கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 15, 2023
பார்வையிட்டோர்: 10,755 
 
 

(2001ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

கடவுளை அவ்வளவு சமீபத்தில் பார்க்க எனக்கு இதுவரை சந்தர்ப்பம் ஏற்பட்டதில்லை. சுவாமி கிருஷ்ணானந்த எட்ஸெட்ராவை அந்த அம்மாள் பகவானின் அவதாரம் என்றுதானே சொன்னாள். சுவாமி என் உயரம்தான் இருந்தார். நல்ல நிறமாக இருந்தார். அவர் கண்கள் கூர்மையாக இருந்தன. தலையில் பாட்மிண்டன் பந்துபோல் சீரான, தொட்டுப் பார்க்க ஆவல் தரும் முடி. இளம் தாடியின் மைக்கறுப்பு. மிக ஒழுங்கான பற்கள், ஈறுகள் ரோஜா நிறத்தில். உதடு மெல்லிய உதடு. மறுபடி ரோஜா நிறம்… நல்ல கவர்ச்சிகரமான முகம். மிக நீளமான பளபளக்கும் உடை அலையாகத் தொடர என்னை நோக்கி நடந்து வந்தார். கையில் தாமரைப் பூவைச் சுழற்றிக்கொண்டே வந்தார். 

அம்மாள் அப்படியே விழுந்து சேவித்தாள். அதை அவர் கவனிக்கவே இல்லை. நான் அசிங்கமாக எழுந்து கை கூப்பினேன். ‘நமஸ்காரம்’ என்றேன். 

‘இவர்தான் வக்கீல், பிரபு’ என்றாள் அம்மாள். 

‘கேஸ்! ஆம்! நான் வரவேண்டுமா?’ கவர்ச்சிகரமான குரல் வேறு. 

‘சுவாமி! உங்களுடன் நான் கொஞ்சம் பேசவேண்டும்.’ 

‘பேசு’ என்றார். 

‘தனியாக’ என்றேன். 

‘தனிமை வேண்டாம். எதையும் மறைக்க வேண்டாம்.’ 

நான் அம்மாவைப் பார்த்தேன். அவள் இருப்பதை நான் விரும்பவில்லை. அவள் நகரவில்லை. 

‘எனக்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டும்’ என்றேன். 

‘ஸ்ரீமதி! நீர் கொண்டு வா’ என்றார் சுவாமி. அம்மாள் காணாமல் போனாள். 

‘இந்தக் கேஸ் காகிதங்களைப் படித்தேன். நீங்கள் படித்தீர்களா?’ 

‘இல்லை, எனக்குப் படிக்கவேண்டாம்.’ 

‘கேஸ் என்ன என்று தெரியுமா?’ 

‘தெரியும். என் மேல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதற்கு அவர்கள் தண்டனை தருவார்கள். என்ன தண்டனை?’ 

‘சுவாமி, இந்தக் குற்றச்சாட்டு உண்மையா?’ என்றேன். 

‘உண்மை என்பது என்ன?’ 

அம்மாள் தண்ணீர் கொண்டுவந்தாள். 

‘புரியவில்லை’ என்றேன். 

‘உன் அகராதிப்படி உண்மை என்ன? உதாரணம் சொல்!’ என்றார். 

‘இந்த டம்ளரில் தண்ணீர் இருப்பது உண்மை’ என்றேன். 

சுவாமி சிரித்தார், ‘பார்’ என்றார். 

சில செகண்டுகளுக்கு முன் தெளிவாக இருந்த தண்ணீர் நான் நிமிர்ந்து மறுபடி பார்ப்பதற்குள் நிறம் மாறி நன்னாரி வாசனை அடித்தது. 

‘நீ பார்த்தது தண்ணீரா?’ 

நான் விழிக்கவேண்டியிருந்தது. அம்மாள் மறுபடி சுவாமியை விழுந்து சேவித்தாள். பாதங்களைத் தொட்டாள். சுவாமி என்னையே நிதானமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். சற்றுப் பின் வாங்கிக் கொண்டேன். அந்த டம்ளரை பிரமித்தேன். ‘சாப்பிடு. இனிப்பாக இருக்கும். பயப்படாதே, மயக்கம் தராது!’ என்றார். 

‘என் நண்பனே! திருஷ்டாந்தமாகப் பார்க்கும் விஷயம் எல்லாம் உண்மை என்று சொல்லாதே. முதலில் நம்பு. நம்பிக்கைக்குப் பின்தான் உண்மை என்பதே. பார்ப்பது உண்மை இல்லை. கேட்பது உண்மை இல்லை. ஸ்பரிசிப்பது உண்மை இல்லை. நம்புவதுதான் உண்மை. உனக்கு முதலில் நம்பிக்கை வேண்டும்.’ 

‘சுவாமிஜி’ என்னை அறியாமல் ‘ஜி’ சேர்த்துக்கொண்டேன். ‘என் உலகம் கேள்வி-பதில் உலகம். கோர்ட், சாட்சி, எதிர்க்கட்சி என்று ஒரு நடைமுறைப்படி, மனிதர்கள் விதித்த விதிப்படி, செல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது. உங்கள் கேஸை நான் எடுத்துக்கொண்டால் அதை நடத்தவேண்டியது என் கடமை. நான் இந்தக் கேஸை எடுத்துக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா?’ 

‘இவர்கள் விரும்புகிறார்கள்.’ 

‘நீங்கள்?’ 

‘உன் கேள்விகளைக் கேள்!’ என்றார். 

‘முதல் கேள்வி, உங்களைக் கடவுளின் அவதாரம் என்று இவர்கள் சொல்வதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ 

‘சர்வ தேவோ சரீரஸ்திதா’ என்றார். 

‘எனக்கு சமஸ்கிருதம் வராது’ என்றேன். 

‘தமிழில் சொன்னால் உனக்குப் புரியாது. மேலே கேள்!’ 

நான் காகிதங்களைப் புரட்டினேன். என் கைகள் சற்று நடுங்கின. திடீரென்று காகிதங்கள் ஆகாசத்தில் பறந்து விடுமோ என்பது போன்ற பயம் என்னுள் இருந்தது. என்ன ஆசாமி இவர்? கடவுளா? செப்பிடு வித்தைக்காரரா? ஓரக்கண்ணால் அவரைப் பார்த்தேன். சாந்தமாக எனக்காகக் காத்திருந்தார். 

‘ஹேவஜ்ர சக்தி பூஜை என்பது என்ன?” 

சுவாமி அம்மாவைத் திரும்பி நோக்கினார். ‘என்ன இது?’ என்றார். 

‘அந்தப் பூஜைக்கு அந்தப் பெண்ணை நீங்கள் அழைத்ததாகக் குற்றச்சாட்டு.’ 

‘ஹேவஜ்ர சக்தி… ஆகம சாஸ்திரங்களில் இருக்கும் பூஜை அது.’ 

‘ஆகம சாஸ்திரங்கள் என்றால்?’ 

‘தந்த்ர சாஸ்திரம்; இந்த சமாசாரமெல்லாம் அதில் எப்படி வந்தது?’ 

‘அந்தப் பெண் தன் புகாரில் குறிப்பிட்டிருக்கிறாள். ஹேவஜ்ர பூஜை… கன்னிகைப் பெண்கள் அவளை நீராட்டியது! அலங்கரித்தது… அப்புறம் இன்னும் நுணுக்கமாக, விஸ்தாரமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.’ 

‘யார் அந்தப் பெண்?’ 

‘மாயா!’ என்றேன் அவரைப் பார்த்துக்கொண்டு! 

‘மாயா! என்ன பெயர்ப் பொருத்தம்? பெண்ணே மாயா! அவளை எனக்குத் தெரியாது’ என்றார் திட்டவட்டமாக. 

‘சுவாமி! அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டு மிகத் தெளிவாகவும் நிறைய விவரங்களுடனும் தரப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி பூஜைகள் இந்த இடத்தில் நடக்கின்றனவா?’ 

‘முதலில் நீ ஆடும் வழக்கை முழுவதும் அறிந்துகொள். தந்த்ர சாஸ்திரம் எல்லாம் எனக்குத் தேவையில்லை. ‘ந மந்த்ரம்… ந தந்த்ரம்…’ என்று ஆதிசங்கரர் சொன்னதுபோல் உண்மை பக்தனுக்கு, உண்மை பகவானுக்கு வை எல்லாம் தேவை இல்லை. பெண்களைப் பொருத்தவரையில் அங்கே போ… எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்! அவர்களைக் கேள். பரதேசத்திலிருந்து பெல்ஜியத்திலிருந்து ஒருத்தி உட்கார்ந்திருக்கிறாள். அவளைக் கேள். ‘இங்கே நடப்பது என்ன?’ என்று கேள். இந்த இடம் திறந்த இடம். எங்கு வேண்டுமானாலும் சென்று உண்மை என்ன என்று கேட்கிறாயே; அதை நீயே கண்டுபிடியேன். ஸ்ரீமதி! இவருக்குப் பணம் தேவைப்படும். பணம் கொடு!’ என்று ராஜநடை நடந்து விலகினார். 

சற்று தூரத்தில் திரும்பினார். ‘மற்றொரு விஷயம், உன் தாகம் என்ன ஆயிற்று? நீ அந்த நீரைக் குடிக்கலாம், ஸ்ரீமதி, அவருக்குத் தண்ணீர் தா!’ சுவாமி சென்றுவிட்டார். கீழே வைத்திருந்த அந்தத் தம்ளரை அம்மாள் பெருமையுடன் எனக்குத் தந்தாள். அது பழையபடி நீராக, துல்லியமாக இருந்தது. 

‘இப்போது நம்புகிறீர்களா?’ என்றார் அம்மாள். எனக்குக் குழப்பம் அதிகமாகி இருந்தது. அம்மாள் எதிரே அலமாரியைத் திறந்து சலவை நூறு ரூபாய் நோட்டுகளைக் கொண்டுவந்து என் முன் நீட்டினாள். ‘நாலாயிரத்து இருநூறு ரூபாய் இருக்கிறது’ என்றாள். 

‘எனக்கு இவ்வளவு பணம் தேவையில்லை’ என்றேன். 

‘எவ்வளவு வேண்டும்?’ 

நான் தயங்கினேன். ஒரு பக்கம், ‘என்னைக் கெடுத்தான்’ என்று குற்றம் சாட்டும் பெண். மறுபுறம் தண்ணீரைக் கைச் சொடுக்கலில் நிறம் மாற்றும் சுவாமி. இவர்களுக்கு இடையே உண்மை எங்கு இருக்கிறது? எப்படிக் கண்டுபிடிப்பது? நான் யார் கட்சி? 

‘பணம் தேவை இருந்தால் வாங்கிக்கொள்கிறேன்’ என்றேன். 

‘கேஸை எடுத்துக்கொள்கிறீர்களா என்பது தெரியவேண்டும்.’ 

நான் இம்முறை தயங்கவில்லை. தீர்மானித்தேன். அந்தத் தண்ணீரைக் குடித்தேன். விபூதி வாசனை அடித்தது. 

‘எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். 

அஃபிடவிட் காகிதங்களைச் சேகரித்துக்கொண்டேன். ‘இவை என்னிடம் இருக்கட்டும்’ என்றேன். 

‘செலவுக்குப் பணம் வேண்டாமா? 

‘கவலைப்படாதீர்கள், கேஸ் முடிந்ததும் நிச்சயம் வாங்கிக் கொள்கிறேன்.’ 

நாங்கள் இருவரும் அறையை விட்டு வெளியே வந்தோம். அந்த பஜனை முடிந்திருந்தது. வாசலில் பலர் காத்திருந்தார்கள். ஜுர வேகத்தில் துவண்டிருந்த குழந்தையைச் சுமந்துகொண்டு ஒரு தாய் ஆவலுடன் எங்களை நோக்கி வந்தாள். ‘சுவாமி வருகிறாரா?’ என்றாள். 

‘வருவார், வருவார்.’ 

‘நம்பிக்கை பற்றிச் சொன்னாரே சுவாமி. பாருங்கள் அதுதான்! அந்தக் குழந்தைக்கு இன்று ஜுரம் போய்விடும்’ என்றாள். 

ஒரு வெள்ளைக்காரப் பெண் புடைவை அணிந்துகொண்டு, குங்குமம் இட்டுக்கொண்டு, கையில் பூஜை சாமான்களுடன் சென்றுகொண்டிருந்தாள். 

‘மார்த்தா, ப்ளீஸ் கம் ஹியர்’ என்றாள். 

‘இவர் கணேஷ், லாயர்’ என்று அறிமுகப்படுத்தினாள். 

‘ஹௌ டு யூ டு?’ என்றேன். 

‘வணக்கம்’ என்றாள் சுத்தத் தமிழில். அவள் கண்கள் பச்சையாக இருந்தன. அவளுக்குப் பதினெட்டு வயதிருக்கலாம். வாட்ட சாட்டமான உடல். கன்னிகை பூஜை செய்யவேண்டுமானால் இவளை வைத்துச் செய்திருக்கலாமே? 

‘இவளை நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.’ 

‘இந்த இடம் உங்களுக்குப் பிடிக்கிறதா?” என்றேன். 

‘ஆம்’ என்றாள். ‘நான் செல்லாத நாடில்லை. பார்க்காத காட்சி இல்லை. எனக்கு நிம்மதி இங்கேதான் கிடைத்தது. என் பிரயாணத்தின் முடிவை நான் எய்திவிட்டேன். சுவாமி அவர் களிடம் சரண் அடைந்துவிட்டேன். அவர் கடவுள்!’ அவள் மோதிரத்தில் சுவாமி படம் இருந்தது. 

‘இங்கே என்ன செய்கிறீர்கள்?’ 

‘கிணற்றில் தண்ணீர் எடுக்கிறேன். பூப்பறிக்கிறேன். பூஜைக்குத் தயார் செய்கிறேன். பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கிறேன். கீதை படிக்கிறேன்.’ 

அவள் மேலே சொல்லிக்கொண்டு போனாள். இங்கே எல்லாரும் இப்படித்தான் பேசுவார்கள் என்று தோன்றியது. எனக்கு நிதானமாக யோசிக்கவேண்டும். 

‘நான் வருகிறேன்’ என்றேன். ‘நாளை மறுபடி வருவேன் என்று நினைக்கிறேன்.’ 

‘எவ்வளவு தடவை வேண்டுமானாலும் வாருங்கள். இது திறந்த இடம்’ என்றாள். 

என் ரிஃப்ளெக்ஸ் சக்திகள் காரை ஓட்டிக்கொண்டிருக்க, நான் அந்தத் தண்ணீர் சமாசாரத்தை யோசித்தேன். தினசரி விதிகளுக்கு ஒத்துவரவில்லை அது. தண்ணீர் தானாக நிறம் மாறுமா, என்ன? யாராவது கெமிஸ்ட்ரி ஆசாமியைக் கேட்டால் தெரியும். நம்பிக்கை… அந்த பெல்ஜியம் பெண்ணுக்கு நம்பிக்கை இருக் கிறது. எனக்கு? நான் ஒரு சந்தேகப் பிராணி. கோர்ட்டில் உண்மையைத் தேடித் தேடித் துரத்தி அலுத்தவன். ஒரு பீர் சாப்பிட்டால் உண்மை புலப்படும் என்று தோன்றியது. அல்லது… 

நான் தேடுவது உண்மையை அல்ல; அதுதான் உண்மை. நான் தேடவேண்டியது காரணத்தை. இந்தக் கேஸின் ஏன்? என்ன? இதன் ஏன் அந்த மாயாவிடம்தான் கிடைக்கும். அவள் விலாசம் அஃபிடவிட்டில் இருக்கிறது. அவளைப் போய்ப் பார்த்தால் என்ன? சென்னை 31-ஐ நோக்கி என் காரைச் செலுத்தினேன். 

‘வீ வாண்ட் ஜஸ்டிஸ்’ என்று பெரிசாக எழுதியிருந்த சுவரின் ஓரத்தில் கிராமணித் தெரு என்று சின்னதாக அடக்கமாக எழுதி யிருந்தது. சின்னத் தெரு. அங்கங்கே சில வீடுகள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு அவற்றின் சொந்தக்காரர்களின் திடீர்ப் பணத் தைப் பறை சாற்றின. 

அந்த வீட்டின் வாயிலில் ‘ராவ்பகதூர்’ சேஷாத்திரி என்று மர போர்டில் பலகை தொங்கியது. 1933-ல் எழுதப்பட்டிருக்க வேண்டும். போர்டு ஷீண தசையில் இருந்தது. வீடு சமீபத்தில் வெள்ளை அடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 1970-ல் எழுதப்பட்ட மலேரியா எராடிகேஷன்காரர்களின் அடையாள எண்கள் சுவரில் இன்னும் இருந்தன.கூப்பிட மணி இல்லை. கதவைத் தட்டினேன்.உடம்பில் மார்புவரை ஒன்றுமில்லாமல், கொச கொசவென்று டிஸைன் போட்ட வேஷ்டி அணிந்து, வாயில் சிகரெட் தொங்கும் இளைஞன் ஒருவன், ‘எஸ்’ என்றான். 

‘ஐம் லுக்கிங் ஃபார் மிஸ் மாயா ராஜேஸ்வரன்.’ அவன் நெற்றி சுருங்கியது. 

‘வாட் ஃபார்?’ 

‘அவளுடன் பேசவேண்டும்.’ 

‘நீ யார்?’ 

‘ஒரு லாயர்.’ 

‘அவள் இங்கே இல்லை.’ 

உள்ளே பாக்கீஸாவின் ‘சல்தே சல்தே’ என்ற கானம் கேட்டது. 

உடன் ஒரு பெண் பாடுவதும் கேட்டது. 

‘நீங்கள் யார்?’ என்றேன். 

அவன், ‘எனி மெஸேஜ்?’ என்றான். 

நான், ‘ஆம், அவள் வந்ததும் சொல்லுங்கள். கிருஷ்ணா மிஷனிலிருந்து லாயர் ஒருவர் வந்திருந்தார். ஒரு வழக்கைப் பற்றிப் பேசுவதற்காக வந்திருந்தார். மிஷனைச் சேர்ந்தவர். இந்தக் கேஸை கோர்ட்டுக்கு வெளியே தீர்மானிக்க விரும்புகிறார்கள் என்று சொல்லுங்கள்’ என்றேன். 

அவன் என்னை மேலும் கீழும் பார்த்தான். ‘கொஞ்சம் இருங்கள். அவள் வந்துவிட்டாளா பார்க்கிறேன். நான் அவள் சகோதரன்… மா…யா…!’ நான் சிரித்துக்கொண்டேன், பாட்டு நின்றது. 

‘எஸ்!’ 

‘ஓ எஸ், அவள் வந்துவிட்டாள். உள்ளே வாருங்கள்.’ 

உள்ளே ஹால் போல் இருந்த இடத்தில் நிறையப் புத்தகங்கள் இறைந்திருந்தன. ஆஷ் ட்ரே வழிய சிகரெட் இருந்தது. ரேடியோ ஒன்று, கறை படிந்த காப்பி கோப்பைகள் இரண்டும் இருந்தன. ஒரு டிபன் பாக்ஸ் ஓரத்தில் இருந்தது. 

‘ஒன் மினிட், உட்காருங்கள். நான் ஒரு ஷர்ட் அணிந்துகொண்டு வருகிறேன்.’ 

அந்தப் புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் புரட்டினேன். கன்னிமரா லைப்ரரியிலிருந்து எடுக்கப்பட்ட புத்தகம்.

‘ஹலோ’ என்று சிநேகிதமான குரல் கேட்டு நிமிர்ந்தேன். 

மாயா!

– தொடரும்…

– மாயா (குறுநாவல்), வெளிவந்த ஆண்டு: 2001, தினமணி கதிர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *