அன்புக்கும் உண்டோ?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 10,097 
 

ஆறரை அடித்து விட்டது. அனல் காலம். இப்போதே அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் அறையின் தரையைத் தொட்டு சூடாக்குகிற சூரியன். சுவர்களின் இரவு நேரக் குளுமை, வேகமாய் காணாமல் போய், மெல்ல, மெல்ல சூடு ஏறத் தொடங்குகிற காலை நேரம்.
ஜகதீசனுக்கு தொண்டை காய்ந்தது.
“காபி… காபி…’ என்று, உடம்பில் எத்தனை நரம்புகள் இருக்கின்றனவோ, அத்தனையும் ஏங்கின.
நளினியின் குரல், சமையல் அறையில் இருந்து கேட்டது. குரல் அல்ல அது; பாடல். கூர்ந்து கவனித்த போது பாடலின் வரிகள் தெளிவாகக் கேட்டன.
அன்புக்கும் உண்டோ “நேற்று இல்லாத மாற்றம் என்னது… காற்று என் காதில் ஏதோ சொன்னது…’ என்று அழகாக உச்சரித்து ஆனந்தமாக அவள் பாடிக் கொண்டிருந்ததைக் கேட்க, அவர் ரத்தத்திற்குள் வெப்பம் ஏறத் தொடங்கியது.
“ராட்சசி! ஒரு கப் காபி… ஒரே ஒரு கப் காபி… காத்துக் கிடக்கிறானே கிழவன்…’ என்று, மனதின் ஒரு சிறிய மூலையில் கூடவா தோன்றாது?
“அவளும், அவனும், குழந்தைகளும் புத்தம் புது டிகாஷனும், பாலுமாக குடித்து தீர்த்தார்களே காபியை. அந்த வேட்கைதானே இந்த எண்பத்து நாலு வயது முதியவனுக்கும் இருக்கும் என்று ஏன் தெரியவில்லை?’ என எண்ணினார்.
மெல்ல எழுந்தார்.
கதவைத் திறந்த போது, அவள் குரல் இன்னும் தெளிவாகக் கேட்டது. இப்போது வேறு பாடல். “அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே…’ பாவி, எவ்வளவு ரசித்துப் பாடுகிறாள்?
அன்பென்ற மழையிலே… அன்பு, ஒரு துளி கூட இல்லாதபோது, அது எங்கேயிருந்து கொட்டப் போகிறது? எல்லாம் நாடகம்!
திடீரென்று கோபம் மூக்கு வரை வந்து விட, அவர் சமையலறை வாசலில் போய் நின்றார். “கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே …’ என்று லயித்துப் பாடியவளின் முகம், அவரைக் கண்டதும் மாறியது.
“”என்ன?” என்றாள். பாடும் போது இருந்த குரலைக் காணவில்லை.
“”காபி இன்னும் வரலே …” என்றார்.
“”வரும். நீங்க ரூமுக்கு போங்க!”
“”ஏன்? நான் இங்க வரக் கூடாதா?” என்றார்.
“”என்னது?” என்றாள்.
“”இங்க நான் வரக் கூடாதான்னு கேட்டேன்!”
“”அதான் ஒரு ரூமையே தாரை வார்த்துக் கொடுத்திருக்கோமே… இன்னும் என்ன? போங்க,” என்றாள்.
“”காபி நல்ல சூடா வேணும்.”
“”ஏன் இத்தனை நாளா ஐஸ் காபியா குடிச்சிட்டிருந்தீங்க?” என்றாள்.
“”சூடு போறலே… ”
“”நல்ல மாடா இருந்தா ஒரு சூடு போதும்!” என்று குரலை இறக்கிச் சொன்னாள்.
காதில் விழாதது போல், திரும்பி வந்து தொப்பென்று உட்கார்ந்தார்.
தடதடத்தது, என்ன பேச்சு, என்ன வார்த்தைகள், ஏன் இவ்வளவு குரூரம்? தெரிந்தும் தெரியாதது போல, மகன் கடந்து போகிறானே. ஏன் வயதானால், அவ்வளவு இளக்காரமா? இவர்களுக்கு வயதே ஆகாதா? கடைசி காலத்தில் இவ்வளவு அவமானங்களுக்கு நடுவில் வாழ்க்கை ஏன் வாய்த்தது?
வெயில், தன் யுகங்களின் வெப்பத்தை இன்னும் விடாமல் எரித்து, எரித்து பூமியை பற்ற வைத்துக் கொண்டிருந்தது.
வங்கிக்குள் நுழைந்தார்.
காத்திருந்த வரிசையில் நின்றபோது, எரிச்சல் இன்னும் அதிகமாகியது.
சே… யார் அவர்? பொதுப் பணித்துறையில் இன்ஜினியராக இருந்தவர். கொடிகட்டிப் பறந்தவர். பணம் என்றால் ஆயிரம்தான், லட்சம்தான். ஐந்து பத்து ரூபாய், நோட்டுகளைத் தொட்டுப் பார்த்திருக்கிறாரா என்ன?
கஸ்தூரிதான் எல்லாம். சம்பாதிப்பது எதுவானாலும், அவள் கையில் கொண்டு வந்து கொட்டினால் போதும். சாகசக்காரி! காற்றிலே கோலமிட்டு ரங்கோலி வர்ணமிடும் சாமர்த்தியக்காரி. அவள் பெருக்கிய செல்வம்தான் எல்லாமும்.
ஆனால், பாவம், அரை குறை ஆயுசோடு போய் சேர்நது விட்டாள். அவள் போனபோது, வங்கிக் கணக்கில், அதுவும் வெறும் சேவிங்ஸ் கணக்கில் மட்டும் இருபது லட்சம் இருந்தது. இந்த பத்து வருடங்களில், ஐம்பது லட்சமாகி விட்டது.
இந்த டிவிடெண்ட், அந்த வட்டி என்று, தினம் வரவுதான். வந்து பாஸ் புக்கில் பதிந்து கொண்டு, நிலுவைத் தொகையைப் பார்க்கும்போது, வானத்தைப் பார்க்கிற மாதிரி இருந்தது.
நளினி ராட்சசி! எல்லாம் தெரியும் அவளுக்கு.
தெரிந்தும் எவ்வளவு அலட்சியம்!
வெளியில் வந்து, ஓட்டலுக்குள் நுழைந்தார்.
ஆனியன் தோசை, சாம்பார் வடை, காபி சாப்பிட்டபோது, வயிறு இரைச்சலிட்டது. வேகாத வெங்காயம், பல் இடுக்கில் போய் நச்சென்று உட்கார்ந்தது. வடையில் இருந்த எண்ணை தொண்டையை சிரமப்படுத்தியது.
“”ஜகதீசா… நில்லு, நில்லு…” என்று அன்புமணியின் குரல் கேட்டது.
வேகமாக நடந்து வந்தார் அன்புமணி.
“”அட அன்பு நீயா… ஓட்டலுக்கா?” என்று இவர் முகத்தை துடைத்துக் கொண்டார்.
“”அட, ஆமாம்பா. மருமகளுக்கு உடம்பு முடியலே… சமைக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். பார்சல் வாங்கிகிட்டு போய்கிட்டிருக்கேன். அவளுக்கு சாம்பார் இட்லின்னா ரொம்ப பிடிக்கும். மறுபடி போய் எக்ஸ்ட்ரா சாம்பார் வாங்குறப்பதான் உன்னைப் பார்த்தேன்… என்னப்பா ஓட்டல்?”
“”தலையெழுத்துப்பா!”
“”என்னப்பா சொல்றே?”
“”ராட்சசி!”
“”யாரு… நளினியா?”
“”பின்னே, வேற யாரு? அடிமையை விட கேவலமா வாழுறேன்ப்பா… நின்னா குத்தம், உட்கார்ந்தா குத்தம்… போக்கிடம் இல்லாம துடிக்கிறேன். ஒத்தைப் பிள்ளையைப் பெத்துட்டு, அவன் இப்ப பெண்டாட்டி முந்தானைக்குள்ள ஒளிஞ்சுகிட்டிருக்கிறதைப் பார்த்து, ரத்தக் கண்ணீர் வடிக்கிறேன்ப்பா…” என்றார். தொண்டை வழுக்கியது.
“”ஜகதீசா… நான் சொல்றதைக் கேட்டு நீ கோவிக்கக்கூடாது சரியா?”
“”என்ன?”
“” உன் பேர்ல, ஏன் அவளுக்கு கோபம்?”
“”அதுதானப்பா தெரியலே! என்னப்பா செய்தேன் அவளை. ஒரு மண்ணும் இல்லயே… கடைசி காலத்துல, மாமனாரை வச்சு காப்பாத்தறது கடமை இல்லையா? இப்படி மூஞ்சில அடிக்கிறாளே…
“”காபி, சாப்பாடு, சினிமா, “டிவி’ ன்னு என்ன பேச்சு வந்தாலும், மரங்கொத்தி மாதிரி கொத்துறாப்பா. வாழவும் முடியாம, சாகவும் முடியாம தவிக்கிறேன்ப்பா…” என்றபோது, கோபமும், வேதனையுமாக அவர் முகம் சிவந்தது.
“”இப்ப நீ எதுவும் செய்யலே தான். ஆனால், முன்னாடியும் நீ எதுவும் செய்யலே, அதுதாம்பா காரணம்!”
“”செய்யலியா… என்ன செய்யல… ஒரே மகன் ஒரே மகன்னுதானே லட்ச லட்சமா சேர்த்தேன். அது போதாதா. பங்கு போட்டுக்க யார் இருக்கா… இவதானே முழுசா அனுபவிக்கப் போறா…”
அன்பு அவரைப் பார்த்து மென்மையாக சிரித்தார். தோளை அழுத்தாமல் மென்மையாகப் பற்றியபடி சொன்னார்.
“”பணம், பணம், பணம்ன்னு, இன்னும் கூட மோகம் குறையாம இருக்கியே ஏன்? வாழ்க்கையில், பணமும், அதற்கான தேடலும் முக்கியமான பகுதி. அதுவே முழு வாழ்க்கையில்லே… மனைவிகிட்டே கொடுத்துட்டு, நீ பாட்டுக்கு வேலை, உன் ரேஸ் விளையாட்டு, உன் பார்ன்னு இருந்தே…
“”மனைவி ஒரு டிபிகல் மாமியாரா, நளினிகிட்டே தன் அதிகாரத்தை காண்பிச்சபோது, அதை தடுக்க நீ முயற்சிக்கலே… சின்னப் பெண் தானே விட்டுக் கொடுத்துப் போன்னு உன் கஸ்தூரிகிட்டே சொல்லலே… ஏன்னா, அதை கேட்கிற தார்மீக பலம் உன்கிட்ட இல்லே. பதிலுக்கு உன் ரேஸ், குடி பத்தி கஸ்தூரி கேட்டுடுவாளே, அதனாலே, நீ மவுனமா இருந்தே…
“”மாமியார், மருமகள் பிரச்னையில், நீ பெரியவனா லட்சணமா குறிக்கிட்டு, நளினி கிட்ட ஆதரவா பேசியிருந்தால், அவள் மனசுல உன்னைப் பத்தி ஒரு நல்ல இமேஜ் உருவாகியிருக்கும். உன் நியாய உணர்வால் அவள் உன்னைப் பற்றி உயர்வா நினைத்திருப்பாள். அப்பல்லாம் என்ன பண்ணணுமோ, அதைப் பண்ணாம சுயநலமா இருந்துட்டு, இப்ப கடைசி காலத்துல வந்து நின்னா எந்தப் பொண்ணு மதிப்பா? சொல்லு…”
ஜகதீசன் திகைத்தார்.
“”கடமைகளுக்கும், நியாயத்திற்கும் உட்பட்டதுதான் வாழ்க்கை ஜகதீசன். போட்ட விதையைத்தான் அறுவடை செய்ய முடியும். மாமனார் என்கிறது வெறும் போஸ்ட்தான். அன்பும், கனிவுமா அதை நீ நெகிழ்ச்சியான கேரக்டரா ஆக்கணும். அப்பதான் உன் கழுத்துல பூமாலை விழும்பா…”
“”உண்மைதான்… உண்மைதான்!” என்ற போது, அவர் குரல் கரகரத்தது.

– அக்டோபர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *