அமாவாசை இரவில் சந்திரனைத் தேடி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2022
பார்வையிட்டோர்: 3,994 
 
 

தொப்பென்று ஏதோ கிணற்றுக்குள் விழுந்த சப்தம்…

கிணற்றுக்குள் முங்கி முங்கி குளித்துக் கொண்டிருந்த நிலா ஒரு வினாடி நடுங்கிப் போய் தெறித்து விழுந்தது..

ஒரு நிமிடம் மறைவதும் , பின்னர் எம்பிக் குதிப்பதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த நிலா பயந்து போய் ஒரு ஓரமாக மறைந்து கொண்டது..!

“ஏய்..நீ எவ்வளவு நேரம் தண்ணிக்குள்ளயே இருப்ப…? ஜலதோஷம் பிடிக்கப்போறது…! இல்லைனா ஜுரம் வரும்..

பேசாம மேல போயிடு….! சொன்னா கேக்கமாட்டியா? இரு இதோ வரேன்…!

குமுதா சரசரவென்று கயிறை இழுத்து வாளியைக் கிணத்தில் போட்டாள்..

தொப்பென்ற சத்தத்துடன் விழுந்தது வாளி….

”இப்போ சமத்தா வாளிக்குள்ள உக்காருவியாம்….”

ஒரே மூச்சில் ஒரு வாளித் தண்ணீரையும் மேலே இழுத்தாள் குமுதா…

“ஏய்..எங்க போன ? மறுபடியும் கெணத்துக்குள்ள விழுந்துட்டியா..?

ரொம்ப ஆட்டம் காட்டின அப்புறம் இந்த குமுதா யாருன்னு காட்டுவேன்..!

கலகலவென்று பெரிதாகச் சிரித்தாள் குமுதா..

குமுதாவைத் தேடிக்கொண்டு கிணத்தடிக்கே வந்துவிட்டாள் அம்மா சுந்தரா…

“மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா…கருமம்! உன்ன வச்சுண்டு நான் எத்தனை நாளைக்கு மாரடிக்கணும்னு தலையில் எழுதியிருக்கோ…?

அதுக்கு மின்னாடி என்னோட உசிரு போயிடும்போல இருக்கே..

அப்புறம் உன்ன யாருடி வச்சு காப்பாத்தப் போறா..?

அதுக்காகவாவது எனக்கு கொஞ்சம் ஆயுச குடுடாப்பா…!

மேலே பார்த்து பெரிய கும்பிடாய் போட்டாள் சுந்தராம்பா…

“அம்மா..! இங்க வந்து எட்டிப்பாரேன்..என்ன திமிரு இருந்தா ஒரு மணி நேரமா தண்ணிக்குள்ள ஆட்டம் போட்டிண்டிருக்கணும்! “

பெண்ணை இழுத்து நாலு அறை குடுக்க கை துடித்தது..அதனால் யாருக்கென்ன லாபம்..?

“ஏண்டி..குமுதா..இத்தனாம் பெரிய ஆத்தில கெணத்தடி ஒண்ணுதான் உனக்கு கண்ணுல தெரியறதா…?

இங்கியே பழி கொட்டிண்டிருக்கியே…!

வெளக்கேத்தி நாலு சுலோகம் சொன்னோம்.. ஒரு புத்தகத்த எடுத்து வச்சிண்டு படிச்சோம்..

அம்மாக்கு சமையல்ல ஒத்தாசையா நாலு காய் நறுக்கி குடுத்தோம்….

ஒண்ணும் வேண்டாம்..கால் நீட்டி ஒக்காந்துண்டு ஒரு சினிமா கூட பாக்கத்தோணாதா வயசு பொண்ணுக்கு…?

அப்படி என்னதாண்டி இருக்கு கெணத்துக்குள்ள…? எட்டி எட்டி பாத்துண்டு…!

விழுந்து கிழுந்து தொலைக்கப்போற…!

தரதரவென்று பெண்ணை உள்ளே இழுத்துக் கொண்டு போனாள் சுந்தரா….

இன்றைக்கு நேற்றைக்கா நடக்கிறது இந்தக் கூத்து…?

***

ஒருவேளை குமுதா இப்படி ஆனதுக்கு நானும் ஒரு காரணமோ?

நான் என்ன மத்தவா செய்யாததையா செஞ்சுட்டேன்.?

கல்யாணம் ஆகி நாலு வருஷம் கழிச்சுத்தான் பொறந்தா குமுதா..

மூக்கும் முழியும் , எங்க ஆத்துக்காரர் நெறத்துல , கையும் காலும் நீளநீளமா , திருஷ்ட்டி படறாப்லதானே பொறந்தா…!

பசிச்சா மட்டும்தான் அழுவா.. மத்தபடி தானே சிரிச்சுண்டு வெளையாடிப்பா..!

பாலைக் குடுத்து பாயில போட்டா மேல ஃபேன் சுத்தறத பாத்துண்டு சிரிச்சுண்டு இருப்பா..

வேலையெல்லாம் முடிச்சுட்டு வர வரைக்கும் ஒரு விசும்பல்.அழுகை..ம்ஹும்…!

அவ அப்பா ரொம்ப தூக்கி வச்சுண்டு கொஞ்சற டைப் இல்லை…போக வரச்சே ‘ஏய்..குட்டிம்மா! ‘ன்னுட்டு போவார்..

ரெண்டு வயசுல நன்னா நெய் விட்டு கொழச்ச பருப்பு சாதத்த கிண்ணத்துல போட்டுண்டு, இடுப்புல குமுதாவத் தூக்கிண்டு கொல்லப்பக்கம் போயிடுவேன்..

‘குட்டிமா..அதோ மேல பாரு..அம்புலிமாமா..’

‘ஆன்னு வாய் தொறக்கறச்சே ஒரு உருண்டைய வாய்ல போட்டதும் சமத்தா முழுங்கிடுவா…!

எனக்கு நன்னா வேணும்..சும்மாயில்லாம ஒரு நாளைக்கு கெணத்துக்குள்ள எட்டிப்பார்த்தேன்…

தகதகன்னு மின்னித்து சந்திரன்…

‘குமுதா..உள்ள என்ன இருக்கு பாரு ‘ன்னேன்..

“அம்புலிமாமா…ஹை…’ என்றவள் அதை எட்டி எட்டி பார்த்தாள்..

“மேல பாரு….நிலா..நிலா..ஓடிவா..கூப்பிடு.!

ம்ஹூம்..எனக்கு இது வேண்டாம்..தண்ணிக்குள்ள இருக்கே.. அதுதான் வேணும்…’

அப்போது ஆரம்பித்த பிடிவாதம் தான்..இன்று வரை தொடர்கிறது..

இன்று அவளுக்கு முப்பது வயதாகிறது…. இன்னமும் குழந்தையாய்…!

இடையில் என்னன்னவோ நடந்துவிட்டது…

அடுத்தடுத்து மூன்று பெண்கள்.வளர்ந்து பெரியவர்களாகி அவரவர் துணையுடன் வாழும்போது குமுதா மட்டும் கிணத்தடியே கதியாய் , சந்திரனே துணையாய்…பெற்ற வயிறு….!

***

குமுதா மத்த எல்லா குழந்தைகளையும் போல மொகம் பாத்து சிரிச்சு , குப்புற விழுந்து , தவழ்ந்து , உட்காந்து நடந்து , பேசி…. எல்லாம் செஞ்சவதான்..!

அவளுக்கப்புறம் பொறந்தது மூணும் பொண்ணா போச்சு…!

அவளுக்கு ஆறேழு வயசிருக்குமா..?

சொன்னத சொல்லுமாம் கிளிப்பிள்ளம்பா…! அது மாதிரி சொன்னதையை மூணு நாலு தடவ திருப்பிச் சொல்லுவா….!

பள்ளிக்கூடத்துக்கு போறதுன்னா ரெடி…

எட்டு மணி பள்ளிக்கூடத்துக்கு ஏழு மணிக்கே ரெடியாகணும்…

தலையப்பின்னு, டிபனக் குடு , நேரமாச்சு , நேரமாச்சுன்னு பரப்பா…பொறுமையே கெடையாது..

சொன்னாலும் புரியாது.. தனக்காகவும் தெரியாது…!

சரி சின்னப் பொண்ணு , அப்படித்தான் இருப்பான்னு சமாதானம் பண்ணிக்கும்போதுதான் மத்த மூணு பொண்களும் இவள மாதிரி இல்லைங்கறதே புரிஞ்சுது…

இல்லையில்ல…இவ மத்தவா மாதிரி இல்லைன்னு புரிஞ்சுது…!

டீச்சரும் அப்பப்போ நோட்டுல எழுதி விடுவா..

‘குமுதாக்கு நாங்க சொல்லறது ஒண்ணும் புரியல..டீச்சர வந்து பாருங்கோன்னுட்டு ‘….!

மத்த மூணும் இவள அசடுன்னு கேலி பண்றது கூட இவளுக்கு ஆரம்பத்தில புரியல…

நான் அவாள ஒரு நாள் நன்னா திட்டி விட்டுட்டேன்…

ஆனாலும் இவள வெரட்டி வெரட்டி வேல வாங்குவா…

குமுதாவப் பாக்க பாக்க எனக்கே பாவமா இருக்கும்..
எப்ப பாரு கிணத்தடிதான்…!

அங்க இருக்கிற தோய்க்கற கல்மேல உக்காந்து. என்னமோ கத சொல்லிண்டிருப்பா…

கடைசி பொண்ணு மீனா மட்டும் ‘அக்கா..அக்கான்னு ‘அவ கிட்ட ஓடிப்போவா…! மத்த ரெண்டும் அவள சீண்டக்கூட மாட்டா….!

‘கிணத்தடி சாமியார் ‘னு இவளுக்கு பட்டம்வேற….!

நடுவில கெணத்த எட்டிப் பாத்துண்டே இருப்பா…!

“உள்ள வாடி..இருட்டிப்போச்சுன்னு ‘கத்தணம்…

எப்பிடியோ தத்தி தடுக்கி ஸ்கூல் முடிச்சா…!

இவள காலேஜுல சேக்கறதாவே இல்ல..

மத்தது மூணும் எல்லாத்துலயுமே படு சுட்டி…மேல மேல பெரிய படிப்பெல்லாம் படிக்கறா..

குமுதாவ தையல் படிக்க அனுப்பி வச்சோம்..சுமாராக தைப்பா..!

ஒரு நா தையல் கிளாசிலேர்ந்து வரும்போ ‘மீனு குட்டி…மீனு குட்டின்னு ‘கூப்பிட்டுண்டே வந்தா..

கையில ஒரு ஆகாய நீலத்தில ஃபிரில் வச்சு தச்ச சட்டை..உடல் முழுக்க நட்சத்திர நட்சத்திரமா ஜிகினா..

‘அக்கா..! எனக்கா…?

மீனு குட்டி குதிச்சுண்டே உள்ள போயி மாத்திண்டு வரா..!

எத்தனை ஆசை இந்த குமுதாவுக்கு…!

எந்த ராஜா எந்த பட்ணம் போனாலும் இருவது வயசுல பொண்ணப்பெத்த எல்லோருக்கும் ஒரே ஒரு கவல தான்….!

பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்னு…!

குமுதா மொதல் பொண்ணா வேற பொறந்துட்டாளே..! அவள யாராவது கல்யாணம் பண்ணிப்பாளா…?

எங்க ரெண்டு பேருக்கும் இதே விசாரம்…!

***

அம்மா ஒரு நாளைக்கு ஒரு ஃபோட்டோவ கொண்டு வந்து காமிச்சா..

“குமுதா.. நான் சொல்றதை ஒழுங்கா காதுல வாங்கிக்கோ…

இந்த ஃபோட்டோல இருக்கிற பையன உனக்கு பிடிச்சிருக்கா…அத மட்டும் சொல்லு…!

எனக்கு ஒண்ணுமே புரியல..இது யாரும்மா..?

அடுத்தாத்து மோகன் அண்ணா மாதிரி இருக்கே..!

“குமுதா.உனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கோம்.பையன் பேரு சந்திரன்..! ஒனக்கு பிடிச்ச பேரு…!உன்னோட ஃபோட்டோவப்பாத்து ரொம்ப பிடிச்சுடுத்தாம்..”

“போனவாரம் கமலி கல்யாணம் நடந்துதே அது மாதிரியா? பட்டுப்பொடவையெல்லாம் கட்டிண்டு…! எல்லோரும் ஃபோட்டோ எடுத்தாளே..!

“அதே தாண்டி…!”

***

“குமுதா..வா..பக்கத்துல வந்து உக்காரு…!

சந்திரனுக்கு அல்லி மலரை பிடிக்காமல் போகுமா..?

என்னோட கைய பிடிச்சு “வா..குமுதா..! ஏன் ஒடம்பெல்லாம் நடுங்கறது..பயமா இருக்கா..?”

“எனக்கு ஆத்துக்கு போணம்..அம்மா கிட்ட…!”

அடுத்த அரைமணியில் அவனுக்கு எல்லாம் புரிந்து விட்டது..

மாமியார் சரோஜா விவேகி..

அவள் கையைப் பிடித்துக் கொண்டு ,

“குமுதா..பயப்படாதம்மா… நாங்க உன்ன ஒண்ணும் பண்ண மாட்டோம்..

இப்போ லேட்டாச்சு பாத்தியா..விடியக்காலை நாம் அம்மா கிட்ட போகலாம்..

இன்னிக்கு எம்பக்கத்தில படுத்துக்கோ…என்ன அம்மாவா நெனச்சுக்கோ….!”

****

“இந்தாங்கோ.. எப்பிடி கூட்டிண்டு போனோமோ அப்பிடியே கொண்டு விட்டுட்டோம்.. பாவம் பயந்து போயிருக்கா…பொறுமையா நடந்துக்குங்கோ….

குமுதா ஒரு கொழந்த…நல்ல டாக்டரா பாத்து காமிங்கோ… எல்லாம் சரியாய்டும்…!

மாமாவ ஆத்துக்கு வரச்சொல்லுங்கோ.மீதி காரியத்த மொறப்படி பேசி தீத்துக்கலாம்..!

***

ஆசையாய் பறித்த பூவை முகர்ந்துகூட பார்க்காமல் திரும்பவும் செடியிலேயே ஒட்ட வைக்க முடியுமா.?

அந்த வித்தை தெரிந்த சந்திரன் ?எப்பேர்ப்பட்ட மனிதனாய் இருக்க வேண்டும்..?

“அவனைப் பெற்ற தாய்! அவள் குமுதாவைப் புரிந்து கொண்ட அளவுக்குக் கூட நாங்கள் புரிந்து கொள்ளவில்லையே….!

***

நாங்க பயந்த மாதிரி ஒண்ணும் நடக்கல. மத்த மூணு பொண்களுமே எங்களுக்கு சிரமம் குடுக்காம படிச்சு, வேல தேடிண்டு , மனசுக்கு பிடிச்ச மாங்கல்யம்பாளே , அது மாதிரி ஏத்த பையன பாத்து கல்யாணம் பண்ணிண்டுட்டா..!

மாமாவும் போய்ச்சேந்தாஞ்சு.

இதோ , ஜாடிக்கு மூடி.. நீயும் நானும் ஜோடி’ ங்ற மாதிரி நானும் குமுதாவும்தான்.

குமுதா மனசுல என்ன இருக்குன்னே தெரிஞ்சுக்க முடியாது..

அவபாட்டுக்கு பாடிண்டு , சமையல் காரியத்துல ஒத்தாச பண்ணிண்டு, என்னமோ தச்சுண்டு , சொன்னதையே சொல்லிண்டு, அதே குமுதாவாத்தான் இருக்கா….!

ஆனா டாண்ணு அஞ்சடிச்சா போறும்.. கிணத்தடிக்கு போயிடணும்.

பத்து நிமிஷத்துக்கு ஒருக்கா கெணத்த எட்டி எட்டி வேற பாத்தாகணும்..!

மத்த மூணு பொண்களும் பிரசவத்துக்கு வரதும் போறதும், இவ அவாளோட கொழந்தைகளை எடுத்து வச்சுண்டு கொஞ்சறதும், அதுகளுக்கு லங்கோடு , ஜப்லா தச்சு தரதும் …!

இவளுக்கு சாதாரண பொண்கள் மாதிரி ஆசாபாசமே கெடையாதா..?

‘கெணத்தடி சாமியார் ‘தானா..?

எனக்கு தனியா ஒக்காந்து ஒருபாட்டம் அழணும்போல இருக்கும்..

சரி..போறது..எதோ போறமட்டும்னு நெனச்சிண்டிருக்கறச்சதான் நெருப்ப அள்ளி கொட்டின மாதிரி ஒரு காரியம் நடந்தது..!

***

அன்னைக்கு பௌர்ணமி..நல்ல தங்கத் தாம்பாளம் மாதிரி ஜொலிக்கறது நிலா..

வானத்திலேயும் தண்ணிக்குள்ளயும்…!

“ஏய்..குமுதா..! வா இங்க..! வாசல பாத்துக்கோ… மீனாட்சி மாமி வரச்சொன்னாளாம்…!

சித்த நாழில வந்துடுவேன்..தாப்பா போட்டுக்கோ…!

“சரிம்மா…நீ போ…!”

கெணத்தடிலேர்ந்து கத்தறா குமுதா..!

***

இன்னைக்கு ஏன் சந்திரன் இத்தனை அழகா இருக்கு?

பாத்துண்டே இருக்கலாம் போல இருக்கே..!

பின்னாடி என்ன சத்தம்..சலசலன்னு சருகு மேல யாரோ நடந்து வரா..

கிணத்துக்குள்ள பாத்துண்டே இருக்கறச்சே யாரோ ஆம்பள மொகம்..! என்ன அப்பிடியே கட்டி பிடிச்சு…?

யாரு..? சந்திரனா…?
திரும்பி பார்த்தா மோகன் அண்ணா..!

“ஐய்யோ ..அண்ணா…! என்ன விடு…!

பெரிசா கத்தறேன்…!
பிடிச்சு தள்ளி விட்டேன்..!

ஒரே ஓட்டமா ஓடிட்டான்….
நானும் நடுங்கிண்டே வாசலுக்கு வரேன்..

‘பே’ ன்னு கதவு தொறந்திருக்கு…!

நான் மூடலயா…?

***

இந்த பொண்ணு ஏன் பேயறஞ்சமாதிரி வாசல்ல நிக்கறது….?

“ஏண்டி…வாசல்லேயேவா நின்னுண்டிருக்க..!ஏன் ஒடம்பெல்லாம் நடுங்கறது ..?

மோகன் வந்துட்டு போறானா..? வழில பார்த்தேனே!

‘நிக்க நேரமில்லை மாமின்னு’ ஓடறானே…!

“ஆமாம்மா…! கெணத்தடியில.. பின்னாடி வந்து..! “

அவளை முழுசும் சொல்லவிட்டாத் தானே..!

“ஐய்யோ..என்னடி பண்ணினான் ? படிச்சு படிச்சு சொல்லிட்டுத் தானே போனேன்..!

கெணத்தடியே கதியா கெடந்தா இதுவும் நடக்கும்.இன்னமும் நடக்கும்….சொல்லு! என்ன நடந்தது..?

“நான் பெரிசா கத்தினேன்… பின்னாடி தள்ளிவிட்டேன்..ஓடிப் போய்ட்டான்….”

***

இப்போதெல்லாம் குமுதா பழைய மாதிரி இல்லை..

ஒரு வேலையும் செய்வதில்லை..

விட்டத்தை வெறித்து பார்த்தபடி…

கிணத்தடி கல்லில் உட்கார்ந்து ஆகாயத்தை பார்த்தபடி..

கிணத்துக்குள் எட்டிப் பார்த்து முணுமுணுத்தபடி….

சுந்தராம்பாளுக்கு நினைத்து நினைத்து ஆறவில்லை…

சந்திரனும் மோகனும் மாறி மாறி முகம் காட்டி போனார்கள்..

குமுதா…! நீ தனியா உன்னக் காப்பாத்திப்பியா அம்மா…? நான் எத்தனை நாளைக்கோ…?

***

அன்று அமாவாசை….!

குமுதா ஒழுங்காய் சாப்பிட்டு ஒரு வாரம் ஆச்சு…!

ரொம்ப நேரமாச்சு.குமுதா உள்ளேயே வரல..கெணத்தடில இன்னும் என்ன பண்றா…?

“குமுதா..குமுதா..! போறும்டி….உள்ள வா…!”

“அம்மா..இங்க வாயேன்..எங்கம்மா சந்திரன்.. ?

எத்தன நேரமா தேடறேன்…எங்கியோ போய் ஒளிஞ்சுண்டிருக்கான்…”

“அடி அசடே..இன்னிக்கு அமாவாசை..! ஏதுடி நெலா…? உள்ள வா..”

“இல்லம்மா… நிச்சயம் உள்ளதான் இருக்கான்..எனக்கு தெரியும்…!”

“நாளைக்கு வருவான்.. பாக்கலாம்..இப்போ உள்ள வா…! அடுப்புல தீயற வாசன.. சீக்கிரமா வந்து சேரு…!”

***

தொப்பென்று ஏதோ கிணற்றுக்குள் விழுந்த சப்தம்..இன்றைக்கு சற்று பலமாகவே…!

கிணத்தடியில் வாளித்தண்ணீர் இறைத்தது இறைத்தபடி….!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *