அங்காடிக் கூடை லட்சுமி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 23, 2023
பார்வையிட்டோர்: 2,437 
 

(1933 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அங்காடிக் கூடை என்றால் நகரவாசிகளுக்குத் தெரியாம விருக்கலாம். அப்படி யிருந்தால் எங்களூர் அங்காடிக் கூடை லட்சுமியை அவர்களுக்கு ஒரு நாளும் தெரியாது. மார்க்கெட் பிரபலப்படாத காலத்தில், அங்காடிக் கூடைதான் பிரசித்தம். காய்கறிகளைக் கூடையில் சுமந்து, கிராமம் கிராமாய்ப் போய் விற்பவர்களுக்கு அங்காடிக் கூடைக்காரிகள் என்று கிராமத்திலே பெயர்.

அங்காடிக் கூடை விற்பனையில், ஆண் பிள்ளையைப் பார்க்க முடியாது. அங்காடித் தொழில், ஆண் பிள்ளைகளுக்கு ஈனத் தொழில் என்று அர்த்தமன்று. அவர்களால் செட்டாக விற்க முடியாது. சில்லறைச் சாமான்களைப் பொறுமையுடன் வியாபாரம் செய்வதற்கு, ஆண்பிள்ளைகளுக்குத் தெரியாது என்ற காரணமோ, என்னவோ? பெண்களுக்குப் பொறுமை உண்டு, செட்டு உண்டு என்று புராணங்கள் கூட முறையிடுகின்றனவே!

கால் ரூபாய்ச் சாமான்களுக்கு முக்கால் ரூபாய் விலையாக விற்கும் அருமையான சாமர்த்தியம் அங்காடிக் கூடைக்காரிகளுக்குத்தான் உண்டு. அந்த வித்தை குருவில்லா வித்தை என்றுதான் சொல்ல வேண்டும். அது செயற்கை சாமர்த்தியமாக இருக்க முடியாது. இயற்கை அறிவுக்குப் பொறாமைப் பட்டாலும், கைகூடாது; சம்பளம் கொடுத்து விலைக்கு வாங்கவும் முடியாது.

அங்காடிக் கூடையைச் சோதித்துப் பார்த்தால், ரொம்ப வினோதமான சாமான்கள் அகப்படும். ஓர் இடத்திலே கத்தரிக்காய், ஒரு கும்பலிலே வெண்டைக்காய், மற்றொரு பக்கத்தில் அவரைக் காய், சிறிய துண்டில் பச்சைக் கொத்தமல்லி, கருவேப்பிலைக் கொத்தில் ஐந்தாறு, வறுத்த நிலக்கடலை, வெங்காயத்திலே கொஞ்சம், வாழைப்பழத்தில் இரண்டொரு சீப்புகள், அரிநெல்லிக் காயில் அறுபது எழுபது, ஒரு சுண்டு, ஒரு படி, ஒரு கோணிச்சாக்கு இன்னும் எத்தளை சாமான்களோ அகப்படும்.

லட்சுமி இந்தச் சாமான்களை விலை கூறிக்கொண்டு வருகையில் வேடிக்கை செய்வாள். மற்றெல்லாச் சாமான்களையும் முதலிலே கூறிவிட்டு, கடைசியாக ‘நிலக்கடலை, வாழைப்பழம், அரிநெல்லிக்காய்!’ என்று முடிப்பாள். சில சமயங்களில், இல்லாத இலந்தைப் பழத்தையும் சேர்த்துச் சொல்லுவாள். இந்தக் கடைசிச் சாமான்களை, அவள் நிறுத்தி நீட்டிச் சொல்லும் அழகே அழகு! ஏன் நீட்டிச் சொல்ல வேண்டும்? குழந்தைகளுக்காக என்று உங்களுக்குத் தெரியாதா?

கடைச் சாமான்கள் விற்பனை போக வேண்டுமானால், கடைக்காரன் குழந்தைகளைப் பிடித்தால்தான் காரியம் சாயும். உலகத்திலே எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோலத்தான். எல்லாத் தாய்மார்களும்அப்படியே. குழந்தைகள் வேண்டும் பண்டங்களை வாங்கிக் கொடுக்காத தாய்மார்களும் உலகத்தில் இருப்பார்களா? அவ்வளவு கடின சித்தம் படைத்த தாய்மார்களைப் பிரம்மா இன்னும் சிருஷ்டி செய்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தெருக் கோடியில் லட்சுமி கூவுகிற சத்தம் வீட்டுப் பெரிய வர்கள் எவருக்கும் காதிலே கேட்காது. படிக்கிற பையன், வீடு பெருக்கிக் கொண்டிருக்கும் பெண் குழந்தை, யானையை இழுத்துக் கொண்டிருக்கிற சின்னப் பயல் இவர்கள் காதுகளிலேதான் முதலிலே லட்சுமியின் குரல் கேட்கும். கேட்டபின், போட்ட சாமான் போட்ட இடத்திலேயே கிடக்கும். வீட்டுக்கு வெளியே ஓடி வந்து விடுவார்கள்.

‘யச்சுமி!’ என்பான் யானை ஓட்டும் சின்னப் பயல். ‘வாடாப்பா ராசா! வாடா தங்கமே!” என்று வாய் நிறைய வாழ்த்துவாள் லட்சுமி. வாழ்த்துவது மட்டுமா? உடனே ஒரு கடலையை உடைத்து, பருப்புக்களை வாயில் திணித்து ஊட்டுவாள். சின்னப் பயலுக்குப் பரமானந்தம். பெரிசு இரண்டும் விழித்துக் கொண்டிருக்கும். பெரிய பையன், ‘லட்சுமி! எனக்கு ஒரு கடலை!’ என்று ஸ்வரம் போட்டுக் கேட்கத் துவக்குவான். ‘எனக்கு ஒன்று கொடுக்க மாட்டாயா?’ என்பாள் பெண். ‘அது ராசா. பச்சைப் பிள்ளை. அது வாயாலே கேக்குது. கொடுக்காட்டி பாவம்!’ என்பாள் லட்சுமி.

பெரிசு இரண்டும் கஜகர்ணம் போட்டுப் பார்த்தாலும் லட்சுமியிடம் காரியம் பலிக்காது. லட்சுமி என்றால் எல்லாருக்கும் சலுகை ரொம்ப ஜாஸ்தி. பெரிய பையன் சும்மா இருப்பானா? உடனே கூடையில் கை போடுவான். ‘நல்ல வேளையடாப்பா! அதோ வந்துட்டாரு உங்கப்பா!’ என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், பெரிசு இரண்டும் திரும்பிப் பார்க்காமல், வீட்டைப் பார்க்கச் சவாரி வைத்துவிடுவார்கள். மறுபடியும் தன் சாமான்களை விற்பனைக்காக லட்சுமி கூவுவாள்.

பக்கத்திலிருக்கும் யானை ஒட்டிப் பயல் இன்னொரு கடலை வேண்டுவான். ‘கை நொம்பத் தாரேன். உங்க அம்மாவைக் கூட்டியா!’ என்று உதட்டு வாழைப்பழம் உள்ளே போகும்படியாக லட்சுமி சொல்லும்பொழுது, படம் பிடித்து, ஸினிமா ஆக்டர்களுக்குப் பரிசாக அனுப்பலாம். தீஞ்சுவை நிறைந்த கவிதை எங்கேயோ இருப்பதாகப் புலவர்கள் சொல்லுகிறார்கள். அங்காடி லட்சுமியின் நாவிலிருந்து உதிரும் தீஞ்சுவைக் கவிதையை அவர்கள் கண்டறிந்திருக்க மாட்டார்கள்.

இரண்டோடு மூன்று; சின்னப் பயலும் வீட்டுக்குள் விழுந் தடித்து ஓடுவான். பெரிய குழந்தைகள் போட்டுக் கொண்டிருக்கிற சத்தம் தாயாரின் காதில் விழவே விழாது. ஆனால் சின்னப் பயல் அழுது கொண்டே வீட்டுக்குள் நுழைந்தவுடனே, தாயார் பதறிக் கொண்டு ஓடி வருவாள். ‘கண்ணே! ஏண்டாப்பா! யார் உள்ளை அடித்தது?’ என்று அபயக் குரலுடன் வாரிச் சுருட்டி. அவனை இடுப்பில் ஏற்றிக் கொண்டு, பின் மார்போடு அணைத்துக் கொள்ளுவாள். போக்கிரிச் சின்னப் பயலோ அழுகையை நிறுத்த மாட்டான். ‘கண்ணே, அழாதே, சொல்லு,’ என்று சமாதானப் படுத்துவாள் அன்னை. தட்டித் தடவி, ‘தடலை’ என்பான் சின்னப்பயல்.

‘சூன்யக்காரி லட்சுமி வந்து விட்டாளா?’ என்று தாய் சொல்லுகிற அற்புத அழகை நேரில் கேட்டால்தான் அனுபவிக்க முடியும். ஏதோ ‘பிள்ளை பிடிக்கிற மோசக்காரி’ வந்து விட்டாற் போலப் பேசுவாள். ஆனால் சின்னப் பயலோ தன் அழுகை ஸ்வரத்தை நிறுத்தவே மாட்டான். சின்னப் பயல் அழ அழ பெரிய குழந்தைகள் இரண்டுக்கும் கொண்டாட்டம். கடவுளின் சீர்வரிசை களான குழந்தைகள் சகிதமாய்த் தாய் வீட்டுக்கு வெளியே வருவாள்.

‘இந்தக் கூதல் காலத்திலே, நீ கடலையைக் கொண்டு வந்து இப்படிக் குழந்தைகளை இம்சை செய்யலாமா? வயிற்றுப் போக்கு வந்தால், எந்த வைத்தியன் கிட்ட இருக்கிறான்? லட்சுமி! நீ பண்ணுகிற தொல்லை கொஞ்ச நஞ்சமில்லை!’ என்று தாய் அழுது கொண்டே பேசுவாள். ‘நல்லாத்தாள் சொன்னே! நம்மூரிலே விளைகிறகடலை உடம்புக்கு என்ன பண்ணும்? கடலை வேண்டாம்னாக்கா, அரிநெல்லிக்காய் இருக்கு!’ என்பாள் வட்சுமி. ‘அரிநெல்லி உடம்புக்குப் பித்தம்!’ என்பாள் தாய். ‘நல்ல பண்டமெல்லாம் உனக்கு உடம்புக்கு ஆகாது!’ என்று கூடையைத் தூக்குவதாக லட்சுமி பாவனை செய்வாள்.

ஆனால் சின்னப் பயல் லேசிலே விட்டு விடுவானா? உடனே உச்ச ஸ்தாயியில் பிடித்து விடுவான் அழுகையை. லட்சுமிக்கும் தனக்கும் இவ்வாறு அவமானம் வருவதை, அவன் பொறுத்துக் கொண்டு இருப்பானா? பொறுத்துக் கொண்டிருக்க முடியுமா? இதன் பிறகும் தாய் படிந்து போகாமலிருக்க முடியுமா? ‘என்ன! அவசரப்படுகிறாயே? கூடையைக் கீழே இறக்கு!’ என்பாள் தாய். சின்னப் பயல் அழுகையும் ஒருவாறு ஓயும். லட்சுமியின் முகமும் சிறிது மலர்ச்சியடையும்.

கிராமத்திலே காசு கொடுத்துக், கறிகாய்ச் சாமான்களை வாங்கும் வழக்கம் கிடையாது. தினப்படி வேண்டியதற்கு, அவர்கள் நெல்லோ, அரிசியோ கொடுத்து வாங்குவார்கள். மேலும், கிராமத்துப் பெண்களின் கையில் ரொக்கப் பணம் அகப்படுவது அருமை. தங்கள் வசம் இருக்கும் சாமானைக் கொண்டுதானே, அவர்கள் இன்னொரு சாமானை வாங்க முடியும்? நெல், அரிசி இதில் ஒன்றைக் கொண்டு பேரம் செய்யத் துவக்குவாள் தாய்.

‘கடலை எப்படி விலை சொல்லுகிறாய்?’ என்று கேட்டால், ‘நெல் இரண்டுக்கு ஒன்று; அரிசி சரிக்குச் சரி” என்பாள் லட்சுமி. ‘என்ன, இப்படிக் கருமாயமாய் (கிராக்கியாக) விலை கூறுகிறாயே! இது நியாயமா?’ என்றால், ‘இந்தக் கூடையை விற்றுத்தானே, நாங்கள் வயிறு பிழைக்க வேண்டும்? நாங்கள் பணத்தைக் கொண்டு போய் என்ன செய்கிறது? உன் தங்கக் கையாலே வாங்கினால், என் கூடை முழுதும் அரிசி ரொம்பிப் போகுமே!’ என்பாள் வட்சுமி.

தங்கக் கையை வைத்துக் கொண்டிருக்கும் தாயாருக்குச் சந்தோஷம் வராமல் என்ன செய்யும்? ‘முதலிலே உன் ராசிக் கை என் கூடையைத் தொட்டாலே போதுமே! என் கலி தீர்ந்து போய் விடுமே! சீமாங்க வீட்டிலே இவ்வளவு யோசனை பண்ணினால், நாங்க போகிற கதி என்ன?’ என்று லட்சுமி இவ்வளவு பிரிய வசனத்துடன் பேசுவாள், தெரியுமா? சொக்க வைக்கும் அவளுடைய பேச்சுக்கு இரங்காத மனமும் இருக்குமா? இதற்குள் சின்னப் பயலும் தாமதம் பொறுக்க மாட்டான். அவனுடைய இணையற்ற பாசுபதாஸ்திரம் அழுகைதானே!

லட்சுமி சொல்லுகிற கடலையும் அரிநெல்லிக்காயும் இரண்டு பைசாக்கூடப் பெறமாட்டா. ஆனால் அவள் கேட்கிற அரிசி, நெல் விலையோ, ஆறு தம்படிக்கு அதிகமாக இருக்கும். இதை நயமாய்ச் சொல்லுகிற ஸ்வாரஸ்ய சாமர்த்தியம் லட்சுமிக்குத் தனிச் சொந்தம். சின்னப் பயல் அழுகை ஒரு பக்கம், தட்ட முடியாத லட்சுமி ஒருபக்கம் – இவர்கள் இருபுறமும் வளைத்துக் கொண்டால், தாயார் என்ன செய்வாள்? குழந்தைகள் கேட்பதை, லட்சுமி சொல்லுகிற விலையைக் கொடுத்து, வாங்கித்தான் தீர வேண்டும்.

இந்த வீட்டிலேதான் லட்சுமி இம்மாதிரிச் செய்கிறாள் என்று நினைக்க வேண்டாம். வீட்டுக்கு வீடு தங்கக் கைதான்; வீட்டுக்கு வீடு கைராசிதான். வீட்டுக்கு வீடு ராசாதான். என்ன செய்தாலும், அவள் கூடை நிறைய நெல்லையாவது அரிசியையாவது கண்டதில்லை. முழுச் சேலை கட்டியதில்லை. புதுச் சேலை எத்தனை வருஷங்களுக்கு ஒரு தரமோ! என்னமோ, வயிறு வளர்த்துக் கொண்டு வருகிறாள்.

-1933, மணிக்கொடி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *