கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2023
பார்வையிட்டோர்: 3,690 
 
 

தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த அவனைப் பார்த்ததும் நெஞ்சம் தடதடக்க ஆரம்பித்தது. ‘இவன் இங்கு என்ன செய்கிறான்? தப்பான முடிவு எதுவும்…’ பேருந்தின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் மனசு முழுதும் அந்த ரயில் தண்டவாளத்தின் மீதே ஓடிக்கொண்டிருந்தது. கண்களை முழுவதுமாக அங்கே ஃபோகஸ் செய்யும் போது பஸ் அந்த இடத்தை நெருங்கி இருந்தது.

‘ஷ்… அப்பாடா… இது அவன் இல்லை…’யாரோ ஒருவன் தண்டவாளத்தில் நின்றபடி எதையோ நுணுக்கமாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான். நெற்றியில் வழிந்த வியர்வையை துப்பட்டாவால் துடைத்துக் கொண்டாள். கண நேரத்தில் உடல் முழுதும் வியர்வையால் நனைந்திருந்தது. பஸ் வேகமாக நகர ஆரம்பித்ததும் காற்றில் உடல் சிலிர்க்க ஆரம்பித்தது. அவனின் நினைவுகளோடு சேர்த்து உடல் மேலும் சிலிர்த்தது.

இப்படி ஒரு ரயில் பயணத்தில்தான் அவர்களின் பயணம் சேர்ந்து தொடர ஆரம்பித்தது. தோழியின் உறவினராக அறிமுகமானான். சின்ன ஸ்மைல், அவ்வளவுதான். பார்த்த நாளில் இருந்தே எதோ ஒரு ஈர்ப்பு இருந்தது. அது அந்த வயதிற்கே உரிய ஈர்ப்பு என உணரும் அளவு பக்குவம் அவளுக்கு இருந்தது. அதனால் சகஜமாக, தெரிந்தவர் என்ற ரீதியில் மட்டும் மனதை ஒருக்களிக்க வைத்தாள்.

பொதுவாக எதுவும் பேச மாட்டான். ஒரே பெட்டியில் ஏறினாலும் தள்ளிப் போய் கதவருகில் நின்றுகொள்வான். ஒரு நாள் எதேச்சையாக ‘நீங்க போட்டிருக்கிற சட்டை நல்லாருக்கு’ என்று இவள் இயல்பாய் சொன்னபோது பதில் ஏதும் சொல்லாமல் மூக்குடைத்தான். தோழியை இவள் பார்க்க அவளும் சங்கடத்தில் நெளிந்தாள்.

‘அவன் அவ்வளவா பெண்களிடம் பேச மாட்டான்’ என்றுதோழி சொன்னபோது அவன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. இவள் தலையைப் பார்த்தாலே யார் பின்னாவது ஒளிந்துகொள்வான். அவனுடைய கூச்ச சுபாவம் இவளை அவன் பின் இழுத்துச் சென்றது.

தோழியிடம் எதேச்சையாக பேசும்போது அருகில் சென்று நின்றால், இவள்மீது பட்டும்படாமல் கண்களை எங்கோ பார்த்து பேசுவான். அவன் நினைவுகள் இவளை தொல்லை செய்ய ஆரம்பித்தன.

இவளை விடவும் கூடுதல் நிறம். களையான முகம். நல்ல உயரம். அவளுக்கு இயல்பாகவே உயரமான ஆண்களைப்பிடிக்கும். உயரத்தின் மீதான ஈர்ப்பு அவளுக்கு சிறு வயதில் இருந்தே இருந்தது. ஈர்ப்பு என்று சொல்வதை விட வியப்பு என்று சொல்லலாம். ஒருவேளை தன் தந்தை மற்றும் சகோதரர்கள் உயரம் குறைவாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக அவன் நினைவுகள் இவளைத் தின்ன ஆரம்பித்தன. அவனிடம் நிறைய நிறைய வாய்விட்டுப் பேச வேண்டும் என்று ஆர்வம் கொப்புளிக்க ஆரம்பித்தது. அவன்மீதான பிரியத்தை அவள் கண்கள் அவனுக்குக் காட்டிக் கொண்டே இருந்தன.

தோழியிடமிருந்து அவன் எண்ணை வாங்கி தீபாவளி, பொங்கல் என மெசேஜ் செய்ய ஆரம்பித்தாள். பதிலே இருக்காது. வருத்தமாக இருக்கும். ஒரு நாள் அவன் பிறந்தநாள் என்று தெரிந்தபோது உருகி உருகி அனுப்பிய மெசேஜுக்கு ‘நன்றி’ என்று மட்டும் பதில்.

ஆர்வம் தாங்க இயலாது மாலை ரயிலில் பார்த்தபோது நேரடியாக அவன் கண்களைப்பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னபோது, தன் குரல் நடுங்குவதை இவளால் உணர முடிந்தது. குரலின் டெசிபல் அவளுக்கே சரியாகக் கேட்கவில்லை. அதே நன்றி மட்டும்தான். கூட ஒரு சின்ன ஸ்மைல்.

தன் பின்னால் நாலைந்து பேர் அலைந்து கொண்டிருக்க, தான் ஏன் இவனிடம் தொங்க வேண்டும் என்று அசூயையாக இருந்தது. தான் ஒன்றும் ஆண்கள் மேல் தானாகவே போய் விழும் கேவலமான குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்லவே என்று எழுந்த கோபத்தில் தன் உணர்வுகளை அடக்கி ஒதுங்க ஆரம்பித்தாள்.

அன்று ஒரு திருமணத்திற்குச் சென்றுவிட்டு புடவை, எக்ஸ்ட்ரா மேக்கப் என்று அப்படியே வேலைக்குச் செல்கையில் தன் தோழியிடம் ‘இது நல்லா இருக்குல்ல’ என்று கூடையில் ஒரு பெண் வைத்திருந்த பூவைப் பார்த்துச் சொன்னான். அலுவலகத்தில் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான், அது தன்னைக் குறித்தான கமெண்ட்டாக இருக்குமோ? எனத் தோன்ற ஆரம்பித்தது. ஏனென்றால் பூவைப் பார்க்கும்போது அவன் கண்கள் தன்னைக் கடந்து சென்றதைப் பற்றி இப்போதுதான் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.

மறுநாள் ‘நான் இன்னிக்கு ரஜினி படம் போறேன். வர்றீங்களா?’ என்று கேட்டபடி அவளை ஓரக்கண்ணால் இயல்பாகக் கடப்பது போல் பார்த்தான். அதன்பின் மெல்ல மெல்ல எப்போதாவது இவளைப் பார்த்துப் புன்னகைக்க ஆரம்பித்தான். ஒரு நாள் ‘உன் மரமண்டைக்குப் புரியவே மாட்டேங்குதே’ என்று யாரிடமோ பேசியபடி இவள் தோழியைப் பார்த்துச்சிரித்த படி இவளையும் பார்த்து புன்னகை செய்தான்.

எல்லாவற்றையும் ரீவைண்ட் செய்ய ஆரம்பித்தாள். சில நாட்கள் தொடர்ந்து சிந்தித்ததில் அவன் தன்னைக் குறிவைத்து காய் நகர்த்தியதை உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆண்களிடம் முகம் கொடுத்துப் பேசாத இவளை, நேரடியாக மூவ் செய்தால் சரிவராது என அவன் பயன்படுத்திய இந்த உதாசீன டெக்னிக்தான் அவனை நோக்கி அவளை நகரச் செய்திருக்கிறது.

அவளை உதாசீனப்படுத்த படுத்த அவன் மீதான விருப்பம் அதிகரித்தது புரிய ஆரம்பித்தது. அவளிடம் பேசாதவன் ஏன் தினமும் தொடர்ந்து அதே கம்பார்ட்மென்ட்டில் வர வேண்டும் என்ற கேள்வி முள்ளாக உறுத்தியது. சே… தான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று உணர்ந்த போது…

ஆனாலும் மனதில் பதிந்து விட்ட அந்தக் காதலை நீக்குவது மிகச் சிரமமாக இருந்தது. அதனால் அவனாகச் சொல்வான் என அவன் கண்களை தினமும் ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதாவது அவனுடன் பயணிக்கும் நண்பனுடன் ஜாடைப் பேச்சாக

ஏதேதோ பேசுவான். அது எதுவும் புரியாது. நிஜமாகவே, தான் ஒரு மரமண்டையோ எனத் தோன்றியது.

அவனாகச் சொன்னால் ஏற்றுக்கொள்வது என்று காத்துக்கொண்டிருந்தபோதுதான் வீட்டில் திருமணம் நிச்சயம் செய்தார்கள். ‘என் வீட்டில் கல்யாணம் வைச்சுட்டாங்க’ என்று அவனிடம் இயல்பாய் சொல்வது போல் சொன்ன போது அவன் வெகு இயல்பாய் ‘வாழ்த்துக்கள்’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து கொண்டான். உடனே யாரைப்பற்றியோ பேசுவதுபோல் படு கேவலமாகப்பேசிக்கொண்டிருந்தான். அவன் பேச்சில் அனல் தெறித்தது.

வீட்டிற்குப் போய் துக்கம் தொண்டை அடைக்க உட்கார்ந்திருந்தபோது, அவன் பேசியது தன்னைக் குறித்து இருக்குமோ என சந்தேகமாக இருந்தது. பத்திரிகை கொண்டு போய் வைக்கச் சென்றபோது, தோழியிடம் வைக்கும்போது பார்த்துக்கொண்டிருந்தவன், அவனை நோக்கி இவள் செல்கையில் வண்டியில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தான்.

தானாகப்போய் இவன் வலையில் விழவேண்டும். அதுவும் வெறும் ஜாலிக்காகத்தான் என்பது போல் இருந்தது அவனது நடவடிக்கைகள். கண் பார்த்துப் பேசாத அவனிடம் உண்மை இல்லையோ என்று தோன்றியது. தன் அவதானிப்பு உண்மைதானா என்று சந்தேகமாகவும் இருந்தது. ஒருவேளை அவன் தன்னை நேசித்திருந்தால்…

அதன்பிறகு ஏனென்றே தெரியாமல் தன் மனதைக் கட்டுப்படுத்தி அவனைச் சந்திப்பதைத் தவிர்க்க ஆரம்பித்தாள். திருமணமும் இனிதே நடந்தேறியது. வந்தவன் நல்லவனாக இருந்ததில் திருப்தி. ரொம்ப நேரம் யோசித்துக்கொண்டிருந்த வேளையில், தான் எந்த ஏரியா வந்திருக்கிறோம் என பார்க்க கண் விழித்த போது… இது என்ன இது? இவ்வளவு நேரம் அவன் நினைப்பு என்றால் இப்போது எதிரில் நிற்பது யார்? அவனா?

ஓர் இளம்பெண் அருகில் நின்று அவனிடம் வழிந்து கொண்டிருந்தாள். இவன் ஒரு கெத்தோடு பேசிக்கொண்டிருந்தான். இவன்தான் உனக்காக தற்கொலை செய்து கொள்வான் என தவித்துப் போனாயா? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.

வருத்தமாக இருந்தது. அவர்கள் இவளைக் கவனிக்கவில்லை என்பது சற்று ஆறுதலாக இருந்தது. வீட்டிற்குப் போனவுடன் அந்தப் பெண் யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் முதன் முறையாக அவனது முகநூல் ஐடிக்குச் சென்று ஆராய்ந்த போது, அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அங்கே அவன் வேறு ஒரு பெண்ணின் போஸ்ட்டுக்கு தொடர்ந்து ஜாலி கமெண்ட் கொடுத்துக்கொண்டிருந்தான். அவன் ஒரு ஃபேக் ஐடி என்று தெரிந்த அக்கணத்தில் இவளது குற்றஉணர்வு மெல்ல மடை உடைத்துக்கொண்டது.

– டிசம்பர்2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *