அமிலத்தில் மீன்கள் வாழாது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 6,950 
 
 

விஜி அருகில் படுத்திருந்த கணவனை இரவு விளக்கு வெளிச்சத்தில் பார்த்தாள். அவன் தூங்கிவிட்டான் என்று பட்டது. அவனது தூக்கத்தைக் கெடுக்க விரும்பாமல் அவன் இதழ்களை நெருங்கி முத்தமிட்டாள். அவன் அதனை உணரவில்லை என்று தெரிந்தது. ஆனால், அவள் வேறொன்றை உணர்ந்தாள். நெடி.. சாராய நெடி.

அவள் கணவனா குடித்திருப்பான்.. சாராயம்? அவளுக்கு அதிர்ச்சி. மறுபடியும் நெருங்கி பார்த்தாள். சுவாசித்தாள். அவனின் மீசையற்ற உதடுகளைச் சுவாசித்தாள்.

அவள் கணவன் ஒரு சர்வதேச மென்பொருள் கம்பெனியில் வேலை செய்கிறான். மென்மையான இயல்புள்ளவன். வெண்மையான நிறமுள்ளவன். பெண்மைத்தனம் மிக்கவன் என்றும் சொல்லலாம், ஆனால், அவன் ஆண் மகன். இவளின் அனைத்தையும் கேட்காமல் செய்து தரும் ஆண் மகன்.

அவனா சாராயம் குடித்தான்? அவனிடமிருந்து விலகி அவனின் லேப்டாப் பையை திறந்தாள். அவனுடன் அலுவலகம் சென்று வருவது அதுதான். பையின் ஓர் அறையில் அந்த பாட்டில் இருந்தது. திறந்து முகர்ந்து பார்த்தாள். எந்த வாடையும் தெரியவில்லை என்று சொல்லும் அளவுக்கு மெல்லிய நெடி அடித்தது. திரவம் வெண்மையாக இருந்தது. சற்றே குடித்துப் பார்த்தாள். எரிந்தது. குமட்டிக்கொண்டு வந்தது. சாராயமா குடிக்கிறான்?

வராண்டாவிற்கு எடுத்துச்சென்று விளக்கைப் போட்டாள். அந்த இரண்டு படுக்கையறை அப்பார்ட்மெண்டின் இரண்டாவது படுக்கையறையைப் பார்த்தாள். அத்தை தூங்கிக்கொண்டிருக்க வேண்டும். விளக்கு வெளிச்சம் இல்லை. தைரியத்துடன் பாட்டிலின் லேபிளைப் படித்தாள். வோட்கா என்றிருந்தது. வோட்கா என்றால் என்ன? சாராயம் இல்லையோ?

அவள் 11 வரை படித்தவள். அதற்கு மேல் படிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவளின் அப்பா 4 ஏக்கர் நிலத்திற்குச் சொந்தக்காரர். கத்திரி, வெண்டி என்று விளையும். பருத்தியும் போடுவார். கொட்டகையில் வெங்காயம் விலை உயர்வுக்காகக் காத்திருக்கும்.

எந்தக் காலத்திலும் அவர்கள் நிலத்துக் கிணற்றில் நீரிருக்கும். இவள் பள்ளி இல்லையென்று சொன்னால், அந்தக் கிணற்றிற்குச் சென்று மீனுக்கு சோறு போடுவாள். அது என்னவோ தெரியவில்லை. காராபூந்தி போட்டால் மீன்கள் அவ்வளவு வராது. சோறு போட்டால்தான் வரும்… பெருங்கூட்டமாய். ஒருவேளை வெண்ணிற சோறு அவற்றின் கண்களுக்குத் தெரியுமோ?

ஒருநாள் கிணற்றின் அனைத்து மீன்களும் செத்து மிதந்தன. யாருக்கும் காரணம் புரியவில்லை. ஆனால், கிணற்று நீர் நிறம் மாறியிருந்தது. அதன்பின், கிணற்று நீரைப் பாய்ச்சிய பயிர்கள் பச்சையிழந்து பழுப்பு நிறத்துக்குனு வந்தன. அப்பாவுக்குக் காரணம் புரியவில்லை.

யாரோ சொன்னார்கள் என்று கிணற்று நீரை விவசாயத்துறை ஆய்வு நிலையத்திற்கு எடுத்துச் சென்றார். சென்றவர், வாடிய முகத்துடன் திரும்பினார்.

கிணற்று நீர் கெட்டுவிட்டதாம். கிணற்று நீரில் அமிலம் அதிகம் இருக்கிறதாம். எங்கிருந்து வந்தது?

அப்பா யோசனையுடன் சொன்னார், ‘மேட்டுல இருக்கிற டையிங் பேக்கடரி காரணுங்க கழிவு நீரையே வெளியேத்துறது இல்ல… விசாரிச்சேன். போருக்குள்ள விடறானுங்களாம். அந்த தண்ணி நம்ம கெணத்துக்கு வந்துடிச்சு.’

அப்பா எழுந்து கவலையுடன் வாடி நிற்கும் பயிர்களைப் பார்த்தார். மீன்கள் செத்துப் போனது பற்றி கவலைப்பட்டவளுக்கு அப்பாவே ஊரை விட்டு வெளியேறியது கவலை தந்தது, அப்பா திருப்பூருக்குப் போய் விட்டார். இவள் 10 படிக்கும்போது, அப்பா பிரச்சனை என்றார். திரும்பி வந்த அப்பா வெகுநாள் ஊரில் இருந்தார். அதற்குள் பள்ளிக்குப் பணம் கட்ட முடியவில்லை. அப்பா திருப்பூர் செல்லும்போது இவளும் அம்மாவும் சேர்ந்து புறப்பட வேண்டியிருந்தது.

திருப்பூர் அவளுக்குப் பிடிக்கவில்லை. மரமில்லாமல், கிணறில்லாமல், ஒன்றறை அடிக்குள் ஓர் வீடு. ஆனால், என்ன செய்ய? அப்பா குடிக்க வேறு ஆரம்பித்திருந்தார். வருமானம் போதவில்லை. அவளும் டெக்ஸ்டுக்கு வேலைக்குப் போகும்படி ஆனது. டெக்ஸ்ட் கொடுமையை அவள் என்றும் மறக்கமாட்டாள்.

சாராய பாட்டிலைப் லேப்டாப் பைக்குள் வைத்துவிட்டுத் திரும்பினாள். கணவன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் சற்று தாடி தெரிந்தது. ஏன்? தினமும் ஷேவ் செய்வானே?

அவனை நெருங்கிப் படுத்து மார்பில் முகம் புதைத்துக்கொண்டாள். தூக்கதில் இருந்தவன் இறுக்கி அணைத்துக்கொண்டான். அந்த வெம்மைதான் அவளுக்கு வேண்டும். அது உயிரின் வெம்மை. ஓர் உயிர் மற்றொரு உயிருக்குத் தரும் வெம்மை. கண்கள் சொக்க, கணவனின் குடியை மறந்து தூங்கிப் போனாள்.

விஜிக்கு அவ்வளவாக உலகம் தெரியாது. அவளை வீட்டுக்குள்ளேயே வைத்து அம்மாவும் அப்பாவும் வளர்த்தார்கள். நிலம் அமிலமாகி, திருப்பூருக்குச் சென்று அப்பாவும் குடிகாரர் ஆகியிருக்காவிட்டால் அவள் வேலைக்குச் சென்றிருக்க மாட்டாள்.

வீட்டில் டிவி இருந்தது. டிவிடி பிளேயர் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். கேபிள், அத்துடன் டாடா ஸ்கையும் இருந்தது. வெள்ளிக்கிழமை மட்டும் கோவிலுக்குச் சென்று வருவாள். மற்ற நாட்களில் பள்ளி… அப்புறம் வீடு.

அவள் கோதுமை நிறத்தில் இருப்பாள். வீட்டில் குளியலறை கண்ணாடியில் முழுமையாகத் தன்னைப் பார்க்கும்போது அவளுக்கு வெட்கமாகவும் பூரிப்பாகவும் இருக்கும். விஜய் மாதிரி ஒருவன் வருவான் என்று யோசிப்பாள். அதெல்லாம், திருப்பூர் வரும் வரைதான். நிலம் வீடு எல்லாம் போய்விட்டது. திருப்பூரில், நிமிர்ந்து நின்றால் இடிக்கும் குளியலறையில், வெளியே தெரியும் குளியளறையில், குளிக்க வேண்டியிருந்தது.

வேறு வழியின்றி அவள் வேலைக்குச் சென்றாள். யந்திரங்கள் ஓடும் அசுர கதிக்கு ஓட வேண்டிய வேலை.

அங்குதான் அவள் அவனைச் சந்தித்தாள். அவன் உசிலம்பட்டிக்காரன். உயரம். கட்டுமஸ்தான உடம்பு. உதட்டை மூடும் மீசை. அதனைப் பார்க்கும்போது விஜிக்கு குறுகுறு என்றிருக்கும்.

அவன்தான் கம்பெனியின் மேனேஜர்.

‘மேனேஜர் அழைக்கிறார்’, என்றவுடன் அவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. அறையில் நுழைந்தாள். ஏசியில் மேலும் உடம்பு நடுங்கியது.

அந்த சந்திப்பு கொஞ்ச நேரம்தான்.

அவன் சொன்னான், ‘ஒங்க நெறத்துக்கும் அழகுக்கும் ஒங்கள ஒர்க்கரா என்னால பார்க்க முடியல. விசாரிச்சேன்.. நீங்க… ஒங்க சாதிக்கு இந்த வேலைக்கு வந்திருக்க கூடாது.. ஒங்கள சூப்பர்வைசாராக்க உத்தரவு போடுறேன்’ என்றான்.

இவளுக்கு நம்ப முடியவில்லை. சம்பளம் கூடுதலாகக் கிடைக்கும். ஒருவேளை அப்பாவின் நிலத்தை மீட்டுவிடலாம். கெட்டுப்போன 4 ஏக்கர் நிலத்தை அவர் 1 லட்சம் ரூபாய்க்கு ஒத்தி வைத்திருந்தார். ஒத்தியெடுத்தவனோ நிலத்தை எடுத்துக்கொண்டு பணத்தைக் கொடு என்று கேட்டுக்கொண்டிருந்தான். அவளின் அண்ணன் படிப்புக்கு அந்தப் பணம் போய்விட்டது.

சரியென்று தலையாட்டியபடி அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

அவன்சிரித்தான்.அது அழகாக இருப்பது போலத் தோன்றியது.

அங்குதான் பிரச்சனை ஆரம்பித்தது. அவன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பேசுவான். ப்ளானிங் மீட்டிங்போது அவன் அருகே அவள் அமர வேண்டியிருக்கும். அவளுக்குப் பிடிக்கவில்லை. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து அவனைப் பிடித்தது. அவனின் உயரம், இவனின் நிறத்திக்கு எதிரான கருப்பு. அவனின் ஆளுமை.

ஓர் நாள் அவள் கம்பெனியின் ஸ்டாஃப் எல்லாரும் சேர்ந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்றார்கள். அங்குதான் அவன் எவ்வளவு தன்னை விரும்புகிறான் என்று தெரிந்துகொண்டாள்.

திருப்பூர் திரும்பிய பின்னர் இரண்டு முறை சேலம் சென்று வந்தார்கள். அதன்பின் அவன் விலக ஆரம்பித்தான். அவளுக்குப் புரியவில்லை. புரிய ஆரம்பித்தபோது அவள் உடல் அவளுக்கு நாறியது. இதற்காகவா இந்த காதல் வேடம்?

அப்புறம் அவன் இவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. இந்தக் கம்பெனிக்கு அட்டைப் பெட்டி சப்ளை செய்யும் கம்பெனியின் காரில் அவன் புறப்படும்போது அவனைப் பார்த்தாள். பின் சீட்டில் இவன் அமர்ந்திருக்க அருகே கருப்பாக, ஆனால், அழகாக ஓர் பெண்ணிருந்தாள்.

அவள்தான் அந்த அட்டைப்பெட்டி கம்பெனியின் நிர்வாகி என்று பின்னர் விஜி விசாரித்து தெரிந்துகொண்டாள்.

விஜிக்கு நிலை கொள்ளவில்லை. எப்படி தான் கெட்டுப்போனோம் என்று யோசித்தாள். புரியவில்லை. ‘கெட்டுப்போனோமோ?’ என்று கேட்டுக்கொண்டாள். இல்லை, அவன்தான் கெட்டுப்போனான், அல்லது அவன் கெட்டவன்.

அப்பா ஒரு நாள் வீட்டுக்கு அவளை சீக்கிரம் வரச்சொன்னார். இரண்டாவது ஷிப்ட் முடிந்தவுடன் லீவ் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனாள்.

அங்குதான் இவனை, சண்முகநாதன் என்ற பெயருடைய இவனைப் பார்த்தாள். இவளைப் போன்ற நிறம். இன்னும் சரியாகச் சொல்லப்போனால். இவர்களின் சாதிக்கே உரிய நிறம்.

இவளுக்குப் புரியவில்லை. அப்பா சொன்னார், ‘நம்ம நெலம கெட்டுப்போயிடுச்சி. அதுக்காக உட்டுட முடியமா? நம்ம வெங்கடேசன் சொன்னத கேட்டு இன்டர்நெட்டுல ஓம்பேர, நம்ம சாதிப் பிரிவுல ஒம்போட்டோவோட போட்டு வெச்சேன். அதப்பார்த்துட்டு மாப்பிள்ளை வந்திருக்கிறார். உம்முன்னு சொல்லும்மா..’

சொன்னாள். இந்த நல்ல மாப்பிள்ளைக்கு நானா என்று யோசித்தாள். ஆனாலும், இந்த உலகத்தை விட்டு தப்பிச்சா போதும்னு யோசித்தாள். உம் என்று சொன்னாள்.

அவர்கள் வெளியேறிப் போன பின்பு ஓடிப்போய் பார்த்தாள். காரில் மஞ்சள் போர்டில் நம்பர் இருந்தது. இப்போது அப்பார்ட்மெண்டில் நிற்கும் அவர்களின் கார் சொந்தக் கார்.

காலையில் அவன் முரட்டுத்தனமாக விலக்குவது கண்டு விலகினாள். அவன் உடனே பாத் ரூம் போய்விட்டான்.

இவள் போர்வைக்குள் இருந்தாள். அவன் வர காத்திருந்தாள். பாத் ரூமுக்குள் இருந்து வந்தவுடன் அவன் போர்வைக்குள் நுழைந்துகொள்வான். அதிகாலை குளிருக்கு அது சுகமாக இருக்கும். நீரைத் தொட்ட கைகள்தான் ஜில்லென்று இருக்கும். மற்றபடி உயிருக்கு உகந்த வெம்மை இருக்கும். காத்திருந்தாள்.

அவன் வெளியே வந்தான். ஆனால் போர்வைக்குள் வரவில்லை. காத்திருந்தவள் போர்வையை விலக்கிப் பார்த்தாள். அவன் லேப்டாப் எதிரே அமர்ந்திருந்தான்.

ஆபீஸ் வேலையாக இருக்கும் என்று எண்ணியவாறே விஜி கண்ணயர்ந்தாள். அந்த சாராயம் அவளை அசத்திக்கொண்டேயிருந்தது.

காலை எட்டு மணிக்குத்தான் எழுந்தாள். பாத்ரூம் போகாமல் கூட சமையலறை சென்று அவனுக்குக் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். அத்தையின் அறைக்குச் சென்று அவளுக்கும் காப்பி கொடுத்தாள். அத்தை இவளைப் போன்றே இருப்பாள்., ஆனால், நெற்றியில் திருநீறு மட்டுமே இருக்கும். சதா கீதையைப் புரட்டிக்கொண்டிருப்பாள். ஜன்னலுக்கு வெளியே தெரியும் சாலையில் ஓசைக்கு இடையில் எப்படி அத்தை கீதை படிப்பார் என்று விஜிக்கு ரொம்ப நாள் சந்தேகம்.

அத்தை இவளைப் பார்த்துவிட்டு அமரச் சொன்னாள். துளசி தீர்த்தம் கொடுத்தாள். ’இருங்க அத்தை’ என்று சொல்லிவிட்டு பாத்ரூம் சென்றுவிட்டு திரும்பினாள். துளசி பாவங்களை நீக்கும் என்று எண்ணியவளாக, இருகரம் கூப்பி அத்தையிடன் வாங்கி அருந்தினாள்.

இவள் திரும்பி படுக்கையறை வந்தபோது 9 மணி ஆகியிருந்தது. அவன் அருகே இவள் வைத்த காப்பி அப்படியே இருந்தது. இவள் ’என்ன ஆச்சு?’ என்று யோசித்தபடியே ‘என்ன… காப்பி குடிக்கலயா?’ என்றாள்.

அவள் திரும்பி பார்த்தான், அவன் முகத்தில் தெரிந்தது சிரிப்பா என்று தெரியவில்லை. ‘ஆறுன காப்பிய குடிக்க முடியாது’, என்றான்.

இவளுக்குப் புரியவில்லை. ’சூடாயிருக்கும்போதே யாராவது குடிச்சிட்டு மீதிய வைச்சிருக்கலாமுல்ல?’ என்றான். அவன் முகத்தில் குரூரம் தெரிந்தது.

புரியவில்லை.

‘என்ன சொல்றீங்க?’ என்றாள் விஜி.

‘நீயே பாரேன்’ என்று சொல்லிவிட்டு, லேப்டாப்பில் எதனையே அமுக்கிவிட்டு பாத் ரூம் போனான்.

லேப்டாப் திரையில் ஒரு சதுரம் பெரிதாகி ஏதோ ஒன்று சுற்றி சுற்றி வந்தது. அப்புறம் எழுத்து வந்தது. அவளுக்கு அதனை வாசிக்க முடியவில்லை. ஆனால், .நெட் என்பது மட்டும் தெரிந்தது. ஏதேதோ மழுங்கலாக வந்து போனது. அப்புறம் இவளின் முகம் தெரிந்தது, தெளிவாக.. அன்று அவள் வைத்திருந்த மஞ்சன் ஸ்டிக்கர் பொட்டு தெளிவாகத் தெரிந்தது.. அப்புறம் அது தெரிந்தது.. கருப்பாக நீளமாக.. விஜிக்குப் புரிந்துவிட்டது. அது அவன். ஆனால், அவன் முகம் தெரியவில்லை.

தலை சுற்றியது. எப்படி? எப்படி? எப்படி? எப்படி?

லேப்டாப் திரையைப் பார்க்க அறுவருப்பாகாக இருந்தது. அனைவரின் முன்னமும் கற்பழிக்கப்டுவதாகத் தோன்றியது. எப்படி?‘ எப்படி இதெல்லாம் நடக்கிறது? தோப்பண்ணசாமி கோவிலில் விளக்கேற்றி வைத்தது என்ன ஆயிற்று?

லேப்டாப் திரை கருப்பாகி விட்டது. சரிந்து கிடந்தவள் எழுந்தாள். அவன் இன்னும் குளித்துக்கொண்டிருந்தான் போல. ஷவர் சப்தம் கேட்டது. அவன் வெளியே வந்து என்ன கேட்பான்?

இவளுக்கு உடலெல்லாம் எரிந்தது. எப்படி வாழப்போகிறோம் என்று கேள்வி எழுந்தது.

எழுந்தாள்., கணவனின் பர்ஸ் டேபிளில் கிடந்தது. திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு நடந்தாள்.

ஊருக்கே போய் விடலாம் என்று தோன்றியது. அப்பாவின் நிலத்திற்கே சென்று விடலாம் என்று தோன்றியது. அப்பார்ட்மென்டை விட்டு விலகி நடந்தாள்..

வேப்ப மரத்தின் நிழலில் ஆவென்று திறந்து கிடக்கும் கிணற்றுக்குச் சென்றுவிடலாம் என்று தோன்றியது.

ஆனால், கிணற்றில் மீன்கள் இருக்குமே? சோறு போல என்னைக் கவ்வினால் வலிக்குமே என்று தோன்றியது.

அடி பைத்தியக்காரி என்று நினைத்துக்கொண்டாள். அமிலத்தில் மீன்கள் வாழுமா? எந்த மீன் உன்னைக் கடிக்கும் என்று சொல்லி சிரித்துக்கொண்டாள். உனக்கு வலிக்கவே வலிக்காது. உன் உடம்பு பற்றி யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அப்படியே கேட்டாலும் உனக்குத் தெரியாது என்று தனக்குள் பேசிக்கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *