அந்த ஒரு நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 27, 2023
பார்வையிட்டோர்: 2,262 
 
 

“லல்லி இங்கே சற்று வாயேன்!” அந்த கல்யாண வீட்டில் சற்றைக்குகொருதரம், யாராவது எங்கிருந்தாவது அந்தப் பெண் லலிதாவை எதற்காகவாவது கூப்பிட்டு கொண்டிருந்தார்கள்.

நேற்று சாயந்திரம் கூட அவள் யார் என்பது யாருக்கும் தெரியாது. கல்யாணத்தன்று விடியற்காலை நாலு மணிக்கு வரும் ஒரு வண்டியில் வந்த அவள் சம்மந்தி வீட்டை சேர்ந்தவள். அவர்களுக்கு தூரத்து உறவு. கால் மணி பழகியதற்குள் பெண் வீட்டாரிடம் நன்றாக ஒட்டிக் கொண்டுவிட்டாள்.

குறுகுறுவென்ற முகம் – சரளமான பேச்சு – ஒட்டி பழகும் பண்பு. எல்லாவற்றிற்கும் சிகரமாக யாரையும் பணிய வைக்கும் குரல்!.

“படிச்சு உத்தியோகம் பண்றவளோல்லியோ அதான் அந்த கம்பீரம்.”

“டவுன்கள்ளே இப்படி இல்லாத போனா, கொண்டே போயிடுவான்கள்.”

“இப்படி கலகலன்னு இருக்கிறதுதான் லட்சுமீகரம்.”

பலர் பலவிதமாக அபிப்ராயம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அது ஒரு கிராமம். இந்த அறுபத்தி ஐந்திலும் கூட.. படித்த பெண்கள் என்றால் அடுத்த ஊர் ஹைர் எலிமெண்டரி ஸ்கூலின் உயர்ந்த வகுப்பான எட்டாவது தான். அதற்குமேல் அந்த ஊரில் ‘பெண்கல்வி’ முன்னேறவில்லை.

உத்தியோகம் ‘மூச்’. பேசவே கூடாது!  

அது அவர்களுக்கு அவசியமும் இல்லை. அவர்களது அந்தஸ்து அதற்கு இடமும் கொடுக்காது.

“ஏண்டி பெண்ணே உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா.” நீட்டி முழக்கிக் கொண்டு ஆரம்பித்த ஒரு பாட்டி கழுத்தை கவனித்துவிட்டு “பின்னே ஏன் உன் புருஷன் வல்லை?” என்று தூண்டினாள்.

“அவா ஒரு மாதிரி மாமி. உங்காத்து தூரத்து உறவு கல்யாணத்துக்கு நான் வரலைன்னா மோசமோனுட்டா. அதைச் சொன்னா இவளுக்குக் கோபம் வரும். அதனாலே ஆபீஸ் விஷயமாக பாம்பே போயிட்டானு சொல்லிட்டேன். ஏனோ உங்களைப் பார்த்தா நிஜத்தை சொல்லலாம்னு தோணித்து.  நான் வரேன் மாமி. வேலையிருக்கு.”

 மெதுவான குரலில் சொல்லிவிட்டு மறைந்து விட்டாள்.

 மாமி… மாமி… என அழைக்கப்பட்ட அந்த பாட்டி ‘இதேதுடியம்மா!’ என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே நின்று கொண்டிருந்தாள்.

“மாப்பிள்ளை சார்…” என் தங்கை சரசா, கிராமத்து பொண்ணு – வெகுளி. உங்க ‘மதுரை’ தடபுடலெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சி அவ கிட்ட காட்டுங்கோ. இப்பவே ஆரம்பிச்சா மெரண்டு போயிடுவா‌. ‘ஆமாம்’ உஷார்.  மூக்கில் ஒரு விரலை வைத்து குழந்தையை பயமுறுத்தும் பாணியில் அவள் அபிநயம் பிடித்தபோது கூட்டமே அசந்து போய்விட்டது.

“சரிதாண்டி – பெரிய்…..ய  மனுஷி மாதிரி, வாய மூடிண்டிரு. சின்ன வயசிலேயே அடிச்சா அழத் தெரியாது. இப்ப வாயடிக்கறதைப் பாரு! உன் புருஷன் வந்திருந்தா கவனிக்கச் சொல்லுவேன். அவன் தான் வரலையே!” என்றாள் மாப்பிள்ளையின் தாயார் காமாட்சியம்மாள்.

“அவன் இவகிட்ட மாட்டிண்டு என்ன பாடுபடறானோ!” மனைவிக்கு ஒத்துப் பாடினார் சுப்பையர்.

“உங்க மாதிரியா…!” என்று கேட்டு விட்டு ஓடியே விட்டாள் லலிதா.

‘கொல்”லென்று சிரிப்பொலி! கல்யாணச் சடங்குகள் ஒவ்வொன்றாக நடந்துகொண்டிருந்தன.

பரபரவென்று இங்குமங்கும் ஓடினாள்.

ஒரு பெரிய ‘ஜக்’கில் சூடாக காப்பி கொண்டு வந்தாள். “சம்பந்திக்காரா ! கோவிச்சுக்கப்படாது. எவ்வளவு முன்ஜாக்கிரதையா சொல்லி வெச்சிருந்தும் கூட இப்பத்தான் பால் வந்தது… அதனால் கொஞ்சம் லேட்.. மன்னிக்கணும்.”

ஒவ்வொருவருக்கும் ஊற்றிக் கொடுத்துக் கொண்டே சொன்னாள்.

மணி ஆறு கூட ஆகவில்லை. பலபலவென்று இனித்தான் விடியப் போகிறது. ஒரு குழந்தை அரைகுறைத் தூக்கத்தில் எழுந்து அழுதபடியே வந்தது…

காப்பி ஜக்கை அப்படியே வைத்துவிட்டு அந்த குழந்தையிடம் ஓடிப்போய் – “சமத்தோல்வியோ, அழக்கூடாது. இந்தா – இங்க வா காபி சாப்பிடு. மூஞ்சி துடைச்சு… தலை பின்னி… பூ வச்சு… புதுப்பாவாடை, சொக்கா போட்டுக்கணுமே! ஊம்… சமத்தா வரணும். இப்ப ‘டும் டும்’ கொட்ட போறது.”….. பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவளைக் கொல்லைப்புறம் அழைத்துப் போய் வந்தாள்.

“ஏண்டி உன்னை எங்கெல்லாம் தேடறது. அதுக்குள்ளே ஏன் எழுந்தேயாம்?” கேட்டுக்கொண்டே தாயார்க்காரி வந்தாள்.

அவள் சம்பந்திக்காராளுக்கு கிட்டத்து உறவுதான். ஆனாலும் ‘உம்’மென்று இருந்தாள். லலிதாவைப் பார்த்து ஆத்திரம்.  குழந்தையை வெடுக்கென்று பிடுங்கினாற் போல் அழைத்துக் கொண்டு போனாள் பட்டு என்ற அந்தத் தாய்.

அவளை ஒன்னும் பண்ணாதங்கோ.  இதோ இந்த வேலையைப் பாத்துட்டு நானே வேணும்னா வந்து பின்னி விடறேன்.”

“பாப்பா சமத்தா இரு வரேன்”. ஒன்றையும் கவனிக்காதது போலவே சொன்னாள்.

அது லலியை பார்த்து சிரித்தது.

“சந்துரு இங்கே வாயேன். விடுதியகத்துக்குப் போய் ‘பச்சை ஹாண்ட்பேக்’ ஒண்ணு இருக்கு. அதை சித்தே போய் எடுத்துண்டு வரயா? ப்ளீஸ்!”  கெஞ்சிக் கொண்டே கேட்கும்போது எந்த ஆண்பிள்ளையால்தான் மறுக்க முடியும்.

இவ்வளவு வேலைகளுக்கு இடையில், எப்போ போனாளோ, எப்போ வந்தாளோ, குளித்தாயிற்று!  உடைமாற்றிக்கண்டு அப்சரஸ் போல காக்ஷியளித்தாள்.

சமையற்கட்டில் அவள் குரல்! “இதோ பாருங்கோ, நல்ல சூடா இந்தப் பாத்திரத்தில் இட்லி எடுத்து வையுங்கோ. நீங்க ஒவ்வொண்ணா கவனிக்கிறதுக்குள்ள இங்கே முகூர்த்தம் ஆரமிச்சுடும். எல்லாரும் வந்துடுவா… நான் போய் விடுதியாத்திலேயே பரிமாறிடறேன். ஒத்தாசைக்கு யாரோ ஒருத்தர் வந்தா போதும்…!”

“அது சரிதான்ம்மா…  இப்ப விட்டா பிறகு யார் சாப்ட்டா இல்லே  …ன்னு தெரியாம போயிடும். சரியான யோசனை.” குணராமய்யர்தான் அதை ஆமோதித்து கொண்டிருந்தார்.  தன் வீட்டுப் பொறுப்பை இப்படி மிக அக்கறையுடன் கவனிக்க ஒருத்தி வந்தது கண்டு மனம் பூரித்திருந்தார் அவர்.

கிராமத்து மேளக்காரர் ஜமாய்த்து தள்ளிக் கொண்டிருந்தார். முகூர்த்தம் நெருங்கிக்கொண்டிருந்ததை அங்கு சேர்ந்து கொண்டிருக்கும் கூட்டம் அறிவித்துக் கொண்டிருந்தது.

இடம் கிடைக்காமல் சுவரோரமாக நின்றிருக்கும் பையனை அழைத்தாள்.

“நீங்க இந்த ஊர் தானே? சித்தே எனக்கு ஒரு உபகாரம் பண்ணனும்.”

“சொல்லுங்கோ!” வாயெல்லாம் பல்லாகத் தயாரானான்.

அடுத்த நிமிஷம் ஒரு ‘ஜக்’ நிறைய காபியுடன் வந்தாள்.

“இதை இங்கே வரவா எல்லாருக்கும் கொடுங்கோ. தீர்ந்துபோனா உள்ளே போய் வாங்கிண்டு வந்துடுங்கோ. உங்களுக்கெல்லாம் சிரமம் கொடுக்கிறேன்…” நகர்ந்தாள்.

“பத்மா! பத்மா!!” என்று கூப்பிட்டுக்கொண்டே விடுதியகத்துக்குள் ஓடினாள்…  ஒரே நிசப்தம்.  எல்லாரும் முகூர்த்த வீட்டுக்கு வந்திருந்தார்கள்.

அறைகள் திறந்தும், மூடியும், பூட்டாமல் இருந்தது. கல்யாண வீட்டிற்கே ஏற்ற மணம்.! அலங்கோலம்!”

“நன்னாத்தான் இருக்கு?  இப்படியா திறந்தது திறந்தபடி போடறது? காமாட்சி மாமிக்கு எப்பவும் எதுவும் அலட்சியம்தான்! ஈரத்துணியை இப்படி சுருணை மாதிரி ‘ஹாண்ட்பேக்’ மேலே போட்டா என்னத்துக்கு ஆகும்…”

படார் படார் என்ற சத்தம்… கதவுகளை மூடுவது. பெட்டிகளை நகர்த்துவது – துணியை உதறி கொடியில் போடுவது! வாயும் கையும் என்பார்களே! அது அவளுக்குத்தான் தகுமோ!! பத்து நிமிஷத்தில் அந்த அறையையே சீராகி ஆக்கி விட்டாள்.

வெளியே வரும்போது வாசலில் மட்டும் ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான்.

“நீ யாரப்பா…?”

“ஐய்யா இருக்கச் சொல்லியிருக்காக.  எல்லாரும் முகூர்த்தத்திற்கு வந்துட்டாங்களில்லே……. அதனாலே…”

“சரி இங்கேயே இரு. வெளி மனுஷா யாரையும் ஆள் தெரியாம உள்ளே விட்டுடாதே…என்ன? ஊம்.”

“சரிங்க..” அவன் பணிவுடன் பதிலளித்தான்.

வாசல் கதவை மூடி தாழ்ப்பாள் போட்டாள்.

“நல்லாத்தான் இருக்கு இப்ப மட்டும் சமயத்துக்கு நான் பத்மாவை தேடிக் கொண்டு போயிருக்காத போனா எல்லாம் அப்படியே கடக்கும். எவனாவது போய் ஏதாவது… காணம்னா களேபரம்தான்! மொதல் காரியமா, “சாவியைக் குடுங்கோ வாசல் கதவையே பூட்டிட்டு வரேன்.” காமாட்சி மாமியிடம் சொல்லி கொண்டடிருந்தாள்.

“பத்மா… பத்மா..”  நீ இங்கேயா இருக்கே? இருவரும் கொல்லை நடைப் பக்கம் போய் தணிவான குரலில் பேசிவிட்டு காலம்காலமாகப் பழகிய தோழிகள் போல் கலகலவென்று சிரித்துக் கொண்டே வந்தார்கள்.

“கெட்டி மேளம் கெட்டி மேளம்!!”

மாங்கல்ய தாரணம் நடந்துகொண்டிருந்தது.

லலிதா நின்ற இடத்தில் நிற்கவில்லை.  ஒரே பரபரப்புடன் பற்பல காரியங்களுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டிருந்தாள்.

‘சந்தனம்… சர்க்கரை… தாம்பூலம்..!’

இரண்டு மூன்று பேர்களை சேர்த்துக் கொண்டு, பெண்கள் பகுதியில் எல்லோருக்கும் வழங்கிக் கொண்டு இருந்தாள்.

எல்லோருடனும் சகஜமாகக்  குழையும் முகபாவம்.

“ஏண்டி நீ ஈஸ்வரி தங்கை இல்லே?.. உன் பேரு……. சுதா…… தானே? நீங்கள்ளாம் இந்த ஊர்லேயே இருக்கேள்?” யாரோ ஒரு பெண்ணைப் பார்த்துக் கேட்டாள்.

“ஆமாம் லலிக்கா… பக்கத்து ஊரிலேயே இருக்கோம். அக்கா இங்கே இல்லை. கல்யாணம் ஆயி பட்டணம் போயாச்சு..”

“அப்படியா! அம்மா வந்து இருக்காளா?”

“இல்லேக்கா. அம்மா ஆத்திலேயில்லே…!” இழுத்தாள்.

“ சரி. போறப்போ சொல்லிட்டுப் போ. நானும் உன் கூட வரேன்… மறந்துடாதே…”

தொடர்ந்து ஒருவரையும் விடாமல் பார்த்துப் பார்த்து தாம்பூலம் தந்து கொண்டிருந்தாள்.

முகூர்த்தத்துக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக கல்யாண காரர்களிடம் விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள்.

மாப்பிள்ளை – பெண் யாரும் இவள் ‘கோட்டா’வுக்குத் தப்பவில்லை. யாரையும் புண்படுத்தாத ஒரு தமாஷ் பேச்சு.

ஆசீர்வாதம் ஆரம்பமாகப் போகிறது.

“மாமி நான் இந்தப் பொண்ணுடன் ‘இவாம்’ வரையிலும் போயிட்டு வரேன். இவ என் சினேகிதியோட தங்கை முந்தி ‘மெட்ராஸ்லேயே’ இருந்தப்ப பழக்கம். இந்தாங்கோ இதை பெண்ணுக்கும் பிள்ளைக்கும் ‘ஓதி’யிட்டுடுங்கோ..”  இரண்டு புத்தம் புது பத்து ரூபாய் நோட்டுகளை டம்பப் பையிலிருந்து எடுத்து காமாட்சி இடம் தந்து கொண்டே சொன்னாள்.

“என்ன பெண்ணோடியம்மா நீ…  அதுக்குள்ளே என்னடீ அவசரம். சித்தே இருந்துட்டு மத்தியானமாப் போயேன். சாப்பாடும் ஆயிடும்! நின்ன இடத்திலே நிக்காம இப்படியா பரப்பா..?”

“இல்லே மாமி. இப்ப போகாட்டா போவே முடியாது. ஒரு எட்டுல வந்துடறேன். அவளையும் இருக்க சொல்லலாம்னா அவ அம்மாவும் ‘ஆத்திலே’யில்லையாம். நானும் சாயந்தரம் ஊர் போகணும் மாமி. நாளைக்கு ‘அவா’ வந்திடுவா..”

“சரி உன் இஷ்டப்படி செய்.  இந்த மட்டும் தூரத்து ஒறவுதானே வராம இருந்துடாம என்னை மதிச்சி, வந்தியே..அதுவே பெருசு.”

“இவளை ஏழெட்டு வயசிலே பார்த்தது. அப்புறம் அவா மெட்ராஸோட போயிட்டா. இப்பதான் இவளை பார்க்கறேன். அப்ப வெறும் மசமசப்பு. பேசவே மாட்டா.  இப்ப பாருங்கோ வாயடிக்கிறதை!”  பக்கத்தில் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள் காமாட்சி மாமி.

விடுதியகத்தில் ஒரே களேபரம். மாப்பிள்ளையின் சூட்கேசுக்குள் சாவிக்கொத்தை வைத்து யாரோ மூன்று பூட்டையும் அமுக்கிவிட்டார்கள்! சாவிக்கொத்துச் சங்கிலியின் ஒரு சிறு முனை, தான் உள்ளே அடைபட்டிருப்பதை அறிவித்துக் கொண்டிருந்தது.

இழுத்தாலும் வராது. ஒரே அடைசல்.

“அதற்கு இப்ப என்ன அவசரமாம். மெதுவா கவனிக்கலாம். சாவியாவது இருக்கே. கன்னாபின்னாவென்று கம்பி போட்டு திறந்து பாழ் பண்ணிடாதங்கோ, புத்தம் புது சூட்கேஸ்! விசாரிச்சா மறு சாவி கிடக்யும்.”  தன் பையை எடுக்க வந்த லலிதா பொதுவான யோசனை ஒன்றை வெளியிட்டபடி வெளியே வந்துவிட்டாள்.

இவளை யார் கேட்டா? முந்திரிக்கொட்டை மாதிரி எதற்கெடுத்தாலும்…..”  சொன்னது பட்டுதான். அவளுக்கு இவள் கலகலப்பும், எல்லோரிடமும் ஒட்டிக்கொள்ளும் குணமும் கண்டு பொறாமை.

லலிதாவுக்கு இதெல்லாம் ‘டோன்ட் கேர்’. “ஏண்டி..! இவ்வளவு வம்பு பேசறே, இப்படியா ஈரத் துணிகளை அடைச்சு வக்யறது?” லலிதாவையே யாரோ கேட்டார்கள்.

“நானில்லை மாமி.. அவா பைனு நினைச்சு யார் துணியோ இதிலே அடச்சிருக்கா.  துணிகளை உதறி ஒரு கதவின் மேல் அப்போதைக்கு போட்டாள்.

“ஹேண்ட் பேக் வேணுமின்னா நீயே வச்சுக்கோ.” சுதாவிடம் தந்தாள்.

“வேண்டாம்க்கா..”

“என்னடீ வேண்டாம்! வச்சுக்கோ..!

“எனக்கு இந்த சின்ன பை போதும். ரெண்டு புடவை தானே!” அதட்டலாக ஆரம்பித்து பரிவாக முடித்தாள். அவளிடமிருந்த தேங்காய்ப் பை உள்பட எல்லாவற்றையும் ‘ஹாண்ட் பாக்’கில் போட்டு அவளிடம் தந்தாயிற்று.  ‘இவாத்து வரையிலும் போயிட்டு வரேன்!” பொதுவாக ஒரு குரல் கொடுத்துவிட்டு ஆவலுடன் தெருவில் நடந்தாள்.

“என்னக்கா, எங்க கூட வராம ஸ்டேஷனுக்கு போறேள்?”

“நீ போ. வெய்யிலாயிடும். நான் டிக்கட் ரிசர்வ் பண்ணிப்பிட்டு உங்க ஊருக்கு வரேன்.”

அவளுக்கு அதைப்பற்றி என்ன தெரியும் சும்மா நின்றாள்.

“எங்க வீடு உங்களுக்கு தெரியா…தேக்கா..”

“கிராமம் தானேடி கேட்டா சொல்றா! போன்னா போயேன்..! எரிச்சலுடன் ஆரம்பித்து… “சமத்தா போ!  நானும் உன் பின்னாடியே வந்துடறேன் ஊ..ம்ம்” பரிவாக முடித்தாள்.

அவள் போனதும், அப்போதுதான் வரப்போகும் ஒரு ‘லோக்கல்’ வண்டிக்கு ‘த்ரூ டிக்கெட்’ ‘மெட்ராசுக்கு’க் கேட்டாள்.

அவர் தந்த சில்லரையுடன் பிளாட்பாரத்தில் கால் வைக்கவும் வந்து கொண்டிருக்கும் வண்டி வந்து நிற்கவும்……. சொல்லி வைத்தார் போல் இருந்தது.

அவள் ஏறியது ஒரு பெண்கள் பெட்டி அதில் யாருமே இல்லை.

அப்பாடா! ஒரு காரியம் ஆச்சு… நிம்மதிப் பெருமூச்சுடன் வண்டிக்குள்ளே உட்கார்ந்து கதவையும் சாத்திக் கொண்டாள்.

வண்டி கிளம்பி விட்டது.

மறுபடியும் அந்தக் கடிதத்தை படிக்க வேண்டும் போல் தோன்றியது.

            “அன்புள்ள லலிதாவுக்கு ஆசீர்வாதம். அவர் வராவிட்டால் நீயாவது உடனே புறப்பட்டு வா. உங்க அப்பா அம்மா இருந்திருந்தா இது நடக்கிற விதமே வேறே. எல்லாம் ஏதோ மாறிப் போயிற்று. மறுபடியும் பத்திரிகை அனுப்பி இருக்கிறேன். இதையும் கெட்டுப்போக்கிவிடாதே. ரயில் ஸ்டேஷனுக்கு வெகு பக்கத்தில்தான் ஊர்.  உன்னை எப்பவோ நான்கு வயது சிறுமியாக இருந்த போது பார்த்தது. உன்னை பார்க்கணும் போல இருக்கு. கல்யாணத்தை உத்தேசித்தும் இதற்காகவும் வா. மற்றவை நேரில்,

 ஆசீர்வாதம்

காமாட்சி

39B க்கு பதில் 390 ல் தபால்காரன் கடிதத்தை சேர்க்க, தனக்கு அடித்தது சான்ஸ்! பாவம் எதிர் சரக்கு லலிதா!! தவறாமல் ஆபீஸ் போய்க கொண்டு வந்திருப்பாள். அவள் ஒரு வாயில்லாப் பூச்சி’

“கடிதம் கிடைத்ததா பெரிது! முன் கட்டு குழந்தை மூலம் எவ்வளவு தகவல் சேகரித்திருக்கிறாள். அந்த லலிதா லேசில் பேச்சுக் கொடுத்தாளா? அவளுக்குத்தான் எவ்வளவு அகம்பாவம்!’

எப்படியோ காரியமாகிவிட்டது. ‘சுமார் 5 பவுன் தேறும், பழைய காலத்து நகை. முன்னூறு ரூபாய் பணம்….’

வண்டி மறுபடியும் ஓர் ஸ்டேஷனில் நிற்கப் போகும் அறிகுறி. எதற்கும் இருக்கட்டும் என்று இருந்த அந்தக் கடிதத்தைக் கிழித்து வெளியே போட்டாள். காற்றில் பறந்தது. வண்டியுடன் இவள் யோசனையும் நகர்ந்தது.

‘போனவுடன் முதல் காரியம் சங்கிலியையும் பணம் பண்ண வேண்டும். வீட்டு வாடகை பாக்கிகள் தந்து நாளை ராத்திரியே பாம்பே ரயில் ஏறியானதும் 500 ரூபாய் டிபாசிட் கட்டி அந்த வேலையை ஒப்புக்கொண்டுவிடணும்.’

சிந்தனைகளுக்கு இடையே சிரிப்பும் வந்தது. சாவியை உள்ளே இருப்பது தெரியும்படி பூட்டி விட்டதால், பெட்டியைத் திறக்க உடனடியாக அவசரப்பட மாட்டார்கள்.

‘இனி ஒழுங்காக பிழைக்க வேண்டும். இதோடு நாலு தடவை ஆயிற்று. இனி ‘சரோஜா’வாகவே இருக்கவேண்டும்.’

ஆம் அவள் இயற்பெயர் சரோ என்னும் சரோஜா.

நல்லவேளை அந்த சிறுமி ‘சுதா’ சரோ’னு கூப்பிட்டு சந்தேகத்தை கிளப்பாமல் இருந்தாள்.’

‘எப்படியோ இந்தத் தடவை சற்று அதிகம்தான். இதற்கு முன் இவ்வளவு யோகம் அடித்ததே இல்லை. நாமென்ன எல்லாவற்றையுமா எடுத்துக்கொண்டோம்!  முப்பது ‘பத்து’தானே! இனியும் பாக்கி நாலு நூறு ரூபாய் நோட்டு இருந்ததே! அது என்ன பாடு பட்ட பணமோ? சம்பந்திக்காராள் சொத்துதானே..! அவளும் ஏழை பாழையில்லையே!’

நியாயத்தை – அநியாயத்திற்குள் தேடிக்கொண்டிருந்தாள். பல நாள் திருடன்…  இல்லை திருடி, ஒருநாள்… இனி இந்த வேலையும் ஆகாது,”

முடிவாகவே தீர்மானித்துக் கொண்டுவிட்டாள்.

– குடியரசு இதழ் – 17-01-1966

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *