கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 21, 2023
பார்வையிட்டோர்: 10,467 
 
 

(2001ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 

‘இன்று சாமியார் வழக்கு’ என்று என் உயர எழுத்துக்களில் ஒரு லோக்கல் தினசரி முதல் பக்கத்தில் ஜோடித்திருந்தது. சென்னையில் சோம்பேறிகள் நிறைய இருக்கிறார்கள். பலன்… கோர்ட்டில் நல்ல கூட்டம். 

நானும் வஸந்தும் பின் பக்கமாக நுழைந்து, அவசரமாக கேண்டீனில் இட்லி, வடை, காப்பி சாப்பிட்டுவிட்டு கோர்ட்டுக்குச் சென்றபோது, ‘கோர்ட்டின் வெளிவாசலில் ‘கிருஷ்ணா மிஷன், உலக மிஷன், அதைக் களங்கப்படுத்தாதே’, ‘சூரியனை மேகம் சில நிமிஷங்கள்தான் மறைக்கும்’ என்று அவசர எழுத்துக்களில் அட்டைகளில் எழுதிய போர்டுகள் தாங்கிப் பல இளைஞர்கள்,பெண்கள், வெள்ளைக்காரர்கள், சின்ன சுவாமி கள், கைக்குழந்தையுடன் தாய்மார்கள் எல்லாரும் நின்று கொண்டிருந்தார்கள். 

நடுவே ஆர்மோனியம் கேட்டது. அகண்ட பஜனை! நான் சென்ஸ், சில சில்லறை ரௌடிகள் எந்தப் பக்கம் எப்போது சோடா பாட்டில் எறியலாம் என்று யோசித்துக்கொண்டிருந் தார்கள். எல்லோரும் சுவாமி வரக் காத்திருந்தார்கள். ரிசர்வி லிருந்து போலீஸ்காரர்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தார்கள். 

சுவாமி ஷெவர்லே காரில் வந்து இறங்கினார். அவரை அடை காத்து அணைத்து பின் வழியாகக் கடத்தல் செய்து உள்ளே கொண்டு சென்றுவிட்டேன். ஓர் இளம்பெண் ஆவேசத்தில் ஜாக்கெட்டை அவிழ்த்துவிட, அவளை நோக்கிச் சென்ற கூட்டம் எங்களுக்குச் சாதகமாக இருந்தது. 

சுவாமியை அறையில் உட்காரச் செய்து, ‘சுவாமிஜி, நீங்கள் வந்து நின்றால் போதும். அங்கே எதுவும் வித்தை செய்து காட்ட வேண்டிய அவசியமில்லை. தண்ணீரைப் பாலாக்குவது, மோராக்குவது, விபூதி கொட்டுவது இதெல்லாம் வேண்டாம். உங்களை நான் சாட்சியாக விசாரிக்கப்போவதில்லை’ என்றேன். அவர் புன்னகைத்தார். ‘உனக்கு இன்னும் நம்பிக்கை ஏற்பட வில்லை’ என்று சொன்னது மோகனப் புன்னகை. ‘சுவாமிஜி! நோ ட்ரிக்ஸ்’ என்றேன். அம்மாள் விசிறினாள். கூண்டுக்குக்கூட வந்து விசிறுவார்கள்போல் இருந்தது. நான் சுவாமிஜியை நேராகப் பார்த்தேன். 

சாந்தம் நிஜமாகவே தவழ்ந்தது. ஒரு நிமிஷ பேதலிப்பில் அவரிடம் கடவுள்தனம் இருக்கிறதா என்று சந்தேகம் ஏற்பட்டு, விழுந்து சேவிக்கலாம் என்று தோன்றியது. நல்ல அழகான சிரிப்பு. இவர் சாட்சி சொல்லவேண்டாம். சிரித்தால் போதும். கன்னிப் பெண்கள், கனம் கோர்ட்டார்கள் எல்லோரையும் கவர்ந்துவிடும். எதிரே ஹாலில் அந்தப் பெண் மாயாவைச் சுற்றி இரண்டு வக்கீல்களும் அவள் அண்ணனும் அர்ஜுனனுக்கு முன் ருஷ்ண பரமாத்மாக்கள் உபதேசம் செய்வதுபோல் புகட்டிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து அவள் முகபாவத்தை அனு மானிக்க முடியவில்லை. சிரத்தையின்மை? கொஞ்சம் பயம்? 

கோர்ட்டில் மைக் கிடையாது. தமிழ் சினிமா போல் அவரவர் இஷ்டத்துக்குச் சொற்பொழிய முடியாது. வெள்ளமாக சாட்சி வார்த்தைகளை, மாஜிஸ்டிரேட் சொல்லி எழுதி எழுதி மாய வேண்டும் அல்லது அருகில் இருப்பவர் டைப் அடிக்க வேண்டும். பொதுவாகவே நிதானமாக மாடு அசை போடு வதைப் போலத்தான் நடக்கும். கோர்ட்டில் நடந்தது பூராவையும் எழுதினால் ரத்தினம் பொடி விளம்பரம் வரைக்கும் எழுத வேண்டி இருக்கும். எனவே சுருக்கம். 

கட்சிகள்: சுவாமியின் பக்கம் அடியேனும் வஸந்த்தும். 

பிராசிக்யூஷன்: சர்க்கார் வக்கீல் பழனிசாமி, மாயாவுக்காக பிரத் யேகமாக சுவாமிநாதன் என்பவர் (என்னுடன் சில தினங்கள் இருந்துவிட்டு ஒரு மனஸ்தாபத் தில் விலகினவர். நிறையப் பணம் பண்ணிவிட்ட தாகக் கேள்வி). 

இனி சில பகுதிகள்: 

கணேஷ் : யுவர் ஆனர்! பிராசிக்யூஷன் சாட்சிகளின் பட்டியல் என்னிடம் இல்லை. குமாரி மாயாவின் அண்ணன் திரு ஆர். ரமேஷ் என்பவர் அதில் இல்லை என்றால் அவரை கோர்ட் சாட்சியாக விசாரிக்க சம்மன் அனுப்பப்படவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 

பழனிசாமி: அந்தக் கஷ்டம் நண்பருக்கு வேண்டாம். திரு ரமேஷ் எங்கள் முக்கிய சாட்சிகளில் ஒருவர். 

சாமிநாதன்: யுவர் ஆனர். அந்தப் புகார் இந்தக் கோர்ட்டில், ஆதாரமாக இ.பி.கோ.375-ன்படி பலாத்காரம் மற்றும் பிற விஷயங்களை விசாரித்துத் தீர்க்கப் படப் போகிறது. இந்த வழக்கில் உங்கள் உத்தர வைத் தொடர்ந்து சுவாமி கிருஷ்ணானந்தாவின் மேல் ஒரு சிவில் வழக்கு தொடர இருக்கிறோம். என் கட்சிக்காரர் இந்த வழக்கின் சம்பவத்தால் மிகவும் மானமிழந்து அவள் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக நஷ்ட ஈடு கோரப் போகிறோம். 

கோர்ட்: அது சிவில் வழக்கு. இந்த வழக்கில் சுவாமி குற்றவாளியா, இல்லையா என்பதைத்தான் இந்தக் கோர்ட் தீர்மானிக்கும். அதற்குரிய சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கத்தான் எனக்கு வாய்ப்பு இருக்கிறது. 

மாயா: (முதல் சாட்சியத்தின் சில பகுதிகள்) சுவாமி என்னை அழைத்தார்… மிகவும் கனிவாக. என் உடலைத் தொட்டு வருடினார்… டாக்டர் சரஸ்வதி என்பவர் (கோர்ட்: சற்று உரக்கப் பேசுங்கள். காதில் விழுவதில்லை) பரிசோதித் தார். என் ஹைமன் பாகம்… சேதமுற்றிருந்த தாகச் சொன்னார். பலாத்காரத்தினால் சில இடங் களில் ரத்தக் காயம் இருந்தது. ரிப்போர்ட் இருக் கிறது! அந்தப் பூஜையில் ஒன்பது பெண்கள் இருந்தார்கள் என நினைக்கிறேன். இந்த மாதிரி பொதுக் கோர்ட்டில் புகார் செய்து சாட்சி சொல் வதில் என் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படு கிறது என்பதை நான் அறிவேன். என் குறிக் கோள் என் மாதிரி அபலைப் பெண்களுக்கு இந்த வழக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதுதான். இதைத் தீர்த்துவிடலாம் என்று கிருஷ்ணா மிஷனில் ஒரு லட்சம் வரை பணம் தருவதாக ஒருவர் மூலம் அணுகிச் சொன் னார்கள். அந்த மாதிரி என்னை அணுகிச் சொன்னவர் இந்தக் கோர்ட்டில் இருக்கிறார். அதோ அவர்தான். நான் பணம் வாங்க மறுத்து விட்டேன். சர்க்கார் நியாயப்படி என்ன கொடுக் கிறார்களோ அல்லது கொடுக்காமல் போகிறார் களோ அதை ஏற்றுக்கொள்வேன். நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். நான் மன நிம்மதியைத் தேடித்தான் கிருஷ்ணா மிஷனுக்குச் சென்றேன். மன நிம்மதிக்குப் பதில் எனக்குக் கிடைத்தவை காயங்கள். சுவாமி என்னைக் கடித்தார். மற்ற பெண்கள், ‘அது மிகவும் சகஜமாக நிகழ்வது.நீ கோபிகா பூஜை பார்க்கவேண்டும், நிறைய விளையாடுவார்’ என்றார்கள். அவர்கள் மரியு வானா உட்கொள்கிறார்கள். இரவு முழுவதும் விழித்து இருக்கிறார்கள்…’ 

கணேஷ்: (குறுக்கு விசாரணையின்போது) அந்தப் புகார் கடிதத்தை நீங்களேதான் எழுதினீர்களா? 

மாயா: ஆம். 

கணேஷ்: அதில் எழுதியிருப்பது எல்லாம் நடந்ததா? 

மாயா: ஆம். 

கணேஷ்: ஹேவஜ்ர சக்தி பூஜை – இந்தப் பெயர் உங்க ளுக்கு எப்படிக் கிடைத்தது? 

மாயா: அவர்கள் பேசிக்கொண்டார்கள். அந்தப் பூஜை யின் பெயர் அது என்று. 

கணேஷ்: நீங்கள் அந்தப் புகாரைத் தன்னிச்சையாக, ஆசிரமத்தில் நடந்ததை விவரமாக எழுதினீர்களா! வேறு ஒருவரின் உதவியையும் நாடவில்லையா? 

மாயா: (தன் வக்கீலைப் பார்த்துக்கொண்டு) நான்தான் எழுதினேன். 

கணேஷ்: ஆசிரமத்துக்குச் செல்லுமுன் நீங்கள் கன்னியா? 

பழனிசாமி, 
சாமிநாதன்: அப்ஜெக்ஷன்! அப்ஜெக்ஷன்! 

கணேஷ்: டாக்டர் சரஸ்வதியை நீங்கள் எப்போது பார்த்தீர்கள்? 

மாயா: சம்பவம் நடந்த மறுதினம். 

கணேஷ்: டாக்டர் சரஸ்வதியிடம் அதற்குமுன் எப்போதாவது சென்றிருக்கிறீர்களா? 

மாயா: சென்றிருக்கலாம். 

கணேஷ்: எதற்கு? 

மாயா: ஒரு டாக்டரிடம் எதற்குப் போவார்கள்?

கணேஷ் : என் கேள்விக்குப் பதில் தேவை. எதற்கு? 

மாயா: ஜலதோஷம்! இருமல்! சரிதானே?

கணேஷ்: டாக்டர் சரஸ்வதி ஒரு கைனகாலஜிஸ்ட். அவரிடம் ஜலதோஷத்துக்கும் இருமலுக்கும் போவார்களா? எந்த இடத்தில் இருமல்?

பழனிசாமி: அப்ஜெக்ஷன், கீழ்த்தரமான விஷமத்தன மான… 

கோர்ட்: மிஸ்டர் கணேஷ்! 

கணேஷ்: சாரி, யுவர் ஆனர்! மிஸ் மாயா! நீங்கள் டாக்டர் சரஸ்வதியிடம் ஒரு ஆப்பரேஷன் செய்துகொள் வதற்குச் சென்றது ஞாபகம் இருக்கிறதா? 

பழனிசாமி, சாமிநாதன்: (மிக ஆக்ரோஷமாக) அப்ஜெக்ஷன் யுவர் ஆனர். 

கோர்ட்: மிஸ்டர் கணேஷ்! இந்தக் கேள்வி அநாவசியமானது. 

கணேஷ்: யுவர் ஆனர்,ஷி ஸேஸ் ஷி இஸ் எ வர்ஜின். ஷி இஸ் நாட். 

கோர்ட்: ஷி வாஸ் ஒன்ஸ். இந்தக் கேஸ் மாயாவின் கன்னி மையைப் பற்றி அல்ல என்று நினைக்கிறேன். 

சாமிநாதன்: பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கடந்த காலத்தைப் பற்றி நமக்கு அக்கறை இல்லை என்று நினைக்கிறேன். 

கணேஷ்: பலாத்காரம் நடக்கவே இல்லை. நான் நிரூபிக்கிறேன். மிஸ் மாயா! அந்தப் புகாரை நீங்கள் எங்கே எழுதினீர்கள்? 

மாயா: போலீஸ் நிலையத்தில். 

கணேஷ்: எழுதினீர்களா? எழுதி, கொண்டுவந்து கொடுத்தீர்களா? 

கணேஷ்: அதில் எழுதியிருப்பது உங்கள் கையெழுத்திலா? 

மாயா: ஞாபகமில்லை. 

கணேஷ்: ஆச்சரியம்! ஞாபகமில்லையா? அதில் எழுதியிருப்பது உங்கள் கையெழுத்து இல்லை என்று சொல்கிறேன். 

மாயா: நான் சொல்லி யாராவது எழுதி இருக்கலாம். என் அண்ணனாக இருக்கலாம். எனக்குக் கோர்வையாக எழுத வராது. நான் சொல்லச் சொல்ல அவன் அப்படியே எழுதினான். 

கணேஷ்: சற்றுமுன் சாட்சி சொல்கையில் நான் இந்தப் புகாரைத் தன்னிச்சையாகத்தான் எழுதினேன்; எவருடைய உதவியையும் நாடவில்லை என்றீர்கள். இப்போது என் அண்ணன் எழுதி நான் கையெழுத்து போட்டேன் என்கிறீர்கள். எது உண்மை? 

மாயா: இப்போது சொன்னதுதான் நிஜம். 

வஸந்த்: (தொடர்ந்து) மிஸ் மாயா! நீங்கள் ஒர்க்கிங் கர்ல்ஸ் ஹாஸ்டலிலிருந்து சென்ற செப்டம்பர் மாதம் விலக்கப்பட்டது உண்மையா? 

பழனிசாமி: அப்ஜெக்ஷன். 

கோர்ட்: கேள்வி அநாவசியமானது. 

வஸந்த்: மிஸ் மாயா! உங்களுக்கு ஏ.சேதுராமன் என்பவரைத் தெரியுமா? 

மாயா: தெரியாது. 

வஸந்த்: நீங்கள் வேலை பார்த்து வந்த மெக்கின்ஸி கம்பெனியில் அஸிஸ்டண்ட் மானேஜர் சேதுராமன் தெரியாது. 

மாயா: பெயர் ஞாபகம் இல்லை. 

வஸந்த்: அவருக்கு எழுதிய கடிதம் ஞாபகம் இருக்கிறதா? ‘நீங்கள் என்னைக் கல்யாணம் செய்துகொள்ளா விட்டால் உடனே வழக்கு போடுவேன்.’ 

மாயா: இல்லை, இல்லவே இல்லை. இது அபாண்டம்! 

பழனிசாமி: யுவர் ஆனர்! திஸ் இஸ் தி லிமிட். 

கோர்ட்: மிஸ்டர் கணேஷ்! உங்கள் ஜூனியர் வரம்பு மீறுகிறார். 

கணேஷ்: மன்னிக்கவும். இந்தப் பெண் ஒரு தேர்ந்த ப்ளாக்மெய்லர் என்பது எங்கள் வாதம். 

கோர்ட்: அதைக் கண்டுபிடித்துவிடலாம். சுவாமியின் கேஸில் புகாரில் சொல்லப்பட்டது நடக்க வில்லை என்று நீங்கள் நிரூபித்தால் போதும். அதை விட்டுவிட்டு, புகாரை யார் எழுதியது; மாயா போன வருஷம் எந்த டாக்டரிடம் எதற்குப் போனாள்… இதெல்லாம் வழக்குக்கு அப்பாற் பட்டது. உங்கள் கேள்விகளைக் கட்டுப்படுத்த வேண்டும். 

வஸந்த்: மிஸ் மாயா! மற்றொரு… 

கணேஷ்: (தடுத்து நிறுத்தி) மேலே கேள்விகள் எதுவும் இல்லை யுவர் ஆனர். 

மாயாவை விட்டுவிட்டு அடுத்து சாட்சி சொன்ன அவன் அண்ணன் ரமேஷைப் பிடித்துக்கொண்டோம். 

ரமேஷ் : (தன் பிரதான சாட்சியத்தில்) அவள் அன்று காலை கண்ணீர் ததும்ப, உடல் துவண்டு திரும்பி வந்தாள். நடந்த விஷயத்தைத் தயக்கத்துடன் சொன்னதும், அந்த மாதிரி போலி ஆசாமிகளை அம்பலப்படுத்த நான்தான் கம்ப்ளெய்ண்ட் கொடுக்கத் தீர்மானித்தேன். அவள் சொல்லச் சொல்ல நான்தான் எழுதிக்கொடுத்தேன். எங்கள் குறிக்கோள் சமூகத்தில் பெண்களுக்கு இந்த மாதிரிப் போலிகளிடமிருந்து விடுதலை வேண்டும்.(எட்ஸெட்ரா… எட்ஸெட்ரா…) 

கணேஷ்: (குறுக்கு விசாரணையின்போது) மிஸ்டர் ரமேஷ், நீங்கள் கன்னிமரா நூல்நிலையத்தில் மெம்பரா? 

ரமேஷ்: (யோசித்து) ஆம். 

கணேஷ்: சம்பவம் நடந்த மறுதினம் நீங்கள் அந்த நூல் நிலையத்திலிருந்து ஒரு புத்தகம் எடுத்தீர்கள். ஞாபகம் இருக்கிறதா? 

ரமேஷ்: ஞாபகமில்லை. எவ்வளவோ புத்தகம். 

கணேஷ் : நான் ஞாபகப்படுத்துகிறேன். ஸர் ஜான் உட்ரஃபின் தந்த்ரா என்கிற புத்தகம்.’ 

ரமேஷ்: இருக்கலாம். படிப்பதற்கு எடுத்திருக்கலாம். 

கணேஷ்: திடீரென்று தந்த்ர சாஸ்திரத்தில் உங்களுக்கு என்ன அக்கறை? 

ரமேஷ்: பொதுவாகவே எனக்கு அந்த விஷயங்களில் ஆர்வம் உண்டு. 

கணேஷ்: யுவர் ஆனர்! என்னிடம் அந்தப் புத்தகத்தின் மற்றொரு பிரதி இருக்கிறது. அதை டிபென்ஸ் தரப்பு எக்ஸிபிட்டாக சமர்ப்பிக்கிறேன். அதில் 108-ம் பக்கத்தில் ஹேவஜ்ர பூஜை என்கிற அத்தியாயத்தில் அடிக் கோடிட்டிருக்கிற வர்ணனையை உங்கள் பார்வைக்குக் கொணர விரும்புகிறேன். அந்த வரிகள் மாயாவின் குற்றச்சாட்டில் எழுதப்பட்டிருக்கிற பல வரிகளுடன் அப்படியே எழுத்துக்கு எழுத்து மாறாமல் ஒத்துப்போவதைக் கவனிக்க விரும்புகிறேன். 

(வஸந்த் அருகில் சென்று விளக்குகிறான்). 

கோர்ட்: (அதை ஆராய்ந்து) மிஸ்டர் ரமேஷ்? 

ரமேஷ் : இது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம். 

கணேஷ்: அந்தப் புகார் பொதுவாக தந்த்ரா என்கிற புத்தகத் திலிருந்து காப்பி அடித்து எழுதப்பட்டிருக்கிறது. வடக்குப் பக்கம் வேரை எடுப்பது, பௌர்ணமி நிலவைப் பார்ப்பது, நாபியில் புஷ்பம் வைப்பது, அந்தரங்கத்திலிருந்து ரோமம் எடுப்பது… வாக்கிய அமைப்புகள்கூட மாறவில்லை.

ரமேஷ்: ஹேவஜ்ர பூஜை என்று மாயா சொன்னாள். அதைப் பற்றிக் கொஞ்சம் ரெஃபர் பண்ணி இருக்கலாம். 

கணேஷ்: புகார் முழுவதும் கற்பனை யுவர் ஆனர். மிஸ்டர் ரமேஷ், நீங்கள் எங்கே வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்? 

ரமேஷ் : ஆர்.வி இண்டர்நேஷனல் என்கிற கம்பெனி. 

கணேஷ்: என்ன வேலை? 

ரமேஷ்: ப்ரொப்ரைட்டர் வாசுதேவன் என்பவருக்கு அந்தரங்கக் காரியதரிசியாக… 

கணேஷ்: வாசுதேவன் பிரபல ஏவி.ஆர் க்ரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் அதிபரின் மகன் என்பது தெரியும் அல்லவா? 

ரமேஷ்: தெரியும். 

கணேஷ்: வாசுதேவன் மேல் இன்கம்டாக்ஸ் டிபார்ட் மெண்ட், கஸ்டம்ஸ் இலாகா, வஜ்ரவேலு முதலியார் போன்றோர் பல பல சிவில் கோர்ட்டு களில் வித விதமான தொகைகளுக்கு மூன்றரை லட்சம்வரை வழக்குகள் தொடுத்திருப்பது தெரியுமா உங்களுக்கு? 

ரமேஷ்: இருக்கலாம். 

கணேஷ்: வாசுதேவனுக்கும் அவர் தந்தைக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்பது தெரியுமா?

ரமேஷ்: அது அவர் சொந்த விஷயம்.. 

கணேஷ்: வாசுதேவனின் தந்தை கிருஷ்ணா மிஷனுக்கு ஒரு பெரிய தொகை க்ராண்டாகக் கொடுக்க இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

ரமேஷ் : தெரியாது. 

கணேஷ்: ஆச்சரியம்! யுவர் ஆனர். கிருஷ்ணா மிஷனுக்கு வாசுதேவன் என்பவர் எழுதிய கடிதம் ஒன்றில், ‘அந்தப் பணமெல்லாம் என்னை வந்து சேர வேண்டியது. அதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் அது கோர்ட்டில் செல்லுபடியாகாது’ என்று எழுதி இருக்கும் கடிதம் ஒன்றை டிபென்ஸ் எக்ஸிபிட் இரண்டாகச் சமர்ப்பிக்கிறோம். 

ரமேஷ்: எனக்குத் தெரியாது. 

கணேஷ்: இந்தக் கேஸ் பற்றிப் பத்திரிகைகளில் வந்ததும் வாசுதேவனின் தந்தை அந்த கிராண்ட் தொகை கொடுப்பதை வாபஸ் வாங்கிக்கொண்டுவிட் டார் என்பதும் தெரியுமா உங்களுக்கு? 

ரமேஷ்: தெரியாது. 

கணேஷ்: யுவர் ஆனர், கிருஷ்ணா மிஷனுக்கு வாசுதேவ னின் தந்தையிடமிருந்து வந்த மற்றொரு கடிதத் தைப் பார்வைக்கு வைத்திருக்கிறோம். பத்து லட்சம் ரூபாய் கொடுக்க இருந்தார்கள். அதை வாபஸ் வாங்கிக்கொண்டுவிட்டார்கள். 

கோர்ட்: வாட் ஆர் யூ எய்மிங் அட் மிஸ்டர் கணேஷ்? 

கணேஷ்: யுவர் ஆனர். இந்த வழக்கு ஒரு கான்ஸ்பிரஸி. வாசுதேவனால் தூண்டப்பட்டு, ரமேஷ் இந்த வழக்கை ஜோடித்திருக்கிறார். வாசுதேவன் மிகவும் பணத்தேவையும் கடனும் உள்ளவர். அவர் தந்தையிடம் எல்லாப் பணமும் இருக் கிறது. அதை கிருஷ்ணா மிஷனுக்கு கிராண் டாகக் கொடுக்க இருந்தார். கிருஷ்ணா மிஷனின் மேல் முதலில் களங்கம் விளைவிக்க வேண்டும். அதற்காக ஒரு பெண்ணை – ரமேஷின் தங்கையை- சுவாமி அவர்களின்மேல் புகார் செய்யச் சொல்லி அந்தப் புகார் நிஜமாக தொனிக்கவேண்டும் என்பதற்காக கன்னிமரா நூல் நிலையத்திலிருந்து புத்தகம் எடுத்து, ஹேவஜ்ர பூஜை பற்றிப் படித்து அந்த வரிகளை உபயோகித்து… அவர்கள் நினைத்தது நடந்துவிட்டது. அந்த கிராண்ட் தொகை இந்த வழக்கு விவரங்கள் பிரபல மானதும் மறுக்கப்பட்டுவிட்டது. தந்தையிட மிருந்து மகன் பெற விரும்பிய லட்சங்கள், அதை அடைய முதலில் என்ன செய்ய வேண்டும்? மிஷனுக்கு கொடுக்காமல் தவிர்க்கவேண்டும். பிறகு தந்தையுடன் சமாதானமானதும்.. யுவர் ஆனர், நீங்கள் விரும்பினால் வாசுதேவன் என்பவரைக் கோர்ட் விட்னஸாக ஸம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டுகிறேன். 

கோர்ட்: கோர்ட்டை இப்போது அட்ஜர்ன் செய்கிறேன். பிற்பகல் இதைப் பற்றி முடிவு செய்கிறேன். 

மேலே விவரிக்கத் தேவையில்லை. வழக்கை சுலபமாக வென்று விட்டோம். தீர்ப்பு அளிக்கும்போது, ‘புகாரில் சொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றிருக்குமா என்பது பற்றி நிறையச் சந்தேகங்கள் எழுகின்றன. சுவாமியின் சர்வதேச பிம்பத்துக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சிதான் தெரிகிறது. இந்தப் புகாருக்கு ஆதாரமாகப் பண நோக்கம் இருப்பதும் தெரிகிறது. டிபென்ஸ் தரப்பு விவாதத்தின் படி ஸ்ரீவாசுதேவன், ரமேஷ், மாயா மூவரும் சேர்ந்து திட்டமிட்டு இதைச் செய்திருக்கலாம் என்று நம்புவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.’ 

‘வெற்றி!’ 

கேஸ் வெற்றி பெற்ற மறுதினம் சுவாமி அவர்களைச் சந்திக்க கிருஷ்ணா மிஷனுக்குச் சென்றிருந்தோம். அம்மாள் புன்னகையாக வரவேற்றாள். 

மிஷனே கோலாகலமாக இருந்தது. தோரணங்கள் புதிதாகத் தென்பட்டன. பஜனைகள் இன்னும் உரக்க ஒலித்தன. பூக்களின் நிறம்கூடப் புதிய ஒளி பெற்றிருந்தது. எனக்கு வெள்ளித் தட்டில் ஆப்பிள், ஆரஞ்சு, வெற்றிலைப்பாக்கு, கரன்ஸி நோட்டுகள் ஆகியவை அளிக்கப்பட்டன. தட்டையும் எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். சுவாமி தியானத்தில் இருந்தார். என்னைச் சந்திப்பதற்காகக் கருணை கூர்ந்து ஒரு நிமிஷம் வந்தார். நான் எழுந்து நின்றேன். ‘உட்கார்’ என்று கை அசைத்தார். புன்னகைத் தார். ‘சொல்’ என்றார், 

‘சுலபமாக வென்று விட்டோம்’ என்றேன். 

‘தெரியும். உனக்கு முதலில் இருந்த சந்தேகம் விலகி விட்டதல்லவா?’ 

‘விலகிவிட்டது சுவாமி.’ 

‘நம்பிக்கைதான் எதற்கும் ஆதாரம் என்பது தெரிந்ததா?’ 

‘நம்பிக்கை ஏற்பட்டு விட்டது சுவாமி! நான் என் கடமையைச் செய்தேன். என் முதல் கடமை சந்தேகிப்பது.’ 

‘தப்பு! முதல் கடமை நம்புவது. வக்கீலாக இருந்தாலும் லோக பரிபாலனம் செய்பவனாக இருந்தாலும் நம்பிக்கை. எதிலாவது நம்பிக்கை இல்லாமல் அவன் கடவுளை எய்த மாட்டான். அன்றாட சந்தேகங்களை ஒழித்துவிட்டு, நிர்மல மாகக் கடவுளை அணுகு. வரவேற்பார். உன் பார்வையில், புறப்பார்வையில் இருக்கும் மாயத்திரையை விலக்கி..’ சுவாமி தன் கையை ஒரு சுற்றுச் சுற்றி ஒரு சிறிய தங்கக் கிருஷ்ணனை உருவாக்கி எனக்குக் கொடுத்தார். வஸந்த் அதை வாங்கி ஆச்சரியத்துடன் பார்த்தான். 

நான் சுவாமியை விழுந்து சேவித்தேன். 

‘சுவாமி, நான் வருகிறேன்.’ 

‘செல்! உண்மையால் உலகத்தை வெல்!’ 

மிஷனிலிருந்து திரும்பும்போது காரில் வஸந்த் கேட்டான். ‘பாஸ்! அந்த மனிதர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை.’ 

‘எனக்கு விளங்கிவிட்டது. அவரிடம் கடவுள் அம்சம் இருக்கிறது. நிச்சயம் இருக்கிறது.’ 

கிருஷ்ண விக்கிரகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்து, ‘தங்கம் தான்’ என்றான். ‘நம் நாட்டின் உணவுப் பிரச்னையைத் தீர்க்க அவர் மாதிரி ஆசாமிதான் வேண்டும். ‘ஹிக்’ என்று கையைச் சுழற்றி, ‘ஒரு பிளேட் சாப்பாடு வற்றல் குழம்புடன்’ என்றான். ‘ஐ ஸீ. எனக்கு இன்னும் நம்பிக்கை இல்லை. உங்களுக்கு?’ 

‘எனக்குப் பூரண நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. நம்பிக்கையில் தான் உலகமே சுழல்கிறது.’ 

‘ஓம் சாந்தி! பாஸ்! உங்கள் ப்ரீஃப்கேஸ் எங்கே?’ 

காரில் தேடினோம். அகப்படவில்லை. 

‘மாயமாய் மறைந்துவிட்டது.’ 

‘இல்லை, மிஷனில் அந்த அறையில் போட்டுவிட்டு வந்து விட்டேன்.’ 

‘அவர்கள் எடுத்து வைத்திருப்பார்கள். அப்புறம் அனுப்பி விடுவார்கள்.’ 

‘இல்லை வஸந்த். அதில் அடுத்த கேஸுக்கான மிக முக்கிய டாக்குமெண்டுகள் இருக்கின்றன. திரும்பிப் போய் எடுத்து வந்து விடலாம்’. 

மிஷன் வாசலில் காரை நிறுத்திவிட்டு நான் மட்டும் நடந்து உள்ளே சென்றேன். 

மிஷன் அமைதியாக இருந்தது. பஜனை சப்தம் எதுவும் கேட்கவே இல்லை. இரவு அணுகிக்கொண்டிருந்த நேரம். வாயில் அறை காலியாக இருந்தது. அதில் என் ப்ரீஃப்கேஸ் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு அம்மாள் அல்லது யாரிட மாவது சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று உள்ளே நுழைந்தேன். ஆச்சரியம்! காரிடார் காலியாக இருந்தது. அறைகள் மூடி இருந்தன. சுவாமி முன்பு வெளிவந்த அறை ஞாபகம் இருந்தது. அதன் கதவைத் திறக்க முயன்று பார்த்தேன். திறந்தது. மெதுவாகத் திறந்தேன். 

உள்ளே பெரும்பாலும் இருட்டாக இருந்தது. ஒரு இடத்தில் மட்டும் உயரத்தில் சற்று வெளிச்சம் இருந்தது. சுவாமி தெரிந்தார். அவருக்கு எதிரில் ஒரு பெண்… படுத்துக் கொண்டிருக்க, மெதுவாக மிக மெதுவாக, அவள் உடைகளை விலக்கி, ஒரு தாமரை மலரை… 

எல்லாம் மாயா!

(முற்றும்)

– மாயா (குறுநாவல்), வெளிவந்த ஆண்டு: 2001, தினமணி கதிர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *