.சௌசம்.

சத்தியம்: ‘சத்தியமென்றால் என்ன? இந்த கேள்விக்கு உபநிஷத் அழகிய பதிலை அளித்துள்ளது.

‘பூத ஹித யதார்த்த பாஷணமேவ சத்யம்’ – உயிர்களுக்கு நன்மை தரும் யதார்த்தக் கூற்றே சத்தியம்’.

யதார்த்தமான பேச்சே சத்தியம் – உள்ளது உள்ளபடி கூறுவது என்று கூறியிருக்கலாம் அல்லவா? ஆனால் அதை விட ‘பூத ஹிதம்’ முக்கியமானது. உள்ளது உள்ளபடி பேசுவதென்பது முக்கியம் தான். ஆயினும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அது நன்மை விளைவிக்காது. உயிர்களின் நலனுக்குப் பங்கம் விளைவிக்கும் உண்மை கூட பொய்யே.

தர்மத்தை மூர்க்கமாக, பிடிவாதமாக அன்றி, கடைப்பிடிப்பதற்கு ஏதுவான விளக்கத்தோடு நமக்களித்துள்ள சிறப்பு சனாதன கலாச்சாரத்திற்கு உள்ளது.

இதனை உணர்ந்து, வார்த்தைக்கும் மனதுக்கும் இயைந்த கட்டுப்பாடோடு இருப்பதே சத்தியம்.

அகிம்சை: சொல்லாலோ, மனத்தாலோ, செயலாலோ பிற உயிரை வருத்தாமால் இருப்பதே அகிம்சை.

அஸ்தேயம்: ‘ஸ்தேயம்’ என்றால் திருடுதல். ‘அஸ்தேயம்’ என்றால் திருடாமை.

வீடு புகுந்து கொள்ளையடிப்பது, அடுத்தவர் பொருளை அபகரிப்பது மட்டுமே திருட்டு அல்ல. அக்கிரமமாக சம்பாதிப்பதும் திருட்டே என்கிறார்கள். அநியாயமான முறையில் பணம் சம்பாதிக்கக் கூடாது. அதே போல் அதனைச் செலவிடலிலும் அநியாயம் இருக்கக் கூடாது. தன் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவதற்காக தனத்தைச் செலவிட வேண்டும். தாய் தந்தையர், மனைவி, குழந்தைகள், அண்ணன், தம்பிகள்…. ..இவ்வாறு குடும்பத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும் தான் செய்ய வேண்டிய கடமைகளுக்காக செல்வத்தைச் செலவிட வேண்டும். இவ்விதம் வரவு, செலவு இரண்டுமே சரியான வழியில் இருப்பதே ‘அஸ்தேயம்’.

சௌசம்:- தூய்மையாக இருப்பது சௌசம் எனப்படும். இது வெளிச்சுத்தம், அந்தக்கரண சுத்தம் என இரண்டு வகைகள்.

குளிப்பது…. போன்றவை வெளித்தூய்மை. நீர் அருந்துவது, ஆசாரமாக இருப்பது ….போன்றவை வெளித் தூய்மை, உள் தூய்மை இரண்டிற்கும் இடைப்பட்டது. அவை நம் சூட்சும உலகைத் தூய்மைப்படுத்தும்.

‘உள்ளத் தூய்மை’ என்பது உத்தம எண்ணங்களோடு மனதை நிர்மலமாக வைத்துக் கொள்வதாகும். அன்பு, இறைச்சிந்தனை, திருப்தி போன்றவை மனதைத் தூய்மைப்படுத்தும் சாதனங்கள்.

இந்த நான்கும் தர்மத்திற்குப் பிரதான ஆதாரங்கள். ஆகையால் தான் ‘தர்மம் என்ற ரிஷபத்திற்கு நான்கு கால்கள்’ என்றனர். இந்த ரிஷபத்தின் சுபாவம் ஆனந்தம்.

இந்த நான்கையும் கடைப்பிடிப்பவருக்குப் பயமோ, துக்கமோ இருக்காது. மனத்திருப்தியோடு கூடிய ஆனந்தமே இருக்கும்.

ஆனந்தமாக இருப்பதையே ‘நந்தி’ என்பர். ஆகையால்தான் தர்ம ரிஷபத்திற்கு நந்தீஸ்வரன் என்று பெயர்.

நந்தி, பரமேஸ்வரனின் வாகனம். அதாவது, பரமேஸ்வரன் தர்மத்தின் மேலிருப்பவன் என்று பொருள். தர்மம் யாரிடம் இருக்குமோ அவரின் உள்ளுறைந்து இறைவன் பிரகாசிப்பான்.

அது மட்டுமல்ல. நாம் சிவன் கோயிலுக்குச் செல்கையில் முதலில் நந்தீஸ்வரரைப் பூஜித்து, பின் சிவனை வழிபடுகிறோம். நந்தியின் கொம்புகளின் வழியே சிவனை தரிசிக்கிறோம்.

இதன் உட்பொருள்:- முதலில் தர்மத்தைக் கடைப் பிடிப்பது, அதன்பின் தெய்வத்தை வழிபடுவது. தர்மத்தின் வழியே இறைவன் தரிசனம் அளிப்பான்.

இந்நான்கு விஷயங்களையும் நடைமுறையில் கொண்டு வரும் சிறிய முயற்சியைக் கூட செய்யாவிடில் உள்ளத் தூய்மை ஏற்படாது.

தூய்மையற்ற மனதை சிவனுக்குச் சமர்ப்பிக்க முடியுமா?

நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்ட தர்ம சொரூபமே ரிஷபம் என்பது மகரிஷிகளின் தரிசன உண்மை.

‘தத் புருஷாய வித்மஹே வேத ரூபாய தீமஹி தன்னோ விருஷப: ப்ரசோதயாத்’.

பொருள்: ‘வேத ரூபமாக உள்ள அந்த புருஷரைத் தியானிக்கிறோம். அவர் எங்களது புத்தியைப் பிரகாசிக்கச் செய்யட்டும்’.

இறைவனை தரிசித்தபடியே கடைப்பிடிக்கும் தர்மமே ஆனந்த சொரூபம். ஆகையால்தான் நந்தி எப்போதும் பகவானைப் பார்த்தபடியே இருக்கிறார். தர்மத்தின் லட்சியம் கூட பரமாத்மாவே.

தெலுங்கில் பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா

– ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம், பிப்ரவரி, 2015ல் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *