யாருக்காக அழுகிறேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2022
பார்வையிட்டோர்: 3,381 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வழிமேல் விழி வைத்த வண்ணம் வாசலையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். இன்னும் சிறிது நேரத்தில் அவள் வந்துவிடுவாள். என்னை அழைத்துக் கொண்டு சென்றுவிடுவாள். புதிய அனுபவத்தில் புதியவர்களுடன் புது வாழ்க்கை வாழப் போகிறேன் என்ற நினைப்பே எனக்குப் புதுத் தெம்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. புவனா… ஆம்! அதுதான் அவள் பெயர். புண்பட்ட என் உள்ளத்திற்கு அவள் தான் அரும் மருந்தாக விளங்கினாள். அவளைக் காண்பதில் ஒருவித ஆறுதல். அவளுடன் பேசுவதில் ஒரு வகை இன்பம்; மொத்தத்தில் அவள் என் அருகில் இருப்பதை நான் பெரும் பாக்கியமாகக் கருதினேன். அந்த அளவிற்கு எனக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்? என்ன தொடர்பு? இப்படி என்னையே நான் பலமுறை கேட்டதுண்டு. ஆனால் அதற்கான பதிலைத்தான் இதுவரையிலும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதான் ‘விட்ட குறை, தொட்டகுறை’ என்பதோ?

இப்படி அவளைப் பற்றியே சதா எண்ணிக் கொண்டிருக்கும் நான் ஒரு காலத்தில் அவளை எடுத்தெறிந்து பேசியதை நினைக்கும்போது எனக்கே வெட்கமாக இருந்தது. அப்படிப்பட்டவனா இப்பொழுது அவள் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அந்த அளவிற்கு என்னுள் மாற்றத்தை அவள் எப்படி ஏற்படுத்தினாள்? இதுதான் காலத்தின் கோலமோ? வாசல் பக்கமாக யாரோ நடந்துவரும் காலடியோசை கேட்டது. அவளாகத்தான் இருக்க வேண்டும் என்ற ஆவலில் உற்சாகத்துடன் நிமிர்ந்தேன். முதியோர் இல்ல நிர்வாகி புன்முறுவலுடன் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். என் அருகில் வந்தவர், “என்ன சோமசுந்தரம் புவனாவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலைப்படாதீங்க வந்துவிடுவாங்க” என்றவர் மேலும், “நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி, சோமசுந்தரம். யாருக்குமே கிடைக்காத ஒரு நல்ல வாழ்க்கை உங்களை நாடி வந்திருக்கிறது. அதனை நல்ல விதத்தில் பயன்படுத்துவீங்கன்னு நான் நம்புகிறேன்” என

ஒரு நீண்ட சொற்பொழிவையெ நிகழ்த்தினார். பேசுவதற்கு வார்த்தையற்றவனாய் என் பொக்கை வாயைத் திறந்து நன்றி பெருக்குடன் சிரித்தேன். “நீங்க இப்படியே சிரிச்சிக்கிட்டு இருக்கணுங்கிறதுதான் என்னோட ஆசையும் கூட. உங்க மனத்திற்கு எல்லாமே நல்ல விதமாக நடக்கும் சோமசுந்தரம். சரி புவனா வந்த பிறகு உங்களுக்குரிய பத்திரங்களோட நான் உங்களை மறுபடியும் சந்திக்கிறேன். நான் வரட்டுமா?” எனக் கூறியவர் என் பதிலுக்குக் கூட காத்திராமல் அந்த அறையை விட்டு அகன்றார்.

இது நாள் வரை எனக்குப் புகலிடம் அளித்த அந்த அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தேன். சிறிய அறைதான். இருந்தாலும் எனக்கும் என் சக நண்பர்களுக்கும் எந்தவிதக் குறையும் இல்லாமல் அந்த அறை சகல வசதிகளுடன் காணப்பட்டது. சி கிளாஸ் மருத்துவமனையில் எப்படிப் படுக்கை அடுக்கடுக்காக இருக்குமோ அதுபோல வரிசை வரிசையாகச் சுமார் பன்னிரண்டு வயோதிகர்கள் தங்குவதற்கு ஏற்ற விதத்தில் அந்த அறை காற்றோட்டத்துடன் சுத்தமாக இருந்தது. ‘அதோ அந்த மூலையிலுள்ள மேசையின் மீது என் பார்வை பட்டபோது, புவனாவைச் சந்தித்த சம்பவமும், என் மனக்கண் முன்னே திரைப்படம் போல் காட்சியளித்தது.

ஆம்! மூத்த குடிமக்கள் வாரத்தை முன்னிட்டு முதியோர்களைப் பேட்டி காண்பதற்காக வானொலி நிலையத்திலிருந்து பணியாளர்கள் வந்திருப்பதாக எங்கள் இல்ல நிர்வாகி எங்களுக்குப் புவனாவை அறிமுகப்படுத்தினார். சிரித்த முகத்துடன் கைகூப்பி வணக்கம் செய்த புவனாவைப் பார்த்த மாத்திரத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அறையின் மூலையிலுள்ள அந்த மேசையின்மேல் தான் கொண்டு வந்திருந்த ஒலிப்பதிவுக் கருவியை வைத்தபடி ஒவ்வொருவரையும் பேட்டி கண்டுகொண்டிருந்தாள் புவனா. என் முறை வந்தது. நானும் அவள் அருகில் சென்றேன். தனது இனிய குரலில் கனிவான முறையில் பணிவன்புடன் தன் பேட்டியைத் தொடங்கினாள். இரண்டு நிமிடங்கள்தான் என்னால் அவளுடைய கேள்விக்கணைகளைப் பொறுத்துக் கொள்ள முடிந்தது. நேரம் ஆக ஆக அவள் என் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி இலேசாகச் சீண்டிப் பார்ப்பது போன்றதோர் உணர்வு என்னுள் எழுந்தது. அவ்வளவுதான் முடங்கிக் கிடந்த என் உணர்வுகள் முன்கோபமாக மாறிட அவளை வாய்க்கு வந்தபடித் திட்டித் தீர்த்தேன்.

இப்படிப்பட்ட ஒரு புதுத் தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத புவனா நிலைகுலைந்து போனாள். பேட்டியைத் தொடர முடியாத அவள் மூட்டை முடிச்சுகளைக் கட்டி வந்த வழியே சென்றாள். விழிகளின் ஓரத்தில் தேங்கிக் கிடந்த கண்ணீர் துளிகளைக் கண்ட போதுதான் நான் மிருகத்தனமாக நடந்துகொண்ட முறை எனக்கே புரிய வந்தது. அத்துடன் என் சக நண்பர்கள் அவளுக்காகப் பரிந்து பேசியதன் மூலமும் எனது அறியாமையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி யார் கேட்டாலும் நான் இப்படித்தான் வெறித்தனமாக நடந்து கொள்வதுண்டு. அந்த அளவிற்கு எனக்கு அதன் மீது சொல்ல முடியாத வெறுப்பு. தீராத பகை. புரட்டிப் பார்க்க விரும்பாத அத்தியாயங்கள்.

நினைத்துப் பார்க்க விரும்பாத கடந்த காலச் சுவடிகளை மீண்டும் திருப்பினால் யாருக்குத்தான் ஆத்திரமும் ஆவேசமும் வராது? நான் நடந்து கொண்ட முறை எனக்கு நியாயமாகப்பட்டது. ஆனால் என் சக நண்பர்களோ அதில் அர்த்தமே இல்லை என்கிறார்கள். வீணாக ஒரு பெண்ணின் மனத்தைப் புண்படுத்தி விட்டதாக நியாயம் பேசினார்கள். அவர்களது வாதத்தில் உண்மை இருப்பதாக நான் சிறுகச் உணரத் தொடங்கினேன். அவளிடம் மன்னிப்பு கேட்கவும் என் உள்ளம் விரும்பியது. ஆனால் அது நடக்கக்கூடிய காரியமா? அவளைச் சந்திக்க முடியுமா? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா எனறு என் உள்ளம் துடித்தது. ஆனால் அதற்கு வழி தெரியாமல் என் மனம் தவித்தது.

எனது துடிப்பையும், தவிப்பையும் உணர்ந்து அந்த ஆண்டவனே எனக்காக அவளிடம் வக்காலத்து வாங்கியிருக்க வேண்டும்? இல்லையேல் ஒரு வாரம் கழித்து அவள் என்னைச் சந்திக்க வந்திருப்பாளா? இது தெய்வீகச் சித்தம் போலும். அதனால்தான் அவள் மறுபடியும் அந்த இல்லத்தை நாடி வந்தாள். இப்பொழுது பேட்டி கேட்டு அங்கு வரவில்லை. தன் பிறந்த நாளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்க அங்கு வந்திருந்தாள். வந்தவள் நன்கொடையை வழங்கிவிட்டுச் சிட்டாய்ப் பறக்க எண்ணினாள். அதற்குள் என் கழுகுப் பார்வையில் பட்டுவிட்டாள். விட்டுவிடுவேனா நான்? வழியச் சென்று பேச்சுக் கொடுத்து எனது மன்னிப்புக் கோரிக்கையையும் அவள் முன் சமர்ப்பித்துவிட்டேன். அதனைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்ட அவள், தன் பிறந்த நாளுக்குக் கிடைத்த அரும் பரிசாக எனது சந்திப்பு அமைந்துவிட்டதாகக் கூறி, என்னுள் ஒரு வித நம்பிக்கையை ஊட்டினாள்.

அன்று முதல் அவளது வருகை வாடிக்கையாக அமைந்தது. அவளது வருகை எனக்குத் தெம்பையும், புதுப் பொலிவையும் ஏற்படுத்தியது. இந்த இல்லத்திற்கு வந்து ஈராண்டுக்கு மேலாகின்றது. அப்பொழுதெல்லாம் கிடைக்காத ஒரு மன அமைதியும் நிம்மதியும் அவள் வருகையால் எனக்கு உண்டானது. சூடு கண்ட பூனையாதலால் என் கடந்த காலத்தைப் பற்றி அவள் எதுவும் கேட்பதில்லை. நானும் சொல்ல முனைந்ததில்லை. எப்பொழுதாவது என்னை அறியாமல் நான் கடந்து வந்த பாதையிலுள்ள மேட்டையும் முள்ளையும் பற்றிக் கூற முற்பட்டாலும்கூட அவள் அதனைத் தொடரவிடாமல் பாதியிலேயே தடுத்துவிடுவாள். அப்பொழுதெல்லாம் அவள் “ஐயா ஏன் வீணா பழையதை நினைச்சிப் பார்க்கிறீங்க? அதை ஒரு கெட்ட கனவா நினைச்சி மறந்துடுங்க. எப்போ உங்க கோபத்திற்கு நான் ஆளானேனோ அப்பவே உங்களைப் பத்தின விஷயத்தைக் கேட்கக் கூடாதுனு நான் எனக்குள்ளேயே சபதம் எடுத்திட்டேன். அதனால வீணா அதைச் சொல்லி நீங்க உங்க அமைதியை இழக்க வேணாம். நானும் உங்க அமைதியை இழக்கக் காரணகர்த்தாவாக அமைய வேணாம்” எனக் கூறி என்னைத் தடுத்துவிடுவாள்.

இப்படி அவள் என்னைப் பற்றி அறிய விரும்பாத போதிலும் அவளைப் பற்றி அவள் எதுவும் என்னிடம் மறைத்தது கிடையாது. அதற்கு நான் தடை விதித்ததும் கிடையாது. சிறு வயதில் பெற்றோரை இழந்த புவனா தன் மாமா மாமியின் ஆதரவில் வளர்ந்தாள். பல கொடுமைகளுக்கு ஆளான அவள் தனது பத்தாவது வயதில் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட முனைந்தாள். நல்லவேளையாகப் பக்கத்து வீட்டுச் சீனக்கிழவி அதைப் பார்த்தவிட, அவள் அற நிறுவனம் ஒன்றில் சேர்க்கப்பட்டாள். தங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டாள் என எண்ணி அன்று அவளை விட்டுச் சென்ற மாமா மாமிக்கு இதுநாள் வரை அவள் எப்படி இருக்கிறாள்? என்ன செய்கிறாள்? என்ற துடிப்போ, ஆர்வமோ ஏற்பட்டதில்லை. அவளும் அதை ஒரு பொருட்டாக எண்ணவும் இல்லை. அற நிறுவனத்தில் இருந்தபடியே தன் பள்ளிப் படிப்பை முடித்த புவனா, தன் சொந்த வாழ்க்கையைத் தாமே அமைத்துக் கொள்ள முனைந்தாள்.

ஆம்! வானொலி நிலையத்தில் பணி புரிந்துவரும் அவள் தன் தேவைகளைத் தானே பூர்த்திசெய்து கொண்டு வருகிறாள். யாருடைய தயவும் இன்றித் தனியாக வாழ்ந்து வருகிறாள். இதுநாள் வரை தனக்கென்று ஒரு குடும்பமோ குழந்தை குட்டிகளோ வேண்டும் என்று அவள் எண்ணியதுகூடக் கிடையாது. ஆனால் என்னோடு பழகிய இந்தச் சில மாதங்களாகத் தன்னைப் பற்றித் தனக்கென்று ஒரு துணை வேண்டும் என்ற எண்ணம் அவளுள் வாட்டத் தொடங்கியது. அதன் விளைவாக இந்த அறுவது வயது கிழவனைத் தன் தந்தையாக ஏற்று இல்லத்திலிருந்து வெளியேற்ற வெளியேற்றப் பல முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டாள். தன் முடிவை அவள் என்னிடம் கூறியபோது நான் திக்குமுக்காடிப் போனேன் அதை ஏற்பதா நிராகரிப்பதா என்றே எனக்குப் புரியவில்லை. முன்பின் பழக்கமில்லாத ஒருத்தி என்னைத் தன் தந்தையாக ஏற்று அவளுடனேயே இருக்கும்படி செய்கிறாள் என்றால் இதில் ஏதும் சூது இருக்குமோ என்று என்னையே நான் கேட்டுக்கொண்டதுண்டு. ஆனால் புவனாவின் பரிசுத்தமான அன்பும் தூய்மையான நடத்தையும், வெள்ளை மனமும் என்னை அவளுக்கு அடிமையாக்கின. நான் அவள் அன்புக்குக் கட்டுப்பட்டேன். அவளோடு ஐக்கியமானேன்.

“என்னப்பா சோமசுந்தரம் இப்பவே கற்பனை உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பிச்சிட்டியா?” என்ற என் சக நண்பர்களுள் ஒருவரான இஸ்மாயில் என்னைத் தட்டிக் கேட்டபோதுதான் நான் என் சுயநினைவுக்கு வந்தேன். “ஆ! என்ன… என்ன… இஸ்மாயில்! நீ என்ன சொல்றே?” எனத் தட்டுத்தடுமாறி உளறினேன். “ம் இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் பொண்ணு உன்னை வந்து அழைச்சிட்டப் போகப் போறா? என்னப்பா முழிக்கிறே? அதுதான் புவனாவைச் சொல்றேன். ம்… இந்த மாதிரி அதிர்ஷ்டம் யாருக்கு வரும்? பிள்ளைகளால் கைவிடப்பட்ட நம்மைப் போன்றவர்களை ஆதரிக்க யாருக்கு மனம் வரும்? ம்… அந்தப் பொண்ணுக்குத் தங்கமான மனசப்பா. இல்லைனா உனக்கு ஆதரவு தர மனம் வந்திருக்குமா? போன ஜென்மத்துல நீ ஏதோ புண்ணியம் செய்திருக்கேப்பா. இல்லைனா இப்படி ஓர் அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வருமா? ஆனா ஒன்னுப்பா நீ எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்ப்பா. அதுதான் என்னோட ஆசை. எங்களை மறந்திட மாட்டீயே?” என்ற இஸ்மாயிலை மேலும் பேச விடாமல் “சேச்சே! நானாவது உங்களை மறப்பதாவது? என்னையும் அந்த நன்றி கெட்டவங்களோட பட்டியல்ல சேர்த்துட்டீயா இஸ்மாயில்?” என நன்றி கெட்டவர்களைச் சாடினேன். அந்த நன்றி கெட்டவர்கள் யார் என்று அவனுக்குத் தெரியாமல் இருக்குமோ? அதனை ஒப்புக் கொண்டவர்போல் அவரும் தலையை அசைத்தார்.

அப்பொழுது என் பக்கத்துப் படுக்கைக்குச் சொந்தக்காரனான லிம் ‘சிலாமாட் ஜாலான் சோமு” எனக் கைகுலுக்கினான். இப்படியாக என சக நண்பர்கள் எனக்குப் பிரியாவிடை அளித்தனர். இன்னும் கொஞ்ச நேரத்தில் இவர்களை எல்லாம் விட்டுப் பிரியப் போகிறோமே என்ற வாட்டம் என்னுள் வாட்டத் தொடங்கியதை என்னால் உணர முடிந்தது. ‘நிராதரவாக விடப்பட்ட இவர்களுக்கும் என்னைப் போல் அடைக்கலம் தர முன்வந்த நல்ல இதயங்கள் பெருக வேண்டும்’ என உன் உள்ளம் இறைவனைப் பிரார்த்தித்தது.

“சாப்பாட்டக்கு நேரமாச்சு சாப்பிட வாங்க” எனப் பணிப்பெண் வந்து அழைத்ததும் என் சக நண்பர்கள் குதூகலத்துடன் வரவேற்பறைக்குச் செல்லத் தொடங்கினர். அப்போதுதான் மணி ஏழாகிவிட்டதை என்னால் உணர முடிந்தது. ஐந்து மணிக்கே என்னை வந்து அழைத்துச் செல்வதாகக் கூறிய புவனாவை இன்னும் காணவில்லையே என்ற உணர்வே என்னைச் கசக்கிப் பிழிவதுபோல இருந்தது. “என்னப்பா எங்களோட சேர்ந்து சாப்பிட மனம் இல்லையா. மக வீட்டுல மக கையால சாப்பிடணும்கிறதுக்காக இப்பவே உண்ணாவிரதம் எடுக்க ஆரம்பிச்சிட்டீயா?” என் இஸ்மாயில் கேலி செய்ததும், எல்லோரும் கொல் என்று சிரித்துவிட்டனர். “சரிதான் வாப்பா. இன்றைக்காவது எங்களோட ஒன்னா சாப்பிடு. நாளைக்கு இப்படிச் சேர்ந்து சாப்பிட முடியுமா என்ன?” எனக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக இன்னொரு நண்பர் வற்புறுத்தினார். அவர் அழைப்பை ஏற்று நான் அவர்களோடு உண்டாலும் ஏனோ இனம் புரியாத வேதனை என்னுள் இருந்துகொண்டே இருந்தது. புவனா சொன்னபடி என்னை நிச்சயம் அழைத்துக்கொண்டு செல்வாளா? அல்லது ஏதோ ஒரு வேகத்தில் வாக்களித்துவிட்டு இப்பொழுது மனம் தடுமாறுகிறாளா? என்னால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

ஆனால் நேரமாகிக் கொண்டு இருந்ததுதான் மிச்சம். அவள் வருகைக்கான சுவடே தெரியவில்லை. இரவு மணி பத்தாயிற்று. என் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தளரத் தொடங்கியது. அப்பொழுது இல்ல நிர்வாகி என்னைக் காண விரும்புவதாகப் பணிப்பெண் வந்து கூறினாள். ஒரு வேளை புவனா வந்திருப்பாள். அதனால் தான் நிர்வாகி அழைக்கிறார் என்ற ஆவலில் அவர் அறையை நோக்கி விரைந்தேன். அங்கே எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ”ஐ எம் சாரி சோமசுந்தரம். புவனா உங்களைத் தன் கூடவே வாழ்நாள் பூராவும் வைத்திருப்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளையும் நான் செய்துவிட்டேன். இன்றைக்கு வருவதாகக் கூறினார்கள். இதுவரை அவங்களைக் காணவில்லை. அதனால அவங்களை இப்போதைக்க எதிர்பார்க்கிறது சாத்தியமில்லை. நீங்க புறப்படுவதற்கான ஏற்பாட்டை நிறுத்திடுங்க. ம் நீங்க எதுக்கும் கொஞ்ச நாள் காத்திருங்க. பிறகு பார்க்கலாம்” இப்படி நிர்வாகி எதை எதையோ கூறினார். ஆனால் அந்த வார்த்தைகள் யாவும் என் காதுகளில் விழுந்ததாகக் தெரியவில்லை. அந்த அளவிற்கு நான் மிகவும் குழம்பிப்போயிருந்தேன்.

நேரே என் படுக்கையை நோக்கி நடந்தேன். என் சக நண்பர்கள் என் நிலையை உணர்ந்தவர்கள்போல் எதுவும் கேட்காமல் என்னைப் பரிதாபத்தோடு பார்த்தார்கள். அந்தப் பார்வை என்னைச் சுட்டெரிப்பதுபோல் இருந்தது. அவமானமும் ஏளனமும் என்னை வாட்டி வதக்கியது. எத்தனை புவனா கூறிய போலியான வார்த்தையை நம்பி மார்தட்டிப் பேசியிருப்பேன். இல்லத்தைவிட்டுச் சுதந்திரப் பறவையாக வாழப்போவதைப் பற்றி அளந்திருப்பேன். அதுமட்டுமா புவனாவுடன் சென்ற பிறகு அவள் எனக்கு வாழ்வளித்தது போல நானும் தந்தை ஸ்தானத்தில் இருந்து அவளுக்கு ஒரு நல்ல வரனையும் குடும்ப வாழ்க்கையையும் அமைத்துத் தரவிருப்பதாகப் பெருமையுடன் கூறியிருப்பேன். என் அளப்புக்கள் யாவும் கானல் நீராகக் கற்பனைக் கதையாக மாறிவிட்டதே என எண்ணும்போது என்னால் அந்த அவமானத்தை – அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. “சே! இந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லோருமே மோசக்காரர்கள், நம்பிக்கை துரோகிகள், கூட இருந்தே குழி பறிப்பவர்கள். இவர்களை நம்பவே கூடாது” என என் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தேன். “அடே மடையா! உன் இரத்தத்தில் தோன்றிய உன் வாரிசே உன்னை நிராகரித்தபோது இந்தப் பெண் எம்மாத்திரமடா!” என என் மனசாட்சி என்னைக் கேலி செய்தது. “ஆமாம் என் மகனே என்னை வெறுத்தபின், இந்த இல்லத்தில் நான் தங்கியிருப்பதற்குக் காரணமாக அமைந்த பிறகு இவளைக் குறை கூறி என்ன பயன்? நான் இப்படி அனாதையாய் ஆதரவற்றவனாய் இருக்கக் காரணமானவர்களை விட்டுவிட்டு இவளைக் கோபிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?” என என்னையே நான் சமாதானப் படுத்தினேன். புரட்ட என் அத்தியாயத்தை என் கடந்த கால வாழ்க்கையை என் மனம் அந்த நிமிடத்தில் எண்ணத் தொடங்கியது.

தலைப்பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவியைப் போன்றது எனப் பலரும் சொல்ல நான் கேள்விப்பட்டிருக் கிறேன். என் அனுபவத்தில் அதை நான் கண்டும் விட்டேன். தலைப்பிரசவத்திற்காகத் தாய் வீடு சென்ற என் மனைவி கமலம் ஒரு மகனை ஈன்றெடுத்த பூரிப்பில் இவ்வுலகை விட்டு மறைந்தாள். அவள் மறைவுக்குப் பிறகு என் தாயார் மறுமணம் செய்து கொள்ளும்படி எவ்வளவோ வற்புறுத்தினார். மகனின் நலனைக் கருதியும் என் மனைவியின் மீது நான் கொண்டுள்ள அன்பின் காரணமாயும் நான் என் தாயின் வேண்டுகோளை நிறைவேற்றவே இல்லை. அந்த ஏக்கத்திலேயே அவரும் என்னைவிட்டுப் பிரித்தார். என் மீது அன்பு கொண்டவர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக என்னை விட்டுப் பிரிந்து கொண்டிருந்தனர். இருப்பினும் எனக்கு ஆதரவாகத் துணையாக இருக்கும் என் மகன் ஆனந்தை – குலக்கொழுந்தைப் பற்றிக் கொண்டு என் வாழ்க்கையை ஒரு பிடிப்புடன் வாழத் தொடங்கினேன்.

தாய் அன்பு தெரியாமல் தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்த என் மகன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தான். தொடக்கக் கல்வியை முடித்த அவன் உயர்நிலைக்கல்வியை அடைந்தான். அதில் சிறப்பாகத் தேறிப் புகுமுக வகுப்பு, பல்கலைக்கழகம் என அவன் உயர்நிலையை அடைந்தான். அவன் முன்னேற எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் நான் பக்கபலமாக இருந்து என் உழைப்பைக் காணிக்கையாக்கினேன். என் சி.பி.எஃப்.பணம் முழுதும் அவன் நலனுக்காகச் செலவழித்தேன். தக்க வயதை அடைந்ததும். அவனுக்கு மணமுடித்தும் வைத்தேன். மொத்தத்தில் அவன் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சியாக நினைத்து வாழ்ந்து வந்தேன்.

தாரம் வந்ததும் ஒருவரின் தரம் எப்படித் தாழ்ந்து போகும் என்பதை என் கண்கூடாகக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தனியார் நிறுவனம் ஒன்றில் மானேஜிங் டைரக்டராக விளங்கும் என் மகன் வீட்டில் அவன் மனைவியின் முன் பெட்டிப்பாம்பாக அடங்கி ஒடுங்கிவிடுவான். மருமகள் என்பவள் எனக்கு மற்றொரு மகளாக இருப்பாள் என நான் போட்ட கணக்குத் தப்புக் கணக்காகியது. “மகள் மகள் தான் அவள் எப்போதுமே மற்றொரு மகளாக முடியாது” என்பதை அவள் மருமகளாக வந்து சேர்ந்த ஓரிரு மாதத்திலேயே நிரூபித்துவிட்டாள். வீட்டில் என் பொருட்டு என் மகனுக்கும் மருமகளுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடப்பதுண்டு. அந்தத் தள்ளாத வயதிலும் சொல்லொணா துயரத்தைக் கண்டும் நான் ஜடமாய் நடைப்பிணமாய் அங்கு வாழ்ந்து வந்தேன்.

இவ்வேளையில் என் மருமகள் “உண்டாகியிருப்பதாக” ஓர் இனிய செய்தியை என் மகன் கூறினான். பேரப்பிள்ளையைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலில் நான் பட்ட துன்பங்களையெல்லாம் துச்சமாக எண்ணி வாழ்ந்தேன்.

“தாத்தா” என்ற பதவி உயர்வு கிடைக்கப் போவதை எண்ணி மகிழ்ந்திருந்த வேளையில் நான் எதிர்பார்த்த அந்தப் பதவி உயர்வும் என்னை நாடி வந்தது. ஆனால் அதே வேளையில் என் மகனுக்கு “அப்பா” என்ற உரிமையை நான் இழந்தேன். ஆம்! பிரசவத்திற்காக தாய் வீடு சென்றவள் அவள் மறுபடியும் அந்த வீட்டிற்கு வர வேண்டுமென்றால் நான் அங்கு இருக்கக்கூடாது என்ற நிபந்தனையை விதித்தாள். என்னிடம் இதைக்கூற முடியாத நிலையில் என் மகன் தவித்தான். மருமகள் பேரனுடன் இன்று வருவாள் நாளை வருவாள் என ஒவ்வொரு நாளும் காத்திருந்த எனக்கு ஒரு நாள் அவளுடைய நிபந்தனை காற்று வாக்கில் காதில் விழுந்தது. இதைப்பற்றி நான் என் மகனிடம் கேட்டபோது அவன் மௌனமானான். நான் கற்சிலையானேன்.

அவன் வாழ்க்கையில் எவ்வித குறையுமின்றி ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதற்காக “ஆனந்த்” எனப் பெயர் சூட்டியதற்கு நேர்மாறாக அவன் துயரக்கடலில் மூழ்கியதைக் கண்டு நான் புழுவாகத் துடித்தேன். என் துயரம் புரியாமல் அவன் சில வேளைகளில் சொல்லம்புகளைத் தாக்குவான். அதைத் தாங்கிக்கொள்ள வலுவற்றவனாய் அவன் இன்பத்தில் குறிக்கிடச் சக்தியற்றவனாய் முதியோர் இல்லத்தை நோக்கிச் சரணடைந்தேன்.

அன்று முதல் இன்று வரை எந்தவிதப் பிடிப்பும் பற்றும் இல்லாமல் வெந்த சோற்றை உண்டு விதிவிட்ட வழி என வாழ்ந்து வந்த எனக்குப் பாலைவனச் சோலையாகப் புவனா வந்து சேர்ந்தாள். அவள் மட்டும் என் வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருந்திருந்தல் இப்பொழுது இந்த நரக வேதனையை நான் அனுபவிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. இந்த அவமானமும் அவமதிப்பும் எனக்கு ஏற்பட்டிருக்காது. வானில் தோன்றும் சுவாதி நட்சத்திரம் போல என் வாழ்க்கையில் துளிர் விட்டுப் பிரகாசித்து மறைந்துவிட்டாள். முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதுபோல என்னுள் இப்படி ஒரு கற்பனைக் கோட்டையைக் கட்டியிருக்க வேண்டியதே இல்லை. இவ்வளவு நாளும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய என் மகனின் மீதுதான் எனக்கு ஆத்திரம் இருந்தது. இப்பொழுது அந்தக் கோபம் யாவும் புவனா மீது பாய்ந்தது. அவளைத் திட்டிக் தீர்த்த வண்ணம் அப்படியே கண்ணயர்ந்து தூங்கிவிட்டேன்.

பொழுது புலர்ந்தது. இன்றாவது புவனா வருவாள். அலுவல் காரணமாக நேற்று வர முடியவில்லை எனக்கூறி இன்று அழைத்துச் செல்வாள் என்ற நம்பிக்கையில் அந்தக் காலைப் பொழுதை இன்முகத்துடன் வரவேற்றேன். ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக இல்ல நிர்வாகி அன்றைய பத்திரிக்கையைக் கொண்டு வந்த வண்ணம் என்னை நெருங்கினார். “சோமசுந்தரம் இதைப் பார்” என்றவரின் குரலில் ஒரு நடுக்கம் இருந்தது. அவர் சுட்டிக்காட்டிய பக்கத்தைப் பார்த்தேன். என் தலையில் ஆயிரமாயிரம் குண்டுகள் வெடித்துச் சிதறுவது போல் இருந்தது. உள்ளம் சுக்குநூறாக உடைந்தது. “கார் விபத்து ஒன்றில் இளம் பெண் மரணம்” என்ற கொட்டை எழுத்தின் கீழ்ப் புவனாவின் புகைப்படமும் நேற்றைய தினத்தில் நடந்த அந்தக் கோர விபத்தில் அத்தருணமே இறந்த புவனாவின் மரணச் செய்தியும் வெளிவந்திருந்தன.

அதைப் படிக்கப் படிக்க என் நெஞ்சம் படபடத்தது. கைகள் நடுங்கின. என்னைச் சுற்றியும் என் சக நண்பர்கள் துக்கம் விசாரிக்கக் கூடி விட்டனர். அவர்களின் ஒவ்வொரு பார்வையும் எனக்காக அனுதாபப்படுவதாக இருந்ததா அல்லது அந்தப் பெண்ணுக்காகப் பரிதாபப்படுவதாக என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. ஆனால் என் மனம் மட்டும் நெருங்கிய உறவினரை இழந்துவிட்ட துயரில் ஆழ்ந்திருந்தது. என் கண்கள் குளமாயின அதிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. நான் மனம் விட்டு அழுதேன். எனக்கு ஆறுதல் கூறச் சக்தியற்றவர்களாய் என் சக நண்பர்கள் என்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் யாருக்காக அழுதேன்? ஒரு வேளை…

1. என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிய என் மகனை நினைத்து அழுதேனா?

2. நேற்று வந்தவள் ஆதரிப்பதாகக் கூறி அநியாயமாக இறந்துவிட்டாளே அந்தப் புண்ணிய ஆத்மாவுக்காக அழுதேனா?

3. இன்னும் இந்த உலகிற்குப் பாரமாக இருக்கப் போகிறோமே என நினைத்து எனக்காக அழுதேனா?

இப்படி நான் யாருக்காக அழுகிறேன் என்ற வினாவிற்கு விடை தெரியாமலேயே அழுது கொண்டிருந்தேன்.

– தேடிய சொர்க்கம், முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *