அம்மா என்றால்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2018
பார்வையிட்டோர்: 6,437 
 
 

எல்லோருடைய கண்களும் குழைவாக வடிக்கப்பட்ட சாதம்,காய்கறிகள்,அப்பளம்,இனிப்புகள் இவற்றோடு பாலாடை மிதக்கும் காபி எல்லாம் சேர்த்து கலவையாக படைக்கப்பட்டிருந்த இலையிலும் எதிரே இருந்த வேப்பமரத்திலும் மாறி மாறி பதிந்து மீண்டன.

மரணத்தின் காட்டமான நெடி சுவாசங்களில் நிறைந்திருக்க எல்லோருடைய முகங்களிலும் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. நிரம்பி ததும்பிக் கொண்டிருந்த அமைதியில் கனமாக விழுந்து அதிர்வுகளை உண்டாக்கியது ராமசாமி மாமாவின் குரல்.

யாராவது கூப்பிடுங்கப்பா கூப்ட்டாதானே வரும் காகா காகா

எழுந்த குரலைத் தொடர்ந்தன குரல்கள். காகா காகா

சற்றுத் தொலைவிலிருந்த வேப்பமரத்தில் எந்த அசைவும் இல்லை கால்களைப் பொசுக்கும் வெயிலின் உக்கிரத்தில் சலித்துப் போயோ என்னவோ சித்தப்பாதான் சொன்னார்

சரிப்பா அது வந்து சாப்பிடறப்ப சாப்பிடட்டும்.நாம போய்….

முடிக்க விடாமல் பாய்ந்தார் மாமா.

அதெப்படி காக்கா சாப்டாம நாம சாப்டறது.எந் தங்கச்சி பட்டினியா கெடக்கறப்ப நாம சாப்படறது பாவமில்லையா?

தேங்கி நின்ற காலத்தை உலுக்கிக் கலைத்தது பெரியம்மாவின் ஆங்காரமான குரல். அவ வரமாட்டா அவ ரோஷக்காரி .

ஏய் சும்மாருக்க மாட்ட பெரியப்பாவின் குரல் உயர்ந்தது .

வயிறு எரியுது.ஒத்தப் புள்ளய புருஷனில்லாம ஆளாக்கி வந்தவளுக்கு தாரை வார்த்துட்டு அனாத மாரி முதியோர் இல்லத்துல செத்தாளே அவ மனசு வேகுமா இந்த எச்ச சோத்த திங்கறதுக்கு அவ வரவே மாட்டா.

என் மறுபாதி ஜானகியும் வாளை உருவிக் கொண்டு குதித்தாள்.

வயசான பத்தாது வாய அடக்கணும்.எல்லா வீட்டு நாத்தமும் எனக்கும் தெரியும்.எங்க வீட்ட கௌற யாரையும் வெத்தல பாக்கு வச்சு அழைக்கல.

நீயும் ஒத்தப் பயலத்தானே பெத்து வச்சிருக்க.நாளைக்கு ஒனக்கும் இதே கதிதான்.

நானே நாகரிகமா ஒதுங்கிட்டு அவங்கள சந்தோஷமா வாழ விடுவேன்.அட்டையா ஒட்டிகிட்டு உயிரெடுக்க மாட்டேன்.

ஏம்மா எழவு வீடுன்னு நெனச்சீங்களா இல்ல… மாமாவின் தடித்த குரல் இருவரையும் விலக்கியது.

கூட்டமா இருந்தா காக்கா பயப்படும்.இப்படி கூச்சல் வேற போட்டீங்கன்னா….? சரி போங்க போய் சாப்பிட்டு ஆகற வேலயப் பாருங்க.

எல்லோரும் இறுகின முகங்களுடன் வீட்டிற்குள் சென்றதும் தனியே நின்று நடந்த சண்டையினால் பாதிக்கப்படாமல்,பிரமாண்டமான துரிகையென மெல்ல அசைந்து கொண்டிருந்த வேப்பமரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மாமா சொல்வது நிஜமா?அம்மா நீ வந்துருக்கயா?நான் பேசறது உனக்கு கேட்குதாம்மா? அப்பாவ போட்டோலதானம்மா பாத்துருக்கேன்.நீதானம்மா எனக்கு எல்லாம்.பெரியம்மா சொன்னது எவ்வளவு நிஜம்.நீ ரோஷக்காரிதாம்மா.இல்லேன்னா அப்பா செத்ததுக்கப்பறம் எந்தச் சொந்தத்துகிட்டயும் கையேந்தாம வேலைக்குப் போய் என்ன ஆளாக்கியிருப்பியா.எவ்வளவு நன்றி கெட்டவன்ம்மா நான்.எப்படிம்மா எப்படி இப்படி மாறினேன்.

புலன்களில் மேல் மெல்லிய திரையென படர்ந்து நழுவின நினைவுகள். என்னடா இது சின்னக்குழந்த மாதிரி.நல்ல நாளும் அதுவுமா.

என் கண்ணீரைத் துடைத்த அம்மாவின் சுருக்கங்கள் நிறைந்த கைகளை பற்றியபடி குலுங்கினேன்.

முடியலம்மா எனக்கு வெவரம் தெரிஞ்சு நீ என் கூட இல்லாத மொத தீபாவளிம்மா இது.என்ன ஆளாக்கறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்ட.என்னால உனக்கு பிரயோஜனமே இல்லாம போச்சேம்மா

இவன் ஒருத்தன்.பலனை எதிர்பாத்தா இதெல்லாம் செய்வாங்க.உன்ன இப்படி வளர்த்தேன்.அப்படி வளத்தேன்னு ஒரு தாயோ தகப்பனோ சொல்லவே கூடாது.அப்படிச் சொன்னா அதுக்குப் பேரு பாசம் இல்ல வியாபாரம்.

நெஜமா சொல்லும்மா என் மேல உனக்கு கோபமே இல்லையா?

சத்தியமா இல்ல.கல்யாணம் ஆகி அஞ்ச வருஷம் கழிச்சு தவமிருந்து பெத்த புள்ளடா நீ.கோழி மிதிச்சு குஞ்ச முடமாகுமான்னு கேட்பாங்க.எசகுபிசகா மிதிச்சா குஞ்சு முடமாகத்தான் செய்யும்.அடப்பாவின்னு உன்ன நான் வயிறெரிஞ்ச சபிச்சா அது உன்ன பாதிக்காம போகுமா? மனச போட்டு குழப்பிக்காத.நானே விருப்பப்பட்டுத்தானே வந்தேன்.சரி,ஆகாஷ் எப்படி இருக்கான்?ஜானகி எப்படி இருக்கா?

நல்லா இருக்காங்கம்மா .

ஒரு நிமிஷம் இரு என்றபடி உள்ளே சென்று சிறு பையுடன் வந்த அம்மா,நல்லாயிருக்கான்னு பாரு என்று தர,வாங்கி பிரித்துப் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்த மெருன்கலர் சட்டை.

உச்சிக்கால பூஜை மணி கணீர் கணீரென ஒலித்து நிகழுக்கு இழுத்தது.மேகக் கூட்டமொன்று சூரியனை மறைக்க வெயிலின் உக்ரம் குறைந்து எங்கும் மிதமான ஒளி பரவியது.

சரி அவ சொன்னா என் அறிவு எங்க போச்சு?என் உடம்புல ஓடற ரத்தம் எங்கம்மாவோட வேர்வை.எந்தக் காரணத்துக்காகவும் எங்கம்மாவ நான் பிரிய மாட்டேன்னு ஏன் என்னால ஜனகிகிட்ட சொல்ல முடியல.அம்மா நான் உன் மகனா மட்டும் இருந்திருக்கக் கூடாதா?

இதயத்தின் ஆழத்திலிருந்து அசைந்து வந்த குமிழ் ஒன்று தொண்டையில் வெடித்தது.

சரிம்மா நான் தப்பு பண்ணிட்டேன்.தப்பு கூட இல்ல பெரிய பாவம் பண்ணியிருக்கேன்.ஒத்துக்கறேன்.என்ன மன்னிக்க மாட்டயா,நீயே பெத்த புள்ளய மன்னிக்கலேன்னா யார் மன்னிப்பா?ப்ளீஸ்மா,என்ன மன்னிச்சிரு.நான் பெறக்கும் போது நீ என் பக்கத்துல இருந்த.நீ சாகறப்ப இநத்ப் பாவி உன் பக்கத்துல இல்லயேம்மா.அய்யோ எவ்வளவு பெரிய பாவியாயிட்டேன்.அம்மா,வாம்மா வந்து சாப்பிடு.போகும் போது பசியோட தாகத்தோட போகாதம்மா.வந்து சாப்பிடும்மா.

தீராத சுனையொன்றின் ஊற்றாக பெருகி வழியும் கண்ணீரைத் துடைக்கக் கூடத் தோன்றாமல், நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நீலவானின் பின்னணியில் காற்றின் பாடலுக்கு தலையசைத்துக் கொண்டிருந்த வேப்பமரத்தின் இலைகளுக்குள்ளிலிருந்து மழை மேகத்தின் துண்டொன்று எழும்பி,சிறகுகள் விரித்தபடி பறந்து வந்து இலையின் முன் அமர்ந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *