ஒரு வான் நிலவின் தனிப் பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2023
பார்வையிட்டோர்: 1,599 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குழந்தையின் அழுகுரல் நடு இரவின் அமைதித் தேவதையை அடித்து விரட்டியது. படுக்கையில் புரண்டு படுத்தான் மணியரசன். கண்களைத் திறக்க முயன்றாலும் முடியவில்லை. மிளகாய்ப் பொடியைக் கொட்டியதைப் போன்ற எரிச்சல்.

நாள் முழுவதும் பேருந்து ஓட்டியதால் அடித்துப் போட்டது போன்று உடலில் அயர்ச்சி. புகையையொத்த மென்கரங்களால் நித்திரைதேவி அவனை மீண்டும் ஆரத் தழுவவே, கண்கள் தாமாகவே மூடிக் கொண்டன.

வீல்…வீல்…வீல்…

மீண்டும் குழந்தையின் சகிக்க முடியாத அலறல். அவன் காதில் கொதிக்கக் காய்ச்சிய ஈயத்தை ஊற்றியது போலிருந்தது.

“பூங்கொடி, குழந்தை அழுகிறது கேட்கலையா? எழுந்திரு. நீர் கழித்திருப்பான். துணியை மாற்றிவிட்டுப் பால் கொடு…” குப்புறப் படுத்துறங்கும் தன் மனைவியை எழுப்பினான்.

“என்னால் முடியாது. எனக்கு வயிற்றுக்கு ஆகலேன்னு சொல்கிறேன், ஏன் ஏதுன்னு கேட்காமல் குறட்டை விட்டுத் தூங்கினீங்களே. இப்போது மட்டும் எழுப்பு வானேன்?…”

“பூங்கொடி. முரண்டு பிடிக்காதே. என்னால் எழுந்திருக்க முடியவில்லை…” சொல்லும்போது கொட்டாவி விட்டுக்கொண்டான்.

“என்னாலேயும் முடியாது”

பூங்கொடி ஒரு தலையணையைக் கால்களுக்கிடையில் சொருகியபடி வசதியாகப் படுத்துக் கொண்டாள். கணவன் வேண்டுகோளை நிறைவேற்றும் எண்ணம் துளிகூட இல்லை.

குழந்தையின் அழுகை நின்றபாடில்லை. தன் மனைவியைப் பார்க்கப் பார்க்க மணியரசனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. தன் தலைவிதியை நொந்துகொண்டு அவனே எழுந்தான்; குழந்தையைத் தூக்கினான்; பால் கலக்கினான்; அவனே ஊட்டினான்.

பசி நீங்கிய அப்பச்சிளங்குழந்தை விரலைச் சப்பிக் கொண்டு தொட்டிலில் உறங்கத் தொடங்கினான். குழந்தையின் வாயிலிருந்து விரலை மெதுவாக நீக்கிவிட்டுப் “பூத்திங்கை” சொருகிவிட்டுப் படுக்கையில் அமர்ந்தான் மணியரசன்.

அவனைவிட்டுத் தூக்கம் முற்றாக விலகியிருந்தது. அவன் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. அதைவிட அவனது மனம் வேதனையில் புகைந்து கொண்டிருந்தது. தன் வேதனையையும் எரிச்சலையும் தானே விழுங்கிக் கொண்டு, மனைவியை அன்புடன் அழைத்தான்.

“பூங்கொடி…”

அவள் விழித்துக் கொண்டுதானிருந்தாள். ஆனால் பதிலளிக்கவில்லை.

ஆதரவாக அவள் பக்கம் சாய்ந்து, “உனக்கு என்ன செய்கிறது?…” என்று அன்பொழுகக் கேட்டான்.

“எத்தனை தடவை சொல்வது? தெரியாது போல அது என்ன கேள்வி?” தன் உடலில் பட்ட கணவனின் கரங்களைத் தள்ளியபடியே அலுத்துக் கொண்டாள்.

“உன் வயிற்று நோவு தெரிந்ததுதானே! வலிக்க ஆரம்பித்தவுடனேயே மருந்து சாப்பிட்டிருக்கலாமே? நான் எடுக்கவா?…”

“எனக்கு அந்த மருந்து வேண்டாம். அறவே பிடிக்கலே…” சொல்லும் போதே அம்மருந்தின் மீதுள்ள வெறுப்பு பச்சையாகத் தெரிந்தது.

“என்ன பூங்கொடி, குழந்தை மாதிரி பேசுகிறாய். நோயைக் குணப்படுத்த மருத்துவர் மருந்து கொடுப்பாரா இல்லை வாய்க்கு ருசியாய்க் கொடுப்பாரா? நல்ல கூத்து!…”

அமைதி.

“பூங்கொடி…”

“என்னைத் தொடாதீங்க. என்ன திடீர்க்கரிசனம்?…”

அவள் மனத்தில் கணவனின் பரிவு வேறுவிதமான நோக்கத்தைத் தோற்றுவித்திருந்தது.

“ஆமா, இது என்ன புதுசா! உனக்குத்தான் வாடிக்கையாயிற்றே. வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடனே ஆரம்பித்துவிடுவாய். காலை வலிக்குது, கையை வலிக்குது, வயிற்றை வலிக்குதென்று மாளாத புலம்பல். அதைப் போலத்தான் இன்றும் என்று நினைத்தேன்…”

அவளுக்குப் பாதியும் தனக்கு மீதியுமாகப் பேசிக் கொண்டே மருந்தைக் குவளையில் ஊற்றிக் கொண்டு வந்தான்.

“பூங்கொடி, மருந்து கொண்டு வந்திருக்கேன்…குடி…” அவன் குவளையை அவள் வாயருகே கொண்டு போனான். “வேண்டாமென்றால் ஏன்தொந்தரவு செய்கிறீர்கள்…” திரும்பிப் பார்க்காமலே பூங்கொடி கரங்களை அசைக்கவும் தட்டுப்பட்ட குவளை கவிழ்ந்து, மருந்து மணியரசன்மீது கொட்டவும் சரியாக இருந்தது.

அவனுக்கு குப்பென்று முகம் சிவந்து போயிற்று. இந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தது போல, அடக்கி திருந்த கோபம் பூராவும் அவன் தலைக்கேறியது. ஆத்திரம் முற்றாக அவன் கண்களைத் திரையிட்டது. மணியரசன் தன் மனைவியைத் திருப்பி…

பளார்…பளார்…தொப்…தொப் மாறி மாறி அடிகள்! அறைகள்! அவளைத் துவைத்துப் போட்டுவிட்டான்.

“ஒரேயடியாகச் செத்துத் தொலைந்துவிடு. படவா… மருந்தைச் சாப்பிடச் சொன்னால் செய்வதில்லை. வேளை தவறாமல் உண்பதுமில்லை. உன் வயிற்று நோய் தீரவும் இல்லை; என் வாழ்க்கைப் பிரச்சினை மாறவும் இல்லை. குழந்தையைக்கூட உன்னால சரியாகக் கவனிக்க முடியல. எனக்குக் கொஞ்சமாவது நிம்மதி உண்டா? சே!…ஆளுதான் வெளுப்பாய் இருக்கிறாயே தவிர, ஒரு வெங்காயமும் இல்லை. உன்னைச் சொல்லி என்ன செய்ய? என் விதி…”

அவனால் தொடர்ந்து பேச முடியவில்லை. திடீரென்று வலுவிழந்து போனவன் போல் தொப்பென்று நாற்காலியில் சாய்ந்தான். அவனுக்கு மூச்சு வாங்கியது. கண்கள் கலங்கின.

பூங்கொடி வாயே திறக்கவில்லை. தலைகவிழ்ந்து அழுதாள். நீண்ட நேரத்திற்குப் பிறகு எழுந்து வந்தாள்.

தன் கணவனின் கால்களைப் பற்றிக் கொண்டு, “இந்த நடுஇரவில் இவ்வளவு இரைச்சலாகப் பேசுறீங்களே? அக்கம் பக்கத்துக்குக் கேட்காதா? அடித்தது போதாதா? ஏசவும் வேணுமா?…” அவள் தேம்பிக் கொண்டே கூறினாள்.

அப்பொழுதுதான் அவனுக்கும் உறைத்தது. அது நடுநிசியாயிற்றே! அவன் இதயமே ஒருமுறை குலுங்கிப் போய் விட்டது.

“பூங்கொடி…” மனியரசன் ஒரு குழந்தையைப் போல் அவளை அள்ளிக் கொண்டான். அவளும் அவனிடம் அடைக்கலமானாள்.

துன்பத்தின் ஒரு கோடியிலிருந்து இன்பத்தின் மறு கோடிக்கு உடனே எப்படி வரமுடிகிறது? இது பெண்மைக்கு உரிய சிறப்பன்றி வேறென்ன?

மணியரசன் பூங்கொடியைத் திருமணம் செய்து மூன்றாண்டுகள் ஆகின்றன. தொடக்கத்தில் அவள் புதிராயிருந்து காலவோட்டத்தில் தான் ஒரு புதுமைப் படைப்பு என்பதைத் தன் காரியங்கள் வழி உணர்த்திவிட்டாள்.

பூங்கொடி ஒரு பெண்ணாக முழு வளர்ச்சி அடைந்திருந்தாள். ஆனால் முதிர்ச்சியடையவில்லை. தன் கணவனின் பருவப்பசியைத் தீர்ப்பதில் பொருத்தமான கருவியாய் இருந்ததைப் போல், வாழ்க்கைக்குத் தேவையான ஏனைய குணங்கள் போதிய வளர்ச்சி பெற்ற பெண்ணாய் இல்லை.

நண்பர்களோடு பேசிக்கொண்டிருப்பான். அப்பொழுதுதான் வீட்டில் உப்பில்லை, புளியில்லை, குழந்தைக்கு மாவில்லை என்று குறைபடுவாள். இங்கிதம் தெரிவதில்லை. பணி முடிந்து களைத்து இல்லம் வருவான். குளித்து, உணவருந்தி சிறிது நேரம் ஓய்வு கொள்ளலாம் என்று குளியலறைக்குச் சென்றால், “இருங்கத்தான், நான் முதலில் குளித்துவிடுறேன்…” என்று கதவைப் பூட்டிக் கொள்வாள் சமயோசிதம் இருப்பதில்லை.

மணியரசன் சிங்கப்பூர் பேருந்து நிறுவனத்தில் பணி புரிகிறான். அவனுக்கு நாள் சம்பளம். தினசரி ஊதியத்தை இல்லம் வந்ததும் மனைவியிடம் தந்துவிடுவான். மறுநாள் ஊதியத்தை அவன் கொடுக்கும்போது, முதல் நாள் கொடுத்ததில் சில வெள்ளிகளே மீதம் வைத்திருப்பாள். அவள் விருப்பத்திற்குச் செலவு செய்வாள். அவசியம் – அவசியமில்லாதது என்பதெல்லாம் பூங்கொடியிடம் கிஞ் சிற்றும் கிடையாது. சிக்கனம் அறவே இல்லை.

ஒருநாள் எவனே கதவைத் தட்டி, மணியரசன் வாங்கி வரச் சொன்னதாக இருபது வெள்ளி கேட்க, மறுபேச்சில்லாமல் தூக்கிக் கொடுத்துவிட்டாள். வீடு திரும்பிய கணவன் எடுத்துக் கூறிய பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தாள் பூங்கொடி. சரியான ஏமாளி.

சிங்கப்பூரில் இப்படியும் ஒரு பெண்ணா? ஆணுக்கு நிகரா அனைத்து துறைகளிலும் பெண்கள் பணி புரியும் இந்நாட்டில் இப்படியும் ஒரு பேதைமை நிறைந்த பெண்ணா? ஓரளவு கல்வியறிவு பெற்றிருந்தாலும் அந்த வாசனையே தெரியாத அளவுக்கு அவள் நடந்து கொள்வது கண்டு அதிர்ந்து போய் விடுவான் மணியரசன். “கசாப்புக் கடைக்காரன் ஆட்டின் தோலைப் பார்த்து முடிவெடுப்பதைப் போல” அவளின் வெளுப்பான நிறத்தைக் கண்டதும் மணியரசன் மயங்கிப் போனான்.

அவனுக்கு எப்போதுமே “வெளுப்பு” நிறத்தில் ஒரு தனி ஈர்ப்பு உண்டு. தன் மனைவி சிவப்பாக இருந்தால், பிறக்கும் குழந்தைகள் அழகாக இருக்கும் என்பது அவன் நம்பிக்கை. எனவே அழகான மனைவி தேடுவதில் அவன் குறியாய் இருந்தான். சிவப்பான மனைவி கிடைத்தபோது சிறப்பான மனைவியை எண்ணி அவன் மனம் ஓலமிட்டது.

வாழ்க்கை என்ற காவியத்தின் மிகுதியான பக்கங்களை நிரப்புவது மனைவியோடு வாழும் வாழ்க்கைதான். அந்த உன்னதமான பகுதி ஊனப்பட்டுவிட்ட பிறகு, மணியரசன் தன் கனவுகளைக் குழந்தை அமலன் மூலமாகவே நனவுகளாக்கிக் காண உறுதி கொண்டுவிட்டான்.

ஓர் உளநூல் வல்லுநரிடம் கூட அவளை அழைத்துச் சென்றான். பூங்கொடியைச் சோதித்து விட்டு, “உங்கள் மனைவியிடம் ஒரு குறையுமில்லை, குழந்தைத்தனம் மிகுந்திருக்கிறது. பொறுப்பான காரியங்களை நம்பி அவரிடம் ஒப்படையுங்கள். காலப் போக்கில் சரியாகிவிடும். குழந்தைப் பருவத்தில் செல்லமாக வளர்ந்திருக்கலாம். இவர் நீங்கள் விரும்புவது போன்ற நிலையை அடைய கொஞ்சம் அவகாசம் தேவைப்படலாம். என்ன செய்வது, நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும். இது ஒரு நோயில்லை; ஆகவே வேறு வழியில்லை” என்று கூறி அவரும் கையை விரித்துவிட்டார். மணியரசன் காத்திருப்பதென முடிவிற்கு வந்துவிட்டான்.

“பூங்கொடி, நான் போயிட்டு வர்றேன்…” மணியரசன் வேலைக்குப் புறப்பட்டான். தேவையானவற்றை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டான்.

“அத்தான்! கொஞ்சம் நில்லுங்களேன்…” ஓடிவந்து பின்புறமாக அவன் தோளை வளைத்தாள்.

“வேலைக்குப் புறப்படும்போது என்ன இதுவெல்லாம்? விடு டி…”

“உங்க மேல ஆசைதான்…” அவள் கிசுகிசுத்துக் கொண்டே அவன் காதைக் கடித்தாள். அவள் முந்திய இரவின் இன்ப நினைவுகளிலேயே இன்னும் தோய்ந்திருந்தாள்.

“கொஞ்சுவதற்கு நேரம் காலம் கிடையாதா?…”

“அத்தான். இன்னிக்கு என்ன குழம்பு வைக்கணும்?…”

“இதையும் நான்தான் சொல்லணுமா?…”

“ஆமா!…”

“எல்லாமே நான் சொல்லித்தான் செய்வாயா? சுயமாகச் சிந்திக்கத் தெரியாதா?”

“தெ…ரி…யா…து…”

“தலைவிதி…”

அவன் புறப்படத் தயாரானான்.

“அத்தான்…குழம்பு…”

“சரி, சாம்பார் வைத்துக் கத்திரிக்காய் பச்சடி செய்…”

“அத்தானென்றால் அத்தான்தான்…” குதூகலத்துடன் அவன் கன்னத்தில் ஓர் “இச்” பதித்தாள்.

“ரொம்ப அழகுதான்!…”

மணியரசன் புறப்பட்டான்.

இது நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருநாள் பிற் பகல் நேரம். பூங்கொடி வாயிற்படியில் அமர்ந்திருந்தாள். குழந்தை அமலன் தத்தி தத்தி நடை பயில்வதை ரசித்துக் கொண்டிருந்தாள்.

ஐந்தாவது மாடியில் அமைந்திருந்த அந்த அடுக்குமாடி வீட்டின் “ஐந்தடியில்” திடீரென்று தோன்றிய, நீலநிற உடையிலிருந்த போலீஸ்காரர்கள் இருவர் ஒவ்வொரு வீட்டின் எண்ணையும் சரி பார்த்த வண்ணம் நடந்து வந்துகொண்டிருந்தனர்.

“நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள்?…” என்று பூங்கொடி மலாயில் கேட்க வாயெடுத்தாள். அதற்குள் அவர்களுள் ஒருவரே முந்திக் கொண்டு, கதவு எண்ணைச் சரிபார்த்துத் தமக்குள் திருப்தி அடைந்தவராய், மணியரசன் பெயரைக் கூறி, “இது அவர் வீடுதானே?” என்று கேட்டார்.

பூங்கொடி “ஆம்” என்று கூறும் போதே அவளுக்கு என்னவோ செய்தது. காரணம் புரியாத ஒரு கலக்கம்.

“எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரு துக்கச் செய்தி கொண்டு வந்திருக்கிறோம்…” என்று தொடங்கி,

நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட மணியரசன் அலுவலகத் திலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே மாண்டுவிட்ட செய்தியைக் கிளிப்பிள்ளையைப் போல் சொல்லி முடித்தனர்.

“ஆ…” என்ற அலறலோடு தரையில் மயங்கி விழுந்தாள் பூங்கொடி. முழுவதையும் கேட்கும் அளவிற்கு போதைக்கு மன வலிமை இல்லை.

பூங்கொடி திரும்பவும் கண்விழித்தபோது முதல் முறையாக மணியரசன் இல்லாத உலகத்தைப் பார்த்தாள். அவலம்!… அவலம்!

அவளைக் கட்டிக்கொண்டு கொண்டு அழுதார்கள்; முட்டிக் கொண்டு அழுதார்கள்; ஒப்பாரி வைத்து அழுதார்கள். அவள் பூங்கொடியின் கண்கள் வற்றிப் போய்விட்டன. அவள் வாழ்வைப் போல.

“இந்த வெகுளிப் பெண், பச்சைக் குழந்தையோடு எப்படிக் காலந் தள்ளப்போறாளோ?…” முதிய பெண்கள் அவள் நிலையை ஒப்பாரிப் பாட்டாய்ப் பாடினர்.

ஒன்றுமே அறியாத குழந்தை அமலன் கிடத்தியிருந்த மணியரசனின் மேல் போர்த்தி இருந்த தாயின் கூரைப் புடவையை இழுத்து விளையாடியது, அங்கிருந்தோர் இதயத்தைப் பிழிந்தது.

எல்லாமே சொல்லி வைத்தாற்போல முடிந்து ஒரு வாரமும் ஓடிவிட்டது. ஆறுதல் கூறிய உறவினர் கூட்டமும் தேறுதல் கூறிய நண்பர் கூட்டமும் குறைந்துவிட்டன. பூங்கொடி மாமூல் நிலைக்குத் திரும்பாமலே கண்ணீர் உகுத்தவண்ணம் தானிருந்தாள்.

“பூங்கொடி, அமலனின் பிறந்த “சூராவை” எடுத்துக் கொண்டு வா”.

“எதுக்கு?…”

“அவனுக்கு ஒரு “இன்சூரன்ஸ் பாலிசி” எடுக்கணும். தேசிய தொழிற்சங்க காங்கிரசின் “இன்கம்” அமைப்பு, சிறு குழந்தைகளின் நலனுக்காக இதை ஆரம்பித்திருக்கிறார்கள்…”

“அப்படியா?…”

“ஆமா…”

“நீங்கதான் ஒரு “பாலிசி” எடுத்திருக்கீங்களே?…”

“எல்லாம் உன்னுடைய நன்மைக்காகத்தான்!… “

“ஆமா, சும்மா சொல்லாதீங்க…”

“உண்மையாகத்தான் சொல்கிறேன் பூங்கொடி. உலகமே தெரியாத அப்பாவியை மனைவியாக ஏற்றுக் கொண்டுவிட்டேன். என் பிள்ளைக்காவது நான் ஒரு நல்ல பாதுகாப்பு ஏற்படுத்தணுமில்லையா? பயல் பெயரில் ஒரு “எடுகேஷன் பாலிசி” எடுக்கப் போறேன். இடையில எனக்கு ஏதாவது ஆனாலும், பையனுக்கு முழுத் தொகையும் கிடைக்கும். அது அவனது படிப்பிற்கு உதவுமே…”

பூங்கொடியின் உடல் சிலிர்த்தது. அவள் எழுந்து வெளியே வந்தாள். அடுக்குமாடி வீடுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிறைந்து காணப்படுகின்றன. வான் வெளி தெளிவாக இருக்கிறது. ஆனால் பூங்கொடியின் மன நிலைதான் தெளிவாக இல்லை.

மேசையின் மீது மணியரசன் பணிபுரிந்த அலுவலகத்திலிருந்தும், காப்புறுதி அமைப்புக்களிலிருந்தும் வந்த கடிதங்கள் கத்தை கத்தையாகக் கிடக்கின்றன.

என்ன செய்வது? ஒன்றுமே தெரியவில்லை. அவள் இன்னமும் ஒரு நிலவுதான். அவளுக்கு நல்லதொரு வழி காட்டுவதற்கு ஒருவன் வரமாட்டானா? அவன் கடவுளின் தூதுவனாகவே இருக்கட்டுமே!

– 1979, புதிய அலைகள், முதற் பதிப்பு: மார்ச் 1984, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *