கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 10,026 
 
 

“நிறைய எழுத்தாளர்கள் `ஊருக்கு உபதேசம், உனக்கில்லையடீ’ ன்னு சொல்றமாதிரிதான எழுதறாங்க?. ஆனா இவர் அப்படிப்பட்ட எழுத்தாளர் இல்லைய்யா.. இவன் தன் எழுத்தைப் போலவே நிஜத்திலேயும் வாழறவன். சமூகத்தைப் பற்றிய ஒரு பார்வையும், கோபமும், பொறுப்பும் இருக்கிறவன். பாலியலையும், ஆபாசத்தையும் அவன் என்றைக்கும் தொட்டதில்லை தெரியுமா?. மோசமான மனுஷங்க கிட்ட கூட உறைஞ்சி கிடக்கிற நல்லவைகளை அடையாளப் படுத்துகிறவன். நான் யாரைப் பத்தி சொல்றேன்னு தெரியுதா?.”

“ஓஎஸ்! ஜெயகாந்தன்.” —-பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம். அவர் ஜே.கே.பிரியர் இல்லையில்லை வெறியர். ஜேகேயின் ஒவ்வொரு கதையிலும் ஊடே ஓடும் அடிநாதத்தை இனம் பிரித்துக் காட்டி சிலாகிப்பார். நமக்கு வாசிப்பில் அத்தனை ஆழம் காணாது. கதைகளில் வார்த்தை வார்த்தையாக ரசிக்கத்தெரியாது. கதை நல்லாயிருக்கு நல்லாயில்லை. பரவாயில்லை. இந்த மூன்று அளவுக்குள் தான் நம்ம ஞானம். அவருடைய ஷெல்பில் ஜேகே நூல்களைத் தவிர்த்து பாரதியார், பாரதிதாசன், கவிதைகள், மிகைல் ஸோச்சென்கோவின் `எலக்ட்ரீஷியன்’, `எஸ்டீம்டு சிட்டிஸன்’, கார்க்கியின் `தாய்’, ஆண்டன் செகாவ்வின் சிறுகதைகள், லியோ டால்ஸ்டாயின் `போரும் அமைதியும்’ இப்படித்தான் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். நான் அப்படி எதையும் தேர்ந்தெடுத்து படிக்கிற ரகமில்லை. அறிவியல், த்ரில்லர், க்ரைம், சமூகக் கதைகள் இப்படித்தான் படிப்பேன்.. பாலியல்…? ச்சே! அதைத் தொடாதவன் அரை மனுசன் சார்.

அவர்…?கருணா என்னும் கருணாகரன். பிஎஸ்ஸி,பிஎட். அந்த காலத்து நாகேஷ் போன்ற கெச்சலான தோற்றம். நான்…? சேகர்.பிஏ, பிஎட். சராசரிக்கு சற்று குண்டான உடல்வாகு, அதற்கேற்ற உயரம். எங்கோ குடியாத்தம் பக்கம் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவரும், இந்தகோடி செங்கல்பட்டில் பிறந்த நானும் இங்கே இப்போது சேர்ந்து நடந்து கொண்டிருப்பதற்குக் காரணம் ஆசிரியர் பணி. இந்த ஊர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாறு வருடங்களாக வேலை பார்க்கின்ற அரசின் ஏவலாளிகள். பிராப்தம் வாய்க்காததினால் முப்பத்துமூன்றை தாண்டியும் இன்னும் பிரம்மச்சாரிகள். பரஸ்பரம் எங்களை ஈர்த்தது இலக்கியம். ஊரையொட்டி இருந்த கூட்ரோடு வாரவதிதான் எங்களுக்கு பிடிச்ச இடம் .இருட்டும் வரைக்கும் பேச்சு பேச்சுதான். கதை மாந்தர்கள் பற்றி சிலநேரம் நெகிழ்ச்சியுடனும், சில நேரம் காரசாரமாகவும் விவாதம் நடக்கும்.

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் கூடுதல் சோம்பல்.காலை வாயை கொப்பளித்து விட்டு நாயர்கடை டீ, ,குளிக்காமலேயே டிபன், என்று சும்மா படுத்துக் கிடந்தே மதியம் வரைக்கும் அரசியலைப் பேசிப்பேசியே பொழுதை ஓட்டியாச்சி. அதற்கப்புறம் எழுந்து குளிச்சிட்டு கிளம்பி கிட்டு அய்யர் மெஸ்ஸில் மதிய லஞ்ச் முடிச்சிட்டு, கருணாவுக்கு கணையாழியும்,எனக்கு விகடனும் வாங்கிக் கொண்டு அறைக்கு திரும்பிக்கிட்டிருக்கிறோம். கடைவீதியைத் தாண்டினால் சன்னதி தெரு. அதைக்கடந்து இடப்பக்கம் திரும்ப, சொற்பமாய் மனித சஞ்சாரங்களுடன் உளுத்துப் போய், வரிசையாய் பூட்டிக் கிடக்கும் வீடுகளுடன் பராமரிப்பின்றி வெறிச்சோடிக் கிடக்கும் அக்ரஹாரத் தெரு. ஆமாம் கணினியும், உலகமயமாக்கலும் நிறைய குடும்பங்களை பிழைப்புக்காக நகரங்களுக்கும்,, வெளிநாடுகளுக்கும், துரத்தியிருக்கின்றன. அடுத்து சன்னதித் தெருவில் நுழைந்தோம். இந்த தெரு சேற்றில் கால்வைக்காத மேட்டுக் குடிகள் வசிக்கும் பகுதி. வியாபாரிகள் அதிகம். செல்வத்தின் மினுமினுப்பு மாடிகளின் பளிச்களில் தெரிகின்றன.. அந்நேரத்திற்கு வீடுகள்தோரும் பெண்களின் அழுகைக்குரல்கள் தெருவரைக்கும் கேட்கின்றன. வீட்டு பெண்கள் சமையல் வேலையினூடே மவுனமாக கண்ணில் நீர் விட்டுக் கொண்டிருப்பார்கள்— இந்த நேரம் டிவியில் `சந்திரலேகாவோ?, என்கணவன் என் தோழனோ? தெரியவில்லை. தெருவில் நெற்றி நிறைய பட்டைகளுடன் பட்சீஸ்வரர் கோவிலில் வாசிக்கும் வாத்திய கோஷ்டிகள் கோவிலுக்கு போய்க் கொண்டிருக்கின்றனர். நாளைக்கு பிரம்மோற்சவம். கோவில் வாசலில் குருக்கள் கூட்டமும், தொழிலாளிகள் கூட்டமும் சேர்ந்து நாளைய விசேஷத்திற்கான ஏற்பாடுகளில் இருந்தனர். பெரிய பந்தலுக்காக குழி தோண்டிக் கொண்டிருந்தனர்.

“சேகர்! கடவுள் உண்டோ இல்லையோ ஆனால் அந்த வாதங்களுக்குப் பின்னால் உண்டு என்பதை வைத்து இங்கே எவ்வளவு குடும்பங்களின் வாழ்க்கைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன இல்லே?.”—-என்றார் கருணா. ஆமோதித்தேன்..

நீளமான சன்னதி தெருவைத்தாண்டி, அக்ரஹாரத்தெருவின் கோடியில் ஊருக்கு மின்சப்ளை செய்யும் டிரான்ஸ்பார்மர். நிற்கிறது. அதற்கு பின்னால் தனியாக இற்றுப் போன நிலையில் சின்னதான ஒரு ஓட்டு வீடு, வீட்டிற்கு வெளியே எந்நேரமும் அசை போட்டபடி ஒரு பசு கட்டப்பட்டிருக்கும். உள்ளே தாழ்வாரத்தில் அதன் கன்றுகுட்டியை கம்பத்தில் கட்டி போட்டிருப்பார்கள். அதன் எதிரில் ஒருபிடி பச்சை புற்கள். பார்க்கும்போதே தெரியும், அதற்கு தாயின் வறட்டு மடிதான் எப்பவும் கிட்டும் என்று. டிரான்ஸ்பார்மரை நெருங்கும்போதே நாங்கள் பார்த்து விட்டோம். அந்த ஓட்டு வீட்டின் முன்பாக இரண்டு மூன்று பேர் நின்று அதை பார்த்தபடி கிசுகிசுவென்று ரகசியம் பேசிக் கொண்டிருந்தனர். நடுத்தர வயசுப் பெண்கள் இரண்டு பேர் சற்று தூரத்தில் பதட்டமாய் நின்றுக் கொண்டிருந்தார்கள்.என்ன விஷயம்னு தெரியவில்லை. அந்த வீடு வெளிப்பக்கம் பூட்டப் பட்டிருந்தது… தெருப்பக்கம் சன்னல் திறந்திருக்க, உள்ளே ஒரு இளம்பெண் நடுங்கியபடி கதவை திறக்கச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருக்கிறாள்.விட்டு விட்டு ஓவென்று கதறுகிறாள்..

“சேகர்! வெய்ட். சம்திங் ராங்..”— என்னை இழுத்துக் கொண்டு அவர்களிடம் சென்றார். இந்த மனுஷன் எப்பவுமே இப்படித்தான். ஏதாவது விவகாரம்னா நமக்கெதுக்குன்னு ஒதுங்கிப் போகமாட்டார். முன்ன முன்ன அழையாத விருந்தாளியாய் போய் நிற்பார். அங்கிருந்தவர்கள் என்னைப் பார்த்துவிட்டு ரகசியகுரலில் எச்சரித்தார்கள்.

“வாத்தியாரே! உங்களுக்கு வாணாம், இது ஊரு வெவகாரம். தெர்தா? ரெண்டுபேரும் கம்னு பூடுங்க..” —கருணா முந்திக் கொண்டு “என்னான்னு சொல்லுங்க.” ”யோவ்! ஊர்ல வெவகாரம்னா நீ முன்ன முன்ன வந்துட்றீயே, இன்னா? ஆங்!. வாணாம் .இது போண்டா மணி வெவகாரம்யான்னு, சொல்றன். ஏடிச்சி ஏடிச்சி கேக்கற?. அவனுது ஒரு அடிக்கு தாங்கமாட்டீங்க., போய்க்கிட்டே இருங்க..”

போண்டா மணி—. அவன் பேரைச் சொன்னால் யாரும் கிட்ட வரமாட்டாங்க. இந்த பக்கத்துக்கு பெரிய ரவுடி. அடியாட்கள் பலம் வேறு. அடிதடி,வெட்டு, குத்துன்னு பலதடவை ஜெயிலுக்கு போனவன். ஒன்றிரண்டு தடவை அவன் யாரையாவது அடிக்கும்போது நாங்கள் பார்த்திருக்கிறோம்.. பேசறதுக்கு முன்னே தம்திம்னு அடி விழும்.. முரட்டுத்தனமாய் அடிப்பான். சவர ப்ளேடை ஆட்காட்டி விரலுக்கும், நடுவிரலுக்கும் இடையில் வெச்சிக்கிட்டு என்னா லாவகமாக கையாளுகிறான்?. சிடுக்கா நேரத்தில எதிரிக்கு உடம்பு பூரா டாகா போட்ருவான். ஆறடி உயரம்,கிடா மீசை,பயமுறுத்தும் பார்வை, தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கருப்பு. முகத்தில் எண்ணெய் மினுமினுப்புடன் சுடலைமாடன் மாதிரி இருப்பான். எப்பவும் சிஷ்யகோடிகளுடன் சுற்றியபடி பயமுறுத்துவான். கருணா விடுவதாக இல்லை

‘”அட போயிட்றோம். என்னான்னு சொல்லுங்களேன்.”—ஊர் ஆளு சுற்றுமுற்றும் பார்த்தான்.

“சொன்னா கேக்கமாட்ட. உள்ளே அழுவுறாளே அவ பேரு விசாலம். அவ வூடுதான் இது. அப்பன் எப்பவோ சுடலைக்கு பூட்டான். ஆத்தாக்காரி கூலிவேலைக்கு போறதிலதான் பொழப்பு..வேற நாதியில்லை. இந்தப் பொண்ணு தரித்திரம் புடிச்ச கழுதை. கட்டிக் குடுத்த மறு வருசமே வூட்டுக்காரனை முழுங்கிப்புட்டு வூட்டுக்கு வந்துட்ச்சி. வந்து இப்ப ஏழெட்டு வருசமாச்சி.. அதும் பொழப்புக்குன்னு வூட்ல ஒரு கறவல் மாடு இருக்குது. காலையில நாலு, சாயந்திரம் மூணு லிட்டர் கறக்கும் நான்தான் புதூரிலிருந்து வாங்கிக் குடுத்தேன்..” ”ஐயோ பாவமே. சரி இப்ப இங்க என்னா விஷயம் நடக்குது? ஏன் வெளியில பூட்டு போட்டிருக்கு?..” —அவன் சிரித்தான். “ இன்னா விசயம்?, எல்லாம் பலானது பலானதுதான். விசாலம் பக்கத்தூரு பால்கார ஏழுமலையை மடக்கிப் போட்டுக்கிட்டா. தினசரி பால் எடுக்க வந்தவன் அவ மடியில விழுந்துப்புட்டான். கல்யாணமாயி ரெண்டு பசங்க இருக்குது அவனுக்கு. சனியன்க இப்பல்லாம் இந்த பொட்ட கழுதைங்க எத்த நிதானிச்சி பாக்குதுங்க?. அந்த கம்மனாட்டியும் உள்ளேதான் மாட்டிக்கிணு இருக்கான் ” “ஐயா! புண்ணியமா போவும் நேரா விஷயத்துக்கு வாங்க.” “ இதுங்க கூத்த போண்டா மணி பார்த்துப்புட்டான். அதான் அதுங்க உள்ள இருக்கிறப்ப வெளியே பூட்டு போட்டுப்புட்டான்.”—கருணா என் கையை அழுத்திப் பிடிச்சார். முகம் சிவந்துப் போச்சி. ” பொம்பளைய அசிங்கப் படுத்தறது ஒரு பொழைப்பாய்யா?. என்னா ஜென்மம்யா அவன்?.சரி அந்தாளுக்கு என்னா அம்மாம் அக்கறை?.”—–கருணாவின் குரலில் சீற்றம் இருந்தது. “ஆங்! ஊரு மானம் போவுதுன்னுதான். பெர்தனக்காரங்களை கூட்டியார போயிருக்கான். டியேய்!.இன்னிக்கு பெர்தங்க்காரங்களை கூட்டியாந்து காட்டி ஊரே காரிமூய்றாப்பல பண்றேண்டீன்னு கூச்சல் போட்டுட்டு போயிருக்கான். அவன் வுடமாட்டான். இதுங்களும் ஊருக்கு ஒருகுடிதான?, வந்தேறிங்க. ”—– கருணா என்னை இழுத்துக் கொண்டு விடுவிடுவென்று அந்த வீட்டு ஜன்னல் பக்கம் போனார். எங்களைப் பார்த்ததும் அந்தப் பொண்ணு தேம்பித்தேம்பி அழுகிறாள். அவமானம் தாங்காமல் கூனிக்குறுகி முழங்காலில் முகத்தைப் பொத்திக் கொண்டு குலுங்குகிறாள்.. எங்களுக்கு ரொம்ப பாவமாக இருந்தது.பால்காரன் இருக்குமிடம் தெரியவில்லை. கருணா சடக்கென்று என் கையை உதறிவிட்டு வேகமாக எதிர்வாடையிலிருந்த சைக்கிள் ஷாப்புக்குப் ஓடினார். போய் ஒரு சுத்தியலை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்.

”.அய்யோ கருணா! இந்த பூஞ்சை உடம்பை வெச்சிக்கிட்டு. என்னா வேலை செய்யறே?”—. ஓடிப்போயி அவர் கையைப் பிடிச்சிக்கிட்டேன். “யோவ்…யோவ்..! வாத்தீ! போண்டா மணியைப் பத்தி தெரிஞ்சிக்காத ஆடாத. கையை காலை எடுத்துடுவான்.. தனியாளு பத்து பேரை அடிப்பான்யா. அவன்கிட்ட வெச்சிக்காத பீஸ் பீஸா பூடுவ..” —கருணா ஒருத்தரையும் பொருட்– படுத்தவில்லை. எல்லோரும் கத்தக் கத்த சுத்தியலால் ஒரே அடி, பூட்டு திறந்துக் கொண்டது. கதவை திறந்தவுடன், பால்கார ஏழுமலை ஆளுங்களை தள்ளி விட்டுட்டு தலைதெறிக்க ஓடினான். உள்ளே அவள் வெறிக்க தூரப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். அடுத்து அவள் தற்கொலைக்கு போயிடுவாளோ என்றிருந்தது.. எப்பா! இந்த வெவகாரம் நமக்கு வேண்டாம்டா சாமீ!. அப்புறம் சாட்சிக்கு நடையா நடக்கணும் என்று பேசியபடியே அங்கிருந்தவர்கள் வேகமாக கலைய ஆரம்பித்தனர். வாய்யா என்றுஎன்னை இழுத்துக் கொண்டு கிளம்பினார். நான் பயத்தில் பேச வாயில்லாமல் நடந்தேன்..உள்ளே கிடுகிடுன்னு ஆடுது. ”சேகர்! போண்டாமணி இங்க வரமாட்டான்னு நெனைக்கிறேன்..”—-எனக்கு எரிச்சல் பிறிட்டது. “ ஏன் நீ பெரிய வஸ்தாதுன்னா?. இல்லே உன் கட்டுமஸ்தான பாடிய பார்த்து பயந்திடுவானா?. என்னா நம்பிக்கைய்யா இது?. .அவன் ஒரு போலீஸ்காரனையே அடிச்சி கையை ஒடைச்சிட்டு ஜெயிலுக்குப் போனவன்.. ஏன்யா இப்படி செஞ்சே?..”

“சேகர்! நான் எதுவும் தப்பு செய்யலப்பா. போண்டா மணி செஞ்சது ஒரு பொண்ணுக்கு பண்ற அநியாயம், தப்பு. அத என்னால பொறுத்துக்க முடியல. பாரபட்சமான உலகம் இது.. ஒரே செயல்தான். ஆனா இதில அசிங்கம் பெண்ணுக்கு மட்டும் தான் ஆணுக்கில்லை. இவளுக்காக இங்க ஒருத்தரும் பேசப் போறதில்லை. பால்காரனுக்காகப் பேச பத்து பேர் என்ன அம்பது பேர் வருவான். ஏன்? சாதி. ஸோ அந்த பொண்ணை எப்படியாவது காப்பாத்தணும்னு தோணுச்சி அதான்.”.

“அட உனக்கும் இங்க இன்னாய்யா சப்போர்ட் இருக்கு?. அவளை மாதிரி நாமளும் அசலூர்ல இருந்து பொழப்புக்காக வந்தவங்க..” ——– கருணா கொஞ்ச நேரம் தலை குனிந்து தீவிர சிந்தனையில் இருந்தார்

“சேகர்! இது என் பிரச்சினை நான் பார்த்துக்கறேன். உன்னை கஷ்டப் படுத்தக் கூடாது.இன்னுங் கொஞ்சநேரத்தில அவன் வந்திடுவான். நீ கெளம்பு. போய் நம்ம ஸ்கூல்ல ரெண்டுமணி நேரம் இருந்துட்டு வா எது நடக்கணுமோ அது நடக்கட்டும்.”

“அடச்சீ! வாயை மூடுய்யா..எது நடந்தாலும் அது ரெண்டு பேருக்கும் நடக்கட்டும்…”—-அந்த நேரத்துக்கு ப்யூன் ஆறுமுகம் படபடப்பாய் ஓடி வந்தான்.

“ கருணாசார்!….கருணாசார்!.. ஹெட்மாஸ்டர் உங்கள சீக்கிரமா பஸ் ஏறச் சொல்லிட்டாரு.. ஊருக்குப் போயி லீவுலெட்டர அனுப்பி வெச்சா போதுமாம்..நீங்க தப்பிச்சி போயிடுங்க. சீக்கிரம்…சீக்கிரம். போண்டாமணி இங்கதான் வந்துக்கிட்டு இருக்கான்.” “இல்லைய்யா எந்த பிரச்சினையும் சந்திக்கிற வரைக்கும் தீராதுன்னு சொன்னேன்னு சார்கிட்ட சொல்லிடுங்க. அதுமட்டுமில்லை. ஓட்ற நாயைக் கண்டா துரத்துற நாய்க்கு இளக்காரம். புரியுதா?.”

டமார்…! கதவை எட்டி உதைத்து விட்டு போண்டா மணி உள்ளே புயலாய் நுழைந்து விட்டான். போச்சு.அவ்வளவுதான். கூடவே ரெண்டு மூணு சிஷ்யனுங்க, ஒவ்வொருத்தன் கையிலும் உருட்டுக்கட்டைங்க. எனக்கு வெடவெடன்னு கைகால்கள் தந்தியடிக்குது. அவனை நேர்பார்வையாய் பார்த்தபடி கருணா நிற்கிறார். என்னா மனுஷன்?. மன்னிச்சிடுப்பான்னு ஒரு வார்த்தை கேட்டாத்தான் என்ன.

”டாய்…டாய்…!.வாத்தீ! எவன்டா பூட்டை ஒடைச்சவன்?. அந்த தெவிடியாளுக்கு நீ இன்னா சப்போர்ட்டா? .டா. .டாய்…!.”—– ஓடிப்போய் குறுக்கே நின்று தடுத்த ஆறுமுகத்தை இழுத்து ஒரு அறை விட்டான். ஆறுமுகம் சத்தமின்றி சுருண்டு விழுந்து விட்டான். அடுத்து நான், கொஞ்சம் புஷ்டியாக இருக்கவும் நான் தான் உடைச்சிருப்பேன்னு என்னையே முறைத்தபடி கிட்டவர ஆரம்பித்தான், அடியாளுங்களும் உருட்டுக்கட்டையுடன் என்னை நெருங்கினார்கள். .வெறுங்கையில அடிச்சதுக்கே ஆறுமுகம் எப்ப எழுந்திருப்பான்னு தெரியல, உருட்டுக்கட்டையில அடிச்சா. ஐயய்யோ!. அதற்குள் கருணா கணீரென்று “யோவ் மணி! .நான்தான்யா பூட்டைஒடைச்சவன். என்ன?, அடிக்கப்போறியா?.” — அட. இந்த நோஞ்சானா?.என்று. நம்பமாட்டாமல் போண்டாமணி என்னையும் அவரையும் மாறிமாறி பார்த்தான். கருணாவின் தைரியமான பேச்சு, அவனை சற்று தாமதிக்க வெச்சது. அடிக்க கிட்ட வந்த ஆட்களை கைகளை உயர்த்தி தடுத்தான். நான் ஓடிப்போய் போண்டாமணியை பிடித்துக் கொண்டேன். “சார்…!சார்….!..இருங்க சார். அவசரப் படாதீங்க சார்.”—கெஞ்சிக் கிட்டிருக்கும் போதே.கருணா என்னைப் பார்த்து கத்தினார். “சேகர்! நீ தலையிடாதே, அந்தாளு வந்து என்னை அடிக்கட்டும். மொதல்ல கதவை சாத்து. இது ஒரு பொண்ணோட மானப்பிரச்சினை அகல கடையக் கூடாது.”—-நான் கதவை சாத்தினேன். போண்டாமணி அடிக்க ஓடிவந்தான். .”டேய் கம்மனாட்டி! நரம்பாட்டம் ஒடம்பை வெச்சிக்கிணு, அஞ்சரை அடி ஒசரங்கூட தேறமாட்ட.உனுக்கு இன்னா திமிர்றா?. தம்மாத்துண்டு பையன், தட்னா தாராந்துபூடுவடா டேய்!.?”

“இதோ பாரு நீ என்னை சுலுவா நீ அடிச்சி போட்ருவே.. உன்னை ஜெயிக்க எனக்கு உடம்புல பலம் கிடையாது நல்லா தெரியும், ஆனா உன்னால என் உயிரே போவுதுன்றப்ப, நீ அடிக்கிற நேரத்தில துணிஞ்சி உன் வயித்தில சரக்னு இந்த கத்தியை என்னால சொருவ முடியாது?.சொல்லுய்யா. சண்டையில ஜெயிக்கிறதுக்கு தைரியந்தான் முக்கியம், ஒடம்பு ரெண்டாம் பட்சம்தான்..”—— அவன் டாய்! என்று கத்திக் கொண்டேவந்து கருணா கன்னத்தில் ஒரு அறை விட்டான். கருணா குனிந்துக் கொள்ளஅடி படவில்லை. கருணாவின் குரலில் இப்போது ஒரு சீரியஸ்தனம் வந்துவிட்டது.

“தோ பாரு மணி! உன்னைப் பத்தி எனக்குப் பயமில்லை. பயம் இருந்திருந்தா உடனே ஒரு வாரம் லீவு போட்டுட்டு பஸ் ஏறிட்டிருப்பேன். இங்க, ஊர்ல எல்லாரும் அப்படித்தான் எனக்கு யோசனை சொன்னாங்க..” அடிக்க ஓடிய அடியாட்களை மணி அடக்கினான்.. “ டேய்! இருங்கடா ஆளு எம்மாந்தூரம் போறான்னு பார்ப்பம்.”.–அதற்கும் இந்த பாவி, கருணா பயமில்லாம சிரிச்சிட்டு நிற்கிறாரே..

.”எல்லாரும் ரவுடீ.!.ரவுடீ! ன்னு உன்னைப் பார்த்து பயப்பட்றதில உனுக்கு பெருமையா இருக்குல்ல?.ஆனா உண்மையில நீ ரவுடி இல்லைய்யா, அது எனக்குத் தெரியும்.. ஒருதடவை பஸ்ஸில இருந்து ஒரு வயசான கிழவி இறங்கிறப்போ இறங்கிறதுக்கு முன்னமே டிரைவர் பஸ்ஸை கிளப்பிட்டான். அதனால கிழவி கீழே விழுந்து, அவளுக்கு கைகால்களெல்லாம் அடி பட்டிருச்சி.. கீழே விழுந்து கிடந்த கிழவியை என்னா ஏதுன்னு கூட கேக்காம டிரைவர் வண்டியை எடுத்தான்னு ஓடிப்போயி அவனை கீழே இழுத்துப் போட்டு அப்படி அடிச்ச. இன்னொரு தடவை பட்டா வாங்கித் தர்றேன்னு ஏழை பாழைங்க கிட்ட பணம் வாங்கிட்டு பட்டா வாங்கித் தராத ஒரு வி.ஏ.ஓ. வை நடுரோட்டில புரட்டி புரட்டி எடுத்துட்ட. இது மாதிரி பொது விஷயங்களுக்காவ. அடிதடியில இறங்கறவன்லாம் ரவுடி இல்லைய்யா, அவன்தான் போராளி. உன்னை ஒரு போராளியாத்தான் பார்க்கிறேன். இப்ப நீ செஞ்சிருக்கிற காரியம் ஒரு போராளிக்கு தலைகுனிவை தரக்கூடிய விஷயம். — மணி கருணாவையே அளவிட்டுக் கொண்டு நின்றான்.. கருணா எதையும் பொருட்படுத்தாமல் சற்று நிஜமான வருத்தத்துடன் பேச ஆரம்பித்தார்.

” பாவம்யா அந்தப் பொண்ணு., சின்ன வயசு. கல்யாணம் கட்டி ஒரு வருஷத்தில தாலிய அறுத்துட்டு வந்துட்டாள். .உலகத்தில ஒவ்வொரு உயிருக்கும் கிடைக்கிற அந்த அடிப்படையான தேவை இவளுக்கு இல்லைன்னு ஆயிப்போச்சி. ஏதோ வேகத்தில அவ எங்கியோ..எப்படியோன்னு மறைவா தின்னப் போனவளை புடிச்சி, உள்ளே வெச்சி பூட்டி, பெர்தனக்காரங்களை கூட்டிவந்து மானத்தை வாங்கப் போறேன்னியாமே?.. இந்த ஊர்ல இந்த தப்பை பண்ற எத்தினி பேரை நீ அப்படி உள்ள வெச்சி பூட்டியிக்கே?. சொல்லுய்யா. மொதல்ல நீயே அதில மாட்ட வேண்டியவன்தான்தானே?. உனக்கு உள்ளே உறுத்தல?. உறுத்தணும்யா. அவன் தான் மனுஷன். இதுவே அவ நம்ம தங்கச்சியா இருந்தா இப்படி செய்வோமா? ன்னு நமக்குள்ளயே ஒரு கேள்விய கேட்டுப் பார்த்துக்கணும்…நான் வெளியூர்காரன் தான் அந்த பொம்பளை யாருன்னு கூட எனக்குத் தெரியாதுதான். ஆனா. இந்த நிமிஷம் உன்னால் எனக்கு வரக்கூடிய எந்த ஆபத்து பத்தியும் நான் யோசிக்கல. அந்த விதவைப் பொண்ணோட மானத்தை காப்பாத்தணும். அது ஒண்ணுதான் எனக்குள்ள இருந்திச்சி. ” ——சொல்லிவிட்டு அமைதியாக நின்றார். அடியாட்கள் உருட்டுக் கட்டையுடன் கிட்டே நெருங்கினார்கள். எனக்குக் கண்ணில் நீர் வந்துவிட்டது. கருணா!…கருணா! என்னா மனுஷன்யா நீ?.

போண்டாமணி வாயைத் திறக்கவில்லை.. அவரையே பார்த்தபடி அசையாது நிற்கிறான். நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டான். வந்த அடியாட்களும் இவன் உத்திரவுக்காக ரெடியாக காத்து நிற்கின்றனர். சடக்கென்று தெருவில் இறங்கி போண்டாமணி என்கிற அந்த சுடலைமாடன் நடக்க ஆரம்பித்தான். அடியாட்களும் பின்னாலேயே டூ வீலர்களைக் கிளப்பிக் கொண்டு ஓடினார்கள். நடப்பதெல்லாம் எனக்கு பிரமிப்பாக இருந்தது. எவ்வளவு பெரிய யானையும் ஒரு சின்ன அங்குசத்துக்கு அடங்கிப் போகிறது…

– தினமணி கதிர் (15-03-2015)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *