காவல் துறை கட்டிடம் எனற டிரேட் மார்க் இல்லாமல் சாதாரணமாய் இருந்தது அந்த கட்டிடம். உள்ளே நுழைந்த ராம் குமார் தன்னுடைய தொப்பியை சரி செய்து கொண்டு
உட்கார்ந்திருக்கும் அதிகாரிக்கு உத்தியோகமான சல்யூட்டை வைத்தார்.
அதை மெல்லிய தலையாட்டலுடன் ஏற்றுக்கொண்ட பூபதி உட்கார் என்று சைகை காட்டினார். உட்கார்ந்தவரிடம் தன் கையில் இருந்த பைலை அவர் கையில் கொடுத்தார்.
வாங்கியவர் மேலோட்டமாய் படித்து பார்த்து, நான் ஒரு முறை தரோவா படிச்சுடறேன் சார்.
குட்..நீ எடுத்துட்டு போய் நல்லா படிச்சுட்டு நாளைக்கு வா..புன்னகையுடன் சொன்ன பூபதிக்கு மீண்டும் ஒரு சல்யூட்டை வைத்து விட்டு வெளீயே கிளம்பினார்.
இந்த கேசை நான் எடுத்து நடத்தவேண்டும் என்று ஏன் விரும்புகிறார் இவர்? மனதுக்குள் பல வித சிந்தனைகளுடன் தன் அலுவலகம் வந்து நாற்காலியில் உட்கார்ந்தவுடன் முதலில் அந்த பைலை எடுத்து படிக்க ஆரம்பித்தார்.
பெயர் தனபால், வயது அறுபது, சொந்த ஊர் கோயமுத்தூர், தொழில் பிசினஸ்,
கல்யாணம் ஆகி மனைவி இறந்து விட்டார், ஒரு ஆண், ஒரு பெண், இருவருக்கும் திருமணம் ஆகி வெளி நாட்டில் வாசம். இவருக்கு வேறு எந்த பழக்க வழக்கங்கள் இருப்பதாக தெரியவில்லை. வீடு, இல்லயென்றால் அலுவலகம்,வீட்டில் சமையல் செய்ய ஒரு வயதான் பெண், மற்றும் ஒரு மற்ற வீட்டு வேலைகள் செய்ய ஒரு ஆண், அவனுக்கு வயது ஐம்பதுக்குள் இருக்கும். மற்றபடி கார் டிரைவர், துணி துவைக்க, வீடு கூட்ட தனித்தனி ஆட்கள். இவர்களுக்கு அந்த பங்களா அருகிலேயே அவுட் ஹவுஸ் இருந்தது வேலையாட்களை, எந்த விசயத்திற்கும் கடிந்து கொண்டதாக தெரியவில்லை.விசாரித்ததில் தங்கமான மனுசன், எல்லாரையும் நல்லா வச்சிருந்தார். வெளீயிலும் எதிரிகள் இருந்ததாக தெரியவில்லை. தொழில் போட்டியாளர்களை விசாரித்து பார்த்த்தில் அவரை கொலை செய்யுமளவுக்கு விரோதிகள் இருப்பதாக தெரியவில்லை.
கொலை என்று முடிவு செய்யாத மரணம்தான் அவருடையது. இருந்தாலும் அவருடைய மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த கேஸ் விசாரிக்கப்பட்டு விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மகன் சொல்லும் காரணம் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் குறிப்பிட்டிருந்த நேரத்துக்கு இரண்டு மணி நேரம் முன்னால் மகனிடம் பேசியிருக்கிறார். அதன் அடிப்படையில் அவர் தன் தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்திருக்கிறார்.
மறு நாள் பூபதியை சந்தித்து விவரங்களை தெரிவித்தார். சரி, இப்பொழுதே விசாரணையை தொடங்கி விடு. உத்தரவுக்கு, சல்யூட் மூலம் சம்மதம் தெரிவித்து விட்டு வெளியேறினார்.
எங்க ஐயா தங்கமானவ்ருங்க, நாங்களே ஏதாவது தப்பு பண்ணிட்டோம்னா கூட
கடிஞ்சு பேச மாட்டாருங்க. அடிக்கடி எசமானியம்மாவ நினைச்சு துக்கப்படுவாருங்க, உடனே தியானம் பண்ண உட்கார்ந்திடுவாருங்க. எப்பவும் படுக்கப்போறதுக்கு முன்னாடி தியானம் பண்ணிட்டு தான் படுப்பாருங்க. அவரது வேலைக்காரன் சொல்லிக்கொண்டே போனதை உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தார் ராம் குமார்.
அவர் மரணம் எப்படி நேர்ந்துள்ளது என்று அறிக்கை கொடுத்த மருத்துவரை விசாரித்தார். ஆழ்ந்த நிலையிலேயே இறந்திருக்கிறார், அப்பொழுது ஹார்ட் அட்டாக்
வந்திருக்க வாய்ப்பு உண்டு.
நன்றி டாக்டர், சொல்லிவிட்டு அலுவலகத்துக்கு வந்தவர் அடுத்து யாரை விசாரிக்கலாம் என்று யோசித்தார். கரெக்ட்,,அவரது மகனை விசாரிக்கலாம் என்று முடிவு செய்தவர் தற்போது அமெரிக்காவில் இருக்கும் அவரது மகனை தொலைபேசியில் அழைத்தார்.
சார் அன்னைக்கு இராத்திரி அப்பா நல்லாத்தான் பேசிகிட்டு இருந்தாரு.
என்ன விசய்மா பேசிகிட்டு இருந்தீங்க?
நான் அவரை இங்கேயே வர சொல்லிட்டு இருந்தேன், அவர் வேண்டாம்ப்பா உங்க அம்மா இருந்த இந்த இடத்துலயே இருக்கணும்னு ஆசைப்படறேன், அப்படீன்னு சொன்னாரு.அப்புறம், உன் உடமபை பாத்துக்க, குழந்தைங்க எல்லாரோட உடம்பை பார்த்துக்குங்க, அப்படீன்னு சொன்னவரு நான் அடுத்த லீவுல உங்க கூட வந்து இருக்கறேன் அப்படீன்னு சொன்னாரு. நல்ல உற்சாகமாகத்தான் பேசினாரு. அக்கா கிட்ட பேசறியாப்பான்னு கேட்டேன். வேண்டாம் அவள் இப்ப பிசியா இருப்பா, எனக்கு வேணா தூங்கற நேரம், அவளுக்கு இப்ப ஆபிஸ் நேரம், அவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமுன்னாரு.
உன்னிப்பாக கேட்டுக்கொண்டவர், உங்க அப்பாவோட மரணத்து மேலே சந்தேகமுன்னு புகார் கொடுத்திருக்கீங்களே?
சார் அன்னைக்கு அவளோ உற்சாகமா பேசினவரு அடுத்த இரண்டு மணி நேரத்துல எனக்கு போன் வருது அவர் இறந்துட்டாருன்னு.
போன் பண்ணுனது யாரு?
எங்க சித்தப்பா பக்கத்து ஊர்ல இருக்காரு. அவர் பேர் ராமலிங்கம்.
அவர் அட்ரஸ் தர்றீங்களா?
அன்னைக்கு இராத்திரி எனக்கு, அண்ணனோட வேலையாள் கூப்பிட்டான். ஐயாவோட ரூமுல இன்னும் லைட்டு எரியுதேன்னு பாக்கப்போனேன், ஐயா அப்படியே கண்ணை மூடி உட்கார்ந்துட்டிருந்தாரு, எனக்கு பயமாயிருக்கு. நீங்க வாங்க அப்படீன்னு சொன்னதும் நான்
உடனே அண்ணன் வீட்டுக்கு போனேன். அங்க அண்ணன் உட்கார்ந்த நிலையிலே இருந்தார்.
உடனே பக்கத்துல இருக்கற டாக்டரை வர சொல்லி பாத்தோம், அவருதான் உயிர் போய் அரை மணி நேரமாயிருக்கணும் அப்படீன்னு சொன்னாரு. உடனே அவரை எடுத்து படுக்க வச்சுட்டு அவர் பையனுக்கு போன் போட்டு சொல்லிட்டேன். ராமலிங்கம் சொன்னதை உன்னிப்பாக கேட்டுக்கொண்ட ராம் குமார், வர்றேன் சார் என்று விடை பெற்று வெளியே வந்தார்.அவருக்கு சில சந்தேகங்கள் தோன்றியதால் மீண்டும் மருத்துவரை பார்க்க அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு வண்டியை திருப்பினானார்..
இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் பூபதியின் முன்னால் இந்த கேசுக்கு விளக்கமளித்து கொண்டிருந்தார் ராம் குமார். “சார் இறந்து போன தனபால் இந்த சமுதாயத்தில் நல்ல மனிதர். அவருடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கிறது அவர்
மனைவி இருக்கும் வரை. தனது குழந்தைகள் தன்னை விட்டு வெகு தூரம் இருந்தாலும் தன் மனைவி அருகில் இருந்த்தால் அவர்களை பற்றி கவலைப்படாமல் இருந்திருக்கிறார். மனைவி இறந்ததும் தனிமை அவரை வாட்டியிருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு தியானம் செய்வதில் ஆழ்ந்த ஈடுபாடு இருந்திருக்கிறது.அதனால் தன் மனைவியின் இழப்பை ஓரளவு சமன் செய்துகொண்டே வந்திருக்கிறார். அன்று இரவு தன் மகனுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது மனைவியின்
நினைவுகள் அவளிடம் போய் சேர வேண்டும் என்று மனதுக்குள் உந்துதல் வந்திருக்கலாம்.
இந்த சிந்தனையின் தாக்கத்தில் இருந்து வெளியே வர அவர் தியானத்தில் உட்கார்ந்திருக்கலாம், அப்படியே ஆழ்ந்த நிலைக்கு சென்றவர் மீண்டும் திரும்ப வர விரும்பாமல் அப்படியே வலுக்கட்டாயமாக தன்னை உட்படுத்தி இருக்கலாம், அதனால்
ஹார்ட் அட்டாக் வரவும் வாய்ப்பிருந்திருக்கிறது. மருத்துவரிடமும், வல்லுனர்களிடமும் விசாரித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.
பூபதி புன்னகையுடன் இந்த பைலை எப்படி முடிக்க போகிறாய்?
அதுதான் சார் ஒரே குழப்பமாக இருக்கிறது. இந்த மரணம் இவரால் உருவானதாக இருந்தாலும், மாரடைப்பு வந்த அறிகுறி இருப்பதால் இயற்கை மரணம்தான் என்று முடித்து விடவா? அல்லது இவர் தன்னை வலுகட்டாயமாக இந்த நிகழ்வுக்கு இழுத்து சென்றதால் தற்கொலை என்று முடிவு செய்வதா?