ராஜேஸ் சிறு வயதிலிருந்தே கொஞ்சம் அசமந்தம். இதை மற்றவர்கள் சொல்ல மாட்டார்கள். அவன் அம்மா அவனை திட்டும்போது இப்படித்தான் திட்டுகிறார்கள்.
அதற்காக அவன் ஒன்றும் தெரியாதவனல்ல, படிப்பில் சராசரிக்கும் மேலே, பழகுவதற்கும் நல்ல மாதிரியானவன், அப்படி இருக்கும்போது அவன் அம்மா அப்படி ஏன் கூப்பிடுகிறார்கள். அம்மா அதை அவனிடம் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் சொல்லியிருக்கவேண்டும்.
அவனுக்கு வரும் சந்தேகங்களுக்கும், கவலைகளுக்கும் காரணமே கண்டு பிடிக்க முடியாது. சிறு வயதில் அப்படித்தான் கவலையில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டு படியில் உட்கார்ந்திருந்தான். அவன் வீடு தாண்டி பக்கத்து தெருதான் ராஜேசின் பக்கத்து வீட்டுக்காரரின் குட்டிப்பெண் அவன் வீட்டு வழியாகத்தான் பள்ளிக்கு செல்வாள். அவள் இவன் வீட்டை தாண்டி செல்லும்போது இவன் கவலையில் உட்கார்ந்திருப்பதை பார்த்தவள் டேய் ராஜேஸ் ஸ்கூலுக்கு வரலையா? நீ போ, நான் அப்புறமா வாறேன், அவளுக்கு காரணம் புரியவில்லை, இப்ப என் கூட வர்றியா இல்லையா? இவர்களின் வாக்குவாதத்தை கேட்டு அப்பொழுதுதான் அவன் அம்மா வெளியே வந்தவள் இவன் ஸ்கூலுக்கு போகாமல் கவலையில் படியில் உட்கார்ந்திருப்பதை கண்டு ஏண்டா இப்படி கவலையா படியில உட்கார்ந்துட்டே? அம்மாவை பார்த்ததும் அவன் கவலை அதிகமாகி விட்டது, அம்மா உலகம் சீக்கிரமா அழிஞ்சு போயிடும்னு நேத்து ஒரு இடத்துல சொன்னாங்கம்மா, அப்ப நானு, பாப்பா, நீ அப்பா எல்லாம் அழிஞ்சு போயிடுவமா? இதற்கு என்ன பதில் சொல்வது என்று அம்மா யோசிக்கும்போது, சட்டென அந்த குட்டிப்பெண் நான் கூட கேட்டேன், தப்பிக்கறதுக்கு டீச்சர் வழி சொல்றாங்கலாமா? வா என்று அவனை அழைக்க அவன் முகம் பிரகாசமாகி நிசமாவா அவளை பின் தொடர்ந்தான்.
அதற்கு பின்னால் டீச்சர் கையில் பிரம்புடன் நிற்பதை பார்த்தவன் மேற்கொண்டு அவன் சந்தேகத்தை கேட்கவில்லை. மாலையில் அதை மறந்து விட்டான். திடீரென ஒரு நாள் நாம் மட்டும் ஏன் இரண்டு காலில் நடக்கிறோம், மிருகங்கள் மட்டும் நடப்பதற்கு நான்கு கால்களை உபயோகப்படுத்துகிறது என்ற கேள்வியை கேட்டான். அறிவியல் பூர்வமான பதிலை அப்பொழுது அவன் அம்மா தராவிட்டாலும், தனக்கு தெரியாத கேள்வியை கேட்டு விட்டதால் கூட அவனை ‘அசமஞ்சம்’ என்று சொல்லியிருக்கலாம். அவன் அப்பாவிடம் அந்த கேள்வியை கேட்பதில்லை காரணம், திருப்பி அவர் இவனிடம் அதற்கு பதிலாக வேறொரு கேள்வியை கேட்டு பயமுறுத்தி விடுவார். இப்படித்தான் ஒரு முறை அப்பாவிடம் வானம் ஏன் நீல கலரில் இருக்கிறது? என்ற அறிவு பூர்வமான கேள்வியை வீச அவன் அப்பாவுக்கு அதற்கான விடை தெரிந்ததோ இல்லயோ சட்டென்று நீ ஹோம் வொர்க் பண்ணிட்டியா? இந்த கேள்வியை வீச அவன் அதிலிருந்து அவரிடம் அதிகமாக சந்தேகங்களை கேட்பதில்லை.
எப்படியோ அவனும் ஒரு வழியாக படித்து பட்டதாரியாகி விட்டான்.. சரி ஒரு வேலை தேட ஆரம்பித்தவன் எல்லா இளைஞர்களை போல ஒரு கட்டத்தில் ஓய்ந்து உட்கார்ந்து விட்டான். அவன் சகோதரியின் தோழி ஒரு நாள் இவன் வீட்டுக்கு சகோதரியை காண வந்தவள் இவன் மோட்டு வளையை பார்த்து உட்கார்ந்திருப்பதை கண்டு உங்கண்ணனுக்கு என்னாச்சு? என்றாள் கவலையுடன். அதை ஏன் கேட்கறே?
அவனோட திறமைக்கு இந்த ஊர்ல யாரும் வேலை கொடுக்க மாட்டேனெங்கிறார்களாம்.
அங்க இங்கன்னு வேலை பாக்கறதை விட சொந்தமா ஏதாவது செஞ்சா என்னவாம்?
அதானே..! தங்கை அண்ணனை பார்க்க, அவன் சடாரென ஆமா செய்யலாமே, இவனுக்கு கொஞ்சம் செடி கொடிகளின் மீது ஆர்வம் உண்டு, அவன் அம்மாவுக்கும் உண்டு. நேராக அம்மாவிடம் போனான்.
அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்று தெரியாது, வீட்டின் முன்புறம், நிறைய இடமிருந்தது, அவசர அவசரமாய் கம்பி வேலி போடப்பட்டு கொஞ்ச இடத்தில் நிழலுக்கு ஒரு ஷெட்டும் போடப்பட்டது. அடுத்த வாரத்தில் நிறைய பூச்செடிகள்,மற்றும் பழ மரங்களின் நாற்றுக்கள் ஒரு வேனில் வந்து இறங்கின.
வெளியே அம்மாவின் பெயரில் ஒரு நாற்றுப்பண்ணை போர்டு போட்டான். இவர்கள் வசித்து வந்த இடம் ஒரு நகரமாக வளர்ந்து கொண்டிருந்தது. அதனால் இரண்டு மூன்று நாட்கள் “டல்” அடித்த வியாபாரம் மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்தது.
ஒரு மாதம் ஓடியிருக்கும், அவன் தங்கையின் நண்பி இவன் வீட்டிற்கு வந்தாள். சும்மா வீட்டுல செடியை வச்சுகிட்டு உட்கார்ந்தா போதுமா? நிறை வீடுகளுக்கு போய் பூ செடி வைக்கவும், தோட்டம் போடவும் ஏற்பாடு செஞ்சு தர்றேன்னு விளம்பரபடுத்தனும்.
அதானே…! அவன் தங்கை அவனை பார்க்க, ஆமா இது கூட நல்லா ஐடியாவா இருக்கே,
முடிவு செய்தவன், விளம்பர பத்திரிக்கை அடிக்க அச்சகத்தை நோக்கி சென்றான்.
அடுத்த வாரமே மீண்டும் வந்த அவன் தங்கையின் தோழி விளம்பரம் மட்டும் கொடுத்துட்டு வீட்டுல உட்கார்ந்தா எப்படி, நான் ஒரு வீட்டுல எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் “கீரீன் டெக்ரேசன் பண்ணி தருவாருன்னு சொல்லியிருக்கேன், அங்க போய் பாக்க சொல்லு, அவன் தங்கை அதானே…! அண்ணனை பார்க்க அவன் உடனே அட்ரசை கொடுக்க சொன்னான்.
போய் பார்க்க அது அவனின் தங்கை தோழி வீடாக இருந்தது. வீடு நல்ல இட வசதியுடன், பங்களா டைப்பில் இரண்டு மாடியாக இருந்தது.அவன் அப்பாவும், அம்மாவும் அவனை வரவேற்று தங்களுடைய வீட்டை சுற்றி காண்பித்து எங்கெங்கு செடிகள் வைத்தால் அழகாக இருக்கும் என இவனையே ஏற்பாடு செய்ய சொன்னார்கள். அவ்வளவுதான் இவனுக்கு உற்சாக பிய்த்துக்கொண்டு போனது. மறு நாள் இரண்டு ஆட்களை அழைத்துக்கொண்டு போனான். சுற்றி வர சின்ன தோட்டம் போட்டு அங்கங்கு பூசெடிகள் நட்டு வைத்தான். சின்ன பூந்தொட்டிகளை காம்பவுண்டு வாசலில் இருந்து வீட்டு படி வரை அமைத்து கொடுத்தான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் அந்த வீட்டை பச்சை மயமாக்கினான்.
அடுத்த வாரமே அவர்கள் பக்கத்து பங்களாவில் இருந்து அழைப்பு வர, இந்த இரண்டு மூன்று வருடத்தில் இவன் பிரபல பூசெடி அலங்கார நிபுணராகி விட்டான். அவன் அம்மாவும், அப்பாவும் இவனுக்கும், தங்கைக்கும் கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள்.
இவன் தங்கையை பார்க்க இவன் தோழி வீட்டுக்கு வர இவர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து சரி அப்புறம் வர்றேன் என்று திரும்ப எத்தனித்தாள்.
வா வா உள்ளே இவன் அம்மா அவளை எழுந்து வந்து உள்ளே அழைத்து போனாள். ஒண்ணுமில்லை, உன் பிரண்டுக்கும், இவனுக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணனும்னு பேசிகிட்டு இருந்தோம் அவ்வளவுதான்.
அப்படியா சமாச்சாரம் உங்களுக்கு தூரத்து சொந்தக்காரங்களோட உறவுக்காரங்க பக்கத்துல இருக்கறாங்க, அவங்களுக்கு உங்களை மாதிரியே பொண்ணும் பையனும் இருக்கறாங்க, அவங்க கூட கல்யாண ஏற்பாட்டுல இருக்கறாங்க, மென்மையாக சொன்னாள்.
அப்படியா அவங்களை போய் பார்க்கிறோம், விலாசம் சொல்லேன், அம்மா அந்த பெண்ணிடம் சொல்ல அந்த பெண் சற்று வெட்கத்துடன் அம்மாவின் காதில் சொன்னாள்.
அம்மா உடனே அதானே..! இத்தனை நாள் இது கூட தெரியாம போச்சே..! வாயில் விரலை வைத்து ஆச்சர்யக்குறியை காட்டி விட்டு தன் கணவனின் காதில் சொல்ல “அதானே” என்று அவரும் ஆச்சர்யப்பட்டுக்கொண்டார்.
வாசகர்களுக்கு முடிவு தெரிந்திருக்கும் என்றாலும் நாமும் சொல்லி விடுவோம். ஒரு நல்ல நாளில் ராஜேசின் தங்கை தோழி கழுத்தில் மாலை மாற்றிக்கொள்ள, அந்த தோழியின் அண்ணன், பெங்களூருவில் பணி செய்து கொண்டிருந்தவனிடமிருந்து ராஜேசின் தங்கை மாலை மாற்றிக்கொண்டாள்.
இப்பொழுது ராஜேஸ் நிறுவனத்தை அவன் மனைவியும், அம்மாவும் பார்த்துக் கொள்ள ராஜேஸ் வெளி ஆர்டர்களை பெற்று மிகவும் பிசியாகி விட்டான். அவன் அப்பாவும் ரிட்டையர்மெண்ட் வாங்கிக்கொண்டு அவன் கூட ஒத்தாசை செய்கிறார்.